வெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்

இரண்டு நகைச்சுவை நடிகர்களை வைத்து ஒரு தொடர் கடத்தல் கொலை மர்ம படத்தை தந்துள்ளார் அறிமுக இயக்குநர் விவேக் இளங்கோவன். நடிகர்கள் விவேக், சார்லி இருவருமே கே.பியின் மாணவர்கள். அவர் பட்டறையில் இருந்து வந்தவர்களுக்கு எவ்வகை நடிப்பும் எளிதாக வரும். திரைக்கதை ஆசிரியர்களும்(விவேக் இளங்கோவன், ஷண்முக பாரதி) இயக்குநர் விவேக் இளங்கோவனும் அவர்கள் இருவரையும் நன்றாக பயன்படுத்திக் கொண்டு ஒரு தரமான அதே சமயம் வித்தியாசமான படத்தை தந்திருக்கிறார்கள்.

99% கதை நடப்பது சியாட்டில், அமெரிக்காவில். மிக சமீபத்தில் ஓய்வுபெற்ற கொலை வழக்குகளை துல்லியமாக துப்பறிந்து கொலையாளியை கண்டுபிடிக்கும் திறன் உள்ள போலிஸ் அதிகாரியாக விவேக் வருகிறார். மிகைபடாத நடிப்பு. நகைச்சுவை நடிகராக நடிக்கும்போது வரும் உடல்மொழிகள் இன்றி நல்ல ஒரு குணச்சித்திர பாத்திரத்தின் தன்மை புரிந்து நடித்துள்ளார். சுறுசுறுப்பாக வேலை செய்து வந்த அவர் மகன் வீட்டில் போரடித்துக் கொண்டு நடமாடுவது முதல் கடத்தப்பட்ட மகனின் நிலை பற்றி அனுமானித்து உடைந்து அழும் வரை எல்லா உணர்ச்சிகளும் கச்சிதமான வெளிப்பாடு. அவருக்குத் துணை பாத்திரமாக சார்லி. பிள்ளைகளுக்காக அமேரிக்கா செல்லும் பெற்றோர்கள் எப்படி இருப்பார்களோ அப்படியே யதார்த்தமாக இருக்கிறது சார்லி, அவர் மனைவி மற்றும் விவேக்கின் பாத்திரப்படைப்புகள்.

அதேபோல சார்லி மகள் (பூஜா தேவரியா) மற்றும் விவேக் மகன் மற்றும் மருமகள் பாத்திரங்களும் இயல்பாக நாடகத்தனம் இல்லாமல் உள்ளன. இந்தக்கதையில் ஓர் இழை குழந்தைகளின் பாலியல் வன்முறை தொடர்பாக அமெரிக்க பாத்திரங்களின் வாயிலாக தொடர்ந்து வருகிறது. அதில் சிறு பெண்ணாக நடித்திருக்கும் சிறுமியின் நடிப்பு மிக அருமை. மனத்தைப் பிழியும் இழை. அந்த இழை கடைசியில் எப்படி மெயின் கதையோடு ஒட்டுகிறது என்பது நல்ல சஸ்பென்ஸ்.

விவேக் தன் மகன் வீட்டிற்கு வந்த இடத்தில் பக்கத்து வீட்டு பெண் கடத்தப் படுவதும் அந்தப் பகுதி சிறுவனும் கடத்தப் படுவதும் நடக்கிறது. அதைப் பார்த்து துப்பறியும் தன்மை உடலோடு கலந்திருப்பதால் விவேக்கும் அமெரிக்க போலிசுக்கு இணையாக துப்பறிய தொடங்குகிறார். அவர் தனியாக ஒவ்வொரு இடத்துக்கும் செல்லாமல் துணைக்கு தன் மகனின் அலுவலக தோழி பூஜா தேவரியாவின் அப்பாவான சார்லியையும் துணைக்கு அழைத்துக் கொண்டு சந்தேகங்களை தெளிவு படுத்திக் கொள்ளவும் குற்றவாளியை கண்டுபிடிக்கவும் முயற்சிகள் எடுக்கிறார். இவ்விரு பாத்திரங்களே படம் முழுவதும் தொடர்ந்து வருவதாலும் வசனங்கள் நிறைய இருப்பதாலும் கொஞ்சம் அலுப்புத் தட்டுகிறது. படம் ஓடும் நேரம் இரண்டு மணி தான் என்றாலும் மிக நீண்ட நேரம் போலத் தோன்றுகிறது.

இந்தக் கதை அமெரிக்க படங்களில் அதிகம் காணப்படும் மனோதத்துவ ரீதியான த்ரில்லர் படம். படம் எடுத்திருப்பது அமேரிக்கா வாழ் தமிழர்கள் திகா சேகரன், வருண் குமார், அஜய் சம்பத். அமெரிக்காவில் வாழ்பவர்களுக்கு இந்தக் கதைக் களம் எளிதாக புரியவும் ஏற்றுக் கொள்ளவும் முடியும். நமக்கும் ஒன்றும் கஷ்டமில்லை. ஆனால் இந்த மாதிரி ஒரு பாத்திரத்துக்கு இள வயதில் உண்டாகும் கொடுமையான நிகழ்வுகளால் வளர்ந்த பிறகு ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி ஆவதும் பழி வாங்க பலரை கொல்வதும் நம்மூர்களில் அவ்வளவாக நடப்பதில்லை.

விவேக்கின் அமெரிக்க மருமகளாக வரும் பெய்ஜ் ஹென்டர்சன் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். விவேக்கின் அன்பை பெற அவர் ஆசைப்படுவதும் முதலில் விவேக் அவரை உதாசீனப் படுத்துவதும் பின்பு சார்லியின் அறிவுரையின் பேரில் விவேக் மாறி அன்பை செலுத்த ஆரம்பிக்கத் தொடங்கும் போது வேறு பல நிகழ்வுகளால் உண்டாகும் உணர்ச்சிகளை அவர் நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

அமெரிக்க வாழ் இந்தியர்களே இந்தப் படத்தை எடுத்திருப்பதால் அமெரிக்க வாழ்க்கை பற்றிய தவறான சித்தரிப்பு இல்லாமலும் செயற்கைத் தனம் இல்லாமலும் உள்ளது. ஒளிப்பதிவாளர் ஜெரால்ட் பீட்டர் கண்ணுக்கு விருந்தாக சியாட்டில் நகரத்தை படமாக்கியிருக்கிறார். பாடல்கள் பின்னணியில் ஒலிக்கின்றன. அதில் பொற்றாமரை பாடலில் எஸ்பிபி குரல் தேவ கானமாக ஒலிக்கிறது. பின்னணி இசை த்ரில்லர் படத்துக்கு சரியானதாக உள்ளது. இசை அமைத்திருப்பவர் ராம்கோபால் க்ரிஷ்ணராஜூ.

நல்ல முயற்சி. த்ரில்லர் படம். மெஸ்சேஜ் என்று தனியாக எதுவும் எந்தப் பாத்திரமும் உரைப்பதில்லை. ஆனால் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை பற்றி ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படும் இப்படத்தைப் பார்க்கையில். பெற்றோராக படம் பார்ப்பவர் இருப்பின் குழந்தைகள் வளர்ப்பில் கண்ணும் கருத்துமாக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உறைக்கும்.

பேரன்பு – திரை விமர்சனம்

தங்க மீன்கள் படத்துக்குப் பிறகு அடுத்த லெவலில் படம் தந்துள்ளார் ராம். தங்க மீன்கள் சாதனா தான் இதிலும் மாற்றுத் திறனாளியாக ஸ்பாஸ்டிக் குழந்தையாக நடித்துள்ளார். அந்தக் குழந்தையை பதின்ம பருவத்தில் தன் பொறுப்பில் தனியாக வளர்க்க வேண்டிய சூழ்நிலையில் அப்பாவான மம்முட்டி. இந்த மாதிரி கதையை படமாக்க நிறைய நிறைய ஹோம்வர்க் செய்ய வேண்டும். அதை செவ்வனே செய்திருக்கிறார் ராம். ஒரு நல்ல சமூக கருத்தை திரைக்கதை வடிவாக நம் முன் வைக்க சினிமா எனும் ஊடகத்தின் மேல் passion இருக்க வேண்டும். அதுவே ராமின் வெற்றி.

நிறைய சம்பவங்கள் நிறைந்த திரைக்கதை. பத்து அத்தியாயங்கலில் விவரிக்கிறார், விவரிப்பது மம்முட்டி. படத்தின் பெரும்பகுதி திக் திக்கென்றே இருந்தது. ஏனென்றால் பதின்ம வயதுப் பெண்ணை (பாப்பா) தனியாக பாதுகாக்கிறார் (அமுதவன்) மம்முட்டி. பாப்பா தனியாக பல சமயங்களில் இருக்க வேண்டிய சூழல், நம் ஆண்களின் போக்கும் நமக்கு தெரிந்ததே. ஒவ்வொரு சூழலிலும் அவள் பேராபத்தில் விழாமல் இருக்க வேண்டுமே என்று பார்ப்பவரை பதைபதைக்க வைக்கும் படம் பேரன்பு.

படத்துவக்கம் மகள் அப்பாவிடம் திணிக்கப் படுவதுடன் ஆரம்பிக்கிறது. அம்மா குடும்ப அழுத்தம் தாளாமல் வேறொருவருடன் போய்விடுகிறார். அதற்கு மம்முட்டியும் ஒரு காரணம். 12 வயது வரை பெண்ணைப் பற்றிய பொறுப்பில்லாமல் இருந்ததற்கு தனி ஒரு ஆளாக திடீரென்று மகளை பேணி காக்க வேண்டிய நிர்பந்தம். ஆனாலும் மகள் தந்தை பாசம் மெதுவாக ஆரம்பித்து அழுத்தமாக வளர்ந்து எவ்வளவோ சிரமத்திலும் மகளை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள அவர் செய்யும் செயல்கள் ஒன்பது அத்தியாயங்களில் விரிகிறது. அவை புது யுகத்தவையும் கூட.

படத்தில் மிகவும் பிடித்தது அமைதியாக செல்லும் திரைக் கதை தான். அதுவும் முதல் பாதி எதோ ஒரு மலைப் பிரதேசத்தில் யாரும் இல்லாத அத்துவான காட்டில் அமைந்த அழகிய வீடும், நதியும், பரிசலும் கவிதையாக உள்ளது. ஆனால் கவிதை சோகம் இழையோடியது, மிகவும் சிக்கலான ஒரு செரிபரல் பால்சியால் பாதிக்கப்பட்ட பெண்ணை சுற்றிய கதை என்பதால். அவள் வயதுக்கு வருவதும், திகைத்துத் தடுமாறிய தந்தை, ஆனால் அடுத்து செய்ய வேண்டியவற்றுக்கு உதவி தேடி அழைத்து வந்து, இன்னொரு சமயத்தில் அவளே தான் ஒரு பெண் என்பதை உணர்ந்து அப்பாவிடம் சேனிடரி பேட் மாற்றிக் கொள்ள தயங்கி தன்னாலும் செய்து கொள்ள முடியாமல் கஷ்டப்பட்டு, ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உதவி பெற வைத்து என்று இதுவரை சினிமாவில் கையாளப்படாத சென்சிடிவ் ஆன விஷயங்களை நாகரீகமாக சொல்லி இயக்கியுள்ளார் ராம். அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்துள்ளார் மம்முட்டி. பல சமயங்களில் ஒரு நடிகரை அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்டார் என்று சொல்லுவோம். இதில் நான் மம்முட்டியை பார்க்கவே இல்லை. பாப்பாவின் அப்பா மட்டுமே என் கண்ணுக்குத் தெரிந்தார்.

அமைதியான மலைப் பிரதேசத்தில் இருந்து ஏமாற்றப்பட்டு கொஞ்சம் முன்னேற்றம் அடைந்த நிலையில் இருந்த மகளுடன் மம்முட்டி வேலைத் தேடி நகரத்துக்கு வந்து அங்கு சீப்பான விடுதிகளில் தங்கும் நிலைமையிலும், அடுத்தடுத்து காப்பகம், நண்பர் என்று உதவி கேட்டு தடுமாறி, ஓடிப்போன மனைவியின் வீட்டுக்கே சென்று மகளை அவர் பார்த்துக் கொள்ள மாட்டாரா என்று பரிதவிக்கும் நிலைக்கு ஆளாகி கடைசியில் என்ன மாதிரி முடிகிறது கதை என்பதை கண்டிப்பாக வெள்ளித் திரையில் காணவேண்டும். அற்புதமாக கோர்வையாக கதையை நகர்த்தி செல்கிறார் இயக்குநர். அருமையான வசனங்கள்.

அஞ்சலியின் பத்திரம் சிறிதே எனினும் மனத்தில் நிற்கிறார். அஞ்சலி அமீர் என்னும் திருநங்கையும் கதைக்கு நல்ல திருப்பம், நல்ல மெஸ்சேஜ். யுவன் சங்கர் ராஜாவின் இசை மிக நன்று. முக்கியமாக பின்னணி இசை தான். பாடல்கள் மனத்தில் நிற்கவில்லை. அனால் இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தால் இப்படம் ஓர் உன்னத காவியமாகி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஸ்ரீகர் பிராசாத்தின் படத்தொகுப்பு அற்புதம். தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு அதைவிட அருமை.

மிகவும் கடினமான கதை. இந்த மாதிரி மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தேவைகளை சரியாக பூர்த்தி செய்ய முடியாத நிலையில் ஓர் அப்பாவாக மம்முட்டி படும் வேதனை பல இடங்களில் நம்மை அழ வைக்கிறது. செரிபரல் பால்சி வந்த பெண்ணாக சாதனா எப்படி தான் நடித்தாரோ தெரியவில்லை. மிக மிக கடினமான உழைப்பு. ராம், மம்முட்டி, சாதனா அனைவருக்குமே விருது கிடைக்கவேண்டிய அளவு உழைப்பு உள்ளது.

பல சமயங்களில் மிக மெதுவாக செல்லும் திரைக்கதை படத்தின் பலவீனம். அவ்விடங்களில் தான் இது ஒரு ஆர்ட் பில்ம் என்று எண்ண வைக்கிறது. கதையே இல்லாமல் வரும் படங்களின் நடுவே நெகிழவைக்கும் கதையுடன் ஒரு நல்ல படம் இது.

விஸ்வாசம் – திரை விமர்சனம்

ஒன்றரை வருடத்துக்குப் பிறகு வரும் அஜித் படம். ஏக எதிர்ப்பார்ப்பு அவரின் ரசிகர்களுக்கு! ரசிகர்களை கட்டிப் போடும் மாஸ் ஹீரோக்கள் நல்ல அறிவுரையை தரும் படங்களை தருவது அந்த ரசிகர்களை நிச்சயம் சிந்திக்க வைக்கும். அந்த முறையில் இந்தப் படம் பாராட்டுக்குரியது. மற்றபடி முன் பாதி கதையமைப்பில் புதுமை இல்லை. பின்பாதி படத்தை காப்பாற்றுகிறது.

அஜித்துக்கு எப்பவுமே ஸ்டேஜ் ப்ரெசென்ஸ் அதிகம். அது இந்தப் படத்திலும் அவருக்கு அருமையாக கை கொடுக்கிறது. வந்து நின்றாலே களை கட்டுகிறது. நயன்தாரா அவரின் ஜோடி நல்ல பொருத்தம். பெரிய ரோல் அவருக்கும். பொருந்தி நடித்துள்ளார்.

சின்ன கிராமத்தில் பெரிய ஆளாக இருப்பவர் அஜித் குமார். அடிதடி காட்டி அசத்தல் மன்னனாக வருகிறார். மருத்துவ முகாமுக்கு வரும் மும்பைவாசி மருத்துவர் நயன்தாரா எப்படியோ அந்த வெள்ளந்தி உள்ளத்தால் கவரப்பட்டு அவர் மூன்றாம் கிளாஸ் பெயில், சுட்டுப் போட்டாலும் ஆங்கிலம் வராது, சண்டை போடுவது அவருக்கு ஹாபி என்று தெரிந்தும் காதலில் விழுந்து, அஜித் தான் அவருக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்று சொல்லியும் அவரை முழு மனதோடு திருமணம் புரிகிறார். அதன் பின் ஒரு சின்ன விஷயத்துக்காக பிஞ்சு மகளோடு பிரிந்து மும்பைக்கே போய்விடுகிறார். அது பாத்திரத் தன்மையில் நெருடுகிறது. எப்பொழுதுமே ஒருவரின் நடிப்பு கதையமைப்பின் அம்சத்தை ஒட்டியே நன்றாகவோ சுமாராகவோ இருக்கும். இதில் நயன்தாராவின் பின் பாதியில் வரும் அவர் நடிப்பு சற்றே ஒட்டாத தன்மையுடன் இருப்பதற்குக் கதையில் உள்ள குறையே காரணம்.

அஜித்துக்கு முதலில் இருந்து கடைசி வரை ஒரே பாத்திரத் தன்மையோடு பிறழ்வு ஏதும் ஏற்படாத வகையில் கதையமைப்பு இருப்பதாலும் குடும்பப் பாத்திரங்களில் குடும்பத் தலைவராகவோ அல்லது ஒரு பெண்ணுக்குத் தந்தையாக வருவதோ அவருக்கு இயல்பாகவே சிறப்பாக வருவதாலும் படம் முழுவதுமே அவர் பங்களிப்பு மிகவும் அருமையாக உள்ளது. வேட்டியில் அம்சமாக இருப்பவர்கள் பொதுவில் மலையாள நடிகர்கள் தான். தமிழ் சினிமாவில் அஜித் என்று சொல்லலாம்.

என்னை அறிந்தால் படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா இந்தப் படத்திலும் அவர் மகளாக நடிக்கிறார். பாத்திர வயதுக்குக் கொஞ்சம் அதிக வளர்ச்சியாக இருந்தாலும் சிறப்பான நடிப்பு. மகள் தந்தை உறவின் பாசம் இருவரிடமும் வெகு அழகாக வெளிப்படுகிறது. அந்தப் பகுதி மட்டும் அப்ழைய படத்தின் தொடர்ச்சிப் போல தோன்றுகிறது. பலவித உணர்சிகளை அனிகா காட்ட அவர் பாத்திரம் உதவுகிறது. குறைவின்றி செய்திருக்கிறார்.

இந்தப் படத்தை இரண்டு மணி நேரத்தில் முடித்திருக்கலாம். படம் இன்னும் நன்றாக வந்திருக்கும். இப்படத்தில் தேவையில்லாதவைகள – அட்லீஸ்ட் இரண்டு பாடல்கள், விவேக், கோவை சரளா பாத்திரங்கள, தம்பி ராமையாவும் அஜித்தும் காமெடி என்று நினைத்து செய்யும் சேட்டைகள்! அஜித்தும் நயன்தாராவும் காதலிக்கக் காட்டப்படும் திரைக் கதையும் பிரிய சொல்லப்படும் காரணங்களும் கொஞ்சம் புதுமையாகவும் நம்பத் தகுந்தபடியும் மாற்றியமைத்திருந்தால் படத்தின் பலம் கூடியிருக்கும். முதல் பாதி ரொம்ப அலுப்புத் தட்டுகிறது. ஆனால் பின் பாதியில் பிரிந்தவர்கள் சேரும் இடம் வெகு இயற்கையாக அமைவது ஆறுதல்.

ஸ்டன்ட் காட்சிகள் மிகவும் நன்றாக அமைக்கப்பட்டிருக்கு. அஜித் செய்யும் சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாகவும் போரடிக்காமலும் உள்ளன. கிராமப்புறங்களை காட்டும்போது ஒளிப்பதிவு அற்புதமாக இருக்கிறது. படத்தின் பலம் ஒளிப்பதிவாளர் வெற்றி. திருவிழா காட்சிகளில் வண்ணங்கள் கூட்டி கண்களுக்கு விருந்து படைக்கிறார். அதேபோல ரூபனின் எடிட்டிங்க் பாடல்களிலும் சண்டைக்காட்சிகளிலும் அருமையாக தொகுத்துள்ளார். D.இமானின் இசையில் கண்ணான கண்ணே அருமை, பின்னணி இசை நன்று.

இந்தப் படத்தின் பெரிய ப்ளஸ் இது ஒரு குடும்பப் படம். குடும்ப வேல்யு சிஸ்டம் பற்றி நன்றாக சொல்கிறது. பெற்றோர் பிரிவதால் அவஸ்தைப் படுவது பிள்ளைகள் தாம். இப்பொழுது பல குடும்பங்களில் இதை நிறைய பார்க்க முடிகிறது. அதனை சரியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிவா. அம்மா தரும் அன்பும் அப்பா தரும் பாதுகாப்பும் ஒரு குழந்தைக்கு எல்லா வயதிலும் தேவை. அதே போல் அம்மாவிடம் சண்டைப் போட்டவர்கள் வாழ்க்கையில் முன்னேறியதே இல்லை என்பது போன்ற கருத்துகளை அஜித் சொல்வது அவர் படத்தை விரும்பிப் பார்க்கும் இளம் வயதினருக்கு ஒரு நல்ல படிப்பினையாக அமையும். வசனங்களில் நல்ல கவனம் செலுத்தியிருக்கிறார் சிவா. கண்களை ஈரமாக்கும் காட்சிகள் படத்தில் உள்ளன.

அஜித்துக்கு இது ஒரு நல்ல படம். ஆனால் அடுத்த முறை இன்னும் சிறப்பான கதையம்சத்தைத் தேர்ந்தெடுத்து இன்னும் சிறப்பான விருந்தை அவர் ரசிகர்களுக்கும் மற்றவர்களுக்கும் அளிக்க வாழ்த்துவோம்!

2.0 – திரை விமர்சனம்

படம் ரிலீசுக்கும் முன் ரொம்ப ஹைப் இல்லாதது நல்லதே. நிறைய பேட்டிகள் வந்திருந்தால் கஜ கஜன்னு ஆகியிருக்கும். இப்போ கொஞ்சம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போக முடிந்தது. எந்திரனை விட மிக நல்ல தயாரிப்பு. 3D அசத்தலாக வந்துள்ளது. ஒலி தரம் அற்புதம். ஒளிப்பதிவு உலகத்தரத்துக்கும் மேல். ஷங்கர் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய ஒரு படைப்பு இது.

ரஜனிகாந்த் முதல் பாகத்தில் வசீகரனாகவே வருகிறார். என்திரனிலியே வசீகரன் அவ்வளவாக ஈர்க்கவில்லை. சிட்டி தான் அனைவரையும் கவர்ந்தான். அதே மாதிரி வசீகரன் இந்தப் படத்திலும் முதல் பாகத்தில் பெரிய அழுத்தத்தைத் தரவில்லை. அதுவும் நமக்கு டீசரில் டிரெயிலரில் செல் போன் பறந்து போவதை பார்த்திருந்ததால் ஓரளவு கதை எப்படி தொடங்கும் என்றும் தெரிந்திருந்து அதில் பெரிய சஸ்பென்சும் இல்லை. இடைவேளைக்குப் பிறகு சிட்டி உயிர்பெற்றதோடு சிட்டியின் வில்லத்தனமும் உயிர்பெற்றதால் சுவாரசியம் கூடுகிறது. அதோடு எதிர்பாராத இன்னொரு ரோபோவும் திரைக்கு வருவதால் படம் சிறப்பாக முடிகிறது.

ரஜினி ஹீரோவை விட வில்லனாக ரொம்ப அருமையாக செய்கிறார். அது மிக இயல்பாகவும் ஒரு தனி ஸ்டைலோடும் அவருக்கு செய்ய வருகிறது. படத்தில் அக்ஷய் குமாரை வில்லனாக காட்டியிருந்தாலும் அவர் உண்மையிலேயே நல்லவராக இருந்து கெட்டவராக மாறுவதால் அவரை ரொம்ப வெறுக்க முடிவதில்லை. பரிதாபப்படவே முடிகிறது. இடைவேளைக்குப் பிறகு அவருக்கு ரஜினி உதவுவதாக கதையை அமைத்திருந்தால் கதை வலுப்பெற்றிருக்கும். ஆனால் ரஜினியின் வில்லத்தனமான சிரிப்பும், உடல் மொழியும் தியேட்டரில் அப்ளாஸ் பெறுகிறது. கடுமையாக உழைத்திருக்கிறார் ரஜினி. இந்தப் படம் நிச்சயமாக அவரை நடிகராக, ஒரு படத்தின் வெற்றிக்குப் பெரும் பங்களித்தவராக பேசப்படும்.  முதலில் இருந்து கடைசி வரை ரஜினி இயக்குநரின் நடிகராக வருகிறார். அந்தப் பாராட்டு ஷங்கருக்குப் போக வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் தான் அனைத்து நடிகர்களையும் திறம்பட நிர்வகித்து அவர்களின் சிறப்பான நடிப்பைப் பெற்றிருக்கிறார்.

எமி ஜேக்சன் அலட்டல் இல்லாமலும் ஆபாசம் இல்லாமலும் செய்திருக்கிறார். நன்றி சங்கர். அவரின் பாத்திரத்தில் ஒரு சர்ப்ரைஸ் இருப்பதும், அவருக்கும் சிட்டிக்கும் உடனான நட்பு/காதலும் நன்றாக உள்ளது. அக்ஷய் குமார் ரோபோவாக இல்லாத சாதாரண பாத்திரத்தில் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். வில்லனாக அவரின் அந்த பயங்கர தோற்றமும் அதற்கான மெனக்கெடலும்  நிச்சயமாக ஆஹா ஓஹோ ரகம் தான்!

அனைவரின் உடைகளும் மிக மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருகின்றன. ஒவ்வொருவரின் தோற்றத்தை முடிவு பண்ண எவ்வளவு ஆய்வுகள், எவ்வளவு நேரம், உழைப்பு, பணச் செலவு தேவைப்பட்டதோ ஆனால் திரை வடிவம் அந்த உழைப்பும் செலவும் வீணாகப் போகவில்லை என்பதை பறைசாற்றுகிறது. ஒவ்வொரு பிரேமும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார் சங்கர். மிக நல்ல கற்பனை வளமும் திட்டமிடலும் இல்லாவிட்டால் இந்த மாதிரி ஒரு படம் திரைக்கே வர முடியாது.

இந்தப் படத்தை கண்டிப்பாக நல்ல திரை அரங்கில் பார்க்க வேண்டியது அவசியம். ஒளி, ஒலி இரண்டும் படத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ரசூல் பூக்குட்டி ஒலி தரத்தை 3D படத்துக்கான அளவில் வேற லெவலில் மிக்ஸ் பண்ணி தந்திருக்கிறார். நிரவ் ஷாவின் ஒளிப்பதிவும் அவுட் ஆப் தி வேர்ல்ட். ரஹ்மான் பாடல்களுக்கான இசையும் அவர் துணை இசை அமைப்பாளர் குதாப் ஈ கிருபாவுடன் ஒரு சைன்ஸ் பிக்ஷன் படத்துக்கான பின்னணி இசையையும் அருமையாக தந்திருக்கிறார்கள். பல இடங்களில் வெறும் இசைக்கு தான் வேலை. கிராபிக்ஸ் மிரட்டும் போது கூடவே இசையும் சேர்ந்து மிரட்டுகிறது. படத்தொகுப்பு என்டனி. மிகவும் சவாலாக இருந்திருக்கும் இந்த மாதிரி படத்தைத் தொகுக்க. 2மணி 20நிமிடத்துக்கு கத்தரித்து தந்ததற்கு அவருக்கு பாராட்டுகள்!

இவ்வளவு சிறப்புகள் இருந்தும் முக்கியமாக ஒரு திரைப் படத்துக்குத் தேவையான கதையில் பெரிய புதுமை இல்லை, ஏன் கதையில் நம்மால் ஒன்றகூட முடியவில்லை என்றே சொல்லலாம். வசனங்கள் கருத்து செறிவுடனோ கூர்மையாகவோ இல்லை. சில இடங்களில் நகைச்சுவை வசனங்கள் உள்ளன. ஐஸ்வர்யா ராய் இந்தப் படத்தில் இல்லாதது பெருங்குறையே. நகைச்சுவை டிராக் என்று தனியாக இல்லை. ஆனால் ஆங்கில படங்கள் பல இம்மாதிரி கதைக்கு முக்கியத்துவம் இல்லாமல் ஆஷனுக்கும், சாகசத்துக்கும், சிஜிக்கும் முக்கியத்துவம் கொடுத்து சூப்பர் ஹீரோ படங்களும் சை ஃபை படங்களும் வருகின்றன. அவை ரசிகர்களால் பாராட்டு மழையில் நனைக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸ் ஹிட்களாகவும் இருக்கின்றன. அந்த மாதிரி ஒரு படம் தான் 2.0வும்.

மிக மிக அற்புதமான CG. அதுவும் அக்ஷய் குமாரும் சிட்டியும் ஒரு விளையாட்டு மைதானத்தில் சண்டை போடும் போது பிராமாதமாகவும் மிக மிக பிரம்மாண்டமாகவும் உள்ளது. சங்கர் நம் முன் வைக்கும் விஞ்ஞான கருத்துகளும், கதைக்களத்துக்கு ஏற்ற செட்களும் மிக மிக உண்மைத்தனத்துடன் இருப்பது படத்துக்கு மிகப் பெரிய ப்ளஸ். எதை செய்தாலும் நிறைய ஆராய்ச்சி செய்து ரசிகர்களுக்கு நேர்மையான படைப்பைத் தர விரும்பும் அவர் பண்பு பாராட்டுக்குரியது.

அவரின் எல்லா படத்திலேயும் ஒரு சமூக கருத்து இருக்கும். மக்கள் குற்றம் செய்து தண்டனை இல்லாமல் தப்பித்துக் கொள்வதை அவரால் ஒத்துக் கொள்ள முடிவதில்லை. இந்தியன், அந்நியன், என்று எல்லா படங்களிலும் தப்பு செய்தவன் தண்டனை அடையணும் என்பதை வலியுறுத்துவதாகவும், சுய ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் இருக்கும். அதே போல சமூக அக்கறை மனிதனுக்குத் தேவை என்பதையும் வலியுறுத்தி அறிவியல்/தொழில்நுட்பம் நல்லதுக்கும் பயன்படுத்தலாம் வில்லங்கமாகவும் பயன்படுத்தலாம், எனவே அதை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டிய கடமையை சொல்கிறார்.

கதை இன்னும் சுவாரசியமாக இருந்திருந்தால் இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்துக்கு இன்னும் கிளாசாக அமைந்திருக்கும். அது ஒரு குறை தான். இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும்போது படத்துக்கு ஆணிவேராக இருக்கும் கதைக்கு ஏன் முக்கியத்துவம் தர மறக்கிறார்கள்? அதுவும் இவ்வளவு அனுபவம் மிக்க இயக்குநர்!மற்றபடி கண்டிப்பாக திரையில் பார்த்து ரசிக்கவேண்டிய ஒரு படம். தமிழ் திரைத் துறையில் மிகப் பெரிய மைல் கல்லாக அமைந்திருக்கும் இத்திரைப்படம் பட வசூலில் வெற்றியைக் காண வாழ்த்துகிறேன்.

சர்கார் – திரை விமர்சனம்

என் உறவினர் ஒருவருக்கு அந்தக் காலத்தில் திருமண நிச்சயதார்த்தத்துக்குப் பிள்ளை வீட்டில் கட்டம் கட்டமா போட்ட பட்டுப் புடைவை வாங்கியிருந்தாங்க. ஒவ்வொரு கட்டமும் ஒவ்வொரு நிறம். என் அக்கா முறை உறவினருக்கு அந்தப் புடைவையைப் பார்த்து அழுகையே வந்துவிட்டது. அவ்வளவு மோசமாக இருந்தது புடைவை. என் பெரியம்மா ஏண்டி அழற உங்க மாமனார் மாமியாருக்கு எல்லா நிறத்திலேயும் உனக்குப் புடைவை எடுக்கனும்னு ஆசையா இருந்திருக்கும் அவ்வளவு புடைவை வாங்க முடியுமா அதான் எல்லா நிறத்தயையும் ஒரே புடைவைல போட்டு வாங்கியிருக்காங்க. போய் கட்டிக்கிட்டு வான்னு சிம்பிளா சொல்லிட்டாங்க. அந்த மாதிர் ஏ.ஆர்.முருகதாசுக்கு எல்லா பிரச்சினைகளுக்கும் படங்கள் எடுக்கனும்னு ஆசை போலிருக்கு ஆனா அவ்வளவு படம் எடுக்க முடியுமான்னு சந்தேகம் வந்திருக்கும். அதான் எல்லா பிரச்சினையையும் ஒரே படத்துல வெச்சு ரசிகர்களை காவு வாங்கிட்டாரு.

ஆனா சும்மா சொல்லக் கூடாது இந்தப் படத்திலேயும் ஒரு கதை இருக்குன்னு கண்டுபிடிச்சு அது வருண் ராஜெந்திரனோட கருன்னு தீர்மானிச்சு அவருக்கு முப்பது லட்ச ரூபாய் இழப்பீடும் வாங்கிக் கொடுத்த பாக்கியராஜ் சிம்ப்ளி கிரேட்! ஆனா பாக்கியராஜ் கில்லாடி. முருகதாஸ் படத்தைப் போட்டு காட்டறேன் போட்டு காட்டறேன்னு பல தடவை சொன்ன போது கூட பார்க்க மறுத்துட்டார் பாருங்க, நீ எப்படி எடுத்திருப்பேன்னு தெரியும்னு சொல்லிட்டாரு. அங்க நிற்கிறார் ஜாம்பவான்!

இந்தப் படத்துல முக்கியமான ஒரு விஷயம் நாம தெரிஞ்சுக்கறது சட்ட நுணுக்கமான 49P. அதாவது நம் பெயரில் யாராவது கள்ள வோட்டு போட்டுட்டா அதை நாம் நிரூபிச்சா வாக்குச் சாவடியிலேயே நமக்கு அவர்கள் மறுபடியும் வாக்களிக்கும் உரிமையை தர வேண்டும். நமக்கு நோட்டா பத்தித் தெரியும், அதாவது எந்த வேட்பாளரும் நமக்குப் பிடிக்கவில்லை என்றால் 49 O விதிப்படி None of the above என்று வாக்களிக்கலாம். 49P பற்றி இந்தப் படத்தின் மூலம் தெரிந்து கொள்கிறோம்.

சுந்தர் பிச்சை Google நிறுவனத்தின் CEO. அவருக்கும் விஜய் பாத்திரத்துக்கும் துளி சம்பந்தம் இல்லை. சுந்தர் பிச்சை அமெரிக்காவில் மிகப் பெரிய கம்ப்யுடர் நிறுவனத் தலைவர், அந்த அளவு அந்தத் துறையில் பெரிய ஆள். இந்தப் படத்தில் விஜய் வெளிநாட்டில் வாழும் ஒரு இந்தியர் பெரிய பணக்காரர், அவர் பாத்திரத்துக்கு வித்தியாசத்தைக் காட்ட முனைந்து கம்பியுடர் நிறுவனத்தின் தலைவர் என்கிறார் இயக்குநர், அவ்வளவு தான். கம்பியுடர் தொடர்பா அவர் இந்தப் படத்தில் வேறு எதுவும் செய்யவில்லை. அவர் வெளிநாட்டில் ஒரு பெரிய ஹோட்டல் நடத்தியிருக்கலாம், விமான நிறுவனம் நடத்தியிருக்கலாம் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். அவர் சென்னையில் வாக்களிக்கத் தனி விமானத்தில் பறந்து வரும் அளவுக்கு, சுத்தி வெள்ளைக்காரர்களை எடுபிடி வேலைக்கு வைத்துக் கொள்ளும் அளவுக்குப் பணக்காரர். அவ்வளவு தான். Techie விஷயம் ஒன்றுமே இல்லை. சாதா ட்விட்டர் பேஸ்புக் பயன்படுத்திக் கதையில் கூட்டத்தைச் சேர்க்கிறார். பெரும் பணக்காராரக இருந்தும் ஏழைகள் குடியிருப்பில் வெள்ளையடித்து அட்மின் ஆபிஸ் போடுகிறார்.

எப்பவுமே படத்தின் ஹீரோவின் பலம் வில்லனின் பலத்தைப் பொறுத்தது. அரிச்சுவடி பாடம் இது. மகா சொத்தையான வில்லன் பழ. கருப்பையா, ஒரு கட்சித் தலைவர் முதலமைச்சர் வேட்பாளர். காமெடி டிராக் இல்லாததால் காமெடி பீசாக ராதா ரவி, பழ கருப்பையாவின் அல்லக்கை, பெயர் இரண்டு. (அவ்வளவு imaginative, அவர் தான் கட்சியில் நெ2வாம். மாறன் சகோதரர்களே ஸ்டாலினை கேலி பண்ண அனுமதித்து இருக்கிறார்களே. மேக்கப், லேசா கோண வாய் எல்லாம் ஸ்டாலினை குறிக்கின்றன. அவ்வளவு கோபமா ஸ்டாலின் மேல் அவர்களுக்கு,). இவர்களை ரிமோட்டில் இருந்து வழி நடத்துபவர் வரலட்சுமி என்னும் பாப்பா என்னும் கோமளவல்லி. கேனடாவில் வாழ்ந்து கொண்டு இங்கே அப்பாவுக்கு கட்சி நடத்துவதற்கும் ஆட்சி செய்வதற்கும் நயவஞ்சக திட்டம் தீட்டுவதற்கும் யோசனைகளை சொல்லுபவர். கதைப் பஞ்சம் கதைப் பஞ்சம் என்று கேள்விப்பட்டிருக்கேன், இந்தப் படத்தில் காட்சி அமைப்பதில் கூட கற்பனை வறட்சி 😦

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் தேவையில்லை. விஜயின் நடிப்பு, அவர் நேரம், அவர் உழைப்பு அனைத்தும் அனாவசியமாக வீணடிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்து விட்டு அல்லது கதையை (?) கேட்டுவிட்டோ ரஹ்மான் ஸ்டூடியோவை விட்டே ஓடிவிட்டார் போலிருக்கிறது. ஒரு பாடலும் நன்றாக இல்லை. ரீ ரிகார்டிங், அது எங்கோ ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் இருக்கும் என்கிற அளவில் உள்ளது. சண்டைக் காட்சிகள் நன்றாக இருக்குன்னு சொல்லலாம் ஆனால் கொஞ்சமாவது நம்பும்படியா இருக்க வேண்டாமா? 27 பேரை ஒத்தை ஆளா நின்று அடிக்கிறார் விஜய். அவனவன் கொடாலியோட வரான் இவர் ஸ்வைங் ஸ்வைங்குன்னு மயிரிழையில் தப்பித்து எல்லாரையும் சகட்டு மேனிக்குப் போட்டுத் தள்ளிவிடுகிறார். அவருடைய நடனம் கூட இந்தப் படத்தில் எடுபடவில்லை. அழுகையா வருது.

ஹீரோயின் பத்தியும் சொல்லணும் இல்ல? திருவிழாவில் தொலைஞ்ச பிள்ளையாட்டம் திரு திருன்னு முழித்துக் கொண்டு விஜய் பின்னாடியே சுத்துகிறார். நடிகையர் திலகமாக வாழ்ந்த கீர்த்திக்கு இந்த நிலைமை வர வேண்டாம்.

கூடங்குளம் பிரச்சினையிலிருந்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையில் இருந்து, மீனவர் பிரச்சினை, X Y Z என்று ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு பிரச்சினை என்று சொல்லி அனைத்துக்கும் நடக்கும் ஆட்சி தீர்வு கொடுக்காது என்று விஜயே களத்தில் இறங்கி தீர்வு காண முயலும்போது ஏற்படும் எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி பெறுவதாக காட்டியுள்ளார் முருகதாஸ்.

திரைக் கதை சரியில்லாததால் அவர் உருக்கமாக நடிப்பதும் எடுபடவில்லை ஆக்ரோஷமாக நடிப்பதும் எடுபடவில்லை. கடைசி மூணு மணி நேரத்துல அவர் பேஸ்புக்ல போடற விடியோனால எல்லாரும் போய் வாக்களிக்கறது எல்லாம் ஷ்ஷ்ப்பா! அதைவிட ஆயாசம் இவர் எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவது தான். அதில் என்ன தப்புன்னு கேக்கறீங்களா? இதெல்லாம் நடப்பது பதினைந்தே நாட்களில்.

Better luck next time. நான் எனக்கு சொல்லிக்கிட்டேன்.

வட சென்னை – திரை விமர்சனம்

சென்னையின் ஒரு பகுதி தான் வட சென்னை. ஆனால் வட சென்னை மக்களின் ஏழ்மையான வாழ்க்கைத் தரமும், அவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகளும், கடற்கரையோரப் பகுதியின் ஆபத்தான, அசுத்தமான புவியியலும் இதர சென்னை மக்களின் வாழ்க்கையோடும், அவர்கள் வசிக்கும் இடங்களோடும், அவர்களின் பிரச்சினைகளோடும் ஒப்பு நோக்கும் போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது. அரசியல்வாதிகளும், தன்னார்வ குழுக்களும், அங்கேயே பிறந்து வளர்ந்து நல்ல நிலையில் இன்று இருக்கும் பல வெற்றியாளர்களும், அவர்களின் தரத்தை உயர்த்தவோ, அவர்களுக்கு உதவி செய்து வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொண்டுவரவோ முயல்பவர்களும் குறைவு, அப்படி செய்த்பவர்களை அதில் வெற்றிக் காண்பவர்கள் அதைவிட குறைவு. அப்பகுதியின் மக்களைப் பற்றிய கதை முப்பாகங்களாக வெளிவருவதாக இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்து அதன் முதல் பாகமாக வட சென்னை வெளிவந்துள்ளது. அசாத்திய உழைப்பின் பலனாக அருமையான ஒரு படத்தை நாம் காணும் வாய்ப்பைத் தந்திருக்கிறார் வெற்றிமாறன்.

படம் தொடங்கிய பின் கொஞ்ச நேரம் ஆகிறது யார் யார் எந்த பாத்திரம், என்ன தொடர்பு என்று புரிவதற்கு. படத்தின் ஆரம்பத்திலேயே நிறைய பாத்திரங்களை அறிமுகப் படுத்திவிடுவதால் சற்று நேரம் ஆகிறது படத்தின் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள. மேலும் கதையின் கால அளவும் 1987ல் தொடங்கி 2005 வரை வருகிறது. அதுவும் கொஞ்சம் முன்னும் பின்னும் கதை சொல்லி நகர்த்துவதால் சற்றே குழப்பம் உள்ளது. ஆனால் விரைவில் கதைக்குள் நம்மை நுழைத்து விடுகிறார் இயக்குநர்.

வட சென்னைப் பகுதியில் வாழாதவர்களுக்கும், அங்கு நடப்பதைச் செய்தியாக – கொண்டித் தோப்பு ரங்கன் இரண்டு ரவுடி கும்பலின் மோதலில் கொல்லப்பட்டான், வெள்ளை மாரியை காக்கா பாலாஜி வெட்டி சாய்த்தான், தாடி சுரேஷை போலிஸ்  என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது என்று நாம் செய்தியில் படித்தோ, தொலைக்காட்சியில் பார்த்தோ கடந்து போவோம். ஆனால் அதை இப்படத்தில் எப்படி இவை எல்லாம் நடக்கின்றன எனக் காண்பித்து நம்மை அவர்களோடு இரத்தமும் சதையுமாக (உண்மையாகவே) வாழவிட்டிருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன். ஆடுகளம் படத்தில் சிறந்த இயக்குநர் &சிறந்த காதாசிரியருக்கான தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். விசாரணை திரைப்படம் உலக அளவில் விருதுகளை அவருக்கு வாங்கித் தந்துள்ளது. வட சென்னை திரைப்படத்துக்கு விசாரணைக்கும் ஆடுகளத்துக்கும் உழைத்ததை விட அதிகம் உழைத்திருப்பார். வெகு ஆழமான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டதால் மட்டுமே இவ்வளவு விரிவான, சிறப்பான ஒரு கதைக் களத்தை நம் முன்னால் நிறுத்தயிருக்க முடியும். அங்கு வாழும் மக்களின் மொழி, வேலை, இடம், உடை, குணக்கூறுகளான வஞ்சகம், விசுவாசம், நம்பிக்கை துரோகம், அன்பு, பழிக்குப்பழி, உயிர் தப்பிக்க எதையும் செய்யத் துணிதல் ஆகிய அனைத்தும் அந்தக் களத்தின் பாணியில் சொல்லியிருப்பதில் இவரின் இந்த படைப்புக்கும் இந்திய அளவிலும் உலக அளவிலும் அங்கீகாரம் கிடைக்கும் என்பது நிச்சயம்.

முதல் காட்சியே இரத்தம் தோய்ந்த கத்திகள், ப்ளர் செய்யப்பட்ட கொல்லப்பட்ட சடலம், அந்த சடலத்துக்கு அருகிலேயே அமர்ந்து வெற்றிப்பாதையை நோக்கி நால்வர் செல்ல வாய்ப்பை ஒருவனைக் கொலை செய்ததனால் ஏற்படுத்திக் கொண்ட மகிழ்ச்சியுடன் உரையாடுவதுடன் படம் தொடங்கி இப்படத்தின் இயல்பை சொல்லிவிடுகிறது. இப்படத்தில் முக்கியப் பாத்திரங்களில் அமீர் (ராஜன்), சமுத்திரக்கனி (குணா), டேனியல் பாலாஜி (தம்பி), கிஷோர் (செந்தில்), வட சென்னை gang தலைவர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களுடன் சுயநல அரசியல்வாதியாக (வேறு வகை உண்டா என்ன?) ராதா ரவி (முத்து) நடிக்கவே தேவையில்லாமல் இயல்பாகவே மிரட்டலாக வருகிறார்.

வட சென்னையில் முக்கிய பிரச்சினையே கேங் வார் தான். சமூக விரோதச் செயல்கள் மூலம் பணம் சம்பாதித்து பணத்தாலும் பவராலும் அந்தப் பகுதியை தன் வசப்படுத்தி கோலோச்ச போட்டியிடுவது தான் அங்குள்ள கேங் தலைவர்களின் தினசரி போராட்டமாக அமைகிறது. அங்கு இருக்கும் இளைஞர்களை நல் வழிகாட்ட கள்ளக் கடத்தல் செய்து வந்து பின் மனம் மாறிய ஒருவர் (ராஜன்) முயல்கிறார். சமூகக் கூடம் அமைத்து அந்த மக்களின் பாதுகாவலராக, பணக்கார முதலாளிகள், காவல் துறையினரிடம் இருந்து அம்மக்களை காப்பவராக வருகிறார். அமீரின் நடிப்பும் அந்தப் பாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. அன்பு, தலைமைக் குணம், போர்க் குணம், போலீசையே புரட்டிப் போட்டு அடித்து மிரட்டும் துணிச்சல், தன் பகுதி மக்களின் நலனில் காட்டும் அக்கறை, நம்பிக்கை துரோகத்தில் வீழ்வது என்று உணர்சிகளைக் காட்ட நல்ல வாய்ப்பு. அனைத்தையும் நன்கு பயன்படுத்தியுள்ளார்.

அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் கேரம்போர்ட் விளையாட்டு வீரராக இருக்கும் தனுஷ் (அன்பு) நல்லபடியாக முன்னேறி விளையாட்டு கோட்டாவில் அரசாங்க வேலைக்குப் போகும் கனவில் இருப்பவர். அந்தச் சமுதாய குற்ற சூழ்நிலையாலே எப்படி வேண்டாத செயலை செய்து அதனால் அவர் வாழ்க்கையின் திசையே ஆசைப்பட்டது போல் இல்லாமல் மாறி வட சென்னை டானாக உருவாகுவது தான் கதை. அவர் விடலைப் பருவத்தில் இருந்து முப்பது/முப்பத்தைந்து வயது வரையிலான வாழ்க்கையைப் பார்க்கிறோம். எல்லா வயதுக்கும் பொருந்துகிறது அவர் முகம். அவர் நன்றாக உணர்ந்து நடித்துள்ளார். வெற்றிமாறனுக்கும் தனுஷுக்கும் நல்ல அலைவரிசைப் பொருத்தம். தனுஷுக்கு ஏத்த கதையை இவர் கொடுக்கிறார்.  பாத்திரத் தன்மையை உணர்ந்த நடிப்பை வெற்றிமாறனுக்கு அவர் தருகிறார். Win Win situation.

ஆண்ட்ரியாவிற்கு அருமையான பாத்திரம். ஒரு பகுதிக்கு மேல் அவர் தான் கதையின் சூத்திரதாரி. பிராமதமாக நடித்திருக்கிறார். அடுத்து வரும் இரண்டு பகுதிகளில் கதையில் வெற்றிமாறன் அவரை எவ்வகையில் பயன்படுத்தியிருக்கிறார் என்று பார்க்க ஆவலாக உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் தனுஷின் ஜோடியாக நல்ல வாய்ப்பு. சரியாகப் பயன்படுத்தியுள்ளார்.

இசை சந்தோஷ் நாராயணன். 25வது படம். மிகப் பெரிய பங்களிப்பை அவரின் இசை இந்தப் படத்துக்கு அளித்துள்ளது. படம் ஒரு கடுமையான சூழலையே சுற்றி வருகிறது. அதனால் இசையின் பங்கு மிக முக்கியமாகிறது. மேலும் நார்த் மெட்ராஸ்சுக்கான இசை இப்படத்தின் தேவை. அதை உணர்ந்து கொடுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். அதே மாதிரி ஒளிப்பதிவும் தனிப் பாராட்டைப் பெறுகிறது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அந்த அழுக்கும் அசுத்தமும் நிறைந்த தெருக்களிலும் குறுகிய சந்துகளிலும் இருட்டிலும் பாத்திரங்களுடன் ஒடி விறுவிறுப்பாக படத்தைத் தந்திருக்கார். ஸ்ரீகரின் படத்தொகுப்பும் நன்றாக உள்ளது. பெரிய கதை, நிறைய பாத்திரங்கள், தொகுப்பது எளிதன்று!

வட சென்னையில் மேல் தட்டு நாகரீகத்தையே அறிந்திராத ஒரு சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்குத் தெரிந்த உலகம் எல்லாம் ஏதாவது சரிபட்டு வரவில்லை என்றால் பழி தீர்த்துக் கொள்ளுதலும், வெட்டும் குத்தும், உடனடி பலனை எதிர்பார்த்து செய்யும் செயல்களும் தான். இந்தப் படம் ஒரு வட சென்னை – நார்த் மெட்ராஸ் வாழ்வியலை சொல்லும் படம் தான் என்றாலும் அதை சுவாரசியமான கதையாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர். திரைக்கதையும் படமாக்கமும் முதலில் பெரிய அப்ளாசைப் பெறுகிறது. மற்றவை அடுத்தே.  நிறைய கெட்ட கெட்ட வசைச் சொற்களும் மிகவும் கொடூரமான கொலைகளும் படத்தில் இடம் பெறுகின்றன. இவ்வளவு தேவையா என்று தெரியவில்லை. அதில் இந்த வசை சொற்கள் பேசப்படும்போது அரங்கம் அதிர்வது இளைஞர்களின் இன்றைய நாகரீகத்தைக் காட்டுகிறது. கமலா திரை அரங்கில் 25 பெண்களுக்கு மேல் இல்லை. குழந்தைகளுக்கு ஏற்றப் படம் அல்ல. A சான்றிதழுடன் தான் படம் வெளிவந்துள்ளது. சினிமாவை ரசிப்பவர்களுக்கு நல்ல ஒரு படம், பாராட்டுகள் வெற்றி மாறன் அணியினருக்கு

#MeToo

பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டவர்கள் அந்தக் கொடுமையை உறவினர்களிடமோ நண்பர்களிடமோ சொல்லக் கூட கூச்சமும், பயமும், தயக்கமும் இருக்கும். இது தான் நிதர்சனம். இது ஏன் என்று உளவியல் மருத்துவர்கள் தான் விளக்க வேண்டும். ஏதோ சிலர் துணிந்து உறவினர்களிடம் சொல்லி சில சமயம் உதவி கிடைக்கும் பல சமயம் கிடைக்கா சூழ்நிலை தான் உலக நடைமுறை. அதனால் இந்த அவமானத்தை பல வருடங்கள் மனத்தில் பூட்டி பலர் அதை தங்களுடனே இருத்தி வைத்து மரணிக்கின்றனர். வெளியே வரும் உண்மைகள் வெகு வெகு குறைந்த சதவிகிதமே! இது ஜாதி, மதம், இனம், மொழி, நாடு கடந்து நிற்கும் ஒரு கேவலமான நியதி.

இப்போ அமெரிக்காவில் நடந்ததையே உதாரணமாக சொல்கிறேன். நீதிபது Bret Kavanaugh என்பவரை சுப்ரீம் கோர்டுக்கு நீதிபதியாக அமர்த்த அந்நாட்டுப் பாராளுமன்றம் முடிவெடுக்கும் தருவாயில் Dr. Christine Blasey Ford (உளவியல் துறை பேராசிரியர், பாலோ ஆல்டோ பலகலைக் கழகம், கேலிபோர்னியா) என்பவர் அவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை வைத்து சுப்ரீம் கோர்டுக்கு அவரை நீதிபதியாக நியமிக்கக் கூடாது என்று கூறினார். அவர் நீண்ட testimony அளித்தும் FBIஐ வெள்ளை மாளிகை சரியான புலன் விசாரணை மேற்கொள்ள விடாமல் முக்கியமான Ford, மற்றும் Kavanaugh இருவரையும் விசாரிக்க விடாமல் தடுத்தது. அந்நாட்டுப் பாராளுமன்றம் Kavanaughஐ சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக அவர் நியமனத்தை உறுதி செய்துள்ளது. போர்டை 15 வயதில் கற்பழிக்க Kavanaugh முயற்சி செய்தார். Ford வாயில் கையை வைத்து அவரை கத்தவிடாமல் வன்கொடுமை நடந்துள்ளது. அப்பொழுது கவானாகிற்கு 17 வயது. இது நடந்தது ஒரு மேல் நிலைப் பள்ளி விழாவில். போர்ட் senateல் testimony கொடுத்த போது அவரை குறுக்கு விசாரணை செய்தவர்கள் அவரிடம் நீ உன்னைக் கற்பழிக்க முயன்றது Kavanaugh என்று மறதியில் சொல்கிறாயா? எப்படி இவ்வளவு நாட்களுக்குப் பிறகு இந்தக் குற்றச்சாட்டை வைக்கிறாய்? வேறொருவரை இவர் என்று நினைத்துக் கொண்டு பேசுகிறாயா, எப்படி இவர் தான் என்பது உன் நினைவில் உள்ளது என்று தான் கேள்விகள் கேட்டுத் துளைத்தார்களே தவிர அவள் சொல்வதில் உண்மை இருக்கும் என்று நினைத்து விசாரணை நடத்தவில்லை. இறுதியில் Kavanaugh சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகிவிட்டார். அவர் வாழ்நாள் முழுவதற்குமான பதவி இது. இந்தக் குற்றச்சாட்டை போர்ட் பொது வெளியில் வைத்தபோது அமெரிக்க அதிபர் டிரம்ப் இவரை கேலியும் கிண்டலும் செய்து அவமானப் படுத்தினார். இது தான் வாழ்க்கையின் நிதர்சனம். இத்தனைக்கும் குற்றம் சாட்டுபவர் ஒரு முனைவர், ஒரு பெரிய பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்! இதை வெளியில் சொன்னதால் அவருக்கு கொலை மிரட்டல்கள் பல வந்து குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக வாழவேண்டிய சூழ்நிலையில் தற்போது உள்ளார்.

இவ்வாறு பொது வெளியில் வந்து இப்படி தனக்கு நேர்ந்தது என்று பல வருடங்கள் கழித்து ஒருவர் சொல்லக் காரணம் என்னவாக இருக்கும் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இதனால் என்ன தனிப்பட்ட பயன் அவர்களுக்கு? இப்படி தான் அவர்கள் பிரபலம் ஆகவேண்டுமா? இல்லை இதற்குப் பெயர் பிரபலம் ஆகுதல் என்பதா? இல்லை ஒருவர் மேல் தனிப்பட்ட காழ்ப்பு உணர்ச்சியினால் அபாண்டமாகப் பழிப் போட்டு தன் நிம்மதியான் வாழ்க்கை/எதிர்காலத்தை இழக்க ஒருவர் துணிவாரா?

பாலியல் வன்முறைக்குப் பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்கள்/இளைஞர்களாக இருப்பினும் இதில் மட்டும் ஆண் பெண் இருவருமே சமம். இருவரையும் சரிசமமாகவே கேவலமாக சமுதாயம் பார்க்கும், உதவி செய்யாது. இந்த #MeToo இயக்கம் அமெரிக்காவில் தான் தொடங்கியது. அதன் பின் பாலிவுட்டில் நானா படேகர் மேல் பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு நம் நாட்டிலும் இது வலுப் பெற ஆரம்பித்தது.

இங்கே குற்றம் சாற்றப்பட்டவர்களை விட குற்றம் சாட்டுபவர்களை தான் சமுதாயம் தண்டிக்கிறது. அவரின் நிலை என்ன, ஓ சினிமாவில் இருக்கிறாரா அப்போ வேசி தான் (ஸ்ரீ ரெட்டி இதைத் தான் எதிர்கொண்டார்) இவள் என்ன இயக்குநரை, நடிகரைப் பற்றி குற்றம் சொல்வது? நடிக்க வாய்ய்புத் தருவார் என்று தானே படுக்கப் போனாள் இப்போ என்ன திடீர் ஞானோதயம்? இதே தான் கேரளா கன்னியாஸ்திரீக்கும் நடந்தது. ஏன் இத்தனை முறை பாலியல் தொடர்பு நடந்த பிறகு வெளியே வந்து சொல்கிறார்? அப்போ அது வரை அந்த ருசி தேவையாக இருந்ததோ போன்ற கேள்விகள் உண்மையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தான். இந்தக் கேள்விகளால் தப்பிப்பது யார் என்று யோசித்தீர்களா?

எப்பொழுதும் harass செய்கிறவர்கள் பவரில் இருப்பவர்கள். அதாவது மேலதிகாரியாகவோ, சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களாகவோ, அவரை பகைத்துக் கொண்டால் வேலை வாய்ப்பில் முன்னேற்றத்துக்குத் தடை விதிக்க சக்தியுள்ளவராகவோ, நம்முடைய உறவினர்கள் எனில் தந்தை ஸ்தானத்தில் அல்லது தந்தையேவோ, மாமா, அக்கா புருஷன், கணவனின் சகோதரன், மாமனார் என்கிற நெருங்கிய உறவினர்களாகவோ தான் இருப்பார்கள். அவர்களை எதிர்க்க துணிச்சல் தேவை, குடும்ப ஆதரவு தேவை. குடும்ப உறுப்பினர்கள் செய்யும் பாலியல் வன்முறைகள் மற்ற உறவினர்களுக்குத் தெரியாமல் நடக்காது. ஆனாலும் உதவிக்கு வரவேண்டியவர்களே குடும்பம் உடைந்து விடும் என்று உதவ வரமாட்டார்கள். பின் எப்படி பாதிக்கப்பட்டவள் வெளியே வந்து தனக்கு நேர்ந்தக் கொடுமையை சொல்ல முடியும்? மேலதிகாரி எனில் அவனை எதிர்த்தால் வேலை போகும் அல்லது மேலதிக கொடுமைகள் நடக்கும். மாதச் சம்பளத்தை நம்பி குடும்பம் நடத்தும் பெண் எப்படி எதிர்ப்பது? இந்த தொழில் துறையிலேயே வேலை கிடைக்காதபடி செய்துவிடுவேன் என்று மிரட்டுபவரை எப்படி எதிர்ப்பது?

பின்னர் ஒரு நாள் எப்போதாவது நல்ல ஆதரவு கிடைத்த பிறகு வெளியே வந்து சொன்னால் ஏன் இவ்வளவு தாமதம்? நீ அந்த ஆபிசரோடு தானே எல்லா மீட்டிங்கிலும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாய்? அப்போதே செருப்பை கழட்டி அடித்திருக்க வேண்டாமா என்கிற கேள்விகளைக் கேட்டால் நீங்கள் பாதிக்கப்பட்டவரை இன்னும் நோகடிக்கிறீர்களே தவிர உதவி செய்யவில்லை. இந்த எதிர்வினைகளுக்குப் பயந்து தான் இத்தனை நாள் அவர் வாய் மூடி இருந்தார். இதையே ஒரு ஆண் கேட்டால் கூட புரிந்து கொள்ளலாம் ஏனென்றால் அவனுக்கு பெண்ணின் நிலை புரியாது. ஆனால் கேள்வி கேட்பது பெண்களாக இருப்பின் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பாலியல் வன்கொடுமையை அனுபவித்து இருக்க மாட்டீர்கள் என்று கடந்து போவதா இல்லை அப்பெண்ணின் நிலையை உணரும் தன்மை இல்லாமல் போனதே என்று உங்கள் அறிவைக் குற்றம் சொல்வதா என்று புரியவில்லை.

பொது வெளியில் ஒரு பெண் நான் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டேன் என்று சொல்வதனால் வரும் பாதிப்புகளை முதலில் பட்டியலிடுகிறேன். இப்படி ஒரு பெண் சொன்னால் சராசரி ஆண்களும் பெண்களும் நினைப்பதை இங்கே பதிவிடுகிறேன்.

  1. எல்லாம் போய் படுத்திருப்பா, இப்போ என்னமோ பத்தினியாட்டம் வெளியே வந்து சொல்றா.
  2. ஏன் இத்தனை நாள் சொல்லலை, 5 வருஷம் முன்னாடி நடந்தது, 10 வருஷம் முன்னாடி நடந்தது இப்போ தான் சொல்ல நேரம் வந்ததா?
  3. பணம் கேட்டிருப்பா, படிஞ்சிருக்காது அதான் ஓபனா சொல்ல வந்துட்டா.
  4. அவனை எதுக்குத் தன்னோட திருமணத்துக்கு அழைப்பு கொடுத்தா? அப்போ மதிச்சு கூப்டுட்டு இப்போ மட்டும் ஏன் குத்தம் சொல்றா?
  5. அம்மாகாரி அப்பன்காரன் எல்லாம் என்ன செஞ்சுக்கிட்டு இருந்தாங்க? நாலு அப்பு அப்பி பொண்ணை காப்பாத்தியிருக்க வேண்டாமா?
  6. எல்லார்கிட்டேயும் சிரிச்சு சிரிச்சுப் பேசுவா அப்படி இருந்தா எந்த ஆம்பளை தான் இப்படி கூப்பிட மாட்டான்?
  7. அவ உடையும் அவளும்! ஆபிசுக்கே ஸ்லீவ்லெஸ் தான் போட்டுக்கிட்டுப் போவா அதான் அவளுக்குப் பாலியல் தொந்தரவு வந்திருக்கு!
  8. எவ்வளவு விவரமா தனக்கு நேர்ந்த பாலியல் வன்முறையை விவரிச்சு எழுதியிருக்கா, படிக்கவே பிட்டுப் படம் பார்த்த பீலிங் வருது. அப்ப அனுபவிச்சிட்டு இப்போ வந்து குறை சொல்றா பாரேன்.

இவை தான் மக்கள் மனத்தில் ஓடும் என்று தெரிந்தும் அப்பெண் ஏன் துணிந்து வெளியே வந்து அவளுக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்கிறாள்? பாதிக்கப்பட்டவள் மணமானவள் என்றால் கணவனும் அவன் குடும்பத்தாரும் அவள் வெளிப்படையாக பேசிய பின் மரியாதையோடு பார்ப்பார்களா என்பது மிகப் பெரிய கேள்வி. சாட்சிகள் வைத்து இக்குற்றங்கள் நடப்பதில்லை. அதனால் தான் இவை நிரூபிக்க இயலா குற்றங்கள் ஆகின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணோ ஆணோ வாய் மூடி மௌனித்திருப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணம். அப்படி இருந்தும் இவை அனைத்தும் தாண்டி ஒருவர் வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறார் என்றால் அது எதனால்?

  1. முதலில் சொன்ன அமெரிக்க நீதிபதி விவகாரத்தின் உதாரணம் மாதிரி ஒரு கெட்டவன் பலரையும் பாதிக்கும் ஒரு பதவியை அடைந்து மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடாது என்கிற நல்லெண்ணம்.
  2. குடும்ப ஆதரவு கிடைத்து அவர்கள் இதை வெளியே சொல் மற்றவர்களுக்கும் அவன் உண்மை முகம் தெரியட்டும் என்று ஆதரவு கரம் நீட்டுவதால்.
  3. சில சமயம் மனச்சிதைவு அதிகம் ஏற்பட்டு அவர்களே தாங்க முடியாமல் என்ன வேண்டுமானாலும் ஆகட்டும் இதை வெளியே சொல்லியே தீருவேன் என்று முடிவெடுப்பதால்.
  4. சமூகத்தில் ஒரு நம்பகத் தன்மையான இடத்திற்கு வந்த பிறகு நான் சொல்வதை மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கும்போது உண்மையை பலரும் அறியட்டும் என்று சொல்வது.
  5. மிரட்டல் பயம் நீங்கும்போது. பலரும் blackmail செய்யப்படும் சூழ்நிலையில் தான் இருப்பார்கள். புகைப்படம் வீடியோ harass செய்பவன் வசம் இருக்கும். பெரும் பதவியில் இருப்பவர்களை தனியாக எதிர்கொள்ள முடியும் சூழல் வரும்போது.
  6. ஒரு குருட்டு தைரியம்.

ஒரே ஒரு நிமிஷம் பாலியல் குற்றச்சாட்டை முன் வைப்பவர் உண்மையாகத் தான் பேசியிருக்கிறார் என்று நம்பி அவர் பக்கத்து நியாயத்தைப் பாருங்களேன். அப்பொழுது குற்றம் சாட்டப்பட்ட மகானுபாவர் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டு சமூகத்தில் பெரிய மனுஷன் என்கிற போர்வையோடு வளைய வருகிறார் என்கிற உண்மை பகீர் என்று உரைக்கிறது அல்லவா? இதேக் கொடுமை நம் வீட்டில் யாருக்காவது நிகழ்ந்து அப்பெண் பொது வெளியில் இப்படி மனச்சிதைவின் காரணமாக  போட்டு உடைத்திருந்தால் நீங்கள் சின்மையிக்கும் #MeToo வில் மற்ற பெண்களின் கதைகளுக்கும் ஆதரவு தராமல் கொடுத்த எதிர்வினையைத் தான் கொடுத்திருப்பீர்களா? உங்கள் வீட்டுப் பெண்ணை தள்ளி வைத்துவிடுவீர்களா? வேசி என்று அழைப்பீர்களா?

ஏதோ ஒரு சமயம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தைரியம் வரும். இப்படி எல்லாம் எனக்கும் நிகழ்ந்திருக்குன்னு ஒருவர் வெளிப்படையா சொல்லும்பொழுது அவளே சொல்றா சின்னப் பெண், அவளுக்கு இருக்கும் துணிச்சல் கூட நமக்கு இல்லையே என்று தோன்றி சிலர் தங்களுக்கு நேரந்ததை பகிரலாம். அது தாமதமாகத் தான் நடக்கும். அத்தனை நாள் குற்றம் சாற்றப்பட்டவர்களுடன் தொழில் சார்ந்த தொடர்பு இருந்து கொண்டு இருக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு தான் கொடுமை இழைத்தவர்களை விட்டு வெட்டிக் கொண்டு விலகியிருக்கும் பேரு கிடைக்கும். பலருக்கும் அந்தக் கயவனோடே தொடர்பில் இருக்க வேண்டிய துர்பாக்கிய நிலை இருந்தால் அது பாதிக்கப்பட்ட பெண்ணின் தவறல்ல. சமூக சூழ்நிலையின் நிர்பந்தம்.

பாதிக்கப்படவ்வர்களை குற்றம் சாட்டி பார்க்கும் நிலையிருக்கும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் குஷியாக பாலியல் வன்முறையில் தொடர்ந்து ஈடுபட்டு பெரிய மனிதர்கள் என்று தான் வலம் வந்து கொண்டிருப்பார்கள். ஒரு பெண் தன் அனைத்தையும் தியாகம் செய்து ஒருவர் மேல் வன்கொடுமை குற்றம் சாட்டும்போது செவி கொடுத்துக் கேளுங்கள். நீதிமன்றத்தால் சாட்சியம் இல்லா குற்றங்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாது. சமூகத்தில் நாமாவது அவர்களுக்கு ஆதரவாக இருப்போம். கெட்டவர்களின் தோலுரித்த அவர்களின் துணிச்சலுக்கு நன்றி சொல்வோம். குற்றம் சாட்டுபவரின் ஜாதி, செய்யும் தொழில், அன்னார மேல் நமக்கிருக்கும் பழைய பகை இவற்றை வைத்து பாதிக்கப்பட்டவரை இகழாதீர்கள். நேர்மையோடு அணுகுங்கள். அது மட்டுமே நம்மால் இயன்றது. அவர்கள் பட்ட துன்பத்தை நாம் வாங்கிக் கொள்ள முடியாது, இனி வருங்காலங்களில் அவர்கள் இதனை வெளிப்படையாக சொன்னதால் படப் போகும் துனப்த்துக்கும் நாம் பொறுப்பேற்கப் போவதில்லை. ஆறுதல் கூற மனம் இல்லாவிட்டாலும் இகழாமல் இருப்போம்.

பெண்மையை போற்றுவோம் என்று பேச்சளவில் நில்லாமல் மனத்தளவில் நினையுங்கள். உலகம் சற்றே மாற்றம் பெறும்.

96 – திரை விமர்சனம்

இன்னுமொரு பள்ளிப் பருவக் காதல் கதை என்று நகர்ந்து போக விடாமல் கட்டிப் போடுவது பலருக்கும் இது வாழ்க்கையில் நடந்திருப்பதால் எப்படி முடியப்போகிறது இந்தக் கதை என்று எதிர்பார்க்கும் ஆர்வம் தான். மேலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பிற்கான காரணம் விஜய் சேதுபதி த்ரிஷா கூட்டணி. ஆனால் எழுதி இயக்கியிருக்கும் C.பிரேம்குமார் முழுவதாக இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. சில இடங்களில் அற்புதமாக திரைக் கதையைக் கையாண்டிருக்கிறார். சில இடங்களில் தொய்வு. அவர் மனத்தில் கற்பனை செய்ததை உருவாக்கித் தருவதில் சற்று ஏறக்குறைய ஆகிவிட்டது. அவர் வாழ்க்கையில் நடந்ததோ நெருக்கமானவருக்கு நடந்த கதையாகவோ இருக்க சாத்தியமுள்ளது.

இது அந்தக் கால சாந்தி கிருஷ்ணா சுரேஷ் நடித்த பன்னீர் புஷ்பங்கள் மாதிரி ஓர் அழகான பள்ளிப் பருவக் காதல் கதை. ஆனால் பெற்றோர்களோ ஜாதியோ இதில் வில்லன் இல்லை, சந்தர்ப்ப சூழ்நிலை தான் வில்லன். தொண்ணுறுகளில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு இந்தப் படம் ரொம்பப் பிடிக்கும்/அல்லது ஆத்மார்த்தமாகப் புரியக் கூடும். மற்றவர்களுக்கு அந்த அளவு இந்தப் படம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.

விஜய் சேதுபதி புகைப்படம் எடுப்பதைத் தொழிலாகக் கொண்டவர், தனியாக சுற்றுபவர் என்பது படத்தின் முதல் சில நிமிடங்களில் புரிந்துவிடுகிறது. அவர் வாழ்க்கை ஏன் அம்மாதிரி ஆனது என்பதில் திரைக் கதை விரிகிறது. அவர் எதேச்சையாகப் படித்தப் பள்ளியிருக்கும் தஞ்சை வரும்போது அதை சுற்றிப் பார்க்கையில் பழைய நினைவுகளில் மூழ்கி அதன் பின் கதை பின்னோக்கியும் முன்னோக்கியும் விரிகிறது. நாயகியின் பெயர் ஜானகி (பெற்றோர்களுக்கு S.ஜானகி பிடிக்கும் என்பதால்), நாயகன் பெயர் இராமச்சந்திரன். பெயர் பொருத்தம் இருந்தும் இணையாதக் காதல் 😦

இளமை காலத்து விசேவாக எம்.எஸ்.பாஸ்கர் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்துள்ளார். பெரிய பாத்திரம். மிகவும் சுமாராக நடித்துள்ளார். உணர்ச்சிகளை சரியாக காட்டவில்லை. இளம் வயது த்ரிஷாவாக கௌரி G.கிஷன் பிச்சு உதறியிருக்கார். இவர்கள் இருவரும் தான் முதல் பாதி படத்தை ஆக்கிரமிக்கிறார்கள். பள்ளிக் காட்சிகள் நன்றாக இருந்தாலும் மிகவும் நீளமாக உள்ளது. படம் இரண்டு மணி நாற்பது நிமிடங்கள். நிச்சயமாக அரை மணி நேரம் படத்தின் முன் பாதியிலும் கொஞ்சம் பின் பத்தியிலும் கத்திரித்து இருந்தால் இன்னும் அழகான காவியமாக படம் வந்திருக்கும். படமே இந்த இளைஞர்களுடன் நின்றிருந்தால் இந்த அளவு அவர்கள் கட்டப்படுவதற்கான நியாயம் உள்ளது. ஆனால் படத்தின் பின் பாதியில் த்ரிஷாவும் விஜய் சேதுபதியும் சந்தித்து அவர்கள் சில மணி நேரம் மட்டுமே சேர்ந்து இருக்கும் வாய்ப்பின் போது அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்களும், 22வருடங்கள் பிரிந்து பின் பார்த்துக் கொண்டும், உண்மைகளை தெரிந்து கொண்டும், அதன் தாக்கத்தைப் பற்றியதும் தான் என்கிறபோது முதல் பாதியை நிறைய குறைத்திருக்கலாமே!

எஸ்.ஜானகி, இளையராஜா இல்லாமல் தொண்ணூறுகளில் வாழ்ந்த தமிழர்களின் இளமைப் பருவம் இல்லை. அதை நல்ல முறையில் பயன்படுத்தியுள்ளார் எழுதி இயக்கியுள்ள பிரேம்குமார். பள்ளித் தோழர்களாக வரும் தேவதர்ஷினி, பகவதி பெருமாள் இருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். பள்ளி காவல் காரராக ஜனகராஜை ஒரு சில நிமிடங்களே எனினும் பல வருடங்களுக்குப் பிறகு பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. கவிதாலயா கிருஷ்ணன் பாத்திரம் நல்ல ஒரு சேர்க்கை, விசே அழகாக அவர் உதவியதற்கு ஒரு நன்றி 🙂

த்ரிஷாவின் நிலை எப்பவும் போல் ஒரு திருமணமான பெண்ணுக்கு ஏற்படும் தர்மசங்கடமான நிலை.  பெரும்பாலான சூழ்நிலைகளில் பெண் காதலுனுக்காக காத்திருக்க முடியாமல் சமூகமும், குடும்பமும் நிர்பந்தத்தை ஏற்படுத்தும். உயிர் காதல் எனினும் இன்னொருவனுக்குக் கழுத்தை நீட்ட வேண்டிய கட்டாயம். ஆனாலும் அதில் முடிந்த வரை உண்மையாக இருப்பவராக வருகிறார் த்ரிஷா. மிகவும் நன்றாக நடித்திருந்தாலும் அவர் நிலையில் உள்ள துன்பங்களின் வெவ்வேறு பரிணாமத்தை அவர் நடிப்பில் காட்டவில்லை. நடிக்க நிறைய வாய்ப்பிருந்தும் அபியும் நானும் படத்தில் கோட்டை விட்டது போல் இதிலும் அவ்வாறே. அது இயக்குநரின் பாத்திரப் படைப்பில் உள்ள தவறா என்று தெரியவில்லை. சின்மயியின் டப்பிங்கிற்கு தனி மென்ஷன். அருமையாகக் குரல் கொடுத்திருக்கிறார்.

விஜய் சேதுபதி அவர் பாத்திரத்தையும் படத்தையுமே தாங்கி உயரத்துக்கு எடுத்து செல்கிறார். விஜய் சேதுபதி மட்டும் இல்லை என்றால் இந்த படத்தின் திரைக்கதை, ஆக்கத்துக்கு இது அட்டர் ப்ளாப்பாகி இருக்கும். நாயகன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை.  காதலியை நினைத்து உருகி சூப் பாயாக உள்ளார். அதனால் அவருக்கு அனுதாபம் தானாக மக்களிடமிருந்து வந்துவிடும். ஆனால் அதையும் தாண்டி அவர் மேல் நமக்கு ஈடுபாடு கொள்ள வைப்பது அவரின் முப்பரிமாண நடிப்பு! எல்லா படங்களிலுமே ஒரே மாதிரி நடிப்பது போலத் தோன்றும் ஆனால் எப்படியாவது மாற்றத்தைக் கொண்டு வந்து எந்த ஒரு பாத்திரத்துக்கும் அதிக மதிப்பைப் பெற்று தந்து விடுகிறார் விஜய் சேதுபதி. த்ரிஷா விசே பகுதிகளில் எளிதாக த்ரிஷாவை மிஞ்சி நடிக்கிறார் விசே.

இளைய ராஜா இசை படம் முழுதும் வியாபித்து இருப்பதால் கோவிந்த் மேனன் இசை அவ்வளவாக கவனிக்கப்படலை. இசை பின்னணி & பாடல்கள் சுமார் ரகம் தான். படத்தொகுப்பில் கோவிந்தராஜ் சொதப்பி இருக்கார். இன்னும் நன்றாக செதுக்கி இருக்கலாம். ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் நன்றாக செய்திருக்கிறார். தொண்ணூறுகளின் காட்சிகளும் தற்போதைய காட்சிகளும் சரியான முறையில் காட்டப்படுவதற்குக் கலை பொறுப்பாளர் பாராட்டைப் பெறுகிறார்.

புகைப்படக் கலைஞன் என்பதிலேயே அவர் தருணங்களை மனத்தில் பதிய வைத்து வாழ்பவர் என்கிற குறியீட்டைக் காண்கிறோம். அதே மாதிரி பெட்டியில் சேமித்து வைத்தப் பழைய நினைவுகளின் பொக்கிஷங்களை காதலியிடம் பகிரும்போது காதலின் அழுத்தத்தைக் காண வைக்கிறார் இயக்குநர். பகுதிகளில் அருமையாகவும் பகுதிகளில் சுமாராகவும் உள்ள ஒரு படம். விஜய் சேதுபதி த்ரிஷாவிற்காக பார்க்கலாம். Nostalgia படம்.

பரியேறும் பெருமாள் – திரை விமர்சனம்

படத்தைப் பார்த்த பிறகு இதைப் பற்றி எழுத எப்படி எங்கே ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. விமர்சனம் எழுதவும் எனக்குத் தகுதி இருக்கா என்ற எண்ணவைக்கும் ஒரு படம் பரியேறும் பெருமாள். மாரி செல்வராஜின் முதல் படம். முத்திரை படம். தன் பணத்தைப் போட்டு இப்படத்தைத் தயாரித்து தான் பேசி வரும் சித்தாந்தம் வெறும் பேச்சளவில் இல்லை செயலிலும் உண்டு எனக் காட்டி தன்னை நிரூபித்து உள்ளார் தயாரிப்பாளர் பா.ரஞ்சித். இயக்குநர், தயாரிப்பாளர் இருவருக்கும் பெரிய வகையில் பாராட்டுகள் உரித்தாகுக.

நம் நாட்டில் ஜாதி வெறி இரத்தத்தோடு ஊறி விடுகிறது. அதற்குத் தீனி போட்டு வளர்ப்பது நான் உயர்ந்தவன் என்கிற அதிகார பலமும், பண பலமும், சுற்றி நிற்கும் வலுவான இனத்தாரின் ஆதரவுமே. கீழ் ஜாதியினர் மேலெழும்ப முடியாமல் இன்னமும் அடிமைப்பட்டு இருப்பதற்கான காரணம் அவர்கள் அந்த ஆதிக்க வர்க்கத்துக்கே ஊழியம் செய்து பிழைப்பதாலும், பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பின்மையாலும், மிக முக்கியமாக கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் முன்னேற முடியாமல் வரும் மேம்பாட்டுக் குறைவினாலுமே ஆகும். இவை அனைத்தையும் பிசிறில்லாமல் கதையமைத்துக் காட்டியுள்ளார் மாரி செல்வராஜ். பல உண்மை சம்பவங்களின் கோர்வை தான் என்றாலும் இது ஆவணப் படம் போல இல்லாமல் ஜனரஞ்சகமான முறையில் எடுத்திருப்பது தனிச் சிறப்பு.

ஆதிக்க வர்க்கம் நிறைந்த ஒரு பகுதியில் திருநெல்வேலி பக்கம் ஒரு கீழ் சாதிப் பையன் முதல் தலைமுறையாக சட்டம் படிக்க கல்லூரி சேர்கிறான். அவன் சேருவதற்கு முன்பே அவன் நண்பர்களுடன் சேர்ந்து இருக்கும்போது நடக்கும் சம்பவம் படத்தின் ஒன் லைனாக பார்ப்பவர்களை பொளேர் என்று முகத்தில் அறைகிறது. இது தான் நான் காட்டப் போகும் படத்தின் கரு என்று சொல்லி விடுகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். நகரத்தில் வாழ்பவர்களுக்கும், மேல் ஜாதியாக இருந்தாலும் சாதி வித்தியாசம் பார்க்காதவர்களுக்கும், தங்களை பாதிக்காத வரை அதைப் பற்றி சிந்திக்காதவர்களுக்கும், இப்பல்லாம் யார் சார் ஜாதி பார்க்கறாங்க என்று கேட்கும் அறிவீலிகளுக்கும் இப்படம் சமுதாயத்தின் அழகான மேல் தோலை உரித்து உள்ளே இருக்கும் அசிங்கமான இரத்தத்தையும், சதையையும், பிண்டத்தையும் காட்டுகிறது. கருப்பி என்னும் நாயோடு இருக்கும் உறவும் பந்தமும் அவர்களின் வாழ்க்கையில் உள்ள பிடிப்பைக் காட்டுகிறது. அதை கொடூரமான முறையில் ஆதிக்க வர்க்கம் கொல்வது எப்படி அவர்களின் நம்பிக்கையை தகர்க்க அவர்கள் கையாளும் முறை என்பதையும் காட்டுகிறது.

கதிர் பரியேறும் பெருமாள். இன்னொருவரால் இந்தப் பாத்திரத்தை இவ்வளவு செம்மையாக செய்திருக்க முடியுமா என்று வியக்க வைக்கிறார். பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் உயிர் கொடுத்தப் பாத்திரம் எனினும் அதை நகமும் சதையுமாக திரையில் நடமாட வைத்து நம்மை அப்பாத்திரத்தின் அத்தனை வலியையும் உணர வைக்கிறது கதிர் தான். இந்த மாதிரி பாத்திரம் கிடைக்க ஒரு நடிகர் பல காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். சிலருக்குக் கிடைக்காமலும் போகும். இவருக்குக் கிடைத்து அந்த வாய்ப்பை அற்புதமாகப் பயன் படுத்தியுள்ளார், வெகுளிப் பையனாக கல்லூரியில் அடியெடுத்து வைக்கும்போது உள்ள அவர் இயல்பு, பின் படிப்படியாக நிறைய ஜாதி, சமூக ஏற்றத்தாழ்வுகளால் வித்தியாசங்களை அனுபவிக்கும் போது உண்டாகும் குழப்பங்கள், பின் படிப்பினைகளை ஏற்றுக் கொள்ளும்போது அவரின் பக்குவம், அடுத்து அவர் அடித்துத் துவைக்கப்பட்டு இதுதாண்டா சமூகத்தில் உன் நிலை என்று சுட்டிக் கட்டப்பட்ட பின் அவரின் விவேகமான பார்வை, இயலாமையை இயலாமையாக எடுத்துக் கொள்ளலாமல் அதனை எதிர்க்க அவர் எடுக்கும் முயற்சிகளில் தெறிக்கும் கோபம், கள்ளம் கபடமில்லாமல் ஜோதியுடன் பழகும் பாசம், அனைத்தையும் அவர் முகமும் உடல் மொழியும் காட்டுகிறது. முக்கியமாக ஜோதியுடன் பழகுவது ஒரு கயிற்றின் மேல் நடப்பதற்கு ஒப்பாகும். கோட்டின் இந்தப் பக்கம் இருந்தால் நான் நல்லவன் அந்தப் பக்கம் போயிட்டா நான் ரொம்ப கேட்டவன் வசனம் மாதிரி மெல்லிய கோட்டு வித்தியாசத்தில் காட்டும் முகபாவங்கள் அந்த உணர்வுகளை காதலாக மாற்றி அவர் பத்திரத்தையே கொச்சைப் படுத்திவிடும். அவ்வாறு ஆகாமல் சரியாக கையாண்டு பாத்திரத்தின் தன்மையை காப்பாற்றுகிறார்.

ஜோதி மகாலட்சுமியாக ஆனந்தி சிறப்பாக செய்திருக்கிறார். பெரிய வீட்டுப் பெண், உயர்ந்த ஜாதிப் பெண், எதற்காகவும் வாழ்க்கையில் கெஞ்சியதில்லை, அவமானப்பட்டதில்லை! அழுத்தப்பட்ட சமூகத்தின் வலி தெரியாமல் அது வரை வாழ்ந்தவர், படத்தின் இறுதி வரையிலும் உணராமலேயும் இருக்கிறார் பரியேறும் பெருமாள் தயவில். பாத்திரத்துக்கு சரியாகப் பொருந்துகிறார். கதிர் விலகிப் போவது புரியாமல் அழுது வேதனைப் படுவது, வெளி உலகமே தெரியாமல் தன்னை சுற்றி மட்டுமே உலகம் இயங்குவதாக நினைக்கும் ஒரு privileged பெண் பாத்திரத்தை பாங்குடன் செய்திருக்கிறார். அவரால் தைரியமாக காதலிக்க முடிகிறது அதை சொல்லவும் முடிகிறது. ஆனால் கதிர் ஜோதி மேல் கொண்டிருப்பது என்ன மாதிரி உணர்வு என்று கதிர் புரிந்து கொள்ளும் முன்னரே அந்த உணர்ச்சி சின்னாபின்னம் ஆக்கப்படுகிறது. இரு பாத்திரங்குளுக்குமான இந்த வித்தியாசம் சொல்கிறது ஜாதியின் சமூக அவலத்தை.

ஜோதியின் அப்பாவாக வரும் பாத்திரம் (G.மாரிமுத்து)முழு வில்லனும் இல்லை, நல்லவரும் இல்லை. கதிரின் கதையை முடிக்கவும் குடும்பத்தினருடன் ஒத்துக் கொள்கிறார், அது அந்த சமூகத்துக்கு இயல்பான ஒன்றாகவும் கட்டப்படுகிறது. அவரின் தவறின் வீர்யம் கூட அவருக்கு உரைக்கவில்லை என்பதும் நமக்குப் புரிகிறது. ஆனால் அதே சமயம் அவருக்குள் இருக்கும் மனசாட்சி அவருக்குக் கதிரை எளிதாகப் போட்டுத் தள்ளும் வாய்ப்பு வரும்போது தடுத்து விடுகிறது என்பதையும் பார்க்கிறோம். இறுதியில் கதிருடன் நடக்கும் உரையாடலில் அவரின் conundrum புரிகிறது. அது தான் நிதர்சனமும் கூட!

பெண் வேஷமிடும் கூத்து நடிகராக கதிரின் அப்பா பிரமாதமான பாத்திரப் படைப்பு மட்டுமல்ல கதைக்கு நல்ல பரிமாணத்தைக் கொடுத்து உயர்த்துகிறது. அவரை வில்லன் மாணவர் அவமானப்படுத்தி ஓடவிடும் காட்சியில் கண்ணில் நீர் துளிக்காதவர்கள் இருக்க முடியாது.

சர்க்கரை வியாதி எப்படி ஒரு சைலன்ட் கில்லரோ அது போல் இப்படத்தில் ஒரு சைலன்ட் கில்லர் பகீர் ரகத்தில் உள்ளார். ஜாதி மேல் உள்ள பற்று என்பது கடவுள் வழிபாட்டையும் விட உக்கிரமாக கருதப் படுவதை இவரின் செயல்கள் நமக்குப் புரியவைக்கின்றன. இவரின் இறுதி முடிவு இவரின் கொள்கைப் பிடிப்பின் தீவிரத்தைக் காட்டுகிறது.

இன்னும் மற்றப் பாத்திரங்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம், முதலில் வரும் கல்லூரி முதல்வர், அடுத்து இரண்டாவதாக வரும் முதல்வர், இதர பேராசிரியர்கள், கிராமத்து மனிதர்கள், கல்லூரி நண்பர்கள் அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். யோகி பாபுவின் பங்களிப்பு அருமை. கல்லூரியில் ஆங்கிலம் தெரியாமல் கதிரும் அவரும் செய்யும் அலப்பறைகள் நல்ல நகைச்சுவை ரகம். தந்தையாக நடிக்க கதிர் அழைத்துவரும் சண்முகராஜனும் நன்றாக செய்திருக்கிறார். பரியேறும் பெருமாள், ஜோதி மகாலட்சுமி தான் முக்கிய கதாபாத்திரங்கள் எனினும் படத்தில் உள்ள அனைத்துப் பாத்திரங்களும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். திரைக்கதையின் சிறப்பு அது.

சந்தோஷ் நாராயணன் இசை வேற லெவல். இதில் கீழ் ஜாதி மக்களின் வாழ்க்கையே இசையோடு பின்னிப் பிணைந்துள்ள ஒன்றாகும். அவர்களின் சோகத்துக்கும் வடிகால் இசை தான். அவர்களின் உற்சாகத்துக்கும் ஊக்க சக்தி இசை தான். அவர்கள் வாழ்க்கையின் மேல் வைக்கும் நம்பிக்கைக்கும் பாடல்களில் உள்ள வரிகள் தாம் காரணம். உணர்ச்சி பிழம்பாக ஒலிக்கிறது ஒவ்வொரு பாடலும். நம் காதுக்கு இனிமையா என்பதை விட கதைக்குப் பொருத்தமா என்பதை தான் கவனிக்க வேண்டும். இதில் ‘கருப்பி’ பாடல் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. அந்தப் பாடலில் அவ்வளவு கோபமும் ஆவேசமும் வெளிப்பதுவதில் தான் பரியேறும் பெருமாளின் நிலையையும் அந்த ஜாதி மக்களின் இயலாமை நிலையையும் நமக்கு உணர்த்துகிறது. தெருக்கூத்து நடனத்துக்கு வரும் பாடலும் அருமை. இசையால் படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார். பொட்டக் காட்டில் பூவாசம் அழகான மெலடி!

எப்படி மேற்கு தொடர்ச்சி மலை இயல்பான வாழ்வியலை காட்டியதோ அதே மாதிரி இந்தப் படமும் எந்த அரிதாரமும் பூசாமல் ஜாதி தரும் அழுத்தத்தோடு எளிய மக்கள் வலியோடு வாழும் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுகிறது. வசனங்கள் குறைவு. ஒரு பக்க அறிவுரையை எந்த பாத்திரமும் தருவதில்லை. சம்பவங்களின் காட்சிப் படுத்தலே சொல்ல வந்ததை நச்சென்று சொல்லிவிடுகிறது. ஆனால் சொல்லப்படும் வசன்னங்கள் அனைத்துமே கூர்மை.

அரசியல்வாதி, அடியாள், ரவுடி இவர்களை வைத்தான சாதிக் கதை இல்லை இது. உண்மையாக நடக்கும் போராட்டத்தை, கீழ் ஜாதியினரின் இயலாமையை, மேல் ஜாதியினரின் சலுகைகளைக் காட்டி மேல் ஜாதியினர் மனம் மாறாத வரையில் கீழ் ஜாதியினர் முன்னேற வழி இல்லை என்பதையும் தெளிவாகக் காட்டியுள்ளார் இயக்குநர். அதுவும் கடைசிக் காட்சியின் குறியீடு அற்புதம். கதிர் பாத்திரம் யாரையும் பழி தீர்க்க ஆசைப்படுவதில்லை. அது ஒரு நல்ல மெஸ்சேஜ்.

முதலில் பெரிய ஓபனிங் இல்லாவிட்டாலும் இப்பொழுது அரங்கம் நிறைந்த காட்சிகளாக சென்னையில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக திரையரங்கில் சென்று படத்தைப் பார்க்கவும். சமூகப் பிரச்சனைகளில் மிக முக்கியமானது ஜாதி சார்ந்தது. ஜாதி விஷயத்தில் நாம் மாறாவிட்டாலும் என்ன நடக்கிறது என்பதையாவது புரிந்து கொள்ள இப்படம் உதவும்.

செக்கச் சிவந்த வானம் – திரை விமர்சனம்

மணி ரத்னம் கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்குப் பின் மக்களுக்குப் பிடிக்கும் வகையில் ஜனரஞ்சகமான ஒரு படத்தைத் தந்துள்ளார். எத்தனையோ டான் கதைகளை பார்த்துவிட்டோம் ஆனால் இது இயக்குநர் முத்திரை பதிந்த புது முயற்சி. திமுகவில் தலைமை பொறுப்புக்கு வர சண்டை ஏதும் வரவில்லை. ஆனால் வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துக் கூட இக்கதையை மணி ரத்னம் புனைந்திருக்கலாம். இது என் யூகம். அதில் ஒரு வசனம் அண்ணா நீ தானே ஆரம்பித்தாய் என்று ஒரு தம்பி பேசும் வசனம் என்னை அப்படி நினைக்கத் தூண்டியது. எதேச்சையான ஒரு வசனமாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் அப்பா டானிற்குப் பிறகு மூன்று மகன்களிடையே யார் அந்த இடத்துக்கு வருவது என்கிற போட்டியும் மணிக்கு இந்தப் படத்தின் கரு உதிக்கக் காரணமாக இருக்கலாம் என்று எண்ண வைத்தது.

பிரகாஷ் ராஜ், ஜெயசுதா பெற்றோர் பாகங்களில் அருமையாக நடித்திருக்கிறார்கள். பண்பட்ட நடிகர்கள், சொன்னதற்கு மேல் செய்து கொடுப்பவர்கள். பாசகாரக் குடும்பத் தலைவனாக, கள்ளச் சந்தை/சமூக விரோத செயல்கள் நடத்துவதில் பெரிய அளவில் கொடிக்கட்டிப் பறக்கிறவராக ஓவர் ஏக்டிங் இல்லாமல் செய்திருக்கிறார். ஜெயசுதா அன்பு மனைவியாக பிற்பாடு மகன்களிடையே சமரசம் செய்து எப்படியாவது குடும்பத்தில் அமைதி நிலவ, தலைமைப் பொறுப்பை ஏற்க நடக்கும் சகோதரப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைபவராக வெகு பாங்காகக் பாத்திரத்தில் பரிமளிக்கிறார். எதிரணி டாணாக தியாகராஜன். நல்ல பொருத்தம்! நடிகர்களை சரியாக பாத்திரங்களுக்குத் தேர்வு செய்து இயக்குவதை எளிதாக்கிக் கொண்டுள்ளார் மணி என்றே சொல்ல வேண்டும்.

தந்தையுடன் கூடவே இருந்து அவர் சொல்வதை எல்லாம் செய்யும் பொறுப்புள்ள முதல் மகனாக அர்விந்த் சாமி, அதே போல பொறுப்புள்ள மூத்த மருமகளாக அர்விந்த் சாமியின் மனைவியாக ஜோதிகா. இரண்டாவது மகனாக துபாயில் ஷேக்குகளுடன் கடத்தல் வியாபாரம் செய்யும் அருண் விஜய், அவர் மனைவியாக சிலோன் தமிழராக ஐஸ்வர்யா ராஜேஷ், மூன்றாவது மகனாக செர்பியாவில் ஆயுதங்கள்/தளவாடங்கள் விற்கும் STR, அவர் காதலியாக பின் மனைவியாகும் டயானா என்று பெரிய நடிகர் பட்டியலைப் படம் தாங்கி நின்றாலும் ஒவ்வொருவர் பாத்திரமும் கவனத்துடன் செதுக்கப்பட்டு ஒன்றுக்கு ஒன்று குறைவில்லாமல் எல்லாருக்கும் சம பங்கு கிடைக்குமாறு செய்ததில் தான் மணி ரத்னம் சிறப்பு மென்ஷன் பெறுகிறார். விஜய் சேதுபதி அர்விந்த் சாமியின் நண்பராக ஓர் இறந்த டானின் மகனாக போலிஸ் இன்ஸ்பெக்டராக இத்தனை பாத்திரங்களுக்கு நடுவிலும் சம பங்குடன் வளைய வருகிறார். என் வழி தனி வழின்னு எல்லார் நடிப்பையும் அசால்டா தன் கேசுவல் நடிப்பால் தூக்கி சாப்பிட்டு விடுகிறார்.

ஒரு சமயம் இது அர்விந்த் சாமி படம், இது STR படம், அட இல்லை அருண் விஜய் படம், இல்லை ஜோ படம், இல்லை கண்டிப்பாக விஜய் சேதுபதி படம் என்று எண்ண வைத்துக் கடைசியில் இது மணி ரத்னம் படம் என்று புரிய வைக்கிறார் இயக்குநர். நடித்த அனைவருமே அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

உடைகள் படு கச்சிதம். அருண் விஜய், STR இருவருக்குமே மிக ஸ்டைலிஷான உடைகள். ஜோதிகாவின் படங்களும் அழகு. ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பீட்டளவில் சிறிய பாத்திரம் தான். ஆனால் அதிலும் முத்திரை பதிக்கிறார். அதிதி ராவ் ஹைதாரியின் பங்கும் சிறியதே ஆனால் அதையும் அழுத்தமானாதாக பதிகிறது அவர் நடிப்பாலும் பாத்திரப் படைப்பாலும்.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு கண்ணுக்கு விருந்து என்று சொல்லவும் வேண்டுமோ! அதுவும் ஐரோப்பியாவிலும் துபாயிலுமான காட்சிகளின் வண்ணக் கலவையும் கழுகுப் பார்வையில் விரியும் காட்சிகளும் அற்புதம். பாடல்கள் முழுதாகப் படத்தில் பயன்படுத்தப் படவில்லை என்றே நினைக்கிறேன். மேலும் பாடல்கள் பின்னணியாக தான் ஒலிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் நன்று. ஸ்ரீகர் பிராசாதின் படத்தொகுப்பும் நன்றே. இவ்வளவு பாத்திரங்களை வைத்து சிக்கலில்லாமல் படத்தொகுப்பை செய்து கதையை நேர்த்தியாக நகர்த்தியிருக்கிறார்.

படம் முடியும்போது இவ்வளவு சிக்கல் நிறைந்த ஒரு டான் வாழ்க்கையை ஏன் ஒருவர் தேர்ந்தெடுக்கிறார் என்று தோன்றும். பல சமயங்களில் அது திணிக்கப்பட்டு அதிலிருந்து மீள முடியாமல் அதுவே வாழ்க்கையாக அமைந்து விடுகிறது முதல் தலைமுறை டானுக்கு. அடுத்தத் தலைமுறைகளுக்கு அந்தப் பதவியில் கொடுக்கும் ஏராளமான பணமும் செல்வாக்கும் அந்தப் பாதையைத் தொடர தூண்டுதலாக அமைகிறது. போலிஸ் பாத்திரங்களின் பங்களிப்பு வெகு subtle. அதே சமயம் அவர்கள் நல்ல முறையில் காட்டப்படுகின்றன.

என்றுமே திரைக் கதை தான் ராஜா. அதைப் புரிந்து மணி படம் இயக்கியிருப்பது அவருக்கான வெற்றியைக் கொடுத்திருக்கிறது. எத்தனை கதாப் பாத்திரங்கள்! எத்தனை முன்னணி நடிகர்கள்! இவர்கள் அனைவரையும் அருமையாக இயக்கி அனைத்து நடிகர்களுக்கும் வேண்டிய முக்கியத்துவம் கொடுத்து சிறப்பான பங்களிப்பைப் பெற்று வெற்றிப் படத்தைத் தந்திருக்கும் அவருக்கும் அவர் குழுவுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

Previous Older Entries