கைலாஷ் சத்யார்த்தி – அமைதிக்கான நோபெல் விருதைப் பெறும் இந்தியர்! 2014

kailash satyarthi

நம்மில் பலருக்கு இவருக்கு அமைதிக்கான நோபெல் பரிசு கிடைத்த அறிவிப்பு வரும் வரை இவர் யாரென்றே தெரியாது. இவருடன் அமைதிக்கான நோபெல் பரிசை சேர்ந்து பெரும் பாகிஸ்தான் குடிமகள் மலாலாவை தெரிந்த அளவு கூட இவரைப் பற்றி தெரியாமல் இருந்தது நாம் வெட்கப்பட வேண்டிய ஒரு விஷயம். இவர் குழந்தைகள் உரிமைக்காகப் போராடும் ஒரு போராளி. இதுவரை இவரின் Bachpan Bachao Andolan (Save The Child Movement) தொண்டு நிறுவனத்தின் மூலம் 80,000 குழந்தைகளை 144 நாடுகளில் கொத்தடிமையில் இருந்து இவர் காப்பாற்றி உள்ளார்.

மத்திய பிரதேசத்தில் பிறந்தவர் (11.1.1954). பொறியியற் பட்டதாரி. முதுகலை பட்டமும் பெற்றவர். போபாலில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர் 1980 வேலையை விட்டு விட்டு Bonded Labor Liberation Frontன் பொது செயலாளராகப் பணி மேற்கொண்டார். இதே வருடம் தான் தன் தொண்டு நிறுவனத்தையும் ஆரம்பித்தார்.

இவருடைய தலைமையில் 1998 Global March Against Child Labour தொடங்கியது. இது குழந்தைகள் உரிமையை காப்பாற்றவும், கல்வியை அவர்களுக்கு அவசியமான ஒன்றாக அனைவருக்கும் உணர்த்தவும் எடுத்துக் கொண்ட முயற்சி. மேலும் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக் கொள்ள செய்வதை தடை செய்யக் கோரியும் அதற்கான விழிப்புணர்ச்சியும் இதன் மூலம் ஏற்படுத்த மேற்கொள்ளப் பட்டது. சிறு முயற்சியாக ஆரம்பித்த இவ்வியக்கம் பெரும் வெற்றியைக் கண்டது. 15௦ நாடுகளில் இருந்து இதில் மக்கள் பங்கு பெற்று, நடை பயணம் ஐந்து கண்டங்களிலும் நடந்தது. பங்கு பெற்றவர்கள் கடைசியில் ஸ்விட்சர்லேந்த்தில் வந்து சேர்ந்தனர். அங்கு International Labour Organisation (ILO)ல் குழந்தைகளை பண்டமாக வியாபாரம் செய்வதை தடை செய்ய தீர்மானம் இயற்றப் பட்டு கையெழுத்தாகியது. அது மட்டும் அல்லாமல் 14௦ நாடுகள் அந்தத் தீர்மானத்தை தங்கள் நாட்டின் சட்டமாகவும் எடுத்துக் கொண்டனர்.

குழந்தை தொழிலாளர் பங்களிப்பில்லாமல் உருவாக்கப்படும் கார்பெட்டுகளுக்கு Rugmark என்னும் சின்னத்தை (தற்போது Goodweave) தாமாக முன் வந்து அளிக்கும் முறையை உருவாக்கினார். இதனால் வெளிநாட்டில் விற்பனை ஆகும் பொருட்கள் இந்த இலச்சினைப் பார்த்து வாங்குவது பெருகியது. இதனால் வர்த்தகத் துறையில் social responsibilityயும் பெருகியது.

குழந்தை தொழிலாளர்களால் ஏழ்மை, படிப்பறிவின்மை, அதன் விளைவால் சமூகத்தில் பல தீமைகள் உருவாகின்றன என்பதை பல ஆராய்ச்சிகள் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த பெருமை அவரைச் சாரும்.

UNESCO வின் ஒரு முக்கியக் குழுவில் அவர் அங்கத்தினர். கல்வியை அனைவருக்கும் தர வேண்டிய சமத்துவ உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார். மேலும் குழந்தைகள் கொடுமைப் படுத்துவதை தடுக்கும் கமிட்டிகளில் அங்கம் வகித்துப் பல நாடுகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றி உள்ளார்.

Millennium Development Goals என்று ஒன்று 2000 வருடம் ஆரம்பிக்கப் பட்டது. அதில் இவர் முக்கிய நிறுவனர். அதன் கொள்கைகள்:

  1. உணவில்லாமல் கஷ்டப்படும் மக்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பது.
  2. எல்லாருக்கும் தொடக்கப் பள்ளி கல்வி கிடைக்கச் செய்வது.
  3. ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலையை உருவாக்குவது.
  4. குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கையைக் குறைப்பது.
  5. தாயின் உடல் நலத்தை மேம்படுத்துவது.
  6. எய்ட்ஸ், மலேரியா மற்றும் இதர நோய்களைக் களைவது.
  7. சுற்று சூழல் பாதுகாப்பு.
  8. உலக நாடுகளின் ஒத்துழைப்போடு இவற்றை செயல்படுத்துவது.

இவரின் முயற்சியால் இவற்றை செயல் படுத்த பல்வேறு நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இவர் தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். இவரின் சிறிய அலுவலகத்தில் ஒரு சின்ன நோட்டீஸ் பலகையில் இவர் இதுவரை கொத்தடிமைத்தனத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை பிளாஸ்டிக் நம்பர்களில் ஒளிர்கிறது. இன்றைய தேதியில் 80000.

ஆனாலும் இவருக்கு நோபெல் பரிசு கிடைக்கும் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். நமது அரசாங்கம் இவருக்கு ஒரு பத்ம விருது கூட இது வரை வழங்கவில்லை. இவரின் அலுவலகம் தெற்கு தில்லியில் ஒரு புழுதி படிந்த தெருவில் உள்ளது. தொலைபேசி அழைப்புகளை அவரே எடுத்து பதில் சொல்கிறார்.அவருடை ஈமெயில் ஐடியை யார் கேட்டாலும் கொடுக்கிறார். பிள்ளைகளைக் காப்பாற்றுவது தன் கடமை, வாழ்கை எனக் கொண்டிருக்கும் அவருக்கு இந்த விருது அவரின் சேவைக்குக் கிடைத்த ஒரு மிகப் பெரிய அங்கீகாரம்.

விபச்சாரத்தில் இருந்து சிறு பெண்களை இவர் காப்பாற்றிய பல பொழுதுகளில் இரும்பு ராடுகளினாலும் கழிகளினாலும் தாக்கப்பட்ட விழுப் புண்கள் இவர் உடல் முழுதும் உள்ளன. நம் நாட்டில் குழந்தைகள் வேலைக்குப் போவது எதனால் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார். வயிற்றுக்கு இல்லாத போது பல குழந்தைகள் தாமாகவே பெற்றோர்களுக்கு உதவ பள்ளிக்குச் செல்லாமல் வேலைக்கு செல்ல ஆரம்பிக்கின்றன. பின் வேறு வழியில்லாமல் அதுவே தொடர்கிறது.

இன்னொரு வகை உள்ளது, அதில் படித்துக் கொண்டே பெற்றோர்கள் சுமையை குறைக்க பிள்ளைகள் மாலை நேரத்தில் வேலைக்குப் போவது. இந்த வகையை ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். கைலாஷ் இவை அனைத்தையும் உணர்ந்து தகுந்த முறையில் குழந்தைகளுக்கு உதவி செய்கிறார்.  ஏழை எளியவர்களுக்குக் கிடைத்த கொடை திரு கைலாஷ் சத்யார்த்தி. இறைவனும் இயற்கையும் அவரின் தொண்டுக்குத் தொடர்ந்து துணை புரியட்டும். உலகமெங்கும் குழந்தைகள் மகிழ்ச்சியாக வளரட்டும்.

அமைதிக்கான நோபெல் பரிசை மலாலாவுக்கும் இவருக்கும் இணைந்து கொடுக்கப் போகும் அறிவிப்பு வந்தவுடன் இவர் மலாலாவுடன் கை கோர்த்து சேவை செய்ய தன் இணக்கத்தைத் தெரிவித்து உள்ளார்.

Kailash_Satyarthi

 

Reference: இணையத்தில் wiki, அவரின் பேட்டிகள்.

தத் – ஈஸ்வர தத்துவம் / பகவத் கீதை பகுதி-2

Bhagavat Gita and Krishna4

ஒரு கதை உண்டு. உலோபியான ஒருவன் இறக்கும் தருவாயில் தன் மகன் நாராயணனிடம் தன்னிடம் கடன் வாங்கியவர்களின் பட்டியலைச் சொல்ல நாராயணா என்று அழைக்கிறான். அந்த சமயத்திலேயே அவன் உயிர் பிரிகிறது. இறக்கும் தருவாயில் தெரியாமலேயே நாராயண நாமத்தைச் சொன்னாலும் அவன் சொர்க்க லோகம் போகிறான்! கதை வேடிக்கையானதாக இருக்கலாம். ஆனால் உண்மையில் நாம் இறக்கும் நேரத்தில் எதை நினைக்கிறோமோ அதுவாகத் தான் நம் அடுத்தப் பிறவியில் பிறக்கிறோம் என்று பகவத் கீதையில் கண்ணன் சொல்கிறார்.

இவ்வுலகத்தை வவிட்டுப் பிரியும் நேரத்தில் இறைவனை நினைத்தால் இறை பதத்தை அடைவோம். ஆனால் திடீரென்று கடைசி நிமிடத்தில் இறைவனை நினைக்கத் தோணாது. அதற்குப் பயிற்சி அவசியம். எப்பொழுதும் நம் மனம் இறைவனையே எண்ணியிருந்தால் தான் எந்தக் கணத்தில் நம் ஆத்மா உடலை விட்டுப் பிரிகிறதோ அப்பொழுதும் இறைவனை நினைத்த வண்ணம் இருக்கும்.

இது எப்படி முடியும்? அதற்கு பகவத் கீதையில் பதில் வைத்திருக்கிறார் கண்ணன். ஒன்பதாம் அத்தியாயத்தில் இறைவனை வழிபட எளிய வழிகளைச் சொல்லிக் கொடுக்கிறார். ‘இலை, பூ, பழம் காய், தண்ணீர், இவற்றை யார் பக்தியோடு எனக்கு அர்ப்பணிகிறானோ அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என்கிறார். அதுவும் முடியவில்லையா, ‘நீ எதை செய்கிறாயோ, உண்கிறாயோ, உடுக்கிறாயோ அதையே எனக்கு அர்ப்பணித்து விடு’ என்கிறார். இதைவிட எளிமையான வழிபாடு இருக்க முடியுமா? இதையே நாம் தினம் தினம் செய்தால் அதுவே நம் வாழ்க்கை முறையாகிவிடுகிறது. அதன் பின் நாம் கண்ணனுடன் இணைவது உறுதி.

lotusflower

எங்கெங்கு காணினும் கண்ணனடா என்பதை நாம் உணர்வதற்கான முதல் வழி அவனின் பெருமைகளை உணர ஆரம்பிப்பதே தான்.

காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நிந்தன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா
கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா நிந்தன் கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
 என்று பாடுகிறார் மகா கவி சுப்பிரமணிய பாரதி.

பலவற்றில் உள்ள ஒருமைப்பாட்டை இந்தப் பாடலின் மூலம் அறிந்து கொள்கிறோம். அப்படி பார்த்தும் கண்ணனின் பெருமைகளின் ஒரு அம்சத்தைத் தான் நம்மால் உணர முடிகிறது. கம்ப ராமாயணத்தில் ஒரு பாடல்:

தோள் கண்டார் தோளே கண்டார்;

தொடு கழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார்;

தடக் கை கண்டாரும் அஃதே;

வாள் கண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்?

ஊழ் கண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்.

தோள் கண்டார் தோளே கண்டார், தாமரை மலர் பாதங்களைக் கண்டவர்கள் அதற்கு மேல் கண்களை நகர்த்த முடியவில்லை. அவ்வழகில் மயங்கி நின்றனர். கையழகைக் கண்டவர் அதோடு வேறு எங்கும் பார்க்கவில்லை. அது போல தான் நாமும் காணும் காட்சிகளிலும் நடக்கும் சம்பவங்களிலும் இறைவனின் ஒரு குணத்தை மட்டும் புரிந்து கொள்கிறோம். ஆனால் உண்மையில் அவனின் பெருமைகளுக்கு எல்லையே கிடையாது.

முதலில் எல்லாவற்றையும் ஒன்றாகக் கண்ட அர்ஜுனன், பிறகு ஒன்றிலேயே எல்லாவற்றையும் பார்க்க ஆசைப் படுகிறான். பலவற்றில் ஒன்றை பார்ப்பதற்குப் பேர் விபூதி. ஒன்றில் அனைத்தையும் பார்ப்பதற்குப் பேர் விஸ்வரூபம். கேட்டதும் கொடுப்பவர் கிருஷ்ணன் அல்லவா ஆதலால் அவரும் அர்ஜுனனுக்கு விஸ்வரூப தரிசனத்தைத் தருகிறார். அதையும் அவனின் ஊனக் கண்ணால் பார்க்க முடியாது என்பதை உணர்ந்து ஞானக் கண்ணைக் கொடுக்கிறார். அந்தக் காட்சியை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. முடிவில் அர்ஜுனன் கண்ணனை பழைய வடிவத்தில் பார்க்க ஆசைப் படுகிறான். பக்தனுக்குக் கட்டுப்பட்டவராச்சே கண்ணன், அதனால் பழைய உருவத்தை தன் பக்தனும் நண்பனும் ஆன அர்ஜுனனுக்குக் காட்டுகிறார்.

A_Vishva-rupa_print

இறைவனைப் புரிந்து கொள்ளக் கூட விஞ்ஞானம் அவசியமாகிறது. ஆதி சங்கரர் சொல்கிறார், பரம்பொருளைப் பற்றிய  அனுமான அறிவே ஞானம், அனுபவ அறிவே விஞ்ஞானம் என்று. அந்த இரண்டையும் பெற்று வெகு சிலரே இறைவனின் உண்மை நிலையை அறிந்து கொள்கிறார்கள். நம்மிடம் ஒரு தேடல் இருக்க வேண்டும், அப்பொழுது தான் உண்மை என்னும் இறைவன் நமக்குச் சரியாகப் புலப்படுவார்.

அறிவு மட்டும் ஒருவருக்கு இருந்தால் போதாது, அறிவு ஒருவருக்கு அளிக்கும் ஒளி தான் ஞானம். ஒருவன் ஞானியாக மாறும்போது தான் அறிவின் நோக்கம் நிறைவேறுகிறது.

தத் த்வம் அசி என்கிற மகா வாக்கியமானது உபதேச வாக்கியமாகக் கருதப் படுகிறது. வேதத்தின் முழுப் பொருளை உணர்த்தும் இவ்வாக்கியத்தை தத் த்வம் அசி என்று மூன்றாகப் பிரித்துப் பொருளை உணரலாம். எளிமையாக ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால், தத்வமசி என்பது ‘That You Are’! பகவத் கீதை 18 அத்தியாயங்களைக் கொண்டது. ஆறு ஆறு அத்தியாயங்கள் தத் த்வம் அசி என்ற மூன்று சொற்களின் பொருளை விளக்குவதாக அமைகிறது. நான் முன்பே த்வம் பற்றி எழுதியுள்ளேன்.

https://amas32.wordpress.com/2013/10/21/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D/

த்வம் என்பது நீ/நான். நம்மை அறிந்து கொள்வது எளிது. கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களில் நம்மைப் பற்றி அறிந்து கொள்கிறோம்.

ஏழாவது அத்தியாயத்தில் இருந்து பன்னிரெண்டாவது அத்தியாயம் வரை ‘தத்’ என்பது என்ன என்பதைப் பற்றி விளக்கம் அளிக்கிறார் கிருஷ்ண பரமாத்மா. தத் என்பது இறைவனைப் பற்றிப் புரிந்து கொள்வது. கடைசி ஆறு அத்தியாயங்கள் ‘அசி’- அதுவாகிறாய், அதாவது நாம் அது வாகிறோம். ஜீவாத்மா பரமாத்மாவின் உறவினை விளக்குகிறது இந்த மகா வாக்கியம்.

இறைவனைப் புரிந்து கொள்வது எளிதல்ல. அனால் அதை நமக்காக குரு சீடன் உரையாடல் மூலம் அழகாக கேள்வி பதில் வடிவில் கீதையில் ஏழிலிருந்து பன்னிரெண்டாம் அத்தியாயங்களில் கண்ணன் சொல்கிறார்.

எக்கும் இரும்பும் சேர்ந்து செய்யப்பட ஒரு நீராவி இயந்திரம் அதிக அழுத்தத்துடன் செலுத்தப்படும் நீராவியினால் செயல்படுகிறது. நீராவி தனித்து இருக்கும்போது இந்த ஆற்றல் அதற்கு இல்லை. அனால் அதே ஒரு ஜடப் பொருளான இயந்திரத்தில் செலுத்தப்படும் போது  செயல் திறன் மிக்கதாக மாற்றப் படுகிறது. அதே மாதிரி அழிவில்லாத பரிபூரணமான ஆத்மா உயிரற்றப் பொருள்களை ஆணைத்துப் பலவாகத் தோன்றும் இவ்வுலகமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

steamengine

எல்லா பருத்தி ஆடையிலும் பருத்தி இருப்பது போல, எல்லா தங்க நகைகளிலும் தங்கம் இருப்பது போல, எல்லா நாம ரூபங்களிலும் இறைவன் சாராம்ச பொருளாக ஊடுருவி நிற்கின்றான். சிறுசும் பெரிசுமாகவும், வட்டமும் நீளமும் ஆக இருக்கும் முத்துக்களான ஜீவாத்மாக்களை பரமாத்மா எனும் நூல் ஒன்றாகக் கோக்கின்றது. நாம் தொடர்பு கொள்ளும் எல்லோரிடமும் ஆத்மாவின் உறவை மறக்காமல் பழகினால் நாம் போகும் பாதை சரியானது என்று நாம் நிச்சயமாகச் சொல்லலாம்.

நாம் இந்த வாழ்க்கைக்கு எந்த அளவு மரியாதை தருகிறோமோ அதே அளவு மரியாதையை வாழ்க்கையும்  நமக்குத் தரும் என்பது விதி. மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சியும், அலுப்பும் சலிப்புமாக எதிர்கொண்டால் அவ்வாறே ஆகவும் நம் வாழ்க்கை அமைகிறது.

ஆன்ம நாட்டம் கொண்டவர்கள் தேடித் தேடிக் கடைசியில் தானே ஆத்மா என்று கண்டுகொள்கிறார்கள். ‘என்னிடம் ஈடுபாடு கொண்டவர்கள் என்னிடமே வந்தடைகிறார்கள்’ என்கிறார் கிருஷ்ண பரமாத்மா! ‘சிந்தனை எப்படியிருக்கிறதோ அப்படியே நாம் மாறுகிறோம்’. நல்லவற்றையே திரும்பத் திரும்ப நினைத்தால் அவ்வாறே நாம் மாறுகிறோம்.சிந்தனையை ஒத்து செயலும் நல்லதாகவே அமைகிறது.

கண்ணன் நமக்கு உத்தரவாதத்தையும் தருகிறார். ஒரு வீட்டுக்குத் தேவையானப் பொருளை வாங்கினால் உத்தரவாத அட்டை அதனுடன் வருவது போல கண்ணனும் நாம் இந்த பூவுலகில் பிறக்கும் போது என் பக்தனுக்கு என்றும் அழிவில்லை என்ற உத்தரவாத அட்டையுடன் தான் நம்மை அனுப்புகிறார். அதுவும் வாழ்நாள் உத்தரவாதம்! என்னை நிரந்தரமாக வழிபடுகிறவனுக்கு நல்ல யோகத்தையும் வளங்களையும் தருவேன் என்று கண்டிப்பாக உறுதி அளிக்கிறார்.

நாம் செய்ய வேண்டியது எல்லாம் பக்தி யோகம் செய்யும் முறைகளைப் பற்றியும், பக்த லட்சணங்களைப் பற்றி அவர் கீதையில் சொன்னதை தவறாமல் பின்பற்ற வேண்டும். வழிபாட்டு முறையில் சில சம்பிரதாயங்களைக் கையாள்வது தான் பக்தி என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் சிறிதும் தயக்கமில்லாமல் நம்பிக்கையுடன், சுயநலமின்றி, இறைவனிடம் அன்பு செலுத்துவது தான் உண்மையான பக்தி. ஒருவருக்கு வரும் சுக துக்கங்கள் நமக்கு வந்ததாகக் கருதினால் அதுவே உண்மையான அன்பு. இந்த குணங்களுடன் யாரொருவன் இருக்கிறானோ அவனே எனக்கு மிகவும் பிரியமானவன், எனக்கு மிகவும் நெருக்கமானவன் என்று ஒரு பாடலில் சொல்கிறார் கண்ணன்.

வேதங்களும் வேதாந்தங்களும் பரம்பொருள் என்றால் என்ன என்று விளக்கமாகச் சொல்வதில்லை. ஆனால் அதை சுட்டிக் காட்டுகின்றன. எல்லாம் அறிந்தவர், புராதானமவர், அணுவைக் காட்டிலும் நுணுக்கமானவர் ஆனாலும் பிரபஞ்சம் முழுக்க வியாபித்து இருப்பவர், உலகெல்லாம் ஆட்சிப் புரிகின்ற சக்தி ரூபமானவர், எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பவர், சிந்தனைக்கு எட்டாதவர், சூரியனைப் போல ஒளி வீசுபவர், அறியாமை அல்லது இருளுக்கு அப்பாற் பட்டவர் என்று க்ளூக்கள் தான் தரப் படுகின்றன! இறைவனை தேடிக் கண்டு பிடிப்பது நம் கையில் தான் உள்ளது.

எல்லா மண் பண்டங்களிலும் களிமண் இருப்பது போல இறைவன் எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிறார். எல்லா பொருட்களும் என்னுள் அடங்கியிருக்கிறது ஆனால் அவற்றில் நான் இல்லை என்கிறார் எம்பெருமான். கடலில் இருந்து தான் அலைகள் உருவாகின்றன ஆனால் அலைகள் நானல்ல என்று கடல் சொல்லலாம். விழித்தவன் இடம் தான் கனவு கண்டவனும் இருக்கிறான். ஆயினும் கனவு நேரத்தில்  இருந்தவன் அவனல்ல. முற்றிலும் விழித்துக் கொண்ட நிலை வந்ததும் அவனிடம் கனவு அனுபவங்களும் இல்லை.

மனத்துடனோ புத்தியுடனோ தன்னை இணைத்துக் கொள்ளாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது மாமுநிவனும் மகா அயோக்கியனும் ஒண்ணு தான். எழுந்தவுடன் திருடனுக்குத் திருட்டுப் புத்தியும் முனிவருக்கு இறை சிந்தனையும் தோன்றும். அவர்கள் இருவருக்கும் இயக்கமளிக்கும் உயிர் சக்தி ஒன்று தான்.

நாம் சினிமாவுக்குப் போகிறோம். கதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை கொலை கொள்ளை நடக்கின்றன. புயலிலும் மழையிலும் நாயகி சிக்கித் தவிக்கிறாள். ஆனால் படம் முடிந்ததும் வெள்ளித் திரையில் அதற்கான ஒரு சுவடும் இல்லை. புயல் மழையினால் திரை நனையவில்லை, கிழியவில்லை. அடிதடியினால் வெள்ளை திரையில் ரத்தக் கறையும் காணவில்லை. இறை பொருளின் நிலைமையும் அது போலத் தான்.

movie-screen

மேஜை மேல் ரேடியம் முகப்புள்ள கடிகாரம் ஒன்று உள்ளது. அந்த மேஜையின் மேல காகிதங்களும் புத்தகங்களும் குவிந்து கிடக்கின்றன. ஒவ்வொன்றாக நீக்கியபோது அதன் அடியில் இருந்த கடிகாரம் இருட்டிலும் ஒளிவிடுகிறது. இறைவனின் சுயம் பிரகாச பேருண்மையும் அதே மாதிரி தான். அறியாமை விலகியவுடன், சுய ஒளியில் தானாகவே அப்பேருண்மை நம் உணர்வில் தோன்றுகிறது.

கிருஷ்ணா பரமாத்மா மேலும் பதினோறாம் அத்தியாயத்தில் தன்னை அர்ஜுனனுக்கு விளக்க முற்படுகிறார், அதன் மூலம் நமக்கும்! அவர் சொல்லும் பல உதாரணங்களில் சிலவற்றை குறிப்பிடுகிறேன்:

‘ஒளி அளிப்பவைகளில் நான் சூரியன், நட்சத்திரங்களில் நான் சந்திரன், புலன்களில் நான் மனம், ருத்திரர்களில் நான் சங்கரன், வீரமிக்க தெய்வ தளபதிகளுக்குள் நான் சிவபெருமானின் மைந்தன் மயில்வாகனன், வேலன், மலைகளில் நான் மேரு, சொற்களில் நான் தனிச் சொல் ‘ஓம்’, நீர் நிலைகளில் நான் சமுத்திரம், அசைவில்லாப் பொருள்களில் நான் இமயம், மரங்களில் நான் அரச மரம், பசுக்களில் நான் காமதேனு, பாம்புகளில் நான் வாசுகி, அசுரர்களில் நான் பிரகலாதன், ஆயுதம் தாங்கிய வீரர்களில் நான் இராமன், நதிகளில் நான் கங்கை, விக்ஞாயானங்களில் நான் ஆத்மா விக்ஞானம், எழுத்துக்களில் நான் ‘அ’ எழுத்து, மாதங்களில் நான் மார்கழி, காலங்களில் நான் வசந்தம், யாப்பு வகைகளில் நான் காயத்திரி, எல்லாவற்றிற்கும் விதை போன்று இருப்பவன் நான் தான்’ என்று முடிக்கிறார்.

முழுமையான ஒரு முக வழிபாட்டின் மூலம் யார் வேண்டுமானாலும் பகவானின் இறைத் தன்மையைக் காணலாம், அவரின் மாட்சியை தனக்குள் அனுபவிக்கலாம் என்று கண்ணன் கூறியவுடன் அர்ஜுனன் முகத்தில் அதை எப்படி அடைய முடியும் என்ற கவலை ரேகைகள் ஓடுவதை அவர் பார்த்திருப்பார். அதனால் அதற்கு எளிமையான வழி முறைகளையும் அவரே சொல்கிறார்.

1. பக்தனின் செயல்கள் யாவும் இறைவனின் திருப்பணியாகவே அமையவேண்டும்.

2. அவனின் இலக்கு இறைவனை அடைவதாகவே இருக்க வேண்டும்.

3. இறைவனிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருக்க வேண்டும்.

4. பற்றுக்களை விட்டொழித்திருக்க வேண்டும்.

5. எவரிடமும் பகைமை உணர்ச்சி இல்லாமல் இருக்க வேண்டும்.

இவ்வைந்து அம்சங்களையும் சிரமேற்கொண்டு செய்து வந்தால் நம்மால் இறைவனை உணர முடியும். முதலில் உருவ வழிபாட்டில் ஆரம்பித்து பின் இறைவனை எங்கும் எதிலும் காணும் நிலையை அடைவோம்.

krishna

Ref: சுவாமி சின்மயானந்தாவின் பகவத் கீதை உரை.

மரகதவல்லி alias Maggie

maggie

என் அம்மாவின் வாழ்க்கை வண்ணமயமானது. வளரும் பருவத்தில் எல்லாமே பளிச் வண்ணங்கள். என் அம்மாவின் அப்பா திரு. சக்கரவர்த்தி ஐயங்கார் செஷன்ஸ் கோர்ட் நீதிபதியாக இருந்தார். அதனால் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாற்றலாகும் வேலை. என் அம்மாவிற்கு முன் நான்கு ஆண் பிள்ளைகள் பிறந்திருந்தார்கள். ஒரு பெண் குழந்தை இறந்தே பிறந்ததால் என் அம்மா பிறந்த போது என் பாட்டியின் தகப்பானருக்குப் பெரும் மகிழ்ச்சி, வறுத்த பயிர் முளைத்தது போல பெண் பிறந்திருக்கிறாள் என்று அவருக்கு மரகதவல்லி என்று பெயர் சூட்டினார்.

நடு ரோவில் என் அம்மாவின் தாய் தந்தை, இடது ஓரத்தில் தாய் மாமன். கீழ் வரிசையில் நாலு சகோதரர்கள், மேல் வரிசையில் டவாலியின் கையில் என் அம்மா.

நடு ரோவில் என் அம்மாவின் தாய் தந்தை, இடது ஓரத்தில் தாய் மாமன். கீழ் வரிசையில் நாலு சகோதரர்கள், மேல் வரிசையில் டவாலியின் கையில் என் அம்மா.

என் அம்மா பிறந்தது தாய் மாமன் வீட்டில், அரியலூரில். ஆனால் அந்த சமயம் என் அம்மாவின் அப்பா இருந்த ஊர் ஸ்ரீவைகுண்டம். அங்கு தான் அவர் மழலைப் பருவம் கழிந்தது. அரசாங்க வேலையில் சம்பளம் நிறைய இல்லாவிட்டாலும் அரசாங்க குவார்டர்ஸ், வேலையாட்கள் என்கிற வசதிகள் நிறைய உண்டு. அதுவும் நான்கு ஆண் குழந்தைகளுக்குப் பின் ஒரு பெண் என்பதால் எல்லாராலும் சீராட்டப் பட்டார் என்றே சொல்ல வேண்டும். அண்ணன்கள் எல்லாருமே அந்தக் கால சூழலுக்கேற்ப மரம் ஏறுதல், விளையாட்டு என்பது சண்டையில் முடிதல் என்பது போல் இருந்ததால் என் அம்மாவும் ஒரு Tomboy தான். எதற்கும் அஞ்சமாட்டார்.

இன்னும் சொல்லப் போனால் இவர் ஒரு மருத்துவர் ஆகியிருந்தால் மிகவும் நல்ல பெயர் பெற்றிருப்பார். அண்ணன்களுக்கு அடிபட்டாலும் முதல் உதவி செய்வது இவராகத் தான் இருக்கும். யாரும் வீட்டில் இல்லாத பொழுது இவர் அண்ணன் ஒருவருக்கு முதுகு முழுக்கத் தேள் பல இடங்களில் கொட்டிவிட்டது. சிறுமியாக இருந்தாலும் உடனே கொட்டிய இடத்தில் எல்லாம் சுண்ணாம்பைத் தடவி முதலுதவி செய்திருக்கிறார். இவருக்கு முன் பிறந்த அண்ணனுக்கு சிறு வயதில் போலியோ நோய் தாக்கியதால் வலது கை செயலிழந்து விட்டது. அது இன்று வரை என் அம்மாவுக்குப் பெரிய குறை. அவர் உலகப் புகழ் பெற்ற பொருளாதார நிபுணராக இன்று வலம் வந்தாலும் அவரின் உடற்குறை அவரை இன்றும் மனதளவில் வேதனைக் கொள்ள வைக்கும். பள்ளிக்குப் பேருந்தில் பயணம் செல்லும்போது முதலில் அண்ணனை பத்திரமாக வண்டியில் ஏற்றிவிட்டு அதன்பின் தான் இவர் ஏறுவாராம்.அதனால் ரொம்ப நாள் வரை அந்தப் பேருந்தின் ஓட்டுநர் இவரை தமக்கை என்றும் அவர் அண்ணனை தம்பி என்றும் நினைத்திருந்தாராம்.

ஸ்ரீவைகுண்டத்திற்குப் பிறகு என் தாத்தாவிற்கு பழனிக்குப் போஸ்டிங். எங்கள் தத்தா பாட்டி ஸ்ரீ வைஷ்ணவர்களாக இருந்தாலும் பலமுறை பழனி மலையை வலம் வந்தவர்கள். என் அம்மாவும் ஒரு வேலையாள் இடுப்பில் உட்கார்ந்தவாறு பழனி மலையை அவர்களுடன் வலம் வந்திருக்கிறார். அதன் புண்ணியப் பலனாகத் தான் எனக்கும் முருகன் அருள் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். முருகனே என் இஷ்ட தெய்வம்.

பழனிக்குப் பின் சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, கடலூர், தூத்துக்குடி என் பல ஊர்களுக்கு என் பாட்டனாருக்கு transfer ஆனதால் சில சமயம் ஒரே வகுப்பைக் கூட இரண்டு வெவ்வேறு பள்ளிகளில் படித்திருக்கிறாராம். நடுவில் இரண்டு வருடம் அரியலூரில் தாய் மாமா வீட்டில் இருந்தும் படித்திருக்கிறார். அங்கும் மாமாவிற்கு ஐந்து ஆண் பிள்ளைகள் ஒரு பெண். அந்தப் பெண்ணே பின்னாளில் என் அம்மாவின் இரண்டாவது அண்ணனின் மனைவியாக வந்தார்.

அம்மாவிற்குப் படிப்பில் ரொம்ப ஆர்வம் கிடையாது ஆனால் அவர் எந்த விளையாட்டுப் போட்டியில் சேர்ந்தாலும் முதல் பரிசைத் தட்டிக் கொண்டு வந்துவிடுவார். நன்றாகப் பாடுவார். வீட்டில் பாட்டுப் பயிற்சி தரப்பட்டது. அதனால் பாட்டுப் போட்டிகளிலும், அண்ணன்கள் trainingல் பேச்சுப் போட்டிகளிலும் எப்பவும் அம்மாவிற்கு முதல் பரிசு தான். பின்னாளில் பாட்டுப் பயிற்சியைத் தொடர்ந்திருக்கலாம். சந்தர்ப்பம் சரியாக அமையவில்லை என்று நினைக்கிறேன்.

என் தாத்தா எந்தெந்த ஊரில் வேலை பார்த்தாலும் அதன் சுற்றுப்புறத்தில் இருக்கும் இடங்களுக்கு எல்லாம் கோடை விடுமுறைகளில் இவர்களை அழைத்துச் சென்றதால் என் அம்மா தென் இந்தியாவில் அநேக ஊர்களையும், கோவில்களையும், அருவிகளையும், நதிகளையும் பார்த்து இருக்கிறார். இயற்கையிலேயே இவருக்கு சரித்திரத்திலும் பூகோளத்திலும் மிகுந்த ஆர்வம். எந்த இடம் சென்றாலும் அவ்விடத்தின் கதையைப் பற்றித் தெரிந்து கொள்வதில் தான் அதிக ஆர்வம் காட்டுவார். இன்றும் கோவில்களுக்குச் சென்றாலும் சிற்பங்களையும் அந்தக் கோவிலைக் கட்டிய அரசரைப் பற்றியும் தெரிந்து கொள்ளவே மிகுந்த ஆர்வமாக இருப்பார்.

ஒரு முறை மகாத்மா காந்தியின் சொற்பொழிவைக் கேட்கவும் அவரை கண்ணால் கண்டு மகிழவும் இவரின் அம்மாவும் ஒரு அண்ணனும் மதுரைக்குச் சென்ற போது இவர் சிறுமியாக இருந்ததால் இவரை அழைத்துப் போகாதது இவருக்கு மிகுந்த வருத்தம். காந்தியைப் பார்க்க முடிந்த ஒரு அரிய வாய்ப்பை அவர் தவற விட்டதை நினைத்து அளவில்லா வருத்தமே. காந்திஜி சுடப்பட்டு இறந்த செய்தி வானொலியில் ஒலிபரப்பப்பட்டு இவர் காதில் விழுந்த பொழுது இவர் ஒரு கோவிலில் இருந்திருக்கிறார். விடாமல் கோவிலை வலம் வந்து இவர் கேட்ட செய்தி பொய்யாக இருக்க வேண்டுமே என்று இறைவனைப் பிரார்த்தித்து அழுதிருக்கிறார். இளம் வயதிலேயே அவருக்கு நிறைய தேசிய உணர்வு உண்டு. இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்று இருக்க மாட்டார். அரசியலில் நடப்பதைக் கூர்ந்து கவனிப்பார்.

பிராணிகளிடமும் நிறைய அன்பு! கால் ஒடிந்த பறவையோ, தாயில்லா பூனைக்குட்டியோ இவரின் பராமரிப்பில் நன்றாகிவிடும். இவர் இண்டர்மீடியட் இரு வருட படிப்பினை ஒரு வருடம் திருச்சியிலும், ஒரு வருடம் பாளையங்கோட்டையிலும் படித்து முடித்தார். பின்பு பட்டப் படிப்புக்கு இவரின் அண்ணன்களின் பிடிவாதத்தால் மெட்ராஸ் Queen Mary’s கல்லூரியில் சேர்ந்து இரண்டு வருட பட்டப் படிப்பை ஒரே ஊரில் படித்து சாதனை படைத்தார். படிப்பை விட எப்பவும் போல என் அம்மா மற்ற செயல்பாடுகளில் முன்னின்று, பல குழுக்களின் செயலாளராக பங்காற்றி Queen Mary’s கல்லூரி பிரபலமாக இருந்தார் 🙂

maggiegrad

என் அம்மா என் அப்பாவை திருமணம் புரிந்த பிறகு அவரின் கவலையற்ற வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்து பொறுப்புள்ள தலைவியாக அவரை மாற்றியது. என் அப்பா மிகவும் எளிமையானக் குடும்பத்தில் மூத்த மகனாப் பிறந்து குடும்ப சுமையைத் தாங்கும் அவசியம் இருந்ததால்  என் அம்மா அவருக்கு உற்றத் துணையாக மாறி தோள் கொடுத்தார். என் தாத்தாவிற்கு என் அப்பாவை மருமகனாக்கிக் கொள்ள முக்கியக் காரணம் அவரின் நேர்மையும், கடின உழைப்பும், அன்பான அணுகுமுறையும் தான். இல்லாவிட்டால் ஒரே பெண்ணை இவ்வளவு பெரிய குடும்பத்தின் மூத்த மருமகளாகக் கொடுத்திருப்பாரா என்பது சந்தேகம்.

திருமண புகைப்படம்

திருமண புகைப்படம்

 

தாஜ் மகாலில்

தாஜ் மகாலில்

மேல் படத்தில் நான் என் அம்மாவுடன், கீழ் படத்தில் என் தம்பி.

மேல் படத்தில் நான் என் அம்மாவுடன், கீழ் படத்தில் என் தம்பி.

என் நான்கு அத்தைகளுக்கும் என் அம்மாவும் அப்பாவும் தான் திருமணம் செய்து வைத்தனர். ஒரு சித்தப்பா என் பெற்றோரின் திருமணத்திற்குப் பின் பிறந்தவர். சித்தாப்பாக்களைப் படிக்க வைத்து அவர்களுக்கும் திருமணம் நடத்தி எல்லா உறவுகளையும் என் அம்மா அரவணைத்துக் கொண்டாடினார். என் தந்தை வழி தாத்தா ரொம்ப சிம்பிள்டன். எளிமையானவர் ஆனால் சாமர்த்தியம் கிடையாது. என் பாட்டி முடிந்த வரை தன் சாமர்த்தியத்தில் குடும்பத்தை நடத்தினார். ஆனாலும் அவருக்கும் எல்லா சுமையையும் என் அப்பா மீது சுமத்தி விட்டது மனதுக்கு வேதனையை அளித்தது. என் பாட்டி கேன்சர் வந்து 63 வயதிலேயே இறந்து விட்டார். என் அப்பா அவருக்கு 13 வயதில் பிறந்தவர். தாயின் மேல் மிகுந்த பாசம் உண்டு. என் தாத்தா அதற்கு பின் பல வருடங்கள் நல்ல முறையில் வாழ்ந்து தனது 93வது வயதில் தான் இயற்கை எய்தினார்.

என் தந்தை முதலில் பெரிய நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர் நல்ல நிலைக்கு வர ரொம்பக் கஷ்டப்பட்டதால் பலருக்கும் வேலை வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இளம் வயது முதலே அவருக்கு இருந்தது. அதனால் அவர் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் செய்யும் சிறு தொழிற்சாலையை ஆரம்பித்தார். மிகவும் நல்ல முறையில் நடந்த அந்த தொழிற்சாலை, ஒரு பார்ட்னர் ஏமாற்றியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அவர் தனியாகவும் இன்னொரு நிறுவனத்தையும் ஆரம்பித்திருந்தார். அதில் பால் பேரிங்க்ஸ் செய்ய ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்டிற்கு நிறைய முதலீடு செய்ததால் அதிலும் பல பணப் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது.

என் அம்மா தான் ஆபிஸ் நிர்வாகத்தை முதலில் இருந்து கவனித்து வந்தார். அவர் திருமணத்திற்குப் பிறகு என் தந்தையின் உந்துதலின் பேரில் B.Ed படிப்பையும் முடித்திருந்தார். ஆனால் ஆசிரியர் வேலைக்குச் சென்றதில்லை. மிகச் சிறந்த நிர்வாகி. என் தந்தை மிகப் பெரிய  பொறியாளர் ஆயினும் அதிர்ஷ்டம் இல்லை. பால் பேரிங்க்ஸ் அது வரை ஜப்பானில் இருந்தும் ஜெர்மனியில் இருந்தும் தான் இம்போர்ட் செய்யப்பட்டது. முதன் முதலில் ஒரு ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரியில் இன்டிஜீனஸ் மெஷீன்களுடன் உள்நாட்டு டெக்னாலஜியுடன் பால் பேரிங்க்சை தயாரித்த முதல் இந்தியர் என் தந்தை. ஆனால் ப்ரொடக்ஷன் காஸ்ட் அதிகம். வெளிநாட்டுப் பொருளின் குறைந்த விலையோடு  போட்டிப் போட முடியவில்லை.

எத்தனையோ பணப் பிரச்சினைகளையும், வங்கிக் கடன், தனியார் கடன் இவற்றை சமாளித்து என்னையும் என் தம்பியையும் நல்ல முறையில் வளர்த்ததில் என் தாயின் பங்கு மிகப் பெரியது. அவர் தைரிய லட்சுமி. எதற்கும் கலங்காமல், அடுத்து என்ன செய்வது என்று யோசித்து செயல் புரிந்தார்.

இதன் பின் தான் உண்மையான சோதனைக் காலம் ஆரம்பித்தது. என் தந்தைக்கு பார்கின்சன்ஸ் டிசீஸ் வந்துள்ளது தெரிய வந்தது. முதலில் அவரது வலது கை ஒத்துழைக்காமல் இருந்தது. அந்த சமயம் நான் திருமணம் முடிந்து அமெரிக்கா சென்று விட்டேன். பார்கின்சன்ஸ் டிசீசுக்கு இன்று வரை நோய் தீர்க்கும் மருந்து கண்டுபிக்கப் படவில்லை. அது கொஞ்சம் கொஞ்சமாக ஒருவரின் அவயங்களை செயலிழக்கச் செய்யும். அந்த நோய் இந்தியாவில் பொதுவாக யாருக்கும் வருவதும் குறைவு. அதனால் நோய் பற்றிய ஞானமும் குறைவு. ஆனால் என் அப்பா மிக மிக பாசிடிவ் பெர்சன். எத்தனையோ கஷ்டங்களைப் பார்த்தவர், இதைக் கண்டும் அசரவில்லை.  பார்கின்சன்ஸ் நோயுடன் இருபது வருடம் போராட்ட வாழ்வு வாழ்ந்தார். நான் அவரைப் பற்றி தனியாக ஒரு புத்தகம் எழுதியுள்ளேன். படிப்படியாக அவர் தன் நிலையை உயர்த்திக் கொண்டு மனிதன் தெய்வ நிலையை, வாழும் போதே அடைய முடியும் என்னும் பாடத்தை எங்களுக்கு உணர்த்திச் சென்றார்.

இத்தனை நாள் வியாபாரத்தில் என் அப்பாவிற்கு வலது கையாக இருந்த என் அம்மா உண்மையில் உமையொரு பாகனாக மாறினாள். எத்தனையோ வருடங்கள் அம்மா தான் முழுக்க முழுக்கப் பார்த்துக் கொள்ளும் நிலையில் என் தந்தை இருந்தார். உணவு ஊட்டுவதில் இருந்து குளிப்பாட்டி விடுவது வரை எல்லாமே என் தாய் தான். உதவிக்கு ஆள் இருந்தும் பலப் பல விஷயங்கள் என் அம்மா ஒருவரால் தான் என் தந்தைக்கு சரியாகச் செய்ய முடியும். அதை இன்முகத்துடன் செய்தார் என் தாய். காந்தாரி திருதிராஷ்டிரனுக்குப் பார்வை இல்லை என்று தானும் தன கண்ணைக் கட்டிக் கொண்டாள், ஆனால் என் தாய் ஒரு படி மேல். என் தந்தைக்குக் கண்ணாகவே இருந்தாள்.

என் தந்தைக்கு என் தாய் மேல் மிகுந்த காதல், அன்பு, பாசம். பெரிய இடத்துப் பெண் தன்னை விருப்பத்துடன் திருமணம் செய்து கொண்டது அவருக்கு மிகப் பெரிய பெருமை. அவர்களின் திருமணத்தில் K.B.சுந்தராம்பாள் கச்சேரியும், கொத்தமங்கலம் சுப்புவின் கச்சேரியும் நடைபெற்றது. தெரு அடைத்துப் பந்தல் போட்டு பாண்டிச்சேரியில் என் பெற்றோர் திருமணம் கோலாகலமாக நடந்தது. அதனால் என் தந்தை என் அம்மாவை மனத்தில் ராணியைப் போல தான் வைத்திருந்தார். மரகதம் என்ற என் அம்மாவின் பெயரை திருமணத்திற்குப் பின் அவர் மேகி என்று தான் சுருக்கி ஸ்டைலிஷ் ஆக அழைப்பார். அதனால் இன்றும் எங்கள் வீட்டுக் குழந்தைகள் என் அம்மாவை மேகி பாட்டி என்று தான் அழைக்கின்றனர் 🙂

என் அம்மாவிற்கு நிறைய படிக்கப் பிடிக்கும், உலக விஷயங்கள் அனைத்திலும் ரொம்ப ஈடுபாடு, எந்த டாபிக் பற்றியும் அறிவுசார்ந்து பேச முடியும். அன்பே நிறைந்த என் அம்மாவிற்கு உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட மகிழ்ச்சியான வாழ்க்கையையும் தர எல்லாம் வல்ல இறைவனையும் என் தந்தையையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

அமெரிக்காவில்

அமெரிக்காவில்

சிங்கப்பூரில்

சிங்கப்பூரில்

 

 

 

என் தந்தையின் 80வது பிறந்த நாளின் போது.

என் தந்தையின் 80வது பிறந்த நாளின் போது.

 

என் வலைதளத்தில் இது என் நூறாவது இடுகை. இதை என் அம்மாவிற்கு சமர்ப்பிக்கிறேன் 🙂

 

நம்மாழ்வார்

ஆராவமுதன்- நம்மாழ்வார் திருவடித்தொழல்

ஆராவமுதன்- நம்மாழ்வார் திருவடித்தொழல்

“அவரவர் தமதமதறி வறிவகை வகை

அவரவ ரிறையவ ரெனவடி அடைவார்கள்

அவரவர் ரிறையவர் குறைவில் ரிறையவர்

அவரவர் விதிவழி யடைய நின்றனரே”

அவரவர் விருப்பபடி இருப்பதே இன்பம். மேலும் அவரவர் இஷ்ட தெய்வத்தை அவரவர் விருப்பபடி வணங்குவதுமே தான் இயல்பு நிலை. ஒவ்வொருவரின் அறிவும் புரிந்து கொள்ளும் திறனும் மாறுபடுகிறது. என் தன்மைக்கு ஏற்ப நான் புரிந்து கொள்கிறேன். என்னால் முடியும் முயற்சியில் இறங்கி என் சக்திக்கேற்ப நான் இறைவனை முயன்று அடைகிறேன். குறையொன்றும் இதிலில்லை! எம்முறைப்படியும் இறைவன் திருப்பாதங்களை அடையமுடியும். இதனை ஆணித்தரமாகச் சொன்னவர் நம்மாழ்வார்.

ஒரு சிறந்த ஆசிரியர் எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரி சொல்லிக் கொடுப்பதில்லை. ஒவ்வொரு மாணவனின் கிரகிக்கும் தன்மை வேறு வேறு. திறமைக்கு ஏற்பப் பாடத்தை நடத்தி, சொல்ல வந்த விஷயத்தை அனைவரும் அறிந்து கொள்ள வைப்பதில் இருக்கிறது அவர் சாமர்த்தியம். இறைவனும் அதையே செய்கிறார். தேவைக்கேற்ப முறையும் மாறுபடுகிறது. சூரியனை வழிபடுபவர்களும் மாடசாமியை வழிபடுபவர்களும் ரங்கனாதரை வழிபடுபவரும் யாவரும் வணங்குவது ஒரே இறைத்தன்மையைத் தான். இதனால் வணங்குபவர்கள் இடையே எந்த ஏற்றத் தாழ்வும் இல்லை. இதனை அழகுத் தமிழ் பாசுரங்கள் வாயிலாகச் சொல்கிறார் நம்மாழ்வார். ஒரு இறைவனை வணங்குபவர் வேறு இறைவனை வணங்குபவரை விட உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ கிடையாது.

வேளாண் குடியில் பிறந்த காரியார் அவரின் மனைவி உடைய நங்கையார் என்ற உயர்ந்த பக்தர்களுக்கு வைகாசி விசாகத்தன்று திருக்கருகூரில் நம்மாழ்வார் பிறந்தார் (தற்போது ஆழ்வார் திருநகரி என்று பெயர்). பிறந்தது முதல் உண்ணாமல் அழாமல் இருப்பதைக் கண்டு மனம் வருந்தியப் பெற்றோர்கள் திருநகரியில் உள்ள ஆதி பிரான் கோவிலில் வந்து குழந்தையைக் கிடத்தி இறைவனிடம் பிரார்த்தித்தனர். அப்பொழுது அது வரை அசையாது இருந்த குழந்தை அங்கே இருந்த ஒரு புளிய மரத்தடிக்குத் தவழ்ந்து சென்று அந்த மரத்தில் உள்ள பொந்தில் உட்கார்ந்து கொண்டது. மற்ற குழந்தைகளை விட மாறுபட்டு இருந்தக் காரணத்தினால் மாறன் என்று பெயரிட்டனர். அக்குழந்தை பதினாறு வருடங்கள் அந்த பொந்திலேயே அமர்ந்திருந்தது.

நம்மாழ்வார் அவதரித்த இடம். நன்றி KRS

நம்மாழ்வார் அவதரித்த இடம். நன்றி KRS

இராமாவதாரம் முடிவுக்கு வரும் தருவாயில் யமதர்மன் இராமனுடன் பேச வந்தார். அப்பொழுது இராமன் இலக்குவனிடம் யார் வந்தாலும் உள்ளே விடக் கூடாது என்ற கட்டளை இட்டுச் சென்றார். அப்பொழுது மகா கோபியான துர்வாசர் வந்து இராமனைப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். தடுத்தும் கேட்கவில்லை. நாட்டு மக்களை சபித்து விடுவேன் என்று கூறியதால், தனக்கு இதனால் எத்துன்பம் வரினும் பரவாயில்லை என்று இலக்குவன் உள்ளே சென்று துர்வாசர் வந்த செய்தியைச் சொல்கிறார். அதனால் இலக்குவன் மரமாக வேண்டிய சாபம் ஏற்படுகிறது. ஆனால், இராமன் இலக்குவன் ஒரு இக்கட்டான சூழ்நிலையில்  செய்த அந்த செயலைப் புரிந்து கொண்டு, நான் கலியுகத்தில் ஆழ்வாராக அவதரிக்க உள்ளேன்,  நீ இந்தக் கணையாழியோடு தென் திசை செல், எங்கு இந்தக் கணையாழி கீழே விழுகிறதோ அங்கு புளியமரமாய் நில் என்று கூறுகிறார்.

உறங்காப் புளி - ஆழ்வார்திருநகரி  நன்றி KRS

உறங்காப் புளி – ஆழ்வார்திருநகரி
நன்றி KRS

அந்த இலக்குவன் புளிய மரமாய் நின்ற இடத்தில் தான் மாறன் தான் இருப்பிடமாக்கிக் கொண்டார். பெருமாள் எங்கு சென்றாலும் இணை பிரியாது தொடர்ந்து வரும் ஆதிசேடனே மரமாகி அதில் பதினாறு வருடங்கள் பெருமாள் மௌனியாக சின் முத்திரையோடு அமர்ந்திருந்தார். அந்தப் புளியமரம் இன்றும் உள்ளது.

நம்மாழ்வார் சின் முத்திரையுடன்

நம்மாழ்வார் சின் முத்திரையுடன்

ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும் வரை அதற்கு முற்பிறவி நினைவு இருக்குமாம். பூமியில் பிறந்தவுடன் சடம் என்னும் வாயு குழந்தையை சூழ்ந்து கொள்வதால் பூர்வ பிறவியின் வாசனை அற்றுப் போய் மாயையினால் கவரப்பட்டோமே என்று அழுமாம். ஆனால் நமாழ்வார் பிறந்தவுடன் அவரை சடம் என்னும் வாயுவால் நெருங்க முடியவில்லை. அதனால் தான் அவர் பிறந்தவுடன் அழவில்லை. சடம் என்னும் வாயுவை முறித்ததினால் அவருக்கு சடகோபன் என்னும் பெயரும் உண்டாயிற்று.

திருமாலின் திருப்பாதங்களாகவே நம்மாழ்வார் கருதப்பட்டார். நம்மாழ்வார் சடாரி! நம்மாழ்வாரின் உருவம் பதித்த சடாரி இங்கே.

நன்றி KRS

நன்றி KRS

வைணவ மரபுப்படி குருவிற்கே ஏற்றம் அதிகம். இறைவனை விட ஆச்சர்யார்களே முதன்மையும் மேன்மையும் உடையவர்கள். இந்த மரபுப் படி திருமாலே முதல் ஆச்சார்யர், திருமகள் இரண்டாம் ஆச்சார்யர், பரமபதத்தில் இருக்கக் கூடிய சேனை முதலியார் மூன்றாம் ஆச்சார்யர். சேனை முதலியாரின் அம்சமாகப் பிறந்த நம்மாழ்வாரை மதுரகவியாழ்வார் தன் குருவாக ஏற்றுக் கொண்டு அவருக்குத் தொண்டு புரிவதிலேயே தான் வாழ்நாளைக் கழித்தார். மதுரகவிஆழ்வார் இறைவன் மேல் ஒரு பாசுரம் கூட இயற்றவில்லை. அவர் இயற்றியப் பாசுரங்கள் அனைத்தும் நம்மாழ்வார் மேல் மட்டுமே. இவரன்றி வேறு தெய்வம் இல்லை என்று இவர் மேல் பதினோரு பாக்கள் இயற்றி அதனாலேயே ஆழ்வாரானார். நம்மாழ்வாரின் பாக்களை உலகறியச் செய்தார் மதுரகவியாழ்வார். இதில் முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டியது மதுரகவியாழ்வார் அந்தணக் குலத்தைச் சேர்ந்தவர். அவர் தன் குருவாக ஏற்றுக் கொண்டு இறைவன் மேல் கூடப் பாடாமல் தான் ஆச்சார்யனே இறைவன் என்று அவர் மேல் மட்டும் பாடியது விவசாயக் குலத்தைச் சேர்ந்த நம்மாழ்வாரை.

நம்மாழ்வாரும் மதுரகவியாழ்வாரும்

நம்மாழ்வாரும் மதுரகவியாழ்வாரும்

இவை யாருடைய பாக்கள என்று எல்லோரும் கேட்க, இவை நம் ஆழ்வாரின் பாக்கள் நம் ஆழ்வாரின் பாக்கள் என்று மதுரகவியார் சொல்லிச் சொல்லி  ஆழ்வாரின் திரு நாமமும் நம்மாழ்வார் என்றாயிற்று. நம்மாழ்வாருக்கு மாறன், சடகோபன், பராங்குசன், வகுளாபரணன், குருகூர் நம்பி, குருகைப் பிரான், திருநாவீறுடைய பிரான், தென்னரங்கன் பொன்னடி என்று பல பேர்கள் உண்டு. காரி மாறன் என்று தந்தை பெயருடன் கூடிய பெயரும் உண்டு.

நம்மாழ்வர்களின் பெயர்கள் - நன்றி KRS

நம்மாழ்வர்களின் பெயர்கள் – நன்றி KRS

பக்தி என்னும் அங்குசத்தால் பரமன் என்னும் களிற்றை வசப்படுத்தியதால் பராங்குசம் என்றும், மகிழம்பூக்களால் ஆன மாலையணிந்து அழகுற இருந்ததால் வகுளாபரணன் என்றும், ஊர் பேரைச் சேர்த்து குருகூர் நம்பி, குருகைப்  பிரான் என்றும், ‘பர’ தத்துவத்தை விளக்கியதாலும் திருமாலுக்குள்ளே அனைத்துத் தெய்வங்களும் அடக்கம்  என்னும் கருத்தை வீறு கொண்டு விளக்கியதால் நாவீறுடையான் எனவும் வழங்கப்பட்டார்.

நம்மாழ்வார் திருவிருத்தம் திருவாசிரியம் பெரிய திருவந்தாதி திருவாய் மொழி என்னும் நான்கு திருமறைகளை அருளினார். இதனை மதுரகவியாழ்வார் ஓலையில் எழுதினர். இந்த நான்கும் வேதத்தின் சாரமாகும். அதாவது வடமொழியில் உள்ள ரிக், யஜூர், சாம அதர்வண வேதத்தின் கருத்துக்களை ஆழ்வார் தமிழில் விளக்கினார். எனவே தான் ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்னும் பெயரும் இவருக்கு உண்டாயிற்று. நம்மாழ்வாரின் பாடல்கள் திராவிட வேதம் என்றழைக்கப்பட்டன.

எல்லாவற்றிற்கும் வித்தாக இருப்பவன் இறைவன். அவனே எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்துள்ளான். இது தான் இறைவனைப் பற்றி கீதை உபதேசிக்கும் தத்துவமாகும். இதனை ஆழ்வார்,

“யாவரும் யாவையும் எல்லாப் பொருளும்

கவர்வின்றி தன்னுள் ஒடுங்க நின்று

பவர் கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி”

என்றும்,

“அமைவுடை அமரரும் யாவையும் யாவரும் தானே

அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரோ”

என்று அந்த இறைவன் திருநாமம் நாராயணன் என்றும் அவன் பாற்கடலில் பள்ளிக் கொண்டவன் என்றும் இவனுக்குள் சகலமும் அடக்கம் என்றும், இதை அறிந்து கொள்வதே இறைவனை உணர்ந்து கொண்டதற்கு அடையாளமாகும் என்று கூறுகிறார். எல்லாருக்கும் இந்த ஞானம் வருவது எளிது கிடையாது. எனவே தான் ஆத்மாக்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றவாறு பற்பல தெய்வங்களை வணங்குகின்றோம்.

உயிரினங்கள் துயரமின்றி வாழ ஒரே வழி இறைவனைத் தொழுவதே யாகும் என்பது இவர் கொள்கை.

அற்றது பற்றெனில் உற்றது வீடு உயிர்
(திருவாய்மொழி, 1.2.5)

 பக்தியால் உலகில் எதனையும் பெறமுடியும் என்பது அவருடைய எண்ணம். நம்மாழ்வார்க்குக் காணுகின்ற பொருளனைத்தும் கண்ணன் வடிவாகவே காட்சியளிக்கும். அசையும் பொருள், அசையாப் பொருள் அனைத்திலும் அவன் உள்ளான் என்ற நம்பிக்கையை அனைவருக்கும் அவர் ஏற்படுத்தினார். வானில் திரியும் மேகங்களைப் பார்த்து, “மேகங்களே நீங்கள் திருமாலின் திருமேனியழகை எப்படிப் பெற்றீர்” என்று கேட்பார்!

இவரது பாடல்களைத் தமிழ் சங்கத்தார் சங்கப் பலகை ஏற்றுக் கொண்டதோ என்று கேட்க, கண்ணன் கழலிணை என்னும் பாசுரத்தின் முதல் அடியை மட்டும் பலகையில் வைக்க உடன் வைக்கப்பட்ட இதர நூல்களையெல்லாம் தள்ளி திருவாய் மொழியினைச் சங்கப் பலகை பெருமையுடன் தாங்கி நின்றது.

நம்மாழ்வாரின் திருவாய் மொழியின் தாக்கம் கம்பராமாயணத்தில் நன்கு வெளிப்படுகிறது. கம்பர் ஆழ்வாரின் பாசுரங்களை நன்குக் கற்று  நம்மாழ்வாரைப் போற்றி அவரது பெயரிலேயே சடகோபரந்தாதி என்ற நூலை இயற்றினார்.

“வேதத்தின் முன் செல்க, மெய்யுணர்ந்

தோர் விரிஞ்சன் முதலோர்

கோதற்ற ஞானக் கொழுந்தின்

முன் செல்க குணங் கடந்த

போதக் கடலெங் குருகூர்ப்

புனிதன் கவியின் னொரு

பாதத்தின் முன் செல்லுமோ

தொல்லை மூலப் பரஞ்சுடரே”

என்றார் கம்பர்.

மேலும் இவர் நாயகி பாவத்தில் பராங்குச நாயகியாக இறைவனை மிகவும் இறைஞ்சி பலப் பாடல்களைப் பாடியுள்ளார். இது இவரின் தனி சிறப்பு. மடலூர்தல் என்பது சங்கக் கால மரபு. தான் விரும்பியப் பெண்ணை அடைய முடியாதத் தலைவன் அவளின்றி தான் வாழ முடியாத நிலையைக் காட்ட குதிரையிலேறி எருக்கம் பூ மாலை அணிந்து அப்பெண்ணின் படம் எழுதப்பட்டக் கொடியை கையில் வைத்துக் கொண்டு உடம்பெல்லாம் புழுதிப் பூசிக்கொண்டு வெட்கத்தை விட்டு நடுத்தெருவில் நின்று என்னைக் கைவிட்ட இரக்கமில்லாத பெண் இவள் தான் என்று கூவுவானாம். இதைக் கண்ட அவ்வூர் பெரியவர்கள் மனமிரங்கி அந்தப் பெண்ணை இவனுக்கு மணமுடித்து வைப்பார்களாம்.

பராங்குச நாயகி

நம்பெருமாள்

தன்னை நாயகியாய் பாவித்துக் கொண்ட நம்மாழ்வார் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி பகவானிடம் மன்றாடிப் பலப் பாடல்கள் பாடுகிறார். கண்ணபிரான் பராமுகமாக இருக்கிறான், என்னைக் கைவிட்டு விட்டான் என்று அலர் தூற்றியவாறே மடலூர்வேன் என்கிறார்.

நாணும் நிறையக் கவர்ந்தென்னை

நன்னெஞ்சம் கூவிக் கொண்டு

சேணுயர் வானத்திற்கும்

தேவ பிரான் றன்னை

ஆணையென் தோழீ உலகு

தொறலர் தூற்றி ஆம்

கொணைகள் செய்து குதிரி

யாம் மட லூர்துமே

என்று பக்தி இலக்கியத்தில் முதல் முறை மடலேறுதலைப் புகுத்தியது நம்மாழ்வார் தான்.

நம்மாழார் பள்ளிக்கொண்டிருக்க பெருமாள் காதலனாய்! நன்றி KRS

நம்மாழார் பள்ளிக்கொண்டிருக்க பெருமாள் காதலனாய்! நன்றி KRS

பெண்ணாக இருந்து அன்பு செலுத்தி இறைவனை அடைவது எளிது. அதைத் தான் ஆண்டாள் செய்தாள். அவள் காட்டுக்குச் செல்லவில்லை, தனிமைப் படுத்திக் கொள்ளவில்லை, மந்திரங்கள் பயிலவில்லை. பூமாலையை தினம் இறைவனுக்குச் சூடிக் கொடுத்தாள். இந்த அண்டத்தில் பரமாத்மா மட்டுமே ஆண் மற்ற ஜீவராசிகள் அனைத்தும் பெண் இனம். அதனால் பெண்ணான மீராவைப் போல ஆண்டாளைப் போல அன்பு செலுத்தினால் அவன் திருவடிகளை அடைவது எளிது.

சூடிக் கொடுத்தச் சுடர்கொடி

சூடிக் கொடுத்தச் சுடர்கொடி

நாயகி பாவத்தின் வேறு ஒரு பரிணாமமாக தன்னை மறந்த நிலையில் தலைவி செய்யும் செயல்களைக் கண்டு ஒரு தாய் புலம்புவதாக இந்தப் பாடல் வருகிறது,

மண்ணையிருந்து துழாவி வாமனன் மண்இது என்னும்
விண்ணைத் தொழுது அவன்மேவு வைகுந்தம் என்று
கைகாட்டும்
கண்ணையுள் நீர்மல்க நின்று கடல் வண்ணன் என்னும்
அன்னே என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என்செய்கேன்
பெய்வளையீரே

             (திருவாய்மொழி, 4.4.1)

 நாரை, பூவை முதலிய பறவைகளை இறைவனிடம் தூதாக அனுப்பிய பாடல்கள் நெஞ்சை உருக்குபவை. பழங்காலத் துறைகள் மட்டுமல்லாமல், பழங்கால இலக்கியத் தொடர்களும் திருவாய்மொழியில் சில இடங்களில் அப்படியே உள்ளன.

நம்மாழ்வார் வேதத்தின் கருத்துக்களைத் தமிழ் படுத்தி இறை நிலையை உலகுக்கு உணரச் செய்தார். அதனை இராமனுசர் பேணிக் காத்து வளர்த்துப் பெரிது படுத்தினார். நம்மாழ்வாரின் பாசுரங்கள் இறைவனது பண்புகளையும், அவனை அடைய நாம் மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகளையும், ஊழ்வினை அடிப்படையில் அதற்கேற்படும் இடையுறுகளையும், அதை வெல்ல நாம் மேற்கொள்ள வேண்டிய முறைகளையும் விளக்குகின்றன.

பூரண அன்பு நம்மை இறைவனிடம் அழைத்துச் செல்லும். அந்த அன்பு தியாகத்தில் இருந்து தான் பிறக்கும். இறைவனிடம் அன்பு வைத்து, தொண்டில் நம்மை முழுக்க ஐக்கியப் படுத்திக் கொண்டால் அந்த இறைவனே நம்மை ஆட்கொள்வான் என்னும் உயர்ந்த தத்துவத்தை அளித்துள்ளார் நம்மாழ்வார். அவரின் மலரடிகளை இவ்வாறு புகழ்ந்து பாடுகிறார் மணவாள மாமுனி

“பாடுவதெல்லாம் பராங்குசனை, நெஞ்சத்தால்

தேடுவதெல்லாம் புளிக்கீழ் தேசிகனை – ஓடிப்போய்

காண்பதெல்லாம் நங்கையிறு கண்மணியை – யான் விரும்பிப்

பூண்பதேல்லாம் மாறனடிப் போது.”

azhwar thalam - tamizh isai (thiruvaai mozhi paNN) நன்றி KRS

azhwar thalam – tamizh isai (thiruvaai mozhi paNN) நன்றி KRS

“நம்மாழ்வார் ஒரு நாட்டார்க்கோ ஒரு சமயத்தார்க்கோ, ஓரினத்தாற்கு மட்டும் உரியவரல்லர். அவர் எல்லா நாட்டவர்க்கும், எல்லா சமயத்தவர்க்கும் எல்லா இனத்தவர்க்கும் உரியவர்.” – திருவிக (தமிழ் நாடும் நம்மாழ்வாரும் என்ற நூலில் எட்டாம் பக்கத்தில் எழுதியது)

மகாபாரதத்துக்கு நடுவே பகவத் கீதை என்னும் முத்துக் கிடைத்ததுப் போலே பன்னிரெண்டு ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு  இடையே நம்மாழ்வாரின் பாசுரங்கள் இரத்தினமாக மிளிர்கின்றன.

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!

ஆழ்வார் திருநகரி கோவில் (திருக்குருகூர்) நன்றி KRS

ஆழ்வார் திருநகரி கோவில் (திருக்குருகூர்) நன்றி KRS

ஆழ்வார் திருநகரியில் உள்ள நம்மாழ்வார். நன்றி KRS

ஆழ்வார் திருநகரியில் உள்ள நம்மாழ்வார். நன்றி KRS

Reference: http://www.tamilvu.org/

ஆழ்வார்கள் வரலாறு- அ. எதிராஜன்

நாலாயிர திவ்யபிரபந்தம் – இரா.வ.கமலக்கண்ணன்

சில அரியப் புகைப்படங்கள் கொடுத்து உதவிய @kryes க்கு நன்றி.

வாழ்க்கையே ஒரு நாடகம் தானே!

Translation of Life’s All About Drama, an interview of Madhuri Shekar by Anusha Parthasarathy in The Hindu MetroPlus Jan 2 2014 edition!

madhurimetro

Following her heart. (Photo: S.S. Kumar)

இந்த வருடம் மாதுரி சேகரின் இரண்டு நாடகங்கள் அமெரிக்காவில் அரங்கேறுகின்றன.  ஒரு பெரிய நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் வேலையை விட்டுவிட்டு எப்படி ஒரு நாடக ஆசிரியராக மாறினார் என்பதை இந்த சென்னைப் பெண் அனுஷா பார்த்தசாரதியிடம் பகிர்கிறார்!

முதலில் நாடக மேடையின் மேல் இருந்த ஈடுபாட்டை ஒரு பொழுதுபோக்காக எண்ணியதால் அமெரிக்காவில் தகவல் தொடர்புத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவுடன் நல்ல ஒரு மார்கெடிங்க் வேலையில் அமர்ந்தார். ஆனால் அவருள் இருந்த கதாசரியை அவரை நிம்மதியாக அந்த வேலையில் இருக்க விடவில்லை. நல்ல ஊதியம் தரும் வேலையை விட்டுவிட்டு MFA (Masters in Fine Arts, The University of Southern California, Los Angeles, California) முதுகலைப் பட்டப் படிப்பில் சேர்ந்தார். மூன்றாண்டுகள் பயிற்சி! ஜூன் 2013ல் பட்டம் பெற்றார். தற்போது அவரின் இரண்டு நாடகங்கள் “In Love And Warcraft” ம் “A Nice Indian Boy” பெரிய நாடகக் கம்பெனிகளால் தயாரிக்கப்பட்டு பிப்ரவரி மாதம் அரங்கேற உள்ளன.

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் சரித்திர பாடத்தில் இளங்கலை பட்டப் படிப்புப் பெற்றார். சிறு வயது முதலே கதை சொல்வதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. கல்லூரி நாடகங்கள் பலவற்றில் பங்கேற்றாலும் நாடகத் துறையை தன் தொழிலாகக் கொள்ள அப்பொழுது அவர் நினைக்கவில்லை. ஆனால் அவர் தன் முதல் முதுகலைப் பட்டம் பெற்ற கல்லூரியில் நாடகத் துறை இருந்ததால் தன்னுள்ளிருந்த ஆர்வம் வெளிப்பட அது ஒரு வாய்ப்பாக அமைந்தது.

“எப்பொழுதுமே என் ஆழ்மனத்தில் அந்த எண்ணம் இருந்ததால் ஒரு வாய்ப்புக் கிடைத்தவுடன் வெளி வந்துவிட்டது.” என்கிறார். நாடகத்துடனான அவர் காதல்அவர் தந்தை Bay Area (USA)வில்  கிரேசி மோகனின் நாடகங்களை அரங்கேற்றும் சமயத்திற்கு, பல வருடங்கள் பின்னோக்கிப் போகிறது! “நான் அவர் ஒத்திகை செய்து நடிப்பதைப் பார்த்து வளர்ந்தேன், என் ஆர்வம் அங்கு ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கிறேன்” என்கிறார்.

கண்மூடிக் குதித்தல்!

2010ல் MFA பட்டப்படிப்பில் சேர்ந்தார். மூன்று வருட படிப்பில் நாடகத் திரைக்கதை -வசனம், தொலைக்காட்சித் திரைக்கதை- வசனம், சினிமா திரைக்கதை -வசனம், ஆகியவற்றில் தேர்ந்து 6 நாடகங்களும், 2 சினிமாக் கதைகளும் எழுதி முடித்திருக்கிறார். “இந்தப் படிப்பின் பயிற்சி ஒருவரை பன்முக எழுத்தாளராக மாற்றுகிறது. என் நல்ல வேலையை விட்டுவிட்டு இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்த என் முடிவில் நிறைய அபாயம் இருந்தும் நான் இந்த முடிவில் தீர்மானமாக இருந்து செயல்பட்டேன். இதை நான் செய்யாவிட்டால் பின்னாளில் வருந்துவேன் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்.” மேலும் சொல்கிறார், “என்னை எது மகிழ்விக்கிறதோ அந்தத் துறையில் முழுமையான ஈடுபாட்டோடு அந்த 3 வருடங்கள்  பயிற்சிப் பெற்றது எனக்கு ஒரு மிக அற்புதமான அனுபவம். இதை நான் பகுதி நேர பயிற்சியாகவோ அல்லது பயிற்சியே இல்லாமல் இந்தத் துறைக்கு வந்திருந்தாலோ இந்த அளவு தேர்ச்சி எனக்கு வந்திருக்காது”.

தயாரிப்பில் இருக்கும் இரண்டு நாடகங்களுமே அவர் படிக்கும் பொழுது எழுதியவை. “மூன்றாம் வருடப் படிப்பில் இருக்கும்போது அந்த வருடம் பட்டம் பெறுபவர்களும் கலந்து கொள்ளக் கூடிய ஒரு நாடகப் போட்டியில் நான் கலந்து கொண்டேன். அதில் வெற்றிப் பெறுபவரின் படைப்பை The Alliance Group in Atlanta தயாரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளும்” என்கிறார் மாதுரி. இவருடைய நாடகம், “In Love And Warcraft”மற்ற மிகப் பெரிய கல்லூரிகளான Colombia University, NYU, Julliard School, ஆகியக் கல்லூரிகளில் படித்தவர்கள் சமர்ப்பித்த நாடகங்களுள் மிகச் சிறந்ததாகத் தேர்வாகி “Kendeda Play Writing Contest” ல் முதல் பரிசை வென்றது. இந்த நாடகம் இந்த வருடம் ஜனவரி பிப்ரவரி மாதத்தில் தயாராகி மேடை ஏறும். “2013 ஆம் வருடம் மிக அற்புதமான வருடமாக எனக்கு இருந்தது. இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்ற சூட்டோடு என்னுடைய thesis நாடகமான A Nice Indian Boyஐ  East West Players என்கிற மிகப் பழமையும் பாரம்பரியமும் மிக்க ஆசிய அமெரிக்க நாடகக் கம்பெனியினால் தயாரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது” என்கிறார். இந்த நாடகம் பிப்ரவரி மார்ச் மாதங்களில் தயாராகி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அரங்கேறும். மேலும் இந்த நாடகம் சான் டியாகோ என்னும் ஊரில் உள்ள  The Old Globe Theater லும் படிக்கப்பட்டது.

“In Love And Warcraft” நாடகம் ஒரு ரோமான்டிக் காமெடி. இந்த நாடகத்தின் நாயகி வார்கிராப்ட் என்ற கணினி விளையாட்டின் தீவிர விசிறி/விளையாட்டு வெறியர். அவளை நிஜ வாழ்வில் ஒரு பையன் விரும்பும் போது என்னாகும் என்பதே கதை. “A Nice Indian Boy” வேறு மாதிரியானக் கதை. “அமெரிக்கா வாழ் ஓரினச் சேர்க்கையாள இந்தியப் பையன் ஒரு இந்துத் திருமண முறையில் தனக்குப் பிடித்தத் தன் காதலனை மணக்க விரும்புகிறான். அவன் விரும்புவதோ ஒரு அமெரிக்க ஆணை! பெற்றோர்களோ அப்பொழுது தான் தங்கள் மகன் இப்படிப்பட்டவன் என்கிற உண்மையை உணர்ந்து மனத்தைத் தேத்திக் கொண்டிருக்கும் தருவாய. அப்பொழுது  அவன் தன காதலனை வீட்டுக்கு அழைத்து வந்து அவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தன் கோரிக்கையை முன் வைக்கிறான். அதே சமயம் பெரியோர்களால் நிச்சயித்த அவர்கள் மகளின் திருமணம் ஆட்டம் கண்டு அவள் தன் கணவனை விவாகரத்துச் செய்ய வேண்டும் என்ற முடிவோடு தாய் வீடு திரும்புகிறாள். இந்த நாடகம் திருமண பந்தத்தை இந்தியர்களுடைய பார்வையில் அலசுகிறது” என்கிறார் மாதுரி.

சிகண்டி பற்றியும், அரவான் பற்றியும் இந்த நாடகத்தில் ஒரு சீனில் கதாநாயகன் மேற்கோள் காட்டுவதாக வருகிறது.” இந்த நாடகம் முழுக்க விநாயகர் பற்றிய குறியீடுகளும் வந்து கொண்டே இருக்கும். இந்து மதப்படி அவர் திருமணம் ஆகாதவர் ஆயினும் மற்றவர் திருமணங்களுக்கு உதவுபவர். இந்த விஷயங்களை எல்லாம் இந்திய அமெரிக்க வாழ்வியலோடுப் பின்னிப் பிணைக்க ஆசைப்பட்டேன். அமெரிக்காவில் வளர்க்கப்பட்டாலும் இந்து மதத்தோடு ஒரு தொடர்பை அழுத்தமாக ஏற்படுத்திக் கொள்ள நினைக்கும் ஒரு இந்திய வம்சாவளியின் கதை இது. மேலும் arranged  திருமணம் புரிந்த சகோதரி, தன பெற்றோருக்கு அது சரிப்பட்டாலும் அவளுக்கு அது சரியாக அமையாமல் இருப்பது பற்றியும் இதில் பேசுகிறேன்” என்கிறார் மாதுரி.

லாச் என்ஜலசில் நடக்கும் ஒரு நாடக ஆசிரியர்கள் பயிற்சி கூட்டத்திற்கும் மாதுரி அழைக்கப் பட்டுள்ளார். (L.A’s Center Theater Group) “ஒரு வருடத்திற்கு 7 கதாசிரியர்களுக்கு மட்டுமே அவர்கள் அழைப்பு விடுப்பார்கள். அவர்களுக்காக ஒரு நாடகம் எழுத நான் அழைக்கப் பட்டிருக்கிறேன். இந்த நாடகத்தின் கதைக் களம் ஒரு கெமிஸ்ட்ரி லேப். என் அறைத் தோழியின் முதுகலைப் படிப்பு வாழ்க்கையில் இருந்து வந்த ஒரு கதைக் கரு இது”.

University of Southern California வில் உதவி ஆசிரியராகத் தற்போது பணியாற்றி வருகிறார். ” என்னை அமெரிக்காவில் உள்ளோர்கள் ஒரு இந்திய எழுத்தாளராக பார்க்கக் கூடாது என்பதற்காக என் முதல் நாடகம் முழுக்க முழுக்க அமெரிக்காவைப் பற்றியதாக எழுதினேன். நடிப்பவர்களும் எல்லா தேசத்தவராகவும் இருக்கின்றனர். நான் பல்கலைக் கழகத்தில், என் உபரி வருமானத்திற்காக உலக நாடகத்தின் சரித்திரம் பற்றி பாடம் எடுக்கிறேன்”.

Tamil Tweeter of The Year – @kanapraba

kanapraba

2013 முடியும் தருவாயில் கடந்த இரண்டு நாட்களாக சந்து முழுவதும் ஒரே அவார்ட் மயம் 🙂  எனக்கும் ட்விட்டர் அவார்ட் கொடுக்கும் ஆசை தொற்றிக் கொண்டது. இந்த வருடத்து சிறந்த தமிழ் ட்வீட்டர் என்று ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாமே என்னும் எண்ணத்தில் யோசித்தேன். அவார்ட் என்று கொடுக்க முற்பட்டால் முதலில் தேர்வு செய்ய சில விதி முறைகளை வகுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது.

ட்விட்டர் என்பது ஒரு சமூக வலை தளம். இங்குக் கருத்துப் பரிமாற்றங்களும் நட்புடனானப் பேச்சுக்களும் தான் முதலிடம் வகிக்கின்றன. 140 எழுத்துக்களில் கருத்துப் பரிமாற்றம் என்பதால் ட்விட்டரில் இருப்பது மூளைக்கு நல்ல வேலையைத் தருகிறது. நாம் தொடர்வோரும் நம்மைத் தொடர்பவரையும் வைத்தே நம் ட்விட்டர் வாழ்க்கை அமைகிறது 🙂

ஒரு சிறந்த ட்வீட்டராக இருப்பதற்குச் சில முக்கியமானத் தகுதிகள் தேவை. அவை:

1. கேளிக்கை/பொழுதுபோக்குத் திறன். (entertaining)

2.விஷய ஞானம். (Insightful)

3.இனிமையானத் தன்மை. (pleasant personality)

4.தன் இருப்பை நிலை நாட்டிக் கொள்ளுதல். (presence)

இந்தத் தகுதிகளின்படி பார்த்தால் திரு @கானாபிரபா தான் என்னுடைய இந்த வருட “தமிழ் ட்வீட்டர் ஆப் தி இயர்”! அவரைத் தேர்வு செய்வதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன் 🙂

அவர் தன் தொழிலைத் (செய்யும் வேலை) தவிர வேறு பல விஷயங்களிலும் நல்ல ஈடுபாட்டோடு செறிந்த அறிவுடன் உள்ளார். அது அவர் ட்வீட்டுக்களில் எதிரொலிக்கிறன. அதனால் அவரை தொடர்பவர்களுக்குப் பலவித விஷயங்களும் தெரிய வருகின்றன.

சொல்வதை நகைச்சுவையுடன் சொல்வதில் அவர் வெகு சமர்த்தர். மேலும் இப்பொழுது புதிதாக அவர் சமய சந்தர்ப்பத்துக்கு ஏற்பப் படங்களுடன் உரையாடுவது எந்த உம்மணா மூஞ்சியையும் சிரிக்க வைத்துவிடும் 🙂

அனைவரையும் அவர் மரியாதையுடன் அணுகுகிறார். எள்ளலோ ஏளனமோ அவர் கீச்சுக்களில் கிடையாது. வலுச் சண்டைக்கும் போக மாட்டார், வந்த சண்டையில் இருந்தும் விலகி நிற்பார். இது ஒரு முதிர்ந்த ட்விட்டரிடம் மட்டுமே பார்க்கக் கூடிய ஒரு சிறந்த இயல்பு.

அவர் ட்விட்டருக்குள் வந்தாலே சந்து களைக் கட்டிவிடும். டைம்லைனில் உள்ளோர் அனைவரிடமும் பாரபட்சமின்றி உரையாடுவார். நமக்கும் அவரிடம் உரையாடவேண்டும் என்றுத் தோன்றும். அவர் எந்த ட்வீட்டரின் மென்ஷனுக்கும் பதில் அளிக்காமல் இருக்கிறார் என்று குற்றம் சாட்ட முடியாது என்றே நினைக்கிறேன்.

எழுத்துப் பிழைகள் இன்றி அழகிய தமிழில் அவருடைய கீச்சுக்கள் அனைத்தும் படிக்கவே ஒரு ஆனந்தத்தைத் தரும். சொல்ல வேண்டியக் கருத்துக்களைத் தன்மையுடன் எடுத்து முன் வைப்பார்.

அவர் ஒரு இசைப் பிரியர். அவருடைய பகுதி நேர வானொலி சேவையினால் அந்தத் திறன் இன்னும் மெருகேறி அவரை ஒரு இசைக் களஞ்சியமாக ஆக்கி உள்ளது.

அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். அவரின் பல வலை தளங்களுக்கானத் தொடர்புச் சுட்டி இங்கே: http://www.kanapraba.com/ இது ட்விட்டர் அவார்டுக்குத் தேவையான ஒரு தகுதி என்று எடுத்துக் கொள்ளாவிட்டாலும் அவரைத் தொடர்பவர் அவர் எழுத்துக்களை இந்த வலை தளங்களில் படித்துப் பயன் பெறுகின்றனர் என்பது தான் உண்மை!kanaprabaunni

மொத்தத்தில் அவருடையக் கீச்சுக்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன. அதனால் என் தேர்வை நீங்களும் வழி மொழிவீர்கள் என்று நம்புகிறேன் 🙂

2013 in review

The WordPress.com stats helper monkeys prepared a 2013 annual report for this blog.

Here’s an excerpt:

The concert hall at the Sydney Opera House holds 2,700 people. This blog was viewed about 27,000 times in 2013. If it were a concert at Sydney Opera House, it would take about 10 sold-out performances for that many people to see it.

Click here to see the complete report.

Previous Older Entries Next Newer Entries