சூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்

 

திரைக்கதையில் 100/100 பெறுகிறது சூப்பர் டீலக்ஸ் திரைப்படம். திரைக்கதை நன்கு அமைந்தாலே பாதி கிணறு தாண்டிய நிலை தான். அதில் மேலும் தியாகராஜன் குமாரராஜா மாதிரி ஓர் இயக்குநர் அக்கதையை இயக்கும்போது நல்ல ஒரு வெற்றி படமாக அமைய வாய்ப்புகள் அதிகமாகிறது. ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு எட்டு வருடங்கள் கழித்து இப்படம் அவர் எழுதி இயக்கி வெளிவந்துள்ளது. நிச்சயமாக ஆரண்ய காண்டத்தைவிட பல அதிக பரிமாணங்களைக் கொண்டு எழுத்திலும் இயக்கத்திலும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது இப்படம். எழுத்தில் மிஷ்கின், நலன் குமாரசாமி. நீலன் கெ.சேகர் ஆகியோர் தியாகராஜன் குமாரராஜாவுடன் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். வசனங்கள் அருமை!

நான்கு முக்கிய கதைகள, நிறைய கதாப்பாத்திரங்கள், சமூகத்திலுள்ளமிகவும் சங்கடமான பாலியல் சார்ந்த பிரச்சினைகள் இவை அனைத்தையும் சுவைபட நகைச்சுவை இழையோட திரைப்படமாக அமைத்துக் கொடுத்திருப்பது தியாகராஜா குமாரவேல் குழுமத்தின் வெற்றி. இந்தப் படம் அடல்ட்ஸ் ஒன்லி படம். ஆனாலும் எப்பவும் போல நம் மக்கள் குழந்தைகளுடன் தான் திரை அரங்கத்திற்கு வந்திருந்தனர். அதில் ஒரு குழந்தை படத்தின் நடுவில் சமந்தா திரையில் வரும்போது அம்மா இந்த அக்கா குட் கிர்லா பேட் கிர்லா என்று உரக்க கேட்டு திரையரங்கில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. நாயகன் படத்தின் நீங்க நல்லவரா கெட்டவரா என்ற கேள்விக்கு இணையானது தான் இந்தக் கேள்வியும். ஏனெனில் இயக்குநர் கதாப்பாத்திரங்களை வெள்ளையும் கருப்பும் கலந்து நாம் வாழ்க்கையில் சந்திக்கும் உண்மை மனிதர்களை பிரதிபலிக்கும் வகையிலேயே படைத்திருப்பது தான்.

ஃபஹத் ஃபாசல் சமந்தா நடிப்பு மிகப் பிரமாதம். வஞ்சிக்கப்பட்ட கணவனாக அவர் புலம்பும் காட்சிகள் அருமை. அவர் பாத்திரத்துக்கான அவருடைய வசனங்கள் குறிப்பாக அரசியல் மற்றும் சமூகம் சார்ந்தவை அற்புதம். இயல்பாக நகைச்சுவை ததும்பியதாக உள்ளது. அதை அவர் வெளிப்படுத்தும் விதமும் அருமை. அவர்கள் கதையில் வரும் இதர துணைப்பத்திரங்கள் யதார்த்தமான சிரிப்பை வரவழைப்பவர்களாக  உள்ளனர். பாராட்டு வசனங்களுக்கு. முதல் பாதியில் திடுக் நிகழ்வுடன் தொடங்கும் இக்கதை பின் பாதியில் இழுவையாக மாறி விடுவதை குமாரராஜா தடுக்காதது அவரின் தோல்வி. முக்கியமாக சமந்தா பகத் பாசல் கதையில் சப் இன்ஸ்பெக்டர் பெர்லின் (பகவதி பெருமாள் பக்ஷ்) நுழைந்தவுடன் நடக்கும் மெலோடிராமா (வன்புணர்வு முயற்சி) நிறைய பழைய படங்களில் பார்த்தது. கோடி காண்பித்தாலே பார்ப்பவர்கள் புரிந்து கொள்வர். ஆனால் அதை மிகவும் கொடூரமாக காட்டிக் கொண்டே இருந்தது பார்வையாளர் பொறுமையை சோதிக்கிறது. அதுவும் அதற்கு முன் பெர்லின் விஜய் சேதுபதியை வேண்டிய அளவு படுத்தியதை பார்த்த பின் இதையும் அதிகமாக பார்க்க வைத்திருக்க வேண்டியதில்லை. மூன்று மணி நேரத்தை இந்தக் காட்சிகளை கத்திரித்தாலே நேரம் குறைந்திருக்கும்.

பொருளாதாரத்தில் கீழ் நிலையிலுள்ள விடலைப் பையன்கள் பகுதி அவர்கள் வயது பொறுப்பின்மை, ஆசை, கோபம், அவமானம், நம்பிக்கை தகர்தல் ஆகியவைகளை அவர்கள் எதிர்கொள்ளும்போது அவர்கள் நிலை என்ன என்பதை மிகவும் யதார்த்தமாக காட்டியுள்ளார். நான்கு பையன்களும் மிக மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். இக்கதையில் வரும் ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் பகுதியும் தினப்படி வாழ்வில் நாம்பார்க்காத ஒன்று ஆனால் ஆங்காங்கே நடந்துகொண்டிருப்பது தான். கணவன் சரியாக அமையாவிட்டால் மனைவி போகும் பாதை எப்படியாக இருக்கும் அதனால் பாதிப்படையும் பிள்ளைகள் நிலை அனைத்தும் நம் சமூகம் கண்டும் காணாமல் கடந்து செல்கிறது. பாதிப்படைபவர்களுக்கு மட்டுமே அதன் தாக்கம் புரியும். இதில் ரம்யா கிருஷ்ணன் தன் மகனை காப்பாற்ற மருத்துவமனையில் பணத்துக்காக போராடும் காட்சியில் ஒரு தாயை மட்டுமே பார்க்க முடிகிறது, அவர் வாழ்க்கையை நடத்த அவர் தேர்ந்தெடுத்த வழியை அங்கே நாம் காண்பதில்லை.

விஜய் சேதுபதியின் மகனாக வரும் அஸ்வந்த் அசோக் குமார் எப்படி ஒரு இயக்குநர் சொல்லிக் கொடுத்தால் கூட இந்த மாதிரி நடித்திருக்க முடியும் என்று தெரியவில்லை! விஜய் சேதுபதிக்கு இந்தப் பையனின் முகபாவங்களை பார்த்தே நெகிழ்ந்திருப்பார் மகிழ்ந்திருப்பார் அவர் செய்ய வேண்டிய முகபாவங்கள் தானாக வந்திருக்கும், நடிக்கத் தேவையே இருந்திருக்காது. அந்த அளவு நிபந்தனையற்ற அன்பை வெளிக்காட்டும் ஒரு கதாப்பாத்திரமாக அவன் வருகிறான். அற்புதமான பாத்திரப் படைப்பு+நடிப்பு. அதே மாதிரி விஜய் சேதுபதி மனைவியாக வரும் காயத்திரியும் பாத்திரத்தை உணர்ந்து மிக அழகாக நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியின் கண்கள் உணர்சிகளை கொட்டுகின்றன. அவரின் நிலையை உணர்த்துகிறது அவர் பேசும் வசனங்கள். அந்தப் பகுதியை எழுதியவருக்கு பாராட்டுகள்.

யுவனின் பின்னணி இசை மிக நன்றாக உள்ளது. அவர் அப்பா பாதி படத்துக்கு இசை அமைத்திருந்தாலும் எங்கெங்கு எந்தெந்த பாடல்களை சேர்த்தால் படத்துக்கு சரியாக வரும் என்ற முடிவை சரியாக எடுத்திருக்கிறார் யுவன். இசை இருப்பதே தெரியாமல் இருக்கும் படம் இது. மிக மிக நல்ல இசையமைப்பு! பல வருடங்களுக்குப் பிறகு யுவன் ஜொலிக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை பாத்திரத்தை எடுத்து நடித்ததற்கும் சமந்தா “நல்ல பெண்” என்று நாம் முத்திரை குத்தும் பாத்திரமல்லாத பாத்திரத்தைத் துணிந்து எடுத்து நடித்ததற்கும் பாராட்டுகள். முன்பெல்லாம் திருமணம் முடிந்த பிறகு கதாநாயகிகளுக்கு சினிமா கெரியர் முடிந்துவிடும். பிறகு தான் நாயகியாக நடித்த ஹீரோவுக்கே அம்மாவாக நடிப்பார். சமந்தா அந்த நிலையை உடைத்தெறிந்து பாலிவுட், ஹாலிவுட்டில் இருப்பது போல் திருமணத்திற்கு பிறகும் சர்ச்சைக்குரிய பாத்திரத்தைத் துணிந்து ஏற்று நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்குத் திருநங்கை பாத்திரம் anti hero பாத்திரம், கொஞ்சம் கூட கோபத்தை வீராவேசமாக கட்டமுடியாது. எல்லாராலும் ஏளனப்படுத்தப்படும் அருவருப்பாக பார்க்க வைக்கும் பாத்திரம். அதை துணிந்து செய்ததற்கு பாராட்டுகள். கோபத்தை காட்ட முடியாத தன் அவல நிலையிலும் சாபம் விட்டு தன் கோபத்தை வெளிக்காட்டும் இடம் அற்புதம். (இறுதியில் அந்த சாபம் பலிப்பது நல்ல directorial touch 🙂 )

இந்தப் படத்தில் பாத்திரத்தில் சரியாக ஒட்டாத நடிகர் என்றால் அது பக்ஷ் தான். ரொம்பக் கொடூரமாக சித்தரிக்கப்பட்டிருக்கார் ஆனால் அவர் நடிப்பு அவ்வளவாக நம்மை ஈர்க்கவில்லை, வெறுக்கப்பட வேண்டிய பாத்திரம் எரிச்சல் பட வைக்கிறது. தவறு கண்டிப்பாக இயக்குனருடையது தான். சவமாக கதை முழுதும் பயணிக்கும் பாத்திரம் பற்றி சொல்லாமல் இருக்கக் கூடாது. அவரின் நடிப்பு மகளிர் மட்டும் நாகேஷின் நடிப்புக்கு இணையானது அல்ல என்றாலும் கதையின் திருப்பத்திற்கு, சைலன்ட் கவுன்சலராக சமந்தா பகத் பாசல் மணவாழ்க்கை பிரச்சினைகளுக்கு அந்த டெட் பாடியை பயன்படுத்தியிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.

ஒரு பெரிய குழப்பம் கதை நடக்கும் கால கட்டம்! எந்தக் காலகட்டத்தில் கதை நடக்கிறது என்று சரியாக புரியவில்லை. செல்போனில் ஒரு பாத்திரம் படம் பிடிக்கிறது. அதனால் இப்பொழுது நடக்கும் கதை என்று எடுத்துக் கொள்ளலாம். சுனாமி ரெபரன்ஸ் நிறைய வருகிறது. சில நிகழ்ச்சிகளை பார்க்கும்போது சுனாமி நடந்து பத்து வருடத்திற்குள் நடக்கும் கதை போல் உள்ளது. ஆனால் டிமாநிடைசேஷனும் வருகிறது. அப்போ சமீபத்திய காலகட்டம் என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் ஒருகதையில் விடலைப் பையன்கள் பலான படம் பார்க்க ஒரு ஷேடி சிடி கடைக்குப் போய் பெற்றோர்கள் இல்லாத போது டெக்கில் படம் பார்ப்பதாக வருகிறது. இந்தக் காலத்தில் ஏன் இந்த வழி? செல்போனில் எல்லாமே பார்க்க முடியும். இணையத்தில் எல்லாமே கொட்டிக் கிடக்கிறது. அடுத்து ஒரு பழைய திரையரகத்திற்கும் இந்த மாதிரி படம் பார்க்க செல்கிறார்கள். அவ்வளவு மெனக்கெடனுமா இப்போ என்று தோன்றுகிறது. டிக் டோக்கிலேயே இப்போ ஆல்மோஸ்ட் எல்லாம் வந்துவிடுகிறதே. கொஞ்சம் சொதப்பல் தான் அந்தப் பகுதியில்! பின்னணி இசையில் இளையராஜா பாடல்கள் நிறைய சேர்க்கப்பட்டு படத்தைப் பார்க்கும்போதே ஒரு போதை ஏற்படுகிறது. ஆனால் அதிலும் காலக்கட்ட கணிப்பில் ஒரு சிக்கல், பொதுவாக எண்பதுகள் தொன்னூறுகள் காலக் கட்டத்தை  காட்ட தான் ராஜா பாடல்கள் பின்னணியில் ஒலிக்கும்.

எந்த ஊரில் நடக்கிறது என்றும் புரியவில்லை. சென்னையா புறநகர் பகுதியா? விஜய் சேதுபதி மகனை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு செல்லும் வழி எதோ மும்பையின் கச்சடா பகுதி மாதிரி உள்ளது, அவர் வீடோ செட்டிநாட்டு வீடு மாதிரி இருக்கு. நகர சாயலே இல்லை பல இடங்களில் அதாவது மருத்துவமனை, காவல் நிலையம் முதலிய இடங்களில். இப்பொழுது நடக்கும் கதை என்றால் காவல் நிலையம் மருத்துவமனை கட்டடங்கள் மிகவும் நன்றாக இருக்கவேண்டும். எல்லாம் பாடாவதியாக உள்ளன.

உணர்ச்சிகளைப் பற்றிய படம் தான் என்றாலும் உணர்ச்சி வசப்பட்டு நாம் படத்துடன் ரொம்ப ஒன்ற முடிவதில்லை. ஏனென்றால் நேரியலாக கதை சொல்லப்படவில்லை. நான்கு காதைகள் கத்திரித்து கத்திரித்து நம் முன் வைக்கப்படுவது காரணமாகிறது. நேரக்கோடும் ஒரு பிரச்சினை. அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரே நாளில் காலையில் தொடங்கி இரவில் முடிகிறது. அதில் சில சந்திப்புகள் உதாரணத்துக்கு ஒரு கதையில் இருக்கும் மிஷ்கின்னும் இன்னொரு கதையில் இருக்கும் விஜய் சேதுபதியும் சந்திப்பது எந்த நேரத்தில் என்று புரியவில்லை. ஆனாலும் படத்தை நேர்த்தியாக படத் தொகுப்பாளர் சத்தியராஜ் நடராஜன் தொகுத்தளித்திருக்கிறார். இந்தப் படத்தை தொகுப்பது எளிதன்று. ஒளிப்பதிவாளர்கள் நிரவ் ஷா, பி.எஸ்.வினோத் கதாப்பாத்திரங்களுடன் பயணித்திருக்கிறார்கள். படத்தின் வண்ணம் மூலம் படத்தின் மனநிலையை பிரதிபலிக்க வைத்திருக்கிறார்கள். குறுகலான தெருக்களில், சின்ன சின்ன வீடுகள் குடியிருப்புகளில் தான் கதைகள் நடக்கின்றன. அந்த இறுக்கமான இடச் சூழலை பார்ப்பவரும் உணரும் வண்ணம் ஒளிப்பதவு செய்திருப்பது அவர்களின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஒளிப்பதிவாளர்களும் ஜாம்பவான்கள் தானே!

பாலியல் சார்ந்த காட்சிகள், வசனங்கள் வெளிப்படையாக உள்ளன. பொதுவாக நாம் எதெல்லாம் சமூகத்தில் தவறு என்று சொல்லுவோமோ அதை செய்பவர்கள் தான் இந்தப் படத்தின் முக்கிய பாத்திரங்கள். அதை செய்பவர்களும் சமந்தாவாகட்டும் ரம்யா கிருஷ்ணன் ஆகட்டும் விஜய் சேதுபதி ஆகட்டும் அதை தவறாக நினைக்காமல் இயல்பு அல்லது செய்ய வண்டிய நிர்பந்தம் அதனால் தவறில்லை அல்லது வேறு வழியில்லை என்கிற தொனியில் குற்ற உணர்ச்சி இல்லாமல் செய்கிறார்கள். சப் இன்ஸ்பெக்டர் பக்ஷ் செய்யும் அட்டுழியங்களும் காவல் துறையில் நடப்பவை என்பதாக உள்ளது.

குழப்பத்தில் அமைதி மாதிரியான நிலையை இந்தப் படத்தில் உணரலாம். இந்தப் படத்தை காட்சிக்குக் காட்சி ஆராய்ந்து பல பொழிப்புரைகள் கண்டிப்பாக வரும். எனக்கே மறுமுறை பார்த்து விரிவாக எழுத ஆர்வம் உள்ளது. அந்த அளவு இந்தப் படம் பன்முகங்களை கொண்டுள்ளது. மிக மிக விரிவாக திட்டமிட்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. பல நுணுக்கமான விஷயங்களை கொண்டுள்ளது. இறுதியில் sci-fi எல்லாம் வருவது வேற லெவல்! சொல்லப்படும் விஷயம் நல்லதா கெட்டதா என்று விவாதிக்கலாம். ஆனால் அந்த விவாதத்தை ஏற்படுத்த முனைந்திருப்பது தான் இயக்குநரின் குறிக்கோளுமாக இருக்கும் என்று நினைக்கிறேன். வயதுக்கு வந்தவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய படம்.

 

 

தேவ் – திரை விமர்சனம்

சில படங்கள் எல்லாம் எதுக்கு எடுக்கறாங்கன்னே புரிவதில்லை. தயாரிப்பாளரிடம் பணம் கொட்டிக் கிடந்தால் தான தர்மமோ அல்லது கலைத் துறையைச் சார்ந்தவர்களுக்கு ஏதாவது உதவித் தொகையோ கொடுத்து மகிழலாம். இப்படி படம் எடுத்து படுத்த வேண்டாம். கார்த்தியும் தன் பட பட்டியலில் இன்னொரு படம் சேர்த்தாகிவிட்டது என்று எண்ணிக்கைக்காக இந்தப் படத்தை செய்தாரா என்றும் புரியவில்லை. காதலர் தினத்துக்கு ஒரு காதல் கதை வைத்தத் திரைப்படத்தை வெளியிடனும்னு முயற்சி செஞ்சிருக்காங்க. முயற்சி மட்டும் தான். கார்த்தியின் மற்றைய கமர்ஷியல் படங்களைவிட கொஞ்சம் கம்மி தான் இந்தப் படம். புதுமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் 2 மணி நாற்பது நிமிடங்களுக்கு நல்லா இழுத்து வெச்சு அறுக்கிறார்.

கார்த்தி, ஆர்.ஜெ. விக்னேஷ், அமுதா ஸ்ரீநிவாசன் மூன்று நண்பர்களும் பணத்துக்குக் கவலை இல்லாத இருபத்தி எட்டு வயது இளைஞர்கள். யுக்ரேயினில் போய் மேல் படிப்புப் படித்து திரும்பி வருகின்றனர். இதில் கார்த்தியின் அப்பா பிரகாஷ் ராஜ் பெரும் பணக்காரர் என்று தெரிகிறது. பணத்தைப் பற்றி கவலை இல்லாததால் கார்த்திக்கு அட்வென்சரில் மோகம் அதிகம், அதனை செய்வதே வாழ்க்கை என்று இருக்கிறார். ஆனால் அதை வசனத்தில் மட்டும் சொன்னால் சாகசம் புரிவதில் ஆர்வம் உள்ளவர் என்று எப்படி புரிந்து கொள்வது? இது நாவல் அல்லவே, திரைப்படம்!முதல் பாதி முழுக்க சவசவ என்று போகிறது. நாயகி ரகுல் பரீத் சிங் 25 வயதில் பெரிய பிசினஸ் மேக்னெட், அமேரிக்கா வாழ் பெண்மணி. அட்வெஞ்சருக்காக அவரை லவ் பண்ண தூண்டுகின்றனர் நண்பர்கள் இருவரும். அதனால் கார்த்தியும் அவருக்கு பேஸ்புக்கில் ப்ரென்ட் ரிக்வெஸ்ட் கொடுத்து ஒப்புதலுக்குக் காத்து நிற்கிறார். ஆனால் ஒப்புதல் வரவில்லை. அதற்குப் பதில் ரகுல் ப்ரீத்தே பிசினஸ் விஷயமாக சென்னை வந்துவிடுகிறார். பின் இவர் அவரை பாலோ செய்து இத்யாதி இத்யாதி. அவர் அம்மா ரம்யா கிருஷ்ணன். பாவம் பிரகாஷ் ராஜும் சரி ரம்யா கிருஷ்ணனும் சரி ரொம்ப சாதாரண பாத்திரங்களில் வந்து போகின்றனர் . அனால் அவர்கள் அனுபவம் அந்த உப்பு சப்பில்லாத பாத்திரங்களையும் நன்றாக செய்ய வைத்திருக்கிறது.

எல்லாருமே நம் அனுபவத்தினால் ஏற்பட்ட விருப்பு வெறுப்புக்களுடன் தான் வளைய வருகிறோம். ரகுல் ப்ரீத்திற்கு தன் அப்பா தன் அம்மாவை கைவிட்ட கோபத்தினால் ஆண்கள் மேல் நம்பிக்கையின்மையும் வெறுப்பும் உள் மனத்தில் ஆழ பதிந்து விடுகிறது. கார்த்திக்கு அம்மா இறந்துவிட்டதால் நிபந்தையற்ற அன்பைப் பொழியும் அப்பாவால் வளர்க்கப்பட்டு சூப்பர் ஆணாக உள்ளார். இருவருக்கும் காதல் உண்டான பிறகு கார்த்தி எப்பொழுதும் ரகுலை கைவிட மாட்டேன் என்று அழுத்தி நம்பும்படி தெளிவாக சொன்ன பிறகு ரகுல் முழுதாக கார்த்தியை நம்பத் தொடங்குகிறார். ஆனாலும் அவர்கள் காதலில் பிரிவு ஏற்படுகிறது. ரகுலுக்கு கார்த்தி தன்னோடு மட்டுமே ஜாலியா வேலையில்லா பட்டதாரியாக  இருக்க வேண்டும், அப்பா தொழிலை எல்லாம் பார்க்கக்கூடாது, அப்படி பார்த்தால் தன் மேல் அவர் செலுத்தும் கவனம் போய்விடும் என்று கோபப்பட்டு பிரிந்து விடுகிறார். இறுதியில் உன்னதமான காதலின் ஆழத்தால் இருவரும் ஒன்றாக இணைகிறார்கள்.

இதில் முதல் காட்சியும் கடைசி காட்சிகளும் கார்த்தி எவரெஸ்ட் சிகரத்தைத் தொட இமய மலை ஏறுவதாக காட்டப்படுகிறது. எவரெஸ்ட் மலை, இமய மலை எல்லாமே CG தான். நாம் நம் பிள்ளைகளுக்குப் பள்ளி ப்ராஜெக்டுக்குப் பனி மலை செய்து கொடுப்போம். பல இடங்களில் மலை சிகரமும் பனி வெளியும் கிட்டத் தட்ட அந்த மாதிரி காட்சிகளாக உள்ளன. சூப்பர் இயக்குநர் சார்!

பொதுவாக காதல் கதைகளுக்குப் பாடல்கள் பலமாக இருக்க வேண்டும். ஹேரிஸ் ஜெயராஜ் அருமையாக சொதப்பியிருக்கிறார். ஒரு பாடல் கூட நினைவில் இல்லை. இந்தக் கதையில் லாஜிக் தவறுகள் எல்லாம் குறிப்பிட வேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம். ஆனாலும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.சென்னையில் இருந்து மும்பய்க்கு காதலியை பார்க்க கார்த்தி பைக்கில் ஓர் இரவில் போய் சேருகிறார். அப்பொழுது ஒரு வசனத்தில் 22மணி நேரத்தில் வந்துவிட்டேன் என்பார். ஓர் இரவு 12 மணி நேரம் தானே? அவர்கல் இருவரும் திரும்ப சென்னை போகும் போது 36 மணி நேரமாகும். ஆன்வேர்ட் பயணத்தில் பயணித்து இருக்கவேண்டிய அந்த 10 மணி நேரத்தை ரிடர்ன் பயணத்தில் சேர்த்து விடுகிறார் போலிருக்கிறது.

படத்தின் கடைசி அரை மணி நேரம் தான் ரொம்ப சோதிக்கிறது. கார்த்திக்கு நல்ல டேலன்ட் இருக்கிறது, அழகு, உடலமைப்பு அனைத்தும் நன்றாக உள்ளன. நன்றாகவும் நடிக்கிறார். ஏன் இந்த மாதிரி பாத்திரங்களை தேர்வு செய்கிறார் என்று புரியவில்லை. சரி நகைச்சுவையாவது இருக்கா என்றால் அதுவும் சுத்தம்! இதில் இவர் நண்பர் பாத்திரமே ஸ்டேன்ட் அப் காமெடியன்! ஸ்டன்ட் காட்சிகள் எல்லாம் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டிருக்கின்றன, இவர் மாஸ் ஹீரோ அல்லவா?

வெளிநாட்டு படப்பிடிப்பில் இயற்கைக் காட்சிகள் அருமைபடத்தில் கார்த்தி ரொம்ப ட்ரிம்மாக உள்ளார். அவரின் உடைகள் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் நன்றாக நடித்துள்ளார். அவருக்கு இயல்பாகவே செயற்கைத் தனம் இல்லாத நடிப்புத் தன்மை உண்டு. அது தான் அவரின் பலம். நாம் அதை நம்பி தான் அவர் படத்துக்குப் போகிறோம். இப்படி படத்தில் கதையே இல்லாமல் ஏமாற்றினால் எப்படி நம்பி அடுத்து வரும் அவர் பாடத்துக்குப் போவது?

 

 

 

பேரன்பு – திரை விமர்சனம்

தங்க மீன்கள் படத்துக்குப் பிறகு அடுத்த லெவலில் படம் தந்துள்ளார் ராம். தங்க மீன்கள் சாதனா தான் இதிலும் மாற்றுத் திறனாளியாக ஸ்பாஸ்டிக் குழந்தையாக நடித்துள்ளார். அந்தக் குழந்தையை பதின்ம பருவத்தில் தன் பொறுப்பில் தனியாக வளர்க்க வேண்டிய சூழ்நிலையில் அப்பாவான மம்முட்டி. இந்த மாதிரி கதையை படமாக்க நிறைய நிறைய ஹோம்வர்க் செய்ய வேண்டும். அதை செவ்வனே செய்திருக்கிறார் ராம். ஒரு நல்ல சமூக கருத்தை திரைக்கதை வடிவாக நம் முன் வைக்க சினிமா எனும் ஊடகத்தின் மேல் passion இருக்க வேண்டும். அதுவே ராமின் வெற்றி.

நிறைய சம்பவங்கள் நிறைந்த திரைக்கதை. பத்து அத்தியாயங்கலில் விவரிக்கிறார், விவரிப்பது மம்முட்டி. படத்தின் பெரும்பகுதி திக் திக்கென்றே இருந்தது. ஏனென்றால் பதின்ம வயதுப் பெண்ணை (பாப்பா) தனியாக பாதுகாக்கிறார் (அமுதவன்) மம்முட்டி. பாப்பா தனியாக பல சமயங்களில் இருக்க வேண்டிய சூழல், நம் ஆண்களின் போக்கும் நமக்கு தெரிந்ததே. ஒவ்வொரு சூழலிலும் அவள் பேராபத்தில் விழாமல் இருக்க வேண்டுமே என்று பார்ப்பவரை பதைபதைக்க வைக்கும் படம் பேரன்பு.

படத்துவக்கம் மகள் அப்பாவிடம் திணிக்கப் படுவதுடன் ஆரம்பிக்கிறது. அம்மா குடும்ப அழுத்தம் தாளாமல் வேறொருவருடன் போய்விடுகிறார். அதற்கு மம்முட்டியும் ஒரு காரணம். 12 வயது வரை பெண்ணைப் பற்றிய பொறுப்பில்லாமல் இருந்ததற்கு தனி ஒரு ஆளாக திடீரென்று மகளை பேணி காக்க வேண்டிய நிர்பந்தம். ஆனாலும் மகள் தந்தை பாசம் மெதுவாக ஆரம்பித்து அழுத்தமாக வளர்ந்து எவ்வளவோ சிரமத்திலும் மகளை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள அவர் செய்யும் செயல்கள் ஒன்பது அத்தியாயங்களில் விரிகிறது. அவை புது யுகத்தவையும் கூட.

படத்தில் மிகவும் பிடித்தது அமைதியாக செல்லும் திரைக் கதை தான். அதுவும் முதல் பாதி எதோ ஒரு மலைப் பிரதேசத்தில் யாரும் இல்லாத அத்துவான காட்டில் அமைந்த அழகிய வீடும், நதியும், பரிசலும் கவிதையாக உள்ளது. ஆனால் கவிதை சோகம் இழையோடியது, மிகவும் சிக்கலான ஒரு செரிபரல் பால்சியால் பாதிக்கப்பட்ட பெண்ணை சுற்றிய கதை என்பதால். அவள் வயதுக்கு வருவதும், திகைத்துத் தடுமாறிய தந்தை, ஆனால் அடுத்து செய்ய வேண்டியவற்றுக்கு உதவி தேடி அழைத்து வந்து, இன்னொரு சமயத்தில் அவளே தான் ஒரு பெண் என்பதை உணர்ந்து அப்பாவிடம் சேனிடரி பேட் மாற்றிக் கொள்ள தயங்கி தன்னாலும் செய்து கொள்ள முடியாமல் கஷ்டப்பட்டு, ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உதவி பெற வைத்து என்று இதுவரை சினிமாவில் கையாளப்படாத சென்சிடிவ் ஆன விஷயங்களை நாகரீகமாக சொல்லி இயக்கியுள்ளார் ராம். அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்துள்ளார் மம்முட்டி. பல சமயங்களில் ஒரு நடிகரை அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்டார் என்று சொல்லுவோம். இதில் நான் மம்முட்டியை பார்க்கவே இல்லை. பாப்பாவின் அப்பா மட்டுமே என் கண்ணுக்குத் தெரிந்தார்.

அமைதியான மலைப் பிரதேசத்தில் இருந்து ஏமாற்றப்பட்டு கொஞ்சம் முன்னேற்றம் அடைந்த நிலையில் இருந்த மகளுடன் மம்முட்டி வேலைத் தேடி நகரத்துக்கு வந்து அங்கு சீப்பான விடுதிகளில் தங்கும் நிலைமையிலும், அடுத்தடுத்து காப்பகம், நண்பர் என்று உதவி கேட்டு தடுமாறி, ஓடிப்போன மனைவியின் வீட்டுக்கே சென்று மகளை அவர் பார்த்துக் கொள்ள மாட்டாரா என்று பரிதவிக்கும் நிலைக்கு ஆளாகி கடைசியில் என்ன மாதிரி முடிகிறது கதை என்பதை கண்டிப்பாக வெள்ளித் திரையில் காணவேண்டும். அற்புதமாக கோர்வையாக கதையை நகர்த்தி செல்கிறார் இயக்குநர். அருமையான வசனங்கள்.

அஞ்சலியின் பத்திரம் சிறிதே எனினும் மனத்தில் நிற்கிறார். அஞ்சலி அமீர் என்னும் திருநங்கையும் கதைக்கு நல்ல திருப்பம், நல்ல மெஸ்சேஜ். யுவன் சங்கர் ராஜாவின் இசை மிக நன்று. முக்கியமாக பின்னணி இசை தான். பாடல்கள் மனத்தில் நிற்கவில்லை. அனால் இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தால் இப்படம் ஓர் உன்னத காவியமாகி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஸ்ரீகர் பிராசாத்தின் படத்தொகுப்பு அற்புதம். தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு அதைவிட அருமை.

மிகவும் கடினமான கதை. இந்த மாதிரி மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தேவைகளை சரியாக பூர்த்தி செய்ய முடியாத நிலையில் ஓர் அப்பாவாக மம்முட்டி படும் வேதனை பல இடங்களில் நம்மை அழ வைக்கிறது. செரிபரல் பால்சி வந்த பெண்ணாக சாதனா எப்படி தான் நடித்தாரோ தெரியவில்லை. மிக மிக கடினமான உழைப்பு. ராம், மம்முட்டி, சாதனா அனைவருக்குமே விருது கிடைக்கவேண்டிய அளவு உழைப்பு உள்ளது.

பல சமயங்களில் மிக மெதுவாக செல்லும் திரைக்கதை படத்தின் பலவீனம். அவ்விடங்களில் தான் இது ஒரு ஆர்ட் பில்ம் என்று எண்ண வைக்கிறது. கதையே இல்லாமல் வரும் படங்களின் நடுவே நெகிழவைக்கும் கதையுடன் ஒரு நல்ல படம் இது.

பேட்ட – திரை விமர்சனம்

முழுக்க முழுக்க ரஜினி படம். அவருடைய கலக்கல் ஸ்டைல், வசன டெலிவரி, அசால்டா சண்டை காட்சிகளில் எதிரிகளை பந்தாடுவது, சின்ன நடன அசைவிலேயே ரசிகர்களின் மனத்தைக் கொள்ளைக் கொள்வது என்று அனைத்தும் இந்தப் படத்தில் இருக்கிறது. ஆனால் கார்த்திக் சுப்புராஜ் படம் என்று பெரிய எதிர்ப்பார்ப்போடு போனால் கொஞ்சம் ஏமாற்றம் தான் மிஞ்சும். சில வருடங்களாக ரஜினி படங்களின் தன்மையை ஒப்பிட்டுப் பார்த்தால் கே.எஸ்.ரவிகுமாரின் லிங்கா ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். அதன் பின் கபாலி, காலா என்று இரண்டு படங்கள் சமூக கருத்துகளை முன் வைத்து சாதி பாகுபாடு பற்றிய கதைகளாக அவரை வேற லெவலுக்கு அழைத்துச் சென்றது. 2.0 எந்திரனின் தொடர், பிரம்மாணடம் அதிகம் என்பதைத் தவிர வேறு வித்தியாசம் இல்லை. அதனால் கார்த்திக் சுப்புராஜ் கதை அதுவும் சூப்பர் ஸ்டாருக்கு என்னும்போது அவரின் பீட்சா, ஜிகிர்தண்டா, இறைவி மாதிரி நல்ல திரைக் கதை, ஒரு ஜனரஞ்சகமான படம் என்கிற எதிர்ப்பார்ப்பு சினிமா ரசிகனுக்கு இருப்பது இயல்பே. ஆனால் மாஸ் காட்ட முனைந்ததில் கதைக்கு அவ்வளவு அழுத்தம் தராமல் அதில் கோட்டை விட்டுவிட்டார் என்று தோன்றுகிறது.

திரும்பத் திரும்ப காதலுக்காக தோழன் உதவி செய்வது அதில் ஏற்படும் பகை, வெட்டுப் பழி, குத்துப் பழி, கொலை, இதே தான் இன்னும் கதைக்களமாக இன்றைய இளைய இயக்குநர்களும் எடுத்துக் கொள்வது கதைக்குப் பஞ்சமா அல்லது அவர்களின் மனோ நிலை தான் வளரவில்லையா என்று எண்ணத் தோன்றுகிறது.

எளிதாக போய் படம் பிடிக்க வேண்டும் என்று வட இந்தியாவை தேர்ந்தெடுத்து அங்குள்ள கல்லூரி வளாகத்தில் படம் பிடித்திருக்கிறார்கள். அந்தக் கல்லூரி எங்கு தமிழ்நாட்டில் அமைந்துள்ளது என்று குத்துமதிப்பாக சொல்லியிருக்கலாம், சொல்லவில்லை. குன்னூர், ஊட்டி, கொடைக்கானல் மாதிரி நம்மால் கற்பனை செய்து கொள்ள முடியவில்லை. மணி ரத்னம் இரண்டு மொழியில் படங்கள் எடுக்கும் போது இப்படி தான் ஒரு வட இந்திய நிலத்தில் படம் எடுத்து தமிழ் படத்துக்குப் பொருந்தாமல் நேடிவிடி இல்லாமல் தனியா நிற்கும். அதே தவறை தமிழில் மட்டும் எடுத்தப் படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் ஏன் செய்தார் என்று தெரியவில்லை. (இல்லை இது இந்தியிலும் வெளிவந்துள்ளதா?)அந்தக் கல்லூரி வார்டன் காளியாக வருகிறார் ரஜினி. கெட்டப் பய சார் இந்தக் காளி என்று வசனம் சொல்லாமல் செயலில் காட்டுகிறார்!

சிம்ரன் அறிமுகம் எல்லாம் நன்றாக இருக்கிறது. அவர் பிரானிக் ஹீலர். இப்போ தான் சமீபத்தில் ஆரா பற்றிய சர்ச்சை 2.0 படத்திற்காக சமூக வலைத்தளத்தில் ஓடியது. இந்தப் படத்திலும் ஒரு காட்சியில் ரஜினியின் ஆராவை பரிசோதித்து சிம்ரன் அவர் மனத்தில் கோபம், பகை, சோகம் வன்மம் எல்லாம் உள்ளதாகத் தெரிவிக்கிறார். சிம்ரன் த்ரிஷா இருவருக்கும் மிக சிறிய பாத்திரம். உண்மையில் ரஜினி தவிர அனைத்து முக்கிய பாத்திரங்களுமே சிறிய பாத்திரங்கள் தான். பாபி சிம்ஹா, சசிகுமார், விஜய்சேதுபதி எல்லாரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். வில்லனாக நவாசுதின் சித்திக் ஸ்பெஷல் மென்ஷன் பெறுகிறார், அருமையான நடிப்பு! ஆனால் இது ரஜினி படம் தான், மற்றவர்கள் துணை நடிகர்களே.

ஹாஸ்டல் வார்டனாக ரஜினியுடன் முதல் பாதி வெகு நீளமாகப் போகிறது. கதை என்ன என்று பின் பாதியில் ப்ளாஷ் பேக்கில் தெரிய வந்து எஞ்சி இருக்கும் ஒரு வில்லனையும் ஒழித்துக் கட்டுவது தான் மீதிக் கதை. மணல் கொள்ளைக்கு எதிராக ஒரு கிராமத்தில் இரு பிரிவினரிடையே பிரச்சினை. அதில் மணல் கொள்ளைக்கு எதிராக இருப்பவர்களில் ஒருவராக முஸ்லிம் இளைஞராக சசிகுமார் (மாலிக்). மணல் கொள்ளை செய்யும் குடும்பப் பெண்ணுடன் (பூங்கொடி) அவருக்குக் காதல், வரம்பு மீறி அந்தப் பெண்ணும் கர்பம். அவர்கள் இந்துகள். பேட்டயின் (பேட்ட வேலு அவரே தான் காளியும்) வளர்ப்புத் தந்தையின் மகன் தான் சசிகுமார். பேட்ட அந்த கிராமத்தில் பெரிய தாதா. அவர் தான் மணல் கொள்ளையர்களை வீடியோ ஆதாரத்துடன் பிடித்து போலிசில் ஒப்படைக்கும் அளவு நல்ல வலிமை வாய்ந்தவர். அவர் முனைப்பால் சசிகுமாருக்கும் திருமணம் செய்து வைக்கிறார். ஆனால் எப்படி அந்தக் குடும்பப் பகை பலரை காவு வாங்குகிறது, ரஜினியின் வாழ்க்கையில் ஏற்படும் இழப்புகள் அப்படி இருந்தும் அவர் சசிகுமாரின் மனைவிக்கு உதவி அவர் மகனை ஆளாக்க உதவியும் செய்து பாதுகாக்கவும் முனைகிறார். மிச்சத்தை வெள்ளித் திரையில் காண்க. நிறைய திருப்பங்கள் கடைசியில் இருக்கு ஆனா படத்தின் நீளமும் ஆயாசத்தைத் தருகிறது.

ஒரு கிராமத்தில் இந்துப் பெண் இஸ்லாமிய பையனை காதலித்துத் திருமணத்திற்கு முன் கர்பமாவது பெரிய சண்டைக்கான விஷயமாக தான் பார்க்கப்படும். அதை ரொம்ப சகஜமாக எடுத்துக் கொண்டு ரஜினி பாத்திரமும் சம்பந்தப்பட்ட மாலிக்கும் பூங்கொடியும் மேற்கொண்டு நடக்க வேண்டியதைப் பார்ப்பது சினிமாவில் மட்டுமே சாத்தியம். முறைகேடான உறவுகளை முடிந்தவரை நியாயப் படுத்தாமலும் மாற்று மத காதல்களை கதைக்காக எடுத்துக் கொண்டு அதை சேர்த்து வைப்பதும் பின்னால் விழும் இழவுகளை வைத்து பகையை வளர வீட்டு கதையை நகர்த்துவதும் என்ன மாதிரி மெஸ்சேஜை கார்த்திக் சுப்புராஜ் சொல்ல வருகிறார் என்று புரியவில்லை. அதே போல படத்துக்குத் திருப்புமுனையாக அமையும் காதலர் தின சம்பவமும் தமிழ்நாட்டில் நடப்பது கிடையாது. கர்நாடகாவில் கேள்விப்பட்டிருக்கோம் மகாராஷ்ட்ராவில் உண்டு. தமிழுக்கு அந்நியமான சம்பவங்களைத் திணித்துக் கதையை முன்னேற செய்யும் அளவு கற்பனை வறட்சி பஞ்சம். பா.ரஞ்சித்தின் படங்களில் அவர் கொள்கைப் பிடிப்பை சொல்ல ரஜினி போன்ற பெரிய ஹீரோவைப் பயன்படுத்திக் கொண்டது நல்ல புத்திசாலித்தனம், பாராட்ட வேண்டிய விஷயம். ஆனால் இந்தப் படத்தில் புதுமையாக எதுவும் இல்லை. அதே சமயம் கேங்க்ஸ்டர் கதை என்று எடுத்துக் கொண்டாலும் பாஷா போன்ற விறுவிறுப்பும் இல்லை.

அனிருத் இசை, திருவின் ஒளிப்பதிவு, விவேக் ஹர்ஷனின் படத் தொகுப்பு அனைத்தும் படத்துக்குப் ப்ளஸ். எப்பவுமே ரஜினி கொஞ்சம் வில்லத்தனத்துடன் நடிக்கும் பாத்திரங்கள் செமையாக இருக்கும். இதிலும் அதனால் தான் அவர் நடிப்பு நன்றாக எடுபடுகிறது. அதற்காக கார்த்திக் சுப்புராஜைப் பாராட்ட வேண்டும். இது ரஜினி படம். அவர் ரசிகர்கள் பெரிதும் பார்த்து மகிழ்வார்கள். அது நிச்சயம் 🙂

விஸ்வாசம் – திரை விமர்சனம்

ஒன்றரை வருடத்துக்குப் பிறகு வரும் அஜித் படம். ஏக எதிர்ப்பார்ப்பு அவரின் ரசிகர்களுக்கு! ரசிகர்களை கட்டிப் போடும் மாஸ் ஹீரோக்கள் நல்ல அறிவுரையை தரும் படங்களை தருவது அந்த ரசிகர்களை நிச்சயம் சிந்திக்க வைக்கும். அந்த முறையில் இந்தப் படம் பாராட்டுக்குரியது. மற்றபடி முன் பாதி கதையமைப்பில் புதுமை இல்லை. பின்பாதி படத்தை காப்பாற்றுகிறது.

அஜித்துக்கு எப்பவுமே ஸ்டேஜ் ப்ரெசென்ஸ் அதிகம். அது இந்தப் படத்திலும் அவருக்கு அருமையாக கை கொடுக்கிறது. வந்து நின்றாலே களை கட்டுகிறது. நயன்தாரா அவரின் ஜோடி நல்ல பொருத்தம். பெரிய ரோல் அவருக்கும். பொருந்தி நடித்துள்ளார்.

சின்ன கிராமத்தில் பெரிய ஆளாக இருப்பவர் அஜித் குமார். அடிதடி காட்டி அசத்தல் மன்னனாக வருகிறார். மருத்துவ முகாமுக்கு வரும் மும்பைவாசி மருத்துவர் நயன்தாரா எப்படியோ அந்த வெள்ளந்தி உள்ளத்தால் கவரப்பட்டு அவர் மூன்றாம் கிளாஸ் பெயில், சுட்டுப் போட்டாலும் ஆங்கிலம் வராது, சண்டை போடுவது அவருக்கு ஹாபி என்று தெரிந்தும் காதலில் விழுந்து, அஜித் தான் அவருக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்று சொல்லியும் அவரை முழு மனதோடு திருமணம் புரிகிறார். அதன் பின் ஒரு சின்ன விஷயத்துக்காக பிஞ்சு மகளோடு பிரிந்து மும்பைக்கே போய்விடுகிறார். அது பாத்திரத் தன்மையில் நெருடுகிறது. எப்பொழுதுமே ஒருவரின் நடிப்பு கதையமைப்பின் அம்சத்தை ஒட்டியே நன்றாகவோ சுமாராகவோ இருக்கும். இதில் நயன்தாராவின் பின் பாதியில் வரும் அவர் நடிப்பு சற்றே ஒட்டாத தன்மையுடன் இருப்பதற்குக் கதையில் உள்ள குறையே காரணம்.

அஜித்துக்கு முதலில் இருந்து கடைசி வரை ஒரே பாத்திரத் தன்மையோடு பிறழ்வு ஏதும் ஏற்படாத வகையில் கதையமைப்பு இருப்பதாலும் குடும்பப் பாத்திரங்களில் குடும்பத் தலைவராகவோ அல்லது ஒரு பெண்ணுக்குத் தந்தையாக வருவதோ அவருக்கு இயல்பாகவே சிறப்பாக வருவதாலும் படம் முழுவதுமே அவர் பங்களிப்பு மிகவும் அருமையாக உள்ளது. வேட்டியில் அம்சமாக இருப்பவர்கள் பொதுவில் மலையாள நடிகர்கள் தான். தமிழ் சினிமாவில் அஜித் என்று சொல்லலாம்.

என்னை அறிந்தால் படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா இந்தப் படத்திலும் அவர் மகளாக நடிக்கிறார். பாத்திர வயதுக்குக் கொஞ்சம் அதிக வளர்ச்சியாக இருந்தாலும் சிறப்பான நடிப்பு. மகள் தந்தை உறவின் பாசம் இருவரிடமும் வெகு அழகாக வெளிப்படுகிறது. அந்தப் பகுதி மட்டும் அப்ழைய படத்தின் தொடர்ச்சிப் போல தோன்றுகிறது. பலவித உணர்சிகளை அனிகா காட்ட அவர் பாத்திரம் உதவுகிறது. குறைவின்றி செய்திருக்கிறார்.

இந்தப் படத்தை இரண்டு மணி நேரத்தில் முடித்திருக்கலாம். படம் இன்னும் நன்றாக வந்திருக்கும். இப்படத்தில் தேவையில்லாதவைகள – அட்லீஸ்ட் இரண்டு பாடல்கள், விவேக், கோவை சரளா பாத்திரங்கள, தம்பி ராமையாவும் அஜித்தும் காமெடி என்று நினைத்து செய்யும் சேட்டைகள்! அஜித்தும் நயன்தாராவும் காதலிக்கக் காட்டப்படும் திரைக் கதையும் பிரிய சொல்லப்படும் காரணங்களும் கொஞ்சம் புதுமையாகவும் நம்பத் தகுந்தபடியும் மாற்றியமைத்திருந்தால் படத்தின் பலம் கூடியிருக்கும். முதல் பாதி ரொம்ப அலுப்புத் தட்டுகிறது. ஆனால் பின் பாதியில் பிரிந்தவர்கள் சேரும் இடம் வெகு இயற்கையாக அமைவது ஆறுதல்.

ஸ்டன்ட் காட்சிகள் மிகவும் நன்றாக அமைக்கப்பட்டிருக்கு. அஜித் செய்யும் சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாகவும் போரடிக்காமலும் உள்ளன. கிராமப்புறங்களை காட்டும்போது ஒளிப்பதிவு அற்புதமாக இருக்கிறது. படத்தின் பலம் ஒளிப்பதிவாளர் வெற்றி. திருவிழா காட்சிகளில் வண்ணங்கள் கூட்டி கண்களுக்கு விருந்து படைக்கிறார். அதேபோல ரூபனின் எடிட்டிங்க் பாடல்களிலும் சண்டைக்காட்சிகளிலும் அருமையாக தொகுத்துள்ளார். D.இமானின் இசையில் கண்ணான கண்ணே அருமை, பின்னணி இசை நன்று.

இந்தப் படத்தின் பெரிய ப்ளஸ் இது ஒரு குடும்பப் படம். குடும்ப வேல்யு சிஸ்டம் பற்றி நன்றாக சொல்கிறது. பெற்றோர் பிரிவதால் அவஸ்தைப் படுவது பிள்ளைகள் தாம். இப்பொழுது பல குடும்பங்களில் இதை நிறைய பார்க்க முடிகிறது. அதனை சரியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிவா. அம்மா தரும் அன்பும் அப்பா தரும் பாதுகாப்பும் ஒரு குழந்தைக்கு எல்லா வயதிலும் தேவை. அதே போல் அம்மாவிடம் சண்டைப் போட்டவர்கள் வாழ்க்கையில் முன்னேறியதே இல்லை என்பது போன்ற கருத்துகளை அஜித் சொல்வது அவர் படத்தை விரும்பிப் பார்க்கும் இளம் வயதினருக்கு ஒரு நல்ல படிப்பினையாக அமையும். வசனங்களில் நல்ல கவனம் செலுத்தியிருக்கிறார் சிவா. கண்களை ஈரமாக்கும் காட்சிகள் படத்தில் உள்ளன.

அஜித்துக்கு இது ஒரு நல்ல படம். ஆனால் அடுத்த முறை இன்னும் சிறப்பான கதையம்சத்தைத் தேர்ந்தெடுத்து இன்னும் சிறப்பான விருந்தை அவர் ரசிகர்களுக்கும் மற்றவர்களுக்கும் அளிக்க வாழ்த்துவோம்!

சிம்டான்காரன் – பாடல் பொழிப்புரை

பாடகர்கள் :பம்பா பாக்கியா,
விபின் அனேஜா மற்றும்
அபர்ணா நாராயணன்

பாடல் ஆசிரியர்: விவேக்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

படம்: சர்கார்

 ஆண் : பல்டி பாக்குற
டர்ல வுடனும் பல்து

வோர்ல்டு மொத்தமும்
அரள வுடனும் பிஸ்து

பல்டி அடிக்கறதைப் பார்த்து மத்தவங்க பயத்துல டர் ஆகிடணும்

உலகம் மொத்தத்தையும் மிரள உடனும் பிஸ்தா மாதிரி

பிசுறு கெளப்பி
பெர்ள வுடனும் பல்து

பிச்சுப் பிச்சுப் போட்டு எல்லாரையும் பயத்துல பிரளவிடனும்

ஆண் : ஏய்ய் நிக்கலு பிக்கலுமா

ஓ…. தொட்டனா தூக்கலுமா

மக்கரு குக்கருமா

போய் தரைல உக்கருமா

ஏய் ஒழுங்கா ஓரிடத்தில நில்லு அப்பத்தான் தொட்டு தூக்க முடியும்.

உடஞ்ச குக்கர் மாதிரி மக்கர் பண்ணினா உன்னை தூக்க மாட்டேன்

போய் தரைல உட்காருன்னு சொல்லிடுவேன்.

ஆண் : ஏய்ய் நிக்கலு பிக்கலுமா

ஓ…. தொட்டனா தூக்கலுமா

மக்கரு குக்கருமா

போய் தரைல உக்கருமா

முன்னாடி சொன்னதே தான்.

ஆண் : சிம்டான்காரன்
எங்கனா நீ சீரன்

நிண்டேன் பாரேன் முஷ்டு
அப்டிகா போறேன்

ஓ..ஓ..ஓ..ஓ (4)

கண்ணை சிமிட்டி சீறினேனா நின்னுக்கிட்டே பாரேன்

என் முஷ்டி மட்டும் அந்தப் பக்கமா போய் ஆளை அடிச்சிட்டு வரும்.

ஆண் : சிம்டான்காரன்
சில்பினுக்கா போறேன்

பக்கில போடேன்
விருந்து வைக்கபோறேன்

ஓ..ஓ..ஓ..ஓ (4)

கண்ணை சிமிட்டி முடிக்கறதுக்குள்ள சிலுப்பிக்கிட்டு வந்துடுவேன்.

அப்புறம் பெல்டுக்குப் பக்கிளை போடவும்.

இல்லேனா நான் வைக்கிற இசை நடன விருந்தில் எங்கியோ காணாம போயிடுவீங்க!!

ஆண் : அந்தரு பண்ணிகினா தா…..

இந்தா நா… தா ….

ஓ..ஓ..ஓ..ஓ (4)

அடியில போய் ஒளிஞ்சிக்கிட்டா நான் இதோ ஓடிவந்து கண்டுபிடிச்சிடுவேன்

பெண் வேறு தேசம் போலிருக்கு. தமிழ் மொழியில் பாடுகிறார்.

அதற்கு விசேஷ மொழிப்பெயர்ப்புத் தேவையில்லை.

பெண் : மன்னவா நீ வா வா வா

முத்தங்களை நீ தா தா தா

பொழிந்தது நிலவோ

மலர்ந்தது கனவோ…ஓ…ஓ….

பெண் : ஹா ஹா ஹா ஹா ஹா..(4)

ஆண் : குபீலு பிஸ்து பல்து

குபீர்னு பிஸ்தாவா பல்டியடிப்பேன் ஜாக்கிரதை!

குழு : விக்கலு விக்கலு
ஹே தொட்டனா தொட்டனா
விக்கலு விக்கலு
ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ….

 விக்கல் வந்தா கூட தொடர்ந்து பாடுவோம் ஆடுவோம்.

 ஆண் : கொக்கலங்க கொக்கலங்க
கொக்கலங்க குபீலு

ஹைட்டுலிருந்து டைவு அடிச்சா
டம்மாலு

ஹம்ப்டி டம்படி சேட் ஆன் அ வால்.

ஹம்ப்டி டம்படி ஹேட் அ கிரேட் ஃபால்.

 ஆண் : நம்ம புஷ்டிருக்க கோட்டையில்ல

அல்லா ஜோரும் பேட்டைல
சிரிசினுகுறோம் சேட்டையிலகுபீலு

நாம பிடிச்சிருக்கிற கோட்டையில எல்லாரும் சிரிச்சிக்கிட்டு இருக்கோம் ஜாலியா.

ஆண் : பிசுறு கெளப்பு
பிசுறு கெளப்பு

கொக்கலங்க கொக்கலங்க
கொக்கலங்க குத்த போடு

சுணுங்காம குத்தாட்டம் போடு!

சுணுங்காம குத்தாட்டம் போடு!

 நீங்க நினைக்கிறா மாதிரி ஒன்னும் புரியாத பாடல் இலை இது. கொஞ்சம் மெனக்கெட்டா புரிஞ்சிடும்!!

U டர்ன் – திரை விமர்சனம்

மேற்குத் தொடர்ச்சி மலை எப்படி ஒரு வாழ்வியல் யதார்த்தத்தை இரண்டு மணி நேரத்தில் செலுலாய்டில் லெனின் பாரதி வடித்துக் கொடுத்தாரோ அது மாதிரி ஓர் அமானுஷ்ய திகில் படத்தை ஒரு வித லாஜிக் குறைபாடும் இல்லாமல் எழுதி இயக்கி படைத்திருக்கும் பவன் குமாருக்கு மனமார்ந்த பாராட்டுகள். இந்த மாதிரி திறமை வாய்ந்த இயக்குநர்களும் கதாசிரியர்களும் இந்திய சினிமாவில் நிறைய தோன்ற இம்மாதிரி படங்களை நாம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்து வரவேற்க வேண்டியது நம் கடமை.

சீம ராஜாவில் ஒரு புது முக நடிகை மாதிரி செய்திருந்த சமந்தா இந்தப் படத்தில் பிச்சு உதறியிருக்கிறார். என்ன ஒரு டிரான்ஸ்பர்மேஷன்! (எல்லாமே இயக்குநர் கையில் தான் உள்ளது என்பது இதில் இருந்து தெரிகிறது). நடிகையர் திலகம் படத்தில் ரிபோர்டர் வேடத்தில் கொஞ்சமே வந்திருந்த சமந்தா இதில் முழு படத்திலும் ரிபோர்டராக வாழ்ந்திருக்கிறார். அவர் கெரியரில் இது ஒரு மைல் கல். விருப்பப்பட்ட துறையில் கால் பதிக்க அவர் எடுக்கும் முயற்சிகளின் போது  ஒரு சங்கோஜத்துடனான துணிச்சலை அவர் முகத்தில் காட்டும்போதும், ஒரு திடுக்கிடும் சம்பவத்தை நேரில் பார்த்தப் பின் வீட்டிற்கு வந்து வயிற்றுக்குள் இருக்கும் கரு போல சுருண்டு அழும்போதும் அவர் நடிப்பின் முதிர்ச்சி வெளிப்படுகிறது. கன்னட சினிமாவின் பிரபல கதாசிரியர் இயக்குநர் பவன் குமார் மனோதத்துவ த்ரில்லர் படமான லூசியாவை எழுதி இயக்கியவர். அந்தப் படத்தைவிட இந்தப் படத்தில் இன்னும் முன்னேறி மிக அற்புதமான ஒரு த்ரில்லர் படத்தைத் தந்துள்ளார். U டர்ன் என்ற பெயரிலேயே கன்னடத்தில் முதலில் வெளிவந்த படம் தற்போது தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலும் வந்துள்ளது. டப்பிங் இல்லை.

ஒரு மேம்பாலத்தில் டிவைடருக்காக வைத்திருக்கும் கற்களை நகர்த்தி U டர்ன் செய்பவர்களால் விபத்துகள் நேர்வதைத் தடுக்க அவ்வாறு செய்பவர்களைப் பற்றி தகவல் சேகரித்து அதைப் பற்றி ஒரு பதிவு போடத் தயாராகும் சமந்தா மிக பயங்கரமான சிக்கலில் மாட்டிக் கொள்வார் என்று எதிர்பார்க்க மாட்டார். படத்தின் பாதி வரை சாதாரண போலிஸ் விசாரணையாக போகும் ஒரு சந்தேக மரணம் ஒரு கட்டத்தில் பல கொலைகளை தோண்டி எடுக்கிறது. அதன் பின்னால் இருக்கும் அமானுஷ்ய காரணம் படத்தின் முடிவு வரை நம்மை நாற்காலியின் நுனியில் உட்கார வைக்கிறது. இதில் சம்பவங்களின் கோர்வை நம்பும்படியாக உள்ளதால் சாதாரண பேய் படம் போல் இல்லை.

சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் ஒரு க்ரைம் ரிபோர்டராக, சமந்தாவின் காதலனாக நடிப்பில் நல்ல மெருகேறி சிறப்பாக பங்காற்றியுள்ளார் . ஆதி போலிஸ் ஆபிசராக கன கச்சிதமாகப் பாத்திரத்தில் பொருந்தியுள்ளார். மிகையில்லாத அதே சமயம் அழுத்தமான நடிப்பு. கதையை விறுவிறுப்பாக நகர்த்துவதில் அவர் பங்கு நிறைய. பூமிகாவும் நரேனும் மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். கிளைமேக்சில் உண்மையை உணர்ந்த பின் நரேனின் நெகிழ்ச்சி அவரின் நடிப்பில் உள்ள சீனியாரிடியை காட்டுகிறது.

இசை பூர்ண சந்திர தேஜஸ்வி. அற்புதமான இசை. த்ரில்லர் படங்களுக்கே இசை தான் முக்கியம். அது சரியாக அமைந்துவிட்டால் வெற்றிப் பாதையில் பாதி இலக்கை அடைந்தா மாதிரி தான். பின்னணி இசை மிரட்டுகிறது! அமானுஷ்ய காட்சிகளில் தூள் கிளப்பும் ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி ரெட்டிக்கு சரியான வலது கையாக இருக்கிறார் படத்தொகுப்பாளர் சுரேஷ் ஆறுமுகம். ஒரு காட்சி கூடத் தேவையில்லாத காட்சி இல்லை.

குறைகள் சில உள்ளன. இரண்டு மொழியிலும் எடுத்திருப்பதால் வேளச்சேரி மேம்பாலம் என்று காட்டப்படுவதும் அடுக்கு மாடி குடியிருப்புகளும் சென்னை வாசனை இல்லாமல் உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையம் என்று சொல்லி எதோ ஆந்திரா பேருந்து நிலையத்தைக் காட்டுகிறார்கள். அதே மாதிரி இரவெல்லாம் அப்படி ஒரு மழை பெய்கிறது, பகலில் சாலையில் ஒரு சொட்டு தண்ணீர் தடயம் இல்லை. அவ்வளவு நல்ல வடிகால் சிஸ்டம் நம் நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லை என்று நினைக்கிறேன். இடது பக்கத்துலேந்து வந்து வலது பக்கத்துல கல்லை நகர்த்தினால் விபத்து வலது பக்கம் தான் நடக்கும். அதுவும் கொஞ்சம் குழப்பமாக உள்ளது. நான் தான் சரியா புரிந்து கொள்ளவில்லையா என்று தெரியவில்லை.

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. அதை சரியான முறையில் திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பதால் வெற்றி பெற்றுள்ளார் பவன் குமார். நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

ஜூங்கா – திரை விமர்சனம்

தமிழ் படம் 1, 2, இவற்றிற்கு டஃப் கொடுக்கும் ஒரு நல்ல சபூஃப் ஜூங்கா! நானும் ரவுடி தான் படத்தில் விசே தான் ஒரு ரவுடி என்று அலப்பறை பண்ணுவார். ஆனா நயன் சிம்பிளா நீங்க ரௌடி இல்லை ஒரு பிராட் என்று சொல்லிவிடுவார். அந்த மாதிரி இந்தப் படத்திலும் இவர் டான் என்று சொல்லிக் கொண்டாலும் காமெடி டானாக இருக்கிறார். சீரியஸா எடுத்துக்கற படம் இல்லை இது. லாஜிக் பார்க்காமல் சிரித்துவிட்டு வரலாம். ஆரம்பமே சூப்பர் ஸ்டாருக்குக் கொடுக்கற பில்டப் மாதிரி தொடங்குது, இவர் பாத்திரமும் முதலில் கண்டக்டர் தான்! அரங்கத்திலும் ஆரவாரம் அதிகம். விசில் பறக்குது!

கஜினி படத்தில் அசின் அவர் அப்பா டிராவலஸ் நடத்தி நொடித்துப் போய் கார்களை விற்றதால் மூணு அம்பாசிடர் கார் வாங்கின பிறகு தான் கல்யாணம் பணன்னும்னு சொல்றா மாதிரி விசேயும் அவர் அப்பாவும் தாத்தாவும் டானாக இருந்தும் வரவுக்கு மேல் செலவு செய்து ஒரு செட்டியாரிடம் அநியாயமாக தொலைத்தத் தன் அம்மாவின் சீதன சொத்தான திரை அரங்கை மீட்க சபதம் எடுத்து டானாக மாறுகிறார். அதற்காக சென்னை வந்து கம்மி ரேட்டில் கொலை, கடத்தல் எல்லாம் செய்கிறார். அதனால் தொழிலில் இருக்கும் மத்த டான்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார். இதில் ராதா ரவி சின்ன வேடத்தில் பெருங்காய டப்பா டான் சங்கத் தலைவராக வந்து போகிறார். அந்தக் காட்சிகள் எல்லாம் நல்ல ஸ்பூஃப்!

விசே கெட்டப் காமெடியா இருக்கு. யார் இதை அவருக்கு செய்து கொடுத்து நல்லா இருக்குன்னு சொன்னதோ தெரியலை. ஆனா வடிவேலு மாதிரி காமெடி செய்யனும்னு நினச்சு இந்த கெட்டப்பை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம். மடோன்னா செபாஸ்டியன் சில சீன்களிலேயே வந்து கழட்டி விடப்படுகிறார் (literally). கஞ்சப்பிசினாரி டான் விசே, அதனால் ஒரு டூயட் மட்டும் பாடிவிட்டு செலவு வைக்கும் காதலியை கழற்றி விடுகிறார். அடுத்து சாயிஷா. இவர் வெள்ளைத்தோல் வடிவழகி!  செட்டியாரின் (சுரேஷ் மேனன்) செல்ல மகள். நன்றாக நடனம் ஆடுகிறார். குறை சொல்ல ஒன்றும் இல்லை. செட்டியார் விசேவிடம் திரை அரங்கை தவணை முறையில் விற்க மறுக்க விசே உடனே பேரிசில் இருக்கும் மகளை கடத்தி செட்டியாரை பணிய வைக்க பேரிஸ் போகிறார். எந்தப் பேரிசுக்கு முதலில் போகிறார் என்பாதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்!

அவர் பேரிஸ் போகும்வரை செய்யும் காமெடிகள் சிரிப்பை வரவழைக்கின்றன, ஆனால் கஞ்சத்தனமான டானாக சென்னையில் செய்தவைகளையெல்லாம் மொழி தெரியாமல் யோகிபாபுவுடன் பாரிசில் தொடர்வது அபத்தமாக உள்ளது. ஆனால் எப்பொழுதும் ஒரே மாதிரி நடித்து வந்த அவர் இப்படத்தில் செய்யும் சேட்டைகள் ஒரு மாற்றாக நன்றாக அமைந்திருக்கிறது. நன்றாக செய்திருக்கிறார். ஆனால் இயக்குநர் பாரிஸ் சென்ற பிறகு திரைக் கதையில் கோட்டை விட்டுவிட்டது படத்தின் சறுக்கல்.

படிக்காத, ஏழை, கஞ்சனான சுமார் மூஞ்சி குமார் டான் ஹீரோவுக்கும் பணத்திலே புரண்டு வளர்ந்த, படித்த, அழகி ஹீரோயினுக்கும் காதல் வருவதை எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது என்பது தமிழ் சினிமா பார்க்கும் அனைத்து ரசிகர்களுக்கும் தெரியும். அதே போல இடாலியன் மாஃபியா கண்ணில் மண்ணைத் தூவி காதலியைக் காப்பாற்றி, பிரெஞ்ச் போலிசிடமிருந்தும் செம கார் சேசிங் செய்து தப்பிக்கும் ஹீரோ நமக்கும் புதுசும் இல்லை. எப்படியோ ஹீரோ காதலியையும் கைப்பற்றி தன் சபதத்தையும் நிறைவேற்றி விடுவார்.

இவருக்கு அம்மாவாக சரண்யா. இவர் ப்ளாஷ் பேக்கை சொல்லி இவர் டான் குடும்பம் என்பதை தெரிவிக்கிறார். அதில் டாடா சுமோவை பிரபலப்படுத்தியதே இவரின் அப்பாவும் தாத்தாவும் தான் போன்ற வசனங்கள் நல்ல நகைச்சுவை. அவரை விட அவர் மாமியாராக விசேவின் டான் பாட்டியாக வருபவர் பின்னி பெடலெடுக்கிறார். விசே தோழனாக யோகி பாபு படத்தின் பலம்.

பாடல்கள் எல்லாம் ஏன் வருது எதுக்கு வருதுன்னு தெரியலை ஆனா இயக்குநர் சொன்ன நேரத்தில் கரெக்டா வருது. விபின் சித்தார்த்தின் பாடல்கள் ரொம்ப சுமார். பின்னணி இசையை நான் கவனிக்கவேயில்லை. அது பிளஸ்சா மைனஸா தெரியலை! டட்லியின் ஒளிப்பதிவு வெளிநாட்டு லொகேஷன்களில் அருமை!

முன்னெல்லாம் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவது பெரிய விஷயம், அதனால் படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ வெளிநாட்டுக் காட்சிகளைக் கண்டு களிக்க நிறைய பேர் அப்படங்களுக்கு செல்வார்கள். அது மாதிரி இந்தப் படமும் பிரான்ஸ் ச்விட்சர்லேந்து என்று படமக்கப்பட்டிருப்பதால் கண்ணுக்குக் குளிர்ச்சியா காட்சிகளை கண்டு களித்துவிட்டு வரலாம்.

பிரெஞ்சு போலீசுக்கே அல்வா கொடுத்த விசே எதற்காக தமிழக போலீசில் மாட்டினார்? முதல் சீனே சிறைச்சாலை தான், ஆனால் அது கடைசி சீன் வரை புரியவில்லை. அவ்வளவு சிறப்பான திரைக்கதை! கோகுல் இயக்கிய இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா படங்களில் சில பகுதிகள் மிகச் சிறப்பாகவும் சில பகுதிகள் மிகத் தொய்வாகவும் இருக்கும். இந்தப் படத்தில் முன் பாதி நகைச்சுவை துணுக்குத் தோரணம், பின் பாதியில் கதை இல்லை. ஆனால் திரை அரங்கில் படத்துக்கு செம வரவேற்பு உள்ளது!

 

 

கடைக்குட்டி சிங்கம் – திரை விமர்சனம்

 

கார்த்தி நடிப்பில் பட்டையை கிளப்பும் படம் கடைக்குட்டி சிங்கம். முழுக்க முழுக்க ஒரு பெரிய குடும்பத்தில் நடக்கும் உறவின் முறை சண்டை சச்சரவுகள், பாசப் பிணைப்பு, பரிதவிப்பு, ஏமாற்றத்தின் எதிரொலி, கடைசியில் எல்லாம் எப்படி அன்பின் முன் அடங்குகிறது என போகிறது திரைக்கதை. இயக்குநர் பாண்டிராஜூக்கும் சூர்யாவுக்கும் பசங்க 2 படத்தைத் தயாரித்ததில் நல்ல புரிதல் ஏற்பட்டதால் இந்தப் படத்தையும் சூர்யாவே தயாரித்துள்ளார் போலிருக்கிறது. சூர்யா தயாரிக்கும் எல்லா படத்திலும் அவர் தலையைக் காட்டுவதை வழக்கமாகிக் கொண்டுள்ளார். தவிர்க்கலாம். படத்தில் அவர் கல்விக்கு நிறைய செய்கிறார் என்று தலைமைத் தாங்க வந்து பரிசு கொடுப்பதெல்லாம் எவ்வளவு முறை பார்ப்பது. அடக்கி வாசிக்கலாம்.

படத்தின் ஆரம்பம் கொஞ்சம் கொடூரமாக உள்ளது. அதாவது ஆண் குழந்தை வேண்டுமென்று சத்தியராஜ் அக்கா தங்கையை கட்டியது போதாதென்று இன்னொரு பெண்ணையும் மணம் முடிக்க நினைக்கிறார். கதைக்களம் நடக்கும் காலம் தற்போது, ஏனென்றால் ஐ பேட் வைத்துக் கொண்டு தான் சத்தியராஜ் வளைய வருகிறார். அதனால் ஒரு இருபத்தைந்து ஆண்டுகள் முன் இவ்வாறு சத்தியராஜ் நடந்து கொண்டதாக இருந்தாலும் என்ன கண்றாவி இது என்று நினைக்கத் தோன்றுகிறது. பின் பாதியில் இந்த இரண்டு பெண்டாட்டி ப்ளஸ் ஏகப்பட்ட குழந்தைகளினால் ஏற்படும் இடியாப்ப சிக்கல் அந்தச் செயலின் தாக்கத்தை நன்றாக வெச்சு செய்வது ஒரு ஆறுதல்!

கார்த்தி விவசாயி. விவசாயத்தின் தேவை, ஜல்லிக்கட்டு, காளை மாடுகள், ரேக்ளா ரேஸ் போன்ற முக்கியமான விஷயங்களைத் தொட்டு சென்றாலும் படம் அவற்றைப் பற்றியது அல்ல. பாண்டிராஜின் இயக்கத்தில் வந்த பல படங்களிலும் அந்தக் குறை உண்டு. சமூக அக்கறையுடன் ஆரம்பிக்கும் படம் பின் வேறு மாதிரி பயணிக்கும். அதே மாதிரி இந்தப் படமும் முறைப் பெண்கள் இருவர் இருக்கும் போது இன்னொரு பெண்ணை காதலித்து எப்படி நவக்கிரகங்களாக முறுக்கி நிற்கும் உறவுகளை பாசத்தினால் கைக் கோர்க்க வைத்து அவர்கள் சம்மதத்துடன் தன் காதலியை கைப்பிடிக்கிறார் என்பதே கதை. இதில் ஜாதி, ஆணவக் கொலை ஆகியவையும் பேசப்படுகின்றன.

ஐந்து அக்காக்களுக்குப் பின் கடைக்குட்டி கார்த்தி என்பதால் ஏகப்பட்டப் பாத்திரங்கள். முதலில் தலையை சுத்தினாலும் பிறகு சீராக பயணிக்கிறது திரைக் கதை. நிச்சயமாக இந்தப் படத்தின் பலம் திரைக்கதையே. அடுத்து நடித்த அனைவரின் பங்களிப்பும். சத்தியராஜ் ஓவர் ஏக்டிங் செய்ய எத்தனையோ சந்தர்ப்பம் இருந்தாலும் அருமையான பண்பட்ட நடிகர் என்பதை படம் முழுவதும் பிரதிபலிக்கிறார். நல்லதொரு பாத்திரம், அதற்கேற்ற கச்சிதமான நடிப்பு. முதல் மனைவியாக விஜி சந்திரசேகர் கிளைமேக்சில் பிரமாதமாக செய்கிறார். பானுப்ரியா இரண்டாவது மனைவி, அவரும் தேர்ந்த நடிகர் என்பதால் இயல்பாக பாத்திரத்தில் பொருந்துகிறார்.

சரவணன், இளவரசு, மௌனிகா, யுவராணி, பொன்வண்ணன், ஜான் விஜய், மனோ பாலா, ஸ்ரீமன், என மகள்கள, மருமகன்களாக, இதர பாத்திரங்களாக வருபவர்கள் அந்தந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். பாட்டியாக வருபவரும் அருமை! நாயகி சாயிஷா சைகால் நன்றாக செய்திருக்கிறார் ஆனால் முறைப் பெண்களும் நன்றாக தான் இருக்கிறார்கள், எது கார்த்தியை அவரிடம் ஹெவியா லைக் பண்ண வெச்சுதுன்னு சொல்கிற அளவுக்கு ஸ்பெஷலா அவரிடம் ஒன்றும் இல்லை. நகைச்சுவைக்கு சூரி. கார்த்தியுடன் பெரும்பாலான காட்சிகளில் அவரும் இருக்கிறார். காமெடி பரவாயில்லை. படத்தின் பின் பாதி ஓவர் மெலோடிராமா தான். ஆனால் இந்த மாதிரி குடும்ப சண்டைகள் நடக்கும் என்பதால் படத்துடன் ஒன்ற முடிகிறது. வசனங்கள் கூர்மை!

இவ்வளவு நல்ல நடிகர் பட்டாளத்தைத் தேர்ந்தெடுத்த பாண்டிராஜ் வில்லன் தேர்வில் சொதப்பியுள்ளார். சரியான சோதா வில்லன். அதற்குக் காரணம் பாத்திரப் படைப்பும் தான். யாருமே செய்யாத அளவு மோசமான முறையில் கார்த்தியை கொலை செய்ய திட்டம் போடுவதாக காட்டிவிட்டு சும்மா ஒரு அடியாள் பட்டாளத்தை ஒவ்வொரு முறையும் அனுப்பி கார்த்தியினால் பந்தாடப்பட்டு திரும்பி வருகின்றனர். குடும்பத்தைக் கலைக்க வில்லன் மேற்கொள்ளும் வழிகளும் பயங்கர சாதா. பாண்டிராஜ் இதற்காக மூளையை செலவழிக்கவில்லை. அது படத்தின் மிகப் பெரிய மைனஸ். பாடல்கள் எதுவுமே நன்றாக இல்லை. D.இமானின் பின்னணி இசை நன்றாக உள்ளது. வேல்ராஜின் ஒளிப்பதிவு ரேக்ளா ரேசில் அருமை. ரூபனின் படத்தொகுப்பு ஓகே, கொஞ்சம் படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். படத்தின் தலைப்பில் ஒற்றுப்பிழை உள்ளது. கடைக்குட்டிச் சிங்கம் என்றிருக்க வேண்டும். ஏன் இந்தத் தவறு என்று தெரியவில்லை.

மாயாண்டி குடும்பத்தார் அந்தக்காலம், கடைக்குட்டி சிங்கம் இந்தக்காலம்.

 

டிக் டிக் டிக் – திரை விமர்சனம்

இதுவரை எடுத்துக் கொள்ளாத ஒரு கதைக் களம், விண்வெளியில் நடக்கிறது முக்கால்வாசி கதை. துணிச்சலாக இக்களத்தை தேர்ந்தெடுத்துத் திரைக்கதை அமைத்ததற்கு இயக்குநரை பாராட்டவேண்டும். இதுவரை தமிழ் திரையுலகில் விண்வெளியில் நடப்பவைகளாக எந்தக் கதையும் எடுக்கப்படவில்லை. ஒரு மிகப் பெரிய எரிகல் (ஆஸ்டிராய்ட்) தென் இந்தியாவை தாக்கப் போவதாகவும், அது தாக்கினால் பெரும்பாலான தென் பகுதிகள் அழிந்துவிடும் என்னும் நிலையில் அதைத் தடுக்க ஒரு மிகப்பெரிய ஏவுகணையை கள்ள மார்க்கெட்டில் வாங்க அன் அபிஷியலா இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் (அல்லது தளபதி? சரியா புரியவில்லை) முனைவதாகவும் ஆரம்பிக்கிறது கதை. அந்தக் கள்ளச் சந்தையில் வாங்க முனைகையில் அந்த ஏவுகணை இருக்குமிடம் விண்வெளியில் சைனா போன்ற ஒரு நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு விண்வெளி தளத்தில் என்று தெரியவருகிறது. அதை விண்வெளிச் சென்று திருட ஒரு திருடனைத் தேர்ந்தெடுத்து அவனுக்குப் பயிற்சி அளித்து அந்த எரிகல் பூமி எல்லையைத் தொடும் முன் அதன் மேல் ஏவுகணையைப் பாய்ச்சி அதை உடைத்து நம் தென் தமிழகத்தைக் காப்பாற்ற முனைவது தான் கதை. இதை ஆறு நாட்களுக்குள் செய்து முடிப்பது இன்னொரு சவால்.

கதையில் பலப் பல ஓட்டைகள் இருக்கின்றன. இவர்கள் காட்டுவது போல் ஒரு விண்வெளி மையமே நம் நாட்டில் கிடையாது. திருட்டுக் குழு ஜெயம் ரவி & டீம் அர்ஜுன் & ரமேஷ் திலக் இவர்களுக்கு விண்வெளியில் ராக்கெட்டில் பயணிக்கக் கொடுக்கப்படும் பயிற்சி இத்யாதிகள் ஒரு கண்டு பூவை நம் காதில் சுத்துவதை ஒத்துள்ளது. அதுவும் ராக்கெட் பழுதாகி சந்திரனில் இறங்கி பின் டேக் ஆப் ஆவது எல்லாம் பயங்கர உடான்ஸ். ஆனாலும் விண்வெளியில் இருக்கும் விண்கலங்கள், அதில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஏவுகணை, அமெரிக்க ரஷிய விண்வெளி ஸ்டேஷனை போல  உள்ளது. அனிமேஷன் பக்கா. கம்மி பட்ஜெட்டில் மிகத் தரமான காட்சிகளை தந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு பூங்கொத்து. முக்கியமாக சீனா விண்வெளி வீரர்களிடம் சண்டையிட்ட பின் விண்வெளியில் ரவி மிதக்கும் காட்சி, ஹாலிவுட் தரம்.

மேலும் முதலில் நடிகர்கள் கொஞ்சம் சுமாராக நடித்தும் கதையில் இருக்கும் மிகப்பெரிய ஓட்டைகள் நம்மை எரிச்சல் படுத்தினாலும் போகப் போக திரைக் கதையில் சுவாரசியம் ஏற்படுத்தி இயக்குநர் நம்மை இருக்கையில் இருத்தி வைத்து வெற்றிப் பெறுகிறார். ஜெயம் ரவி, அர்ஜுன், ரமேஷ் திலக் இம்மூவரும் மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர். நிவேதா பெத்துராஜ் நடிப்பு வெகு சுமார். இன்னும் கேட்டால் முக்கிய வேடத்தில் வரும் ஜெயபிரகாஷ் நடிப்பும் சோபிக்கவில்லை. மிகவும் நாடகத்தனமாக இருந்தது. பாத்திரங்களுக்கு ஏத்த நடிகர்களைத் தேர்ந்தெடுத்திருந்தாலே படம் இன்னும் நன்றாக வந்திருக்கும்.

வெங்கடேஷின் ஒளிப்பதிவில் நாமே ஸ்பேஸுக்கு சென்ற அனுபவம் கிடைக்கிறது. டி.இமான் மெதுவாக செல்லும் காட்சிகளை இசையால் தூக்கிப்பிடிக்கிறார். பின்னணி இசை வெகு நன்று. ஆடைவடிவமைப்பாளர் தனபால் மற்றும் கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி டீம் பாராட்டப்படவேண்டியவர்கள். படம் இரண்டு மணி பத்து நிமிடங்கள். நன்றி பிரதீப் ராகவ் (படத்தொகுப்பு).

எப்படி இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று நாம் நினைக்கையில் அதை ஒரு நல்ல திரைக்கதையால் முடித்துக் கொடுக்கிறார் மிருதன் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன். இதில் ஜெயம் ரவியின் மகனும் அவர் மகனாகவே படத்தில் நடித்துள்ளார். மீன் குட்டிக்கு நீச்சல் கற்றுத் தர வேண்டுமா? கேமரா பயம் இல்லாமல் நடித்திருக்கிறான். அர்ஜுன் டைமிங் நகைச்சுவை நல்ல ரிலீஃப். படத்தின் வில்லன் குருதிப் புனல் டைப், முடிவும் அப்படியே!

நிரைய லாஜிக் தவறுகள் உள்ள ஆனால் ஒரு புது முயற்சியை பாராட்ட வேண்டும் என்கிற என்ணம் இருப்பவர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். குழந்தைகள் விரும்பிப் பார்ப்பார்கள். ஒரு டூயட் கூட கிடையாது அதனால் தைரியமாக பிள்ளைகளை அழைத்துப் போகலாம்.

Previous Older Entries