கூடே – மலையாளப் படத் திரை விமர்சனம்

அது என்ன மாயமோ, பெரும்பாலான மலையாளப் படங்கள் மனசுடன் உறவாடும் படங்களாக அமைகின்றன! கூடே படத்துக்கு சப் டைட்டில் இருந்தாலும் அது தேவையே இல்லாத அளவு காட்சிகளே கதை சொல்கின்றன. அதிலும் படத் தொகுப்பு என்றால் என்ன என்பதை படத் தொகுப்பாளர்கள் இப்படத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்ளவேண்டும். கத்திரித்து ஒட்டியதே தெரியாத அளவுக்கு ஒரே இழையாக ஓடுகிறது படம். இத்தனைக்கும் ப்ளாஷ் பேக் நிறைந்த கதை! அஞ்சலி மேனன் பெங்களூர் டேஸ்க்குப் பிறகு அதை விட பிரமாதமாக ஒரு படத்தைத் தந்திருக்கிறார்.

பிரிதிவிராஜ், பார்வதி மற்றும் இதில் பங்கேற்ற அனைத்து நடிகர்களும் அருமையாக நடித்திருக்கிறார்கள். ப்ரித்விராஜ் இப்படத்தில் ஓவ்வொரு பிரேமிலும் இருக்கிறார், கதையை அவர் முகமே சொல்லிவிடுகிறது. அதிலும் பதின் பருவ ப்ரித்விராஜாக வருபவர் நடிப்பும் அற்புதம். அந்தப் பிள்ளை தனியாக உறவினருடன் செல்லும் காட்சியும் அவன் படப் போகும் (யாரும் கேட்க நாதியில்லாத நிலையில்) அதீத துன்பத்தை suggestiveஆக சொல்லியிருப்பது நேரடியாக காட்டியிருந்தால் உண்டாகும் தாக்கத்தை விட பகீரரென்று நமக்கு உரைத்து சோகத்தை அதிக அளவில் ஏற்படுத்துகிறது. இயக்குநருக்கு பாராட்டுகள். காக்கா தலையில் பனங்காயாக பெரும் பணச் சுமையை பதின்ம வயதில் இருந்தே தாங்கிய வெறுப்பு, யாருடைய உதவியும் இல்லாமல் பல துன்பங்களைக் கடந்து வந்த சோகம், சகோதரியின் மேல் அளவற்ற பாசம் அதுவே ஒரு நிலைக்குப் பின் ஒட்டுதலற்ற தன்மை, பெற்றோர்கள் மேல் எரிச்சல் கடுப்பு, தோழி/காதலியிடம் சிநேகமும் காதலும், கால் பந்தாட்ட பயிற்றுவிப்பாளரிடம் மரியாதையும் வாஞ்சையும் என்று பலதரப்பட்ட உணர்வுகளை காட்டி சிறப்பாக செய்திருக்கிறார் ப்ரித்விராஜ்.

நஸ்ரியாவிற்கு நாலு வருட இடைவேளைக்குப் பிறகு இது கம் பேக் படம். சும்மா லட்டு மாதிரி இருக்கிறார். சற்றே பூசினா மாதிரி உடல்வாகும் இப்பாத்திரத்திற்கு அழகாக உள்ளது. ப்ரித்விராஜ் பாத்திரத்துக்கு எதிரான குணாதிசயங்களுடன் வருகிறார். மருத்துவமனை-வீடு-பள்ளி/கல்லூரி -மருத்துவமனை என்று வாழ்க்கை அவருக்கு இருந்தாலும் எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளும் ஒரு பக்குவத்தை யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். நிபந்தனையற்ற அன்பின் வெளிப்பாட்டை அழகாக காட்டியிருக்கிறார். அதிக வசனம் இவருக்கு தான் 🙂

கதைக் களம் நீலகிரி மழைத் தொடர் ஊட்டி அருகில். ஆனால் இவ்வளவு அழகான எரியும் இயற்கை வளங்களும் அமைதியான சூழலில் அமைந்திருக்கும் இடம் ஊட்டி அருகில் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. கேரளாவில் எடுத்ததோ என்று தோன்றுகிறது.  ஷார்ஜாவில் ஆரம்பித்து நீலகிரியில் பயணிக்கிறது கதை. அமானுஷ்ய சக்தி இருக்கிறதா என்கிற கேள்வியை விட ஒருவரின் நிறைவேறாத ஆசையின் தீவிரம் இறந்த பிறகும் அதை நிறைவேற்றிக் கொள்ள துடிக்கும் என்பதை நாம் ஒத்துக் கொள்ளும் வகையில் கதை அமைந்திருக்கிறது. சிரியன் கிறிஸ்டியன் குடும்பக் களம். ஆனாலும் மறுபிறவி நம்பிக்கையுடன் முடிகிறது கதை.

இது மராத்திப் படம் Happy Journeyயின் தழுவல். மராத்தியில் ரொம்ப dark. ஆனால் மலையாளத்தில் கூடே படம் உணர்ச்சிக் குவியிலின் collage. பின்னணி இசை ரகு திக்ஷித். மிகவும் நன்றாக உள்ளது. பாடல்களுக்கு இசை ஜெயச்சந்திரன், ரகு திக்ஷித். பரவாயில்லை ரகம். படத்தொகுப்பு லிட்டில் ஸ்வயம்ப், அற்புதம்! அவர் படத்தின் ஒரு தூண்.

அஞ்சலி மேனன் matriarchal societyயில் வளர்ந்ததால் கருத்துகளை சொல்வதில் இன்னும் அதிக சுதந்திரம் கிடைத்ததோ என்று தோன்றுகிறது.(கதையில் ஒரு பெண் பாத்திரம் விவாகரத்து செய்யக் கூட உரிமையில்லாமல் திண்டாடுவதும் அதே சமூகத்தில் தான் என்கிற அவலமும் உள்ளது). பாத்திரங்களுக்கு சரியான நடிகர் தேர்வு, சினிமா ஒரு விஷுவல் மீடியம் என்பதை மனத்தில் வைத்து இயக்கிய திறன், லிட்டில் மிஸ் சன்ஷைன் படத்தில் வரும் வண்டி போல வரும் ஒரு வண்டியும், அவர்கள் வீட்டு நாயும் மனிதப் பாத்திரங்களுக்கு இணையாக படத்தில் பங்கு பெற வைத்திருக்கும் நேர்த்தி, சிறுவர் பாலியல் வன்முறை, ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் நிலை (பெண் பாலியல் வன்முறை கேள்வி கேட்கப்படாமல் அடக்கப்படும் மூர்க்கம்) ஆகிய முக்கிய சமூக அவலங்களை முகத்தில் அறைந்தார் போல சொல்லாமல் நெஞ்சில் பதியும்படி சொல்லியிருக்கும் நளினம் இவை அனைத்துக்கும் ஒரு பெரும் சபாஷைப் பெறுகிறார் இயக்குநர்!

வாழ்க்கையில் பணம் காசு இல்லாமல் வாழ முடியாது தான் ஆனால் அதில் உறவுகள் தரும் பலமும் பாசத்தின் பிணைப்பும் வாழ்வை இலகுவாக்குகிறது, மன தைரியத்தை அதிகப் படுத்துகிறது, படும் சிரமத்திற்கு அர்த்தமளிக்கிறது. இதெல்லாம் படத்தைப் பார்த்து எனக்குத் தோன்றியது. உங்களுக்கு வேறு ஏதாவது தோணலாம், பார்த்துத் தெரிந்து கொள்ளவும் 🙂