சர்கார் – திரை விமர்சனம்

என் உறவினர் ஒருவருக்கு அந்தக் காலத்தில் திருமண நிச்சயதார்த்தத்துக்குப் பிள்ளை வீட்டில் கட்டம் கட்டமா போட்ட பட்டுப் புடைவை வாங்கியிருந்தாங்க. ஒவ்வொரு கட்டமும் ஒவ்வொரு நிறம். என் அக்கா முறை உறவினருக்கு அந்தப் புடைவையைப் பார்த்து அழுகையே வந்துவிட்டது. அவ்வளவு மோசமாக இருந்தது புடைவை. என் பெரியம்மா ஏண்டி அழற உங்க மாமனார் மாமியாருக்கு எல்லா நிறத்திலேயும் உனக்குப் புடைவை எடுக்கனும்னு ஆசையா இருந்திருக்கும் அவ்வளவு புடைவை வாங்க முடியுமா அதான் எல்லா நிறத்தயையும் ஒரே புடைவைல போட்டு வாங்கியிருக்காங்க. போய் கட்டிக்கிட்டு வான்னு சிம்பிளா சொல்லிட்டாங்க. அந்த மாதிர் ஏ.ஆர்.முருகதாசுக்கு எல்லா பிரச்சினைகளுக்கும் படங்கள் எடுக்கனும்னு ஆசை போலிருக்கு ஆனா அவ்வளவு படம் எடுக்க முடியுமான்னு சந்தேகம் வந்திருக்கும். அதான் எல்லா பிரச்சினையையும் ஒரே படத்துல வெச்சு ரசிகர்களை காவு வாங்கிட்டாரு.

ஆனா சும்மா சொல்லக் கூடாது இந்தப் படத்திலேயும் ஒரு கதை இருக்குன்னு கண்டுபிடிச்சு அது வருண் ராஜெந்திரனோட கருன்னு தீர்மானிச்சு அவருக்கு முப்பது லட்ச ரூபாய் இழப்பீடும் வாங்கிக் கொடுத்த பாக்கியராஜ் சிம்ப்ளி கிரேட்! ஆனா பாக்கியராஜ் கில்லாடி. முருகதாஸ் படத்தைப் போட்டு காட்டறேன் போட்டு காட்டறேன்னு பல தடவை சொன்ன போது கூட பார்க்க மறுத்துட்டார் பாருங்க, நீ எப்படி எடுத்திருப்பேன்னு தெரியும்னு சொல்லிட்டாரு. அங்க நிற்கிறார் ஜாம்பவான்!

இந்தப் படத்துல முக்கியமான ஒரு விஷயம் நாம தெரிஞ்சுக்கறது சட்ட நுணுக்கமான 49P. அதாவது நம் பெயரில் யாராவது கள்ள வோட்டு போட்டுட்டா அதை நாம் நிரூபிச்சா வாக்குச் சாவடியிலேயே நமக்கு அவர்கள் மறுபடியும் வாக்களிக்கும் உரிமையை தர வேண்டும். நமக்கு நோட்டா பத்தித் தெரியும், அதாவது எந்த வேட்பாளரும் நமக்குப் பிடிக்கவில்லை என்றால் 49 O விதிப்படி None of the above என்று வாக்களிக்கலாம். 49P பற்றி இந்தப் படத்தின் மூலம் தெரிந்து கொள்கிறோம்.

சுந்தர் பிச்சை Google நிறுவனத்தின் CEO. அவருக்கும் விஜய் பாத்திரத்துக்கும் துளி சம்பந்தம் இல்லை. சுந்தர் பிச்சை அமெரிக்காவில் மிகப் பெரிய கம்ப்யுடர் நிறுவனத் தலைவர், அந்த அளவு அந்தத் துறையில் பெரிய ஆள். இந்தப் படத்தில் விஜய் வெளிநாட்டில் வாழும் ஒரு இந்தியர் பெரிய பணக்காரர், அவர் பாத்திரத்துக்கு வித்தியாசத்தைக் காட்ட முனைந்து கம்பியுடர் நிறுவனத்தின் தலைவர் என்கிறார் இயக்குநர், அவ்வளவு தான். கம்பியுடர் தொடர்பா அவர் இந்தப் படத்தில் வேறு எதுவும் செய்யவில்லை. அவர் வெளிநாட்டில் ஒரு பெரிய ஹோட்டல் நடத்தியிருக்கலாம், விமான நிறுவனம் நடத்தியிருக்கலாம் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். அவர் சென்னையில் வாக்களிக்கத் தனி விமானத்தில் பறந்து வரும் அளவுக்கு, சுத்தி வெள்ளைக்காரர்களை எடுபிடி வேலைக்கு வைத்துக் கொள்ளும் அளவுக்குப் பணக்காரர். அவ்வளவு தான். Techie விஷயம் ஒன்றுமே இல்லை. சாதா ட்விட்டர் பேஸ்புக் பயன்படுத்திக் கதையில் கூட்டத்தைச் சேர்க்கிறார். பெரும் பணக்காராரக இருந்தும் ஏழைகள் குடியிருப்பில் வெள்ளையடித்து அட்மின் ஆபிஸ் போடுகிறார்.

எப்பவுமே படத்தின் ஹீரோவின் பலம் வில்லனின் பலத்தைப் பொறுத்தது. அரிச்சுவடி பாடம் இது. மகா சொத்தையான வில்லன் பழ. கருப்பையா, ஒரு கட்சித் தலைவர் முதலமைச்சர் வேட்பாளர். காமெடி டிராக் இல்லாததால் காமெடி பீசாக ராதா ரவி, பழ கருப்பையாவின் அல்லக்கை, பெயர் இரண்டு. (அவ்வளவு imaginative, அவர் தான் கட்சியில் நெ2வாம். மாறன் சகோதரர்களே ஸ்டாலினை கேலி பண்ண அனுமதித்து இருக்கிறார்களே. மேக்கப், லேசா கோண வாய் எல்லாம் ஸ்டாலினை குறிக்கின்றன. அவ்வளவு கோபமா ஸ்டாலின் மேல் அவர்களுக்கு,). இவர்களை ரிமோட்டில் இருந்து வழி நடத்துபவர் வரலட்சுமி என்னும் பாப்பா என்னும் கோமளவல்லி. கேனடாவில் வாழ்ந்து கொண்டு இங்கே அப்பாவுக்கு கட்சி நடத்துவதற்கும் ஆட்சி செய்வதற்கும் நயவஞ்சக திட்டம் தீட்டுவதற்கும் யோசனைகளை சொல்லுபவர். கதைப் பஞ்சம் கதைப் பஞ்சம் என்று கேள்விப்பட்டிருக்கேன், இந்தப் படத்தில் காட்சி அமைப்பதில் கூட கற்பனை வறட்சி 😦

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் தேவையில்லை. விஜயின் நடிப்பு, அவர் நேரம், அவர் உழைப்பு அனைத்தும் அனாவசியமாக வீணடிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்து விட்டு அல்லது கதையை (?) கேட்டுவிட்டோ ரஹ்மான் ஸ்டூடியோவை விட்டே ஓடிவிட்டார் போலிருக்கிறது. ஒரு பாடலும் நன்றாக இல்லை. ரீ ரிகார்டிங், அது எங்கோ ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் இருக்கும் என்கிற அளவில் உள்ளது. சண்டைக் காட்சிகள் நன்றாக இருக்குன்னு சொல்லலாம் ஆனால் கொஞ்சமாவது நம்பும்படியா இருக்க வேண்டாமா? 27 பேரை ஒத்தை ஆளா நின்று அடிக்கிறார் விஜய். அவனவன் கொடாலியோட வரான் இவர் ஸ்வைங் ஸ்வைங்குன்னு மயிரிழையில் தப்பித்து எல்லாரையும் சகட்டு மேனிக்குப் போட்டுத் தள்ளிவிடுகிறார். அவருடைய நடனம் கூட இந்தப் படத்தில் எடுபடவில்லை. அழுகையா வருது.

ஹீரோயின் பத்தியும் சொல்லணும் இல்ல? திருவிழாவில் தொலைஞ்ச பிள்ளையாட்டம் திரு திருன்னு முழித்துக் கொண்டு விஜய் பின்னாடியே சுத்துகிறார். நடிகையர் திலகமாக வாழ்ந்த கீர்த்திக்கு இந்த நிலைமை வர வேண்டாம்.

கூடங்குளம் பிரச்சினையிலிருந்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையில் இருந்து, மீனவர் பிரச்சினை, X Y Z என்று ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு பிரச்சினை என்று சொல்லி அனைத்துக்கும் நடக்கும் ஆட்சி தீர்வு கொடுக்காது என்று விஜயே களத்தில் இறங்கி தீர்வு காண முயலும்போது ஏற்படும் எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி பெறுவதாக காட்டியுள்ளார் முருகதாஸ்.

திரைக் கதை சரியில்லாததால் அவர் உருக்கமாக நடிப்பதும் எடுபடவில்லை ஆக்ரோஷமாக நடிப்பதும் எடுபடவில்லை. கடைசி மூணு மணி நேரத்துல அவர் பேஸ்புக்ல போடற விடியோனால எல்லாரும் போய் வாக்களிக்கறது எல்லாம் ஷ்ஷ்ப்பா! அதைவிட ஆயாசம் இவர் எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவது தான். அதில் என்ன தப்புன்னு கேக்கறீங்களா? இதெல்லாம் நடப்பது பதினைந்தே நாட்களில்.

Better luck next time. நான் எனக்கு சொல்லிக்கிட்டேன்.

சாமி 2 – திரை விமர்சனம்

முதல் படத்துக்கு அடுத்த பாகம் எடுப்பது என்று முடிவு செய்தால் உடனே எடுத்திடுங்க இயக்குநர்களே. நாள் கழிச்சு (வருடங்கள்!!) எடுத்து அந்த ஹீரோவுக்கு வயதாகி, தொப்பை வந்து பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு. 28 வயதுள்ளவராக விக்ரமை எப்படி ஒத்துக் கொள்வது? ஆனால் உடம்பை படு ஃபிட்டாக வைத்துள்ளார் விக்ரம். நடிப்பிலும் சண்டைக் காட்சிகளிலும் பிராமாதமாக செய்துள்ளார். ஹரி படங்கள் என்றுமே விறுவிறுப்புக்குப் பெயர் போனவை. வேகமாக நகரும் கதையாக அமைத்துத் திரைக் கதையிலும் தவறுகளை கண்டுபிடிக்க விடாமல் செய்துவிடுவார். இந்தப் படம் வேகமாக நகர்கிறது ஆனால் திரைக் கதை சொதப்பல். அதில் மைனஸ் மதிப்பெண்கள் பெறுகிறார். படத்தின் ஆரம்பத்தில் சாமி 1 படத்தைக் கொஞ்சம் காட்டுகிறார்கள், முன் கதை சுருக்கம் மாதிரி. ஆனால் த்ரிஷாவுக்குப் பதிலா திவ்யான்னு அதே பழைய கதையில் ஐஸ்வர்யா ராஜேஷை த்ரிஷா இடத்தில் மணமகளாக மனைவியாக நடிக்க வைத்துக் கதையை தொடர்கிறார் இயக்குநர். பெருமாளை பிச்சையை கொலை செய்து எரித்து விடுவதுடன் சாமி படம் முடியும். அதைத் தொடர்ந்து அவரைத் தேடி அவர் மகன்கள் வருவதாக இதில் படம் தொடங்குகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பிராமண பாஷை சுத்தமாக வரவிவில்லை. கொஞ்சம் பயிற்சி எடுத்திருக்கலாம். த்ரிஷா மாமியாக பச்சக் என்று மனத்தில் நின்றதே அந்த பிராமண பெண் பாத்திரத்துக்கு சரியாக பொருந்தியதால் தான். சின்ன பாத்திரம் தான் ஐஸ்வர்யாவுக்கு, அதனால் அவர் சரியாக பொருந்தாததை மன்னித்துவிடலாம். ஆனால் பிரச்சினை கதையின் தொடர்ச்சியில் தான். திடீரென்று கதை திருநெல்வேலியில் இருந்து தில்லிக்குத் தாவி அங்கு ஓர் விக்ரம் மத்திய மந்திரியின் அலுவலகத்தில் வேலை செய்கிறார். முதலில் பார்த்த ஆறுச்சாமி விக்ரமுக்கு இவர் என்ன உறவு, டபுள் ரோலா என்று குழப்பம் வருகிறது. எது ப்ளாஷ் பேக் எது தற்போதைய கதை என்று சொல்வதிலேயே திரைக் கதை தடுமாறுகிறது. அனுபவம் வாய்ந்த இயக்குநர் ஹரி இந்தத் தவறை செய்யலாமா?

தில்லி விக்ரம் ஒரு பிராமணர், ஐஏஎஸ் தேர்வு முடிவுக்குக் காத்திருக்கும் போது மத்திய மந்திரி அலுவலகத்தில் வேலை செய்பவராக, பகுதி நேர கல்யாணம் செய்து வைக்கும் புரோகிதராகக் காட்டப்படுகிறார். முதலில் வேறு மாதிரி கதை அமைத்துப் பின் கதை மாற்றப்பட்டதா என்று தெரியவில்லை. எனிவே முதல் குழப்பத்திற்குப் பிறகு அவர் யார் என்று புரிந்து அவரும் பூணுலை கழட்டி விட்டு ஐபிஎஸ் ஆகி அதே திருநெல்வேலிக்கு போஸ்டிங் வாங்கி பெருமாள் பிச்சையின் மூன்று மகன்களை பழி தீர்த்துக் கொள்வதே மிச்சக் கதை. பூணுல் போட்டு வளர்க்கப்பட்டவர் பின் எதற்கு அதை கழட்ட வேண்டும் என்று தெரியவில்லை. சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லை.

மிச்சக் கதைக்கு வருவதற்குள்ளே சூரி நம்மை ஒரு வழி பண்ணி விடுகிறார். தாமிரபரணி புஷ்கரத்துக்குத் தடை வாங்க முயல்வதை விட முதலில் சூரி காமெடிக்குப் படங்களில் தடை வாங்க முயன்றால் புண்ணியமாப் போகும். அவ்வளவு திராபையாக உள்ளது அவரின் நகைச்சுவை பகுதி. படத்தின் இளங்காற்று கீர்த்தி சுரேஷ், அழகாக இருக்கிறார், பதமாக நடிக்கிறார். உடை அலங்காரம் அருமை. இதில் ஹீரோ நாயகியை பின் தொடர்ந்து ல்தகா சைஆ இருக்கா என்று படுத்தாமல், நாயகி நாயகனை பின் தொடர்ந்து வலுக்கட்டாயமாக காதலிக்க வைக்கிறார். வாழ்க காதல்.

பிரபு மத்திய மந்திரியாக கனமான பாத்திரத்தில் வருகிறார். கனம் எடையில் மட்டும் தான் பாத்திரத்தில் இல்லை என்பது பெரும் சோகமே. அவருக்கும் வில்லனுக்கும் என்ன தொடர்பு என்று கடைசி வரை புரியாத புதிராக இயக்குநர் கதையை நகர்த்தியிருக்கிறார். ஐஸ்வர்யா அவர் மனைவியாக, கீர்த்தி சுரேஷின் தாயாக ஓர் ஒப்புக்கு சப்பாணி பாத்திரத்தில் வந்து போகிறார். அவருக்கு மேக்கப் சரியில்லை. மிகவும் வயது முதிர்ந்தவராக தெரிகிறார்.

ஊர் முழுவதும் ஆறுச்சாமிக்கு பயந்து பெருமாள்பிச்சை தலைமறைவாகிவிட்டதாக நினைக்க, உண்மையைக் கண்டறிய தன் இரண்டு அண்ணன்களோடு இலங்கையிலிருந்து  வருகிறார் பெருமாள்பிச்சையின் இரண்டாவது மனைவியின் மூன்றாவது மகனான முக்கிய வில்லனான பாபி சிம்ஹா, பெயர் இராவண பிச்சை. அவர் தான் ஹீரோ ராம் சாமிக்கு சவால் விடுபவராக வருகிறார். (பெயர் தேர்வெல்லாம் நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா!) அவரின் மூத்த அண்ணன் ஓ.எ.கே. சுந்தர், இரண்டாவது அண்ணன் ஜான் விஜய். சிங்களவர்களா தமிழர்களா என்று புரியாத இலங்கையில் இருந்து இறக்குமதியான இப்படத்தின் வில்லன் பத்திரங்கள் இவர்கள். பாபி சிம்ஹா வில்லனாக நன்றாக ஜொலிக்கிறார். மற்ற பாத்திரங்களை விட வில்லன் பாத்திரம் அவருக்கு நன்றாக செட் ஆகிறது. பிச்சை பெருமாளின் மனைவி பிள்ளைகளுக்குத் தாயாகவும் சோழி உருட்டிப் போட்டு ஆரூடம் சொல்லும் ஜோசியக்காரியாக இருபத்தி எட்டு வருடங்களாக அவர்களை இலங்கையில் இருந்து வழி நடத்தும் சூத்திரதாரியாக வருகிறார். காதுல ஒரு கண்டு பூ!

இசை டிஎஸ்பி. பின்னணி இசையில் கூட சோபிக்கவில்லை. காயத்திரி மந்திரம் பொருள் தெரிந்து தான் பின்னணி இசையில் அதை ஒலிக்க விடுகிறாரா? சண்டை வரும்போதெல்லாம் இது தான் பிஜிஎம். பாடல்கள் வெகு சுமார். படத்தொகுப்பாளர் V.T.விஜயன் உண்மையாக வேலை செய்திருந்தால் நிறைய இடத்தில் கத்திரி போட்டிருக்க வேண்டும். ஒளிப்பதிவாளர் A.வெங்கடேஷ்.

படம் முழுக்க ஒருவரை ஒருவர் பளார் பளார் என்று அடித்துக் கொள்வதால் நாம் திரை அரங்கை விட்டு வெளியே வரும்போது நம் கன்னத்தையே தடவிப் பார்த்துக் கொள்ளத் தோன்றுகிறது. இதில் கீர்த்தி சுரேஷை விக்ரம் அடிப்பதை, பிரபு ஐஸ்வர்யாவை அடிப்பதை எல்லாம் சென்சாரில் கட் செய்திருக்க வேண்டும். ஒரு விதமான வன் கொடுமை இது! இன்னும் நிறைய குறைகளை சொல்லிக் கொண்டே பகலாம். ஆயாசமாக உள்ளது. அதனால் நிறுத்திக் கொள்கிறேன்.

சீறிப் பாயும் புல்லட் டிரெய்னாக படம் எடுக்க எண்ணி ஆனால் அதைத் தாங்கக் கூடிய அளவு சரியான தண்டவாளம் அமைக்கவில்லை ஹரி.

சீம ராஜா – திரை விமர்சனம்

சிவகார்த்திகேயன் மாஸ் ஹீரோவாக படிப்படியாக வளர்ந்து வருகிறார். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை வசீகரிக்கும் தன்மை இருக்கிறது அவரிடம். தேர்ந்தெடுக்கும் கதைகளும்  மாஸ் அப்பீல் கதைகளாக தான் உள்ளன. (விஜய் நடிக்கும் படத்தின் டெம்ப்ளேட், கொஞ்சம் கொஞ்சம் ரஜினி படங்களில் இருப்பதும் – இது தான் அவர் படங்களின் முக்கிய அம்சம்! ) கதையை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தினால் இனி வரும் படங்களில் கேரண்டீட் வசூல் ராஜாவாக மாறலாம் இந்த சீம ராஜா.

ஒரு கமர்ஷியல்/மசாலா படத்துக்குக் கிட்ட தட்ட மூன்று மணி நேரம் ரசிகர்களை திரை அரங்கில் உட்கார வைத்தல் முதல் தப்பு. முதல் பாதியை பாதியாகக் கத்தரித்து அரைத்த மாவையே அரைக்காமல் இருந்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். இடைவேளையின் போது தான் கதை கொஞ்சமேனும் சூடு பிடிக்கிறது. பின் பாதியில் ராஜா கதை முன் பாதியை விட அதிக சுவாரசியத்தைத் தருகிறது. அதையே முதலில் இருந்து சொல்லியிருக்கலாம். ஒரு லோ பட்ஜெட் படத்துக்கு கிராபிக்ஸ் ரொம்ப நன்றாக உள்ளது. வசனங்கள் பல இடங்களில் அட போட வைக்கின்றன!

கீர்த்தி சுரேஷ் கொஞ்ச நேரமே வந்தாலும் கவர்ச்சியாகவும் நன்றாகவும் செய்திருக்கிறார். படத்தின் ஹீரோயின் சமந்தா சுத்தமாக வீணடிக்கப்பட்டிருக்கிறார். வில்லி சிம்ரனுக்கு சமந்தாவை விட பெரிய ரோல் என்று சொல்லலாம். சிம்ரனும் லாலும் வில்லன் பாத்திரங்கள். சிம்ரன் மாதிரி ஒரு தேர்ந்த நடிகையை ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரி பாத்திரம் மாதிரி நடிக்க வைத்திருக்கலாம். திரைக் கதை வலுவாக இருந்தால் தான் பாத்திரங்கள் அம்சமாக இருக்கும். அது இல்லாததால் யாருமே மனதில் நிற்கவில்லை. சிம்ரன் புடைவைகள் சாப்ட் சில்க். அவர் அணியும் புடைவைகள் நல்ல தேர்வு. நெப்போலியன் (முன்னாள் மத்திய மந்திரி என்கிற டைட்டில் கார்டுடன் குணச்சித்திர வேடத்தில் தோன்றுகிறார்.) சிவகார்த்திகேயன் அப்பாவாக பெரிய ராஜாவாக நன்றாக செய்துள்ளார். ஆனாலும் ஒரு பெரிய நடிகர் வாய்ப்புக் கொடுக்கப்படாமல் படத்தில் சேர்த்திருப்பது சோகமே. மு.ராமசாமி, நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, ரிஷிகாந்த் ஆகியோர் வரும் பாத்திரங்களும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் செல்லும் பாத்திரங்களாக அமைந்திருக்கின்றன.

சூரி! என்னத்தை சொல்ல! அவருக்கே ஹீரோ சீம ராஜா பல இடங்களில் அதிக பில்டப் கொடுத்து யார் ஹீரோ யார் காமெடியன் என்று புரியாத அளவுக்கு வசனங்களை அமைத்திருப்பது ரசிக்கும்படியாக இல்லை. கடைக்குட்டி சிங்கம் படத்தில் சத்தியராஜ் ஆண் குழந்தை வேண்டும் என்று ரெண்டுக்கு மேல் மூணாவது பெண்டாட்டி கட்டப் போவதே கண்றாவியாக இருந்தது. இந்தப் படத்தில் காரணமே இல்லாமல் சூரிக்கு மூணு பெண்டாட்டிகள். கடைசி காட்சியில் நாலாவது பெண்டாட்டியையும் கட்டிக்கொண்டு வந்து நிற்கிறார். அதில் எல்லா பெண்டாட்டிகளும் சிரிச்சிக்கிட்டே பக்கத்துப் பக்கத்தில் நிற்பது மூலம் இயக்குநர் சமூகத்துக்கோ இல்லை நகைச்சுவைக்கோ என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியவில்லை. நகைச்சுவை இந்தப் படத்தில் பெயில் மார்க் தான் வாங்குகிறது.

பின்னணி இசையில் இமான் பாஸ் மார்க் வாங்குகிறார். இரு பாடல்கள் பர்ஸ்ட் கிளாஸ் ரகம். மற்றவை கேட்கும்போதே மறந்து விடுகின்றன. ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியன், படத் தொகுப்பு விவேக் ஹர்ஷன்.

சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம் சீமராஜா. பாத்திரப் படைப்பிலும் சரி திரைக்கதையிலும் சரி பொன்ராம் கவனம் செலுத்தவே இல்லை. சிவகார்த்திகேயனை வைத்துப் படம் எடுத்தால் படம் வெற்றி பெற்று விடும் என்கிற நம்பிக்கையில் படம் எடுத்திருக்கிறார். இப்போ கதையில் விவசாயியை நுழைத்து நாலு வசனம் விவசாயி சார்பாக ஹீரோவை பேச வைப்பது டிரென்ட் ஆகி விட்டது. இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. இதனால் விவசாயிக்கும் எந்தப் பயனும் இல்லை. பார்க்கும் ரசிகர்களும் புதுசா எதுவும் உணரப் போவதும் இல்லை.

சிவகார்த்திகேயனுக்காக படம் ஓடும்.