கண்ணனின் கீதை என் கண் படி!

கீதையை நமக்கு அளிக்க முடிவு செய்த கண்ணன், அவர் நடத்தும் நாடகத்தில் ஒரு காட்சியாக கீதோபதேசத்தை அரங்கேற்றுகிறார். அவர் உபதேசம் செய்வதற்கு தேர்ந்தெடுத்த நபரோ அர்ஜுனன்.  ஒரு பாமரனின் சந்தேகங்கள் அனைத்தும் அர்ஜுனன் மனதில் எழும் என்று அவருக்குத் தெரியும். கிருஷ்ணனும் அர்ஜுனனும் பால்ய சிநேகிதர்கள். மேலும் அத்தை பிள்ளை மாமன் பிள்ளை உறவும் அவர்களுக்குள். அந்த நெருக்கம் அர்ஜுனனை எதையும் துணிச்சலோடு கேட்க வைக்கும். உபதேசக் களம் மிகவும் வித்தியாசமானது. அது ஒரு போர் நடக்க இருக்கும் இடம். உபதேசத் தருணம் அதைவிட ஆச்சர்யகரமானது. இரண்டு சேனைகளும் அணிவகுத்து போருக்குத் தயார் நிலையில் உள்ள சமயத்தில் குழம்பி நிற்கும் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்து தெளிவை உண்டாக்குகிறார் பரமாத்மா.

ஆசிரியரிடம் கல்வி கற்கும் பொழுது நமக்கு சந்தேகங்கள் வருவதில்லை. வாழ்க்கையை வாழும் பொழுது தான் நாம் தடுமாறி நிற்கிறோம் . அந்த சமயம் தான் நமக்கு உண்மையாகவே கையைப் பிடித்து அழைத்துச் செல்லும் ஒரு குரு தேவையாக உள்ளது. அந்த குருவடிவம் தான் பகவத் கீதை. நம் வாழ்க்கை என்னும் போர்களத்தில் வெற்றி பெற ஜகத்குருவான கிருஷ்ண பரமாத்மா நமக்கு அளித்த எளிய வழிகாட்டி தான் பகவத் கீதை!

குருக்ஷேத்ர போர் நடக்கும் இடத்தில் வந்து நின்று, தான் சண்டையிடப் போகும் உறவினர்களையும் ஆசான்களையும் எதிர் கோஷ்டியில் இருப்பதைப் பார்த்து மனவலிமையிழந்து காண்டீபத்தைக் கீழே வைத்துவிடுகிறான் அர்ஜுனன். தன் சாரதியான கண்ணனிடம் தன் மனக் குமறலை வெளிப் படுத்துகிறான். நான் எப்படி என் சகோதரர்களைக் கொல்வேன், எனக்குப் பாடம் போதித்த குருவை எப்படிக் கொல்வேன் என்று கேட்டு தன் செயலாற்றாமைக்கு அவன் நியாயம் கற்பிக்கிறான். உறவினர்களையும் பெரியவர்களையும் கொன்று கிடைக்கும் ராஜ்ஜியம் தனக்குத் தேவையே இல்லை என்கிறான். அது தனக்கு எந்த மகிழ்ச்சியையும் தராது. மேலும், நம் பெண்கள் விதவைகள் ஆகி பித்ரு கர்ம கார்யங்கள் செய்வதற்குக் கூட நாதியில்லாத நிலைமையை ஏற்படுத்த நான் தயாராக இல்லை என்று அரற்றுகிறான் பெரு வீரனான அர்ஜுனன்! ஒரு கோழையை போல பயந்து நிற்கிறான் விஜயன்.

நம் வாழ்விலும் எத்தனையோ தருணங்களில் நாமும் இதே நிலையில் வேறு வேறு காரணங்களுக்காகத் தடுமாறி செயல் புரியாமல் இருக்க அநேகக் காரணங்களை கற்பித்துக் கொள்கிறோம். சிறுவர்களாக இருக்கும் போது படிக்காமல் இருக்க எத்தனையோ சால்ஜாப்புகள், சிறிது பெரியவர்கள் ஆன பிறகு தனக்குப் பிடித்த வேலைக் கிடைக்கும் வரை, வரும் வேலைகளைத் தட்டிக் கழிக்கப் பல வீண் முயற்சிகள், திருமணம் ஆன பிறகும் பொறுப்பில்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதற்கு பல காரணங்களைச் சொல்லி நாம் நம் இஷ்டப்பட்ட படி வாழவே விரும்புகிறோம்.

கிருஷ்ணனை முதலில் தோழனாகவேப் பார்த்தான் பார்த்தன்! பின் தன் இயலாமையை உணர்ந்து அவரிடம் சரணாகதி அடைகிறான். பயம் நிரம்பிய மனதுடன் கண்ணன் முன் அர்ஜுனன் நிற்கிறான். குழப்பமான மனநிலையில் உள்ள எவரும் தன்னை விட ஞானம் அதிகம் உள்ளவர்களிடம் வழிகாட்டுதல் வேண்டி நிற்பது அவசியம். இது நம் வாழ்விலும் நடக்கும் நிகழ்வே தான். நினைத்துப் பாருங்கள், நாம் எவ்வளவு முறை சஞ்சல மனதோடும் பயத்துடனும் நாம் மதிக்கும் ஒருவர் முன் அறிவுரை வேண்டி நின்று இருக்கிறோம்? அந்த நிலையில் தான் நாம் அறிவுரை ஏற்கும் மனப்பக்குவமும் நம்மிடம் இருக்கும். அர்ஜுனனும் அறிவுரை வேண்டி நிற்கிறான்.

கிருஷ்ணனும் அவன் நிலைமையை நன்குணர்ந்து அவனுக்கு போதிக்க ஆரம்பிக்கிறார். ஆழமான கருத்துக்களை எடுத்து வைக்கிறார். நாம் குழந்தை பருவத்தில் இருந்து குமாரனாகும் போதோ, அல்லது முதுமை அடையும் போதோ மனம் வருத்தப் படுவதில்லை. அதுவுமொரு நிலை மாற்றம் என்று இயல்பாக எடுத்துக் கொள்கிறோம். அதே போல் ஒருவன் விதிப்படி அவன் ஆயுள் முடியும் பொழுதும் தன்னால் தான் அவன் கொல்லப்பட்டான் என்று நினைப்பதும், வருத்தப் படுவதும் மூடத்தனம் என்கிறார்.

அடுத்து உடலுக்கும் ஆத்மாவிற்கும் உள்ள வேறுபாட்டை விளக்குகிறார். நம் உடல் வேறு, அதனை இயக்கம் மிக நுண்ணிய ஆத்மா வேறு. அந்த ஆத்மாவை இயக்கம் பரமாத்மா வேறு. உடல் அழியக்கூடியது. ஆத்மா அழிவில்லாதது. மேலும் ஆத்மா பரமாத்மாவோடு தொடர்புடையது. நம் உடலை இயக்கும் ஆத்மா இயங்குவது பரமாத்மாவாலே. எது அழியக் கூடியதோ அதை திரும்ப உருவாக்க முடியும். அதனால் அழியக்கூடிய உடலைத் தானே அழிக்கப் போகிறாய், அந்த உடலும் திரும்பவும் உருவாகும். அதனால் பயப்படாமல் எதிரியை எதிர்கொண்டு அவர்களை வீழ்த்து என்கிறார் பரமாத்மா.

பரமாத்மாவோடு தொடர்புடையது என்றும் நிலைத்திருக்கும். அதனால் ஆத்மா ஒவ்வொரு பிறவியிலும் அந்த பிறவிக்கு சாக்ஷி பூதமாக விளங்கும் என்கிறார். ஆத்மா பழமையானது ஆனால் புது புதுப் பிறவிகளால் புதுமைப் படுத்திக் கொள்கிறது. நைந்து போன பழைய உடையை விடுத்துப் புது உடையை நாம் நாடுவது போல ஆத்மாவும் புதுப் பிறவியை ஆட்கொள்கிறது. அழியக் கூடிய உடலைத் தான் நீ அழிக்கப் போகிறாய் அதனால் தைரியமாக சண்டியிடப் போ என்று அர்ஜுனனிடம் சொல்கிறார் கிருஷ்ண பரமாத்மா.

ஆத்மா என்பதை கேட்டு உணர முடியாது. அதைப் பற்றி பேசியோ, அதன் மேல் த்யானம் செய்தோ தெரிந்து கொள்ள முடியாது. ஆத்மா யாரை தேர்ந்தேடுக்கிறதோ அவர்களே அதைப் பற்றி உணர முடியும். அது யாரை தேர்ந்தெடுக்கும்? யார் பகுத்தறியும் திறனை வழிகாட்டியாக வைத்துக் கொண்டுள்ளனரோ, யார் புலனடக்கத்தில் தேர்ச்சி பெறுவதில் வெற்றிப் பாதையில் பயணித்துக் கொண்டு உள்ளனரோ, யார் உள்ளார்ந்த அன்போடு இறைவனை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்கின்றனரோ அவர்களிடம் ஆத்மா தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

ஆத்மா விவரிப்புக்கு அப்பாற்பட்டது. அதனை கற்பனை பண்ணிக் காட்சிப் படுத்துவதும் எளிதன்று. அது சூக்ஷமமானது. பிறப்பு இறப்பற்ற தன்மையுடையது. எனினும் அதை புரிந்து கொள்வது கடினமாக இருப்பின், வேறு மாதிரி உதாரணத்தை கண்ணபிரான் அர்ஜுனன் முன் வைக்கிறார். உடலுக்கும் ஆத்மாவுக்கும் வேறுபாடு இல்லை என்று நீ நினைத்தாலும் இறக்கும் உடலோடு ஆத்மாவும் இறந்தாலும் திரும்ப பிறக்கத்தானே போகிறது, அதற்காக நீ என் வருத்தப் படுகிறாய் என்கிறார். மண்ணிலிருந்து பானை உருவாகிறது, உடைந்த பின் மண்ணாகிப் போகிறது. பின்னொரு பானை அதிலிருந்து திரும்ப உருவாகிறது. இந்த இயக்கத்தைப் புரிந்து கொண்டவர்கள் துக்கப் பட மாட்டார்கள் என்கிறார்.

ஷத்ரிய தர்மப்படி அநீதியை எதிர்த்துப் போர் செய்வது ஒரு ஷத்ரிய வீரனின் கடமையாகிறது. வீரம், உறுதி, திண்மை, தன்னை நம்பியிருக்கும் மக்களை காத்தல், அநீதியை அஞ்சாமல் தட்டிக் கேட்டல் அனைத்தும் ஒரு வீரனுக்கு இருக்க வேண்டிய பண்புகள். அப்படிப்பட்ட வீரன் போரில் மரணம் அடைந்தாலும் அவனுக்கு சொர்க்கம் தான் காத்து நிற்கிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்துபவனே புத்திசாலி. அந்த வாய்ப்பை தவற விடுபவனை உலகம் கோழை என்று தான் தூற்றும். தன் பங்காளிகளோடு சண்டையிட்டு அவர்களை கொன்று ராஜ்ஜியத்தை அடைய வேண்டாம் என்று நினைத்து அவன் விலகியதாக யாரும் நினைக்க மாட்டார்கள். பயந்து ஒதுங்கிவிட்டான் என்று தான் நினைப்பார்கள். இழிவான நிலைக்கு அவன் சமூகத்தாலேயே தள்ளப் படுவான். அதை விட அவன் சாவை அரவணைப்பதே எவ்வளவோ மேல் என்கிறார் கிருஷ்ணா பரமாத்மா.

கண்ணன் அர்ஜுனனுக்கு போதித்தது ஏதோ போர்கள தர்மங்கள் அல்ல. அது நமக்காகச் சொல்லப்பட்ட சமூக வாழ்வியல் பாடம். நம் வாழ்க்கையிலும் நம் சுய தர்மத்தை கடைப் பிடித்து எத்தனை எதிர்ப்பு வந்தாலும் சமாளித்து வாழ வேண்டிய நிர்பந்தத்தில் தான் இருக்கிறோம். போர்க்களத்தில் அர்ஜுனன் சந்தித்ததை நாம் நம் வாழ்க்கையிலும் வேறு ரூபத்தில் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம். பின் அந்த சூழ்நிலைகளை சமாளிப்பது எப்படி?

நான் பெண்ணாக இருப்பதால் அந்த கோணத்திலேயே பார்த்துச் சொல்கிறேன். முதலில் ஒரு மகளாய் பெற்றோரை திருப்தி படுத்த வேண்டியுள்ளது. அவர்களுக்குப் பிடிக்காத ஒருத்தனைக் காதலித்துத் திருமணம் செய்ய நினைத்தால், உன்னை பெற்று வளர்க்க எவ்வளவு பாடு பட்டிருப்போம், இப்படி ஒரு காரியத்தைச் செய்கிறாயே என்பார்கள். இந்த சூழ்நிலையில் பெண் என்ன செய்ய வேண்டும்? தன் முடிவு சரி தானா என்று முதலில் ஆராய வேண்டும். பெற்றோர்கள் எதற்காக எதிர்க்கிறார்கள் என்று சிந்திக்க வேண்டும். காதலன் மேல் கண் மூடித்தனமான அன்பு வைத்து யோசித்தால் அவன் மேல் எந்தத் தவறும் தெரியாது. அதுவே பற்றில்லாமல் ஆராய்ந்தால் நிறை குறை விளங்கும். அதன் பின்னும் எடுத்த முடிவு சரி என்று நினைத்தால் பெற்றோர்களிடம் அவர்களுக்குப் புரியும் வகையில் தன் நிலையை எடுத்துச் சொல்ல வேண்டும். இதற்குத் தகுந்த அறிவு வேண்டும். திருமணத்திற்கு பின் திருமண வாழ்வை வெற்றிகரமாக செயல்படுத்தும் திறன் வேண்டும். இது ஒரு சாதாரண உதாரணம்.

தினம் தினம் நாம் கீதையில் சொல்வதை தான் அறிந்தோ அறியாமலோ செயல் படுத்திக் கொண்டிருக்கிறோம்.நாம் செய்ய வேண்டிய கடமைகளை முழு முயற்சியோடு செய்ய வேண்டும். செய்யும் முயற்சிகளில் பற்று இருக்க வேண்டும் அப்பொழுது தான் சிந்தித்து சரியான வழியில் செயல்படுவோம். ஆனால், அது தரும் பலனின் மேல் பற்று வைக்கக் கூடாது அது தான் கண்ணனின் அறிவுரை. நமக்கு முன் தோன்றிய எத்தனையோ மகான்கள் அதைத் தான் செய்தார்கள். மகாத்மா காந்தி ஒரு நல்ல உதாரணம். நாம் செயலின் பலனின் மேல் கவனத்தை வைத்தால் நம் மனம் அச் செயலின் வெற்றி தோல்வியினால் பாதிக்கப் படும். தோல்வியினால் உண்டாகும் சோகம் மனதை வேதனைப்படுத்தி பின் தொடர்ந்து செய்ய வேண்டிய செயல்களின் பின்னடைவுக்கு வழி கோலும். வெற்றியினால் உண்டாகும் அளவில்லா மகிழ்ச்சியினால் பல தவறான முடிவுகள் எடுக்கவும் நேரலாம். ஆதலால் பலனின் மேல் பற்று வைக்காத மன நிலை நம் செயல்களை இன்னும் செம்மையாகச் செய்ய தான் உதவுகிறது. இந்த நிலையை அடைவது எளிதன்று. தொடர் பயிற்சி மூலம் மட்டுமே இதை அடைய முடியும். ஆனால் இது நம் வாழ்க்கை பயணத்தை வெற்றிகரமாக நடத்த அவசியம் என்று உணரும்போதே சரியானப் பாதையில் பயணிக்க ஆரம்பித்து விடுவோம்.

இந்தப் பயிற்சிக்கு முதல் படி இரட்டை நிலையில் இருந்து விடுபட வேண்டும். சந்தோஷம், துக்கம், இவை இரண்டு உணர்ச்சிகளில் இருந்து மீண்டு வந்தால் சம நிலையில் எப்பொழுதும் நிலைத்து இருக்க முடியும். இது எப்படி சாத்தியம்? இதற்கு ஆசைகளை கட்டுப் படுத்த வேண்டும். இதை அடைய புலனடக்கம் தேவை. அது அவ்வளவு சுலபமா? அலைபாயும் கண்களும் ஒட்டுக்கேட்கும் காதுகளும் நாம் சொன்ன பேச்சைக் கேட்குமா? இல்லை! கேட்காது தான். கண்ணனை மனதில் நிறுத்தி நம் ஆசைகள், காமங்கள் அனைத்தையும் அவன் பால் திருப்பி அவன் உதவியினால் காமக், குரோத, லோப, மத, மாத்சர்யத்தை வென்று ஸ்தித ப்ரஞனாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். தனியாக இதை வெல்வது முடியாத காரியம். அவன் துணையோடு தான் இதை செய்ய முடியும். புலன்களை அடக்க முடியாதவன் புலன்கள் தரும் இன்பங்களை நாடிச் சென்று பாதை தவறி விடுகின்றான். திரும்பவும் பிறப்பு இறப்பு என்ற சம்சார சூழற்சியில் சிக்கிக் கொள்கிறான்.

என்னுடைய குருஜி ரொம்ப எளிமையாக நாம் உணரவேண்டியதைச் சொல்றார். அனுபவமே வேதம். வேதமே வாழ்க்கை. வாழ்க்கையே கர்மா. கர்மாவே அனுபவம். அந்த கர்மா மூலம் நம் செயல்கள் தூய்மை அடைய வாய்ப்பிருக்கிறது. அதன் மூலம் சம்சாரக் கடலில் இருந்து மீண்டு, இறைவனை அடைய முடிவது எளிது.

அன்பும், இறைவனை அறிய விரும்பும் அறிவும் கலந்ததுதான் பக்தி. பக்தி நம் மனம் என்னும் நிலத்தை ஈரப்படுத்தி உழுவதற்கு தயார் நிலையில் வைக்கிறது. கர்மம் அந்த ஈர நிலத்தை நம் சுயதர்மம் என்னும் ஏறு பூட்டி உழுகிறது. ஞானம் நல்ல எண்ணங்களையும் செயல்களையும் விதைகளாக அந்த நிலத்தில் விதைக்கிறது. இதற்குப் பிறகு கண்ணனின் கருணை என்னும் மழைப் பொழிந்து அறுவடை நிகழ்கிறது.

ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு நிலையில் இருக்கிறான். அவன் தேடல்களும் வெவ்வேறு. அதனால் அவன் செல்லும் பாதைகளும் வெவ்வேறு. உலகில் உள்ள அனைவரின் இலக்கும் இறைவனைச் சென்று அடைவது தான் என்றே நாமே ஒரு முடிவுக்கு வர முடியாது.  அப்படி இருக்கும் பொழுது, இறைவனைத் தெரிந்து கொள்ள அறிவினாலோ அல்லது ஞானத்தினாலோ முயற்சி எடுப்பார்கள் என்று எப்படி எண்ண முடியும்? ஆனால் செயல் புரியாமல் யாரும் இவ்வுலகில் இருப்பதில்லை. எந்த ஒரு மனிதப்பிறவியும் செயலற்று இருக்க முடியாது. நம் உடலே ஒவ்வொரு மணித்துளியும் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. நம்மால் சும்மா ஒரு நொடி கூட இருக்க முடியாது. நம் பூர்வ ஜன்ம செயல்களால் இந்த பிறவியிலும் தொடர்ந்த அந்த வாசனைகளுக்கு ஏற்ப செயலாற்றிக் கொண்டே இருக்கிறோம்.

அதனால் செயல்களின் மூலம் வரும் பலன்களின் மேல் பற்று வைக்காமல் பழகிக் கொள்ள சொல்வதும், அதை பின் பற்ற செய்வதும் சுலபம். இது இறைவனை அடைவதற்காக என்பதற்கு மட்டுமல்ல, செயல்களை சிறப்புறச் செய்து வாழ்வில்/தொழிலில் முன்னேற்றம் அடையவும் இந்த வழி எளிதானது, புரிந்து நடக்க இலகுவானது. அதனால் கிருஷ்ண பரமாத்மா கர்ம யோகத்தைக் கடைப்பிடிக்கப் பரிந்துரைக்கிறார்.

கிருஷ்ண பரமாத்மா தன் அவதாரத்தின் முதல் பகுதியில் மாடு மேய்பவனாகவும் பின் பகுதியில் பார்த்தசாரதியாகவும் இருக்கிறார். குழலூதி மாடுகளை அதாவது நம்மை மயக்கி அவர் அருகில் வரவழைத்து, பின் சாரதியாக கையில் சாட்டை எடுத்து குதிரைகளை அடக்கி, அதாவது நம் புலன்களை கட்டுப்படுத்த வழி காண்பித்து நம் வாழ்கையை ஒழுங்கு படுத்தி அவதார மகிமையை உணர்த்துகிறார்.