
முழுக்க முழுக்க ரஜினி படம். அவருடைய கலக்கல் ஸ்டைல், வசன டெலிவரி, அசால்டா சண்டை காட்சிகளில் எதிரிகளை பந்தாடுவது, சின்ன நடன அசைவிலேயே ரசிகர்களின் மனத்தைக் கொள்ளைக் கொள்வது என்று அனைத்தும் இந்தப் படத்தில் இருக்கிறது. ஆனால் கார்த்திக் சுப்புராஜ் படம் என்று பெரிய எதிர்ப்பார்ப்போடு போனால் கொஞ்சம் ஏமாற்றம் தான் மிஞ்சும். சில வருடங்களாக ரஜினி படங்களின் தன்மையை ஒப்பிட்டுப் பார்த்தால் கே.எஸ்.ரவிகுமாரின் லிங்கா ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். அதன் பின் கபாலி, காலா என்று இரண்டு படங்கள் சமூக கருத்துகளை முன் வைத்து சாதி பாகுபாடு பற்றிய கதைகளாக அவரை வேற லெவலுக்கு அழைத்துச் சென்றது. 2.0 எந்திரனின் தொடர், பிரம்மாணடம் அதிகம் என்பதைத் தவிர வேறு வித்தியாசம் இல்லை. அதனால் கார்த்திக் சுப்புராஜ் கதை அதுவும் சூப்பர் ஸ்டாருக்கு என்னும்போது அவரின் பீட்சா, ஜிகிர்தண்டா, இறைவி மாதிரி நல்ல திரைக் கதை, ஒரு ஜனரஞ்சகமான படம் என்கிற எதிர்ப்பார்ப்பு சினிமா ரசிகனுக்கு இருப்பது இயல்பே. ஆனால் மாஸ் காட்ட முனைந்ததில் கதைக்கு அவ்வளவு அழுத்தம் தராமல் அதில் கோட்டை விட்டுவிட்டார் என்று தோன்றுகிறது.
திரும்பத் திரும்ப காதலுக்காக தோழன் உதவி செய்வது அதில் ஏற்படும் பகை, வெட்டுப் பழி, குத்துப் பழி, கொலை, இதே தான் இன்னும் கதைக்களமாக இன்றைய இளைய இயக்குநர்களும் எடுத்துக் கொள்வது கதைக்குப் பஞ்சமா அல்லது அவர்களின் மனோ நிலை தான் வளரவில்லையா என்று எண்ணத் தோன்றுகிறது.
எளிதாக போய் படம் பிடிக்க வேண்டும் என்று வட இந்தியாவை தேர்ந்தெடுத்து அங்குள்ள கல்லூரி வளாகத்தில் படம் பிடித்திருக்கிறார்கள். அந்தக் கல்லூரி எங்கு தமிழ்நாட்டில் அமைந்துள்ளது என்று குத்துமதிப்பாக சொல்லியிருக்கலாம், சொல்லவில்லை. குன்னூர், ஊட்டி, கொடைக்கானல் மாதிரி நம்மால் கற்பனை செய்து கொள்ள முடியவில்லை. மணி ரத்னம் இரண்டு மொழியில் படங்கள் எடுக்கும் போது இப்படி தான் ஒரு வட இந்திய நிலத்தில் படம் எடுத்து தமிழ் படத்துக்குப் பொருந்தாமல் நேடிவிடி இல்லாமல் தனியா நிற்கும். அதே தவறை தமிழில் மட்டும் எடுத்தப் படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் ஏன் செய்தார் என்று தெரியவில்லை. (இல்லை இது இந்தியிலும் வெளிவந்துள்ளதா?)அந்தக் கல்லூரி வார்டன் காளியாக வருகிறார் ரஜினி. கெட்டப் பய சார் இந்தக் காளி என்று வசனம் சொல்லாமல் செயலில் காட்டுகிறார்!
சிம்ரன் அறிமுகம் எல்லாம் நன்றாக இருக்கிறது. அவர் பிரானிக் ஹீலர். இப்போ தான் சமீபத்தில் ஆரா பற்றிய சர்ச்சை 2.0 படத்திற்காக சமூக வலைத்தளத்தில் ஓடியது. இந்தப் படத்திலும் ஒரு காட்சியில் ரஜினியின் ஆராவை பரிசோதித்து சிம்ரன் அவர் மனத்தில் கோபம், பகை, சோகம் வன்மம் எல்லாம் உள்ளதாகத் தெரிவிக்கிறார். சிம்ரன் த்ரிஷா இருவருக்கும் மிக சிறிய பாத்திரம். உண்மையில் ரஜினி தவிர அனைத்து முக்கிய பாத்திரங்களுமே சிறிய பாத்திரங்கள் தான். பாபி சிம்ஹா, சசிகுமார், விஜய்சேதுபதி எல்லாரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். வில்லனாக நவாசுதின் சித்திக் ஸ்பெஷல் மென்ஷன் பெறுகிறார், அருமையான நடிப்பு! ஆனால் இது ரஜினி படம் தான், மற்றவர்கள் துணை நடிகர்களே.
ஹாஸ்டல் வார்டனாக ரஜினியுடன் முதல் பாதி வெகு நீளமாகப் போகிறது. கதை என்ன என்று பின் பாதியில் ப்ளாஷ் பேக்கில் தெரிய வந்து எஞ்சி இருக்கும் ஒரு வில்லனையும் ஒழித்துக் கட்டுவது தான் மீதிக் கதை. மணல் கொள்ளைக்கு எதிராக ஒரு கிராமத்தில் இரு பிரிவினரிடையே பிரச்சினை. அதில் மணல் கொள்ளைக்கு எதிராக இருப்பவர்களில் ஒருவராக முஸ்லிம் இளைஞராக சசிகுமார் (மாலிக்). மணல் கொள்ளை செய்யும் குடும்பப் பெண்ணுடன் (பூங்கொடி) அவருக்குக் காதல், வரம்பு மீறி அந்தப் பெண்ணும் கர்பம். அவர்கள் இந்துகள். பேட்டயின் (பேட்ட வேலு அவரே தான் காளியும்) வளர்ப்புத் தந்தையின் மகன் தான் சசிகுமார். பேட்ட அந்த கிராமத்தில் பெரிய தாதா. அவர் தான் மணல் கொள்ளையர்களை வீடியோ ஆதாரத்துடன் பிடித்து போலிசில் ஒப்படைக்கும் அளவு நல்ல வலிமை வாய்ந்தவர். அவர் முனைப்பால் சசிகுமாருக்கும் திருமணம் செய்து வைக்கிறார். ஆனால் எப்படி அந்தக் குடும்பப் பகை பலரை காவு வாங்குகிறது, ரஜினியின் வாழ்க்கையில் ஏற்படும் இழப்புகள் அப்படி இருந்தும் அவர் சசிகுமாரின் மனைவிக்கு உதவி அவர் மகனை ஆளாக்க உதவியும் செய்து பாதுகாக்கவும் முனைகிறார். மிச்சத்தை வெள்ளித் திரையில் காண்க. நிறைய திருப்பங்கள் கடைசியில் இருக்கு ஆனா படத்தின் நீளமும் ஆயாசத்தைத் தருகிறது.
ஒரு கிராமத்தில் இந்துப் பெண் இஸ்லாமிய பையனை காதலித்துத் திருமணத்திற்கு முன் கர்பமாவது பெரிய சண்டைக்கான விஷயமாக தான் பார்க்கப்படும். அதை ரொம்ப சகஜமாக எடுத்துக் கொண்டு ரஜினி பாத்திரமும் சம்பந்தப்பட்ட மாலிக்கும் பூங்கொடியும் மேற்கொண்டு நடக்க வேண்டியதைப் பார்ப்பது சினிமாவில் மட்டுமே சாத்தியம். முறைகேடான உறவுகளை முடிந்தவரை நியாயப் படுத்தாமலும் மாற்று மத காதல்களை கதைக்காக எடுத்துக் கொண்டு அதை சேர்த்து வைப்பதும் பின்னால் விழும் இழவுகளை வைத்து பகையை வளர வீட்டு கதையை நகர்த்துவதும் என்ன மாதிரி மெஸ்சேஜை கார்த்திக் சுப்புராஜ் சொல்ல வருகிறார் என்று புரியவில்லை. அதே போல படத்துக்குத் திருப்புமுனையாக அமையும் காதலர் தின சம்பவமும் தமிழ்நாட்டில் நடப்பது கிடையாது. கர்நாடகாவில் கேள்விப்பட்டிருக்கோம் மகாராஷ்ட்ராவில் உண்டு. தமிழுக்கு அந்நியமான சம்பவங்களைத் திணித்துக் கதையை முன்னேற செய்யும் அளவு கற்பனை வறட்சி பஞ்சம். பா.ரஞ்சித்தின் படங்களில் அவர் கொள்கைப் பிடிப்பை சொல்ல ரஜினி போன்ற பெரிய ஹீரோவைப் பயன்படுத்திக் கொண்டது நல்ல புத்திசாலித்தனம், பாராட்ட வேண்டிய விஷயம். ஆனால் இந்தப் படத்தில் புதுமையாக எதுவும் இல்லை. அதே சமயம் கேங்க்ஸ்டர் கதை என்று எடுத்துக் கொண்டாலும் பாஷா போன்ற விறுவிறுப்பும் இல்லை.
அனிருத் இசை, திருவின் ஒளிப்பதிவு, விவேக் ஹர்ஷனின் படத் தொகுப்பு அனைத்தும் படத்துக்குப் ப்ளஸ். எப்பவுமே ரஜினி கொஞ்சம் வில்லத்தனத்துடன் நடிக்கும் பாத்திரங்கள் செமையாக இருக்கும். இதிலும் அதனால் தான் அவர் நடிப்பு நன்றாக எடுபடுகிறது. அதற்காக கார்த்திக் சுப்புராஜைப் பாராட்ட வேண்டும். இது ரஜினி படம். அவர் ரசிகர்கள் பெரிதும் பார்த்து மகிழ்வார்கள். அது நிச்சயம் 🙂
