“அப்பா நாங்க திரும்ப அமேரிக்கா திரும்பி போறதுக்குள்ள நிறைய விஷயம் முடிவு பண்ணணும்.”
கிருஷ்ணமூர்த்தி படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் இருந்து நிமிர்ந்து பார்த்தார். இரண்டு மகள்கள் ஒரு மகன் முன்னே நின்று கொண்டிருந்தார்கள். பேசியது வினோத் கடைசிப் பிள்ளை.
“என்ன முடிவு பண்ணனும்?”
கிருஷ்ணமூர்த்தியின் எண்பதாவது பிறந்த நாளுக்காக அவர்கள் வந்திருந்தார்கள். அம்மா இல்லை என்றாலும் முக்கியமான அகவை, கொண்டாட வேண்டும் என்று அவர்கள் பிரியப்பட்டதால் அவரும் ஒத்துக் கொண்டார். பெரிய சடங்காக செய்யாவிட்டாலும் நெருங்கிய சொந்தங்களை அழைத்து விருந்து கொடுத்துப் பிள்ளைகள் அசத்திவிட்டது அவருக்கு ரொம்ப மகிழ்ச்சி. ஒவ்வொருவரும் அழகாக தந்தையைப் பற்றி பேசி விடியோ எல்லாம் தொகுத்து வழங்கி வெளியூரில் இருக்கும் உறவினர்களும் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும்படி இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பி ஹைடெக்காக செய்தது, வந்த உறவினர்களை எல்லாம் என்ன இருந்தாலும் பசங்க அமெரிக்காவில் இருக்காங்க இல்லையா அதான் பிரமாதமா பண்ணிட்டாங்கன்னு பேச வைத்தது.
“அப்பா இந்த வீட்டை இடிச்சு நீங்க இருக்கும்போதே பிளாட் ப்ரொமோட் பண்ணிடலாம்பா. நாங்க எல்லாரும் அமெரிக்காவில் இருக்கோம் எங்களால பொறுப்பு எடுத்து அப்புறம் செய்ய முடியாது. பில்டர்ட கூட பேசிட்டோம். அமெரிக்காவில் என் ப்ரெண்டோட தம்பி இங்கே பெரிய பிளாட் டெவலப்பர். நல்ல டீல் தரான். நாலு பிளாட் நமக்கு நாலு பிளாட் பில்டருக்கு. நம்ம கையை விட்டு ஒரு பைசா செலவழிக்க வேண்டாம்.”
தீர்க்கமாக அவர்களை பார்த்தார் கிருஷ்ணமூர்த்தி. வினோத்துடன் அவன் சகோதரிகள் இசைந்து நிற்பது அவர்கள் முகத்திலேயே தெரிந்தது.
“இது விஸ்வநாதனுக்குத் தெரியுமா? அவன்ட்ட பேசிட்டீங்களா? அவன் என்ன சொல்றான்?”
“அவன்ட்ட என்ன பேசறது? நாங்க சொன்னா அவன் என்ன வேண்டாம்னு சொல்லிடுவானா?”
“ஏன் அவன் தானே என் மூத்த பிள்ளை. அவனையும் தானே நீங்க கலந்து ஆலோசிக்கணும்? அவன் தான் என்னை இன்னிக்கு வரைக்கும் பார்த்துக்கிட்டு இருக்கான். அப்படியே டெவலப் பண்ணணும்னாலும் நான் போனப்புறம் அவன் பார்த்துப் பண்ண மாட்டானா? என்ன அவசரம் இப்போ? நீங்க எல்லாருமே வீடு வாசலோட அமெரிக்காவில் நல்லா தானே இருக்கீங்க?”
“அப்பா விசுக்கு என்ன தெரியும்? அவனை எல்லாரும் ஏமாத்திடுவாங்க.” இது வைஷாலி மூத்த மகள்.
“அவனுக்கு உங்களை மாதிரி படிப்பு வேணா வராம இருக்கலாம். ஆனா அவன் எல்லாத்தையும் பொறுப்பா செய்யறவன் தான். என்ன அவனுக்கு என்னமோ அதிர்ஷ்டம் இல்லை. வியாபாரம் ஓஹோன்னு வரலை. பொண்டாட்டியும் கோச்சுக்கிட்டு போயிட்டா, குழந்தையும் இல்லை. ஆனா அவனை ஏமாளின்னு சொல்லாதீங்க.
இப்போ ஒன்னும் இடிச்சு கட்ட வேண்டாம். நான் எல்லா விவரத்தையும் உயில்ல எழுதி வெச்சிருக்கேன்.”
“வில்லு எழுதியாச்சா? என்ன எழுதியிருக்கீங்க?”
“அது நான் போனப்புறம் தெரியும். வக்கீல் ரங்கசாமி கிட்ட கொடுத்து வெச்சிருக்கேன்.”
மூவரும் அவசரமாக அறையை விட்டு வெளியே வந்தனர். அப்பா காதில் விழும் தூரம் தாண்டியதும் ரெண்டாவது மகள் விமலா “பார்த்தியா இந்த விசு ஊமைக் கோட்டானாட்டம் இருந்துக்கிட்டு அப்பாவை உயில் எல்லாம் எழுத வெச்சிருக்கான். ஒரு வேளை அப்பா வீட்டை அவன் பேருக்கே எழுதி வெச்சிருப்பாரோ?”
குசுகுசுவென்று கொஞ்ச நேர கூட்டு உரையாடலுக்குப் பின் மூவரும் திரும்ப அப்பாவின் அறைக்குச் சென்றார்கள். “உயில் எழுதி வெச்சிருக்கேன்னு சொல்றிங்களே அப்போ எப்படி போகணும்னு எல்லாம் எழுதி வெச்சிருகீங்களா?”
“என்னது எப்படி போகணுமா?”
இல்லை வீட்டில போகனுமா இல்லை ஆஸ்பத்திரியிலா? வீட்டுல தானான்னு நீ நெனச்சா ஒரு ஸ்டேஜ்ல ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருந்தா கூட வீட்டுக்கு உங்களை கொண்டு வந்திடுனும்.” விஷாலி விளக்கம் கொடுத்தாள்.
“சப்போஸ் உங்களுக்கு உடம்பு சீரியஸ் ஆகி வெண்டிலேடர்ல போடறா மாதிரி ஆகிட்டுதுன்னா போடனுமா வேண்டாமா? அப்படியே டாக்டர்கள் போட்டுட்டா எப்போ எடுக்கணும்னு இதெல்லாம் நீங்க எழுதி வெச்சுட்டா தேவலை. அம்மாக்கு முடிவு பண்ண நீங்க இருந்தீங்க. உங்களுக்கு என்ன பண்ணும்னு நாங்க தெரிஞ்சிக்கணும் இல்லையா? இதெல்லாம் அமெரிக்காவுல ரொம்ப சகஜம். இப்போ மூளைச்சாவு ஏற்பட்டா ஆர்கன் டொனேஷன் நிறைய பேர் பண்றாங்க. உடம்பையே கூட தானமா கொடுத்துடலாம். நீங்க என்ன நினைக்கறீங்க?” இது விமலா.
சிவ சிவா என்று ஆயாசமாக சொன்னார் கிருஷ்ணமூர்த்தி. “எனக்கு கேடராக்ட் ஆபரேஷன் செஞ்ச டாக்டரிடமே என் கண் தானம் பத்தி எழுதி கொடுத்திருக்கேன் விமலா. உடல் தானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் இன்னும் பழைய நம்பிக்கைகள்ல ஊறியிருக்கேன். அப்படி ஒரு வேளை நான் அனாதைப் பொணமா போகனும்னு தலையில் எழுதியிருந்தா அதை யாராலும் மாத்த முடியாது. நல்ல சாவுன்னு எனக்கிருந்தா விசு என்னை இழுத்துப் போட்டிடுவான். அப்படி வெண்டிலேடர்ல என்னை போட்டுட்டாங்கன்னா அவனுக்குத் தெரியும் எப்போ பிளக்கை புடுங்கனும்னு, நான் எதுவும் எழுதி வைக்கத் தேவையில்லை.”
“அப்பா என்ன நீங்க எங்களை தப்ப புரிஞ்சுக்கறீங்க. இதெல்லாம் அமெரிக்காவில் தெளிவா எழுதி வெச்சிடுவாங்க. அந்த ஊர்ல அவங்க கடைப்பிடிக்கிற சில நல்ல விஷயங்களை நாமளும் கடைபிடிச்சா நல்லது தானே? இதுலலாம் செண்டிமெண்ட் பார்க்கனுமா? நீங்க வேணா புதுசா இன்னொரு உயில் எழுதுங்களேன். உங்களோட வக்கீல் கிட்ட வந்து எல்லாத்தையும் முடிச்சுக் கொடுத்துட்டு அப்புறம் ஊருக்குக் கிளம்பறோம்”
உயிலில் எழுதப்பட்டிருப்பது என்னனு தெரிஞ்சிக்க ரொம்ப ஆவலா அவர்கள் இருப்பது கிருஷ்ணமூர்த்திக்குப் புரிந்தது. மூணு நாலு கோடி ரூபாய் சொத்துக்குப் பங்கு பிரிப்பதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து வேதனையாக இருந்தது அவருக்கு. பிள்ளைகளை இப்படியா வளர்த்திருக்கோம் என்று நொந்து கொண்டார்.
மாலையில் விசு தன்னுடைய கணினி பழுது பார்க்கும் கடையை மூடிவிட்டு வந்தபோது சகோதர சகோதரிகள் அவனுடன் சரியாகப் பேசாதது கண்டு அப்பாவிடம் வந்தான். “என்னப்பா யாருமே சரியா பேசலை, ஏதாவது பிரச்சினையா? இன்னும் ரெண்டு நாள்ல கிளம்பிடுவாங்களே. ஏதாவது வாங்கி பேக் பண்ணனும்னா நான் ஹெல்ப் பண்ணலாமேன்னு கேட்டேன். யாருமே சரியா பதில் சொல்லலை” என்றான்.
“ஒண்ணுமில்லை, விடுடா, அவங்கவங்க வேணுங்கறதை வாங்கி பேக் பண்ணிப்பாங்க. சின்ன குழந்தைங்களா என்ன? நீ போய் உன் வேலையைப் பாரு” என்றார்.
இரவு உணவு உண்ணும்போதும் மௌனமாகவே கழிந்தது. விஸ்வநாதனுக்கு வருத்தமாக இருந்தது. அவனுக்கு விமலாவுடன் நெருக்கம் அதிகம். “என்ன விமலா எல்லாரும் பேசாம இருக்கீங்க? மனசுக்கு வருத்தமா இருக்கு. அப்பாவோட ஏதாவது வாக்குவாதம் ஆச்சா? அவர் முகமும் வாடியிருக்கு” என்று கேட்டான்.
“ம்க்கும், ரொம்ப அக்கறை தான் போ உனக்கு. அப்பா உயில் எல்லாம் எழுதி வெச்சிருக்காரு. ஒரு வார்த்தை எங்களிடம் சொன்னியா?” என்றாள்.
“என்னது? அப்பா உயில் எழுதி வெச்சிருக்காரா? எனக்கே தெரியாதே. அப்படியே எழுதி வெச்சாலும் நல்லது தானே, நாம நாலு பேரு இருக்கோம், பிரச்சினை வேண்டாம்னு அப்பா விவரமா எழுதியிருப்பார். அப்பாக்கு எப்பவுமே எதையும் நியாயமா பண்ணனும்னு விருப்பம் தானே? என்றான் வெகுளியாக.
“நாங்க வீட்டை இடிச்சு பிளாட் பிரமோட் பண்ணலாம்னு சொன்னோம். அப்பா அதுக்கு ஒத்துக்கலை.” என்றாள்.
“ஏன் விமலா அதுக்கு இப்போ என்ன அவசரம்? அம்மா இருந்த வீடு இது. இன்னும் அம்மா இங்கேயே இருக்கிறா மாதிரி தான் நானும் அப்பாவும் நினச்சிக்கிட்டு இருக்கோம். அப்பா காலத்துக்குப் பின்னாடி அதெல்லாம் பண்ணலாமே. இப்படியா அப்பாக்கிட்ட பேசுவீங்க?”
“ஆமாண்டா உனக்கென்ன? ஓசில அப்பாவோட இருந்துக்கிட்டு இருக்க. அப்பா போனப்புறம் வீட்டை காலி பண்ணுவியோ மாட்டியோ. நாங்க அமெரிக்காவுல உக்காந்துக்கிட்டு உன்னை கிளப்பவா முடியும்?
விதிர்விதித்துப் போய்விட்டான் விசு. இவர்கள் வரும் முன் வீட்டை ஒழுங்கு படுத்தி, ஒவ்வொருவர் வரும்போதும் விமான நிலையத்துக்குப் போய் தேவுடு காத்து அழைத்து வந்து, வேண்டிய இடத்துக்கு எல்லாம் கூட்டிப் போய், அதிக எடையினால் எடுத்துப் போக முடியாத சாமான்களை எல்லாம் போஸ்ட் ஆபிஸ் போய் தனியாக பார்செல் கட்டி அனுப்பி, ஒவ்வொரு முறை இவர்கள் எல்லாரும் வந்து போகும் போதும் ஒரு கல்யாணம் நடத்தி முடித்த ஆயாசத்தை எல்லாம் பொருட்படுத்தாது அன்புடன் செய்து வந்த அவனுக்கு இந்தப் பேச்சு முகத்தில் அறைந்தார் போல் இருந்தது. அதுவும் அம்மா இருக்கும்போது அம்மா தனியாக பலகாரம், பணியாரம், ஊறுகாய், பொடி வகைகள் என்று தனியாக செய்து கொடுப்பாள். அதையெல்லாம் கட்டி அனுப்புவதும் இவன் பொறுப்பு தான். இதையெல்லாம் வேலையாக நினைக்காமல் ஆசையா செய்தும் இவர்கள் எண்ணம் இப்படி உள்ளதே என்று அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அதுவும் தனக்குக் குழந்தைகள் இல்லாததால் அவர்களின் குழந்தைகளின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தான் விசு. இவ்வளவு செய்யும் அவனுக்கு அவர்கள் சேலில் வாங்கிய டி ஷர்டையோ ஒரு கைக் கடிகாரத்தையோ பெரிய பரிசுப் பொருளாக கொடுப்பார்கள் தங்கைகளும் தம்பியும். இவன் கடையில் வேலை பார்க்கும் மெக்கானிக்குகள் கூட போன் மாடல் சொன்னா வாங்கி வருவார்களா என்று கேட்பார்கள். இவன் தட்டிக் கழித்து விடுவான், எதற்கு அவர்களுக்குத் தொந்தரவு என்று! கேட்டாலும் வாங்கி வர மாட்டார்கள் என்பதை அவன் உள்ளுணர்வு சொல்லியிருக்கும்.
இரவில் எப்பவும் போல அப்பாவின் அறையில் அப்பாவுக்குப் பக்கத்தில் படுத்துக் கொண்டான் விசு. “ஏதாவது வேணுமாப்பா?” ஒரு நீண்ட பெருமூச்சு பதிலாக வந்தது. போர்த்தி விட்டுவிட்டு பக்கத்து கட்டிலில் படுத்துக் கொண்டான்.
எதோ சத்தம் கேட்டு முழிப்பு வந்தது. ஹாலில் வினோத் போனில் உரக்க பேசுவது காதில் விழுந்தது. அதற்குள் அப்பா “எனக்கு தொண்டை வறட்சியா இருக்கு கொஞ்சம் தண்ணி கொடேன்” என்றார். பக்கத்தில் இருந்த செம்பில் இருந்து டம்ளரில் ஊற்றி அவரிடம் கொடுத்தான்.
“நீயே என் வாயில் விடு நான் எழுந்திருக்கலை” என்றார்.
என்ன இப்படி சொல்கிறாரே என்று தண்ணீரை வாயில் ஒரு மடக்கு விட்டான், கொஞ்சம் உள்ளே போனது மீதி வழிந்தது. வேகமாக எழுந்து விளக்கைப் போட்டான். அப்பா கண் மூடியிருந்தார். நாடிப் பார்த்தான் இல்லை. நெஞ்சை பலமுறை அழுத்தி விட்டான் ஆனால் மூச்சு திரும்ப வரவில்லை.
அறைக்கு வெளியே வந்தவனிடம் விஷாலி “டேய் வினோத் பையன் விகாஸ் காலேஜ்லேந்து ப்ரென்ட் வீட்டுக்குப் போகும்போது பெரிய கார் ஆக்சிடன்ட்ல மாட்டி நினைவில்லாம ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்திருக்காங்க. பிரெயின் டெட்டா இருக்க வாய்ப்பிருக்குன்னு டாக்டர்கள் சொல்றாங்களாம். இப்ப தான் ஜெயந்தி போன் பண்ணினா.” என்று கதறினாள்.
“அவன் ஆர்கன் டோனர் என்பதால வினோத் வர வரைக்கும் லைப் சப்போர்ட் சிஸ்டத்துல வெச்சுட்டு அவன் வந்தப்புறம் ஆர்கன்லாம் எடுத்துட்டு அதுக்கு அப்புறம் அவனுக்கு நாம விடை கொடுக்கலாம்னு சொல்றாங்களாம்.” என்றால் விமலா.
அழவும் திராணி இல்லாமல் உட்கார்ந்திருந்தான் வினோத்திடம் வந்தான் விசு.
“ஒன்னும் கவலைப்படாதே விகாசுக்கு சரியாகிவிடும். கொஞ்சம் பொறுமையா இரு. நல்ல சேதி வரும்.” என்றான்.
“எப்படி சொல்ற நீ?” நிமிர்ந்து பார்த்தான் வினோத்.
“அப்பா போயிட்டார் டா, இப்ப தான். விகாஸ் பொழைச்சிடுவான், அவனை அப்பா காப்பாத்திடுவார். எனக்கு நம்பிக்கை இருக்கு. நான் ஆக வேண்டிய காரியத்தைப் பார்த்துக்கறேன். நீ எது அடுத்த ப்ளைட்டோ அதில் கிளம்பிப் போ.” என்றான். விஷாலியும் விமலாவும் அப்பாவின் அறைக்குள் ஓட வினோத் விசுவைக் கட்டிக் கொண்டான்.
“இல்லை விசு நான் இருக்கேன். அப்பா காரியம் ஆன பிறகு கிளம்பறேன். நிச்சயமா விகாஸ் பொழைச்சிடுவான். நீ சொன்ன வார்த்தையை நான் நம்பறேன். கஷ்டம்னு வரும்போது தான் தெரியுது உறவு எவ்வளவு முக்கியம்னு. என்னை மன்னிச்சுடு விசு” என்றுக் கட்டிப்பிடித்து அழுதான் வினோத்.
அறைக்குள் சென்ற சகோதரிகள், அப்பா நாங்க பேசினது தப்பு தான் பா. இப்படி சொல் பொறுக்காம உடனே எங்களை விட்டுட்டுப் போயிட்டீங்களே என்று அழுவது விசுவின் காதில் விழுந்தது. கொஞ்சம் தாமதம் தான். ஆனா அப்பா மன்னித்து விடுவார் என்று நினைத்துக் கொண்டான்.
photo courtesy: https://www.dreamstime.com/stock-images-old-indian-man-senior-citizen-closeup-shot-isolated-against-white-background-image29737264