ஆரஞ்சு மிட்டாய் – திரை விமர்சனம்

orange-mittai-movie-poster_143469445800

விஜய் சேதுபதியும் ரமேஷ் திலக்கும் நல்லதொரு நடிப்பாற்றலைக் காட்டியிருக்கும் படம் ஆரஞ்சு மிட்டாய். சூது கவ்வும், காக்கா முட்டை இவைகளில் சிறு பாத்திரங்களில் வந்தவர் நடிகர் ரமேஷ் திலக். ஆனால் இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் வந்து மனத்தில் நிற்கிறார். விஜய் சேதுபதியும் வயதானப் பாத்திரத்தில் வெகு இயல்பாக நடித்து ஸ்கோர் செய்கிறார்.

இயக்கம், எழுத்து, ஒளிப்பதிவு, எடிட்டிங் அனைத்தும் பிஜு விஸ்வநாத். இந்த மாதிரி ஒரு கதையும், திரையாக்கமும் தமிழ் சினிமா சமீபத்தில் பார்த்ததில்லை. படம் ஓடும் நேரம் ஒரு மணி 41நிமிடங்கள் தான். சமூகத்தில் தனிமையை எதிர்கொள்ள முடியாத முதியவர்கள் படும் வேதனையை கொஞ்சம் நகைச்சுவையுடன் படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. படத்தின் கடைசி 15நிமிடங்கள் சொல்ல வந்த மெஸ்சேஜை சொல்கிறது. அதன் முன் வரும் ஒரு மணி நேரம், சொச்ச நிமிடங்களின் போது கதை மெதுவாகத் தான் செல்கிறது 108 ஆம்புலன்சில் பயணித்தும்!

மசாலா எதுவும் இல்லாத படம். குத்து டேன்ஸ், அடி தடை சண்டை, டாஸ்மாக் காட்சிகள், frameக்கு frame புகை மண்டலமாக சிகரெட் பிடிக்கும் ஹீரோ, இவை எதுவுமே படத்தில் இல்லை. இதை எல்லாம் ஓவர்டோசில் பார்த்துப் பழகிவிட்டதாலோ என்னவோ கொஞ்சமும் மெலோட்ராமா இல்லாமல் நகரும் கதை சற்றே சப்பென்று இருக்கிறது. திரைக் கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரசியம் சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

பிஜு விஸ்வனாத்தே எழுதி இயக்கும் போது இன்னொருவரின் பார்வையில் எடிட்டிங் செய்யப்பட்டிருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் அவரின் ஒளிப்பதிவு A1. பாபநாசம் திருநெல்வேலி பகுதியில் படமாக்கப்பட்டிருக்கு. கிராமப்புற அழகு படம் முழுதும் பரவியிருக்கிறது. பண்ணையாரும் பத்மினியும் படத்துக்கு இசை அமைத்த ஜஸ்டின் பிரபாகரன் தான் இப்படத்தின் இசை அமைப்பாளர். பின்னணி இசை சுமார். பாடல்கள் சுமார். தீராதே ஆசைகள் பாடல் நன்றாக உள்ளது.

படத்தில் சில வசனங்கள் மிகவும் சிறப்பாக இருந்தன. கதாப்பாத்திரத்தின் தன்மையை வசனங்கள் நச்சென்று சொல்லிவிடுகிறது. வசனகர்த்தா விஜய் சேதுபதிக்குப் பாராட்டுகள். இப்படம் அவரின் முதல் தயாரிப்பும் கூட. வித்தியாசாமான கதையை தேர்ந்தெடுத்து முதல் முயற்சியிலேயே நல்ல பெயர் வாங்குகிறார். சிறப்பான பாராட்டுதல்களை ரசிகர்கள் அனைவரிடம் இருந்தும் பெற வாழ்த்துகிறேன்.

31-1438317271-orange-mittai-1