என் பெற்றோர், அவர்களின் பெற்றோர் காலத்தில் இருந்து எங்கள் குடும்பம் விகடன் வாசகர்கள். அதாவது விகடன் ஆரம்பித்த காலத்தில் இருந்தே என்று வைத்துக் கொள்ளலாம். அந்தக் காலத்தில் விகடன் வாங்கியவர்கள் பலர் வீட்டிலும் இந்தக் கதை சொல்லப் பட்டுக் கேட்டிருப்பீர்கள், அதாவது விகடன் வந்தவுடன் யார் அதை முதலில் படிப்பது என்று சகோதர சகோதரிகள் இடையே போட்டி நடக்கும் என்பது தான் அது. எங்கள் தாத்தா வீட்டில் விகடன் வரும் நாளன்று என் மாமா புகை வண்டி நிலையத்துக்கே போய் புத்தகக் கட்டு பிளாட்பாரத்தில் போடப்படும் போதே வாங்கிக் கொண்டு வந்து, வரும் வழியிலேயே ஒரு பாலத்தின் சுவர் மீது உட்கார்ந்து முக்கியமான பகுதிகளைப் படித்து விட்டு அதன் பின் தான் வீட்டுக்கு இதழைக் கொண்டு வருவாராம். வீட்டில் என் அம்மா தான் கடைக் குட்டி. அதனால் அவருக்குப் படிக்கக் கடைசியில் தான் கிடைக்குமாம். இப்படி விகடனுக்கு அந்தக் காலத்தில் இருந்தே ஒரு சுவாரசியமான, ஜனரஞ்சகமான, குடும்பத்தில் அனைவரும் எவர் முன்னும் பிரித்து வைத்துப் படிக்கக் கூடிய ஒரு பத்திரிக்கை என்னும் மதிப்பு இருந்து வந்திருக்கிறது. எழுத்துத் துறையில் பல ஜாம்பவான்களை உருவாக்கியப் பத்திரிகை, பல புகழ் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளைத் தாங்கி வெளிவந்தப் பத்திரிகை என்னும் இரட்டைப் பெருமையையுடையது ஆனந்த விகடன்.
இதன் நிறுவநர் S.S.வாசன். அவர் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்குக் கொண்டு வந்த வார இதழை அவர் பின் பொறுப்பேற்றுக் கொண்ட அவர் மகன் பாலசுப்பிரமணியன் இன்னும் அதிகமாக பரிமளிக்க வைத்தார். ஒரு ஆனந்த விகடன் பல குழந்தைகளை அல்லது பல சகோதர சகோதரிகளை பாலசுப்பிரமணியன் தலைமையில் பெற்றது. ஜூனியர் விகடன், அவள் விகடன், டாக்டர் விகடன், டைம் பாசுக்கும் ஒரு விகடன் என்று எல்லா துறைகளுக்கும் ஒரு விகடன் வந்துள்ளது. அதில் என்னை மிகவும் கவர்ந்தது ஜூனியர் விகடன் தான். முதல் இதழில் இருந்து போன வருடம் வரை வாரம் இரு முறை வந்த இதழ்களை அட்டைக்கு அட்டைப் படித்து வந்தேன். தமிழில் புலனாய்வுப் பத்திரிகையில் தரமான முன்னோடி என்று சொல்லும் அளவுக்கு ஜூவி இருந்தது. துக்ளக் வார இதழ் 1970ல் ஆரம்பித்து இருந்தாலும் அது அரசியல் நையாண்டி பத்திரிக்கையாகவும் அரசியலை விமர்சிக்கும் பத்திரிக்கையாகவுமே இருந்து வருகிறது. ஆனால் ஜூனியர் விகடன் அவ்வாறு இல்லாமல் சமூகத்தில் நடக்கும் பல முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து ஆக்கப் பூர்வமான தீர்வுகளுக்கும் வழி வகுத்தது.
ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஜூனியர் விகடனின் செய்திகள் பரபப்பூட்டுகிற {sensationalism} வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரமாகின. உருப்படியாகப் படிக்க விஷயங்கள் குறைய ஆரம்பித்தன. ஒரு நேரத்தில் ஜூனியர் விகடன் வரும் நாளில் இந்து நாளிதழை விட்டு முதலில் அப்பத்திரிக்கையை படித்து வந்த நான் இரண்டு நிமிடங்களுக்கு மேல் யோசிக்காமல் வாங்குவதை நிறுத்தும் முடிவையும் ஒரு நாள் எடுத்தேன். நடு நிலைமையாக அவர்கள் போட்டு வந்த செய்திகளின் நிறம் மாறியதும், அவர்கள் சொல்லுவதில் உள்ள நம்பகத் தன்மை குறைந்ததும் தான் அதற்கு முக்கியக் காரணங்கள்.
காலம் மாறிவிட்டது. அன்று கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாளையும், மணியனின் பயணக் கட்டுரைகளையும், சிவசங்கரியின் ஒரு மனிதனின் கதையையும், சுஜாதாவின் கனவு தொழிற்சாலையையும், கற்றதும் பெற்றதும் பகுதியையும், ஹாய் மதனையும் எதிர்ப்பார்க்க முடியாது தான். ஆனால் விகடனின் தரத்தை நிலை நிறுத்திக் கொள்ள அதற்குப் பதிலாக சுவாரசியமான, கருத்துச் செறிவான பகுதிகள் நிச்சயம் தேவை. நல்ல இலக்கியத் தரம் வாய்ந்த தொடர் கதைகள் வாசகனை விகடனை வாரா வாரம் ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கும்.
வாசன் அவர்கள் விகடனில் குறுக்கெழுத்துப் போட்டிகள் வாராவாரம் வரும்படி வைத்திருந்தார். அதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணமாகப் பரிசுத் தொகையும் அளித்து வந்தார். அது மாதிரி விகடன் முன்பு நிறைய போட்டிகள் வைத்து, பரிசுகள் கொடுத்து வாசகர்களை தன் வசப்படுத்தும். ஆனால் தற்போது விகடனோ ட்விட்டரிலும் பேஸ் புக்கிலும் மக்கள் பகிரும் கருத்துகளை அவர்களுக்கு எந்த சன்மானமும் கொடுக்காமல் அவற்றை வெளியிட்டு தங்கள் பத்திரிக்கையின் பல பக்கங்களை நிரப்புகிறது! அது தான் பத்திரிகை தர்மமா என்று எனக்குத் தெரியவில்லை.
என்னுடைய முக்கியமான வருத்தம் சமீப காலத்தில் விகடனில் நிலைத்தன்மை {consistency} இல்லை என்பதே. ஒரு வாரம் நன்றாக உள்ளது இதழ், மறு வாரம் சொங்கியாக இருக்கிறது. கட்டுரைகள், வாழ்க்கை அனுபவங்கள், பேட்டிகள் ஆகியவை சினிமாத் துறையைச் சார்ந்தவர்களுடையதாகவே உள்ளன. மற்ற துறைகளில் சாதிப்பவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும். இன்னுமொரு பெரிய குறை எழுத்துப் பிழைகள் நிறைந்த கதை, கட்டுரைகள்! அதைத் தவிர எங்கும் எதிலும் ஆங்கிலக் கலப்பு. இப்படி ஆங்கில சொற்களை தலைப்பாகவும், கட்டுரையின் நடுவிலும் புகுத்துவது பாரம்பரியம் மிக்க ஒரு தமிழ் வார ஏட்டுக்கு அழகா?
மதுவினால் வரும் கேடு, பாரம்பரிய உணவு வகைகளின் முக்கியத்துவம், குடிநீரின்றி தவிக்கும் கிராமங்களின் நிலை, அத்தியாவசிய உணவுகளிலும் கலப்படம், ஈழத் தமிழர்களின் நிலை போன்ற பல சமூகத்துக்குத் தேவையான விஷயங்களை கட்டுரைகளாக கொண்டு வருகிறது விகடன். அந்தச் சேவைக்கு என் பாராட்டுகள். ஆனால் பல விஷயங்கள் வெறும் துணுக்குச் செய்திகளாக உள்ளன. இந்தக் காலத்து இளைய சமுதாயத்தின் கவனம் இவ்வளவு தான் {attention span} இருக்கும் என்று விகடனாகவே கணித்து அவ்வாறு வெளியிடுகிறதா என்று தெரியவில்லை. தமிழ்வாணனின் கல்கண்டு இதழை படிப்பது போல் உள்ளது.
திரை விமர்சனத்தில் விகடனை அடிச்சிக்க ஆளில்லாமல் இருந்த காலம் ஒன்றிருந்தது. அவர்களின் மதிப்பெண்களே அவார்டுகளாக இயக்குநர்/நடிகர்கள் நினைப்பர். நடுவில் திரை விமர்சனத்தின் தரம் படு மோசமாகப் போய் இப்பொழுது சற்றே இழந்த இடத்தைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறது.
தொடர் கதைகள் தான் அடியோடு வெளியிடுவதில்லை! சிறுகதைகளாவது சுவாரசியமானதாக வெளியிடலாம். எல்லாக் கதைகளும் ஒரே மாதிரி உள்ளன. எழுத்தாளர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதா அல்லது தேர்வு செய்பவரின் அளவுகோல் சரியாக இல்லையா? பல கதைகளைப் படிக்க ஆரம்பித்து பாதியோடு விட்டு விடுகிறேன். அதே போல பல சினிமாச் செய்திகளும் பயனற்றவையாக உள்ளன!
விகடன் இணையத்தில் காலூன்ற இன்னும் நிறைய மெனக்கட வேண்டும். நான் பேஸ் புக்கில் இல்லை. இணையத்தில் அவர்களின் சந்தாதாரராக இருந்து இப்போது துண்டித்து விட்டேன். ட்விட்டரில் அவர்களைத் தொடர்கிறேன். ட்விட்டரில் வெவ்வேறு ஹென்டில்களிலும் {சினிமா விகடன், ஜூனியர் விகடன் etc} இவர்கள் போடும் செய்திகள் ஈர்க்கவில்லை. தலைப்பை சுவாரசியமாக வைத்துவிட்டு உள்ளே செய்தியைப் படிக்கையில் சப்பென்றுள்ளது. மறுமுறை அம்மாதிரி இணைப்பை ஒரு புத்திசாலி திறந்து பார்ப்பானா? மேலும் பல முறை தவறான/தரமில்லாத செய்திகளை ட்வீட் செய்து பின் அழித்திருக்கிறார்கள்.
வலைத்தள செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதில் தவறில்லை. அது தான் புதிய யுகம். ஆனால் அதில் தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்க சரியாக பயிற்சி அளிக்கப்பட்ட ஒருவரை நியமித்தல் நன்று.
விகடனை பல விகடன்களாக ஆக்கியதனால் சுவாரசியம் குறைந்து விட்டதோ என்று தோன்றுகிறது. முன்பு விகடனில் பரணிதரனின் அல்லது ஸ்ரீ வேணுகோபலனின் ஆன்மிகப் பகுதி இருக்கும். இப்போ தனியாக அதற்கு சக்தி விகடன் வந்து ஆனந்த விகடனில் ஆன்மிகப் பகுதி போய் விட்டது. சுட்டி விகடன் வந்து விகடனில் சுட்டிகளுக்கான பகுதி போய் விட்டது. மருத்துவம், விவசாயம், சமையல், பங்குச்சந்தை, மோட்டார், தடம் எனப் பிரித்து மிச்சம் ஆனந்த விகடனில் இருப்பது சக்கையோ என எண்ணத் தோன்றுகிறது.
தனித் தனியாக ஒவ்வொரு விகடனை வாங்க எனக்கு அந்த அளவு ஒவ்வொருத் துறையிலும் ஆர்வம் இல்லை. ஒரே பத்திரிகையில் இவை அனைத்தும் கலப்படமாக வந்தால் அவியல் சுவைக்கும்! என்னால் விகடன் வாங்குவதை நிறுத்த முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் ஜூனியர் விகடனையும் ஒரு காலத்தில் இவ்வாறு தான் நினைத்தேன்.