ஆண்டும்மா என்று அன்போடு குடும்பத்தாரால் அழைக்கப்படும் என் மாமியார் அவர் வீட்டில் மூத்த மகள், புகுந்த வீட்டில் மூத்த மருமகள். அவர் ஜபல்பூரில் வளர்ந்தவர். கொஞ்சம் வைதீகமான சென்னை வாழ் குடும்பத்தில் உள்ள ஒருவருக்குத் தனது பதினாறாவது வயதில் வாக்கப்பட்டார். அந்த வீட்டுப் பழக்க வழக்கங்களை அந்த இளம் வயதில்அவர் விரைவில் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. பிறந்த வீடும் புகுந்த வீடும் மக்கள் செல்வம் நிறைந்த வீடுகள். அதனால் சிறு வயது முதலே ரொம்ப பொறுப்பு அதிகம் அவருக்கு. அவர் திருமணமாகிப் போன போது அவர் கடைசி நாத்தனாருக்கு நாலு வயது தான். இந்தத் தலைமுறையில் பலர் பிள்ளை வரம் வேண்டி செயற்கைக் கருத்தரிப்பை நாடும் இவ்வேளையில், இவர் முதல் குழந்தையை உண்டாகியிருந்த சமயத்தில் அவரின் தாயாரும் உண்டாகியிருந்தார். அது ஒரு கனாக் காலம் :-}
சின்ன வயது முதலே பொறுப்பை இயல்பாக ஏற்றுக் கொண்டதனால் அவருக்குக் சுற்றமும் நட்பும் மரியாதையையும் இயல்பாகவே வழங்கியது. அனைத்து நாத்தனார்கள், மைத்துனர்கள் திருமணங்களை முன்னின்று நடத்தியது மட்டுமில்லாமல் அவர்களின் பேறு காலத்திலும் எல்லா விதத்திலேயும் உதவியாக இருப்பார். என் மாமனார் அப்பொழுது மத்திய அரசில் குமாஸ்தா வேலையில் தான் இருந்தார். பின்பு உழைப்பால் படிப்படியாக முன்னேறினார். அந்தக் கால வழக்கப்படி கூட்டுக் குடும்பத்தில் சம்பளத்தை முழுக்க அவரின் அப்பாவிடம் கொடுத்துவிட வேண்டும். தன் கைச்செலவுக்கும், தன் மனைவியின் கைச்செலவுக்கும் டியுஷன் எடுத்து உபரி வருமானம் ஈட்டினார் என் மாமனார். நான்கு குழந்தைகள் பிறந்த பிறகு அவருக்கு பெங்களூருக்கு மாற்றல் ஆகியது. நான்கு குழந்தைகளுடன் பெங்களூருக்குக் குடி போகிறவருக்கு அங்கே குடும்பம் அமைக்க அவரின் அப்பா சொல்ப பணமே கொடுத்தனுப்பினாராம். பெரிய குடும்பம், நடுத்தர வர்க்கம் என்றாலே எப்பொழுதும் பண நெருக்கடி தான்! என் மாமனாரின் வருமானத்தில் நாலு குழந்தைகளுடன் தனிக் குடித்தனமாக இருப்பது சிரமம் என்று இரண்டு பிள்ளைகளை என் மாமியாரின் பெற்றோர், மாமாக்கள் சில வருடங்கள் வளர்த்துள்ளனர்.
பெங்களூரு சென்று சிறிது காலத்திலேயே பெல்காமுக்கு மாமனாருக்கு மாற்றலாகிவிட்டது. பிள்ளைகள் எல்லாரையும் நல்ல பள்ளியிலிருந்து மாற்ற வேண்டாம் என்பதால் என் மாமியார் பெங்களூருவிலேயே தனியாக குடும்பத்தை நிர்வகிக்க என் மாமனார் பெல்காமில் தனியாக வசித்து வந்தார். என் மாமியாருக்கு உதவியாக அவரின் தம்பி குடும்பம் பெங்களூருவுக்கு வந்தது. உறவுகள் உதவுவதற்காக மாற்றல் வாங்கிக் கொண்டு வருவது போன்ற நிகழ்வுகள் இந்த மாதிரி பதிவுகளில் தான் இனி பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். என் கணவரை தன்னம்பிக்கை மிக்கவராக, தமிழில் ஆர்வமுள்ளவராக, பொறியியல் துறையில் சேர்ந்து படிக்க உந்துகோலாக இருந்தவர் இந்த மாமா தான்.
அந்தக் காலத்தில் விசேஷங்களோ துக்கங்களோ ஆள் பலம் அவசியம். ஏனென்றால் வெளியாட்களை நியமித்தால் அவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும். உறவினர்கள் தான் உழைப்பை எந்த பதிலுதவியும் எதிர்பார்க்காமல் செய்வார்கள். அதில் முதன்மையானவர் என் மாமியார். பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டுமே இவரின் தன்னலம் கருதா உழைப்பையே எதிர்பார்த்திருந்தன. எல்லா விசேஷங்களும் இவர் பங்களிப்பினால் மட்டுமே சிறப்படையும். மிகவும் புத்திசாலி. எதையும் திட்டமிட்டு செய்வார். குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையையும் தன் பராமரிப்பினால் நல்ல நிலைக்குக் கொண்டு வந்து விடுவார். எப்படி செலவை குறைத்து நிறைவாக செய்யலாம் என்று தான் பார்ப்பார். என் அத்தை மகள் திருமணத்துக்கு வந்து இவர் ஓடியாடி செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஆனால் என் அத்தை இறந்து விட்டதால் தாயில்லா பெண் கல்யாணம் என்று சீர் சாமான் வாங்குவதில் இருந்து திருமணத்தில் உணவு பரிமாறுவது வரை உதவி செய்தார். அவரின் பிள்ளைகளை மிகவும் நன்றாக வளர்த்துள்ளார். மகன்கள் அனைவரும் வீட்டு வேலைகளை அருமையாக செய்வர். பெண் ஆணென பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் எல்லா வேலைகளிலும் நன்கு பயிற்சி அளிப்பார்.
முதலில் வாழ்க்கையில் சிரமப்பட்டாலும் பிள்ளைகள் எல்லாரும் நல்ல நிலைக்கு வந்த பிறகு அவருக்கு மகிழ்ச்சியான வாழ்வே. அந்த விதத்தில் என் மாமனார் மாமியார் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். உழைப்பின் பயனை அவர்களால் பார்க்க முடிந்தது. என் மாமியார் தன் பள்ளி இறுதி வகுப்பை முடிக்காவிட்டாலும் தன் முயற்சியால் ஆங்கிலம், இந்தி, கன்னடம் கற்றுக் கொண்டு நன்றாகப் பேசுவார். சிறந்தத் தையல் கலை நிபுணர். அமெரிக்காவில் எங்களுடன் வாழ்ந்த போது என் மகளுக்கும் மகனுக்கும் ஹேலோவீன் காஸ்டியும் செய்து கொடுத்திருக்கிறார். {என் மகனுக்கு பேட்மேன், என் மகளுக்கு சின்டரெல்லா.} புது இடங்கள் சுற்றிப் பார்க்க, எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம் அவருக்கு. அமேரிக்கா வந்திருந்த போது என் மாமனார் அமைதியாகப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தால் இவர் டிவியில் எல்லா நிகழ்ச்சிகளையும் பார்த்து எது சுவாரசியமான நிகழ்ச்சி என்றும் என்னிடம் சொல்லிவிடுவார்.
சமையல் அறையை பார்த்தால் சமைக்கும் இடமா என்று தோன்றும். அவ்வளவு துப்புரவாக இருக்கும். ஒரு இடத்தில் எண்ணெய் பிசுக்கு இருக்காது. சமையல் செய்வதை அவர் ஒரு தவமாக மேற்கொள்வார். எது செய்தாலும் அப்படியொரு ருசி! பெரிய குடும்பத்தை நிர்வகித்ததால் இருபது பேருக்கு என்றாலும் அனாயாசமாக சமைத்து விடுவார். ஸ்ரீ ராம ஜெயம் தினமும் எழுதுவார். கையெழுத்து முத்து முத்தாக இருக்கும்.
அவர்களின் ஐம்பதாவது திருமண நாள் விழாவும், மாமனாரின் எண்பதாவது பிறந்த நாளும் விமர்சையாகக் கொண்டாடப் பட்டது. என் மாமனார் இறந்த பிறகு ஒன்பது வருடங்கள் எங்களுடன் இருந்து கொள்ளுப் பேரன்கள், பேத்திகளையும் கொஞ்சி மகிழ்ந்தார். என்பது வயதுக்கு மேல் குளியலறையில் வழுக்கி விழுந்து இடுப்பு ஒடிந்து அறுவை சிகிச்சைக்குப் பின் தன் விடா முயற்சியால் திரும்பவும் நன்றாக நடக்க ஆரம்பித்து 2 கிலோமீட்டர் வரை வாக்கிங் போவார். கடைசி இரண்டு ஆண்டுகளாக dementia வந்து அவரையும் மீறி உடல் நலக் குறைபாட்டினால் அவதிப்பட்டார். ஆனால் அவரின் நல்ல மனசுக்கு அவரின் நான்கு வாரிசுகளும் அவரை கடைசி வரை நன்கு கவனித்துக் கொண்டனர். இறுதி முடிவும் ரொம்ப சிரமப் படாமல் வந்தது.
சேவை மனப்பான்மையோடு கர்ம யோகத்தைக் கடைபிடித்து ஆச்சாரியன் திருவடியை அடைந்த அவருக்கு என் இதயம் கனிந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.