Tamil Tweeter of The Year 2019 @tskrishnan

வரலாறு முக்கியம் அமைச்சரே என்கிற வடிவேலு காமெடி பிரபலம்! இன்றைய காலகட்டத்தில் வரலாற்றை அறிந்திருந்தால் தான் மறுமுறையும் முன்பு செய்த அதே பிழைகளை செய்யாமல் இருக்கவும் வருங்காலத்தில் ஏமாறாமல் இருக்கவும் முடியும். அதோடு தமிழின் வரலாறு, தமிழனின் வரலாறு தமிழகத்தில் பிறந்த அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். வரலாற்றின் மூலம் தான் பண்டைய கால அரசியல், மக்களின் வாழ்வு நெறி, சமயம், பண்பாடு, வளமை, நாகரீகம், படையெடுப்புகள், அறிவியல் வளர்ச்சி, இன்னும் முக்கியமான தகவல்கள் பற்றி நாம் அறிய முடியும். அதைத் தெரிந்து கொள்வதால் மட்டுமே நம் பாரம்பரியத்தைப் பற்றி பெருமை கொள்ள முடியும். சிலர் எழுதிய வரலாற்றில் வரலாற்றின் சிலசில பகுதிகள் மட்டும் ஒருவாறு தெரியும். அப்படி தெரிந்தவற்றை மட்டுமே வைத்து அவர்களை மிகச் சிறந்தவர்களாக எண்ணிப் பாராட்டி வருகின்றோம். நடந்த விஷயங்களை நடந்தபடியே சொல்லுவதை சரித்திர ஆசிரியர்கள் பின்பற்றினால் நன்றாக இருக்கும். ஆனால் பலரும் பின்பற்றுவதில்லை அல்லது விரும்புவதில்லை. தங்கள் தனிப்பட்ட அபிமானம் காரணமாக சாதி, மதம், தொழில், ஊர் முதலியவற்றை மாறுபாடாகக் கூறி அதற்குப் பொய்யான ஆதாரத்தையும் காட்டி சாதிக்கிறவர்கள் உண்டு. ஒருகாலத்தில் இருந்தவரை வேறொரு காலத்தவராகக் கூறுவதும் பிறவுமாகிய தடுமாற்றங்கள் வரலாறுகளில் மலிந்திருக்கின்றன. கொடுங்கோலனை நல்லவனாக காட்டியும் நல்லவனை தீயவனாக காட்டியும் வரலாறு புனையப்பட்டுள்ளது. முக்கியமாக நம் இந்திய வரலாறு மிகவும் தொன்மையானதும் பற்பல படையெடுப்புகளாலும், பல போராட்டங்களாலும், பல சமயங்களின் தோற்ற பூமியாக விளங்குவதா லும், எண்ணிலடங்கா முக்கிய சம்பவங்கள் நிறைந்த நிகழ்ச்சிகள் மயமானவை. எழுதப்பட்ட வரலாற்றில் எது உண்மை எது பொய் என்று தெரிந்து கொள்ள தனித் திறமையும், தேடலும், அதற்கான உழைப்பும், பொறுமையும், அறிவும், திறனும் தேவை. நம்மிடம் அது இல்லாவிட்டால் அவை இருப்பவரிடம் இருந்து தெரிந்து கொள்ளுதல் மிகவும் எளிதான வேலை. அப்படிப்பட்ட ஞானம் உள்ளவர் தான் ட்விட்டரில் இருக்கும் திரு @tskrishnan அவர்கள். தமிழ் மொழியில்-இலக்கியம், இலக்கணத்திலும், தமிழர் வரலாற்றிலும் ஒரு சேர புலமை பெற்ற அவரிடம் இருந்து நாம் நிறைய தெரிந்து கொள்ள முடியும். தினம் பல நல்ல தகவல்களை தருகிறார். நாம் கேட்கும் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கிறார்.

முன் காலத்து இந்திய சரித்திர எழுத்தாளர்கள் பொதுவாகவே மூலம், ஆதாரம், சான்று இல்லாமல் எதையும் எழுதும் வழக்கம் கொண்டிருக்கவில்லை. அதாவது படித்தவர்கள் படித்ததை உண்மையா இல்லையா என்பதனை தாராளமாக சரிபார்த்து தெரிந்து கொள்ளலாம். அதனால் சரித்திரம், மிக்கப் பொறுப்பு, கடமை, பாரப்படசமின்மை முதலிய கொள்கைகளுடன் எழுதப்பட்டன. ஆனால் பிற நாட்டு எழுத்தாளர்கள் நம் நாட்டின் வரலாற்றை எழுதும்போது அவ்வாறு எழுதவில்லை. தம்மை உயர்த்தி எழுதிக் கொண்டது மற்றுமன்றி, பாரத மக்களை குறைவாகவே, தாழ்த்தி, இழிவுபடுத்தியே எழுதி வைத்தனர. அதனால் தான், இந்திய சரித்திரத்தில் ஒவ்வாதவை என்று பல விஷயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சரித்திரம் என்பது என்ன எழுதப்பட்டுள்ளது, என்ன எழுதப்படுகிறது அல்லது என்ன எழுதப்படப்போகிறது என்பதல்ல. உண்மையில் என்ன நடந்தது என்பது தான் சரித்திரம் ஆகும். அதில் எந்தவித பாரபட்சமும் இருக்கக் கூடாது. இதை எல்லாம் ஆய்வு செய்து தெரிந்து கொள்ள நம்மில் பலருக்கும் பொறுமையும் இல்லை, ஆய்வு செய்யும் திறனும் இல்லை. பொய்யை பரப்புபவர்களும் அவர்களுக்கென்று தனி இலக்கு வைத்து அதை அடைய முயன்ற அளவு தவறான செய்திகளை அரப்புகின்றனர். அதனால் உண்மை வரலாற்றை நமக்கு தங்கத் தாம்பாளத்தில் கொடுக்கும் ஒருவரை பின் தொடர்ந்து சரியான தகவல்களை அறிந்து கொள்ள உதவி  செய்கிறது ட்விட்டர். @tskrishnan இவரை தொடர்வதால் நான் பல புதிய நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டிருக்கிறேன். பாண்டியர்கள் தமிழுக்குச் செய்த அளவில்லா தொண்டுகளை, சோழர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த பாண்டியர்களின் பெருமையை மீட்டெடுத்த மாறவர்மன் சுந்தரபாண்டியன், மூன்றாம் குலோத்துங்கனால் பட்ட அவமானத்தைத் துடைக்க சோழ நாட்டில் கடும்போர் செய்தது, முதலியவை பற்றி அவர் நேரக் கோட்டில் படித்து நான் தெரிந்து கொண்டவை. இராஜ இராஜ சோழனின் உன்னத பெருமைகள், அவர் மகன் இராஜேந்திர சோழனின் தனிப் பெரும் சாதனைகள், சாளுக்கியர்கள் வரலாறு, பல்லவர்கள் கீர்த்தி, விஜயநகர வம்சத்தினர் சேவைகள், மற்ற அரச பரம்பரைகள் சரித்திரத்தை இவர் ட்வீட்களில் பார்க்கலாம். இவருடைய இன்னொரு ஆர்வம் வானிலை பற்றிய ஆராய்ச்சி. இந்து சமயம் பற்றி தவறான தகவல்கள் பரப்படும் இக்காலத்தில் இவர் தரவுடன் தரும் சமயம் சார்ந்த பல தகவல்கள் பாலைவனத்தில் பெய்யும் மழை போன்று தமிழ்ச் சமூகத்துக்கு செய்யப்படும் பெரும் உதவி! எடுத்துக்காட்டு இந்த ட்வீட்கள். https://twitter.com/tskrishnan/status/1195147174977294337

 

நம் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் புதிதாக கற்றுக் கொள்வதற்கும் அவற்றை சரியாக கடைபிடிப்பதற்கும் செலவிடுவது அவசியம். வெட்டியாக இணையத்தில் சாதிச் சண்டை, மத சண்டை, நடிகர்களுக்காக சண்டை போடுவதை விட நல்ல முறையில் அறிவை வளர்த்துக் கொள்வது நமக்குப் பயன் தரும், சுய முன்னேற்றம் ஏற்படும்.

விளையாட்டாக தான் நான் இந்த Tamil Tweeter Of The Year விருது கொடுக்க ஆரம்பித்தேன். இதைத் தொடர்ந்து கொடுப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

2013ஆம் வருட விருது @kanapraba திரு கானாபிரபாவிற்கு  

2014 ஆம் ஆண்டு விருது @RagavanG திரு இராகவனுக்கு

2015 ஆம் வருட விருது @iamVariable திரு அமருக்கு

2016 ஆம் ஆண்டு விருது @savidhasasi திருமதி சவிதாசசி

2017 ஆம் வருட விருது திரு ஜக்குவுக்கு

2018 ஆம் ஆண்டு விருது @selvachidambara திரு செல்வசிதம்பராவிற்கு

இவ்விருதிற்கான விதிகளை மறுபடியும் முன் வைக்கிறேன்.

  1. கீச்சுக்கள் யார் மனத்தையும் புண்படுத்தாமல் பொழுது போக்கு அம்சத்தோடு இருத்தல்.
  2. கீச்சுபவர் பொது அறிவுத் திறனுடன் இருத்தல்.
  3. இனிமையானத் தன்மையை உடையவராக இருத்தல்.
  4. ட்விட்டரில் தன் இருப்பை நிலை நாட்டிக் கொள்பவர்.

இவரை இந்த வருட தலைச் சிறந்த தமிழ் ட்வீட்டர் ஆக திரு கிருஷ்ணன் அவர்களை தேர்ந்தெடுத்து வாழ்த்துவதில் நீங்களும் கலந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இது பெரிய புலிட்சர் விருதோ ஆஸ்கர் விருதோ அல்ல, அன்பினாலும் மரியாதையினாலும் கொடுக்கும் ஓர் அங்கீகாரம் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: