இன்பச் சுற்றுலா – பகுதி 2

முதல் பகுதி படிக்க இங்கே கிளிக்கவும்.

கோவில்பட்டியில் நாங்கள் தங்கியிருந்த லாட்ஜுக்கும் திருநெல்வேலியில் நெல்லை பரணி ஹோட்டலுக்கும் ஆறு வித்தியாசங்களுக்கும் மேல்! நெல்லை பரணி ஹோட்டல் சூப்பராக இருந்தது. வைபை கனெக்ஷன் என்ன, குளியல் அறையில் குளிக்கத் தனி கேபின் என்ன, அறையில் ஒலிக்கும் பாடல்கள் குளியல் அறையில் ஸ்பீக்கரில் ஒலிக்கும் வசதி என்ன, சுவையான பலவிதமான உணவு வகைகள் என்ன என்று ஹோட்டல் ஸ்டே ரொம்ப மஜாவாக இருந்தது.

மாலை நெல்லையப்பர் காந்திமதி கோவில் செல்லும் திட்டம் இருந்ததால்  நவதிருப்பதியில் இருந்து வந்து உணவருந்திய பின் இரண்டு மணி நேரத்துக்கு அனைவரும் கட்டையை சாய்த்தோம். பின் எழுந்து குழிப்பணியாரம், பஜ்ஜி, காபி, டீ என்று சுடச்சுட சாப்பிட்டுக் கிளம்பினோம். நேராக இருட்டுக் கடைக்குச் சென்று அல்வா தீருவதற்குள் வாங்க திட்டம். கோவிலுக்குப் போவதில் எங்கள் குழு எவ்வளவு ஆர்வம் காட்டியதோ அதே அளவு சாப்பாட்டு விஷயத்திலும் என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். எங்கள் குழுவில் ஒருவர் வாங்கிய சேவு, கடலை மிட்டாய், பால்கோவா, இருட்டுக்கடை அல்வா இவைகள் நிறைந்த பையை சென்னை எக்மோரில் இறக்க இரண்டு பேர் உதவி தேவைப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! கீழே உள்ள படம் இருட்டுக் கடை முன் எடுத்தது.

iruttukadai

நெல்லையப்பர் கோவில் மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது. நுழைவாயிலில் நிறைய கடைகள், கோவில் சொத்தில் ஆக்கிரமிப்புகள் என்று நன்றாகத் தெரிகிறது. உள்ளே நுழைந்ததும் பெரிய நந்தி. வெள்ளை நிறம் என்று நினைக்கிறேன். அதன் மேல் போகஸ் லைட் போடப்பட்டு இருந்ததால் அந்த வண்ணம் தான் தெரிந்தது. தூண் சிற்பங்கள் எல்லாம் out of the world! இங்கே தான் சப்தஸ்வர தூண்களும் உள்ளன. ஏழெட்டுப் படிகள் ஏறித்தான் நெல்லையப்பரை தரிசிக்கும் இடத்திற்கு செல்ல முடியும். நிறைய கூட்டம். ஒரு அர்ச்சகர் நம்மிடம் இருந்து பூவை பெற்றுக் கொண்டு அனைவரின் பெயர் நட்சத்திரம் வாங்கி அர்ச்சனை செய்ய கர்ப்பக் கிரகத்தினுள் சென்றார். நாங்களும் முண்டியடித்து முன்னேறி சுவாமியை தரிசனம் செய்தோம். சுயம்பு லிங்கம் போலத் தோன்றினார். அது பற்றி விசாரிக்க முடியவில்லை.

nellaiyappar

nandhi

விக்கியில் தேடியதில் இந்தத் தகவல் கிடைத்தது. முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்று கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வதறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம்.

அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். (இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம்.) சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.

musicpillars

பிரசாதம் வாங்கிய பின் சற்றே அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தால் கிடந்த கோலத்தில் ஆறடிக்கு மேல் ஸ்ரீமன் நாராயணன். ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அங்கே அர்ச்சகர் யாரும் இல்லை. நன்றாக அருகில் நின்று சேவித்தோம். பின் அந்தக் கூட்டத்தில் ஒரு பிரிவினர் தொலைந்து போனர். போன் அடித்தாலும் எடுக்கவில்லை. சரி நாம் மற்ற தெய்வங்களை வணங்குவோம் என்று பிராகார வலம் வந்தோம். எத்தனை மூர்த்திகள்! எத்தனை பெரிய பிராகாரங்கள்! இன்னும் ஒரு நிலை ஏறினால் சோமாஸ்கந்தன் சந்நிதி வருகிறது. ஒரு நிலை கீழே இறங்கினால் ஆதி சிவன் உள்ளார். ஒரு பக்கம் குபேர லிங்கம், ஒரு பக்கம் தட்சிணாமூர்த்தி என்று திரும்பிய இடம் எங்கும் இறைவன்.

pirakaram

ஷோலே படத்தில் சைட் கார் பிரிந்து பிறகு இணைந்தது போல சிறிது நேரத்தில் பிரிந்த குழு திரும்ப எங்களுடன் தானே வந்து இணைந்தது. காந்திமதிக்குத் தனிக்கோவில்.  பிராகாரங்களை சுற்றி வந்ததில் கால் வலிக்க ஆரம்பித்து விடுகிறது. இந்தக் கோவிலிலும் நிறைய மூர்த்திகள். ஏகப்பட்ட சிற்பங்கள். நின்று ரசிக்க ஆரம்பித்தால் மற்றவர்கள் நம்மை விட்டு சென்றுவிடுவதால் குழுவோடு இணைந்து செல்ல வேண்டியிருந்தது. காந்திமதி அம்மன் கருணையே உருவாக இருந்தார். அவதிருச்செந்தூர் ரை தரிசித்து, பின் வந்த வழியே திரும்பி எங்கள் வாகனம் நின்ற இடத்தை அடைந்தோம். அதுவே ஒரு கிலோமீட்டர் நடை இருக்கும்.

அன்று இரவும் அரட்டைக்குப் பின் உணவு, உறக்கம். அடுத்த நாள் திருச்செந்தூர் பயணம். இதுவரை பயணம் செய்தபோது திரை இசைப் பாடல்கள் எப்பொழுதோ ஒரு முறை தான் வண்டியில் கேட்டோம். ஏனென்றால் ஏறிய ஐந்து நிமிடங்களில் இறங்க வேண்டிய அடுத்தக் கோவில் வந்துவிடும். திருச்செந்தூர் பயணத்தின் போது விநாயகர் பாடலில் ஆரம்பித்து மண்ணானாலும்  திருசெந்தூரில் மண்ணாவேன் என்ற TMSன் புகழ் பெற்ற பாடலைத் தொடர்ந்து பல பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து பயணித்தோம். வழியும் பசுஞ்சோலைகள் நிறைந்தனவாக இருந்தன.

greenfields1

திருச்செந்தூரில் சுவாமி தரிசனத்துக்காக ஒருவரிடம் தொலைபேசியில் பேசி வைத்திருந்தோம். அவர் நன்றாக தரிசனம் செய்து வைப்பதாக வாக்குக் கொடுத்திருந்தார். அவரும் எங்களுக்காக சரியான நேரத்தில் காத்துக் கொண்டிருந்தார். உண்மையிலேயே கடலலை கோவில் படிகளை உரசிக் கொண்டு இருப்பது கண்கொள்ளாக் காட்சி.

tiruchendur

கால்களை கடல் அலைகளில் நனைத்து, தலையில் சிறிது நீரை தெளித்துக் கொண்டு அவருடன் கோவில் உள்ளே செல்ல ஆரம்பித்தோம். கேரளக் கோவில்களில் இருப்பது போல் ஆண்கள் மேல் சட்டை இல்லாமல் செல்வது இங்கும் கடைபிடிக்கப் படுகிறது. நல்ல கூட்டம். அவர் முன்னே செல்ல ஸ்பெஷல் டிக்கெட் தரிசன வழியில் அவரை பின் தொடர்ந்தோம். பேட்ச் பேட்சாக பத்து பத்துப் பேராக உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தனர். எங்கள் முறை வந்ததும் அவருடன் உள்ளே சென்றோம். திவ்ய தரிசனம், பாலபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. உண்மையில் சிலிர்த்துப் போனோம். அதுவும் என் போன்ற முதன் முறை தரிசிப்பவர்களின் பரவச நிலையை எழுத்தால் வர்ணிக்க முடியாது.

ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு சொம்புப் பாலை முருகன் சிரசில் ஒரு அழகான சல்லடையின் மேல் ஊற்றுகின்றனர், பின் தீபாராதனை. உட்கார வைத்திருக்கும் பேட்சை எழுப்பி அடுத்த பத்து பேரை உட்கார வைக்கின்றனர். பாலபிஷேகம் நடக்கும் பொது முருகனை நன்றாக பார்க்க முடிகிறது. அபிஷேக வேளையில் நாங்கள் சென்றது எங்கள் கொடுப்பினை தான். அதற்குள் எங்களுக்கு உதவி செய்ய வந்தவர் அர்ச்சனை செய்து பிரசாதத்தைக் கொண்டு வந்தார். பின் நாங்கள் முருகன்சி சன்னதிக்குப்ன்ன பின்னிருக்கும் குகைப் போன்ற பாதையில் சென்று ஐந்து லிங்கங்களை தரிசித்துத் திரும்பி வந்தோம். அவர் திரும்பவும் ஒரு முறை எங்களை முருகன் முன் உட்கார வைத்து முருகனின் பாலபிஷேகத்தையும் தீபாராதனையையும் மீண்டும் ஒரு முறை தரிசிக்க வைத்தார். மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

நான் இது நாள் வரை மூலவரே வள்ளி தெய்வயானையுடன் இருப்பார் என்று எண்ணியிருந்தேன். ஆனால் உத்சவர் தான் அவ்வாறு உள்ளார், மூலவர் தண்டாயுதபாணி ஆக இருக்கிறார். உத்சவரையும் சேவித்தோம். பின் அங்குள்ள இதர சன்னதிகளை உள்ள மூர்த்திகளையும் வழிபட்டோம். இங்கும் ஒரு பெருமாள் சன்னதி உள்ளது. பின் வெளியில் வந்து பிரசாதம் பெற்றுக் கொண்டோம். ரொம்ப அருமையான, நிம்மதியான மன நிலையில் அனைவரும் இருந்தோம்.

tiruchendur1

எங்கள் குழுவில் சிலர் வள்ளி குகைக்கும் சென்று வந்தனர். பின் திருநெல்வேலி திரும்பும் வழியில் சரவண பவன் அண்ணாச்சி கட்டியிருக்கும் வனத்திருப்பதி கோவிலுக்கும் சென்றோம். கோவில் நன்கு கட்டப்பட்டு அழகாக பராமரிக்கப்பட்டுள்ளது. பக்கத்திலேயே சரவணபவன் ஹோட்டல் உள்ளது.

vanathiru

அறைக்குத் திரும்பி உணவு உண்டபின் மதிய நித்திரை. அதற்கு பின் வாங்கிய தின்பண்டங்களின் பங்கு பிரிப்பு. குடும்ப சொத்து பாகப் பிரிவினையை விட பெரியதாக இருந்தது. இதில் நாங்கள் திருநெல்வேலியில் இருக்கோம் என்று தெரிந்து, சேவு வேணும், அல்வா வேணும்ன்னு வாட்சப்பில் ஒரே தொந்தரவு! {பேக்கரி ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சேன் பன்னு வேணும் ரொட்டி வேணும்ன்னு ஒரே தொல்லை டோனில் படிக்கவும்}. அவர்களுக்காக ரொம்ப கனிவு மனம் கொண்ட எங்கள் குழு உறுப்பினர் ஒருவர் மறுபடியும் சென்று வாங்கி வந்தார்.

டிரெயினுக்குக் கிளம்புவதற்குள் எங்களில் மூவர் அங்கு இருக்கும் சாலைக் குமரன் கோவிலுக்கும் போய் விட்டு வந்துவிட்டனர்.

நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே எங்களுக்கு டிரெயினுக்கு இரவு உணவு கட்டிக் கொடுத்தனர். சப்பாத்தியும் தயிர் சாதமும் மிகவும் அருமை. எங்கள் வாகன ஓட்டுனரும் மிகவும் நல்லவராக இருந்தார். பொறுமையாக எங்களை அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் சென்றார். அவருக்கு நாங்கள் அனைவரும் தனித் தனியாக நன்றி சொன்னோம். டிரெயினில் இந்த முறை அரட்டை டாபிக் புகழ்பெற்ற பல fake சாமியார்கள் பற்றி. மிகவும் சுவாரசியமாக இருந்தது உரையாடல் என்று சொல்லவும் தேவையில்லை. காலையில் எழும்பூர் நிலையத்தை டிரெயின் ரொம்ப தாமதம் இன்றி தொட்டது. அடுத்த சுற்றுலாவுக்கு எங்கு செல்லலாம் என்று யோசித்தபடி அனைவரும் கலைந்தோம்.

இந்தமாதிரி சுற்றுலாக்கள் உறுவுகளை பலப்படுத்துகிறது, மன அழுத்தத்தைக் குறைத்து மகிழ்ச்சியுடன் இருக்க பழக்குகிறது. அதனால் அடுத்த சுற்றுலாவுக்காக தற்போது waiting :-}

tiruchendur2