ட்விட்டரைக் கைக் கொள்வது எப்படி?

twitter-logo

நான் ட்விட்டருக்கு வந்ததே எதேச்சையாகத் தான். என் மகனும் மகளும் அமெரிக்காவில் இருந்தார்கள். ட்விட்டரில் அவர்கள் போடும் ட்வீட்டுக்களை நோட்டம் பார்க்க ட்விட்டரில் ஐடி இல்லாமல் அவர்களின் ட்வீட்டுக்களை மட்டும் படித்துக் கொண்டு இருப்பேன். அப்பொழுது நான் அதிகம் ப்ளாக் படிப்பதில் தான் ஆர்வம் காட்டி வந்தேன். இவர்களின் ட்விட்டர் அக்கௌன்ட் தவிர இவர்கள் பாலோ செய்யும் ட்வீட்டர்கள் டைம்லைனும் பார்த்து அவர்களின் ப்ளாக் பதிவுகளையும் படித்து வருவேன். இதை அறிந்த என் மகன் எனக்குத் தனியாக அக்கௌன்ட் திறந்து தந்தான் 🙂

ட்விட்டர் வந்த புதிதில் பல விஷயங்கள் கேட்க கூச்சம், அதனால் பலதும் கவனித்தேத் தெரிந்து கொண்டேன். DP என்றால் Display Picture, DM என்றால் Direct Message என்றெல்லாம் புரிய பல மாதங்கள் ஆயிற்று. முதலில் முட்ட DP தான் வைத்திருந்தேன். பிறகு தான் என் படம் வைத்த DP! Twitter handle @amas32 என் மகன் எனக்கு வைத்தப் பெயர் 🙂 என் முதல் பாலோவர்கள் என் மகன், மகள், என் கணவர். இவர்கள் ட்விட்டரில் முன் காலத்தில் இருந்தே இருந்தார்கள். சில பாலோவர்களுடன் ஆரம்பித்த என் ட்விட்டர் பயணம் 4 வருடங்களில் இவ்வளவு வளர்ந்திருக்கிறது.

என் அனுபவத்தை நான் பகிர்ந்து கொண்டால் புதிதாக ட்விட்டருக்கு வருபவர்களுக்கு உதவியா இருக்குமே என்று தோன்றியது. அதனால் இந்தப் பதிவு 🙂

ட்விட்டர் bio சுவாரசியமாகவும் உங்களைப் பற்றி மற்றவர் என்ன நினைக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறீர்களோ அதை சுருக்கமாக எழுதி வைக்கவும். ட்விட்டர் ஹென்டிலும் சின்னதாக இருத்தல் நலம். ஹென்டிலே 15 எழுத்துகள் இருந்தால் 140ல் 15 ஹென்டிலுக்கேப் போய்விடும்.

முதல் ரூல், ட்விட்டர் அக்கௌன்ட் திறந்த பிறகு கொஞ்ச காலம் மற்றவர் டைம் லைன் போய் ட்வீட்டுக்களைப் படித்து யார் யார் எப்படி ட்வீட்டுகிறார்கள் என்று கவனிக்க வேண்டும். நமக்குப் பிடித்த மாதிரி ட்வீட்டுபவர்களை பாலோ செய்ய வேண்டும். பாலோ அன்பாலோ பட்டன் நம் கையில். யாரை பாலோ செய்யவும் அன்பாலோ செய்யவும் நமக்கு உரிமை இருக்கு.

முதலிலேயே நூறு இருநூறு பேர்களை பாலோ செய்யக் கூடாது. கொஞ்சம் பேரை பாலோ செய்து அவர்களுடன் உரையாட ஆரம்பிக்க வேண்டும். சும்மா ஹெலோ ஹாய் என்றெல்லாம் ட்வீட் போட்டால் யாரும் கண்டுக்க மாட்டார்கள். அவர்கள் போடும் ட்வீட்டுக்குத் தகுந்த பதில் சொல்ல முடிந்தால் அது அவர்களை உங்களுக்குத் திரும்ப பதில் அளிக்க வைக்கும். அதன் மூலம் ஒரு அறிமுகமும் நேசமும் உருவாகும்.

சிலர் ட்வீப்ஸ் ரொம்ப நல்லவர்கள், அவர்களை பாலோ செய்தவுடன் திரும்ப அவர்கள் பாலோ பேக் செய்வார்கள். அப்படிப்பட்டவர்களை பாலோ செய்வது ஆரம்ப காலத்தில் நமக்கு நல்லது. அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம்.

twitter1

அதே சமயம் நம் டைம்லைனில் (நேரக்கொடு) நாமும் புது ட்வீட்டுகள் போடுவது மிக அவசியம். யாரவது நம்மை பாலோ பண்ண விரும்பினால் நம் டைம்லைன் வந்து பார்த்து நம் ட்வீட்டுகளைப் படித்து, அவை பிடித்திருந்தால் தான் பாலோ செய்வார்கள். அதனால் சினிமா, நடிகர்கள், அரசியல், உள்நாட்டு, வெளிநாட்டுக் கலவரங்கள், பக்கத்து வீட்டு, எதிர்வீட்டு நிலவரங்கள், மதம், மொழி, இனம், அம்மா, அப்பா, தோசை, தோழி, காதல், தோல்வி, தத்துவம், கவிதை என்று உங்களுக்குப் பிடித்த தலைப்பில் 140 எழுத்துக்களுக்குள் உருப்படியாக ஏதாவது சொல்ல முயற்சி செய்யுங்கள். யாரையும் புண்படுத்தி ட்வீட் போட வேண்டாம். ஆனால் அப்படி போட்டும் மிகக் குறுகிய காலத்தில் பிரபலம் அடைவதும் இங்கே நடக்கிறது. அந்த சாய்சும் உங்களதே.

முதலிலேயே அதிக பாலோவர்களும் (தொடர்பவர்களும்) மிகக் குறைந்த பேரை பாலோ (தொடர்வோரும்) செய்பவர்களை (இவர்களுக்குப் பேர் ட்விட்டர் பிரபலங்கள்) பாலோ செய்ய வேண்டாம். ஏனென்றால் அவர்கள் நிச்சயம் உங்களை திரும்ப பாலோ செய்யப் போவதில்லை. அதனால் உங்கள் பாலோவிங் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பாலோவர் எண்ணிக்கைக் குறைவாக இருக்கும். இதனால் புதிதாக உங்களைத் தொடர நினைப்பவர் யாரேனும் உங்கள் டைம்லைன் வந்து பார்த்தால் என்ன இவர் நிறைய பேரை தொடர்கிறார் ஆனால் குறைந்த அளவில் தான் பாலோவர்ஸ் இருக்கிறார்கள் என்று உங்களை பாலோ செய்யாமல் போய்விடுவார்கள். அதனால் ஆரம்பித்திலேயே அந்த ratioவை சரியாக வைத்துக் கொள்வது நல்லது.

ட்விட்டரில் நிறைய சண்டைகள் நடக்கும். ராஜா ரஹ்மான் சண்டை, அஜித் விஜய் சண்டை, இது போல பல. இதை முதலில் தூர நின்றே வேடிக்கைப் பார்க்க வேண்டும். அருகில் சென்று கருத்துச் சொன்னால் எதிர் அணி உங்களை பீஸ் பீசாக்கி விடும். உங்களுக்கு நல்ல நின்று ஆடும் திறன் இருந்தால் நீங்கள் இந்த ஆட்டத்தில் கலந்து கொண்டு வெகு விரைவில் பாலோவர் எண்ணிக்கையைக் கூட்டலாம். பலரும் சண்டை போடுபவர்களை பாலோ செய்வதில் தான் அதிகப் பிரியம் வைக்கின்றனர்.

பாலோ செய்யும்போது யார் யாருடன் அதிகம் பேசுகிறார்கள் என்பதை கவனித்தும் அவர்களை மொத்தமாக பாலோ செய்யலாம். அதன் மூலம் அந்தக் குழுவில் இருக்கும் ஒருவர் நம்மை பாலோ பண்ண ஆரம்பித்தாலும் மற்றவர்களும் விரைவில் நம்மை பாலோ பண்ண வாய்ப்புள்ளது.

ட்வீட்டப் என்பது ட்விட்டரில் இருப்பவர்கள் ஒரு குழுவாக எங்காவது கடற்கரை, பூங்கா என்று நேரம் குறித்து வைத்து சந்தித்துக் கொள்வது. அதில் நேரடியாகப் பங்கேற்று நட்பு வட்டத்தை விரிவாக்கிக் கொள்ளலாம். அதன் மூலமும் பாலோவிங் எண்ணிக்கை உயரும். சிலர் சின்ன வட்டத்தை தான் விரும்புவார்கள். பெரிய பாலோவிங் எல்லாம் தேவை இல்லாமல் பிடித்த நட்புக்களை மட்டும் பாலோ செய்து தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.

twitter3

நல்ல ட்வீப்புக்களை பாலோ செய்தால் நகைச்சுவைக்குப் பஞ்சமே இருக்காது. எவ்வளவு மன அழுத்தத்துடன் ட்விட்டருக்கு வந்தாலும் சிறிது நேரத்தில் ரிலேக்ஸ் ஆகிவிடலாம். ஆனால் அதே சமயத்தில் நமக்குப் பிடிக்காத ட்வீட்டுக்களை போடுபவர்களை பாலோ செய்தால் இரத்த அழுத்தம் எகிறவும் வாய்ப்புள்ளது.

பல சமயம் பல ட்வீட்டுக்கள் நம்மை வம்புக்கு இழுக்கும். பதில் சொல்ல கை பரபரக்கும். கண்டும் காணாமல் போவது சாலச் சிறந்தது. எதையும் லைட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். சொல்வது எளிது, செயல் படுத்துவது கடினம். ஜாதி, மதம், பிடித்த நடிகர் பற்றிய நமக்குப் பிடிக்காத ட்வீட்டுகளைப் பார்க்கும்போது பதில் சொல்லாமல் போவது கோழைத் தனமாகத் தெரியும். அப்படியே பதில் அளித்தாலும் ஓரிரு உரையாடல்களுடன் முடித்துக் கொள்ளத் தெரிய வேண்டும். இல்லை என்றால் ட்விட்டரின் சுழலில் மாட்டிக் கொண்டு மீள்வது கடினம்.

வெளியில் வாழ்பவர்கள் தான் ட்விட்டரிலும் இருக்கிறார்கள். அதனால் அதே குண நலத்துடன் தான் இருப்பார்கள், கோபம், வெறுப்பு, பொறாமை, கிண்டல் நிறைந்தவர்களை தான் இங்கும் பார்ப்பீர்கள். என்ன எல்லாம் கொஞ்சம் அதிகப்படியாக இருக்கும் ஏனென்றால் anonymity. அதாவது முகமூடி – யாரென்று தன்னைக் காட்டிக் கொள்ளாமல் இருக்கும் வசதி இந்த ஊடகத்துக்கு உள்ளதால் சிலரால் அதிக வெறுப்பை உமிழ முடிகிறது. அந்த சமயத்தில் வேதனைப் படாமல் அப்படி நம்மை பாதிக்கும் எவரையும் ப்ளாக் (block) செய்து விட்டுப் போய் கொண்டே இருக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சு தான்.

ட்விட்டரின் சுவாரசியமே 140க்குள் நம் கருத்தைச் சொல்வது தான், வள வள என்று பேசாமல் நறுக் சுருக்காக எண்ணங்களை பகிர்தல்! உடனுக்குடன் பதில் அளிப்பதும், உலக அளவில் எங்கு என்ன நடந்தாலும் உடனே ட்விட்டரில் தெரிந்து சுடச் சுடத் தகவல் பரிமாற்றம் ஏற்படுவதும் தான் ட்விட்டர் இவ்வளவு பிரபலம் அடையக் காரணம்.

நாம் நினைத்தேப் பார்க்க முடியாத பல நல்லோரின் நட்பு இந்த சோஷியல் மீடியாவின் மூலம் கிடைப்பது நிச்சயம். நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோம். இலக்கியம், அரசியல் சார்ந்தவை, உலக நடப்புகள் பற்றிய அகலப் பார்வையும் அறிவும் இவ்வூடகத்தின் மூலம் நமக்குக் கிடைக்கிறது. அதனால் நல்லவைகளை எடுத்துக் கொண்டு அல்லாதவைகளைத் தவிர்த்து ட்விட்டரில் ஆனந்தமாய் இருப்போம் 🙂

twitter2