செக்கச் சிவந்த வானம் – திரை விமர்சனம்

மணி ரத்னம் கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்குப் பின் மக்களுக்குப் பிடிக்கும் வகையில் ஜனரஞ்சகமான ஒரு படத்தைத் தந்துள்ளார். எத்தனையோ டான் கதைகளை பார்த்துவிட்டோம் ஆனால் இது இயக்குநர் முத்திரை பதிந்த புது முயற்சி. திமுகவில் தலைமை பொறுப்புக்கு வர சண்டை ஏதும் வரவில்லை. ஆனால் வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துக் கூட இக்கதையை மணி ரத்னம் புனைந்திருக்கலாம். இது என் யூகம். அதில் ஒரு வசனம் அண்ணா நீ தானே ஆரம்பித்தாய் என்று ஒரு தம்பி பேசும் வசனம் என்னை அப்படி நினைக்கத் தூண்டியது. எதேச்சையான ஒரு வசனமாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் அப்பா டானிற்குப் பிறகு மூன்று மகன்களிடையே யார் அந்த இடத்துக்கு வருவது என்கிற போட்டியும் மணிக்கு இந்தப் படத்தின் கரு உதிக்கக் காரணமாக இருக்கலாம் என்று எண்ண வைத்தது.

பிரகாஷ் ராஜ், ஜெயசுதா பெற்றோர் பாகங்களில் அருமையாக நடித்திருக்கிறார்கள். பண்பட்ட நடிகர்கள், சொன்னதற்கு மேல் செய்து கொடுப்பவர்கள். பாசகாரக் குடும்பத் தலைவனாக, கள்ளச் சந்தை/சமூக விரோத செயல்கள் நடத்துவதில் பெரிய அளவில் கொடிக்கட்டிப் பறக்கிறவராக ஓவர் ஏக்டிங் இல்லாமல் செய்திருக்கிறார். ஜெயசுதா அன்பு மனைவியாக பிற்பாடு மகன்களிடையே சமரசம் செய்து எப்படியாவது குடும்பத்தில் அமைதி நிலவ, தலைமைப் பொறுப்பை ஏற்க நடக்கும் சகோதரப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைபவராக வெகு பாங்காகக் பாத்திரத்தில் பரிமளிக்கிறார். எதிரணி டாணாக தியாகராஜன். நல்ல பொருத்தம்! நடிகர்களை சரியாக பாத்திரங்களுக்குத் தேர்வு செய்து இயக்குவதை எளிதாக்கிக் கொண்டுள்ளார் மணி என்றே சொல்ல வேண்டும்.

தந்தையுடன் கூடவே இருந்து அவர் சொல்வதை எல்லாம் செய்யும் பொறுப்புள்ள முதல் மகனாக அர்விந்த் சாமி, அதே போல பொறுப்புள்ள மூத்த மருமகளாக அர்விந்த் சாமியின் மனைவியாக ஜோதிகா. இரண்டாவது மகனாக துபாயில் ஷேக்குகளுடன் கடத்தல் வியாபாரம் செய்யும் அருண் விஜய், அவர் மனைவியாக சிலோன் தமிழராக ஐஸ்வர்யா ராஜேஷ், மூன்றாவது மகனாக செர்பியாவில் ஆயுதங்கள்/தளவாடங்கள் விற்கும் STR, அவர் காதலியாக பின் மனைவியாகும் டயானா என்று பெரிய நடிகர் பட்டியலைப் படம் தாங்கி நின்றாலும் ஒவ்வொருவர் பாத்திரமும் கவனத்துடன் செதுக்கப்பட்டு ஒன்றுக்கு ஒன்று குறைவில்லாமல் எல்லாருக்கும் சம பங்கு கிடைக்குமாறு செய்ததில் தான் மணி ரத்னம் சிறப்பு மென்ஷன் பெறுகிறார். விஜய் சேதுபதி அர்விந்த் சாமியின் நண்பராக ஓர் இறந்த டானின் மகனாக போலிஸ் இன்ஸ்பெக்டராக இத்தனை பாத்திரங்களுக்கு நடுவிலும் சம பங்குடன் வளைய வருகிறார். என் வழி தனி வழின்னு எல்லார் நடிப்பையும் அசால்டா தன் கேசுவல் நடிப்பால் தூக்கி சாப்பிட்டு விடுகிறார்.

ஒரு சமயம் இது அர்விந்த் சாமி படம், இது STR படம், அட இல்லை அருண் விஜய் படம், இல்லை ஜோ படம், இல்லை கண்டிப்பாக விஜய் சேதுபதி படம் என்று எண்ண வைத்துக் கடைசியில் இது மணி ரத்னம் படம் என்று புரிய வைக்கிறார் இயக்குநர். நடித்த அனைவருமே அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

உடைகள் படு கச்சிதம். அருண் விஜய், STR இருவருக்குமே மிக ஸ்டைலிஷான உடைகள். ஜோதிகாவின் படங்களும் அழகு. ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பீட்டளவில் சிறிய பாத்திரம் தான். ஆனால் அதிலும் முத்திரை பதிக்கிறார். அதிதி ராவ் ஹைதாரியின் பங்கும் சிறியதே ஆனால் அதையும் அழுத்தமானாதாக பதிகிறது அவர் நடிப்பாலும் பாத்திரப் படைப்பாலும்.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு கண்ணுக்கு விருந்து என்று சொல்லவும் வேண்டுமோ! அதுவும் ஐரோப்பியாவிலும் துபாயிலுமான காட்சிகளின் வண்ணக் கலவையும் கழுகுப் பார்வையில் விரியும் காட்சிகளும் அற்புதம். பாடல்கள் முழுதாகப் படத்தில் பயன்படுத்தப் படவில்லை என்றே நினைக்கிறேன். மேலும் பாடல்கள் பின்னணியாக தான் ஒலிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் நன்று. ஸ்ரீகர் பிராசாதின் படத்தொகுப்பும் நன்றே. இவ்வளவு பாத்திரங்களை வைத்து சிக்கலில்லாமல் படத்தொகுப்பை செய்து கதையை நேர்த்தியாக நகர்த்தியிருக்கிறார்.

படம் முடியும்போது இவ்வளவு சிக்கல் நிறைந்த ஒரு டான் வாழ்க்கையை ஏன் ஒருவர் தேர்ந்தெடுக்கிறார் என்று தோன்றும். பல சமயங்களில் அது திணிக்கப்பட்டு அதிலிருந்து மீள முடியாமல் அதுவே வாழ்க்கையாக அமைந்து விடுகிறது முதல் தலைமுறை டானுக்கு. அடுத்தத் தலைமுறைகளுக்கு அந்தப் பதவியில் கொடுக்கும் ஏராளமான பணமும் செல்வாக்கும் அந்தப் பாதையைத் தொடர தூண்டுதலாக அமைகிறது. போலிஸ் பாத்திரங்களின் பங்களிப்பு வெகு subtle. அதே சமயம் அவர்கள் நல்ல முறையில் காட்டப்படுகின்றன.

என்றுமே திரைக் கதை தான் ராஜா. அதைப் புரிந்து மணி படம் இயக்கியிருப்பது அவருக்கான வெற்றியைக் கொடுத்திருக்கிறது. எத்தனை கதாப் பாத்திரங்கள்! எத்தனை முன்னணி நடிகர்கள்! இவர்கள் அனைவரையும் அருமையாக இயக்கி அனைத்து நடிகர்களுக்கும் வேண்டிய முக்கியத்துவம் கொடுத்து சிறப்பான பங்களிப்பைப் பெற்று வெற்றிப் படத்தைத் தந்திருக்கும் அவருக்கும் அவர் குழுவுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

சிம்டான்காரன் – பாடல் பொழிப்புரை

பாடகர்கள் :பம்பா பாக்கியா,
விபின் அனேஜா மற்றும்
அபர்ணா நாராயணன்

பாடல் ஆசிரியர்: விவேக்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

படம்: சர்கார்

 ஆண் : பல்டி பாக்குற
டர்ல வுடனும் பல்து

வோர்ல்டு மொத்தமும்
அரள வுடனும் பிஸ்து

பல்டி அடிக்கறதைப் பார்த்து மத்தவங்க பயத்துல டர் ஆகிடணும்

உலகம் மொத்தத்தையும் மிரள உடனும் பிஸ்தா மாதிரி

பிசுறு கெளப்பி
பெர்ள வுடனும் பல்து

பிச்சுப் பிச்சுப் போட்டு எல்லாரையும் பயத்துல பிரளவிடனும்

ஆண் : ஏய்ய் நிக்கலு பிக்கலுமா

ஓ…. தொட்டனா தூக்கலுமா

மக்கரு குக்கருமா

போய் தரைல உக்கருமா

ஏய் ஒழுங்கா ஓரிடத்தில நில்லு அப்பத்தான் தொட்டு தூக்க முடியும்.

உடஞ்ச குக்கர் மாதிரி மக்கர் பண்ணினா உன்னை தூக்க மாட்டேன்

போய் தரைல உட்காருன்னு சொல்லிடுவேன்.

ஆண் : ஏய்ய் நிக்கலு பிக்கலுமா

ஓ…. தொட்டனா தூக்கலுமா

மக்கரு குக்கருமா

போய் தரைல உக்கருமா

முன்னாடி சொன்னதே தான்.

ஆண் : சிம்டான்காரன்
எங்கனா நீ சீரன்

நிண்டேன் பாரேன் முஷ்டு
அப்டிகா போறேன்

ஓ..ஓ..ஓ..ஓ (4)

கண்ணை சிமிட்டி சீறினேனா நின்னுக்கிட்டே பாரேன்

என் முஷ்டி மட்டும் அந்தப் பக்கமா போய் ஆளை அடிச்சிட்டு வரும்.

ஆண் : சிம்டான்காரன்
சில்பினுக்கா போறேன்

பக்கில போடேன்
விருந்து வைக்கபோறேன்

ஓ..ஓ..ஓ..ஓ (4)

கண்ணை சிமிட்டி முடிக்கறதுக்குள்ள சிலுப்பிக்கிட்டு வந்துடுவேன்.

அப்புறம் பெல்டுக்குப் பக்கிளை போடவும்.

இல்லேனா நான் வைக்கிற இசை நடன விருந்தில் எங்கியோ காணாம போயிடுவீங்க!!

ஆண் : அந்தரு பண்ணிகினா தா…..

இந்தா நா… தா ….

ஓ..ஓ..ஓ..ஓ (4)

அடியில போய் ஒளிஞ்சிக்கிட்டா நான் இதோ ஓடிவந்து கண்டுபிடிச்சிடுவேன்

பெண் வேறு தேசம் போலிருக்கு. தமிழ் மொழியில் பாடுகிறார்.

அதற்கு விசேஷ மொழிப்பெயர்ப்புத் தேவையில்லை.

பெண் : மன்னவா நீ வா வா வா

முத்தங்களை நீ தா தா தா

பொழிந்தது நிலவோ

மலர்ந்தது கனவோ…ஓ…ஓ….

பெண் : ஹா ஹா ஹா ஹா ஹா..(4)

ஆண் : குபீலு பிஸ்து பல்து

குபீர்னு பிஸ்தாவா பல்டியடிப்பேன் ஜாக்கிரதை!

குழு : விக்கலு விக்கலு
ஹே தொட்டனா தொட்டனா
விக்கலு விக்கலு
ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ….

 விக்கல் வந்தா கூட தொடர்ந்து பாடுவோம் ஆடுவோம்.

 ஆண் : கொக்கலங்க கொக்கலங்க
கொக்கலங்க குபீலு

ஹைட்டுலிருந்து டைவு அடிச்சா
டம்மாலு

ஹம்ப்டி டம்படி சேட் ஆன் அ வால்.

ஹம்ப்டி டம்படி ஹேட் அ கிரேட் ஃபால்.

 ஆண் : நம்ம புஷ்டிருக்க கோட்டையில்ல

அல்லா ஜோரும் பேட்டைல
சிரிசினுகுறோம் சேட்டையிலகுபீலு

நாம பிடிச்சிருக்கிற கோட்டையில எல்லாரும் சிரிச்சிக்கிட்டு இருக்கோம் ஜாலியா.

ஆண் : பிசுறு கெளப்பு
பிசுறு கெளப்பு

கொக்கலங்க கொக்கலங்க
கொக்கலங்க குத்த போடு

சுணுங்காம குத்தாட்டம் போடு!

சுணுங்காம குத்தாட்டம் போடு!

 நீங்க நினைக்கிறா மாதிரி ஒன்னும் புரியாத பாடல் இலை இது. கொஞ்சம் மெனக்கெட்டா புரிஞ்சிடும்!!

சாமி 2 – திரை விமர்சனம்

முதல் படத்துக்கு அடுத்த பாகம் எடுப்பது என்று முடிவு செய்தால் உடனே எடுத்திடுங்க இயக்குநர்களே. நாள் கழிச்சு (வருடங்கள்!!) எடுத்து அந்த ஹீரோவுக்கு வயதாகி, தொப்பை வந்து பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு. 28 வயதுள்ளவராக விக்ரமை எப்படி ஒத்துக் கொள்வது? ஆனால் உடம்பை படு ஃபிட்டாக வைத்துள்ளார் விக்ரம். நடிப்பிலும் சண்டைக் காட்சிகளிலும் பிராமாதமாக செய்துள்ளார். ஹரி படங்கள் என்றுமே விறுவிறுப்புக்குப் பெயர் போனவை. வேகமாக நகரும் கதையாக அமைத்துத் திரைக் கதையிலும் தவறுகளை கண்டுபிடிக்க விடாமல் செய்துவிடுவார். இந்தப் படம் வேகமாக நகர்கிறது ஆனால் திரைக் கதை சொதப்பல். அதில் மைனஸ் மதிப்பெண்கள் பெறுகிறார். படத்தின் ஆரம்பத்தில் சாமி 1 படத்தைக் கொஞ்சம் காட்டுகிறார்கள், முன் கதை சுருக்கம் மாதிரி. ஆனால் த்ரிஷாவுக்குப் பதிலா திவ்யான்னு அதே பழைய கதையில் ஐஸ்வர்யா ராஜேஷை த்ரிஷா இடத்தில் மணமகளாக மனைவியாக நடிக்க வைத்துக் கதையை தொடர்கிறார் இயக்குநர். பெருமாளை பிச்சையை கொலை செய்து எரித்து விடுவதுடன் சாமி படம் முடியும். அதைத் தொடர்ந்து அவரைத் தேடி அவர் மகன்கள் வருவதாக இதில் படம் தொடங்குகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பிராமண பாஷை சுத்தமாக வரவிவில்லை. கொஞ்சம் பயிற்சி எடுத்திருக்கலாம். த்ரிஷா மாமியாக பச்சக் என்று மனத்தில் நின்றதே அந்த பிராமண பெண் பாத்திரத்துக்கு சரியாக பொருந்தியதால் தான். சின்ன பாத்திரம் தான் ஐஸ்வர்யாவுக்கு, அதனால் அவர் சரியாக பொருந்தாததை மன்னித்துவிடலாம். ஆனால் பிரச்சினை கதையின் தொடர்ச்சியில் தான். திடீரென்று கதை திருநெல்வேலியில் இருந்து தில்லிக்குத் தாவி அங்கு ஓர் விக்ரம் மத்திய மந்திரியின் அலுவலகத்தில் வேலை செய்கிறார். முதலில் பார்த்த ஆறுச்சாமி விக்ரமுக்கு இவர் என்ன உறவு, டபுள் ரோலா என்று குழப்பம் வருகிறது. எது ப்ளாஷ் பேக் எது தற்போதைய கதை என்று சொல்வதிலேயே திரைக் கதை தடுமாறுகிறது. அனுபவம் வாய்ந்த இயக்குநர் ஹரி இந்தத் தவறை செய்யலாமா?

தில்லி விக்ரம் ஒரு பிராமணர், ஐஏஎஸ் தேர்வு முடிவுக்குக் காத்திருக்கும் போது மத்திய மந்திரி அலுவலகத்தில் வேலை செய்பவராக, பகுதி நேர கல்யாணம் செய்து வைக்கும் புரோகிதராகக் காட்டப்படுகிறார். முதலில் வேறு மாதிரி கதை அமைத்துப் பின் கதை மாற்றப்பட்டதா என்று தெரியவில்லை. எனிவே முதல் குழப்பத்திற்குப் பிறகு அவர் யார் என்று புரிந்து அவரும் பூணுலை கழட்டி விட்டு ஐபிஎஸ் ஆகி அதே திருநெல்வேலிக்கு போஸ்டிங் வாங்கி பெருமாள் பிச்சையின் மூன்று மகன்களை பழி தீர்த்துக் கொள்வதே மிச்சக் கதை. பூணுல் போட்டு வளர்க்கப்பட்டவர் பின் எதற்கு அதை கழட்ட வேண்டும் என்று தெரியவில்லை. சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லை.

மிச்சக் கதைக்கு வருவதற்குள்ளே சூரி நம்மை ஒரு வழி பண்ணி விடுகிறார். தாமிரபரணி புஷ்கரத்துக்குத் தடை வாங்க முயல்வதை விட முதலில் சூரி காமெடிக்குப் படங்களில் தடை வாங்க முயன்றால் புண்ணியமாப் போகும். அவ்வளவு திராபையாக உள்ளது அவரின் நகைச்சுவை பகுதி. படத்தின் இளங்காற்று கீர்த்தி சுரேஷ், அழகாக இருக்கிறார், பதமாக நடிக்கிறார். உடை அலங்காரம் அருமை. இதில் ஹீரோ நாயகியை பின் தொடர்ந்து ல்தகா சைஆ இருக்கா என்று படுத்தாமல், நாயகி நாயகனை பின் தொடர்ந்து வலுக்கட்டாயமாக காதலிக்க வைக்கிறார். வாழ்க காதல்.

பிரபு மத்திய மந்திரியாக கனமான பாத்திரத்தில் வருகிறார். கனம் எடையில் மட்டும் தான் பாத்திரத்தில் இல்லை என்பது பெரும் சோகமே. அவருக்கும் வில்லனுக்கும் என்ன தொடர்பு என்று கடைசி வரை புரியாத புதிராக இயக்குநர் கதையை நகர்த்தியிருக்கிறார். ஐஸ்வர்யா அவர் மனைவியாக, கீர்த்தி சுரேஷின் தாயாக ஓர் ஒப்புக்கு சப்பாணி பாத்திரத்தில் வந்து போகிறார். அவருக்கு மேக்கப் சரியில்லை. மிகவும் வயது முதிர்ந்தவராக தெரிகிறார்.

ஊர் முழுவதும் ஆறுச்சாமிக்கு பயந்து பெருமாள்பிச்சை தலைமறைவாகிவிட்டதாக நினைக்க, உண்மையைக் கண்டறிய தன் இரண்டு அண்ணன்களோடு இலங்கையிலிருந்து  வருகிறார் பெருமாள்பிச்சையின் இரண்டாவது மனைவியின் மூன்றாவது மகனான முக்கிய வில்லனான பாபி சிம்ஹா, பெயர் இராவண பிச்சை. அவர் தான் ஹீரோ ராம் சாமிக்கு சவால் விடுபவராக வருகிறார். (பெயர் தேர்வெல்லாம் நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா!) அவரின் மூத்த அண்ணன் ஓ.எ.கே. சுந்தர், இரண்டாவது அண்ணன் ஜான் விஜய். சிங்களவர்களா தமிழர்களா என்று புரியாத இலங்கையில் இருந்து இறக்குமதியான இப்படத்தின் வில்லன் பத்திரங்கள் இவர்கள். பாபி சிம்ஹா வில்லனாக நன்றாக ஜொலிக்கிறார். மற்ற பாத்திரங்களை விட வில்லன் பாத்திரம் அவருக்கு நன்றாக செட் ஆகிறது. பிச்சை பெருமாளின் மனைவி பிள்ளைகளுக்குத் தாயாகவும் சோழி உருட்டிப் போட்டு ஆரூடம் சொல்லும் ஜோசியக்காரியாக இருபத்தி எட்டு வருடங்களாக அவர்களை இலங்கையில் இருந்து வழி நடத்தும் சூத்திரதாரியாக வருகிறார். காதுல ஒரு கண்டு பூ!

இசை டிஎஸ்பி. பின்னணி இசையில் கூட சோபிக்கவில்லை. காயத்திரி மந்திரம் பொருள் தெரிந்து தான் பின்னணி இசையில் அதை ஒலிக்க விடுகிறாரா? சண்டை வரும்போதெல்லாம் இது தான் பிஜிஎம். பாடல்கள் வெகு சுமார். படத்தொகுப்பாளர் V.T.விஜயன் உண்மையாக வேலை செய்திருந்தால் நிறைய இடத்தில் கத்திரி போட்டிருக்க வேண்டும். ஒளிப்பதிவாளர் A.வெங்கடேஷ்.

படம் முழுக்க ஒருவரை ஒருவர் பளார் பளார் என்று அடித்துக் கொள்வதால் நாம் திரை அரங்கை விட்டு வெளியே வரும்போது நம் கன்னத்தையே தடவிப் பார்த்துக் கொள்ளத் தோன்றுகிறது. இதில் கீர்த்தி சுரேஷை விக்ரம் அடிப்பதை, பிரபு ஐஸ்வர்யாவை அடிப்பதை எல்லாம் சென்சாரில் கட் செய்திருக்க வேண்டும். ஒரு விதமான வன் கொடுமை இது! இன்னும் நிறைய குறைகளை சொல்லிக் கொண்டே பகலாம். ஆயாசமாக உள்ளது. அதனால் நிறுத்திக் கொள்கிறேன்.

சீறிப் பாயும் புல்லட் டிரெய்னாக படம் எடுக்க எண்ணி ஆனால் அதைத் தாங்கக் கூடிய அளவு சரியான தண்டவாளம் அமைக்கவில்லை ஹரி.

U டர்ன் – திரை விமர்சனம்

மேற்குத் தொடர்ச்சி மலை எப்படி ஒரு வாழ்வியல் யதார்த்தத்தை இரண்டு மணி நேரத்தில் செலுலாய்டில் லெனின் பாரதி வடித்துக் கொடுத்தாரோ அது மாதிரி ஓர் அமானுஷ்ய திகில் படத்தை ஒரு வித லாஜிக் குறைபாடும் இல்லாமல் எழுதி இயக்கி படைத்திருக்கும் பவன் குமாருக்கு மனமார்ந்த பாராட்டுகள். இந்த மாதிரி திறமை வாய்ந்த இயக்குநர்களும் கதாசிரியர்களும் இந்திய சினிமாவில் நிறைய தோன்ற இம்மாதிரி படங்களை நாம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்து வரவேற்க வேண்டியது நம் கடமை.

சீம ராஜாவில் ஒரு புது முக நடிகை மாதிரி செய்திருந்த சமந்தா இந்தப் படத்தில் பிச்சு உதறியிருக்கிறார். என்ன ஒரு டிரான்ஸ்பர்மேஷன்! (எல்லாமே இயக்குநர் கையில் தான் உள்ளது என்பது இதில் இருந்து தெரிகிறது). நடிகையர் திலகம் படத்தில் ரிபோர்டர் வேடத்தில் கொஞ்சமே வந்திருந்த சமந்தா இதில் முழு படத்திலும் ரிபோர்டராக வாழ்ந்திருக்கிறார். அவர் கெரியரில் இது ஒரு மைல் கல். விருப்பப்பட்ட துறையில் கால் பதிக்க அவர் எடுக்கும் முயற்சிகளின் போது  ஒரு சங்கோஜத்துடனான துணிச்சலை அவர் முகத்தில் காட்டும்போதும், ஒரு திடுக்கிடும் சம்பவத்தை நேரில் பார்த்தப் பின் வீட்டிற்கு வந்து வயிற்றுக்குள் இருக்கும் கரு போல சுருண்டு அழும்போதும் அவர் நடிப்பின் முதிர்ச்சி வெளிப்படுகிறது. கன்னட சினிமாவின் பிரபல கதாசிரியர் இயக்குநர் பவன் குமார் மனோதத்துவ த்ரில்லர் படமான லூசியாவை எழுதி இயக்கியவர். அந்தப் படத்தைவிட இந்தப் படத்தில் இன்னும் முன்னேறி மிக அற்புதமான ஒரு த்ரில்லர் படத்தைத் தந்துள்ளார். U டர்ன் என்ற பெயரிலேயே கன்னடத்தில் முதலில் வெளிவந்த படம் தற்போது தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலும் வந்துள்ளது. டப்பிங் இல்லை.

ஒரு மேம்பாலத்தில் டிவைடருக்காக வைத்திருக்கும் கற்களை நகர்த்தி U டர்ன் செய்பவர்களால் விபத்துகள் நேர்வதைத் தடுக்க அவ்வாறு செய்பவர்களைப் பற்றி தகவல் சேகரித்து அதைப் பற்றி ஒரு பதிவு போடத் தயாராகும் சமந்தா மிக பயங்கரமான சிக்கலில் மாட்டிக் கொள்வார் என்று எதிர்பார்க்க மாட்டார். படத்தின் பாதி வரை சாதாரண போலிஸ் விசாரணையாக போகும் ஒரு சந்தேக மரணம் ஒரு கட்டத்தில் பல கொலைகளை தோண்டி எடுக்கிறது. அதன் பின்னால் இருக்கும் அமானுஷ்ய காரணம் படத்தின் முடிவு வரை நம்மை நாற்காலியின் நுனியில் உட்கார வைக்கிறது. இதில் சம்பவங்களின் கோர்வை நம்பும்படியாக உள்ளதால் சாதாரண பேய் படம் போல் இல்லை.

சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் ஒரு க்ரைம் ரிபோர்டராக, சமந்தாவின் காதலனாக நடிப்பில் நல்ல மெருகேறி சிறப்பாக பங்காற்றியுள்ளார் . ஆதி போலிஸ் ஆபிசராக கன கச்சிதமாகப் பாத்திரத்தில் பொருந்தியுள்ளார். மிகையில்லாத அதே சமயம் அழுத்தமான நடிப்பு. கதையை விறுவிறுப்பாக நகர்த்துவதில் அவர் பங்கு நிறைய. பூமிகாவும் நரேனும் மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். கிளைமேக்சில் உண்மையை உணர்ந்த பின் நரேனின் நெகிழ்ச்சி அவரின் நடிப்பில் உள்ள சீனியாரிடியை காட்டுகிறது.

இசை பூர்ண சந்திர தேஜஸ்வி. அற்புதமான இசை. த்ரில்லர் படங்களுக்கே இசை தான் முக்கியம். அது சரியாக அமைந்துவிட்டால் வெற்றிப் பாதையில் பாதி இலக்கை அடைந்தா மாதிரி தான். பின்னணி இசை மிரட்டுகிறது! அமானுஷ்ய காட்சிகளில் தூள் கிளப்பும் ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி ரெட்டிக்கு சரியான வலது கையாக இருக்கிறார் படத்தொகுப்பாளர் சுரேஷ் ஆறுமுகம். ஒரு காட்சி கூடத் தேவையில்லாத காட்சி இல்லை.

குறைகள் சில உள்ளன. இரண்டு மொழியிலும் எடுத்திருப்பதால் வேளச்சேரி மேம்பாலம் என்று காட்டப்படுவதும் அடுக்கு மாடி குடியிருப்புகளும் சென்னை வாசனை இல்லாமல் உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையம் என்று சொல்லி எதோ ஆந்திரா பேருந்து நிலையத்தைக் காட்டுகிறார்கள். அதே மாதிரி இரவெல்லாம் அப்படி ஒரு மழை பெய்கிறது, பகலில் சாலையில் ஒரு சொட்டு தண்ணீர் தடயம் இல்லை. அவ்வளவு நல்ல வடிகால் சிஸ்டம் நம் நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லை என்று நினைக்கிறேன். இடது பக்கத்துலேந்து வந்து வலது பக்கத்துல கல்லை நகர்த்தினால் விபத்து வலது பக்கம் தான் நடக்கும். அதுவும் கொஞ்சம் குழப்பமாக உள்ளது. நான் தான் சரியா புரிந்து கொள்ளவில்லையா என்று தெரியவில்லை.

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. அதை சரியான முறையில் திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பதால் வெற்றி பெற்றுள்ளார் பவன் குமார். நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

சீம ராஜா – திரை விமர்சனம்

சிவகார்த்திகேயன் மாஸ் ஹீரோவாக படிப்படியாக வளர்ந்து வருகிறார். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை வசீகரிக்கும் தன்மை இருக்கிறது அவரிடம். தேர்ந்தெடுக்கும் கதைகளும்  மாஸ் அப்பீல் கதைகளாக தான் உள்ளன. (விஜய் நடிக்கும் படத்தின் டெம்ப்ளேட், கொஞ்சம் கொஞ்சம் ரஜினி படங்களில் இருப்பதும் – இது தான் அவர் படங்களின் முக்கிய அம்சம்! ) கதையை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தினால் இனி வரும் படங்களில் கேரண்டீட் வசூல் ராஜாவாக மாறலாம் இந்த சீம ராஜா.

ஒரு கமர்ஷியல்/மசாலா படத்துக்குக் கிட்ட தட்ட மூன்று மணி நேரம் ரசிகர்களை திரை அரங்கில் உட்கார வைத்தல் முதல் தப்பு. முதல் பாதியை பாதியாகக் கத்தரித்து அரைத்த மாவையே அரைக்காமல் இருந்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். இடைவேளையின் போது தான் கதை கொஞ்சமேனும் சூடு பிடிக்கிறது. பின் பாதியில் ராஜா கதை முன் பாதியை விட அதிக சுவாரசியத்தைத் தருகிறது. அதையே முதலில் இருந்து சொல்லியிருக்கலாம். ஒரு லோ பட்ஜெட் படத்துக்கு கிராபிக்ஸ் ரொம்ப நன்றாக உள்ளது. வசனங்கள் பல இடங்களில் அட போட வைக்கின்றன!

கீர்த்தி சுரேஷ் கொஞ்ச நேரமே வந்தாலும் கவர்ச்சியாகவும் நன்றாகவும் செய்திருக்கிறார். படத்தின் ஹீரோயின் சமந்தா சுத்தமாக வீணடிக்கப்பட்டிருக்கிறார். வில்லி சிம்ரனுக்கு சமந்தாவை விட பெரிய ரோல் என்று சொல்லலாம். சிம்ரனும் லாலும் வில்லன் பாத்திரங்கள். சிம்ரன் மாதிரி ஒரு தேர்ந்த நடிகையை ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரி பாத்திரம் மாதிரி நடிக்க வைத்திருக்கலாம். திரைக் கதை வலுவாக இருந்தால் தான் பாத்திரங்கள் அம்சமாக இருக்கும். அது இல்லாததால் யாருமே மனதில் நிற்கவில்லை. சிம்ரன் புடைவைகள் சாப்ட் சில்க். அவர் அணியும் புடைவைகள் நல்ல தேர்வு. நெப்போலியன் (முன்னாள் மத்திய மந்திரி என்கிற டைட்டில் கார்டுடன் குணச்சித்திர வேடத்தில் தோன்றுகிறார்.) சிவகார்த்திகேயன் அப்பாவாக பெரிய ராஜாவாக நன்றாக செய்துள்ளார். ஆனாலும் ஒரு பெரிய நடிகர் வாய்ப்புக் கொடுக்கப்படாமல் படத்தில் சேர்த்திருப்பது சோகமே. மு.ராமசாமி, நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, ரிஷிகாந்த் ஆகியோர் வரும் பாத்திரங்களும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் செல்லும் பாத்திரங்களாக அமைந்திருக்கின்றன.

சூரி! என்னத்தை சொல்ல! அவருக்கே ஹீரோ சீம ராஜா பல இடங்களில் அதிக பில்டப் கொடுத்து யார் ஹீரோ யார் காமெடியன் என்று புரியாத அளவுக்கு வசனங்களை அமைத்திருப்பது ரசிக்கும்படியாக இல்லை. கடைக்குட்டி சிங்கம் படத்தில் சத்தியராஜ் ஆண் குழந்தை வேண்டும் என்று ரெண்டுக்கு மேல் மூணாவது பெண்டாட்டி கட்டப் போவதே கண்றாவியாக இருந்தது. இந்தப் படத்தில் காரணமே இல்லாமல் சூரிக்கு மூணு பெண்டாட்டிகள். கடைசி காட்சியில் நாலாவது பெண்டாட்டியையும் கட்டிக்கொண்டு வந்து நிற்கிறார். அதில் எல்லா பெண்டாட்டிகளும் சிரிச்சிக்கிட்டே பக்கத்துப் பக்கத்தில் நிற்பது மூலம் இயக்குநர் சமூகத்துக்கோ இல்லை நகைச்சுவைக்கோ என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியவில்லை. நகைச்சுவை இந்தப் படத்தில் பெயில் மார்க் தான் வாங்குகிறது.

பின்னணி இசையில் இமான் பாஸ் மார்க் வாங்குகிறார். இரு பாடல்கள் பர்ஸ்ட் கிளாஸ் ரகம். மற்றவை கேட்கும்போதே மறந்து விடுகின்றன. ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியன், படத் தொகுப்பு விவேக் ஹர்ஷன்.

சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம் சீமராஜா. பாத்திரப் படைப்பிலும் சரி திரைக்கதையிலும் சரி பொன்ராம் கவனம் செலுத்தவே இல்லை. சிவகார்த்திகேயனை வைத்துப் படம் எடுத்தால் படம் வெற்றி பெற்று விடும் என்கிற நம்பிக்கையில் படம் எடுத்திருக்கிறார். இப்போ கதையில் விவசாயியை நுழைத்து நாலு வசனம் விவசாயி சார்பாக ஹீரோவை பேச வைப்பது டிரென்ட் ஆகி விட்டது. இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. இதனால் விவசாயிக்கும் எந்தப் பயனும் இல்லை. பார்க்கும் ரசிகர்களும் புதுசா எதுவும் உணரப் போவதும் இல்லை.

சிவகார்த்திகேயனுக்காக படம் ஓடும்.

மேற்குத் தொடர்ச்சி மலை – திரை விமர்சனம்

படம் பார்த்து முடித்தப் பின்னும் இசை காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இசை இப்படத்தின் கதைச்சொல்லி. இசை ஞானியைத் தவிர வேறு யார் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தாலும் இந்த மேன்மை வந்திருக்காது. விஜய் சேதுபதி நடிகராக ஒரு பெரிய உயரத்தில் இருக்கிறார். ஆனால் தயாரிப்பாளராக மேற்குத் தொடர்ச்சி மலையின் மூலம் சிகரம் தொட்டுவிட்டார். இரண்டு மணி நேரத்தில் ஒரு மக்களின் வாழ்க்கையை சொல்ல எப்படி லெனின் பாரதி துணிந்தார் என்று புரியவேயில்லை. ஆனால் வாழ்க்கையை அவர்களின் சுக துக்கங்களை, ஏக்கங்களை, கடுமையான உழைப்பை, அரசியலை, வெள்ளந்தியான உள்ளங்களை, உண்மையை, ஏமாற்றத்தால் விளையும் கோபத்தை, ஆசைகளை, நிராசைகளை, அன்பை, மகிழ்ச்சியை இறுதியில் விரக்தியை, விரக்தி என்று கூட சொல்ல முடியாத யதார்த்தத்தை சுமக்கும் வலியை இவை அனைத்தையும் அங்கேயே போய் நாம் வாழ்ந்திருந்தாலும் புரிந்து கொண்டிருக்க முடியாத உணர்ச்சிகளை இரண்டு மணி நேரத்தில் அனுபவித்து விடுகிறோம்.

அந்தப் பச்சை ஏலக்காய் மூட்டை சரிந்து விழும்போது நாமும் உடைந்து கீழே அதோடு விழுகிறோம்! என்ன ஒரு நேர்த்தியான இயக்கம்! என்ன ஒரு நேர்த்தியான ஒளிப்பதிவு! நடு இரவில் இருட்டிலும் மங்கலான பலப் வெளிச்சத்தில் தொடங்கும் கதையும் படக்காட்சியும் விடியும்போது செவ்வானம் வெளிச்சம் போட்டுக் காட்டும் அந்தப் பசுமையான மலைக் காடுகளும் இதுவரை பார்த்திராத ஒரு பூமியைக் காட்டுகிறது.  அதுவும் எந்தவித கூடுதல் ஒளிசாதனமும் இல்லாமல் இயற்கை ஒளியைக் கொண்டே பெருபான்மையான காட்சிகளை படம்பிடித்திருப்பது அற்புதம்.
தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அவர் ஊரை அழகாக காட்ட அவர் தனி முயற்சி எடுத்திருப்பார் தானே? அப்ளாஸ் வாங்குகிறார்! படத் தொகுப்பு அதைவிட அருமை. எல்லா புகழும் காசி விஸ்வநாதனுக்கே! எந்த இடரும் இல்லாத ஒரு நீண்ட காட்சியாய் விரிகிறது படம். எந்த இடத்திலும் தொய்வு இல்லை.

ரங்கசாமியோடு (ஏன்டனி) நாமும் ரங்கசாமியா மாறிவிடுகிறோம். அவன் ஏறும் காடு மலை, அவன் செல்லும் பாதை, அவன் செய்யும் வேலைகள், அவன் வாங்க நினைக்கும் கை அகல நிலத்துக்கு அவன் படும் பாடு, அவனின் அழுக்கு உடை எல்லாவற்றிலும் நாமும் ஐக்கியம் ஆகிவிடுகிறோம். இந்த அளவு ஒரு இயக்குநரால் எப்படி செய்ய முடியும் என்று தெரியவில்லை. ஒவ்வொரு காட்சிக்கும் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டார்களோ தெரியவில்லை, ஒவ்வொரு பிரேமும் கவிதை. கவிதையை நிதானமாகத் தானே ரசிக்க முடியும். படமும் நிதானமாகத் தான் நகர்கிறது. பருந்து பார்வையில் அந்த மலையை பார்க்கும் போது, இதில் இப்படி இவர்கள் தினமும் ஏறி இறங்கி வாழ்கிறார்கள் என்ற பிரம்மிப்பு நம்முள் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

தோழர் சாகோ, எஸ்டேட் ஓனர் ரவி, கங்காணி, கணக்குப் பிள்ளை, ஊத்து ராசா, கிறுக்குக் கிழவி, பாய், தள்ளாத வயதிலும் மூட்டை சுமக்கத் துடிக்கும் முதியவர் என்று ஒவ்வொரு பாத்திரமும் நம்மிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். கொஞ்சமே வந்தாலும் ரங்கசாமியின் தாயும் அதே ரகம் தான். ரங்கசாமியின் மனைவி ஈஸ்வரி (அறிமுகம் காயத்ரி கிருஷ்ணா) பாரதிக்கு ஒரு கண்ணம்மா மாதிரி. அத்தனை பொருத்தம்! எந்த ஒப்பனையும் இல்லாமல் கிராமத்து இளம் பெண்ணாக, மனைவியாக, தாயாக வாழ்ந்திருக்கிறார்.

இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் இந்தக் கதையில் எல்லாருமே நல்லவர்கள் தாம். மலை வாழ் வெள்ளந்தி மனிதர்கள் வேறு எப்படி இருப்பார்கள்? சந்தர்ப்ப சூழ்நிலை இறுதியில் சில பாத்திரங்களை சற்றே கெட்டவர்களாக காட்டுகிறது, அதைக் கூட யதார்த்தத்தின் வெளிப்பாடாகவே உள்ளது என்றும் எடுத்துக் கொள்ளும் விதத்தில் அமைந்திருக்கிறது.

நிறைய அவார்ட்கள் வாங்கியுள்ள படம். அதனால் வெகு சில திரை அரங்குகளிலேயே காட்டப்பட்டு அவையும் ரொம்ப நாள் ஓடாமல் எடுக்கப்பட்டு விட்டன. இப்படி ஆதரவு தர நாம் தயங்கினால் எப்படி நல்ல சினிமா அமையும்? நானும் இந்தப் படத்தைத் தாமதமாகப் பார்த்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

உலகமெங்கும் விரவிக்கிடக்கும் நிலமற்ற உழைக்கும் மக்களுக்கு இந்த படத்தை சமர்ப்பணம் செய்திருக்கிறார் இயக்குநர் லெனின் பாரதி. அவருக்கு மனமார்ந்த பாராட்டுகளும் நன்றியும்.

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை – சிறுகதை

“அப்பா நாங்க திரும்ப அமேரிக்கா திரும்பி போறதுக்குள்ள நிறைய விஷயம் முடிவு பண்ணணும்.”

கிருஷ்ணமூர்த்தி படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் இருந்து நிமிர்ந்து பார்த்தார். இரண்டு மகள்கள் ஒரு மகன் முன்னே நின்று கொண்டிருந்தார்கள். பேசியது வினோத் கடைசிப் பிள்ளை.

“என்ன முடிவு பண்ணனும்?”

கிருஷ்ணமூர்த்தியின் எண்பதாவது பிறந்த நாளுக்காக அவர்கள் வந்திருந்தார்கள். அம்மா இல்லை என்றாலும் முக்கியமான அகவை, கொண்டாட வேண்டும் என்று அவர்கள் பிரியப்பட்டதால் அவரும் ஒத்துக் கொண்டார். பெரிய சடங்காக செய்யாவிட்டாலும் நெருங்கிய சொந்தங்களை அழைத்து விருந்து கொடுத்துப் பிள்ளைகள் அசத்திவிட்டது அவருக்கு ரொம்ப மகிழ்ச்சி. ஒவ்வொருவரும் அழகாக தந்தையைப் பற்றி பேசி விடியோ எல்லாம் தொகுத்து வழங்கி வெளியூரில் இருக்கும் உறவினர்களும் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும்படி இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பி ஹைடெக்காக செய்தது, வந்த உறவினர்களை எல்லாம் என்ன இருந்தாலும் பசங்க அமெரிக்காவில் இருக்காங்க இல்லையா அதான் பிரமாதமா பண்ணிட்டாங்கன்னு பேச வைத்தது.

“அப்பா இந்த வீட்டை இடிச்சு நீங்க இருக்கும்போதே பிளாட் ப்ரொமோட் பண்ணிடலாம்பா. நாங்க எல்லாரும் அமெரிக்காவில் இருக்கோம் எங்களால பொறுப்பு எடுத்து அப்புறம் செய்ய முடியாது. பில்டர்ட கூட பேசிட்டோம். அமெரிக்காவில் என் ப்ரெண்டோட தம்பி இங்கே பெரிய பிளாட் டெவலப்பர். நல்ல டீல் தரான். நாலு பிளாட் நமக்கு நாலு பிளாட் பில்டருக்கு. நம்ம கையை விட்டு ஒரு பைசா செலவழிக்க வேண்டாம்.”

தீர்க்கமாக அவர்களை பார்த்தார் கிருஷ்ணமூர்த்தி. வினோத்துடன் அவன் சகோதரிகள் இசைந்து நிற்பது அவர்கள் முகத்திலேயே தெரிந்தது.

“இது விஸ்வநாதனுக்குத் தெரியுமா? அவன்ட்ட பேசிட்டீங்களா? அவன் என்ன சொல்றான்?”

“அவன்ட்ட என்ன பேசறது? நாங்க சொன்னா அவன் என்ன வேண்டாம்னு சொல்லிடுவானா?”

“ஏன் அவன் தானே என் மூத்த பிள்ளை. அவனையும் தானே நீங்க கலந்து ஆலோசிக்கணும்? அவன் தான் என்னை இன்னிக்கு வரைக்கும் பார்த்துக்கிட்டு இருக்கான். அப்படியே டெவலப் பண்ணணும்னாலும் நான் போனப்புறம் அவன் பார்த்துப் பண்ண மாட்டானா? என்ன அவசரம் இப்போ? நீங்க எல்லாருமே வீடு வாசலோட அமெரிக்காவில் நல்லா தானே இருக்கீங்க?”

“அப்பா விசுக்கு என்ன தெரியும்? அவனை எல்லாரும் ஏமாத்திடுவாங்க.” இது வைஷாலி மூத்த மகள்.

“அவனுக்கு உங்களை மாதிரி படிப்பு வேணா வராம இருக்கலாம். ஆனா அவன் எல்லாத்தையும் பொறுப்பா செய்யறவன் தான். என்ன அவனுக்கு என்னமோ அதிர்ஷ்டம் இல்லை. வியாபாரம் ஓஹோன்னு வரலை. பொண்டாட்டியும் கோச்சுக்கிட்டு போயிட்டா, குழந்தையும் இல்லை. ஆனா அவனை ஏமாளின்னு சொல்லாதீங்க.

இப்போ ஒன்னும் இடிச்சு கட்ட வேண்டாம். நான் எல்லா விவரத்தையும் உயில்ல எழுதி வெச்சிருக்கேன்.”

“வில்லு எழுதியாச்சா? என்ன எழுதியிருக்கீங்க?”

“அது நான் போனப்புறம் தெரியும். வக்கீல் ரங்கசாமி கிட்ட கொடுத்து வெச்சிருக்கேன்.”

மூவரும் அவசரமாக அறையை விட்டு வெளியே வந்தனர். அப்பா காதில் விழும் தூரம் தாண்டியதும் ரெண்டாவது மகள் விமலா “பார்த்தியா இந்த விசு ஊமைக் கோட்டானாட்டம் இருந்துக்கிட்டு அப்பாவை உயில் எல்லாம் எழுத வெச்சிருக்கான். ஒரு வேளை அப்பா வீட்டை அவன் பேருக்கே எழுதி வெச்சிருப்பாரோ?”

குசுகுசுவென்று கொஞ்ச நேர கூட்டு உரையாடலுக்குப் பின் மூவரும் திரும்ப அப்பாவின் அறைக்குச் சென்றார்கள். “உயில் எழுதி வெச்சிருக்கேன்னு சொல்றிங்களே அப்போ எப்படி போகணும்னு எல்லாம் எழுதி வெச்சிருகீங்களா?”

“என்னது எப்படி போகணுமா?”

இல்லை வீட்டில போகனுமா இல்லை ஆஸ்பத்திரியிலா? வீட்டுல தானான்னு நீ நெனச்சா ஒரு ஸ்டேஜ்ல ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருந்தா கூட வீட்டுக்கு உங்களை கொண்டு வந்திடுனும்.” விஷாலி விளக்கம் கொடுத்தாள்.

“சப்போஸ் உங்களுக்கு உடம்பு சீரியஸ் ஆகி வெண்டிலேடர்ல போடறா மாதிரி ஆகிட்டுதுன்னா போடனுமா வேண்டாமா? அப்படியே டாக்டர்கள் போட்டுட்டா எப்போ எடுக்கணும்னு இதெல்லாம் நீங்க எழுதி வெச்சுட்டா தேவலை. அம்மாக்கு முடிவு பண்ண நீங்க இருந்தீங்க. உங்களுக்கு என்ன பண்ணும்னு நாங்க தெரிஞ்சிக்கணும் இல்லையா? இதெல்லாம் அமெரிக்காவுல ரொம்ப சகஜம். இப்போ மூளைச்சாவு ஏற்பட்டா ஆர்கன் டொனேஷன் நிறைய பேர் பண்றாங்க. உடம்பையே கூட தானமா கொடுத்துடலாம். நீங்க என்ன நினைக்கறீங்க?” இது விமலா.

சிவ சிவா என்று ஆயாசமாக சொன்னார் கிருஷ்ணமூர்த்தி. “எனக்கு கேடராக்ட் ஆபரேஷன் செஞ்ச டாக்டரிடமே என் கண் தானம் பத்தி எழுதி கொடுத்திருக்கேன் விமலா. உடல் தானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் இன்னும் பழைய நம்பிக்கைகள்ல ஊறியிருக்கேன். அப்படி ஒரு வேளை நான் அனாதைப் பொணமா போகனும்னு தலையில் எழுதியிருந்தா அதை யாராலும் மாத்த முடியாது. நல்ல சாவுன்னு எனக்கிருந்தா விசு என்னை இழுத்துப் போட்டிடுவான். அப்படி வெண்டிலேடர்ல என்னை போட்டுட்டாங்கன்னா அவனுக்குத் தெரியும் எப்போ பிளக்கை புடுங்கனும்னு, நான் எதுவும் எழுதி வைக்கத் தேவையில்லை.”

“அப்பா என்ன நீங்க எங்களை தப்ப புரிஞ்சுக்கறீங்க. இதெல்லாம் அமெரிக்காவில் தெளிவா எழுதி வெச்சிடுவாங்க. அந்த ஊர்ல அவங்க கடைப்பிடிக்கிற சில நல்ல விஷயங்களை நாமளும் கடைபிடிச்சா நல்லது தானே? இதுலலாம் செண்டிமெண்ட் பார்க்கனுமா? நீங்க வேணா புதுசா இன்னொரு உயில் எழுதுங்களேன். உங்களோட வக்கீல் கிட்ட வந்து எல்லாத்தையும் முடிச்சுக் கொடுத்துட்டு அப்புறம் ஊருக்குக் கிளம்பறோம்”

உயிலில் எழுதப்பட்டிருப்பது என்னனு தெரிஞ்சிக்க ரொம்ப ஆவலா அவர்கள் இருப்பது கிருஷ்ணமூர்த்திக்குப் புரிந்தது. மூணு நாலு கோடி ரூபாய் சொத்துக்குப் பங்கு பிரிப்பதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து வேதனையாக இருந்தது அவருக்கு. பிள்ளைகளை இப்படியா வளர்த்திருக்கோம் என்று நொந்து கொண்டார்.

மாலையில் விசு தன்னுடைய கணினி பழுது பார்க்கும் கடையை மூடிவிட்டு வந்தபோது சகோதர சகோதரிகள் அவனுடன் சரியாகப் பேசாதது கண்டு அப்பாவிடம் வந்தான். “என்னப்பா யாருமே சரியா பேசலை, ஏதாவது பிரச்சினையா? இன்னும் ரெண்டு நாள்ல கிளம்பிடுவாங்களே. ஏதாவது வாங்கி பேக் பண்ணனும்னா நான் ஹெல்ப் பண்ணலாமேன்னு கேட்டேன். யாருமே சரியா பதில் சொல்லலை” என்றான்.

“ஒண்ணுமில்லை, விடுடா, அவங்கவங்க வேணுங்கறதை வாங்கி பேக் பண்ணிப்பாங்க. சின்ன குழந்தைங்களா என்ன? நீ போய் உன் வேலையைப் பாரு” என்றார்.

இரவு உணவு உண்ணும்போதும் மௌனமாகவே கழிந்தது. விஸ்வநாதனுக்கு வருத்தமாக இருந்தது. அவனுக்கு விமலாவுடன் நெருக்கம் அதிகம். “என்ன விமலா எல்லாரும் பேசாம இருக்கீங்க? மனசுக்கு வருத்தமா இருக்கு. அப்பாவோட ஏதாவது வாக்குவாதம் ஆச்சா? அவர் முகமும் வாடியிருக்கு” என்று கேட்டான்.

“ம்க்கும், ரொம்ப அக்கறை தான் போ உனக்கு. அப்பா உயில் எல்லாம் எழுதி வெச்சிருக்காரு. ஒரு வார்த்தை எங்களிடம் சொன்னியா?” என்றாள்.

“என்னது? அப்பா உயில் எழுதி வெச்சிருக்காரா? எனக்கே தெரியாதே. அப்படியே எழுதி வெச்சாலும் நல்லது தானே, நாம நாலு பேரு இருக்கோம், பிரச்சினை வேண்டாம்னு அப்பா விவரமா எழுதியிருப்பார். அப்பாக்கு எப்பவுமே எதையும் நியாயமா பண்ணனும்னு விருப்பம் தானே? என்றான் வெகுளியாக.

“நாங்க வீட்டை இடிச்சு பிளாட் பிரமோட் பண்ணலாம்னு சொன்னோம். அப்பா அதுக்கு ஒத்துக்கலை.” என்றாள்.

“ஏன் விமலா அதுக்கு இப்போ என்ன அவசரம்? அம்மா இருந்த வீடு இது. இன்னும் அம்மா இங்கேயே இருக்கிறா மாதிரி தான் நானும் அப்பாவும் நினச்சிக்கிட்டு இருக்கோம். அப்பா காலத்துக்குப் பின்னாடி அதெல்லாம் பண்ணலாமே. இப்படியா அப்பாக்கிட்ட பேசுவீங்க?”

“ஆமாண்டா உனக்கென்ன? ஓசில அப்பாவோட இருந்துக்கிட்டு இருக்க. அப்பா போனப்புறம் வீட்டை காலி பண்ணுவியோ மாட்டியோ. நாங்க அமெரிக்காவுல உக்காந்துக்கிட்டு உன்னை கிளப்பவா முடியும்?

விதிர்விதித்துப் போய்விட்டான் விசு. இவர்கள் வரும் முன் வீட்டை ஒழுங்கு படுத்தி, ஒவ்வொருவர் வரும்போதும் விமான நிலையத்துக்குப் போய் தேவுடு காத்து அழைத்து வந்து, வேண்டிய இடத்துக்கு எல்லாம் கூட்டிப் போய், அதிக எடையினால் எடுத்துப் போக முடியாத சாமான்களை எல்லாம் போஸ்ட் ஆபிஸ் போய் தனியாக பார்செல் கட்டி அனுப்பி, ஒவ்வொரு முறை இவர்கள் எல்லாரும் வந்து போகும் போதும் ஒரு கல்யாணம் நடத்தி முடித்த ஆயாசத்தை எல்லாம் பொருட்படுத்தாது அன்புடன் செய்து வந்த அவனுக்கு இந்தப் பேச்சு முகத்தில் அறைந்தார் போல் இருந்தது. அதுவும் அம்மா இருக்கும்போது அம்மா தனியாக பலகாரம், பணியாரம், ஊறுகாய், பொடி வகைகள் என்று தனியாக செய்து கொடுப்பாள். அதையெல்லாம் கட்டி அனுப்புவதும் இவன் பொறுப்பு தான். இதையெல்லாம் வேலையாக நினைக்காமல் ஆசையா செய்தும் இவர்கள் எண்ணம் இப்படி உள்ளதே என்று அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அதுவும் தனக்குக் குழந்தைகள் இல்லாததால் அவர்களின் குழந்தைகளின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தான் விசு. இவ்வளவு செய்யும் அவனுக்கு அவர்கள்  சேலில் வாங்கிய டி ஷர்டையோ ஒரு கைக் கடிகாரத்தையோ பெரிய பரிசுப் பொருளாக கொடுப்பார்கள் தங்கைகளும் தம்பியும். இவன் கடையில் வேலை பார்க்கும் மெக்கானிக்குகள் கூட போன் மாடல் சொன்னா வாங்கி வருவார்களா என்று கேட்பார்கள். இவன் தட்டிக் கழித்து விடுவான், எதற்கு அவர்களுக்குத் தொந்தரவு என்று! கேட்டாலும் வாங்கி வர மாட்டார்கள் என்பதை அவன் உள்ளுணர்வு சொல்லியிருக்கும்.

இரவில் எப்பவும் போல அப்பாவின் அறையில் அப்பாவுக்குப் பக்கத்தில் படுத்துக் கொண்டான் விசு. “ஏதாவது வேணுமாப்பா?” ஒரு நீண்ட பெருமூச்சு பதிலாக வந்தது. போர்த்தி விட்டுவிட்டு பக்கத்து கட்டிலில் படுத்துக் கொண்டான்.

எதோ சத்தம் கேட்டு முழிப்பு வந்தது. ஹாலில் வினோத் போனில் உரக்க பேசுவது காதில் விழுந்தது. அதற்குள் அப்பா “எனக்கு தொண்டை வறட்சியா இருக்கு கொஞ்சம் தண்ணி கொடேன்” என்றார். பக்கத்தில் இருந்த செம்பில் இருந்து டம்ளரில் ஊற்றி அவரிடம் கொடுத்தான்.

“நீயே என் வாயில் விடு நான் எழுந்திருக்கலை” என்றார்.

என்ன இப்படி சொல்கிறாரே என்று தண்ணீரை வாயில் ஒரு மடக்கு விட்டான், கொஞ்சம் உள்ளே போனது மீதி வழிந்தது. வேகமாக எழுந்து விளக்கைப் போட்டான். அப்பா கண் மூடியிருந்தார். நாடிப் பார்த்தான் இல்லை. நெஞ்சை பலமுறை அழுத்தி விட்டான் ஆனால் மூச்சு திரும்ப வரவில்லை.

அறைக்கு வெளியே வந்தவனிடம் விஷாலி “டேய் வினோத் பையன் விகாஸ் காலேஜ்லேந்து ப்ரென்ட் வீட்டுக்குப் போகும்போது பெரிய கார் ஆக்சிடன்ட்ல மாட்டி நினைவில்லாம ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்திருக்காங்க. பிரெயின் டெட்டா இருக்க வாய்ப்பிருக்குன்னு டாக்டர்கள் சொல்றாங்களாம். இப்ப தான் ஜெயந்தி போன் பண்ணினா.” என்று கதறினாள்.

“அவன் ஆர்கன் டோனர் என்பதால வினோத் வர வரைக்கும் லைப் சப்போர்ட் சிஸ்டத்துல வெச்சுட்டு அவன் வந்தப்புறம் ஆர்கன்லாம் எடுத்துட்டு அதுக்கு அப்புறம் அவனுக்கு நாம விடை கொடுக்கலாம்னு சொல்றாங்களாம்.” என்றால் விமலா.

அழவும் திராணி இல்லாமல் உட்கார்ந்திருந்தான் வினோத்திடம் வந்தான் விசு.

“ஒன்னும் கவலைப்படாதே விகாசுக்கு சரியாகிவிடும். கொஞ்சம் பொறுமையா இரு. நல்ல சேதி வரும்.” என்றான்.

“எப்படி சொல்ற நீ?” நிமிர்ந்து பார்த்தான் வினோத்.

“அப்பா போயிட்டார் டா, இப்ப தான். விகாஸ் பொழைச்சிடுவான், அவனை அப்பா காப்பாத்திடுவார். எனக்கு நம்பிக்கை இருக்கு. நான் ஆக வேண்டிய காரியத்தைப் பார்த்துக்கறேன். நீ எது அடுத்த ப்ளைட்டோ அதில் கிளம்பிப் போ.” என்றான். விஷாலியும் விமலாவும் அப்பாவின் அறைக்குள் ஓட வினோத் விசுவைக் கட்டிக் கொண்டான்.

“இல்லை விசு நான் இருக்கேன். அப்பா காரியம் ஆன பிறகு கிளம்பறேன். நிச்சயமா விகாஸ் பொழைச்சிடுவான். நீ சொன்ன வார்த்தையை நான் நம்பறேன். கஷ்டம்னு வரும்போது தான் தெரியுது உறவு எவ்வளவு முக்கியம்னு. என்னை மன்னிச்சுடு விசு” என்றுக் கட்டிப்பிடித்து அழுதான் வினோத்.

அறைக்குள் சென்ற சகோதரிகள், அப்பா நாங்க பேசினது தப்பு தான் பா. இப்படி சொல் பொறுக்காம உடனே எங்களை விட்டுட்டுப் போயிட்டீங்களே என்று அழுவது விசுவின் காதில் விழுந்தது. கொஞ்சம் தாமதம் தான். ஆனா அப்பா மன்னித்து விடுவார் என்று நினைத்துக் கொண்டான்.

 

photo courtesy: https://www.dreamstime.com/stock-images-old-indian-man-senior-citizen-closeup-shot-isolated-against-white-background-image29737264

இமைக்கா நொடிகள் – திரை விமர்சனம்

சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த இன்னுமொரு திரைப்படம் இமைக்கா நொடிகள். முன்பெல்லாம் படத்தின் பெயர் எண்டு கார்ட் போடும் முன் வசனத்தில் வந்துவிடும். இப்போ சமீப காலங்களில் படத்தின் பெயருக்கும் படக் கதைக்கும் பெரிய தொடர்பு இருப்பதில்லை. கவர்ச்சிகரமான பெயராக, பிரபலமான வசனத்தையோ பாடலையோ வைத்து பெயரிடுவது வழக்கமாகி விட்டது. இந்தப் படத்தில் இமைக்கா நொடிகள் பெயர் காரணம் எண்டு கார்ட் போடும் முன் வந்துவிடுகிறது. நயன் தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் நன்றாக உள்ளன, அவர் நடிப்பும் அழகும் படத்துக்குப் படம் மெருகேறிக் கொண்டும் போகிறது. ஆனால் சூப்பர் ஸ்டாராக நீண்ட நாள் நிலைக்க திரைக்கதையில் நிறைய ஓட்டைகளை வைத்து அமைக்கும் இயக்குநரை தவிர்ப்பது நலம்.

க்ரைம் த்ரில்லர் படம் நிச்சயமாக மற்ற ஜானர்களை விட சுவாரசியம் மிகுந்தது, அரைத்த மாவையே அரைத்த கதையாக இல்லாமலும் இருக்க நல்ல வாய்ப்பும் கூட. ஆனால் கதை லாஜிக்கோடு இருக்க வேண்டியது இக்கதைகளுக்கு மிக அவசியம். சில படங்கள் சிரிப்புப் படங்கள், சும்மா லாஜிக் பார்க்காமல் சிரித்துவிட்டு வரலாம். இதில் நயன் பற்றிய மர்மம் ஐந்து வருடங்கள் கழித்து வில்லன் செய்யும் சில காரியங்களால் அதர்வா மூலம் வெளி வரும்போது அந்த மர்மம் வெளி வராமலே இருந்திருந்தால் நயன் வைத்திருக்கும் சில கோடி ரூபாய்கள் அவரிடமே தங்கியிருந்திருக்குமா, அது ஒரு சிபிஐ அதிகாரிக்குத் தகுந்த லட்சணமா போன்ற கேள்விகள் எழுகின்றன.

அதர்வா நயன் தம்பியாக, கிளைக் கதையின் நாயகனாக வருகிறார். மெயின் கதையோடு சேரவே இடைவேளை ஆகிறது. அது வரை நடக்கும் கொலைகளும் நயனின் சிபிஐ பணியும் இன்னொரு பக்கம் வெத்தாகப் பயணிக்கிறது. அதர்வா ஒரு மருத்துவர். குடித்து விட்டு காதல் தோல்விக்காக மறுகுவார். அந்தக் காட்சியில் அக்காவிற்கு சத்தியம் செய்து கொடுத்திருப்பதால் வண்டி ஓட்டுநர் வரும் வரை காத்திருந்து அவர் வாகனம் ஒட்டாமல் இருப்பதாக வசனம் வரும். ஆனால் அதே சமயம் வேறொரு காட்சியில் நயன் அவரை குடித்துவிட்டு வாகனம் ஒட்டியதற்காக அடித்து விட்டார் என்று நயன் மேல் அதர்வாவுக்குக் கோபம் இருக்கும். அந்தக் கோபம் தணிய அவர் நண்பர் அன்று மருத்துவமனையில் எமெர்ஜென்சி இருந்ததால் தான் அதர்வா குடித்து விட்டு ஒட்டியதாக சொல்லுவார். அதனால் நயனும் மன்னித்து விடுவார். இதில் இரண்டு எரிச்சல் – ஒன்று குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை ஒரு மருத்துவரே செய்வதை காட்சியாக அமைத்திருப்பது, இன்னொன்று குடித்துவிட்டு மருத்துவர் எந்த எமர்ஜென்சி நோயாளியைப் பரிசோதித்து சரியான மருத்துவ கணிப்பைத் தரப் போகிறார்?

குண்டடிப் பட்டு அறுவை சிகிச்சை முடிந்தவுடன் சும்மா பறந்து பறந்து சண்டை போடுவதெல்லாம் ஹீரோக்களால் மட்டுமே முடியும். அதர்வா ஸ்டன்ட் காட்சிகளில் காட்டும் திறன், நடனம் மற்றும் காதல் காட்சிகளில் காட்டுவது இல்லை. அனுராக் கஷ்யப் வில்லன். நன்றாக வெறுக்க வைக்கிறார். முட்டைக் கண்களும் முழித்துப் பார்க்கும் பார்வையும் அவருக்குப் பெரிய ப்ளஸ். தமிழ் படத்தில் தமிழ் உச்சரிப்புக்கு சரியாக வாயசைக்கக் கற்றுக் கொண்டால் வில்லனாக ஒரு சுற்று வரமுடியும். நயன் மகளாக வரும் சிறுமி நன்றாக நடித்தாலும் பேசும் வசனங்கள் வயசுக்குத் தக்கனவையாக இல்லை. அந்தக் குழந்தையை தைரியம் உள்ள பெண்ணாக காட்டவேண்டும் என்பதற்காக ஓவராகப் பேச வைத்துக் கடுப்படித்து விட்டார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. அன்றில் இருந்து இன்று வரை திரைப்படங்களில் ஒரு விபத்து அல்லது ஆபத்து என்று வரும்போது தவறாமல் மழை பெய்யும். இயக்குநர்களுக்கு அதில் என்ன ஒரு பிடித்தமோ தெரியவில்லை.

படத்தின் செர்டிபிகேட்டைத் திரையில் பார்க்கும் போதே 170 நிமிடங்கள் படத்தின் நீளம் என்பது தெரிந்தவுடன் பக்கென்றாகி விடுகிறது. சுருங்க சொல்லி பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது போல் கதையமைப்பது தான் இப்போதைய டிரென்ட். மூணு மணி நேரம் எல்லாம் ரொம்ப அதிகம். அதிலும் இரண்டு இடத்தில் வில்லன் கேம் ஓவர் என்று சொல்லுவார். இரண்டாம் இடத்தில் உண்மையிலேயே கேம் ஓவர் தான். ஆனால் அதன் பின் தான் கதையின் பிளாஷ் பேக் வருகிறது, விஜய் சேதுபதியும் வருகிறார். வந்து எப்படி குறைந்த நேரமே திரையில் வந்தாலும் மனதில் நிற்க முடியும் என்பதை காட்டிவிட்டுப் போகிறார். இந்த பின் பகுதி கடைசியில் வரும் சஸ்பென்ஸ் கொஞ்சம் முன்னாடி வந்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். அதர்வா காதல் கதை எல்லாம் தேவையே இல்லாதது.

ஹிப் ஹாப் தமிழாவின் இரண்டு பாடல்கள் படம் வெளிவரும் முன்னே எப் எம் வானொலியில் ஹிட். பின்னணி இசை சுமார் ரகம். ஒளிப்பதிவு ஆர்.டி ராஜசேகர், நன்றாக செய்திருக்கிறார். பெங்களூரிலேயே படமாக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை பிராபகரின் வசனங்கள் கூர்மை! நயன் அனாயாசமாக நடிக்கிறார். விஜய் சேதுபதியும் அவரும் வரும் காட்சிகள் மிக அருமை.

இப்போ நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் முதலிய சேனல்கள் மூலம் நிறைய வெளிநாட்டுப் படங்கள் பார்ப்பது சாதாரணமாகி விட்டது. அதனால் க்ரைம் த்ரில்லர் கதைத் தேர்வு செய்யும்போது இன்னும் கதையை பரபரப்பாகவும் (கொலைகள் கோரமாகவும், பயங்கரமாகவும் இருந்தால் போதும் என்று இருந்துவிட முடியாது) லாஜிக் தவறுகள் இல்லாமலும் திரைக்கதை அமைக்கப்பட்டால் தான் படம் இரசிக்கப்படும். ரசிகனின் எதிர்ப்பார்ப்பு இப்போழுது அதிகரித்துவிட்டது.