#MeToo

பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டவர்கள் அந்தக் கொடுமையை உறவினர்களிடமோ நண்பர்களிடமோ சொல்லக் கூட கூச்சமும், பயமும், தயக்கமும் இருக்கும். இது தான் நிதர்சனம். இது ஏன் என்று உளவியல் மருத்துவர்கள் தான் விளக்க வேண்டும். ஏதோ சிலர் துணிந்து உறவினர்களிடம் சொல்லி சில சமயம் உதவி கிடைக்கும் பல சமயம் கிடைக்கா சூழ்நிலை தான் உலக நடைமுறை. அதனால் இந்த அவமானத்தை பல வருடங்கள் மனத்தில் பூட்டி பலர் அதை தங்களுடனே இருத்தி வைத்து மரணிக்கின்றனர். வெளியே வரும் உண்மைகள் வெகு வெகு குறைந்த சதவிகிதமே! இது ஜாதி, மதம், இனம், மொழி, நாடு கடந்து நிற்கும் ஒரு கேவலமான நியதி.

இப்போ அமெரிக்காவில் நடந்ததையே உதாரணமாக சொல்கிறேன். நீதிபது Bret Kavanaugh என்பவரை சுப்ரீம் கோர்டுக்கு நீதிபதியாக அமர்த்த அந்நாட்டுப் பாராளுமன்றம் முடிவெடுக்கும் தருவாயில் Dr. Christine Blasey Ford (உளவியல் துறை பேராசிரியர், பாலோ ஆல்டோ பலகலைக் கழகம், கேலிபோர்னியா) என்பவர் அவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை வைத்து சுப்ரீம் கோர்டுக்கு அவரை நீதிபதியாக நியமிக்கக் கூடாது என்று கூறினார். அவர் நீண்ட testimony அளித்தும் FBIஐ வெள்ளை மாளிகை சரியான புலன் விசாரணை மேற்கொள்ள விடாமல் முக்கியமான Ford, மற்றும் Kavanaugh இருவரையும் விசாரிக்க விடாமல் தடுத்தது. அந்நாட்டுப் பாராளுமன்றம் Kavanaughஐ சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக அவர் நியமனத்தை உறுதி செய்துள்ளது. போர்டை 15 வயதில் கற்பழிக்க Kavanaugh முயற்சி செய்தார். Ford வாயில் கையை வைத்து அவரை கத்தவிடாமல் வன்கொடுமை நடந்துள்ளது. அப்பொழுது கவானாகிற்கு 17 வயது. இது நடந்தது ஒரு மேல் நிலைப் பள்ளி விழாவில். போர்ட் senateல் testimony கொடுத்த போது அவரை குறுக்கு விசாரணை செய்தவர்கள் அவரிடம் நீ உன்னைக் கற்பழிக்க முயன்றது Kavanaugh என்று மறதியில் சொல்கிறாயா? எப்படி இவ்வளவு நாட்களுக்குப் பிறகு இந்தக் குற்றச்சாட்டை வைக்கிறாய்? வேறொருவரை இவர் என்று நினைத்துக் கொண்டு பேசுகிறாயா, எப்படி இவர் தான் என்பது உன் நினைவில் உள்ளது என்று தான் கேள்விகள் கேட்டுத் துளைத்தார்களே தவிர அவள் சொல்வதில் உண்மை இருக்கும் என்று நினைத்து விசாரணை நடத்தவில்லை. இறுதியில் Kavanaugh சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகிவிட்டார். அவர் வாழ்நாள் முழுவதற்குமான பதவி இது. இந்தக் குற்றச்சாட்டை போர்ட் பொது வெளியில் வைத்தபோது அமெரிக்க அதிபர் டிரம்ப் இவரை கேலியும் கிண்டலும் செய்து அவமானப் படுத்தினார். இது தான் வாழ்க்கையின் நிதர்சனம். இத்தனைக்கும் குற்றம் சாட்டுபவர் ஒரு முனைவர், ஒரு பெரிய பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்! இதை வெளியில் சொன்னதால் அவருக்கு கொலை மிரட்டல்கள் பல வந்து குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக வாழவேண்டிய சூழ்நிலையில் தற்போது உள்ளார்.

இவ்வாறு பொது வெளியில் வந்து இப்படி தனக்கு நேர்ந்தது என்று பல வருடங்கள் கழித்து ஒருவர் சொல்லக் காரணம் என்னவாக இருக்கும் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இதனால் என்ன தனிப்பட்ட பயன் அவர்களுக்கு? இப்படி தான் அவர்கள் பிரபலம் ஆகவேண்டுமா? இல்லை இதற்குப் பெயர் பிரபலம் ஆகுதல் என்பதா? இல்லை ஒருவர் மேல் தனிப்பட்ட காழ்ப்பு உணர்ச்சியினால் அபாண்டமாகப் பழிப் போட்டு தன் நிம்மதியான் வாழ்க்கை/எதிர்காலத்தை இழக்க ஒருவர் துணிவாரா?

பாலியல் வன்முறைக்குப் பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்கள்/இளைஞர்களாக இருப்பினும் இதில் மட்டும் ஆண் பெண் இருவருமே சமம். இருவரையும் சரிசமமாகவே கேவலமாக சமுதாயம் பார்க்கும், உதவி செய்யாது. இந்த #MeToo இயக்கம் அமெரிக்காவில் தான் தொடங்கியது. அதன் பின் பாலிவுட்டில் நானா படேகர் மேல் பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு நம் நாட்டிலும் இது வலுப் பெற ஆரம்பித்தது.

இங்கே குற்றம் சாற்றப்பட்டவர்களை விட குற்றம் சாட்டுபவர்களை தான் சமுதாயம் தண்டிக்கிறது. அவரின் நிலை என்ன, ஓ சினிமாவில் இருக்கிறாரா அப்போ வேசி தான் (ஸ்ரீ ரெட்டி இதைத் தான் எதிர்கொண்டார்) இவள் என்ன இயக்குநரை, நடிகரைப் பற்றி குற்றம் சொல்வது? நடிக்க வாய்ய்புத் தருவார் என்று தானே படுக்கப் போனாள் இப்போ என்ன திடீர் ஞானோதயம்? இதே தான் கேரளா கன்னியாஸ்திரீக்கும் நடந்தது. ஏன் இத்தனை முறை பாலியல் தொடர்பு நடந்த பிறகு வெளியே வந்து சொல்கிறார்? அப்போ அது வரை அந்த ருசி தேவையாக இருந்ததோ போன்ற கேள்விகள் உண்மையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தான். இந்தக் கேள்விகளால் தப்பிப்பது யார் என்று யோசித்தீர்களா?

எப்பொழுதும் harass செய்கிறவர்கள் பவரில் இருப்பவர்கள். அதாவது மேலதிகாரியாகவோ, சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களாகவோ, அவரை பகைத்துக் கொண்டால் வேலை வாய்ப்பில் முன்னேற்றத்துக்குத் தடை விதிக்க சக்தியுள்ளவராகவோ, நம்முடைய உறவினர்கள் எனில் தந்தை ஸ்தானத்தில் அல்லது தந்தையேவோ, மாமா, அக்கா புருஷன், கணவனின் சகோதரன், மாமனார் என்கிற நெருங்கிய உறவினர்களாகவோ தான் இருப்பார்கள். அவர்களை எதிர்க்க துணிச்சல் தேவை, குடும்ப ஆதரவு தேவை. குடும்ப உறுப்பினர்கள் செய்யும் பாலியல் வன்முறைகள் மற்ற உறவினர்களுக்குத் தெரியாமல் நடக்காது. ஆனாலும் உதவிக்கு வரவேண்டியவர்களே குடும்பம் உடைந்து விடும் என்று உதவ வரமாட்டார்கள். பின் எப்படி பாதிக்கப்பட்டவள் வெளியே வந்து தனக்கு நேர்ந்தக் கொடுமையை சொல்ல முடியும்? மேலதிகாரி எனில் அவனை எதிர்த்தால் வேலை போகும் அல்லது மேலதிக கொடுமைகள் நடக்கும். மாதச் சம்பளத்தை நம்பி குடும்பம் நடத்தும் பெண் எப்படி எதிர்ப்பது? இந்த தொழில் துறையிலேயே வேலை கிடைக்காதபடி செய்துவிடுவேன் என்று மிரட்டுபவரை எப்படி எதிர்ப்பது?

பின்னர் ஒரு நாள் எப்போதாவது நல்ல ஆதரவு கிடைத்த பிறகு வெளியே வந்து சொன்னால் ஏன் இவ்வளவு தாமதம்? நீ அந்த ஆபிசரோடு தானே எல்லா மீட்டிங்கிலும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாய்? அப்போதே செருப்பை கழட்டி அடித்திருக்க வேண்டாமா என்கிற கேள்விகளைக் கேட்டால் நீங்கள் பாதிக்கப்பட்டவரை இன்னும் நோகடிக்கிறீர்களே தவிர உதவி செய்யவில்லை. இந்த எதிர்வினைகளுக்குப் பயந்து தான் இத்தனை நாள் அவர் வாய் மூடி இருந்தார். இதையே ஒரு ஆண் கேட்டால் கூட புரிந்து கொள்ளலாம் ஏனென்றால் அவனுக்கு பெண்ணின் நிலை புரியாது. ஆனால் கேள்வி கேட்பது பெண்களாக இருப்பின் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பாலியல் வன்கொடுமையை அனுபவித்து இருக்க மாட்டீர்கள் என்று கடந்து போவதா இல்லை அப்பெண்ணின் நிலையை உணரும் தன்மை இல்லாமல் போனதே என்று உங்கள் அறிவைக் குற்றம் சொல்வதா என்று புரியவில்லை.

பொது வெளியில் ஒரு பெண் நான் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டேன் என்று சொல்வதனால் வரும் பாதிப்புகளை முதலில் பட்டியலிடுகிறேன். இப்படி ஒரு பெண் சொன்னால் சராசரி ஆண்களும் பெண்களும் நினைப்பதை இங்கே பதிவிடுகிறேன்.

  1. எல்லாம் போய் படுத்திருப்பா, இப்போ என்னமோ பத்தினியாட்டம் வெளியே வந்து சொல்றா.
  2. ஏன் இத்தனை நாள் சொல்லலை, 5 வருஷம் முன்னாடி நடந்தது, 10 வருஷம் முன்னாடி நடந்தது இப்போ தான் சொல்ல நேரம் வந்ததா?
  3. பணம் கேட்டிருப்பா, படிஞ்சிருக்காது அதான் ஓபனா சொல்ல வந்துட்டா.
  4. அவனை எதுக்குத் தன்னோட திருமணத்துக்கு அழைப்பு கொடுத்தா? அப்போ மதிச்சு கூப்டுட்டு இப்போ மட்டும் ஏன் குத்தம் சொல்றா?
  5. அம்மாகாரி அப்பன்காரன் எல்லாம் என்ன செஞ்சுக்கிட்டு இருந்தாங்க? நாலு அப்பு அப்பி பொண்ணை காப்பாத்தியிருக்க வேண்டாமா?
  6. எல்லார்கிட்டேயும் சிரிச்சு சிரிச்சுப் பேசுவா அப்படி இருந்தா எந்த ஆம்பளை தான் இப்படி கூப்பிட மாட்டான்?
  7. அவ உடையும் அவளும்! ஆபிசுக்கே ஸ்லீவ்லெஸ் தான் போட்டுக்கிட்டுப் போவா அதான் அவளுக்குப் பாலியல் தொந்தரவு வந்திருக்கு!
  8. எவ்வளவு விவரமா தனக்கு நேர்ந்த பாலியல் வன்முறையை விவரிச்சு எழுதியிருக்கா, படிக்கவே பிட்டுப் படம் பார்த்த பீலிங் வருது. அப்ப அனுபவிச்சிட்டு இப்போ வந்து குறை சொல்றா பாரேன்.

இவை தான் மக்கள் மனத்தில் ஓடும் என்று தெரிந்தும் அப்பெண் ஏன் துணிந்து வெளியே வந்து அவளுக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்கிறாள்? பாதிக்கப்பட்டவள் மணமானவள் என்றால் கணவனும் அவன் குடும்பத்தாரும் அவள் வெளிப்படையாக பேசிய பின் மரியாதையோடு பார்ப்பார்களா என்பது மிகப் பெரிய கேள்வி. சாட்சிகள் வைத்து இக்குற்றங்கள் நடப்பதில்லை. அதனால் தான் இவை நிரூபிக்க இயலா குற்றங்கள் ஆகின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணோ ஆணோ வாய் மூடி மௌனித்திருப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணம். அப்படி இருந்தும் இவை அனைத்தும் தாண்டி ஒருவர் வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறார் என்றால் அது எதனால்?

  1. முதலில் சொன்ன அமெரிக்க நீதிபதி விவகாரத்தின் உதாரணம் மாதிரி ஒரு கெட்டவன் பலரையும் பாதிக்கும் ஒரு பதவியை அடைந்து மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடாது என்கிற நல்லெண்ணம்.
  2. குடும்ப ஆதரவு கிடைத்து அவர்கள் இதை வெளியே சொல் மற்றவர்களுக்கும் அவன் உண்மை முகம் தெரியட்டும் என்று ஆதரவு கரம் நீட்டுவதால்.
  3. சில சமயம் மனச்சிதைவு அதிகம் ஏற்பட்டு அவர்களே தாங்க முடியாமல் என்ன வேண்டுமானாலும் ஆகட்டும் இதை வெளியே சொல்லியே தீருவேன் என்று முடிவெடுப்பதால்.
  4. சமூகத்தில் ஒரு நம்பகத் தன்மையான இடத்திற்கு வந்த பிறகு நான் சொல்வதை மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கும்போது உண்மையை பலரும் அறியட்டும் என்று சொல்வது.
  5. மிரட்டல் பயம் நீங்கும்போது. பலரும் blackmail செய்யப்படும் சூழ்நிலையில் தான் இருப்பார்கள். புகைப்படம் வீடியோ harass செய்பவன் வசம் இருக்கும். பெரும் பதவியில் இருப்பவர்களை தனியாக எதிர்கொள்ள முடியும் சூழல் வரும்போது.
  6. ஒரு குருட்டு தைரியம்.

ஒரே ஒரு நிமிஷம் பாலியல் குற்றச்சாட்டை முன் வைப்பவர் உண்மையாகத் தான் பேசியிருக்கிறார் என்று நம்பி அவர் பக்கத்து நியாயத்தைப் பாருங்களேன். அப்பொழுது குற்றம் சாட்டப்பட்ட மகானுபாவர் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டு சமூகத்தில் பெரிய மனுஷன் என்கிற போர்வையோடு வளைய வருகிறார் என்கிற உண்மை பகீர் என்று உரைக்கிறது அல்லவா? இதேக் கொடுமை நம் வீட்டில் யாருக்காவது நிகழ்ந்து அப்பெண் பொது வெளியில் இப்படி மனச்சிதைவின் காரணமாக  போட்டு உடைத்திருந்தால் நீங்கள் சின்மையிக்கும் #MeToo வில் மற்ற பெண்களின் கதைகளுக்கும் ஆதரவு தராமல் கொடுத்த எதிர்வினையைத் தான் கொடுத்திருப்பீர்களா? உங்கள் வீட்டுப் பெண்ணை தள்ளி வைத்துவிடுவீர்களா? வேசி என்று அழைப்பீர்களா?

ஏதோ ஒரு சமயம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தைரியம் வரும். இப்படி எல்லாம் எனக்கும் நிகழ்ந்திருக்குன்னு ஒருவர் வெளிப்படையா சொல்லும்பொழுது அவளே சொல்றா சின்னப் பெண், அவளுக்கு இருக்கும் துணிச்சல் கூட நமக்கு இல்லையே என்று தோன்றி சிலர் தங்களுக்கு நேரந்ததை பகிரலாம். அது தாமதமாகத் தான் நடக்கும். அத்தனை நாள் குற்றம் சாற்றப்பட்டவர்களுடன் தொழில் சார்ந்த தொடர்பு இருந்து கொண்டு இருக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு தான் கொடுமை இழைத்தவர்களை விட்டு வெட்டிக் கொண்டு விலகியிருக்கும் பேரு கிடைக்கும். பலருக்கும் அந்தக் கயவனோடே தொடர்பில் இருக்க வேண்டிய துர்பாக்கிய நிலை இருந்தால் அது பாதிக்கப்பட்ட பெண்ணின் தவறல்ல. சமூக சூழ்நிலையின் நிர்பந்தம்.

பாதிக்கப்படவ்வர்களை குற்றம் சாட்டி பார்க்கும் நிலையிருக்கும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் குஷியாக பாலியல் வன்முறையில் தொடர்ந்து ஈடுபட்டு பெரிய மனிதர்கள் என்று தான் வலம் வந்து கொண்டிருப்பார்கள். ஒரு பெண் தன் அனைத்தையும் தியாகம் செய்து ஒருவர் மேல் வன்கொடுமை குற்றம் சாட்டும்போது செவி கொடுத்துக் கேளுங்கள். நீதிமன்றத்தால் சாட்சியம் இல்லா குற்றங்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாது. சமூகத்தில் நாமாவது அவர்களுக்கு ஆதரவாக இருப்போம். கெட்டவர்களின் தோலுரித்த அவர்களின் துணிச்சலுக்கு நன்றி சொல்வோம். குற்றம் சாட்டுபவரின் ஜாதி, செய்யும் தொழில், அன்னார மேல் நமக்கிருக்கும் பழைய பகை இவற்றை வைத்து பாதிக்கப்பட்டவரை இகழாதீர்கள். நேர்மையோடு அணுகுங்கள். அது மட்டுமே நம்மால் இயன்றது. அவர்கள் பட்ட துன்பத்தை நாம் வாங்கிக் கொள்ள முடியாது, இனி வருங்காலங்களில் அவர்கள் இதனை வெளிப்படையாக சொன்னதால் படப் போகும் துனப்த்துக்கும் நாம் பொறுப்பேற்கப் போவதில்லை. ஆறுதல் கூற மனம் இல்லாவிட்டாலும் இகழாமல் இருப்போம்.

பெண்மையை போற்றுவோம் என்று பேச்சளவில் நில்லாமல் மனத்தளவில் நினையுங்கள். உலகம் சற்றே மாற்றம் பெறும்.

என் மாமியார் – தோற்றம் 23.04.1929 மறைவு 18.04.2017

ஆண்டும்மா என்று அன்போடு குடும்பத்தாரால் அழைக்கப்படும்  என் மாமியார் அவர் வீட்டில் மூத்த மகள், புகுந்த வீட்டில் மூத்த மருமகள். அவர் ஜபல்பூரில் வளர்ந்தவர். கொஞ்சம் வைதீகமான சென்னை வாழ் குடும்பத்தில் உள்ள ஒருவருக்குத் தனது பதினாறாவது வயதில் வாக்கப்பட்டார். அந்த வீட்டுப் பழக்க வழக்கங்களை அந்த இளம் வயதில்அவர் விரைவில் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. பிறந்த வீடும் புகுந்த வீடும் மக்கள் செல்வம் நிறைந்த வீடுகள். அதனால் சிறு வயது முதலே ரொம்ப பொறுப்பு அதிகம் அவருக்கு. அவர் திருமணமாகிப் போன போது அவர் கடைசி நாத்தனாருக்கு நாலு வயது தான். இந்தத் தலைமுறையில் பலர் பிள்ளை வரம் வேண்டி செயற்கைக் கருத்தரிப்பை நாடும் இவ்வேளையில், இவர் முதல் குழந்தையை உண்டாகியிருந்த சமயத்தில் அவரின் தாயாரும் உண்டாகியிருந்தார். அது ஒரு கனாக் காலம் :-}

சின்ன வயது முதலே பொறுப்பை இயல்பாக ஏற்றுக் கொண்டதனால் அவருக்குக் சுற்றமும் நட்பும் மரியாதையையும் இயல்பாகவே வழங்கியது. அனைத்து நாத்தனார்கள், மைத்துனர்கள் திருமணங்களை முன்னின்று நடத்தியது மட்டுமில்லாமல் அவர்களின் பேறு காலத்திலும் எல்லா விதத்திலேயும் உதவியாக இருப்பார்.  என் மாமனார் அப்பொழுது மத்திய அரசில் குமாஸ்தா வேலையில் தான் இருந்தார். பின்பு உழைப்பால் படிப்படியாக முன்னேறினார். அந்தக் கால வழக்கப்படி கூட்டுக் குடும்பத்தில் சம்பளத்தை முழுக்க அவரின் அப்பாவிடம் கொடுத்துவிட வேண்டும். தன் கைச்செலவுக்கும், தன் மனைவியின் கைச்செலவுக்கும் டியுஷன் எடுத்து உபரி வருமானம் ஈட்டினார் என் மாமனார். நான்கு குழந்தைகள் பிறந்த பிறகு அவருக்கு பெங்களூருக்கு மாற்றல் ஆகியது. நான்கு குழந்தைகளுடன் பெங்களூருக்குக் குடி போகிறவருக்கு அங்கே குடும்பம் அமைக்க அவரின் அப்பா சொல்ப பணமே கொடுத்தனுப்பினாராம். பெரிய குடும்பம், நடுத்தர வர்க்கம் என்றாலே எப்பொழுதும் பண நெருக்கடி தான்! என் மாமனாரின் வருமானத்தில் நாலு குழந்தைகளுடன் தனிக் குடித்தனமாக இருப்பது சிரமம் என்று இரண்டு பிள்ளைகளை என் மாமியாரின் பெற்றோர், மாமாக்கள் சில வருடங்கள் வளர்த்துள்ளனர்.

பெங்களூரு சென்று சிறிது காலத்திலேயே பெல்காமுக்கு மாமனாருக்கு மாற்றலாகிவிட்டது. பிள்ளைகள் எல்லாரையும் நல்ல பள்ளியிலிருந்து மாற்ற வேண்டாம் என்பதால் என் மாமியார் பெங்களூருவிலேயே தனியாக குடும்பத்தை நிர்வகிக்க என் மாமனார் பெல்காமில் தனியாக வசித்து வந்தார். என் மாமியாருக்கு உதவியாக அவரின் தம்பி குடும்பம் பெங்களூருவுக்கு வந்தது. உறவுகள் உதவுவதற்காக மாற்றல் வாங்கிக் கொண்டு வருவது போன்ற நிகழ்வுகள் இந்த மாதிரி பதிவுகளில் தான் இனி பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். என் கணவரை தன்னம்பிக்கை மிக்கவராக, தமிழில் ஆர்வமுள்ளவராக, பொறியியல் துறையில் சேர்ந்து படிக்க உந்துகோலாக இருந்தவர் இந்த மாமா தான்.

அந்தக் காலத்தில் விசேஷங்களோ துக்கங்களோ ஆள் பலம் அவசியம். ஏனென்றால் வெளியாட்களை நியமித்தால் அவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும். உறவினர்கள் தான் உழைப்பை எந்த பதிலுதவியும் எதிர்பார்க்காமல் செய்வார்கள். அதில் முதன்மையானவர் என் மாமியார். பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டுமே இவரின் தன்னலம் கருதா உழைப்பையே எதிர்பார்த்திருந்தன. எல்லா விசேஷங்களும் இவர் பங்களிப்பினால் மட்டுமே சிறப்படையும். மிகவும் புத்திசாலி. எதையும் திட்டமிட்டு செய்வார். குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையையும் தன் பராமரிப்பினால் நல்ல நிலைக்குக் கொண்டு வந்து விடுவார். எப்படி செலவை குறைத்து நிறைவாக செய்யலாம் என்று தான் பார்ப்பார். என் அத்தை மகள் திருமணத்துக்கு வந்து இவர் ஓடியாடி செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஆனால் என் அத்தை இறந்து விட்டதால் தாயில்லா பெண் கல்யாணம் என்று சீர் சாமான் வாங்குவதில் இருந்து திருமணத்தில் உணவு பரிமாறுவது வரை உதவி செய்தார். அவரின் பிள்ளைகளை மிகவும் நன்றாக வளர்த்துள்ளார். மகன்கள் அனைவரும் வீட்டு வேலைகளை அருமையாக செய்வர். பெண் ஆணென பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் எல்லா வேலைகளிலும் நன்கு பயிற்சி அளிப்பார்.

முதலில் வாழ்க்கையில் சிரமப்பட்டாலும் பிள்ளைகள் எல்லாரும் நல்ல நிலைக்கு வந்த பிறகு அவருக்கு மகிழ்ச்சியான வாழ்வே. அந்த விதத்தில் என் மாமனார் மாமியார் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். உழைப்பின் பயனை அவர்களால் பார்க்க முடிந்தது. என் மாமியார் தன் பள்ளி இறுதி வகுப்பை முடிக்காவிட்டாலும் தன் முயற்சியால் ஆங்கிலம், இந்தி, கன்னடம் கற்றுக் கொண்டு நன்றாகப் பேசுவார். சிறந்தத் தையல் கலை நிபுணர். அமெரிக்காவில் எங்களுடன் வாழ்ந்த போது என் மகளுக்கும் மகனுக்கும் ஹேலோவீன் காஸ்டியும் செய்து கொடுத்திருக்கிறார். {என் மகனுக்கு பேட்மேன், என் மகளுக்கு சின்டரெல்லா.} புது இடங்கள் சுற்றிப் பார்க்க, எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம் அவருக்கு. அமேரிக்கா வந்திருந்த போது என் மாமனார் அமைதியாகப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தால் இவர் டிவியில் எல்லா நிகழ்ச்சிகளையும் பார்த்து எது சுவாரசியமான நிகழ்ச்சி என்றும் என்னிடம் சொல்லிவிடுவார்.

சமையல் அறையை பார்த்தால் சமைக்கும் இடமா என்று தோன்றும். அவ்வளவு துப்புரவாக இருக்கும். ஒரு இடத்தில் எண்ணெய் பிசுக்கு இருக்காது. சமையல் செய்வதை அவர் ஒரு தவமாக மேற்கொள்வார். எது செய்தாலும் அப்படியொரு ருசி! பெரிய குடும்பத்தை நிர்வகித்ததால் இருபது பேருக்கு என்றாலும் அனாயாசமாக சமைத்து விடுவார். ஸ்ரீ ராம ஜெயம் தினமும் எழுதுவார். கையெழுத்து முத்து முத்தாக இருக்கும்.

அவர்களின் ஐம்பதாவது திருமண நாள் விழாவும், மாமனாரின் எண்பதாவது பிறந்த நாளும் விமர்சையாகக் கொண்டாடப் பட்டது. என் மாமனார் இறந்த பிறகு ஒன்பது வருடங்கள் எங்களுடன் இருந்து கொள்ளுப் பேரன்கள், பேத்திகளையும் கொஞ்சி மகிழ்ந்தார். என்பது வயதுக்கு மேல் குளியலறையில் வழுக்கி விழுந்து இடுப்பு ஒடிந்து அறுவை சிகிச்சைக்குப் பின் தன் விடா முயற்சியால் திரும்பவும் நன்றாக நடக்க ஆரம்பித்து 2 கிலோமீட்டர் வரை வாக்கிங் போவார். கடைசி இரண்டு ஆண்டுகளாக dementia வந்து அவரையும் மீறி உடல் நலக் குறைபாட்டினால் அவதிப்பட்டார். ஆனால் அவரின் நல்ல மனசுக்கு அவரின் நான்கு வாரிசுகளும் அவரை கடைசி வரை நன்கு கவனித்துக் கொண்டனர். இறுதி முடிவும் ரொம்ப சிரமப் படாமல் வந்தது.

சேவை மனப்பான்மையோடு கர்ம யோகத்தைக் கடைபிடித்து ஆச்சாரியன் திருவடியை அடைந்த அவருக்கு என் இதயம் கனிந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண்

குழந்தை பிறந்தவுடன் கேட்கப்படும் முதல் கேள்வி ஆணா பெண்ணா என்பது தான். ஆண் குழந்தை என்றால் இன்றும் அனைத்துத் தரப்பினரிடமும் சற்றே அதிக மகிழ்ச்சி ஏற்படுதல் குறையவில்லை என்பது தான் உண்மை நிலை. பெண் பிறந்ததும் மகாலட்சுமி பிறந்திருக்கிறாள், பெண் குழந்தை தான் அதிக அன்புடன் இருக்கும், பெண்ணுக்கு தான் அழகு செஞ்சு பார்க்க முடியும் என்று சொல்லுவதெல்லாம் மேல் பூச்சுக்கான சொற்கள். மூன்றாவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்தால் உண்மையான அன்புடன் போற்றி கொண்டாடும் பெற்றோர் உள்ளனர், ஆனால் அவர்கள் வெகு சிலரே.

குழந்தையை பெற்றேடுப்பதே ஒரு பெண் தான். இன்று வரை அறிவியல் எத்தனை வளர்ந்திருந்தாலும் இதற்கு மட்டும் மாற்று வரவில்லை. அதற்கு இயற்கைக்கு நன்றி சொல்ல வேண்டும். மகப்பேறு மகத்துவம் மட்டும் அவளிடம் இல்லாதிருந்தால் இந்த அளவு கிடைக்கும் மதிப்பயும் மரியாதையையும் கூட அவள் இழந்து வெறும் போகப் பொருளாக மட்டுமே இருந்திருப்பாள். ஆனால் இந்தப் பெருமையே அவளின் பலமும் பலவீனமும் ஆகிறது. முள்ளில் மேல் விழுந்த சேலை கிழிந்தால் முள்ளுக்கு எந்த நட்டமும் இல்லை சேலைக்கு தான் என்பது போல் ஆண் பெண் உறவில் பங்கம் ஏற்பட்டால் களங்கம் பெண்ணுக்கு தான். ‘ஆம்பள கெட்டா வெறும் அத்தியாயம் தான், ஆனா பொம்பள கெட்டா பொஸ்தகமே போட்டுடுவா’ என்று ஊர்வசி சொல்வது {MMKR} தான் உலக நடப்பு.

ஆசிட் வீச்சோ, வன் புணர்வோ, வன் தொடர்தலோ, அடி உதை கொடுத்து குடும்பத்தினரால் வன்முறைக்கு ஆட்படுத்தப் படுவதோ, மன உளைச்சல் உண்டாக்கி வருத்துவதோ ஆணுக்கு நேர்வதில்லை. அதனால் தான் என்னவோ பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் அவர்களால் புரிந்து கொள்ளவும் முடிவதில்லையோ என்னவோ!

பெண்ணை ஏமாற்றி வயிற்றில் பிள்ளையைக் கொடுத்தபின் ஆண் தன் வழியே போக முடியும். பெண்ணுக்கோ கருச்சிதைவு செய்யவும் தயக்கம், அதை பெற்று ஒத்தை ஆளாக வளர்ப்பதும் கஷ்டம். {ஏன் பெண் ஏமாந்தாள் என்று தனியாக பட்டிமன்றம் வைத்துக் கொள்ளலாம். அது வேற டிபார்ட்மென்ட்.} ஆனால் மொத்தத்தில் எதிர்வினகளினால் பாதிக்கப்படுவது பெண் தான்.

ஆண் பெண் இருவரும் சரி நிகர் சமானமில்லை. முதலில் புரிந்து கொள்ள வேண்டியது பெண்ணும் ஆணும் வெவ்வேறானவர்கள் என்பதை தான். எவ்வளவு பெண்ணியம் பேசினாலும் இந்த நிலை மாறப் போவதில்லை. பெண் விண்கலத்தில் ஏறி வான வெளியில் உலா வரலாம், செவ்வாய் கிரகத்திலும் கால் பதிக்கலாம். ஆனால் பெண் சில விஷயங்களில் அடக்கி தான் வாசிக்க வேண்டியிருக்கு அடங்கி தான் போக வேண்டியிருக்கு. இதை தான் ஆண்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்கிறார்கள்.

இப்பொழுது சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பெண்ணை எப்படி சித்தரிக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். ஏனென்றால் அதன் தாக்கம் மிக அதிகம். முன்பு வீட்டின் பெரியோர் பெண்களை எப்படி நடத்தினார்களோ அப்படியே அவ்வீட்டில் வளரும் பிள்ளைகளும் வளர்ந்த பின் பெண்களை நடத்தினர். இப்பொழுதோ ஊடகங்கள் எல்லாவற்றையும் கிளர்ச்சிக்காக, நிறைய பேர் தங்கள் ஊடகத்தைப் பார்க்க வேண்டும்/படிக்க வேண்டும்  என்பதற்காக செய்திகளை திரித்து, பெண்மையை மாசு படுத்தி, பெண்களை போகப் பொருட்களாகக் காட்டுகிறார்கள். அது உண்மையை பிரதிபலிப்பதில்லை. ஆனால் இன்றைய வளரும் சமுதாயம் ஊடகங்களில் காட்சிப்படுத்தப்படும் பிம்பங்களை தான் உண்மை எனக் கருதி நடக்கின்றனர். இதில் சினிமாவின் பங்கைப் பற்றி சொல்லவும் தேவையில்லை! வேண்டாம், என்னை நெருங்காதே, எனக்குப் பிடிக்காது என்று ஒரு பெண் சொன்னால் உண்மையில் அவள் அதைத் தான் சொல்கிறாள், அதற்கு வேறு பொருள் கிடையாது. ஆனால் அவள் NO என்று சொன்னாலும் அவளை வற்புறுத்தலாம் என்று சினிமாவில், தொலைகாட்சி நாடகங்களில் காட்டப்படுகின்றது. இது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா?

சரியான புரிதலுக்கு இளைஞர்கள் கருத்துள்ள கட்டுரைகளைப் படித்தும், சூழ்நிலைகளைப் புரிந்தும் அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். ஊடகங்களில், சினிமாவில் சொல்லப்படும் எந்தக் கருத்தையும் சரியா தவறா என்று சீர் தூக்கிப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். முன்னெடுத்த முடிவுடன் ஒரு பிரச்சினையை அணுகினால் உண்மையை எப்படி புரிந்து கொள்ள முடியும்?

எளிதாகப் பெண்ணை குற்றம் சொல்லிவிடலாம். சரியாக உடுக்கவில்லை, இரவில் வெளியே சென்றாள், ஆண் நட்புடன் ஹோட்டலுக்குப் போனாள், இவை தான் ஓர் ஆணை வன் புனர்வுக்குத் தூண்டியது என்று ஊடகங்களும், சமூகமும் உரக்கச் சொல்லி சொல்லி அதையே உண்மையாக மாற்றுவதில் வெற்றியும் கண்டுள்ளது. இவை தான் உண்மையான காரணமா என்று ஒவ்வொரு இளைஞனும் சற்றே யோசிக்க வேண்டும்.

ஒரு ஆட்டோக்காரர் வண்டியில் பயணி விட்டுச் சென்ற தங்க நகைகளை கொண்டு வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் என்பதை ஏன் ஒரு பெருமையாக செய்தியில் சொல்லப்படுகிறது? ஏனென்றால் அது தான் நியாயம், தர்மம், தவறு செய்ய வாய்ப்பிருந்தும் அந்த ஆட்டோக்காரர் செய்யவில்லை என்பதை அது காட்டுகிறது. அதையே தான் பெண்கள் விஷயத்தில் எது முறையோ, அது தர்மமோ, தவறு செய்ய வாய்ப்பிருந்தும் செய்யாமல் இருப்பதை ஆண்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். இது ஓர் அதிக எதிர்பார்ப்பா?

இந்த மாற்றம் எல்லாம் உடனே வரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் அதற்கான முயற்சியாவது நாம் எடுக்க வேண்டியது மிக மிக அவசியம். முதலில் பிரச்சினை உள்ளது என்பதை ஒத்துக் கொண்டால் தான் விடிவுக்கான வழியைப் பற்றி யோசிப்போம்.

பெண்கள் இயல்பிலேயே அன்பின் ஊற்று. தாயிடம் அன்பு செலுத்தும் நாம் மற்ற பெண்களையும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று சொல்லி தான் புரிய வைக்க வேண்டுமா? ஆண் பெண் உறவில் புரிதலன்றி பிரிவது நிகழலாம். பெண்ணின் மேலும் தவறு இருக்கும். ஆணின் மீதும் தவறு இருக்கும். தவறான கருத்து, மன வேற்றுமை, தப்பர்த்தம் செய்வது போன்ற பிரச்சினைகளால் பேதங்கள் வருவது இயல்பு. அதற்காக பெண்ணின் மீது பழி சுமத்தி, கேவலமாகப் பேசுவதோ நடத்துவதோ சமுதாய சீர்கேட்டில் தான் முடியும்.

பெற்றோர்களும் ஆசிரியர்களும் இளம் வயதில் இருந்தே ஆண்களை செம்மையாக வளர்க்கப் பாடுபட வேண்டும். பண்புடன் பெண்களிடம் பழக இளம் வயதில் இருந்தே ஆண் குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. பெண்களை மதிப்பும் மரியாதையும் கொடுத்து நடத்தினால் அந்தச் சமுதாயம் நிச்சயம் இன்னும் சிறப்பாக முன்னேறும். பெண்கள் தினம் என்று ஒன்று தனியாக தேவையில்லாதவாறு சமூகத்தை மாற்றி அமைப்பது நம் கையில் தான் உள்ளது அது வரை பெண்கள் தின வாழ்த்தைப் பகிர்வோம்.

March 8 2017

என் பார்வையில் செல்வி ஜெயலலிதா

Image result for images of jayalalitha

பெண்ணாய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. சில பெண்களின் வாழ்க்கை சிறு வயது முதலே போராட்ட வாழ்க்கையாய் அமைந்து இறுதி வரை போர்க்களத்திலேயே வீழும் வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. அப்படிப்பட்ட ஒருவர் தான் நம் மாநில முதல் மந்திரி செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள்.

சிறந்த படிப்பாளி, நாட்டியத்தில் நன்கு தேர்ச்சிப் பெற்றவர், அழகும் அறிவும் ஒரு சேரப் பெற்ற நடிகையாகப் பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் தன் கேரியரை ஆரம்பித்தார். அம்மு என்று அவரை நெருங்கிய அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட மென் மனத்தினராக இருந்தார். நடிக்கும்போது கூட செட்டில் தன் பகுதி முடிந்தவுடன் புத்தகமும் கையுமாக தான் இருப்பார், யாரிடமும் வம்புப் பேச்சு கிடையாது என்று அவருடன் நடித்தவர்கள் சொல்லுவர்.

இரண்டு வயதில் தந்தையை இழந்து ஸ்டெனோகிராபராக இருந்து பின் நடிப்புத் தொழிலுக்கு வந்த தன் தாயுடனும், அண்ணனுடனும் வளர்ந்தார். ஒரு கட்டத்தில் எந்த உறவும் இல்லாமல் சுற்றி இருந்தோர் அனைவருமே அவரை பயன்படுத்தி கொண்டார்கள்! நடிகையாக தான் வாழ்ந்த நாளில் ஒரு நொடி கூட தான் மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்று ஒரு வட இந்திய ஊடக பேட்டியில் {சிமி காரேவால்} சொல்லியிருந்தார். நன்றாக படிக்கும் ஒரு இளம் பெண்ணை, மேற்படிப்புப் படிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்த ஒருவரை வலுக்கட்டாயமாக நடிப்புத் தொழிலுக்கு அனுப்பியது அவரது தாய் சந்தியா. அது ஒரு சுயநலச் செயல். மகன் படித்து முன்னுக்கு வர மகளை பொருள் ஈட்ட அனுப்பினார். நடிகை சந்தியாவிற்கு அச்சமயத்தில் நடிப்பு வாய்ப்புகள் இல்லை, மகளை வைத்து நன்றாக சம்பாதிக்க முடியும் என்பதால் அவர் செய்த ஏற்பாடு இது. எங்கும் இருப்பது போல் இரட்டை நிலை. சமுதாயம் ஆண் உயர்ந்தவன் என்றும் பெண் தாழ்ந்தவள் என்றும் கூறி பேதப்படுத்துகிறது

“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்

எட்டுமறிவில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பிள்ளை காண் என்று கும்மியடி” என பாரதியார் பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்துப் பாடிவிட்டுப் போய்விட்டார். ஆனால் அது நடைமுறையில் இன்று வரை முழுமையாக வந்தபாடில்லை 😦

சினிமாவில் நடிப்பது ஒரு வங்கிப் பணியோ, ஆசிரியர் பணியோ மாதிரி 9 to 5 வேலை கிடையாது. ஆண்களுடன் நெருங்கி டூயட் பாடுவதும், உடலைக் காட்டும் உடைகளை அணிவதும் ஒரு நடிகையின் வாழ்வின் இயல்பான ஓர் அங்கம். அதில் எத்தனை ஆண்கள் அவர் விருப்பத்திற்கு மீறி அத்து மீறீனார்களோ தெரியாது. ஒரு சமயத்தில் அவர் நடிகர் ஷோபன் பாபுவுடன் திருமண உறவில் இருந்தார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்ததாகவும் ஒரு செய்தி பல காலம் உலவியது. அப்படி இருந்திருந்தால் நிச்சயம் இன்றைய ஊடகங்கள் அதை கண்டுபிடித்து அவர் மகனையோ மகளையோ இந்நேரம் வெளிக் கொண்டுவந்திருக்கும். ஆதலால் பிள்ளைச் செல்வம் இல்லை என்றே நினைக்கிறேன்.

தன்னுடைய புத்திசாலித்தனத்தாலும், ஆங்கிலம் பேசும் புலமையினாலும், எம்ஜிஆருடன் நிறையப் படங்களில் நடித்தப் பழக்கத்தினாலும், மேலும் அவருடன் நெருக்கமான உறவும் இருந்ததாக கூறப்பட்டதாலும் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தவுடன் அவரை தன் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக ஆக்கினார். அரசியலுக்கும் அவர் விருப்பபட்டு வந்தாரா என்று தெரியாது. அவருக்கு அந்தக் காலகட்டத்தில் நிறைய கடன் இருந்ததாக சொல்லப்பட்டது. அதை அடைக்க இந்தப் பணி உதவியதால் இதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கலாம். அதில் இருந்து தொடங்கியது அவரது அரசியல் வாழ்க்கை. எம்ஜிஆர் முதல் மந்திரியாக இருந்த பத்து வருட காலத்தில் படிப்படியாக அரசியலை இவர் நன்கு கற்றுக்கொண்டார்.

எம்ஜிஆர் இறந்த போது அவர் உடலின் தலைமாட்டில் சோகமே உருவாக அமைதியாக நின்றிருந்தார். ஆனால் அவரால் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. இறுதி ஊர்வல வண்டியில் இருந்து தள்ளி விடப்பட்டார். ஆனால் எம்ஜிஆர் இறந்த இரண்டே ஆண்டுகளில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனார். அவரின் சலியாத உழைப்பும் போராட்டக் குணமும் அவருக்குப் படிப்படியாக வெற்றிகளைத் தந்தன. அவரை கட்சி ரீதியாக பிடிக்காதவர்கள் கூட அவரிடம் இருக்கும் வைராக்கியத்திற்காக அவரை பிடித்தவர்கள் அநேகம் பேருண்டு.

கலைஞர் இந்திய அரசியல் சரித்திரத்தில் இடம்பெறப் போகும் மாபெரும் அரசியல் வித்தகர். அவரின் எழுபது, எழுபத்தைந்து வருட அரசியல் பயணத்தில் அவரை விஞ்ச எவரும் இல்லை. அப்படிப்பட்ட ஜாம்பவானையும் அவரது கட்சியையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவது எளிதன்று. அத்தகைய சாகசத்தை அவர் தனியாகப் பலமுறை நிகழ்த்தியிருக்கிறார்.

அரசியல் ஒரு சாக்கடை என்பது தான் பலரின் கருத்து. அதில் இருப்பவர்கள் பெரும்பாலும் ரவுடிகளும் அராஜகப் போக்கும் கொண்டவர்கள் என்பது பொது கண்ணோட்டம். அப்படிப்பட்ட அரசியலில் தனியொரு பெண்ணாக எந்த ஒரு ஆணின் துணையில்லாமல் தனித்துத் தலைமைப் பொறுப்பில் பல்லாண்டு காலம் தமிழகத்தை வழி நடத்தியிருகிறார். இது ஒரு மாபெரும் சாதனை.

‘‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்’’ (ப.,214)

என்கிற பாரதியார் பாடலுக்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு.

வீட்டில் ஆண் குடித்து விட்டு அடிக்கும்போதும், பணம் கொடுக்காமல் சச்சரவு செய்யும்போதும், அதட்டி மிரட்டி ஆணாதிக்கத்தைக் காட்டும் போதும், பொது வெளியில் ஆண்கள் பெண்களை சீண்டும் போதும், இன்ன பிற எரிச்சலூட்டும் செயல்களை ஆண்கள் செய்யும்போதும் நம் முதலமைச்சரின் கெத்து, ஆண் வர்க்கத்தையே அடக்கி ஆளும் திறன், பெண் வர்க்கத்துக்கு எரியும் புண்ணின் மேல் வருடும் குளிர் காற்றாக இருந்தது. துணிச்சலில்  அவருக்கு நிகர்  எவருமே இல்லை. அவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதே இந்தத் துணிச்சல் குணத்தை தான்.

எத்தனை தோல்விகள் வந்தாலும், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சளைக்காமல் எதிர் கொண்டு போராடினார். சாவுடனும் 75நாட்கள் விடாமல் போராடி சாகா வரம் இவ்வுலகில் யாருமே பெறாததால் அந்தப் போராட்டத்தில் மட்டுமே அவர் வெற்றி காணவில்லை.

நான் அவர் பதவியில் இருந்தபோது செய்த முறைகேடுகளை, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததை, தத்தெடுத்து அந்தப் பிள்ளைக்கு வெகு ஆடம்பரமாகத் திருமணம் செய்ததை, மக்களுக்கு இலவசங்களை அளித்ததைப் பற்றியெல்லாம் இங்கு நான் விமர்சிக்கவில்லை. இந்திய அரசியலில், ஏன் தற்போது டிரம்ப் தான் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி என்னும் நிகழ்வுக்குப் பின், உலக அரசியலில் கூட இவ்வாறான முறைகேடுகள் எல்லாம் வெகு சாதாரணமப்பா என்று அனைவரும் கடக்கின்ற நிலையில் இவர் ஆட்சியில் நடந்த சில எல்லை மீறுதல்களை இங்கே இப்பொழுது பேச விரும்பவில்லை. அதனால் அவர் செய்த தவறுகள் எல்லாம் சரி என்றும் சொல்லவில்லை. இத்தருணத்தில் அவை முக்கியமில்லை என்றே கருதுகிறேன்.

அவர் உண்மையிலேயே தாயுள்ளம் கொண்டவர். உங்களால் நான் உங்களுக்காகவே நான் என்று அவர் ஒவ்வொரு முறை கூறும்போதும் அது அவர் உள்ளத்தில் இருந்து ஒலிக்கும் குரலே! அம்மா என்று அனைவரும் அவரை அழைப்பது மரியாதைக்காக மட்டுமல்ல உண்மையான அன்பினாலும் தான். சிலவற்றை மக்களிடம் திணிக்க முடியாது. அதிகாரத்தால் அன்பை விலைக்கு வாங்க முடியாது. அன்பையும், மரியாதையும் ஒருவர் தன் நடத்தையினால் மட்டுமே பெற முடியும். அதனால் தான் இலட்சக்கணக்கான மக்கள் அவருக்காக இத்தனை பிரார்த்தனைகளையும்  தானாக முன் வந்து செய்கின்றனர். அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா பேருந்துகள், அம்மா மருத்துவக்காப்பீட்டு திட்டம், ஆகியவை அரசாங்கம் வைத்தப் பெயராக இருந்தாலும் அவைகளை மக்கள் விருப்பத்துடனேயே அவ்வாறு அழைக்கின்றனர். அவரின் பெயரை வருங்காலம் முழுவதும் அவர் கொண்டு வந்த இந்த நலத் திட்டங்கள் சொல்லும். அம்மா என்றால் அன்பு தான்! அவர் புகழ் நிலைக்கட்டும்!

 

மே 31 – உலகப் புகையிலை எதிர்ப்பு நாள்

notobacco

பீடி, சிகரெட், மூக்குப் பொடி, வெற்றிலை பாக்குடன் சுவைக்கும் புகையிலை இவை அனைத்துமே புகையிலையின் வெவ்வேறு வடிவங்களே. புகையிலையை வாயில் போடுவது, மூக்கில் இடுவது, புகைப்பது இவை யாவும் மூளைக்கும், இருதயத்திற்கும் சுறுசுறுப்பை உண்டாக்குகிறது என்று சிலர் கூறலாம். ஆனால் இதனால் கிடைக்கும் அற்ப நன்மையை விட தீமைகள் மிக அதிகம்.

இதை உபயோகிப்பவர்களின் நல்ல இரத்தம் கெட்டு நெஞ்சு வலி, தலை நோய், பீனிசம், காசம், நீரிழிவு முதலிய நோய்கள் உண்டாவது நிச்சயம். பித்தம் அதிகரித்து கபாலச்சூடு உண்டாகி நடுக்கம், நரம்புத் தளர்ச்சி, புற்றுநோய் முதலியன உண்டாகின்றன. வாய் புற்று நோய் வந்தவர்களை பார்த்தவர்கள் யாரும் புகையிலை அருகில் போகவே மாட்டார்கள். இந்தப் பழக்கத்தை நிறுத்த புகையிலை பயன்படுத்துபவர்களின் நண்பர்கள் அடையார் கேன்சர் இன்ஸ்டிடயிட்டிற்கு அந்த நட்புக்களை அழைத்து சென்று அங்கு இருக்கும் நோயாளிகளை காட்டலாம். நம் நாட்டில் ஒவ்வொரு எட்டு வினாடிக்கும் ஒரு புகையிலையினால் ஏற்படும் இறப்பு நிகழ்கிறது.

புகையிலையில் நிக்கோடீன் என்ற கொடிய விஷம் உள்ளது. அரைத்துளி நிக்கோடீன் விஷம் ஆளையே கொல்லவல்லது. புகையிலையை எந்த ரூபத்தில் பயன்படுத்தினாலும் அது மனிதனின் நரம்பையும் இரத்தக் குழாய்களையும் சீர்குலைத்து விடும். சிகரெட்டில் நாலாயிரம் வகை நச்சு ரசாயனங்கள் கலந்திருக்கின்றன. புகையிலையில் உள்ள தார் சத்தும், நிக்கோடீனும் வாய்த் திசுக்களைக் கெடுத்து சுவை குன்றச் செய்துவிடும். புற்றுநோய் இவர்களை எளிதில் பீடிக்கும். புகைப்பவர்களின் இரத்தக் குழாய்கள் அடைபட்டு மாரடைப்பு ஏற்பட வழி உள்ளது.

சிகரெட்டின் எரிமுனையில் வெப்பநிலை 900 டிகிரி செல்சியஸ் ஆகும். இது நீரின் கொதிநிலையை விட 9 மடங்கு அதிகமானது. இந்த வெப்பநிலையில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு மிகவும் விஷமுள்ள பொருட்களை விடுவிக்கப்படுகின்றன. இதனால் இயற்கை மாசுபடுவதோடு, உங்கள் அருகில் உள்ள அப்பாவிகளும் நீங்கள் விடும் புகையால் பாதிக்கப்படுகின்றனர்.

மனைவி கருவுற்றிருக்கும் போது, அவர் கணவர் அருகில் புகைப்பிடித்தால் குழந்தை வளர்ச்சி தடைபட்டு எடை குறைவாக பிறக்கும். கருச்சிதைவு அபாயம் மற்றும் சிசுவின் மரணத்திற்கு வாய்ப்பு அதிகம். மேலும் குழந்தையின் அறிவு வளர்ச்சி தாமதப்படும். மனவளர்ச்சி குன்றிப்போகும். குழந்தைப்பருவ ஆஸ்துமா அந்த குழந்தைக்கு மற்ற குழந்தைகளை காட்டிலும் அதிகம் வரும். (புகை பிடிப்பவர்களின் குழந்தைகள் சரியாக படிக்காததற்கு நீங்களே காரணம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்)

புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கைப் படங்களை பெரிய அளவில் வெளியிடும் விஷயத்தில் புகையிலை பயன்பாட்டை யாரும் குறைத்திருப்பதாகத் தெரியவில்லை, ஆயினும் அது மிக மிக தேவையே. அன்புமணி ராமதாசுக்கு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும், சினிமாவில் ஹீரோக்கள் புகை பிடிக்கக் கூடாது என்று அவர் வேண்டுகோள் விடுத்ததற்கு. பல இளைஞர்கள் தங்களுக்குப் பிடித்த நடிகரையே தங்கள் ஆதர்சமாக நினைக்கின்றனர். அதனால் அவர்கள் புகைக்காமல் இருந்தாலே அது அவர்களின் ரசிகர்களின் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். சூப்பர் ஸ்டார் ரஜின்காந்த் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்தாலும் வெளிப்படையாக தன் உடற்கேட்டிற்கான காரணம் புகையிலையும், குடிப்பழக்கமும் தான், அதை நீங்கள் செய்யாதீர்கள் என்று தன் ரசிகர்களிடம் சொன்னது மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று. திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பதை விட முக்கியமாகப் புகையிலை பயன்படுத்தாதவரை தேர்ந்தெடுத்தாலே புகையிலை பயன்பாடு குறைந்துவிடும் என்பது என் எண்ணம்.

DontSmoke

விதியை மதியால் வெல்ல முடியுமா?

 

 

hands

மதி என்ன என்று நம் அனைவருக்கும் தெரியும். மதி என்றால் அறிவு, புத்திசாலித்தனம், சாமர்த்தியம் என்று சூழ்நிலைக்குத் தக்கவாறு சொல்லிக் கொள்ளலாம்.

விதி என்றால் விதிக்கப்பட்டது என்று பொருள். விதிக்கப்பட்டது என்ன என்பது ஒரு சம்பவம் நடந்து முடிந்த பின் தான் தெரியும்.  பல சமயங்களில் புரிந்து கொள்ள முடியாத, காரணம் கூற இயலாத சம்பவங்களுக்கும் விதிப்படி நடந்து விட்டது என்றும் கூறுகிறோம்.

நம் எல்லைக்கு அப்பாற்பட்டு, நம் கட்டுப்பாட்டுக்கு மீறி நடப்பவைகளும் விதியில் அடங்கும். உதாரணத்துக்கு இயற்கைச் சீற்றங்களை எடுத்துக் கொள்ளலாம், சுனாமி, பூகம்பம், எரிமலை வெடிப்பது ஆகியவை தானாக ஏற்படுபவை. ஐப்பசி கார்த்திகை மாதங்களில் சென்னையில் மழை பெய்யும், கோடையில் வெயில் கொளுத்தும் என்பது நியதி. அவைகளும் ஒரு விதிக்கு உட்பட்டே செயல் பட்டு வருவதால் இது பிரபஞ்சத்தால் உண்டாகும் விதி.

வாழ்க்கையில் நாம் புரிந்து கொண்டு முடிவு எடுக்கும் தருணத்தில் இருந்து விதி எனப்படுவது முக்கியத்துவம் பெற துவங்குகிறது. பள்ளிக்குச் செல்லலாமா இல்லை வயிற்று வலி எனப் பொய் சொல்லிவிட்டு வீட்டிலேயே தங்கிடலாமா என்பதில் இருந்து நாம் முடிவெடுக்கும் எந்த நிகழ்வுக்கும் எதிர் வினை உண்டு. இந்த சின்ன முடிவின் வினை எப்படி இருக்கும் என்றால், ஒன்று நாம் அன்று முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய பாடத்தைத் தவற விட்டிருப்போம் அல்லது வயிற்று வலி எனப் பொய் சொன்னதினால் அம்மாவிடம் ரெண்டு அடி வாங்கியிருப்போம். எந்த செயலின் பின் விளைவுக்கும் விதி என்ற பெயர் வந்துவிடுகிறது.

நன்றும் தீதும் பிறர் தர வாரா. எல்லாமே நம் செயல்களின் பலன்கள் தான். இங்கே விதியைப் பற்றி பேசும்போது கர்மாவைப் பற்றியும் சொல்ல வேண்டியுள்ளது. முற் பிறவியில் செய்த நன்றும் தீதும் இப்பிறவியில் நாம் அனுபவிக்கிறோம் என்பது நம்பிக்கை. அதனாலேயே பிறக்கும் குழந்தைகளே வெவ்வேறு மாதிரி பிறக்கின்றன, ஒரு குழந்தை ஏழை வீட்டிலும் இன்னொன்று பணக்காரர் வீட்டிலும். ஒரு குழந்தை ஆரோக்கியமாகவும், ஒரு குழந்தை உடல் ஊனத்துடனும். ஒரு குழந்தை மேதாவியாகவும், ஒரு குழந்தை புத்திக் குறைபாடுடனும்.

இவ்வாறு வேறுபாடுகள் இருந்தும் எல்லா மானிடர்களுக்கும் பொதுவானது என்னவென்றால் சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரம். நமது வாழ்க்கையில் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் பின்னால் வரும் நம் வாழ்க்கைப் பாதையை வகுக்கும் விதியாக மாறுகிறது. அதனால் தான் நாம் செய்யும் செயல்கள் மீது நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால் அவைதான் பின்னர் விதியாக மாறி, நமக்கு இன்பத்தையோ, துன்பத்தையோ கொடுக்கப் போகின்றன.

இராமாயணக் கதை உலகறிந்தது. அதில் இராமனுக்கு முடிச்சூட்டல் நாளை காலை என்னும் போது கைகேயின் விண்ணப்பத்தால் காட்சி மாறி இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் செல்லவும் பரதன் அயோத்தியை ஆளவும் சூழ்நிலை மாறுகிறது. இராமனை தன் மகனாக பாவித்த கைகேயி எப்படி இப்படி ஒரு கோரிக்கையை தசரதன் முன் வைக்க மனம் வந்தது? அங்கு ஒரு திருப்பம். கூனி என்னும் அவளின் ஊரில் வந்த அவள் தோழி/நலன் விரும்பி அவள் மனத்தை தன் வாதத் திறமையினால் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சாக மாற்றுகிறாள். அதற்கு ஏற்றாற்போல் முன்பு தசரதன் கைகேயிக்குக் கொடுத்த இரண்டு வரங்கள் அவள் உதவிக்கு வருகின்றன. கைகேயின் எண்ணத்தை முறியடிக்க தசரதன் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. அவன் தன் மதியால் எத்தனையோ வாதங்களை அவள் முன் வைத்தான். எதுவும் அவள் மனத்தை மாற்றவில்லை.

ramasita

இங்கே இராமன் காட்டுக்குப் போகவேண்டும் என்பது விதி. போகாவிட்டால் பின்னால் இலங்கையில் இராவண வதமே நடந்திருக்காது, இராமனின் அவதாரக் காரணமே நிறைவேறி இருக்காது. மேலும் தசரதனின் வாழ்க்கையை பின்னோக்கிப் பார்த்தால் அவன் கண் தெரியாத கணவன் மனைவி இருவரின் மகனை தெரியாமல் கொன்று அவர்களின் சாபத்துக்கு ஆளாகியிருப்பார். தசரதன் இறக்கும் தருவாயில் அவருடன் எந்தப் பிள்ளையும் உடன் இருக்கமாட்டார்கள் என்பதே அவரின் சாபம். அன்று அவர் செய்த செயல் பின்னாளில் இவ்வாறு விதியாக மாறியது. இவ்வாறு ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஒரு காரணம் இருக்கும், ஒவ்வொரு செயலுக்கும் வரும் நாட்களிலும் ஒரு வினை உண்டாகும், அதுவே விதி.

இந்த உலகத்தில் நடக்கும் அனைத்தும் இறைவன் இச்சையினாலேயே நடக்கிறது. அவன் அன்றி உலகில் ஓர் அணுவும் அசையாது. “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்று இறைவனை நினைக்கக் கூட அவன் மனம் வைக்க வேண்டும் என்றிருக்கும் போது நம் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்துக்கும் அவனே காரணம் என்றும் ஆகிறது. அதெப்படி நன்றும் தீதும் பிறர் தர வாரா, ஆனாலும் எல்லாம் அவன் செயல் என்று முன்னுக்கு முரணாக வருகிறதே என்கிற கேள்வி இங்கே எழும். இரண்டு கால்களையும் தூக்கி நிற்க முயற்சி செய்தால் மனிதன் கீழே விழுந்துவிடுவான் என்று விதிக்கப்பட்டுள்ளது. அதே போல பறவைகள் இறக்கைகளை விரித்துக் கொண்டு பறக்கும் என்பதும் இயற்கையாக விதிக்கப்பட்டுள்ளது. இவ்வியற்கை விதிகளை மாற்ற முடியாது.

ஆனால் இருக்கும் வரைமுறைகளுக்குள் நாம் சிறப்பாக செயலாற்றுவது நம் கையில் உள்ளது. எல்லாம் அவன் செயல், மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்று வாளாய் இருக்க முடியாது. மனிதன் ஒவ்வொருவருக்கும் உள்ள ஆற்றல் வெவ்வேறு. அந்தத் தனிப்பட்ட ஆற்றலைக் கொண்டு நம் இலக்கு என்ன, நாம் எவ்வளவு முயற்சி செய்கிறோம் என்பதே நம் வாழ்வின் பாதையையும், வெற்றியையும் நிர்ணயிக்கிறது.

முயற்சி என்றால் என்ன? ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணமே முயற்சி. இலக்கு என்பது நாம் நிர்ணயம் செய்வது. ஒரு சிலருக்கு பணம் இலக்காகலாம். ஒரு சிலருக்கு பதவி. வேறுசிலருக்கு நிம்மதி இலக்காக இருக்கலாம். யாருக்கு எது எளிதில் கிடைக்கவில்லையோ அது தான் இலக்கு. அதை அடைய எடுக்கும் வழிமுறைகள் தான் முயற்சி. அது தான் விதி. பிறக்கும் போதே நமக்குக் கொடுக்காமல் நம்மை தேட வைத்து நமக்கு கிடைக்க வேண்டியதை போராடினால் தான் பெற முடியும் என்ற நிலை உருவாக்கியிருப்பது விதியின் நிலையன்றி வேறொன்றும் இல்லை.

என்னுடைய கர்மவினை எப்படிப்பட்டதாக இருப்பினும் என்னுடைய சமூக சூழல் எவ்வாறாக இருப்பினும், என்னுடைய பெற்றோர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், எனக்கு அது ஒரு பொருட்டில்லை. நான் என் இலக்கை நோக்கிச் செல்கிறேன் என்று உழைப்பவர்கள் விதியை மதியால் வென்றவர்கள் என்று கூற மாட்டேன் விதியை மதியாதவர்கள் என்றே சொல்லுவேன். இவர்களே வாழ்க்கையில் உண்மையில் வெற்றிப் பெற்றவர்கள்.

learntosurf

நம் வாழ்வின் ஒரே குறிக்கோள் மகிழ்ச்சியாக இருப்பது தான். அப்படி இருப்பதற்கு ஒரே வழி வாழ்க்கை முறை எப்படி வேலை செய்கிறது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப நம் எண்ணங்களை செலுத்துவதே.

செயலாக மாறாத எந்தவொரு எண்ணமும் நம்மை ஆனந்தத்திலிருந்து வெளிநடத்திச் சென்று விடுகிறது. எனவே ஞானம் (அ) அறிவு, செயல், சிந்தனை – இவை மூன்றுமடக்கிய எண்ண முறையானது அவசியம்.

உதாரணத்துக்கு வேலை வாய்ப்புத் தேடி அலைகிறோம், நம் இலக்கு வெளிநாட்டில் வேலை செய்வது. அந்த வாய்ப்பைத் தரும் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்து நன்றாக உழைக்கிறோம். ஆனால் சில ஆண்டுகள் காத்திருப்பின் பின்னும் அந்தக் கம்பெனி வெளிநாடு செல்லும் வாய்ப்பை நமக்கு அளிக்கவில்லை. அந்நிலையில் கம்பெனியை விட்டு விலகி வேறு கம்பெனியில் வேலை தேடலாம். அந்தப் புது கம்பெனியிலும் வெளிநாடு அனுப்புவார்களா என்று தெரியாது. அல்லது அதே கம்பெனியில் தொடர்ந்து இருந்து வெளிநாடு செல்லாவிட்டாலும் பதவி உயர்வை பெற்று வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளலாம்.

rethink

இங்கே விதி என்பது என்ன? நாம் ஓர் இலக்கு வைத்து உழைக்கிறோம், அறிவுடன் செயல்படுகிறோம். ஆயினும் நம்மால் அந்த இலக்கை எட்ட முடியவில்லை. வேறு எதோ தான் விதிக்கப்பட்டுள்ளது. நாம் இந்நிலையில் தோல்வியை எண்ணிக் கலங்கி நிற்பதா? வேறு தவறான பாதையில் இலக்கை அடைய நினைப்பதா? அல்லது இருக்கும் வாய்புகளை வைத்து தீவிரமாக முன்னேறி உழைப்பதா? இந்த முடிவை எடுக்கும் சுதந்திரம் தான் நம் கையில் உள்ளது.

நாம் நம்முடைய  எண்ணங்களை மாற்றியமைப்பதன் மூலம் நமக்கு விதிக்கப்பட்டதை ஆனந்தமாக ஏற்றுக் கொள்ள முடியும். பாதையை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். எனவே, வாழ்க்கை என்பது வெறும் திட்டமிடா ரசாயன மாற்றங்களால் ஆனதல்ல. நமக்குப் பிடித்தது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்பப் பழகினால் விதியை மதியால் வென்றுவிட்டோம் என்று கொள்ளலாம்.

முற்பிறவி வாசனைகள் என்னும் நதி மனிதனை நல்ல வழியிலோ கெட்ட வழியிலோ இழுத்துச் செல்கிறது. ஆனால் முயற்சியால் கெட்ட வழியில் இருந்து நல்ல வழிக்குத் திரும்பலாம், அதே மாதிரி நல்ல வழியிலிருந்து கெட்ட வழிக்கும் எளிதாக திசை மாறலாம். அதனால் மனிதனுக்கு முயற்சி மிக அவசியம். ஆற்றில் அடித்துச் செல்லப்படும் இலையைப் போல் இல்லாமல் ஓர் இலக்கை நோக்கி துடுப்பைப் போட்டு ஓடும் ஓடமாக நாம் இருக்க வேண்டும்.

Serenity prayer என்று மிகவும் பிரபலமான ஒரு பிரார்த்தனை ஒன்றுண்டு.

Serenity Prayer

{Reinhold Niebuhr (1892-1971)}

God grant me the serenity

to accept the things I cannot change; 

courage to change the things I can;

and wisdom to know the difference.

இதுவே விதியைப் பற்றி அழகாகச் சொல்கிறது. “எதை மாற்ற முடியாதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவும், மாற்றக் கூடியதை மாற்றியமைக்க துணிச்சலும், மாற்ற முடியாதவை, மாற்ற முடிந்தவை – இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளும் பக்குவத்தையும் எனக்குத் தாருங்கள் இறைவா!”

இதை நாம் கடைபிடித்தால் விதி, மதி இரண்டையும் நம் வசப்படுத்தியவர்கள் ஆகிறோம்!

accept

 

காதல் வாழ்க!

love

காதல் – நான் வளரும் பொழுது என்னுடைய பதின் பருவத்தில் அது ஒரு கெட்ட வார்த்தை. யாராவது தெருவில் காதலிக்கிறார்கள் என்று தெரிந்தால் அவர்களின் நடவடிக்கைகள் அத்தெரு சிறுவர் சிறுமிகளால் மறைந்திருந்து கூர்ந்து கவனிக்கப் படும். ஏனென்றால் அந்த வயதில் காதல் என்றால் என்ன என்று சரியாகப் புரிந்து கொள்ள முடியாத, ஒரு புது உணர்வாக அது இருந்ததே காரணம்.

இப்பொழுது எல்கேஜி பசங்களே என் கிளாசில் கேஷவ் ராம்னு ஒரு பையன் இருக்கான், அல்லது யாழிநின்னு ஒரு பொண்ணு இருக்கா, நான் லவ் பண்றேன், பெரியவள்/ன் ஆனதும் அவனை/அவளை தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லி அம்மா மனத்தில் எளிதாக பீதியை கிளப்பி விடுகின்றார்கள்.

babylove1

திருமணத்திற்கு முன் ஆணோ பெண்ணோ எதிர்பாலார் யாரிடமாவது சற்றே ஈர்ப்பு இல்லாமல் தங்கள் இளமையைக் கடந்திருக்க முடியாது. ஆனால் அந்த ஈர்ப்பு வெறும் இனக் கவர்ச்சி என்கிற தகுதியில் பலருக்கும் நீர்த்து விடும். காதலாக மாறும் தன்மையும் சக்தியும் சில ஈர்ப்புகளுக்கே உண்டு.

பல்லாயிரக் கணக்கான வெற்றி பெற்ற காதல் திருமணங்கள் உலகம் முழுவதும் காதலின் உன்னதத்தை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன! திருமணத்தில் முடியாத காதலும் அமர காவியமாக நம் மனத்தில் நிலை பெறுகின்றன.

புகழ் பெற்றவர்கள் என்றால் அவர்கள் காதலும் புகழைப் பெறுகின்றன. ஆனால் வீட்டு வேலை செய்பவருக்கும், பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்பவருக்கும் தான் காதல் அரும்புகின்றது. அவற்றில் சில திருமணத்தில் முடிந்து, மகிழ்ச்சியான வாழ்வாக, இன்பத்திலும் துன்பத்திலும் விட்டுக் கொடுக்காமல் ஈருடல் ஒருயிராகச் தொடர்கிறது. ஆனால் அதிலும் பல நிறைவேறாக் காதலாக மாறி அத் துயரம் மனத்தில் ரணமாக அவர்கள் வாழ்நாள் முழுதும் வலிக்க வைக்கிறது. காலம் வலியை குறைக்கும் என்பது உண்மை தான், ஆனால் வலியை முற்றிலுமாகப் போக்காது.

வெளி நாடுகளில் காதல் திருமணங்கள் தான் இயல்பு. நம் நாட்டில் தான் பெற்றோர்களால் இன்றும் பெரும்பாலும் திருமணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன. அதனால் தான் காதலிக்கிறேன் என்று ஒரு பெண்ணோ பையனோ பெற்றோரிடம் துணிந்து சொல்லி திருமணத்திற்கு அவர்கள் சம்மதத்தை வாங்க பயப்படுகிறார்கள்/யோசிக்கிறார்கள். இதற்கு முக்கிய இரு காரணங்கள் ஜாதி, அந்தஸ்து. எத்தனையோ பெற்றோர்கள் ஒரே ஜாதியாக இருப்பினும் ஏழை பணக்காரன் என்கிற வித்தியாசத்திற்காக மறுப்புத் தெரிவித்துள்ளனர். காதல் ஜோடியைப் பிரித்து தாங்கள் விருப்பப் பட்டவர்களுக்கே மணம் முடித்துள்ளனர். வாழப்போவது மகனோ மகளோ என்று யோசிக்காமல் தங்கள் கௌரவமே முக்கியம் என்கிற வறட்டுப் பிடிவாதத்தால் வரும் செயல் இது.

இதுவே காதல் ஜோடிகள் வெவ்வேறு ஜாதியாக, மொழியாக, இனமாக, மதமாக இருப்பின் குடும்பத்தில் அடி தடி வெட்டுக் குத்து தான். விரல் விட்டு எண்ணக் கூடிய அளவு பெற்றோர்களே பிள்ளைகள் இம்மாதிரி தங்கள் சாதியைச் சேராத காதலி/காதலனை அறிமுகம் செய்யும் போது இன்முகத்துடன் உடனே சம்மதம் கூறி ஆசி வழங்குகிறார்கள்.

நமக்குப் பிறக்கும் குழந்தைகள் நமக்குச் சொந்தம் கிடையாது. அப்படிச் சொந்தம் கொண்டாடுவதில் தான் பிரச்சினை தொடங்குகிறது. பிறந்த பின் அவர்கள் தனி மனிதர்கள். அவர்களின் விருப்பு வெறுப்புகளும் அவர்களுக்கே உரித்தானவை. பதினெட்டு வயது வரை நல்ல முறையில் அவர்களை வளர்த்து விட்ட பிறகு அவர்கள் சுயமாக சிந்தித்து செயல்படக் கூடியவர்கள் என்று நம்பிகை பெற்றோருக்கு வரவேண்டும். உதவி கேட்டாலன்றி அவர்களைத் தனித்து முடிவெடுக்க விடுவது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் சிறந்தது. தவறாக முடிவெடுக்கும் போது அறிவுரை கூறுவது பெற்றோரின் கடமை, அதையும் மீறி அவர்கள் செயல்பட்டால் அது அவர்களின் பொறுப்பு என்று தள்ளி நின்று பார்ப்பதே அறிவுடைமை.

பயத்துடன் வளர்க்காமல் எதையும் பெற்றோரிடம் சொல்லி அவர்களின் ஆதரவை பெறலாம் என்கிற நம்பிக்கையோடு வளர்த்தாலே பல தற்கொலைகளும் தவறான முடிவுகளும் தடுக்கப் படும். தோளுக்குப் பின் வளர்ந்த பிறகு உண்மையிலேயே அவர்கள் தோழர்கள் தாம்.

காதல் வாழ்க!

lovesmiley

கிரேசி மோகனுடன் ஒரு இனிய சந்திப்பு

crazy1

கிரேசி மோகன் பேச ஆரம்பித்தாலே ஒரு வரிக்கு ஒரு நகைச்சுவை துணுக்கு வரும்படி பேசுகிறார். அது அவர் இயல்பு. கூட இருக்கிறவர்கள் கொடுத்து வைத்தவர்கள். எப்பவும் சிரிப்பு மழை தான். அவருடைய தாரக மந்திரமே, “Take it easy. Life is crazy”! பேசும்போதே இதை நிறைய தடவை பயன்படுத்துகிறார்.

வெகு வேகமாகப் பேசுகிறார். அதாவது அவர் எண்ணங்கள் சொற்களாக மாறும் முன் அடுத்த எண்ணம் வந்து விடுகிறதோ என்று தோன்றுகிறது. பழக மிகவும் எளிமையாக உள்ளார். காலையில் எழுந்தவுடன் சாப்பிட ரசம் சாதம் இருந்தால் அதைவிட என்ன வேண்டும் ஒருவனுக்கு என்று கேட்கிறார்.

 

crazy2

அவர் வரவேற்பு அறையில் நிறைய வெற்றி விழா கேடயங்கள் அலங்கரிக்கின்றன. மந்தைவெளியில் உள்ள அவர் வீடு தான் அவருக்கு சொர்க்கம். வெளிநாட்டில் நாடகம் நடத்தச் சென்றால் கூட எப்போ மந்தைவெளி திரும்ப வருவோம் என்று சென்னையை விட்டுக் கிளம்பியவுடனே நாட்களை எண்ண ஆரம்பிப்பது அவர் வழக்கம் என்று அவர் தம்பி கிரேசி பாலாஜி கூறுகிறார்.

அதற்கு கிரேசி மோகன் சொல்கிறார்: எனக்குக் கோடம்பாக்கம் போனால் கூட home சிக்னெஸ் வந்துவிடும். எல்லாமே எனக்கு மைலாப்பூர் மந்தவெளி தான். நான் படித்தது P.S. ஹை ஸ்கூல், விவேகானந்தா காலேஜ், கிண்டி இஞ்சினியரிங் காலேஜ். எங்க பாட்டி நான் கிண்டி இஞ்சினியரிங் காலேஜ் சேர்ந்த போது, விவேகானந்தா காலேஜிலேயே இஞ்சினியரிங் படிச்சிடு டா கிண்டி வரைக்கும் போக வேண்டாம்னு சொல்லியிருக்காங்கன்னா பார்த்துக்கங்களேன். நான் கலைத் துறையில் வளரக் காரணமா இருந்த K.பாலச்சந்தர் சாரும் கமல் சாரும் கூட மைலாப்பூர், ஆழ்வார்பேட்டை தான். மைலாப்பூரை  My love பூர் என்று தான் சொல்வேன்.

நீங்கள் எழுதுவதற்கு யார் அல்லது என்ன உங்கள் inspiration?

நான் நிறைய படிப்பேன். வியாசரை மறந்து போவோம். ஆனா மகாபாரதத்தை மறக்க மாட்டோம். சின்ன வயசில் இருந்தே நிறைய படிப்பேன். ல.ச.ரா, கி.வா.ஜ, நா.பார்த்தசாரதி, கல்கி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் எல்லார் எழுத்தும் படிப்பேன். என் மனைவி இரவில் படுக்க வரும்போது என்னை சுத்தி படுக்கைல இருக்கிற புஸ்தகங்களை எல்லாம் நகர்த்தி வெச்சுட்டு அவங்க இடம் பண்ணி தான் படுத்துப்பாங்க. என் நண்பன் சு.இரவி தான் எனக்கு கம்பன், காளிதாசன், காளமேகம் இவர்களை அறிமுகம் செஞ்சு வெச்சான். இவங்க தான் எனக்கு inspiration.

நல்ல ரசனையுள்ளவன் அனைத்து எழுத்தாளர்களையும் படிப்பான். என் எழுத்து தான் வேதம்னு என்னிக்குத் திமிர் வந்துச்சோ போச்சு! உடம்புல தொப்பை விழுந்தா ஜிம்முக்குப் போய் தொப்பையை குறைச்சுக்கலாம். மனசுக்கு தொப்பை விழுந்தா ரொம்ப ஆபத்து. அது வராம இருக்க நிறைய படிக்கணும்.

நீங்க படிக்கிற புத்தகங்கள் எல்லாம் சீரியஸ் ரகமா இருக்கே. எப்படி நகைச்சுவையா எழுதறீங்க?

இப்போ நான் நிறைய ஆன்மிகப் புஸ்தகங்கள் தான் படிக்கிறேன். ரமண மகரிஷி பற்றி, விட்டோபா, அரபிந்தோ, சேஷாத்திரி சுவாமிகள், இந்த மாதிரி books தான். நாம சாப்பிடற உணவு எப்படி ஒரு இரசாயன மாற்றத்தினால் நமக்கு பலத்தைத் தருதோ அது மாதிரி தான் நான் படிக்கிற ஆன்மிக புத்தகங்கள் எனக்கு நகைச்சுவையா எழுத ஆற்றலைத் தருது.

நான் ஆஸ்திகனோ நாஸ்திகனோ இல்லை. ஹாஸ்திகன். நான் தினம் கும்பிடற தெய்வம் பாக்கியம் இராமசாமி தான். அவர் எழுத்தை தினம் படிக்காம வெளிய கிளம்பமாட்டேன். ஜாலியா இருக்கிறது தான் வாழ்க்கைல முக்கியம்.

நிறைய பேர் கேட்டிருப்பாங்க அனா நானும் கேட்கிறேன். உங்கள் இந்த take it easy மனப்பான்மைக்கும், வெற்றிக்கும் காரணம் என்ன?

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்லுவார்கள். எனக்குப் பல பெண்கள். தப்பா நினைச்சுக்காதீங்க, முதல்ல என் பாட்டி, அப்புறம் என் அம்மா, என் மனைவி, கூட்டுக் குடும்பம் என்கிறதனால என் தங்கைகள்னு இவங்க எல்லாரும் தான் என் வெற்றிக்குக் காரணம். இதுல முக்கியமா நான் ஜானகி டீச்சரைப் பத்தி சொல்லியாகனும். அவங்க இப்போ பெங்களூர்ல இருக்காங்க, 85 வயசாறது. அவங்க தான் என்னை ஒண்ணாங் கிளாஸ் படிக்கிறப்போ அட்டை கத்தி கிரிடம் எல்லாம் போட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் டயலாக்கை மனப்பாடம் செய்ய வெச்சு ஸ்கூலா ஸ்கூலா காம்படீஷனுக்குக் கூட்டிக்கிட்டுப் போவாங்க. எனக்கு டிராமாவை அறிமுகப் படுத்தி வெச்சவங்க அவங்க தான். அதனால தான் நான் ரஜினி படமா இருந்தாலும் சரி கமல் படமா இருந்தாலும் சரி என் சம்பளத்தைப் பத்திக் கூட பேச மாட்டேன், ஹீரோயின் பேர் ஜானகி, அதுக்கு மறுப்பு சொல்லக் கூடாதுன்னு உத்தரவாதம் வாங்கிப்பேன். என் நாடகங்கள்ல ஹீரோயின் பேர் எப்பவும் ஜானகி தான். நான் அவங்களுக்கு செய்யிற நன்றிக் கடன் இது.

crazy4

நீங்க டிவி சீரியல்கள் எதுக்கும் கதை எழுதுவதில்லையா?

டிவி சீரியல்கள் தயவு செய்து பார்க்காதீங்க. ஜவ்வு மாதிரி இழுக்கறாங்க. சாதாரணமா இன்னிக்கு செத்தா நாளைக்குப் பால். ஆனா டிவி சீரியல்ல இன்னிக்கு செத்தா நானூறாவது எபிசோடில் தான் பால், அதுக்குள்ளே பாடி வேற மாறி போயிருக்கும். டிவி சீரியல்ல எல்லா கெட்ட கேரக்டர்ஸும் வந்தாச்சு. கெட்ட மாமியார், துஷ்ட நாத்தனார், கெட்டுப் போன பத்தினி. உறவு முறைகளைக் கேவலப் படுத்த இதை விட முடியாது. நானும் டிவி சீரியல்கள் பண்ணியிருக்கேன். ஆனா அதெல்லாம் நகைச்சுவை வகை.

நீங்க இப்போ நிறைய வெண்பாக்கள் எழுதறீங்கன்னு கேள்விப்பட்டேன். அதில் எப்படி ஆர்வம் வந்தது? அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

எனக்கு இலக்கியத்தில் ஆர்வம் வர முக்கியக் காரணம் என் தாத்தா வேங்கட கிருஷ்ணன். நான் சாதாரணமா ஒரு கவிதை எழுதினாக் கூட காளிதாசன் மாதிரி எழுதற டா என்பார். அல்பத் தனமா ஒரு படம் வரைஞ்சாக் கூட ரவி வர்மா மாதிரி வரையரேன்னு சொல்லுவார். அவர் சொன்னதை நம்பிண்டு தான் நான் பின்னாடி எழுத்தையும் ஓவியத்தையும் develop பண்ணிண்டேன்.

ஒரு பதினேழு பதினெட்டு வயசுல பரணிதரனின் அருணாச்சல மகிமை படிச்சு எனக்கு ரமண மகரிஷியிடம் ஈர்ப்பு வந்தது. ரமண மகரிஷிக்கும் வெண்பா எழுதறது ரொம்பப் பிடிக்கும். அவர் தெலுங்கில், சமஸ்கிரதத்தில் எல்லாம் வெண்பா எழுதியிருக்கார். எனக்குக் கற்றுக் கொள்ள ஆர்வம் வர அதுவும் ஒரு காரணம். என் நண்பன் சு.இரவி தான் எனக்கு வெண்பா இயற்றவும் கற்றுக் கொடுத்தான். கிட்டத்தட்ட 450 வெண்பாக்கள் ரமண மகரிஷியின் மேல் இயற்றி இருக்கேன். அவர் முக்தியடையறதை வெண்பாவா எழுதும்போது விக்கி விக்கி அழ ஆரம்பிச்சுட்டேன். என்னாலேயே control பண்ண முடியலை. அப்போ உள்ளே வந்த மனைவி, “இதோப் பாருங்கோ வெண்பா எழுத வரலைன்னா இப்படி அழக் கூடாது. யாருக் கிட்டயாவது கேட்டா கத்துத் தரப்போறா”  அப்படீன்னா. எங்க வீட்டில எல்லாமே நகைச் சுவை தான்.

இரா.முருகனும் நானும் ஒரு சமயத்தில் வெண்பாவிலேயே பேசிக் கொள்வோம். அவ்வளவு பைத்தியம் ஆயிடுத்து. அவர் காலயில் ஒரு வெண்பா அனுப்புவார். அதற்குப் பதிலாக நான் அவருக்கு இன்னொரு வெண்பா அனுப்புவேன். நான் சாக்லேட் கிருஷ்ணாக்குப் பிறகு இன்னொரு டிராமா எழுதாம இருக்க இந்த வெண்பா மேல உள்ள அதிக ஈடுபாடு தான் காரணம். என் தம்பி பாலாஜி திட்டி திட்டி இப்போ தான் நான் கூகிள் கடோத்கஜன்னு அடுத்த டிராமா எழுத ஆரம்பிச்சிருக்கேன்.

சாக்லேட் கிருஷ்ணாவின் ஒவ்வொரு ஷோக்கு முன்னாடியும் ஒரு வெண்பா எழுதுவேன். தினம் ஹிந்து கேஷவ் கிருஷ்ணர் படத்தை வரஞ்சு எனக்கு அனுப்புவார். உடனே அதற்கு ஒரு வெண்பா எழுதி நான் பதில் அனுப்புவேன், அது தினம் நடக்கிறது.

keshav4

அழகவன் கோலம், அழகவன் ஜாலம்,

 அழகவன் லீலா அபங்கம் -பழக,

 அழகனவன் நட்போ, அலுக்காத கற்பு,
பொழுதுமவன் பொற்பைப் புணர்

….கிரேசி மோகன்….

 

 

keshav1

காய்ச்சிய பாலுரை குத்தத் தயிராகும்,

 ஆய்ச்சியர் பாடி அவனுறையூர், –மேய்ச்சல்

 மனன்யன்  முகுந்தன் மடியேந்தி தாளால்,

 அனன்யபக்தி ஆவுக்(கு) அளிப்பு’’

கிரேசி மோகன்….

 

 
keshav2

சோவர்த்த மானமழை தேவர னர்த்தமாய்,

ஆவர்த்த மானம் அதில்நனைய , –கோவர்த்

தனத்தையன்று சுண்டுவிரலால் தாங்கி,   தலையின்(இந்திரன்)

கனத்தையன்று கர்வபங் கம்”

….கிரேசி மோகன்….

 

keshav5

விளக்கீசல் போலே, வியனுலகில் ஈசா,
உளத்தாசை கொண்டிங்(கு) உதிர்ந்தேன், –அளப்பரிய,
ஆதியே உந்தனனு பூதியில் மூழ்கிடும்,
தேதியைச் சொல்லியெனைத் தேற்று

….கிரேசி மோகன்….

 

சில சமயம் ஏதாவது புஸ்தகம் படிக்கும் போது சில வெண்பாக்கள் தோன்றும்.

கீதா விளக்கம் ‘’ஞானேஸ்வரி’’ படிக்கையில், கண்ணன் அர்ஜுனனுக்கு சொல்வது….

‘’மரண(ம்)அமு  துக்குண்டோ !மேகம்கண்(டு)  அஞ்சி,

 கரணம்  அடிக்குமோ  காற்று!, –தருணம்

 இருளென்று  பானு  இயங்காது  போமோ!,

 உறவென்(று)  உருகா(து)  உழை’’

….கிரேசி மோகன்….

’’தூங்கும் முன் தோன்றியது’’….

பாட்டுக்கு  நாச்சியார், பரவசம்  மீராவால்,

 கூட்டுக்கு  ராதை, குவலயப் -பாட்டுக்கு(பாடு),

 பாரதம்வீட்டுக்கு(வீடு) பாகவதம்மாட்டுக்கு

 பேரிதம்  சேர்க்கப் பிறப்பு’’

….கிரேசி மோகன்….


‘’நோகா  வரம்பெற நோய்நொடி  நாடாதே,

  சாகா  வரம்கூட  சாத்தியமே, –யோகா

  நிலையாமை  நீக்கி நிரந்தரம்  சேர்க்கும்,

  கலையாம் அதுபாது காப்பு’’

….கிரேசி மோகன்….

 

என் பேத்தியோடு போகோ பார்த்துக் கொண்டிருந்தேன், அப்போ தோன்றியது இது.

 ‘’ஈகோவை விட்டு இரைந்து சிரித்திடப்

  போகோவைப் பார்பேரன் பேத்தியொடு, –ஆகாகா!

  சாகா வரம்பெற்ற சோட்டாபீம் கார்டூனால்,

  தேகாபி மானம் தொலைப்பு’’

….கிரேசி மோகன்….

 

இன்றைய தமிழகத்தில் எழுத்தாளர்களின் நிலை குறித்து உங்கள் கருத்து என்ன?

நான் சினிமா இன்டஸ்ட்ரிக்கு வந்தது கமலஹாசனோட விசிடிங் கார்ட் வைத்து. என்னை முதலில் சினிமாவில் அறிமுகப் படுத்தியதே கேபி சார் தான். அதனால் நான் ஒரு blue eyed boy. இங்கே நான் ஒரு கஷ்டமும் பட்டதில்லை. என் டயலாக்கை எந்த இயக்குநரும் கட் பண்ணியதில்லை, மாத்தச் சொன்னதில்லை. ஆனா எல்லாருக்கும் இந்த நிலைமை இல்லை. ஆனானப்பட்ட சுஜாதாவே சரியான முறையில் போற்றப் படவில்லை என்பது என் கருத்து. நான் ஒரு நாள் சாயங்காலம் ரெக்ஸ் கடைப் பக்கம் நடந்துண்டு இருக்கேன், சுஜாதா வீட்டு வாசலில் ஆம்புலன்ஸ். மாடிக்குப் போனா அவர் மூச்சு விட சிரமப்பட்டுண்டு இருக்கார். அப்பவும் எதுக்கு வந்திருக்க, என்னன்னு விசாரிக்கிறார். அதற்குள் அபோல்லோ ஆம்புலன்ஸ் ஆளு ஸ்டெரச்சரை தூக்கிண்டு மேலே வரான். ஆனா ஒருத்தன் தான் ரெண்டு பேர் கூட அந்த அம்புலன்சில் இல்லை. அந்த பில்டிங்கில் லிப்ட் work பண்ணலை. நான், அவர் பிள்ளை, அந்த ஆம்புலன்ஸ் ஆளு மூணு பேருமா அவரை சேரில் வைத்துத் தூக்கிக் கொண்டு வந்து ஆம்புலேன்சில் ஏத்தினோம். நீல் சைமன்னு ஒருத்தன், சுஜாதாவின் கால் தூசுக்கு வரமாட்டான். வெளிநாட்டு எழுத்தாளர்  . அவன் வீட்டில் ஹெலிபேட் இருந்தது. வெளிநாட்டில் எழுத்தாளர்களுக்கு அவ்வளவு மதிப்பு. ஆனா இங்கே எழுத்தாளர்களின் நிலை அப்படி இல்லை. பல பழைய எழுத்தாளர்களின் குடும்பங்கள் மிகவும் வறுமை நிலையில் இருக்கின்றன. அவர்களுக்கு என்னால் ஆன சிறு உதவிகளை செய்து வருகிறேன்.

 

கிரேசி மோகனுக்கு “நமது திண்ணை” சார்பாக கூகிள் கடோத்கஜன் மாபெரும் வெற்றிப் பெற வாழ்த்தி விடை பெற்றேன் J

நன்றி @keshav61 அவரின் கண்ணனின் வண்ண ஓவியங்களை இங்கே போட அனுமதித்ததற்கு.

 

 

ஜூன் மாத ‘நமது திண்ணை’ இணைய இதழில் வந்த நேர்காணல்.

பிரபல ஓவியர் கேஷவ்வின் நேர்காணல்

keshav6

ஓவியர் கேசவ் வீடு கிரீன்வேய்ஸ் ரோடில் அமைதியும் அழகும் ததும்ப அமைந்திருக்கிறது. அவரது குடும்பத்தினரும் மிகவும் அன்புடன் வரவேற்று ஆசையுடன் உரையாடினார்கள்.

வீட்டின் முன் பகுதியை ஆபிசாகவும் பின்பகுதியை இல்லமாகவும் அமைத்துள்ளார். வரவேற்பறை சுவரிலேயே விஷ்ணுவின் மிகப் பெரிய வண்ண ஓவியம் வரைந்துள்ளார். அதே போல பல வண்ண ஓவியங்களை பிரேம் போட்டும் எல்லா அறைகளிலும் மாட்டியுள்ளார். எல்லாமே இறைவனின் எண்ணற்ற ரூபங்கள். ஒரு ஓவியத்தை நின்று ரசிக்கவே பல நிமிடங்கள் ஆகிறது. திரும்பும் இடமெல்லாம் கண்ணைக் கவரும் ஓவியங்கள் தான்! அவர் வீட்டுக்குச் சென்று வந்தாலே தியானம் செய்த அமைதி கிட்டுகிறது.

  1. உங்களுக்கு சிறு வயது முதலே வரைவதில் ஆர்வம் இருந்ததா? யாரிடமாவது பயின்றீர்களா? உங்கள் படிப்புப் பின்னணி என்ன?

நான் எழுத ஆரம்பிக்கும் முன்பே வரைய ஆரம்பித்துவிட்டேன் என்று என் அம்மா சொல்வார் 🙂 ஜன்னல் வழியாக வெளியே தெரியும் எல்லாவற்றையும் சாக் பீசினால் சுவரிலும் தரையிலும் வரைவேன். நான் ஏழாம் வகுப்புப் படிக்கும்போது என் டிராயிங் மாஸ்டர் திரு பி.ஏ.ரெட்டி என்னை மிகவும் ஊக்குவித்தார். அவர் அனைத்து மாணவர்களையுமே ஊக்குவிப்பார். நான் பள்ளியில் இருந்த காலம் வரை அவர் ஒரு முறை கூட கரும்பலகையில் வரைந்தோ எப்படி வரையவேணும்னு சொல்லிக் கொடுத்தோ பார்த்ததில்லை. ஆனால் அவர் தன் பேச்சாலையே எங்களை inspire செய்வார்.

நான் எந்த ஆர்ட் கோர்ஸ் சேர்ந்தும் பயிலவில்லை. மியுசியங்களில் முக்கியமாக சாலார் ஜங் மியுசியம் (ஹைதிராபாத்), புத்தகங்களில் (ஐரோப்பிய ஓவியர்கள் வரைந்தவை) இவைகளைப் பார்த்து தான் நான் வரையக் கற்றுக் கொண்டேன். புகழ்பெற்ற ஓவியர் எஸ்.ராஜம் அவர்களின் ஓவியங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அவரின் ஓவியங்களை முதன் முதலில் ஒரு இராமாயண கதைப் புத்தகத்தில் பார்த்து அசந்து போனேன். எல்லாரையும் விட ராஜா ரவி வர்மாவின் ஓவியங்கள் தான் என்னை மிகவும் ஈர்த்தன. அவரின் ஒரிஜினல் ஓவியங்களை மைசூரில் உள்ள ஜெயச்சாமராஜேந்திர ஆர்ட் கேலரியில் பார்த்தபோது என்னுள் ஒரு பொறி தட்டியது.

நான் ஹைதிராபாத்தில் ராக்வுட்ஸ் பள்ளி என்ற கான்வென்டில் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பிறகு கோல்கொண்டாவில் உள்ள கேந்திரிய வித்யாலாயாவில். பிறகு சென்னை வந்து, இங்கு B.Com, M.com படித்து முடித்தேன்.

  1. நீங்கள் உங்கள் பெயருக்கேற்ப கண்ணனின் படங்களையே பெரும்பாலும் வரைகிறீர்கள். அதை ஆரம்பித்ததற்கு ஏதாவது தனிக் காரணம் உள்ளதா? அப்படித் தொடங்க உங்கள் வாழ்வில் ஏற்பட்ட ஏதாவது அதிசய நிகழ்வை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

கண்ணனுடனான என் பயணம் மிகவும் கால தாமதமாகத் தான் ஆரம்பித்தது. எனக்கு சரித்திரத்திலும் இதிகாசங்களிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. நான் வளர்ந்தது ஒரு பாரம்பரிய வைணவ குடும்ப சூழலில். வீட்டிலும் எங்கள் காலனியிலும் ஏகாதசி அன்று பஜனைகள், மார்கழி மாதங்களில் பஜனைகள், பாகவத சப்தாகங்ககள் என்று பலதும் நடைபெறும். வளர்ந்த இந்த சூழல் தான் என்னை கண்ணனிடம் அழைத்துச் சென்றது என்று நினைக்கிறேன். எனக்கு முதலில் பிடித்தக் கடவுள் இராமன் தான். அவரை தான் நிறைய வரைந்தேன். இராமாயண காவியத்தின் மூலத்தில் இருந்து சம்பவங்களுக்கேற்ப நான் பலவாறு இராமனை வரைந்தேன். நான் வரைந்தவைகளை என் தந்தையின் குரு  திரு புரிசை நடாதூர் கிருஷ்னமாச்சாரியார் என்னும் மகா பண்டிதரிடம் காட்டுவேன். நான் பலமுறை அவரிடம் கொடுத்தவைகளை ஒன்றுமே சொல்லாமல் என்னிடமே திருப்பிக் கொடுத்து விடுவார். ஒரு நாள், “நீ கிருஷ்ணனை போடு” என்றார். அது ஒரு ஆணையாக எனக்குத் தோன்றியது. அந்த ஆணையை ஏற்றுக் கொண்டு அன்றில் இருந்து நான் கிருஷ்ணனைத் தான் வரைகிறேன். இது நடந்தது 2002ஆம் ஆண்டு.

keshav4

  1. உங்கள் பெற்றோருக்கு ஓவியம் வரைவதிலோ வேறு கலைகளிலோ ஆர்வம் இருந்ததா? நீங்கள் இதையே உங்கள் தொழிலாக வைத்திருப்பதை முதலில் உங்கள் பெற்றோரும் பின்னால் உங்கள் மனைவியும் எந்த அளவு ஆதரவு கொடுத்தார்கள்?

என் தந்தை ஒரு நாடக நடிகர். அவர் ட்ரிப்ளிகேன் பைன் ஆர்ட்ஸ் கிளப், NSN தியேட்டர்ஸ் இரண்டிலும் இருந்தவர். மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், சோ, ஸ்ரீகாந்த், SV வெங்கட்ராமன், (SV சேகரின் தந்தை) இவர்களுடன் பல நாடகங்களில் நடித்தவர். மடிசார் புடைவை உடுத்திக் கொண்டு பெண் வேடங்களிலும் நிறைய நடித்திருக்கிறார். தேவனின் துப்பறியும் சாம்புவில் வேம்புவாக நடித்து பிரபலம் அடைந்தவர். அவர் மிகவும் நன்றாகப் பாடவும் செய்வார். மார்கழி மாதங்களில் விடியற்காலையில் திருப்பாவைப் பாசுரங்களைப் பாடும் போது அவர் குரல் வேணுகானமாக ஒலிக்கும்.

என் தந்தைக்குக் கலையில் மிகுந்த ஆர்வம் இருந்ததால் அவர் நான் செல்லும் பாதையைப் பற்றிக் கவலைப்படவில்லை. விகடனில் வரைய ஆரம்பிக்கும் பொழுது மகிழ்ச்சியே அடைந்தார். ஆனால் என் வங்கி வேலையை விட்டுவிட்டு முழு நேர ஓவியனாக ஆக முடிவு செய்தபோது சற்றே கவலைப்பட்டார். ஆனால் நான் இந்தத் துறையில் நல்ல முறையில் வளர்வேன் என்று சீக்கிரமே நம்பிக்கை அடைந்தார். என் அம்மாவின் பரிபூரண ஆசி எனக்குத் தொடக்கம் முதலே இருந்தது. என் மனைவிக்கு முதலில் இந்த ஓவியத் துறை பற்றி ரொம்பத் தெரியவில்லை. சிறிது காலம் கழித்து, புரிந்த பின் நான் செய்வதற்கு முழு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்தார். என் வேலைக்கு எந்த இடையூறும் தருவதில்லை. அது இறைவன் தந்த வரம் தான். மனைவியின் ஆதரவு இன்றி எதையுமே சிறப்பாகச் செய்ய முடியாது. இம்மாதிரி துறையில் இருப்பவர்களுக்கு குடும்ப ஆதரவு மிகவும் முக்கியம்.

keshav9

  1. உங்களை இத் துறையில் இன்றும் ஊக்குவித்துக் கொண்டிருப்பவர் அல்லது ஊக்குவித்துக் கொண்டிருப்பது எது? அதே போல படம் வரைவதற்கு உங்கள் inspiration என்ன?

ஓவியம் வரைவது ஒரு addiction மாதிரி தான், ஒரு போதை. நான் எப்பொழுதும் வரைந்து கொண்டே இருக்கவேண்டும். என்னால் வரையாமல் இருக்க முடியாது. என் ஓவியங்களைப் பார்த்தவர்கள் அனைவரிடமிருந்தும் எனக்கு நிறைய பாராட்டுகள் வந்துள்ளன. சமூக வலை தளம் என்னை மிகவும் பாராட்டுகிறது. நிறைய பேர் நான் தினம் பதிவேற்றும் கிருஷ்ணனின் ஓவியங்களுக்கு FaceBookல் அழகிய வெண்பாக்களை ஆர்வத்துடன் இயற்றுகிறார்கள். சிலர் அவ்வோவியங்களில் உள்ள நுணுக்கங்களை ஆராய்ந்து அவர்களுக்குத் தோன்றும் அழகிய விளக்கங்களும் அளிக்கின்றனர்.

மிகப் பெரிய ஓவியர் கோபுலு அவர்கள் என்னை வெகுவாகப் பாராட்டுவார். என் ஓவியங்களில் உள்ள நுணுக்கங்களையும், வரைய நான் பயன்படுத்திய டெக்னிக்குகளையும் மிகவும் சிலாகிப்பார். அவர் ஒரு சமயம் என்னிடம் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருக்கும்போது எனக்கு அவர் அன்புடன் கொடுத்தப் பட்டம் “கிருஷ்ணப் ப்ரேமி”. இந்த மாதிரி பாராட்டுகள் தான் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

கிரேசி மோகனுக்கு நான் தினமும் காலையில் வரைந்த கிருஷ்ண ஓவியத்தை ஈமெயிலில் அனுப்புவேன். அவர் உடனே அதுக்கு ஒரு வெண்பா இயற்றி அனுப்புவார். பலமுறை தொலைபேசியிலேயே வெண்பாவை கூறிவிடுவார்.

அருமையான ஓவியரான நடிகர் சிவகுமார் என் ஓவியங்களைப் பார்த்து நிறைய கருத்துத் தெரிவித்துள்ளார். திரு. மணியன் செல்வன் என் ஓவியங்களை துல்லியமாக ஆராய்ந்து மிகுந்த கவனத்துடன் கருத்துச் சொல்வார். இவர்களின் கருத்துக்களை நான் பெரிதும் மதிக்கிறேன்.

கிருஷ்ணனும் அவன் கதைகளுமே என் inspiration. வரைவதற்கு அவனே ஒரு காரணி 🙂

keshav3

  1. நீங்கள் ஹிந்து நாளிதழில் கார்டூனிஸ்டாகப் பணிபுரிகிறீர்கள்.அந்த வேலைக்கும் நீங்கள் கண்ணன் ஓவியங்கள் வரைவதற்கும் நிறைய வேறுபாடு, எண்ணங்களில் மாற்றம் தேவைப்படும். எப்படி அதை செய்ய முடிகிறது?

கார்டூன் வரைவதற்கு நேரடியாகப் பார்த்தவுடன் ஸ்கெட்ச் செய்யும் திறன் வேண்டும். அது எனக்கு இயல்பாகவே இருந்தது. மேலும் அவ்வகை ஓவியத்துக்குத் தேவையான மற்ற திறன்களையும் நான் வளர்த்துக் கொண்டேன். சில கோடுகளிலேயே உடல் பாகங்களை நன்றாக வரையத் தெரிந்திருக்க வேண்டும். கார்டூன் வரைவதற்கு முதலில் நன்றாகக் கவனிக்கப் பழக வேண்டும். வெறும் முக பாவம் மட்டும் அல்ல குணாதிசயங்களும் கார்டூனில் வெளிப்பட வேண்டும். கார்டூன் என்பது ஒரு உருவத்தின் caricature. கிருஷ்ணனை வரைவதோ இதற்கு நேரெதிர். ஒன்றில் ஈடுபடும் போது மற்றொன்றில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டு விடுவேன். ஆனால் இரண்டு வித ஓவியங்களுக்கும் புதுப் புது ஐடியாக்கள் தேவை.

keshav5

  1. உங்கள் வீடே கண்ணனின் கோவிலாக உள்ளது. சுவர்களில் மிகப் பெரிய சித்திரங்களை தீட்டி வைத்திருக்கிறீர்கள். இவை எல்லாம் எப்பொழுது வரைந்தவை?

நான் 2002ல் இருந்து வரைந்து வருகிறேன். இவையெல்லாம் என் கிருஷ்ணனைப் பற்றிய ஆறாய்ச்சியின் படிக் கற்கள். இவ்வோவியங்கள் அனைத்தும் ஸ்ரீமத் பாகவதத்தில் இருந்து எடுத்தவை. பாகவதக் கதைகளைச் சொல்லும் ஓவியங்கள் தான் சுவரை அலங்கரிக்கின்றன.

keshav7

    7. நீங்கள் இந்தக் கலையைக் கற்றுக் கொடுக்கிறீர்களா? உங்களுக்கு மாணவர்கள் உள்ளனரா?

நிறைய பேர் அவர்களின் ஓவியங்களை எடுத்து வந்து கருத்துக் கேட்பார்கள். சிலர் மெயிலில் அனுப்பியும் அறிவுரை கேட்பார்கள். நான் என்ன மாற்றம் செய்ய வேண்டும், எப்படி வரைந்தால் ஓவியங்கள் இன்னும் அழகு பெறும் என்று சொல்வேன். என் கருத்து எப்பொழுதுமே ஒவ்வொருவரும் அவரவர் ரசனைப்படியும், திறனின் அடிப்படையிலும் வரைய வேண்டும் என்பதே. வாழ்க்கையில் இருந்து உதாரணங்களை எடுத்துக் கொள்ளுதல் நலம். மேலும் பயிற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.

  1. உங்களைப் பலப் பிரபலங்கள் வந்து சந்தித்திருப்பார்கள், பாராட்டியிருப்பார்கள். அவற்றில் உங்கள் நினைவில் நிற்பவை சிலவற்றைச் சொல்லுங்கள்.

நிறைய பேர் வந்து சந்தித்திருக்கிறார்கள். Dr.பத்மா சுப்பிரமணியம், கேரளாவில் பாகவத கிராமம் உருவாகக் காரணமாக இருந்த சுவாமி உதித் சைதன்யா, திரு.மோகன்லால், மணியம் செல்வம், சுவாமி ஓம்காரானந்தா, ஹிந்து எடிட்டர்கள், N.ராம், N.ரவி, மாலினி பார்த்தசாரதி, பத்திரிக்கையாளர் காஞ்சன் குப்தா, எழுத்தாளர் பாலகுமாரன், சித்ரவீணா ரவிகிரன், பாடகர் நவநீத கிருஷ்ணன், கிரேசி மோகன். ஏன் நீங்களும் தான் 🙂

  1. தினம் நீங்கள் ட்விட்டரில், Facebookல் ஒரு கண்ணன் ஓவியத்தைப் பகிர்கிறீர்கள். கண்ணுக்கு விருந்து, மனத்துக்கு மருந்து. கிரேசி மோகனுக்கும் அதே ஓவியத்தை நீங்கள் ஈமெயிலில் அனுப்பி அவர்தினம் ஒரு வெண்பா இயற்றுவதாகக் கூறியிருந்தார். அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

மோகன் சாருடனான என் நட்பு மிகவும் உன்னதமானது, தனித்துவம் மிக்கது. அவருக்கு நிறைய ஐடியாக்கள் தோன்றிய வண்ணம் இருக்கும். அதனால் என் ஓவியத்துக்கு அவர் மூலம் புது விளக்கங்கள் கிடைக்கிறது. அவர் ஆற்றலால் என் படங்களை மிக உயரிய இடத்துக் கொண்டு செல்கிறார். என் ஓவியங்கள் அவர் மூலம் வேறு ஒரு பரிணாமத்தை அடைகின்றன. நாம் எதிர்ப்பார்க்காத கோணத்தில் இருந்து அவர் படத்தைப் பார்த்து எழுதும் வெண்பா பரவசத்தை உண்டு பண்ணும். அவர் தொலைபேசியில் கூப்பிட்டு எப்படி அந்த யோசனை வந்தது, ஏன் அப்படி ஒரு வெண்பா இயற்றினேன் என்று விளக்கமும் கொடுப்பார். போன வருடம் டிசெம்பர் மாதம் திருவல்லிக்கேணியில் நடந்த பாரதியார் விழாவில் அவர் வெண்பாக்களுடன் என் படைப்புக்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

keshav2

  1. உங்கள் கண்ணன் ஓவியங்களில் எப்பொழுதும் வாஞ்சையுடன் ஒரு பசு மாடும் கூடவே இருக்கும். அதன் காரணம் என்ன?

பசு என்பது பொதுவாக ஜீவாத்மாவைக் குறிக்கும். சில சமயம் பசு பூமியையும் உபநிடங்களையும் குறிக்கும். அதனால் என் ஓவியங்களில் பசு எப்பொழுதும் இருக்கும், அந்தந்த ஓவியத்தில் நான் சொல்ல வருவதைப் பொறுத்து அது ஜீவாத்மாவாக அல்லது பூமியாக அல்லது உபநிடமாக மாறுபடும். மேலும் ஒரு காரணம் உண்டு, எனக்கு பசுக்களை மிகவும் பிடிக்கும் J

keshav1

  1. இதுவரை எவ்வளவு ஓவியங்கள் வரைந்திருப்பீர்கள்?

நான் கணக்கு வைத்துக் கொள்வதே இல்லை. ஆயிரக் கணக்கில் இருக்கும். இதைத் தானே நான் எப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறேன் 🙂

இவரின் ஓவியங்கள் பல பிரபலங்களின் வீடுகளிலும் பெரிய நிறுவனங்களின் வரவேற்பு அறைகளிலும் அலங்கரிக்கின்றன. மேலும் மேலும் அருமையான ஓவியங்களை தீட்டவும், பேரும் புகழும் அடையவும், விருதுகள் மூலம் அங்கீகாரங்கள் பெறவும் நமது திண்ணை சார்பாகத் திரு.கேஷவ் அவர்களை வாழ்த்துகிறோம்.

இவரின் ஓவியங்களைக் காணவும் தொடர்புக் கொள்ளவும் Kamadenu.blogspot.in

இவரின் ட்விட்டர் ஹேண்டில் @keshav61

இந்த நேர்காணல் ஆகஸ்ட் மாதம் ‘நமது திண்ணை’ இணைய இதழில் வெளியானது.

மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்

kalam2

நமது பாரத குடியரசுத் தலைவர் கலாமின் பிறப்பு, வளர்ப்பு, அவர் வகித்தப் பல பதவிகள் பற்றி நம்மில் பலரும் அறிந்த ஒன்றே. ஆனால் அவரின் மறைவு நம்மிடையே  ஏற்படுத்திய தாக்கம் நாம் நிச்சயம் எதிர்பார்க்காத ஒன்று என்பதில் சந்தேகமில்லை. அவர் திங்களன்று  இரவு ஏழேமுக்காலுக்கு ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் இறந்தார். தமிழ்நாட்டில் பல பள்ளி, கல்லூரிகளுக்குச் செவ்வாய் அன்று விடுமுறை அறிவித்திருந்தும் பல பள்ளிக் குழந்தைகள் செவ்வாய் காலை சீருடை அணித்து பள்ளிக்குச் சென்று கலாம் அவர்களைப் பற்றி பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தியுள்ளனர். விடுமுறை அன்று மாணவர்கள் விருப்பத்துடன் பள்ளிக்குச் சென்று, இறந்த ஒருவரைப் பற்றிப் பேச வேண்டும் என்றால் அவர் எவ்வளவு பெரிய inspiring personalityயாக இருந்திருக்க வேண்டும் என்று நாமே புரிந்து கொள்ள முடியும்.

நல்லடக்கம் இன்று. நேற்று முதலே திரும்பிய இடமெல்லாம் அவரின் படமும், அதற்கு மாலையும் அதன் முன் சில மெழுகுவர்த்திகளும் ஏற்றப்பட்டு ஒளி வீச ஆரம்பித்து விட்டன. இவ்வாறு இறுதி மரியாதை செய்தவர்கள் எல்லாம் பணம் படைத்தவர்கள் அல்ல. துப்புறவு தொழிலாளர்களும், வாகன ஓட்டிகளும், ஆட்டோ ஓட்டுநர்களும், சின்ன மளிகைக் கடைகளும் , மரக்கடைகளும், சின்ன சாப்பாட்டுக் கடைகளும், அயர்ன் கடைகளும் வைத்திருப்பவர் தாம். இவர்கள் தான் கலாமின் படம் வைத்து மாலை போட்டு ஊதுபத்தி ஏற்றி மரியாதை செய்தனர். ஒவ்வொரு தெரு முனையிலும் கலாமின் படம், இவர் சொன்ன பொன் மொழியுடன் வைக்கப் பட்டிருந்தது. எந்த ப்லெக்ஸ் பேனரிலும் ஸ்பான்சர் செய்தவர் பெயர் இல்லை, புகைப்படம் இல்லை. அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இன்று முழு கடையடைப்பு. இந்த மாதிரி ஒரு மரியாதையை அவர் பெற அவர் வாழ்க்கை இவர்கள் அனைவரையும் எந்தளவு பாதித்திருக்க வேண்டும் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

kalam3

நம் நாட்டின் குடியரசுத் தலைவராக அவர் 2002-2007 வரை இருந்தார். இது வரை அந்தப் பதவியை அலங்கரித்தவர்களுள் இவரைப் போல ஒருவரை சுதந்திர இந்தியா கண்டதில்லை. ஐந்தாண்டுகள் அவரின் இல்லமாக இருந்த ராஷ்டிரபதி பவனை எளிய மக்கள் வந்து பார்க்கும் இடமாக மாற்றி வரவேற்று விருந்தோம்பல் செய்தவர் அவர்.

kalam5

ராமேஸ்வரத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டுப் படித்து முன்னேறியதால் அவருக்கு எளியவர்களின் சிரமம் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. எளிமையானவராக இருந்ததால் அவர் இந்தியாவின் மிகப் பெரிய பதவியை வகித்தவர் ஆயினும் எல்லாராலும் எளிதாக நெருங்க முடிந்தது. அவர் குடியரசுத் தலைவர் ஆனது கூட ஒரு எதிர்பாராத நிகழ்வே. பிஜேபி அரசு காங்கிரஸ் அரசுக்கும் தோதான அரசியலைச் சார்ந்தவர் யாரும் கிடைக்காததால் கலாமை சட்டென்று தேர்ந்தெடுத்தார் அப்போதைய பிரதம மந்திரி வாஜ்பாய். யாராலும் மறுப்புச் சொல்ல முடியாத ஒரு வேட்பாளர்! அதற்கு முன் அவர் வகித்தப் பதவிகள் மிகச் சிறப்புடையவை. ஆயினும் அவர் குடியரசுத் தலைவர் ஆனது தான் அவரின் உன்னதமான குணங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட உதவியது. அதற்கு நாம் இறைவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

குடியரசுத் தலைவரான பின் அவர் தன் முதல் இரண்டு மாத சம்பளங்களை புட்டப்பர்த்தியில் உள்ள கல்லூரிக்கு நன்கொடையாகக் கொடுத்துள்ளார். ராஷ்டிரபதி பவனில் நடக்கும் இப்தார் விழாவுக்கு சுமார் இரண்டரை லட்சம் செலவாகுமாம். அது அரசாங்கத்தின் செலவு. அதில் இவர் ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் தன் பங்காகக் கொடுத்துள்ளார். இதெல்லாம் சிலர் அவர் மறைவுக்குப் பின் சொல்லக் கேட்டது. இது வரை தெரியாது. அப்போ இன்னும் வெளியில் தெரியாத வண்ணம் எவ்வளவு தான தர்மம் செய்திருப்பார் என்று நாம் சற்றே சிந்தித்துப் பார்க்கலாம்.

இளைஞர்களுக்கு முதியவர்களைக் கண்டால் பிடிக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அவர் ஈர்த்தது மொத்தமும் இளைஞர்களைத் தான். இன்று அவர் கடைசிப் பயணத்தில் அஞ்சலி செலுத்தக் கலந்து கொண்ட லட்சோப லட்ச மக்கள் அனைவரும் இளைஞர்களே. அதனினும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயம் என்னவென்றால் குழந்தைகள் தாமாகவே முன்வந்து கலாமுக்கு தங்கள் சிறு கைகளாலும் பெரிய மனத்தாலும் செய்திருக்கும் அஞ்சலிகள் தான்.

kalam

அது எப்படி சாத்தியம் ஆயிற்று? அவர் உண்மை மட்டுமே பேசினார். அதனால் சாத்தியம் ஆயிற்று. வெளிப்பூச்சும் பாசாங்கும் அவரிடம் எள்ளளவும் இலை. குழந்தைகள் அதிபுத்திசாலிகள், அதனால் அவர்களுக்கு அவரைக் கொண்டாடத் தெரிந்திருக்கிறது. தொலைக்காட்சியில் பேட்டி எடுக்கப்பட்ட ஒவ்வொரு மாணவியும், மாணவனும் அவரைப் பற்றிச் சொல்லும் கருத்து நம்மை அசர வைக்கிறது. மரம் வளர்க்க வேண்டும், நன்றாகப் படிக்க வேண்டும், பெற்றோர்களைப் பேணிக் காக்க வேண்டும், கடுமையாக உழைக்கவேண்டும் என்று அவர் சொன்னார், அவற்றை எல்லாம் நாங்கள் கடைபிடிக்கப் போகிறோம் என்று தெளிவாகச் சொல்கிறார்கள்.

kalam1

சமூக வலைதளங்களில் எத்தனை பேர் தங்கள் குழந்தைகளுக்கு அவர் பதில் கடிதம் போட்டார், கையெழுத்திட்டப் புத்தகங்களை அனுப்பினார் என்று படங்களைப் பகிர்ந்துள்ளனர்! ஜனாதிபதி பதவியில் இருந்து ஒய்வு பெற்ற பின் அவரின் உழைப்பு இன்னும் அதிகமாகியது என்று சொல்லலாம். அவர் தொடர்ந்து மாணவர்களையும் இளைஞர்களையும் சந்தித்து உரை நிகழ்த்தி அவர்கள் மனத்தில் ஞான விளக்கை ஏற்றினார். ஒய்வு என்பதே அவர் அகராதியில் இல்லை. அவர் உதாரணப் புருஷராய் வாழ்ந்ததால் தான் அவரால் மக்களை அவர்பால் இழுக்க முடிந்தது. எப்பொழுது சொல் ஒன்றும் செயல் வேறோன்றுமாய் இருக்குமோ அப்பொழுது ஒருவரின் நம்பகத் தன்மை போய்விடும்.

அவர் எத்தனையோ பெரிய பதவிகளை தன் வாழ்நாளில் வகித்தார். அவரின் உதவியாளர் ஸ்ரீஜன் பால் சிங் சமீபத்தில் அவரிடம் என்னவாக உங்களைப் பின்னாளில் மக்கள் உங்களை நினைவில் வைத்திருக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது அவர் ‘ஆசிரியராக’ என்று உடனே பதில் அளித்திருக்கிறார். அது ஒன்றே போதும் அவரின் தன்மையை நமக்கு வெளிக்காட்ட. அவர் தன்னிடம் இருந்த ஞானம் அனைத்தையும் மற்றவர்களிடம் பகிரவே ஆசைப்பட்டார். கொடை வள்ளல். நாளைய தலைமுறையை சிறப்பாக வடிவமைக்க கையில் உளியுடன் செதுக்கவே தன் வாழ்நாளின் பெரும் பகுதியை செலவழித்துள்ளார்.

தமிழ் மொழி தெரிந்தவர்கள் எனில் கண்டிப்பாக அவருடன் தமிழிலேயே உரையாடுவார். தமிழில் பேசும்போது ஆங்கிலக் கலப்பில்லாமல் அவர் உரையாடுவதே ஒரு தனி அழகு. அவர் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியே கிடையாதாம். ஆல் இந்தியா ரேடியோவில் தான் செய்திகள் கேட்பாராம். ஆனால் உடனுக்குடன் ஈமெயில் மட்டும் செக் பண்ணிக் கொள்வாராம். அவர் ட்விட்டரில் இருந்து கொண்டு ஷில்லாங் போவது பற்றிக் கூட கடைசியாக ட்வீட் பண்ணியுள்ளார்.

எந்த அரசியல் பின்புலமும் இல்லை. எந்த பணக்கார, பாரம்பரியம் மிக்கக் குடும்பத்தில் இருந்தும் வரவில்லை, தன் கடமை என்று எதை நினைத்தாரோ அதைப் பழுதின்றி செய்தார். அனைத்து உயரிய விருதுகளையும் பெற்றும் பணிவுக்கு உதாரணமாகத் திகழ்ந்தார். குழந்தை உள்ளம் கொண்டவராக இருந்தார். ஆனாலும் அவர் மறைவுக்கு இந்தியாவே அழுதது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப் பதைபதைக்கும் வெய்யிலிலும் கூடி நின்று, அவரின் நல்லடக்கத்தின் போது நெஞ்சுருக அழுதனர். யாருக்குக் கிடைக்கும் இந்தப் பேரு?

நம் மத்திய அரசும் இராணுவ மரியாதையோடும் சகல ஏற்பாடுகளை செவ்வனே செய்து அவரை நல்ல முறையில் வழியனுப்பியது அனைவர் மனத்துக்கும் ஒரு ஆறுதலைத் தந்தது. முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் ராமேஸ்வரத்துக்கே சென்று இறுதி அஞ்சலி செய்தது அவருக்குரிய மேன்மையை பறைசாற்றியது. மோடியும் தில்லியில் ஒரு முறை, இராமேஸ்வரத்தில் இன்னொரு முறை வந்து அஞ்சலி செலுத்தி ஒரு நல்ல முன் மாதிரியை ஏற்படுத்தியிருக்கிறார்.

கல்யாண சாவு தான். அவர் திருமணம் புரிந்து கொள்ளவில்லை என்பது வேண்டுமானால் அவர் குடும்பத்தாருக்கு ஒரு குறையாக இருக்கலாம். அனால் அதைத் தவிர நிறை வாழ்வே வாழ்ந்தார். அனைவரும் விரும்பும் அனாயாச மரணத்தை இறுதியில் அடைந்தார். ஆயினும் செய்தி கேட்டவுடன் நம் வீட்டில் ஒரு துக்கம் நிகழ்ந்தது போல மனத்தில் சோகம் கவ்வியது ஏன்? இன்னும் அந்த வேதனை விலகவில்லையே. அது தான் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு. அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் சொத்து அவரின் வாழ்க்கை வரலாறு. அதில் உள்ள ஒவ்வொரு பக்கத்தையும் நம் வாழ்நாளில் அனுபவித்து செயல்படுத்துவது தான் அவரின் சொத்தை சரியான முறையில் பயன்படுத்துவதாகும்.

அவருக்கும் அவரின் வாழ்க்கைப் பாடத்துக்கும் நாம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கோம். வாழ்க அவர் புகழ். வளர்க அவர் வகுத்த நன்னெறிகள்!

kalam6

Thanks to @jvs2020 and @paramporul for their photos.

Previous Older Entries