தீரன் அதிகாரம் ஒன்று – திரை விமர்சனம்

பருத்தி வீரனுக்குப் பிறகு பல வருடங்கள் காத்திருப்புக்குப் பின் அதே கார்த்தியை இப்போ கண்ணில் காட்டிய H.வினோதுக்கு கார்த்தியும் நாமும் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கோம். தீரன் பாத்திரத்தில் நின்று விளையாடுகிறார் கார்த்தி! ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ள சதுரங்க வேட்டை படத்தைத் தந்த இயக்குநர் வினோத் நேர்த்தியான இன்னொரு படத்தை நமக்குத் தந்திருக்கிறார். வாழ்த்துகள்.

நிறைய ஆய்வு செய்து 1995-2005 வரை நடந்த உண்மை சம்பவங்களை இரண்டு மணி நாற்பது நிமிட நேரத்தில் தொகுத்து வழங்கியுள்ளார் வினோத். ஒரு பேருந்து கட்டணச் சீட்டின் பின் பகுதியில் எழுதப்படும் கதையை திரைக்கதை ஆக்கிப் படைக்கும் இக்கால கட்டத்தில் ஒரு நீண்ட தொடர் சம்பவங்களை, அதுவும் இந்தியாவின் பல பகுதிகளை மையப் படுத்தி நடந்தவைகளை வெகு கோவையாக, சீர்மைப் படுத்தித் தெளிவாக ரசிகர்களுக்குப் புரியும் விதத்தில் திரைக் கதையை அமைத்து இயக்கியுள்ள வினோத்துக்கு மனமார்ந்த பாராட்டுகள்!

தொண்ணூறுகளில் dacoity/வழிப்பறிக் கொள்ளைக்காரர்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம்.  தமிழகத்தில் ஒதுக்குப்புறமான வீடுகளில் புகுந்து அதில் வசிப்பவர்களை ஈவு இரக்கமின்றிக் கொன்று நகை, பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்றவர்களைப் பற்றி பத்திரிகைகளில் படித்திருப்போம். ஒரு நேர்மையான & கெட்டிக்கார காவல் துறை அதிகாரி எப்படி அந்த வடநாட்டுக் கொள்ளைக் கும்பலை குறைந்த தொழில் நுட்ப வசதியுடனும், அரசு கொடுத்தக் குறைந்த பொருளாதார உதவியுடனும், சிறிய குழுவை வைத்து, தங்கள் உயிர்களைப் பணையம் வைத்து கொள்ளைக் கும்பல் தலைவனைக் கைது செய்தும் மற்றும் பலரை என்கவுண்டரில் கொன்றும் தமிழகத்தை அந்தக் குழுவின் துன்புறுத்தலில் இருந்து விடுவிக்கிறார் என்பதே கதை.

உண்மையில் அந்த போலிஸ் அதிகார் S.R.ஜங்கித். அந்தப் பாத்திரத்தை ஏற்று செம்மையாக செய்துள்ளார் கார்த்தி. உடம்பும் காவல் துறை அதிகாரிக்கு ஏற்றதாக முறுக்கி வைத்துள்ளார். அந்த அர்பணிப்புக்குப் பாராட்டுகள். படம் முழுக்க எக்கச்சக்க ஸ்டன்ட் காட்சிகள். அவை அனைத்தும் அற்புதமாகப் படமாக்கப் பட்டுள்ளது. ஆரவல்லி மலைத் தொடர்களின் மத்தியில் பொட்டல் வெளியில் நிறைய சண்டைக் காட்சிகள். எந்தத் தொழில் நுட்ப உபகரணத்தின் நிழல் கூடத் தெரியாமல் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளது.

கதாநாயகி ராகுல் பரீத் சிங். படத்துக்கு மென்மையைத் தருவது கார்த்தி ராகுல் பரீத் சிங்கிற்குமான காதலும் மண வாழ்க்கையின் இதமும் தான். வெகு அழகாக உள்ளது அவர்களின் அன்பும் நேசமும். கொள்ளைக் கும்பல் தலைவனாக அபிமன்யு சிங் மிக நன்றாக நடித்துள்ளார். வில்லன் பாத்திரம் வலுவாக இருக்குபட்சத்தில் தான் ஹீரோ பாத்திரமும் மிளிரும். கார்த்திக்கிற்கு இணையாக இப்பாத்திரம் அமைந்து இருப்பது படத்தின் இறுதி வரை விறுவிறுப்புக் குறையாமல் இருக்க உதவுகிறது. துணை காவல் துறை அதிகாரியாக வரும் போஸ் வெங்கட்டும் நன்றாக செய்துள்ளார். ஜிப்ரான் படத்துக்குப் படம் அவர் எவ்வளவு பெரிய பலம் என்று நிருபித்து வருகிறார். பாடல் & பின்னணி இசை அருமை!

கண்டுபிடிக்கப்படாத கொடூரமான முறையில் கொலைகள் நிகழ்ந்த சில கேஸ்களை நூல் பிடித்தாற் போலத் தொடர்ச்சியாகச் சென்று அதன் காரணகர்த்தாக்களை ஆராயும் கார்த்தி சரித்திரச் சான்றுகள் மூலம் குற்ற பரம்பரை என முத்திரைக் குத்தப்பட்ட இனங்களை ஆராய்ச்சி செய்து ராஜஸ்தானில் மறைந்திருக்கும் பவாரியா என்னும் கொள்ளைக் கும்பலே தமிழ்நாட்டில் நடக்கும் கொலை/கொள்ளைகளுக்குக் காரணம் என்று கண்டுபிடிக்கிறார்.

பெரிய கதை, நிறைய சம்பவங்கள் என்பதால் படம் நீளமாக உள்ளது. ஆனால் ஸ்டன்ட் காட்சிகளைக் கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். தேவையில்லாத ஒரு வடநாட்டு ஆடலும் பாடலும் மீதும் கத்திரி போட்டிருக்கலாம்.

இன்பார்மர் மூலம் தகவல் பெறுவது, பல மாநில காவல் துறையினரின் உதவிகளைப் பெறுவது என எந்த சின்ன விவரமும் விடாமல் கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். எளிதான காரியமில்லை இது. மேலும் கார்த்தியையும் மற்ற பாத்திரங்களையும் மிகைப்பட நடிக்க விடாமல் சரியாக வேலை வாங்கியிருப்பதற்கும் இவரை பாராட்ட வேண்டும். கொஞ்சம் தப்பியிருந்தால் காட்டுக் கத்தல்களும், பஞ்ச் வசனங்களும், அதிக சத்தமுமாக படம் உருவாகியிருக்கும்! படத்தைத் தொடங்கும் முன் பின்னணி வேலைகளை திறம்பட செய்து பின் ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இப்படம் ஒரு எடுத்துக்காட்டு. தமிழ்நாடு காவல் துறை உண்மையில் நடத்திய operation Bawaria என்கிற அதிரடி காவல் துறை நடவடிக்கைப் பற்றியதே இப்படம்.  தமிழ்நாட்டுக் காவல் துறை பெருமைப்பட வேண்டிய ஒரு படைப்பு இது.

 

நிபுணன் – திரை விமர்சனம்

நடிகர் அர்ஜுனின் நூற்றி ஐம்பதாவது படம் நிபுணன். அதற்கு அவருக்கு மிகப் பெரிய பூங்கொத்து! எல்லா நடிகர்களுக்கும் அந்த வாய்ப்பு அமைவதில்லை. அந்தப் படம் நன்றாகவும் வந்திருப்பதற்கு அதை எழுதி இயக்கிய அருண் வைத்தியநாதனுக்கு அடுத்தப் பூங்கொத்து! அவருடைய ஆஸ்தான நடிகர் பிரசன்னா மற்றும் வரு சரத்குமார், வைபவ், சுருதி ஹரிஹரன் முக்கிய பாத்திரங்களில் வருகின்றனர். அனைவரும் நன்கு நடித்திருக்கின்றனர்.

இதுவும் ஒரு போலிஸ் கதை தான் அனால் கொலைகாரனை கண்டுபிடிக்கும் போலிஸ் கதை. வேட்டையாடு விளையாடு மாதிரி ஒரு சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கப் பாடுபடுகின்றனர் அர்ஜுன், பிரசன்னா, வரு டீம். கதை நல்ல slickஆக கையாளப்பட்டிருக்கிறது. ரஞ்சித் காளிதாஸாக வரும் அர்ஜுன்  புத்திசாலியான டிஎஸ்பியாகவும் அதே சமயம் தன் பெயரான Action King என்பதை நிலைநாட்டுபவராகவும் வருகிறார். முதல்வன் படத்தில் பார்த்த அர்ஜுனுக்கு மாற்று குறையாமல் இன்றும் இருப்பது பாராட்டுக்குரியது. துணை அதிகாரிகளாக வரலட்சுமியும், பிரசன்னாவும் அவருக்கு பலம் சேர்க்கிறார்கள். கதையில் வேண்டாத மெலோடிராமா இல்லை. ரொம்ப இயற்கையாக உறவுகளின் உணர்ச்சிப் பரிமாறல்கள் காண்பிக்கப் படுகின்றன. ஆனால் நுனி சீட்டுக்கு வந்து உட்காரும்படி பயம் காட்டும் த்ரில்லர் படமும் இல்லை எனலாம்.

கொலைகாரன் டிஎஸ்பி அர்ஜுனுக்கு அடுத்து யாரை கொலை செய்யப்போகிறேன் என்று குறிப்பாக அறிவித்து, பின் கொலை செய்கிறான். அதை புரிந்து கொண்டு அவனை கண்டுபிடித்துத் தொடர்வதற்குள் மூன்று கொலைகள் செய்துவிடுகிறான். இந்தக் கொலைகளுக்கான காரணத்தை முதலில் கண்டுபிடிக்கக் கிடைக்கும் ஒரு துப்பு கிளைக் கதையாக வருகிறது. அது பிரபல ஆருஷி வழக்கை ஒத்துள்ளது. அதில் அந்த இளம் பெண்ணின் பெற்றோர்களாக சுமனும் சுகாசினியும் வருகிறார்கள். அவர்கள் பங்களிப்பும் நன்று.

கல்யாண சமையல் சாதம் படத்தின் இசையமைப்பாளர் நவீன் தான் இப்படத்துக்கும் இசை அமைத்திருக்கிறார். பாடல்களும் பின்னணி இசையும் அருமை. இப்படத்தின் ஒளிபதிவு படத்தை வேற லெவலுக்குக் கொண்டு செல்கிறது. ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா please take a bow!ஒரு காட்சியில் இரவு சென்னையை கழுகுப் பார்வையில் காட்டுகிறார், செம சீன் அது! மினுக்கும் மஞ்சள் விளக்குகளில் நகரம் ஒளிவிடுகிறது! அனைவரின் உடைகளும் வெகு நேர்த்தி, முக்கியமாக அர்ஜுன் & அவர் மனைவியாக வரும் ஸ்ருதி ஹரிஹரன்.

இப்படத்தில் எப்பவும் இருக்கும் போலிஸ் கதையில் போலிசாக வருபவர் வெல்ல முடியாதவராக சூப்பர் மேன் கணக்கில் தான் ஹீரோவை காட்டுவார்கள். இப்படத்தில் அர்ஜுனுக்கு பார்க்கின்சன்ஸ் நோயின் தொடக்க அறிகுறிகள இருப்பதாக காண்பித்து இருப்பது இந்த பாத்திரத்தை நமக்கு நெருக்கமாகவும் vulnerableஆகவும் காட்டுகிறது. இதை அர்ஜுன் போன்ற ஹீரோவின் பாத்திரத்தில் புகுத்திக் கதையை அழகாக கொண்டு சென்றதற்கும் மேலும் அந்த நோயை பற்றி சரியாக காண்பித்து இருப்பதற்கும் இயக்குநரை பாராட்ட வேண்டும்.

நல்ல த்ரில்லர் படம்.

காற்று வெளியிடை – திரை விமர்சனம்

கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி – இவர்களை வைத்து ஒரு காதல் மேஜிக் செய்ய நினைத்திருக்கிறார் மணி. வருண் சக்கரபாணி {VC} லீலா ஏப்ரகாம் இருவரும் காதல் வயப்பட்டு, காதலிக்கும் தருணங்களில் {விடியோ கேசட்டில் பிரபோசல் அனுப்புவது எல்லாம் ரொம்ப ரொமாண்டிக்} மணி P.C.சர்காராக மிளிர்கிறார். மற்ற சமயங்களில் அவர் கிரிகாலனாக வலம் வருவது நம் இழப்பே.

கருப்புத் தோல், வெள்ளைத் தோல் பட்டிமன்றம் போய்கொண்டிருக்கும் சமயம் இது. அதிதியின் நிறம் பளிங்கு வெள்ளை. ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் அவர் முகத்தின் மேல் அளவில்லாக் காதல் கொண்டிருக்க வேண்டும். ஒரு பிரேமில் கூட அழகு ஒரு மாசு குறையவில்லை. என்ன லைட்டிங் மேஜிக்கோ, அவர் முகத்தில் எப்பவும் ஒரு பொன்னிற ஒளி மின்னுகிறது! வில்லென வளையும் உடம்பு. லீலா ஏப்ரகாமாக மிகுந்த பொறுப்புள்ள, சமூக அக்கறையுள்ள மருத்துவராக, தன்மானம் மிகுந்தப் பெண்ணாக வாழ்ந்திருக்கிறார் அதிதி.

கார்த்தி முந்தையப் படங்களின் சாயல் இல்லாமல் ஏர் போர்ஸ் போர் விமானத்தின் விமானியாக வெகு இயல்பாகப் பொருந்தி நன்றாக நடித்துள்ளார். உடல் மொழி கச்சிதம்! ஆனால் பாத்திரப் படைப்பில் சறுக்கல் இருப்பதால் அவர் நடிப்பு நம் மனத்தில் ரொம்பப் பதியவில்லை.  ஆணாதிக்கம் மிகுந்தவராக கார்த்தி இருப்பது ஏர்போர்ஸ்ஸில் இருப்பதாலோ என்று நாம் எண்ணும்போது அவர் குடும்ப அறிமுகத்தின் மூலம் அவர் தந்தையின் குணத்தை ஒரே சீனில் காட்டி எப்படி மகன் அவர் மாதிரி உருவாகியிருக்கார் என்று புரியவைக்கிறார் இயக்குநர். மணி ரத்னம் தெரியும் சில இடங்களில் இவ்விடமும் ஒன்று.

கார்கில் போர் சமயத்தில் கதை நடப்பதாகக் காட்டப்படுகிறது. எந்த விதத்திலும் கார்கில் போரின் அரசியலோ, போர் வியுகங்களோ கதையில் இல்லை. எந்தப் போரில் வேண்டுமானாலும் இக்கதை நடப்பதாகக் கட்டப்பட்டிருக்கலாம். என்ன ஒன்று, ஈமெயிலும் செல்போனும் பரவலாக இல்லாக் காலம் எனக் கொள்ள கார்கில் போர் காலகட்டம் உதவுகிறது.

கார்த்தி போர்க் கைதியாவதோ, அதன் பின் தப்பித்து வெளியே வரும் முயற்சிகளிலோ எதிலுமே துளி சஸ்பென்ஸ் இல்லை. அதே போல ஜெயிலில் துன்புறுத்தப்பட்டு அடைபட்டுக் கிடக்கும் காலத்தில் அவரின் ஆணாதிக்கக் குணம் மாறி தன்னைத் தாண்டி பிறரை நினைக்கும் குணம் எவ்வாறு வந்தது என்பதற்கும் நம்பவைக்கும் அளவில் காட்சியமைப்போ திரைக்கதையோ இல்லை.

படம் முழுவதும் நடப்பது ஸ்ரீநகர், லடாக், ஹிமாச்சல் பிரதேசம் பகுதிகளில். {ஆனால் படமாக்கப்பட்டது குன்னூர் கொடைக்கானலாம்} கண்ணுக்கு விருந்து வைக்கிறார் ரவி வர்மன். விமானம் பயணிக்கும்போது நாமும் அதில் பயணிக்கிறோம். பனி மலையில் நாமும் நடக்கிறோம். அருமையான ஒளிப்பதிவு! இசை ஏ.ஆர்.ரஹ்மான். பாடல்கள் நன்றாக இருக்கின்றன. பின்னணி இசையும் (குத்தப் ஈ கிருபா} படத்துக்குப் பலம் சேர்க்கிறது. செட் டிசைனும் நன்றாக உள்ளது.

ஒகே கண்மணியில் சேர்ந்து வாழ்வது சகஜமான ஒன்றாகச் சொல்லியிருந்தார் மணி. இப்படத்தில் இரு சம்பவங்களில் திருமணத்திற்கு முன்பே பெண் கர்ப்பம் தரித்து அதுவும் இயல்பென காட்டுகிறார். இன்னும் அந்தளவு தமிழ்க் கலாச்சாரம் மாறிவிடவில்லை என்றே எண்ணுகிறேன்.

ஆனால் ஒரு நல்ல பாயிண்டை பெண்கள் சார்பாக சொல்ல வந்திருக்கிறார் மணி. அதற்கு அவரை பாராட்டவேண்டும். பெண்ணை மதிக்காத காதலன்/கணவனோடு எவ்வளவு தான் காதலிக்கும்/மனைவிக்கும் அவன் மேல் அன்பிருந்தாலும் அந்த abusive relationshipல் வாழ வேண்டிய அவசியம் பெண்ணுக்கு இல்லை என்பதை அதிதி பாத்திரம் மூலம் உணர்த்துகிறார். ஆனால் படத்தை சுபமாக முடிக்க வேண்டும் என்பதால் விசி மாறிவிட்டதாகக் காட்டி அவர்களை இணைய வைத்திருப்பது சொல்ல வந்தக் கருத்தை நீர்த்துப் போகச் செய்து விடுகிறது.

திரைக்கதையில் நிறைய ஓட்டைகள் இருந்தும் அதை சரி செய்ய மணி மெனக்கிடாதது ஏன் என்று தெரியவில்லை. அழகானக் காதல் கதையாக வந்திருக்க வேண்டியது. காதலன் காதலி இருவர் உணர்வுகள் மீதும் நம்மால் ஒன்ற முடியாததால் படம் முடிந்து வெளியே வரும்போது காற்றே கொட்டாவியாக வருகிறது.

போகன் – திரை விமர்சனம்

bogan

ஜெயம் ரவியும் அரவிந்த் சுவாமியும் இணைந்து நடிக்கும் படம்! முதல் நாளே கமலா திரை அரங்கில் சக்சஸ் மீட் எல்லாம் வைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள். அவர்களுக்கே தெரிந்திருக்கிறது அடுத்த நாள் எல்லாம் வைக்க வாய்ப்பே இருக்காதென்று. தனி ஒருவன் போலொரு படத்தை எதிர்பார்த்துப் போனால் தலைவலி தரும் ஒரு படத்தைப் பார்த்துத் திரும்பி வர வேண்டியதாகிவிட்டது. இயக்குநர் இலட்சுமணன். ரோமியோ ஜூலியட்டை விட மோசமான படம் கொடுக்க முடியுமா என்று நினைத்தவர்களுக்கு, கொடுக்க முடியும் என்று நிரூபித்துள்ளார் இயக்குநர்.

சிறந்த நடிகர்கள், அருமையான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் உருவம் மாறி ஆனா கதாபாத்திரத்தின் தன்மை மாறாமல் {கூடு விட்டுக் கூடு பாயும் சக்தி} வில்லனாக ஜெயம் ரவியும், நல்லவனாக அரவிந்த் சுவாமியும், பிராமதமாக நடித்துள்ளார்கள். கதையின் ஆரம்பத்தில் நல்லவர் ரவி, வில்லன் அரவிந்த். ஒரு சின்னக் கதைக் கருவை வைத்து பக்கா திரைக் கதை மூலம் மாஸ் படத்தையும் தர முடியும், போகன் மாதிரி ஒரு கடுப்புப் படைப்பையும் தர முடியும், திரைக்கதை தான் முக்கியம். அதைப் புரிந்து கொள்ள தவறிவிட்டார் இயக்குநர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் கதை, இயக்குநரை தேர்ந்தெடுக்கும் நடிகர்களும் எப்படி யோசிக்காமல் இப்படி கால்ஷீட் தருகிறார்கள் என்று புரியவில்லை.

முதலில் அரவிந்த் சுவாமியுடன் ஆரம்பிக்கிறது கதை. உடனே கட், ஜெயம் ரவியிடம் போகஸ். அதன் பின் அவர் ஹன்சிகாவுடன் ஆடிப் பாடுகிறார். பிறகு அரவிந்த் சுவாமி பீல் பண்ணுவாரேன்னு அவருக்கு ஒரு ஆடல் பாடல். அந்த நேரத்தில் ஆடியன்ஸ் எல்லாம் செல் போனை நோண்டி கொண்டிருக்க வேண்டும்.  பாடல்கள் அனைத்தும் கேட்க இனிமை, {டி.இமான்} ஆனால் ஒன்று கூட படத்துக்குத் தேவையில்லை.

இரண்டு மணி நாற்பது நிமிடங்கள் படம். சஸ்பென்ஸ் வெளிவந்த பிறகும் ஜவ்வு மாதிரி இழுத்திருக்கிறார் இயக்குநர். ஏழாம் அறிவில் நோக்கு வர்மம். அதில் அந்த சைனீஸ் கழுத்தை சாய்த்து எதிராளியைப் பார்த்து எதிரே இருப்பவர் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வைத்துவிடுவார். இதில் அரவிந்த் சுவாமி கையில் பாபா முத்திரை பிடித்து கூடு விட்டு கூடு பாய்ந்து வேண்டியதை நடத்திக் கொள்வார்! படத்தின் கடைசி பதினைந்து நிமிடங்கள் எதுக்குனே தெரியாத அளவுக்கு அரவிந்த் சுவாமியும், ஜெயம் ரவியும் புரண்டு புரண்டு சண்டை போடுவார்கள். இதில் பயங்கர காமெடி என்னவென்றால் அரவிந்த் சுவாமி செத்து விட்டார் என்று நினைப்போம், ஓலைச்சுவடி தண்ணீரில் தூக்கி எறியப்படும், ஆனால் சடக்கென்று அரவிந்த் சுவாமி கண் முழிப்பார், ஓலைச் சுவடியும் கடல் பாறையில் போய் சிக்கிக் கொள்ளும். அதாவது பார்ட் டூவிற்கு அடி போடுகிறார்கள். நண்பர்களே உங்களை நோக்கித் தான் வருகிறது, தாழ்வான இடத்தை நோக்கி ஓடுங்கள்!

இதன் தயாரிப்பாளர் பிரபு தேவா. எதை நம்பி பணம் போட்டாரோ தெரியவில்லை. பார்ப்பவர்களுக்கு நேர விரயம், பண விரையம், மூளை செல்கள் விரையம்.

bogannew

சென்னை 28 – 2 திரை விமர்சனம்

chennai28_part2_1102016_m

இரண்டாயிரத்து ஏழாம் வருடம் வந்த வெங்கட் பிரபுவின் சென்னை 28 படம் மனசைத் தொட்டப் படம். கிரிக்கெட் நம் இரத்தத்தில் ஊறிய ஒரு விளையாட்டு. அதுவும் தெரு கிரிக்கெட்டும், பந்தய மேட்ச்களும் எல்லா தமிழக இளைஞர்களின் வாழ்வில் கண்டிப்பாக ஒரு அங்கமாகவே பள்ளி, கல்லூரி நாட்களில் கலந்திருக்கும். சென்னை 28 பகுதி 2 முதல் படத்தின் இரண்டாம் பாகம். இந்தப் படத்திலும் மேட்ச் முக்கிய அங்கம் வகிப்பதினால் கிரிக்கெட்டில் நாம் காணும் சுவாரசியம் படத்திலும் காண முடிகிறது.

முதல் படத்தில் நடித்தவர்களையே இரண்டாம் பாகத்திலும் வெங்கட் பிரபு நடிக்க வைத்திருப்பது சிறப்பு, அதுவும் படம் வந்து பத்து வருடங்கள் ஆன பிறகு எடுத்திருக்கும் போது அதே மாதிரி அந்தக் கதாப்பாத்திரங்களின் வயதையும் பத்து வருடம் அதிகப் படுத்திக் கதை அமைத்து சொல்லியிருப்பது  அழகு. முந்தின பகுதியில் வந்த நண்பர்கள் குழுவில் நாலு நண்பர்களுக்குத் திருமணம் முடிந்து அதில் இவருக்குக் குழந்தைகளும் இருக்கு. அதில் ஒரு நண்பரான ஜெய்யின் காதல் திருமணத்திற்கு இவர்கள் அனைவரும் தேனீக்கு செல்கின்றனர். அங்கு நடக்கும் பிரச்சினைகளில் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கதையை நகர்த்தியிருப்பது இயக்குநரின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது.

ஆங்கிலப் படமானாலும் சரி தமிழ் படமானாலும் சரி இரண்டாம் பகுதி என்று எடுக்கும் போது முதல் பகுதியில் இருந்து எல்லாமே சற்று மாறுபட்டிருக்கும், எதிர்பார்த்த அளவும் இருக்காது.  அந்தக் குறை இப்படத்தில் இல்லை. முதல் கதையின் தொடர்ச்சியாக இதைப் பார்க்க முடிகிறது. கதாப்பத்திரங்களின் குணாதிசயங்களில் மாற்றம் இல்லாமல் கொண்டு செல்கிறார் இயக்குநர். அதே சமயம் வெறும் கிரிக்கெட் என்றில்லாமல் கதையில் கொஞ்சம் மசாலாவும் சேர்த்திருப்பதால் சுவைக்கிறது.

லகான், சென்னை 28 முதல் பகுதி ஆகியவை கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுத்ததால் தான் நமக்கு ஈர்ப்பு அதிகம் இருந்தது. அதே ஈர்ப்பு, பகுதி இரண்டிலும்! போட்டி மேட்ச்களின் போது நகைச்சுவையும் விறுவிறுப்பும் கலந்து நன்றாக உள்ளது. முதல் பகுதியில் பீச்சில் விளையாடிக் கொண்டிருக்கும் பள்ளிப் பிள்ளைகளிடம் இந்த நண்பர் குழு மேட்சில் தோத்து பேட்டை பறிகொடுப்பது ஹைலைட்டான விஷயம். அதே பிள்ளைகள் வளர்ந்து இவர்களின் சென்னை ஷார்க்ஸ் அணியிடம் திரும்ப அதே அளவு டஃப் பைட் கொடுப்பதாக இரண்டாம் பகுதியிலும் வைத்திருப்பது நகைச்சுவை ட்விஸ்ட்!

யுவன் சங்கர் ராஜாவின் இசை சொல்லிக் கொள்ளும் படியாகவே இல்லை. சீக்கிரம் பார்முக்கு வருவார் என்று எதிர்பார்ப்போம்.  படத்தின் வேகத்தைப் பாடல்கள் குறைக்கின்றன. சில பாடல்களை எடுத்துவிட்டால் படம் இன்னும் வேகமாக நகரும். முதல் பாகத்தில் இருந்தப் பின்னணி இசையைப் பல இடங்களில் அவர் பயன்படுத்தியிருப்பது நன்றாக உள்ளது. பிரேம்ஜி உடல் இளைத்திருக்கார், வயதும் நன்றாகத் தெரிகிறது. அதே மொக்கக் காமெடி தான் அவரின் பங்களிப்பு. ஜெய் ஒரு ஹீரோ பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். வைபவ் வில்லனாக நன்றாக நடித்துள்ளார். மற்ற நடிக நடிகையர் பாத்திரத்துக்கேற்ப நல்ல தேர்வு.

நக்கல் நையாண்டி நிறைய இருக்கு. இடிஸ்பிரஷாந்த் வீடியோவில் திரை விமர்சனம் செய்வதையும் விஜய் டிவி எல்லாருக்கும் அவார்ட் கொடுப்பதையும் கிண்டல் செய்கிறார் நடிகர் சிவா. பிராஷாந்தைக் கிண்டல் அடிக்கிறாங்களேன்னு நினச்சா அவர் இரண்டு காட்சிகளில் கிரிக்கெட் கமெண்டேடரா வரவும் செய்கிறார்! படம் முழுவதும் நண்பர்கள் கூடினால் மது அருந்துவது தான் செய்யப்படும் ஒரே செயல் என்பது போல அதிகமான மது அருந்தும் காட்சிகள். அவை சிறிதும் நன்றாக இல்லை. முதல் பாதியில் கதையில் ஒன்ற முடியவில்லை. அதே போல இறுதி முடிவும் கதையை முடிக்க சட்டென்று எதோ ஒரு முடிவை போட்டிருக்கிறார் வெங்கட் பிரபு.

சென்னை 28க்கு நல்ல இரண்டாம் பாகம் இப்படம். முதல் படம் பிடித்தவர்களுக்கு இதுவும் பிடிக்கும். லைட்டான படம். பெரிதா எதிர்பார்த்துச் செல்லாதீர்கள், ஏமாற்றம் அடைய மாட்டீர்கள்!

chennai-28-ii-movie-stills-16-1000x600

 

குமாராகிய நான்…… சிறுகதை

“நாளைக்கு அமாவாசை. நாளைக்குத் தாண்டாது.”

“ரெண்டு நாளா தண்ணி கூட இறங்கலை, வயிறும் உப்பி இருக்கே.”

“ஒண்ணுக்கு வெளிக்கு எதுவுமே போகலை.”

“கர் கர்னு இப்படித் தொண்டக் குழியில கடையுதேடீ”

சுத்தி இருக்கறவங்க பேசறதெல்லாம் என் காதில் விழுது. பாழும் வாய் தான் பேசவும், கண்ணு திறக்கவும் மாட்டேங்கிது. கண்ணுல நிக்கிற அம்முவைக் கட்டி முத்தம் கொடுக்க ரொம்ப ஆசையா இருக்கு ஆனா அதை சொல்லக் கூட முடியலையே.

indianchild

“உசிரு போவேனான்னு இழுத்துக்கிட்டு இருக்கே, அடியே, அம்முக்கு மொட்டை அடிச்சு காது குத்தணும்னு குமாரு சொல்லிக்கிட்டே இருந்தானே, அதை வேணா நாளைக்கு நாகாத்தம்மன் கோவில்ல போய் பண்ணிட்டு வந்திடு. அப்பவாவது நிம்மதியா போறானான்னுப் பார்க்கலாம்” பக்கத்து வீட்டு பாட்டி குரல் தான் இது. இன்னும் ஒரு மாசம் முடிஞ்சா தான் முப்பது வயசை தொடுவேன். முப்பது வயசு இளைஞனை அந்தக் கிழவி வழியனுப்ப அவசரப்படுது.

“அதையும் செஞ்சிடலாமே, ஏண்டா சுரேஷு நீ போய் அவன் பெண்டாட்டிட்ட கேட்டுட்டு வரியா?” பெத்த தாயே என்னை மேலே சீக்கிரம் அனுப்பத் துடிக்குது.

“என்னம்மா, என்னை போய் அந்த நாய் வீட்டு வாசல்ல நிக்க சொல்றியா?” இது அண்ணன்.

“என்னடா பண்றது, புள்ள அவ கிட்ட தானே இருக்கு. ஒரு எட்டு போய் கேட்டுடுடா. நாளைக்கு அம்முவை ஸ்கூலுக்கு அனுப்ப வேணாம்னு சொல்லிடு. காலையில போய் மொட்டை அடிச்சு, காது குத்திடலாம். நம்ம தெருல இருக்கிறவங்களுக்கு மட்டும் கறி சோறு ஆக்கி போட்டுடலாம்.”

என் வீட்டுலேந்து நாலாவது வீடு தான் ஜென்னி வீடு. அப்படி தெருல பார்த்து பார்த்து தான் லவ் ஸ்டார்ட் ஆச்சு. ஞாயிறு ஆனா அவங்க வீட்டுல எல்லாரும் நல்லா டிரெஸ் பண்ணி மாதா கோவிலுக்குப் போவாங்க. அதுல ஜென்னி பளிச்சுன்னுத் தனியா தெரிவா. டேன்சர் ஆச்சே. எல்லா க்ரூப் டேன்சிலும் அவளைத் தான் முதல் வரிசைல நிக்க வெப்பாங்க. தெலுங்கு படத்திலும் தமிழ்ப் படத்திலும் அவளுக்கு நிறைய சான்ஸ் வரும். என் மெக்கானிக் கடைல இருக்கிற டிவில அவ டேன்ஸ் ஆடுன பாட்டு வந்தா ஸ்பேனர கீழ போட்டுட்டு பாட்டு முடியுற வரைக்கும் டிவி பொட்டியை விட்டு நகர மாட்டேன்.

groupdance

நானும் நல்லாத் தான் இருப்பேன் பார்க்க. அதான் அவளுக்கும் என்னை பிடிச்சிடுச்சு. நான் சொந்தமா கடை வெச்சிருக்கேன்னு மயக்கிடிச்சுன்னு அம்மா தான் பேசிக்கிட்டே திரிஞ்சிது. நான் நாலாம் கிளாஸ் தான் படிச்சிருக்கேன். ஜென்னி ப்ளஸ் டூ. ஒரு நாள் கால் ஷீட்டுக்கு அது மூவாயிரம் ரூபாய் வாங்கும். அது ஏன் என் கடையைப் பார்த்து மயங்கனும்? சினிமால டேன்ஸ் ஆடுற பொண்ணுன்னு அம்மாக்குப் பிடிக்கலை. அதுக்கும் மேல அது கிறிஸ்டியன் வேற!

நான் பத்து வயசிலேயே படிப்பும் வராம, வழிகாட்ட அப்பாவும் இல்லாம ஒரு மெக்கானிக் கடைல போய் வேலைக்குச் சேர்ந்தேன். அது என்னவோ நான் கை வெச்சா எந்த டூ வீலருக்கும் உடனே உசிர் வந்திடும். முதலாளி எல்லா பைக்கையும் என்னைத் தான் முதல்ல பார்க்க சொல்லுவாரு. அவர் ஒரு நாள் பஸ் ஏக்சிடன்ட்ல திடீர்னு செத்துப் போனதும் அவரு கஸ்டமருங்க எல்லாம் என்கிட்டே வர ஆரம்பிச்சிட்டாங்க. மரத்தடில வேலை பார்க்க ஆரம்பிச்ச நான் சீக்கிரமே பக்கத்துல ஒரு கடையை தொறந்துட்டேன்.

இருபது வயசுல கடை ஓனர் நான். நல்லா சம்பாதிக்க ஆரம்பிச்சேன். குடி, சிகரெட்டு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது.ஜென்னி என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னப்ப எதுனால என்னைப் பிடிச்சிருக்குன்னு கேட்டேன். இதத் தான் சொல்லிச்சு. சினிமால நடிக்கிறவங்க, ஏன் நம்ம ஏரியால இருக்கிறவங்க எல்லாருமே சிகரெட்டு, தண்ணின்னு இருக்காங்க. நீ நல்லா சம்பாதிச்சாக் கூட அப்படி இல்லைன்னிச்சு.

கொஞ்ச நாள்லயே ரெண்டு பேருக்கும் ஒருத்தர ஒருத்தர் ரொம்பப் பிடிச்சுப் போயி ரெண்டு குடும்ப எதிர்ப்பையும் மீறி கல்யாணம் செஞ்சிக்கிட்டோம். ஜென்னி தான் வேற வீடு பார்க்க வேணாம் இங்கேயே இருக்கலாம்னு சொல்லிச்சு. அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஜென்னி சினிமால டேன்சர்னு எப்பப் பார்த்தாலும் கேலி பேச்சு. என்னோட ஆத்தா அது கிரிஸ்டியனுன்னு நின்னா குத்தம் உக்காந்தா குத்தம்னு திட்டிக்கிட்டே இருந்தாங்க.

மூணே மாசத்துல தனிக் குடித்தனம் போயிட்டோம். அப்போ அம்மு அவ வயத்துல ரெண்டு மாசம். ஆறு மாசம் வரைக்கும் டேன்சுக்குப் போனா, அப்புறம் முடியலை. எனக்கு அவ்வளவு சந்தோசம். கடையிலேயே என்னோடயே உக்காந்திருக்கும். கடைக்கு வர கஸ்டமர்ட்ட நல்லா பேசும். அம்மு பிறந்த அன்னிக்கு தெரு முழுக்க எல்லாருக்கும் ஜிலேபி வாங்கிக் கொடுத்தேன். எங்க ஆத்தாவும் அண்ணனும் அண்ணியும் கூட சந்தோஷமா இருந்தாங்க.

மூணு மாசத்துலேயே திரும்ப டான்ஸ் ஆட சான்ஸ் வர ஆரம்பிச்சுது. நான் போக வேணாம்னு சொன்னேன். அதுல ஆரம்பிச்சுது சின்ன சின்னத் தகராறு. சரி வா அம்மா வீட்டோட போயிடலாம், அம்மா குழந்தையைப் பார்த்துக்கும், நீ ஷூட்டிங் போலாம்னு சொன்னேன். அதெல்லாம் வேணாம், எங்கம்மாட்ட விட்டுட்டுப் போறேன். என் தங்கச்சி ஸ்கூலேர்ந்து வந்த பார்த்துப்பான்னா. பாலு கொடுக்கறதையும் நிப்பாட்டிட்டு புட்டி பால் கொடுக்க ஆரம்பிச்சா. பாப்பாக்கு வயிறே ஆங்கலை. எப்பப் பார்த்தாலும் அழுக. அதுவும் நடு ராத்திரில வீல்னு கத்தும். ஜென்னி டேன்ஸ் ஆடிட்டு வந்த அசதில எந்திரிக்கக் கூட மாட்டா. நான் தான் பாலைக் கரைச்சுக் கொடுப்பேன். வேக வேகமா குடிக்கும். கொஞ்ச நாள் பார்த்தேன் பொறுக்கலை. ஒரு வருஷம் கழிச்சு தான் வேலைக்குப் போயேன். கொழந்த தவிக்குது பாரேன்னேன். எங்கேர்ந்து தான் இத்தனை கோபமோ, சான்ஸ் கிடைக்கறப்பப் போகணும். ஒரு வருஷம் போகாம இருந்துட்டா அப்புறம் யாரு சான்ஸ் தருவாங்கன்னு சத்தமா கத்த ஆரம்பிச்சிட்டா. இவ்வளவு கோபம் வந்து நான் பார்த்ததில்ல.

சோறு ஆக்கறதும் நினைச்சப்பத் தான். நான் ஓட்டல்ல வாங்கி துன்னறது பார்த்துட்டு அம்மா தினம் வீட்டாண்ட வந்து சாப்பிட சொல்லிச்சு. மத்தியானம் தினம் சாப்பிடப் போனேன். அண்ணனுக்கு ஈபில லைன் மேன் வேலை. அது இருக்காது. ஆனா அண்ணி இருக்கும். ஜாடை மாடையா பேசிச்சு. அதனால அம்மாவை எங்க வீட்டுக்கு வரச் சொல்லி சாப்பாடு செய்யச் சொன்னேன். அப்படியே ஜென்னி அம்மா வீட்டிலேந்து பாப்பாவை இங்கக் கொண்டாந்து கொஞ்ச நேரம் பார்த்துக்க சொன்னேன்.

ஜென்னி வீட்டுல புள்ளை அழுதுகிட்டு இருக்கும். ஆனா ஜென்னியோட அம்மா அதும் பாட்டுக்கு டிவி பார்த்துக் கிட்டு இருக்கும். காது தான் கேக்காதோன்னு தோணும். அடிக்கடி ஜலுப்பு ஜுரம்ன்னு பாப்பாக்கு வர ஆரம்பிச்சுது. ஆசுபத்திரிக்கும் பாப்பாவை தூக்கிக்கிட்டு அம்மா தான் ஓடும்.

ஷூட்டிங்ல ஓவர் டைம்னு சில நாளைக்கு லேட்டா வர ஆரம்பிச்சா ஜென்னி. ஒரு நா எவனோ ஒருத்தன் பைக்ல கொண்டாந்து விட்டான். கேட்டா அவனும் டேன்சர் தான், ஆட்டோவே கிடைக்கலை அதான் கொண்டாந்து விட்டான்னு சொல்லிச்சு. எனக்கு தான் இப்போ நல்லா பணம் வருதே பாப்பாவை எதிர் வீட்டு ஆயாக்கிட்ட காசு கொடுத்துப் பார்த்துக்கச் சொல்லலாம். உங்கம்மா என்னை எப்பப் பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்காங்க. அவங்க ஒன்னும் இனிமே பார்த்துக்க வேணாம்னு சொல்ல ஆரம்பிச்சா.

இதக் கேட்டு ஆத்தாக்கு ரொம்பக் கோபம். அடிச் சிறுக்கி, உன் கொழந்தைய உன்னால பார்த்துக்க முடியாதுன்னு ஆயாவ காசுக் கொடுத்து வேலைக்கு வெப்பியான்னு அடிக்கவே போயிடிச்சி. அப்புறம் தினத்துக்கும் சண்டை தான். திடீர்னு ஒரு நாள் வந்து ஒரு வாரம் அவுட் டோர் ஷூட்டிங் போகணும்னு சொல்லுச்சு. பெரிய ஹீரோ படம். கண்டிப்பாப் போகணும்னு ஒரே அழிச்சாட்டியம். கல்யாணத்துக்கு முன்னாடி நிறைய அவுட் டோர் போகும். கல்யாணத்துக்கு அப்புறம் அதான் மொத தடவ. போகாதன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் கேக்கலை. சூட்கேஸ்ல துணிய எடுத்து வெச்சுட்டு கிளம்பிடுச்சு.

அம்மா தான் ஒரு வாரம் முழுக்க பாப்பாவை பார்த்துக்கிச்சு. அண்ணியும் தான். ஜென்னி அம்மா வீட்டுக்கே குழந்தைய அனுப்பலை. ரெண்டு நாளுக்கு ஒருக்கா போன் பண்ணி விசாரிச்சிக்கிடிச்சி ஜென்னி. எவனோ ஒருத்தனோட பைக்ல வந்து இறங்கினதுலேந்தே என் மனசே சரியாயில்லை. ஓரு வாரம் ஜென்னி ஊர்ல இல்லாத போது ஏதேதோ எண்ணம் மனசுல. அவனும் கூட அவுட்டோர் வரானான்னு கேட்டதுக்கு என்னை முறைச்சிட்டு ஆமாம் அதுக்கென்னன்னு கேட்டுட்டுப் போனா. அதுவரைக்கும் டாஸ்மாக் பக்கமே போகாத நான் அந்த வாரத்துல ரெண்டு மூணு நாள் போயிட்டு வந்தேன். அங்கே போய் ரெண்டு கட்டிங் போட்டா மனசு லேசான மாதிரி இருந்துது.

ஒரு வாரத்துல ஷூட்டிங் முடியாம இன்னும் ரெண்டு நாள் கூட இருந்துட்டு வந்தா. அவ திரும்பி வந்தன்னிக்கு நான் டாஸ்மாக் போயிட்டு லேட்டா தான் வீட்டுக்கு வந்தேன். கிட்ட வந்து குடிச்சிருக்கியான்னு கேட்டா. அமா, அதைப் பத்தி உனக்கென்னன்னு நானும் திமிரா பதில் சொன்னேன். அப்புறம் என் கூட சரியாவே பேசலை. ரெண்டு நாள் வீட்டிலேயே இருந்தா. ரெண்டு நாளும் வேணும்னுட்டு குடிச்சிட்டே வந்தேன். திரும்ப ஷூட்டிங்கிற்கு போயிட்டு சாயந்திரமா அதே ஆளோட பைக்ல வந்தா. ஆனா நாலு மணிக்கே வந்துட்டா. நான் எப்பவும் அந்த சமயத்துல கடைல தான் இருப்பேன். ஆனா அன்னிக்கு வீட்டுல இருந்தேன். வண்டியை விட்டு இறங்கும்போது அவனை உரசிகிட்டே வண்டிய விட்டு இறங்கினா. என் நெஞ்சில் யாரோ எசிட் பாட்டிலை கவுத்தா மாதிரி இருந்தது.

நான் ஜன்னல் வழியா பார்த்தது அவளுக்குத் தெரியலை. என்ன சீக்கிரம் வந்துட்டன்னு கேட்டேன். உடம்பு சரியாயில்லைன்னு சொன்னா. நேரா படுக்கப் போயிட்டா. அவ செல் போன் எடுத்துப் பார்த்தேன். ஆனந்துன்னு ஒரு நம்பருக்கு நிறைய கால் போயிருந்தது. அதை நான் தனியா என் போனில் சேவ் பண்ணிகிட்டேன். அவ உரசிக்கிட்டு இறங்கினது என்னை ரொம்ப உறுத்த ஆரம்பிச்சுது. நேரா டாஸ்மாக் போயிட்டு என்னிக்கும் இல்லாத அளவு குடிச்சிட்டு வந்தேன். என்னை பார்த்துட்டு உனக்கு இந்த கருமாந்திர பழக்கம் இல்லேன்னு தானே உன்ன கட்டிக்கிட்டேன், இப்படி குடிக்க ஆரம்பிச்சிட்டியேன்னு திட்டினா.

ரெண்டு நாள் கழிச்சு வீட்டுக்கு வரும்போது ஆத்தாவும் ஜென்னியும் பயங்கரமா சண்டை போட்டுக் கிட்டு இருந்தாங்க. ஆத்தா ஜென்னி வீட்டை விட்டு வெளிய துரத்திக் கிட்டு இருந்துச்சு. சண்டையை விலக்கி என்னன்னு கேட்டா அம்மா வாயிலையும் வயித்திலேயும் அடிச்சிக்கிட்டு நான் தலை தலையா அடிச்சிக்கிட்டேனே கேட்டியா? இந்தச் சிறுக்கி வேணாம்னு சொன்னேனே கேட்டியான்னு அழுவுது. அவ ஒண்ணும் சொல்லாம முறைச்சுக்கிட்டு நின்னா. திடீர்னு புள்ளையை தூக்கிக்கிட்டு வீட்டை விட்டுக் கிளம்பினா ஜென்னி. என்னடின்னு கேட்டா, இப்படி சந்தேகப் படற உன்னோட இனிமே வாழ விருப்பம் இல்லை, உன்ன பிடிக்கலை. நான் போறேன்னு போயிட்டா.

எனக்கு அவ பின்னாடி போறதான்னு தெரியலை. அம்மா பக்கத்துல வந்து போகட்டும்டா அவ எவனோடயோ ஊர் மேயறா. அன்னிக்கே பக்கத்துத் தெருல இருக்கிற போட்டோ கடைக்காரன் என்கிட்டே சொன்னான். அவன் ஏதோ ஷூடிங்கல போட்டோ எடுக்கப் போயிருந்தானாம். ஜென்னியும் இன்னொருத்தனும் கொஞ்சிக் குலாவிக்கிட்டு இருந்தாங்க, பாவம் குமாருன்னு சொன்னான். இன்னிக்கு எவன் கூடவோ ஒட்டிக் கிட்டு பைக்ல வந்து இறங்கினா. யாருடி அவன்னு கேட்டா நீ யாரு அதை கேக்கன்னு கத்தரான்னுச்சு.

எனக்கு ஜென்னி மேல உசுரு. அது தப்புப் பண்ணும்னு நெனைக்க முடியல. அவங்க வீட்டுக்குப் போயி அவ ஜடையை புடிச்சு ஏண்டி வீட்டை விட்டுக் கிளம்பி வந்தேன்னு கத்தினேன். குடிச்சிட்டுப் போயிருக்கக் கூடாது. நான் போட்ட சத்தத்துல அம்மு அழ ஆரம்பிச்சிடுச்சு. இதப் பாரு, நீயும் உங்கம்மாவும் என் மேல சந்தேகப் படறீங்க. நான் உன்னை நம்பி இல்லை. என் சொந்தக் கால்ல நிக்க முடியும். முதல்ல நீ குடிக்கறதை நிறுத்திட்டு வந்து பேசுன்னிச்சு. இப்படியே ஒரு மாசம் போச்சு. நானும் அவ அம்மா வீட்டு வாசப் படிய அதுக்கப்புறம் மிதிக்கலை. வைன் ஷாப் போறதையும் நிறுத்தலை. குடிச்சிட்டு அந்த ஆனந்த் நம்பருக்கு அப்பப்ப போன் பண்ணுவேன். அவன் எடுத்ததும் கட் பண்ணிடுவேன்.

என்னால குடிக்கறதை நிறுத்த முடியலை. ஜென்னி என்னை விட்டுட்டுப் பாப்பாவையும் தூக்கிட்டுப் போனதைத் தாங்கவும் முடியலை. ஒரு நாள் ஜென்னி கடைக்கு வந்திச்சு. நீ குடிக்கறதை நிறுத்தப் போறியா இல்லையான்னு என் கடை பசங்க முன்னாடி கோபமா கேட்டுது. நீ முதல்ல வீட்டுக்கு வா அப்புறம் நிறுத்தறேன்னு நானும் கோபமா சொன்னேன். பதில் கூடப் பேசலை அப்படியே போயிடுச்சு. அடுத்த மாசம் அந்தப் பொறுக்கி அவங்க வீட்டுக்கே குடி வந்துட்டான். ஜென்னி மேல நான் வெச்சிருந்த நம்பிக்கை தவிடு பொடியாகிடிச்சி. அவன் அவங்க வீட்டுக்குக் குடி வந்ததும் புத்தி பேதலிச்சா மாதிரி ஆயிடிச்சி எனக்கு. கடையை ஒரு வாரம் தொறக்கலை. கஸ்டமருங்க போன் பண்ணா எடுக்கலை. கடை ஹெல்பர் பசங்க வீட்டுக்கு தினம் வந்து வாங்கண்ணே கடையை தொறங்கன்னு கெஞ்சினாங்க. நான் போகலை.

அம்மா போய் அம்முவை தூக்கிக்கிட்டு வரப் பார்த்தாங்க. அவ கொடுக்க மாட்டேன்னு பஜாரி மாதிரி கத்தியிருக்கா. எங்கண்ணன் ஏரியா கவுன்சிலர் கிட்ட போய் சொல்லி பஞ்சாயத்துக்கு ஏற்பாடு பண்ணினாரு. அவ குழந்தையை கொடுக்க முடியாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டா. எங்கம்மா அவ குழந்தையப் பார்த்துக்காம தானே ஷூட்டிங் போனா, நான் தானே பார்த்துக்கிட்டேன், இப்ப மட்டும் ஏன் குழந்தை வேணும்னு அவங்கம்மாட்ட கேட்டாங்க. எதுவும் வேலைக்கு ஆவலை. நாளைக்கு அதையும் நடிக்க விட்டு சம்பாதிப்பா அதான் கொடுக்க மாட்டேங்கறான்னு ஏரியால எல்லாரும் பேசினாங்க. நாறிப் போச்சு. கவுரதையா இருந்தா எங்க வீட்டு மானம் கப்பலேறிடிச்சு. ஆளாளுக்கு தோணுனத எல்லாம் பேசினாங்க.

எனக்கு தான் அன்னிலேர்ந்து உயிர் போகிற வலி. ஆனா எங்க வலின்னு தெரியலை. எழுந்து நிக்கவே முடியல. அண்ணன் டாக்டருகிட்ட கூட்டிப் போச்சு. எதோ மருந்து கொடுத்தாங்க தூக்கம் தூக்கமா வந்துது. தூங்கி முழிப்பேன் வலிக்கும். வலுக்கட்டாயமா என் ஷாப் ஆளுங்க கடையை தொறந்து என்னை அங்கே ஒக்கார வெச்சாங்க. சில சமயம் மூச்சு விட முடியாத மாதிரி அடைக்கும்.

திரும்பவும் வலிக்கு மருந்து பாட்டில் தானுன்னு ஆச்சு. குடிச்ச உடனே வலி காணாம போயிடும். தினமும் டாஸ்மாக் தொறக்கும் போதே போய் குடிச்சிட்டு வந்து தான் என் மெக்கானிக் ஷாப்பை தொறக்க ஆரம்பிச்சேன். எப்பவும் போல நல்லா வேலை செஞ்சேன். நான் இருந்த வீட்டைக் காலி பண்ணிட்டு அம்மா வீட்டோட வந்துட்டேன்.

தினம் என் கடையத் தாண்டி தான் அவனோட பைக்ல போகும் ஜென்னி. உடனே எனக்கு உடம்பு முழுக்க வலிக்கும். கையோட இருக்கிற பாட்டிலை எடுத்து ஒரு மடக்கு ராவா குடிப்பேன். நெஞ்சு எரிச்சல்ல உடனே வலி மரத்துப் போகும். ஜென்னி வீட்டுல இல்லாத சமயமா அம்மா அவங்க வீட்டுல போயி அவ தங்கச்சிட்ட கேட்டு அம்முவை தூக்கியாரும். அதுஞ் சிரிப்புல தான் உசிரோட இருந்தேன்னு நினைக்கிறேன்.

முதல்ல நான் தினம் குடிக்கறதை பத்தி அண்ணன் ஒன்னும் சொல்லலை. ஒரு நாள் சோறு துன்றச்சே என் கை நடுக்கத்தைப் பார்த்து ஏண்டா குடிச்சு குடிச்சு உடம்ப கெடுத்துக்கறேன்னுச்சு. ஏன் நான் உசிரோடு இருந்து என்ன ஆகணும்னு கேட்டேன். உடனே அம்மாவும் அண்ணனும் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. என்னால அவளை நினைக்காம இருக்க முடியலை. அவ ஏன் என்னை விட்டுட்டுப் போனான்னு புரியலை. அந்த வலி மறக்க எனக்கு குடி தேவையா இருந்தது.

ஒரு நாளைக்கு ரெண்டு தடவை டாஸ்மாக் போக ஆரம்பிச்சேன். லீவ் விடுவாங்கன்னு தெரிஞ்சா முதல்லியே ரெண்டு பாட்டில் வாங்கி வெச்சிப்பேன். ஆத்திர அவசரத்துக்கு எப்பவும் கடைல ஸ்டாக் இருக்கும். கொஞ்ச நாளா காச்சல் வந்து முடங்கி படுக்க ஆரம்பிச்சேன். குடியை நிப்பாட்டுற டாக்டர் கிட்ட என்னை கூடிப் போச்சு அண்ணன். அவரு எல்லா டெஸ்டும் எடுத்தபோது தான் எனக்குக் காச நோய் இருப்பது தெரிய வந்துச்சு.

drunk

தாம்பரம் சேனடோரியம் ஆசுபத்திரில போய் சேர்த்து வுட்டாங்க. ரெண்டே நாள்ல ஒடி வந்துட்டேன். தாம்பரத்துலேயே ஒரு டாஸ்மாக்குல கட்டிங் போட்டப்புறம் தான் ஒரு நிதானத்துக்கே வந்தேன். அது வரைக்கும் உடம்பு ஒரே உதறல். வீட்டுக்கு வந்தப்புறம் அம்மா கெஞ்சிச்சு, நான் முடியவே முடியாதுன்னுட்டேன். தினம் அம்முவை பார்த்துக் கிட்டு இங்கேயே இருக்கேன். ஆசுபத்திரிக்குப் போக மாட்டேன்னு சொல்லிட்டேன்.

அம்மு ஸ்கூல் போக ஆரம்பிச்சதுலேந்து ஸ்கூல் விட்டதும் நேரா என் கடைக்கு தான் ஒடி வரும். நான் வாங்கி வெச்சிருக்கிற பிஸ்கட்டை துன்னுட்டு என்னக் கட்டி முத்தம் கொடுத்துட்டு அவங்க வீட்டுக்கு ஓடிடும்.

எனக்கு டிபின்னு யாரோ ஜென்னி கிட்ட போய் சொல்லிட்டாங்க. சின்னக் குழந்தைக்கும் டிபி வந்துடும்னு அது உடனே அம்மு என்னைப் பார்க்க போகக் கூடாதுன்னு சொல்லிடிச்சு. அதுலேந்து இன்னும் அதிகமா குடிக்க ஆரம்பிச்சேன். கடைய பசங்க தான் பார்த்துக் கிட்டாங்க. எழுந்து நிக்கக் கூட முடியலை. பசி எடுக்கறதும் நின்னுப் போச்சு. எங்கண்ணன்ட டாக்டர் லிவர் அழுகிப் போச்சுன்னு சொன்னாராம். ஒரு நாள் மயக்கமாயிட்டேன். ஜிஹெச்சுக்குத் தூக்கிட்டுப் போயிருக்காங்க. அங்க என்னல்லாமோ செஞ்சிப் பார்த்திருக்காங்க. முத்திப் போச்சு, இன்னும் நாள் கணக்கோ நேரக் கணக்கோ தான், வீட்டுக்குக் கொண்டு போயிடுங்கன்னு சொல்லிட்டாங்களாம். பாதி நினைவும் பாதி மயக்கமுமா இருந்தேன். ஒண்ணுமே புரியல. ஆனா மனசு சந்தோஷமா இருந்திச்சி. இன்னும் கொஞ்ச நாள்ல வலி போயிடும். நிம்மதியா ஜென்னிய நினைக்காத வேற உலகத்துக்குப் போயிடலாம்னு தோணுச்சு.

இதோ அம்மு பக்கத்துல வந்து நிக்குது, ஆனா பார்க்க முடியலை.  அதை எனக்கு வாயில பால் ஊத்தச் சொல்றாங்க. அம்முக் கொடுத்தப் பாலை கஷ்டப்பட்டு முழுங்கறேன். “அடே சுரேஷு, குமாரு பால முழுங்கறாண்டான்னு” அம்மா அண்ணனைக் கூப்பிட்டுது. அண்ணன், அண்ணி, அம்மா எல்லாரும் பாலை வாயில ஊத்தறாங்க. பாதி உள்ளப் போகுது பாதி வெளியே வழியுது.

அம்மு இன்னும் அங்கேயே நிக்குது போல. அண்ணன் அதுங்கிட்ட “அழாதடா கண்ணு”ன்னு சொல்றது காதுல விழுது. பாவம் அம்மு. என்னமோ சத்தம். ஜென்னி போடும் சென்ட் மணம் வருது. “அம்முவை கூட்டிப் போக வந்தேன்” அப்படின்னு சொல்லுது ஜென்னி. இவங்கல்லாம் பால் கொடுக்கறதை பார்த்துட்டு அதுக்கும் கொடுக்கணும்னு மனசுல தோண வெச்சிருக்கான் அந்த நல்ல ஆண்டவன். கிட்ட வந்து வாயில பாலை விடுது. அது பாலை விட்டதும் அப்படியே கண்ணை தொறக்கறேன், கண்ணிலேந்து தண்ணி வழியுது, ஜென்னியப் பார்க்கிறேன், பக்கத்துல மொட்டை அடிச்சு காது குத்தியிருக்கற அம்முவை பார்க்கறேன், கீழே இருக்கற என் உடம்பையும் பார்க்கறேன். குமாராகிய நான் இனி இங்கில்லை.

innerpeace

 

புறம் – சிறுகதை

“என் பெண்ணை நான் ஸ்ட்ரிக்டா வளர்த்திருக்கேன். காதல் கீதல்னு சொல்லிக்கிட்டு வந்தானா வெட்டிப் போட்டிருவேன்னு அவளுக்குத் தெரியும். வேற ஜாதி பையனை கல்யாணம் செஞ்சுக்கரதுல்ல ஒண்ணும் தப்பில்ல. ஆனா அவங்களுக்குப் பிறக்கிற குழந்தைங்க எந்த ஜாதியை சேரும்? நீங்களே சொல்லுங்க மாலதி, ஒரே குழப்படியா ஆயிடாது?”

என் மகள் வேறு ஜாதிப் பையனை மணக்கப் போகிறாள் என்று கேள்விப்பட்டு என் தெரு நட்பு ராதிகா கோவிலில் என்னைப் பார்த்ததும் என்னிடம் சொன்னதது தான் மேற்கூறிய கருத்து! நான் ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்து விட்டு நகர்ந்து கொண்டேன். இந்த மாதிரி பேச்சுக்கள் எல்லாம் எங்கள் தெரு பிள்ளையார் கோவிலில் தான் சுவாரசியமாக நடக்கும். சாமி கும்பிட வராங்களா இல்லை வம்புப் பேச வராங்களான்னே சந்தேகம் எனக்கு எப்பவும்.

அடுத்த வாரம் ஒரு மணி விழாவில் ராதிகாவை மறுபடியும் சந்திக்கும்படி நேர்ந்தது. அவள் கண்ணில் படாமல் தள்ளி போய் ஒரு நாற்காலியில் அமர்ந்தேன். மோப்பம் பிடித்து அருகில் வந்து என் பக்கத்து சேரில் உட்கார்ந்து விட்டாள். “நானும் என் பெண்ணுக்கு அலையன்ஸ் பார்க்க ஆரம்பிச்சிட்டேன் மாலதி. எங்க ஜாதில உங்களுக்கு நல்ல வரன் எதுனா தெரிஞ்சா சொல்லுங்க. அது சரி, நீங்க பொண்ணுக்கு கல்யாணம் உங்க வழக்கப்படி பண்ணப் போறீங்களா இல்லை பிள்ளை வீட்டு வழக்கப் படியா?”

thamboolam

நல்லவேளை அந்த சமயம் வேறு ஒருவர் ராதிகாவிடம் பேச வந்ததால் நான் வாய்ப்பை நழுவ விடாமல் அங்கிருந்து ஓட்டம் எடுத்தேன். மண மேடையில் மணி விழா காணும் தம்பதியினர் காலில் விழுந்து ஆசி வாங்கி, சாப்பிடக் கூட காத்திருக்காமல் கிளம்பிவிட்டேன்.

“நீங்களும் நில்கிரிஸ்ல தான் மளிகை சாமான் வாங்குவீங்களா? உங்களை நான் இங்கே பார்த்ததேயில்லையே” தோளைத் தொட்டுப் பேசியது யார் என்று திரும்பிப் பார்த்தேன். வேறு யார்? ராதிகா தான்.

grocery

“நம்ம தெருக் கடைல வெண்ணெய் ஸ்டாக் இல்லைன்னு சொல்லிட்டான். அதான் இங்க வாங்க வந்தேன்” என்று சொல்லிக் கொண்டே பில் போடும் இடத்துக்கு விரைந்தேன். என் கெட்ட நேரம் பில் போடும் கவுண்டரில் எனக்கு முன்னாடி நாலு பேர். வசதியாப் போச்சு ராதிகாவுக்கு. “அன்னிக்கு நீங்க உடனே கிளம்பிட்டீங்க போலிருக்கு. உங்க கூட பேசவே முடியலை. கல்யாணத்துக்குப் புடைவை எல்லாம் வாங்கிட்டீங்களா?”

“வாங்கியாச்சுங்க”

“போன தடவை பார்த்தபோதே கேக்க நினச்சேன், நீங்க சைவமாச்சே. பிள்ளை வீட்டுல அசைவம். உங்க பொண்ணுக்கு அசைவம் சமைக்கத் தெரியுமா?”

“அதெல்லாம் அவங்க பிரச்சினைங்க. நமக்கென்ன அதைப் பத்தி. கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தப் போறவங்க அவங்க ரெண்டு பேரும். சமைக்கறாங்க, சமைக்காமப் போறாங்க. நீங்க ஏங்க அதைப் பத்திக் கவலைப்படறீங்க?” சற்றே எரிச்சலுடன் பதில் சொன்னேன்.

“அதெப்படிங்க, அவ்வளவு லைட்டா சொல்றீங்க? வெஜிடேரியனா இருந்துட்டு நான் வெஜிடேரியன் சமைக்கணும்னா கஷ்டம் இல்லையா? என் பொண்ணு நான் வெஜ் பக்கத்துல வெஜ் சாப்பாடு இருந்தா கூட சாப்பிட மாட்டா. நாங்கல்லாம் ஹோட்டல் போனா கூட சைவ ஹோட்டல் தான் போவோம்.”

பதில் பேசாம பணத்தைக் கொடுத்து சாமானை வாங்கிக் கொண்டு வீடு வந்தேன். மாலை என் கணவர் வந்ததும், “இதப் பாருங்க நம்ம தெருல இருக்கிற ராதிகா வீட்டுக்குப் பத்திரிகை வைக்க வேண்டாம். எரிச்சலா வருதுங்க. எப்போப் பார்த்தாலும் நம்ம பொண்ணு கல்யாணத்தைப் பத்திக் குத்தலா சொல்லிக்கிட்டு இருக்கா.”

“அது எப்படி அவங்களை மட்டும் விட்டுட்டு மத்தப் பேருக்கு பத்திரிகை வைக்கிறது? அது சரி இல்லை மாலதி. கலப்புத் திருமணம்னா நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க தான். இதுக்கெல்லாம் கோபப்படக் கூடாது”

வேண்டா வெறுப்பாக அவர்கள் வீட்டுக்குச் சென்று பத்திரிகை வைத்தேன். அங்கேயும் விடவில்லை ராதிகா. “என்னங்க, உங்க தம்பி பெண்டாட்டியோட அத்தைப் பொண்ணு கூட இன்டர் கேஸ்ட் மேரேஜ் தானே செஞ்சா, ஒரே வருஷத்துல பிரிஞ்சிட்டாங்க இல்ல” என்று தன் கணவரைப் பார்த்துக் கேட்டாள். அவர் பாவம் நல்லவர். “என்ன ராதிகா, கல்யாணத்துக்கு அழைக்க வந்தவங்க முன்னாடி இப்படி பேசறே. அவங்களுக்கு என்ன பிரச்சினையோ பிரிஞ்சாங்க. எல்லாரும் அப்படியேவா இருப்பாங்க. சாரி சார். என் வைப் கொஞ்சம் இப்படி தான் சட்டுன்னு பேசிடுவா, நீங்க எதுவும் மனசுல வெச்சுக்காதீங்க. நாங்க கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தறோம்” அப்படீன்னு எங்களை அவசர அவசரமா வெளியேற்றினார்.

சில மாதங்கள் கழித்து ஒரு நாள் என் கணவரின் அலுவலகத்தின் ஆபிஸ் டே விழா ஈசிஆர் ரோடில் ஒரு ரிசார்ட்டில் நடைபெற்றது. அங்கு சென்றிருந்த போது அவரின் சில உடன் வேலை செய்பவர்களிடம் பேசும்போது என் மகளின் திருமணப் பேச்சு வந்தது. என் மகள் எப்படி இருக்கிறாள், மண வாழ்க்கை எப்படி இருக்கு என்று ஒருவர் கேட்டதற்கு அவள் மகிழ்ச்சியாக இருப்பதை சொல்லிக் கொண்டிருந்த போதே, ஒரு கலீகின் மனைவி என்னைப் பார்த்து, “உங்க மகள் கலப்புத் திருமணம் எல்லாம் ஒரு சின்ன விஷயங்க. நான் வொர்க் பண்றது ஒரு MNCல. அங்கே நட்பு/காதல் எல்லாம் மொழி, கலாச்சாரம் எல்லாம் பார்த்து வரது இல்லைன்னு நான் நேரடியாவே பார்க்கிறேன். மதம், மொழி, இனம் எல்லாம் வேற வேற. ஆனா எப்படியோ லவ் வந்துருதுங்க” என்றார் சிரித்துக் கொண்டே!

ladieschatting1

காரில் திரும்பி வரும்போது “மாலதி, நம்ம தெரு ராதிகா அவங்களோட மக ஒரு கொரியன் பையனை லவ் பண்றா. இன்னிக்கு மத்தியானம் லஞ்சுக்கு அன்னலட்சுமி போயிருந்தேன். அங்கே ராதிகா கணவரைப் பார்த்தேன். அவர் தான் என்னிடம் சொன்னார். அந்தப் பையன் அந்த பொண்ணு ஆபிசிலேயே ஒரு பிராஜக்டுக்காக வந்திருக்கானாம். ரெண்டு பெரும் ஒரே ப்ராஜெக்ட்ல வேலை செஞ்சிருக்காங்க. கல்யாணம் செஞ்சுப்போம்னு ரொம்ப உறுதியா இருக்காங்களாம். சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார்.”

அப்படியே ஷாக் ஆயிட்டேன். “நீ போய் அவங்களை ஒன்னும் கேக்காத பாவம்” என்றார் என் கணவர். ஆனால் நான் அதற்குள் மனத்தில் பிளான் பண்ண ஆரம்பித்து விட்டேன். எனக்கு சில டப்பர்வேர் டப்பாக்கள் தேவையாக இருந்ததால் அடுத்த நாள் ராதிகா வீட்டுக்கு அதை சாக்கிட்டுப் போக முடிவு செய்தேன். அவள் டப்பர்வேர் சேல்ஸ் ரெப்.

கதவை தட்டியதும் திறந்த ராதிகா, என்னைப் பார்த்ததும் முகம் சுருங்கி வீட்டுக்கு வராம என்னை அப்படியே போக வைப்பது எப்படின்னு யோசிப்பது தெரிந்தது. வாங்க வாங்க என்று உள்ளே அழைகாமல் “ஒரே தலைவலி, என்ன விஷயம்?” என்று வாசலில் நிற்க வைத்தே கேட்டாள் ராதிகா.

“கோவிலுக்கு வந்தேன். அப்படியே கொஞ்சம் டப்பர்வேர் டப்பாக்கள் வேண்டியிருந்தது. அதான்  வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேன்” என்றேன்.

“இருங்க கேட்லாக் எடுத்து வரேன்” என்று உள்ளே சென்று எடுத்து வந்தாள்.

முகம் வாடி வதங்கி இருந்தது. அவளிடம் நறுக்கென்று நாலு வார்த்தை கேட்க வேண்டும் என்று முடிவுடன் வந்த நான் அவளின் சோகம் கப்பிய முகத்தைப் பார்த்ததும் ஏனோ வேறு எதுவும் கேட்கத் தோன்றவில்லை. வாங்க வேண்டிய ஐட்டம்களை டிக் செய்து கேடலாகை திருப்பிக் கொடுத்து விட்டுக் கிளம்பினேன்.

“மாலதி, என்னங்க ஒண்ணும் கேக்காம கிளம்பறீங்க?”

“இல்லையே வேணுங்கற ஐட்டம் மார்க் பண்ணிடேங்க”

“ப்ச் அது பத்தி இல்லைங்க. உங்களுக்கு விஷயம் தெரியும்னு எனக்குத் தெரியும். என் வீட்டுக்காரர் உங்க வீட்டுக்காரரைப் பார்த்த விஷயம் சொல்லிட்டாரு. ஆனாலும் அதைப் பத்தி ஒண்ணுமே கேக்காம கிளம்பறீங்களே?

“ஆறுதல் சொல்லலாம்னு தான் வந்தேன். ஆனா நீங்க சாதாரணமா தான் இருக்கீங்க. எதுக்குக் கேட்டு உங்களை வருத்தப்பட வைக்கனும்னு கேட்கலை.”

“எப்படி இருந்தாலும் சீக்கிரம் எல்லாருக்கும் தெரியப் போகுது. நானே சொல்லிடறேன். என் பொண்ணு ஆபிஸ்ல ஒருத்தனை லவ் பண்றா. அவனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு கண்டிப்பா சொல்லிட்டா. யாருன்னு கேட்டீங்கன்னா அப்படியே ஷாக் ஆயிடுவீங்க மாலதி. அவங்க ஆபிஸ்ல வேலை பார்க்கிற கொரியா நாட்டு ஆளு.” சொல்லும்போதே அழ ஆரம்பித்து விட்டாள் ராதிகா.

என் மகள் திருமணத்தின் போது என்ன தான் என்னை சீண்டி எரிச்சல் படுத்தியவளாக இருந்தாலும் ராதிகா புடைவை தலைப்பால் முகத்தை மூடிக் கொண்டு விசும்பி விசும்பி அழுவதைப் பார்க்கையில் பரிதாபமாக இருந்தது.

“ஐயோ ராதிகா, எதுக்கு நல்ல செய்திக்குப் போய் அழறீங்க. இந்தக் காலத்துப் பசங்க நல்ல விவரம் தெரிஞ்சவங்க. அவங்க எடுக்கிற முடிவு எல்லாம் ரொம்ப சரியா இருக்கும். நாம தான் பத்தாம் பசலியா பழைய பஞ்சாங்கமா இருக்கக் கூடாது.”

“எப்படிங்க இப்படி சொல்றீங்க? நானே உங்களை எவ்வளவு கொடச்சல் கொடுத்திருப்பேன். அதை எல்லாம் மனசுல வெச்சிக்காம எனக்குத் தைரியம் சொல்றீங்க. ரொம்ப சாரிங்க. உங்க பொண்ணு அசைவ உணவை எப்படி ஏத்துப்பான்னு கேட்டேன். இப்போ என் பொண்ணு….” முடிக்காம திரும்ப அழ ஆரம்பித்தாள் ராதிகா.

“உண்மையிலேயே நீங்க அழறதை நிறுத்திட்டு அந்தப் பையனை பத்தி நல்லா விசாரியுங்க. நல்ல குணமான பிள்ளைன்னா வேற என்ன வேணுங்க? அவங்க ரெண்டு பேரும் மகிழ்ச்சியா இருக்கணும் அதான் முக்கியம். பன்னாட்டு கம்பெனிகளின் வேலையும், அவர்கள் உற்பத்தி செய்யும் பண்டங்களையும் வரவேற்கும் நமக்கு வெளி நாட்டு மாப்பிள்ளைகளையும் வரவேற்கும் பக்குவம் வேணும் ராதிகா. நீங்க இன்னிக்கு உங்க பொண்ணு வந்த பிறகு நல்லா உட்கார்ந்து பேசுங்க. அந்தப் பையனையும் வீட்டுக்குக் கூப்பிட்டுப் பேசுங்க. கிழக்காசிய நாடுகளின் கலாச்சாரமும் நம் கலாச்சாரத்தை ஒத்தது தான். பெரியவங்களுக்கு மரியாதை கொடுப்பதில் இருந்து அம்மா அப்பா என்று கூப்பிடுவது கூட கொரிய நாட்டவர்கள் நாம தமிழ்ல அம்மா அப்பான்னு கூப்பிடற மாதிரி தான் கூப்பிடுவாங்க.”

“உங்கள்ட்ட பேசினது ரொம்ப தைரியமா இருக்கு மாலதி. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. கடவுளா பார்த்து தான் உங்களை இங்கு அனுப்பி என்னுடன் பேச வெச்சிருக்கார்” ராதிகா வாசல் வரை வந்து சிரித்த முகத்துடன் வழி அனுப்பினாள்.

அவள் வீட்டுக்கு என்னை அனுப்பி வைத்தது இந்துக் கடவுளா இருக்குமா கொரியக் கடவுளா இருக்குமா என்று யோசித்தபடி வீடு வந்து சேர்ந்தேன்.

cake

Photo courtesy from the sites below.

https://pixabay.com/en/indian-women-laughing-happy-323324/

http://katemcelweephotography.com/2012/01/best-of-2011-wedding-photography-reception-photos/

https://blog.itriagehealth.com/combat-high-grocery-bills-food-allergy/grocery-shopping-food-allergy/

http://trvramalingam.com/History.htm

குற்றம் கடிதல் – திரை விமர்சனம்

Kutram-Kadithal-Poster-1

முதலில் குற்றம் கடிதல் என்றால் என்ன பொருள் என்று பார்த்துவிடுவோம். கடிதல் என்ற சொல்லுக்கு ஒன்று தவிர்த்தல், இரண்டாவது கடிந்துகொள்ளுதல் அல்லது தண்டித்தல். இதில் இரண்டாவது பொருள் கதைக்குப் பொருந்துகிறது.

நிறைய செய்திகள்/கருத்துகளை ஒரே படத்தில் சொல்ல முயன்று எதை முக்கியமாக சொல்ல வருகிறார் என்று நமக்குப் புரியாமல் போய்விடுகிறது. புதுமுகங்களை வைத்து இயக்குநர் பிரம்மா நன்றாக இயக்கியுள்ளார். மதம், கம்யுனிசம், சந்தர்ப்ப சூழ்நிலைகள், அதனால் ஏற்படும் நம்பிக்கைகள், மனித உணர்ச்சிகள், பள்ளிகளில் பாலியல் கல்வி, ஆசிரியர்கள் பள்ளியில் குழந்தைகளை அடிக்கும் பழக்கம், தாய்மையின் பல பரிமாணங்கள், இவை அனைத்தையும் படத்தில் தொட்டிருக்கிறார் இயக்குநர். பல விருதுகளை அதற்குள் இப்படம் பெற்றுள்ளது. என்னைப் பொறுத்த வரையில் பாராட்ட வேண்டிய முயற்சி என்றளவில் தான் இப்படம் என்னை ஈர்த்துள்ளது.

நடிகர்கள் அனைவரும் வெகு நன்றாக நடித்துள்ளனர். படம் ஆரம்பிக்கும் போது ஒவ்வொரு கதாப்பாத்திரமும் தனித் தனியாக நின்று சிறிது நேரத்திலேயே அவர்கள் யாவரும் ஒரு சூழ்நிலையால் இணைய வைத்திருப்பது இயக்குநரின் சாமர்த்தியம். சந்தர்ப்ப சூழ்நிலை எப்படி ஒவ்வொருவரையும் மாற்றுகிறது என்பதை சற்றே மிகைப் படுத்திக் காட்டுகிறார் இயக்குநர். பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே பாடலை இன்னும் நல்ல முறையில் படத்தில் பயன்படுத்தி இருக்கலாம்.

முதலில் நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு படம் முடியும் தருவாயில் சப்பென்று முடித்துவிட்டார். அவருடைய இரண்டாவது படம் இன்னும் நன்றாக அமைய வாழ்த்துகள் 🙂

kutramkadithal

பாபநாசம் – திரை விமர்சனம்

Papanasam-2015-film-Poster

வெகு நாளைக்குப் பிறகு பீடாவுடன் ஒரு புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி. ஒரு சிறந்த நடிகர் நடித்து வேற்று மொழியில் வெற்றிப் படமாக வந்த ஒன்றை ரீமேக் செய்த பின்னும் அதே அளவு தரம் வந்தாலே மகிழ்ச்சி. இப்படம் த்ரிஷ்யத்தை விட சிறப்பாக வந்துள்ளது. இந்தப் புதுக் குழுவின் பங்களிப்பும், இயக்குநர் ஜீது ஜோசபின் அதிக அர்பணிப்பும் பழைய வைரத்தைப் பட்டை தீட்டி மெருகேற்றி ஜொலிக்க வைத்துள்ளது!

இப்படத்தின் உண்மையான ஹீரோ திரைக்கதை தான். அது தான் இப்படத்தின் வெற்றிக்கு முழுக்காரணம். இதைப் புரிந்து கொண்டதால் தான் பல மொழிகளிலும் இப்படத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்காகக் கதை திரைக்கதையை உருவாக்கிய ஜீது ஜோசபுக்குத் தனி பாராட்டு!

கமலஹாசன்! அவர் நடிப்பைப் பற்றிப் புதிதாக என்ன இருக்குப் புகழ? ஆயினும் இந்தப் படத்தின் க்ளைமேக்ஸில் அவர் செய்திருப்பது இதே கிளைமேக்சை வெவ்வேறு மொழிகளில் செய்த அந்தந்த நடிகரைக் காட்டிலும் எட்டமுடியாத உயரத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். இன்று நடித்துக் கொண்டிருக்கும் இளம் நடிகர்கள் இவர் படங்களை பாடங்களாக எடுத்துப் படித்தால் நமக்கு இன்னும் நல்ல தமிழ் நடிகர்கள் கிடைப்பார்கள். Hats off to Kamal!

எந்தப் படைப்புமே எல்லோரின் பங்களிப்பால் தான் பரிமளிக்கிறது. பாபநாசமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொரு கதாபாத்திரமும் போட்டிப் போட்டுக் கொண்டு கமலுக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்கள். இதில் முக்கியமாகச் சொல்ல வேண்டிய ஒன்று, படத்தில் கமல் நடிப்பதாகவே தெரியவில்லை. இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தந்தையை, ஒரு குடும்பத் தலைவனை மட்டுமே திரையில் காண்கிறோம்.

ஆஷா சரத், ஆனந்த் மகாதேவன் முக்கிய பாத்திரங்களில் வருகிறார்கள். அதில் ஆஷா சரத் மலையாளத்திலும் அதே பாத்திரத்தை ஏற்று நடித்தவர், தமிழிலும் அதே அளவு பிரமாதமாக நடித்துள்ளார். இங்கே ஆனந்த் மகாதேவனின் நடிப்பைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவரும் கமலைப் போலக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். கொஞ்சம் கூட மிகையில்லாத நடிப்பு.

கௌதமி கமலுக்கு நல்லதொரு இணை, திரையிலும். அழகான தோற்றம், பாங்கான உடை மற்றும் ஆபரணங்களின் தேர்வு அவர் பாத்திரத்துக்கான மரியாதையை அதிகப் படுத்துகிறது. தேர்ந்த நடிகை. சற்றேக் கடினமானப் பாத்திரத்தை அனாயாசமாகக் கையாள்கிறார். தேவர் மகனில் பார்த்த அவர் நடிப்பிற்குப் பிறகு இப்படத்தில் அவரை மிகவும் பிடித்திருக்கிறது.

பாடல்கள் இரண்டு தான். இரண்டும் சூப்பர். வினா வினா, யேயா என் கோட்டிக்காரா – கேட்க கேட்க அலுக்காத டியுன்கள். பின்னணி இசையும் வெகு சிறப்பு. தற்போது இருக்கும் புது இசை அமைப்பாளர்களை ஓரம் கட்டி ஜிப்ரான் ரேசில் முந்துவார் என்று தோன்றுகிறது.

Editing A class. அயுப் கானுக்குப் பாராட்டுகள். துளி அதிக சதை இல்லை. அப்படியும் மூன்று மணி நேரம் ஓடுகிறது படம். ஆனால் விறுவிறுப்புக்குக் குறைவில்லை. ஒளிப்பதிவு மிகவும் நன்று, பச்சைப் பசேல் காட்சிகள் கண்ணுக்கு விருந்து. வாழ்த்துகள் சுஜீத் வாசுதேவ்!

இப்படம் த்ரில்லர் என்பதால் முதல் முறை பார்க்கும்போது இருக்கும் பாதிப்பும், பிடித்தமும் இரண்டாவது முறை இருக்காது. அதனால் இப்படத்தின் வேறு மொழி பிரதியைப் பார்த்தவர்களுக்கு இப்படத்தில் புதிதாகப் பார்க்க ஒன்றும் இல்லை, கமலின் உன்னதமான நடிப்பைத் தவிர. தமிழில் இப்படத்தை முதலில் பார்ப்பவர்கள் மிகவும் ரசித்துப் பார்ப்பார்கள். மற்றப்படி கமல் ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்து.

உத்தமவில்லனுக்கு நல்ல மாற்று மருந்து 🙂

Papanasam1

திருமண ஆல்பம்

wedding3

“மூணு லட்ச ரூபாய் போட்டோக்கும் விடியோக்கும் மட்டும்” என்று பெருமைப் பட்டுக் கொண்டாள் மேகலா. “அமெரிக்காவில் MS முடிச்சிட்டு அமேசான்ல செஞ்சுக்கிட்டிருந்த வேலையை விட்டுட்டு, இங்க வந்து இந்த மாதிரி போட்டோ எடுக்கிறான் இந்தப் பையன். இதுக்குப் பேரு கேண்டிட் போட்டோகிரபியாம், எப்படி சூப்பரா இருக்குப் பாரு”

தன் மருமகனைத் தான் இப்படி புகழ்கிறாள் என்று ஒரு நிமிஷம் ஏமாந்த ரமா பின் சுதாரித்து, போட்டோகிராபரைத் தான் மேகலா புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்து கொண்டாள். ஒரொரு பக்கமாகப் புரட்டிய ரமா புகைப்படங்களின் அழகைப் பார்த்து மயங்கினாள். மேகலாவையே இவ்வளவு அழகாக எடுத்திருக்கிறானே என்று மனத்திற்குள் பெருமூச்சு விட்டுக் கொண்டு,  நிச்சயம் இவனைத் தான் தன் மகள் கல்யாணத்துக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தாள் ரமா.

மேயர் கிருஷ்ணசாமி முதலியார் மண்டபம் அல்லது AMM  சர்வேச்வரி டிரஸ்ட் மண்டபம், இவை இரண்டில் ஒன்று தான் என்று திருமணத்துக்கு ஏற்கனவே அவள் முடிவு செய்து வைத்திருந்தாள். சமையலுக்கு இருக்கவே இருக்கிறார் அறுசுவை வேந்தர் சொக்கநாதர்.

ரிசெப்ஷன் கச்சேரிக்கு புல்லாங்குழல் ராஜேஷ். அவள் அத்தைப் பேரன் கல்யாணத்தில் அவனின் வாசிப்பைக் கேட்டாள், சினிமா பாடல்களும் கர்நாடக சங்கீதமும் இரண்டும் கலந்து அருமையாக வாசித்தான். அதனால் அவனும் fixed.

இன்னும் என்ன பாக்கி? மாப்பிள்ளை மட்டும் தான்! அவன் தான் இன்னும் சிக்கவில்லை. மகளுக்குப் பிடித்தா மாதிரி மாப்பிள்ளை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. பார்க்கும் வரன் எல்லாம் ஏதாவது காரணத்துக்குத் தட்டிப் போய் கொண்டே இருந்தது.

ஆனால் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதைத் தீவிரமாக நம்பினாள் ரமா. அதனால் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல லேப்டாப்பை ஆன் செய்து தமிழ் மேட்ரிமோனியலில் இது வரை பார்க்காத வரன்களைத் தேடி சரியா இருக்கும் என்று தோன்றியதை ஷார்ட் லிஸ்ட் செய்து வைத்தாள்.

மாலை சஹானா ஆபிசில் இருந்து வந்தவுடன் ரமா, “சஹானா, டீ குடிச்சிட்டு வா. நான் ஷார்ட் லிஸ்ட் பண்ணி வெச்சிருக்கிற profiles எல்லாம் வந்து பாரு, ஏதாவது பிடிச்சிருக்கான்னு சொல்லு.” என்றாள்.

முகம் கழுவிக் கொண்டு வந்து அவள் அருகில் உட்கார்ந்த மகள், “அம்மா, நானே உங்கிட்ட சொல்லனும்னு இருந்தேன், இந்த மேட்ரிமோனியல்ல தேடறது எல்லாம் வேண்டாம் மா. எனக்கு ஒருத்தனை ரொம்பப் பிடிச்சிருக்கு மா. அவனுக்கும் என்னை” என்றாள் மெதுவாக.

அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு, “யாரு அவன்? உன்னோட வேலை பார்க்கிறானா?” என்றாள் ரமா.

“இல்லம்மா, அப்பாக்கிட்டயும் உன் கிட்டயும் அதனால் தான் இத்தனை நாள் சொல்ல தயக்கமா இருந்துது. நீங்க IT கம்பெனில வேலை பார்க்கிற பையனா தேடிக்கிட்டு இருக்கீங்க. இவன் freelance photographer மா. என்ன சொல்லுவீங்களோன்னு பயந்து தான் இத்தனை நாள் சொல்லலை. ஆனா USல படிச்சு மாஸ்டர்ஸ் டிக்ரீலாம் வாங்கியிருக்கான் மா.”

“யாரு? மேகலா பொண்ணு கல்யாணத்துக்கு போட்டோ எடுத்தானே, அவனா?”

“அம்மா எப்படி மா உனக்குத் தெரியும்? யாருக்குமே எங்க லவ் மேட்டர் தெரியாதுன்னு நினச்சிக்கிட்டு இருந்தோம்!” மகிழ்ச்சியில் கட்டிக் கொண்டாள்.

சஹானா கல்யாணத்துக்கு போட்டோகிராபரா யாரை வைப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாள் ரமா.

photographer

photo credits, with thanks : http://www.maharaniweddings.com/top-indian-wedding-vendor-platinum-blog/2014-12-31/5016-mahwah-nj-indian-wedding-by-house-of-talent-studio

http://www.toehold.in/photography-workshop-pune.php

Previous Older Entries Next Newer Entries