ஐ’ய்யோ பாட்டி

grandma1

வீடு பரபரத்துக் கொண்டிருந்தது. பாட்டி பாத் ரூமுக்குள் போய் இருபது நிமிஷத்துக்கு மேல் ஆகிவிட்டது, இன்னும் வெளியே வரவில்லை.

இதற்கு நடுவில் ஆகாஷ் ‘mom, where is the iPad? I am so bored, I want to play’என்று விநோதினியை நச்சரித்துக் கொண்டிருந்தான்.

அவளோ. ‘Great grandma is locked up in the bathroom. உனக்கு iPadஐ எல்லாம் என்னால் இப்போ எடுத்துத் தர முடியாது’ என்றாள் எரிச்சலாக.

‘உள்ளே போய் இத்தனை நேரம் ஆச்சே, ஒரு சத்தத்தையும் காணோம்’ என்றபடி அவளின் மாமனார் கதிரேசன் தட தடவென்று குளியல் அறைக் கதவைத் தட்டினார்.

‘அப்பா, பாட்டியை பாத்ரூம் போகும்போது கதவை பூட்டக் கூடாதுன்னு சொல்லலையா?’ என்றான் மகன் கார்த்திக், அவன் பங்குக்கு.

‘எவ்ளோ தடவை சொல்லியாச்சுடா, பாட்டிக்கு ரொம்ப மறதி, உள்ள பூட்டிகிட்டு இருக்குறது எத்தன வருசப் பழக்கம் அவங்களுக்கு’ என்றாள் அவன் அம்மா தனலட்சுமி கவலையுடன்.

ரெண்டு நாள் முன்பு தான் குடும்பத்தோடு கார்த்திக் அமெரிக்காவில் இருந்து வந்து இறங்கியிருந்தான். பாட்டிக்கு இவனை பார்த்ததை விட கொள்ளுப் பேரனை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். எண்பத்தி எட்டு வயது, ஆனால் கண், காது, மூளை அனைத்தும் கூர்மையாக வேலை செய்தன. கொள்ளுப் பேரனை விட்டு நகராமல் கொஞ்சிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தாங்க.  பாட்டி தமிழில் கேள்வி கேட்க கொள்ளுப் பேரன் ஆங்கிலத்தில் பதில் சொல்ல பாட்டி அவனை ஆணைத்துக் கொண்டு ஒரே முத்த மழை தான். இன்று இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

வாட்ச்மான் செல்வத்தை கனகராஜ் உதவிக்குக் கூப்பிட, அவன் யாரையோ தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்தான். ‘சார் இவர் பூட்டை நல்லா திறப்பார்’ என்றான். வந்த ஆள் கதவின் கைப்பிடியை இப்படி அப்படி ஆட்டி, ‘இல்லை சார் லாக் ஆனா மாதிரி தெரியலை, அவங்க தாப்பாள் தான் போட்டிருக்கணும்’

‘கடவுளே! திருச்செந்தூர் முருகா! பாட்டிக்கு ஒண்ணும் ஆகியிருக்கக் கூடாதே’, அம்மா கூப்பிட தொடங்கிவிட்டாள். ‘உள்ளே மயங்கி விழுந்துட்டு உயிரே போயிட்டுதுனா நாளைக்கு எல்லாரும் நம்மளை ஏசுவாங்க! ஏதாவது பண்ணுங்களேன்’ என்று கணவனை உலுக்கினாள் தனலட்சுமி.

‘சார் நான் வேணா பால்கனி வழியா பிடிமானம் ஏதாவது இருக்கான்னு பார்த்து ஏறி பாத்ரூம் வெண்டிலேடர் வழியா எட்டிப் பார்க்கிறேன்’ என்றான் பூட்டு ரிப்பேர் ஆள்.

‘நீ நல்லா இருப்ப, உடனே ஏறி பார்’ அம்மா

‘அம்மா, அதெல்லாம் ரிஸ்கி. அவர் ஸ்லிப் ஆகி கீழே விழுந்துட்டார்னா ரொம்பப் பிரச்சினையா போயிடும். We become liable’ என்றான் அமெரிக்கா வாழ் மகன்.

‘அதெல்லாம் ஒன்னியும் பயம் இல்லை சார். குமாரு நீ ஏறி பாருப்பா, அந்த கிழவி எப்படி இருக்கோ’ என்று வாட்ச்மேன் அவசரப்படுத்தினான்.

போன் மணி விடாமல் அடித்துக் கொண்டிருந்தது, வினோதினி போனை எடுத்து ‘அத்தை, போனில் விஜயா பெரியம்மா. இப்போ எங்களைப் பார்க்க வரலாமான்னு கேட்கிறாங்க’ என்றாள்.

‘வேறு வினையே வேண்டாம். நாம தான் பாட்டியை பாத்ரூமில் அடச்சு வெச்சுட்டோம்னு கதையே கட்டிவிட்ருவாங்க. வெளில போறோம் அப்புறம் வாங்கன்னு சொல்லு’ அம்மா.

அதற்குள் பக்கத்து வீட்டு பாக்கியராஜ் சத்தம் கேட்டு உள்ளே வந்தார். ‘என்ன பாட்டி உள்ளே மாட்டிக்கிடாங்களா? உடனே பையர் சர்வீசுக்கு போன் பண்ணுங்க. அவங்க வந்து கதவை உடச்சு காப்பாத்திடுவாங்க’ என்றார்.

‘உயரமான ஏணி ஏதாவது இருக்குமா? செல்வம் பக்கத்து flatல பெயின்ட் அடிச்சாங்களே, அங்கே போய் பாரு. ஏணி இருந்தா ஏறி வெண்டிலேட்டரை உடைக்கலாம்.’ என்று இன்னொரு ஐடியா கொடுத்தார். ‘ஏதாவது ஆகியிருந்தா இம்மீடியட்டா முதல் உதவி பண்ணா தான் பொழைக்க வெக்க முடியும்.’

கடக் என்று பாத்ரூம் தாழ்பாள் திறக்கும் ஓசை. எல்லார் கண்களும் பாத்ரூமை பார்க்க பாட்டி நிதானமாக காதில் ஹெட்போன்ஸ் போட்டபடி கையில் ஐபேடுடன் வெளியே வந்தாள். ஆகாஷ், பாட்டி என்று ஓடிப் போய் கட்டிக் கொண்டு அவங்களிடமிருந்து ஐபேடை பிடுங்கினான். ‘இருடா, நான் இன்னும் கேமை முடிக்கலை. முடிச்சுட்டு தரேன்’ என்றார் பாட்டி.

GRANDMOTHER & BABY HANDS