திருவடி சேவை – பகுதி – 2

திருவடி சேவை பகுதி – 1 இங்கே.

காரைக்கால் அம்மையார் ஈசனிடம் கேட்பதும் இதுவே!

karaikalaammaiyar

இறவாத இன்ப அன்பு

வேண்டிப்பின் வேண்டு கின்றார்

பிறவாமை வேண்டும் மீண்டும்

பிறப்புண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும் இன்னும்

வேண்டும்நான் மகிழ்ந்து பாடி

அறவாநீ ஆடும் போதுன்

அடியின்கீழ் இருக்க என்றார்.

இறவாத அன்பு வேண்டும் என்று முதலில் கேட்கிறார். பிறகு பிறவாமை. அப்படியும் மீண்டும் பிறந்தால் உன்னை மறவாமை. கடைசியில், இறைவா உன் திருவடிக்கீழ் இருக்கும் முக்தி நிலை வேண்டும் என்று ஈசனிடம் கேட்கிறார்.

kamakshiamman

ஆதி சங்கரர் அம்பாளின் திருவடிகளை செளந்தர்யலகரியில் போற்றிப் பாடுகிறார்.

அம்மா!  உன் திருவடிகள் எம் போன்ற பக்தர்களைக் காக்கின்றன. பயத்தை அகற்றுகின்றன. உன்னைத் தவிர வேறு யார் எங்களைக் காக்க முடியும்?  கேட்பதற்கு அதிகமாகவே வரம் அருளும் தாய் அல்லவா நீ!  உன் திருவடியை வணங்குகின்றோம். எம்மைக் காத்து ஆரோக்கியமாக வாழ ஆசிர்வதிப்பாயாக! என்று வேண்டுகிறார்.

 

அபிராமி பட்டரின் கதை நாம் அனைவரும் அறிந்ததே. ஆழ் நிலை தியானத்தில் இருந்த பட்டரிடம் அரசன் அன்று என்ன நாள் என்று கேட்க, அமாவாசையான அன்றைய நாளை பௌர்ணமி என்று கூறிவிடுகிறார் பட்டர். தியானத்தில் இருந்து வெளிவந்த அவர் தவறை உணர்ந்து, நெருப்புக் குழியின் மேல் நூறு கயிறுகளால் கட்டப்பட்ட ஒரு பலகையின் மேல் நின்று, ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு கயிறை அறுத்தபடி அபிராமியின் மேல பாடல்களை பாடி வந்தார். இவை தான் அபிராமி அந்தாதி என்னும் பாடல் தொகுப்பு. எழுபத்தியொன்பதாவது கயிற்றை அறுத்தபோது திரிலோக சுந்தரி, அவளின் ஒரு காது தோட்டைக் கழற்றி வானத்தில் எறிந்து பூரண நிலவாய் மாற்றிவிடுகிறாள். அமாவாசை பௌர்ணமி ஆனது! அவர் சொன்ன தவறான பதிலை உண்மையாக்கி விடுகிறாள். எல்லாம் அம்பாளின் திருவடியை சரணடைந்ததின் மகிமை.

மேலும் இருபத்தியிரண்டு பாடல்கள் அவளை போற்றி பாடி நூறு பாடல்களாக அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார் பட்டர். அம்பிகையின் திருவடியைச் சரணமென்று பற்றிக்கொண்டு அவளின் பொற்பாதங்கள்  தன் தலையில் எப்போதும் இருந்து அருள் செய்யட்டும் என நெக்குருகப் பாடினார். முதல் பாட்டில் அபிராமியின் அழகை, “குங்கும தோயம் என்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே” என்று சொல்லிப் புகழ்ந்தார். பிறகு திருக்கரங்களை, “பனிமலர்ப்பூங் கணையும் கருப்பஞ்சிலையும் மென் பாசாங்குசமும் கையில் அணையும்” என்று பாடி பிறகு சேவடியைப் பற்றினார். திருவடியைத் தொட்ட பிறகு அதனை விட்டு அகல அவருக்கு மனம் வரவில்லை.

abirami-andhaadhi

3: அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

அருட்செல்வத்தை அன்பர்களுக்கு வழங்கும் அபிராமியே! நின் பெருமையை உணர்த்தும் அடியார்களின் கூட்டுறவை நான் நாடியதில்லை. மனத்தாலும் அவர்களை எண்ணாத காரணத்தால் தீவினை மிக்க என் நெஞ்சானது நரகத்தில் வீழ்ந்து மனிதரையே நாடிக் கொண்டிருந்தது. இப்பொழுது நான் அறிந்து கொண்டேன். ஆதலினால் அத்தீயவழி மாக்களை விட்டுப் பிரிந்து வந்து விட்டேன். எவரும் அறியாத வேதப் பொருளை தெரிந்து கொண்டு உன் திருவடியிலேயே இரண்டறக் கலந்து விட்டேன். இனி நீயே எனக்குத் துணையாவாய்.

5: பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள், 
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
 
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
 
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.

அபிராமி அன்னையே! உயிர்களிடத்திலே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூவகை நிலைகளிலும், நிறைந்து இருப்பவளே! மாணிக்க பூண் அணிந்த நெருக்கமான, அடர்ந்த தனங்களின் சுமையால் வருந்துகின்ற வஞ்சிக் கொடி போன்ற இடையை உடையவளே! மனோன்மணியானவளே! (அன்பர்களை ஞான நிலைக்கு கொண்டு செல்கின்றவள்) நீண்ட சடையை உடைய சிவபெருமான் அன்றொரு நாள் அருந்திய விஷத்தை அமுதமாக்கிய அழகிய தேவி! நீ வீற்றிருக்கும் தாமரையைக் காட்டிலும் மென்மையான நின் திருவடிகளையே, என் தலைமேல் கொண்டேன்.

32: ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப் 
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
 
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட
 
நேசத்தை என் சொல்லுவேன்?- ஈசர் பாகத்து நேரிழையே.

அபிராமித்தாயே! எந்தன் ஈசன் இடப்பாகத்தில் தானொரு பகுதியாக அமைந்தவளே! அம்மா! நான் கொடிய ஆசையென்னும் துயரக் கடலில் மூழ்கி இரக்கமற்ற எமனின் பாச வலையில் சிக்கியிருந்தேன். அத் தருணத்தில் பாவியாகிய என்னை மணம் பொருந்திய உன்னுடைய பாதத் தாமரையே வலிய வந்து என்னை ஆட்கொண்டது! தாயே! நின் அரும்பெரும் கருணையை என்னென்று உரைப்பேன்!

73: தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு, 
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது, எமக்கு என்று வைத்த
 
சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளி செம்மை, அம்மை
 
நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே.

ஏ, அபிராமி! உன்னுடைய மாலை, கடம்ப மாலை, படைகளோ பஞ்ச பாணங்கள் (ஐவகை மலர் அம்புகள்); வில்லோ கரும்பு; உன்னுடைய நெற்றிக் கண்களோ அருட் கண்கள்; நான்கு கரங்களோ செந்நிறமாகும். உன்னை வயிரவர்கள் வணங்கும் நேரமோ நள்ளிரவாகும். திரிபுரை என்ற பெயரும் உண்டும். நீ எனக்கு மேலாக வைத்திருக்கும் செல்வம் நின்னுடைய திருவடித் தாமரைகளேயாகும்.

ஒவ்வொரு பாடலும் தேனில் ஊறிய பலாச் சுளை போல் இனிப்பானவை, பொருள் செறிந்தவை.

தொடரும் ..