இராமானுஜர் பகுதி -6 நிறைவு பகுதி!

ramanujar13

முந்தைய இராமானுஜர் பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5

சைவ மன்னனது சூழ்ச்சி

சைவ மன்னனின் ஆட்சி அப்பொழுது சோழ நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இராமானுஜர் இருக்கும் வரை சைவ சமயம் ஏற்றம் பெறாது என்பதை மன்னன் உணர்ந்தான். எனவே வஞ்சகமாக அவரை வரவழைத்துக் கொன்றுவிட திட்டமிட்டான். அதன்படி இராமானுஜரை அழைத்துவர ஏவலாட்களை அனுப்பி வைத்தான். நுண்ணிய அறிவுடை கூரேசனுக்கு மன்னன் எதற்காக ஆள் அனுப்பியிருக்கிறான் என்று புரிந்து விட்டது. அவர் இராமானுஜரிடத்துப் போய் ”உடனே இங்கிருந்துத் தப்பி சென்று விடுங்கள்” என்று கூறினார். “வைணவம் தழைக்கவும், அடியவர்களைக் காக்கவும் தேவரீர் உயிருடன் இருக்க வேண்டும்” என்று யாசித்தார். அதனால் அவரே உடையவரின் காவியுடையை அணிந்து கொண்டு திரி தண்டத்தையும் எடுத்துக் கொண்டு பெரிய நம்பியுடன் அரசனைக் காணக் கிளம்பினார். இந்த உக்தியை கூரேசர் சொன்னதும், மனம் பதைபதைத்து இராமானுஜர் முதலில் உடன்படவில்லை. ஆனால் வேறு வழியின்றி அவர் கூரத்தாழ்வாரின் வெள்ளை வேட்டியை அணிந்து கோவிந்தன் முதலான சில சீடர்களுடன் திருவரங்கத்தை விட்டுப் புறப்பட்டார்.

தன் முன் நின்ற கூரத்தாழ்வாரை இராமானுஜர் என்று எண்ணி அவரருக்கும் அவர் உடன் வந்திருந்த பெரிய நம்பிகளுக்கும் முதலில் தக்க ஆசனம் கொடுத்து அமர வைத்தான் சோழ அரசன். பின் சபையோருடன் விவாதம் செய்ய வைத்தான். கூரேசரும் நிறைய மேற்கோள்கள் காட்டி எப்படி நாராயணனே அனைத்து உயிர்களுக்கும் தெய்வம் என்று சொன்னார். ஆனால் நாலூரான் என்கிற அவனின் மந்திரி வந்திருப்பது இராமானுஜர் அல்ல கூரத்தாழ்வான் என்று அரசனிடம் கூறிவிட்டான். ஏனென்றால் அவன் கூரத்தாழ்வாரின் சீடர். அதனால் அவரை நன்கு தெரியும். இதனால் கோபம் அடைந்த அரசன் கூரத்தாழ்வார், பெரிய நம்பிகள் இருவரின்  கண்களையும் பிடுங்கி விடுமாறு ஆணையிட்டான். இதைக் கேட்டவுடன் கூரத்தாழ்வார் அவர்களுக்கு அந்த வேலையை வைக்காமல் தானே தன் கண்களைப் பிடுங்கிக் கொண்டார். அவர்கள் இருவரையும் காட்டுக்குள் அழைத்துச் சென்று காவலர்கள் பெரிய நம்பி கண்களை பிடுங்கி எறிந்தனர். அப்போதும் கூரேசர் மனத்திலும் பெரிய நம்பி மனத்திலும் இராமானுஜரை காப்பாற்றிய மகிழ்ச்சி தான் இருந்தது. அவர்கள் இருவரும் ஒரு பிச்சைக்காரன் உதவியுடன் திருவரங்கம் திரும்பும் வழியிலேயே பெரிய நம்பி பரமபதம் அடைந்து விட்டார். கொடுமைகள் பல செய்த சோழ மன்னனுக்குக் கண்ட மாலைத் தோன்றி கிருமிகள் அவன் கழுத்தை அழித்துக் கொல்ல, பெரும் துன்பத்துக்கு ஆளானான். அவனுக்குக் கிருமி கண்டன் என்ற பெயரும் நிலைத்து விட்டது.

பௌத்தர் வைணவராதல்

திருவரங்கத்தை விட்டுக் கிளம்பிய இராமானுஜர் இரண்டு நாட்கள் தொடர்ந்து இரவும் பகலும் நடந்து, சோழ நாட்டு எல்லையை அவரும் அவருடன் வந்த சீடர்களும் தாண்டினர். களைத்துப் போய் பசி, தாகம், குளிரும் வாட்ட சில பாறைகளின் மேல் படுத்து உறங்கினர். அவ்விடம் வேடுவர்களின் இருப்பிடம். அவர்கள் இவர்களுக்காகத் தீமூட்டி, தின்னக் கனிகளும் எடுத்து வைத்திருந்தனர். எழுந்தவுடன் இவர்களின் உதவியைக் கண்டு இராமானுஜர் நெகிழ்ந்து போனார். பின்னர் அங்கிருந்த ஒரு பிராமணர்கள் குடியிருப்புக்குச் சென்று அங்கு ஒருவர் வீட்டில் வயிறார உண்டு அனைவரும் களைப்பாறினர். அவர்கள் வீட்டிலேயே இரண்டு நாட்கள் இருந்து பின் அங்கிருந்து வடமேற்கு திசை நோக்கிக் கிளம்பினர். அதற்கு முன்பு தங்களுக்கு உதவிய அவ்வீட்டுக்குரிய ரங்கதாசருக்கு மந்திர தீக்ஷையும் அளித்துத் தன் சீடராக்கிக் கொண்டார். பின்னர் சாலக்கிராமம் என்னும் ஊரில் சில நாட்கள் தங்கி அடுத்து ஒரு நரசிம்ம ஷேத்திரத்துக்குப் புறப்பட்டார். அவ்வூர் அரசர் பெயர் விட்டலதேவர். பௌத்த மதத்தைச் சார்ந்தவர். ஆயிரக் கணக்கான பௌத்தர்களுக்கு அன்னதானம் செய்வதை தினப்படி வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அவருக்கு மகள் ஒருத்தி இருந்தாள். அவளுக்குப் பிடித்திருந்த பேயை பலர் முயன்றும் ஓட்டமுடியவில்லை. அரசர் இராமானுஜரை தன் அரண்மனைக்கு அழைத்தார். இவர் உள்ளே வந்ததுமே அந்தப் பேய் அடுத்தக் கணம் ஓடிவிட்டது. இதனால் பெரிதும் மகிழ்ந்தார் அரசர்.

இராமானுஜரின் தெய்வீக ஆற்றலை உணர்ந்த விட்டலதேவர் வைணவ சித்தாந்தத்தைத் தனக்கு போதிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டார். அரசவையில் இருந்த பௌத்தப் பண்டிதர்களுடனும் வாதம் புரிந்தார் இராமானுஜர். இராமானுஜரை அவர்களால் வாதத்தில் வெல்ல முடியவில்லை. அதனால் அவரை நிந்திக்கத் தொடங்கினர். இதைக் கண்ட அரசர் கோபமுற்றார். சான்றுகளுடன் வாதம் புரிய முடியாவிட்டால் உடனே நிந்திக்கத் தொடங்குவது தவறு என்று சொல்லி அவர்களை அவையை விட்டு அகற்றினார். அவர்களும் அரசர் வைணவத்தைத் தழுவி விட்டார் என்று அறிந்து அகன்றனர். அச்சபையில் இருந்த பல பௌத்தர்களும் இராமானுஜரின் பேச்சால் ஈர்க்கப் பட்டு வைணவத்துக்கு மாறினார். அந்நாட்டு மக்களும் மாறினார். இவ்வாறு தான் செல்லும் இடம் எல்லாம் தன் சமயத்தை நிலைநாட்டி வந்தார் இராமானுஜர். தன்னை ஆதரித்து பௌத்த மதத்தில் இருந்து வைணவத்துக்கு மாறிய விட்டலதேவருக்கு “விஷ்ணுவர்த்தனர்” என்ற விருதினை வழங்கிப் பெருமை படுத்தினார் உடையவர்.

திருநாராயணபுரப் பெருமாள்

இராமானுஜர் பல ஊர்களுக்குச் சென்று திருநாராயணபுரத்தை அடைந்தார். அங்கு ஒரு நாள் காலை துளசி வனத்தை வலம் வரும்போது மண்ணில் புதைந்து கிடந்த திருமாலின் திருவிக்கிரகம் ஒன்று கிடைத்தது. அவ்வூர் மக்களிடம் காட்டியபோது அவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். இஸ்லாமிய படை எடுப்பின் போது பல விக்கிரங்கள் சேதப்படுத்தப் பட்டதால் அதனில் இருந்து காப்பற்ற இப்படி ஒளித்து வைத்து விட்டனர் அவ்வூர் மக்கள். பின்னர் அன்றே ஒரு கூரையால் வேயப்பட்ட ஆலயம் எழுப்பப்பட்டு அவ்விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தார் உடையவர். யாதவாத்ரிபதி என்ற திருநாமத்துடன் அப்பெருமாள், கோவிலில் குடி கொண்டார். வெகு விரைவில் கோவில் பெரிதாக மாறியது. பக்கத்திலேயே ஒரு குளமும் எழுப்பினார் இராமானுஜர். அதன் அருகில் வெள்ளை நிறத்தில் மணல் இருப்பதைப் பார்த்தார். அவ்வெண்மையான மண்ணே வைணவர்கள் திருமண் தரித்துக் கொள்வதற்குப் பெரிதும் பயன் பட்டது. திருவரங்கத்தில் இருந்து அவர் கொண்டு வந்திருந்த திருமண் குறைந்து கொண்டே இருந்த சமயம் இறை அருளலால் இது கிடைக்கப் பெற்றது.

பீ பீ நாச்சியார் (அல்லது) துலுக்க நாச்சியார்

ஒரு நாள் இரவு அவர் கனவில் யாதவாத்ரிபதி தோன்றி “எனக்குக் கோவில் எழுப்பி, குளம் அமைத்து, வைணவர்கள் இட்டுக் கொள்ளத் திருமண் இருக்கும் இடத்தையும் கண்டுபிடித்து சேவை செய்துள்ளாய். இன்னுமொரு வேலை உள்ளது. உத்சவ மூர்த்தி இல்லாததால் கோவிலுக்கு வர முடியாதவர்களுக்காக நான் அவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல முடியாமல் இருக்கிறேன். தில்லி அரசனின் பாதுகாப்பில் இருக்கும் “இராமப்ரியரை” இங்கே கொண்டு வந்து சேர்த்துவிடு” என்று ஆணையிட்டார்.

தில்லி சென்று அரசனை சந்தித்தார் இராமானுஜர். இஸ்லாமிய மன்னன் ஆயினும் அவரை நல்ல முறையில் வரவேற்று தன் கஜானாவைத் திறந்து காட்டினான் பாதுஷா. அங்கு விக்கிரகம் எதுவும் இல்லை. மனமொடிந்த இராமானுஜருக்கு அன்று இரவு பெருமாள் கனவில் தோன்றி தான் அரசன் மகளிடம் இருப்பதாகச் சொன்னார். அடுத்த நாள் அரசனிடம் இவ்விஷயத்தைச் சொல்ல அவன் அதை நம்பவில்லை. இருந்தால் எடுத்துச் செல் என்று அந்தப்புரத்துக்கு எதிராஜரை அழைத்துப் போனான். போனதும் இராமப்ரியர் ஜல் ஜல் என்று நடந்து வந்து உடையவர் மடியில் அமர்ந்தார். “வாராய் என் செல்லப் பிள்ளாய்” என்று கட்டித் தழுவி கண்ணீர் உகுத்தார் உடையவர். அரசகுமாரி அங்கு இல்லாததால் நல்லதாகிப் போக உடனே உடையவரும் பெருமாளுடன் திருநாராயணபுரம் கிளம்பினார்.

ஆனால் அரசகுமாரிக்கு இராமப்ரியரைப் பிரிந்து ஒரு நொடி கூட இருக்க முடியவில்லை. பாதுஷாவின் புத்திரி பித்தம் பிடித்தவள் போல் ஆனாள். இராமானுஜரை பின் தொடர்ந்து ஓடி வந்தாள். இராமானுஜரும் இராமபிரியரும் இருந்த பல்லக்கை நெருங்கி தடுத்து நிறுத்தினாள். அவளின் கள்ளம் கபடமற்றக் காதலைக் கண்டு உருகினார் உடையவர். நந்தகுமாரனை நேசித்த நப்பின்னையின் சாயலை அவளிடம் கண்டார். அவளை இராமப்ரியருடன் பல்லக்கில் அமர வைத்துவிட்டு அவர் இறங்கிக் கொண்டார். கொஞ்ச தூரம் சென்றதும் பல்லக்குத் தூக்கிச் செல்பவர்கள் எடை குறைகிறது என்று கூற, பட்டுச்சீலையை விலக்கி இராமானுஜர் பல்லக்கின் உள்ளே பார்க்க அங்கே இராமப்ரியர் மட்டுமே இருந்தார், அரசகுமாரியைக் காணவில்லை. இராமப்ரியருடன் ஒன்றிவிட்டாள் என்பதை உணர்ந்த உடையவர் “ தேவி, உன் திருவுருவத்தை விக்கிரகமாக வடித்து பெருமாள் திருவடி நிழலிலேயே பீ பீ நாச்சியாராகப் பிரதிஷ்டை செய்வேன்” என்று உணர்ச்சிப் பெருக்குடன் உரக்கக் கூறினார் எதிராஜர். அவ்வாறே பின்பு செய்தும் முடித்தார்.

அவர் திருநாராயணபுரம் நெருங்கும் போது திருடர் கூட்டம் ஒன்று அவர்களைத் தாக்க, உடனே அந்தப் பகுதி சேரியில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை விரட்டி இராமப்ரியரைக் காப்பாற்றிக் கொடுத்தனர். அதற்குப் பிரதிபலனாக எதிராஜர் அவர்களுக்குத் “திருக்குலத்தார்” என்று திருநாமம் சூட்டி வருடந்தோறும் நடக்கும் பிரம்மோத்சவத்தில் மூன்று நாட்கள் அவர்களின் திருவிழாவாக இருக்கும் என்றும் அருளினார். அது இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தமர் உகந்த திருமேனி

இந்நிலையில் பன்னிரெண்டு ஆண்டு காலம் திருநாரயணபுரத்தில் எழுந்தருளியிருந்த இராமானுஜர், பெரிய நம்பி பரமபதம் எய்ததையும் கூரேசர் திருமாலிருஞ்சோலையில் தனித்து வாழ்வதையும், மேய்ப்பனில்லாத ஆடுகள் போல் அடியார்கள் திருவரங்கத்தில் தனித்து விடப்பட்டதையும் அங்கிருந்து வந்த வைணவர் மூலம் கேள்விப்பட்டு கண்ணீர் உகுத்தார். அதற்கு மேல் இராமானுஜருக்கு திருநாராயணபுரத்தில் இருக்க முடியவில்லை. திருவரங்கம் செல்லத் தீர்மானித்தார். அங்கிருந்த அடியவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க உடையவர் தன் உருவத்தை விக்கிரகமாக வடிக்கச் செய்தார். அதில் தனது அருளை முற்றும் வைத்தார்.

“தமர் உகந்த திருமேனி” என்னும் திருநாமத்தோடு இன்றளவும் திருநாராயணபுரத்தில் திகழ்கிறது. அங்கு தினப்படி பூஜைகள் தவறாமல் நடக்கின்றான்.

திருவரங்கம் திரும்பினார்

திருவரங்கம் திரும்பிய போது அவருக்கு வயது நூறு இருக்கும். உடலும் தளர்ந்து விட்டது. அங்கு வந்து சேர்ந்த சில நாட்களில் பெரிய நம்பியின் இல்லத்துக்குச் சென்று அவரின் மகள் அத்துழாய்க்கும், அவரின் மகனும் இராமானுஜரின் சீடருமான புண்டரீகருக்கும் ஆறுதல் கூறினார். பின் கூரேசரைக் கூட்டிவர திருமாலிருஞ்சோலைக்கு ஒரு திருத் தொண்டரை அவசர அவசரமாக அனுப்பி வைத்தார்.

தன்னை வந்து தொழுது எழுந்த கூரேசரின் நிலையைக் கண்டு மனம் வெதும்பிக் கலங்கினார். ஆழ்வாரை அள்ளி எடுத்து ஆணைத்துக் கொண்டார் எதிராஜர். தன் கண்ணீரால் அவரைக் குளிப்பாட்டினார். அவரை விட பெரிய அடியவர் எவரும் உண்டோ என்று சொல்லி கூரேசர் வைணவத்துக்காகவும் தனக்காகவும் செய்தத் தியாகங்களை நினைத்து உருகி அவர் திரும்பப் பார்வை பெற இறைவன் அருள வேண்டும் என்று விரும்பினார்.

காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் வேண்டி மீண்டும் கூரேசர் கண் பார்வை பெற வேண்டும் என்று அவரிடம் அறிவுருத்தினார். அனால் கூரத்தாழ்வார் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அகக் கண்கள் இனி தனக்குத் தேவை இல்லை என்று கூறினார். வைகுந்தனைக் காண ஞானக் கண்களே போதும் என்றார்.

ஆனாலும் இரண்டு நாட்களில் திரும்ப எதிராஜர் கூரத்தாழ்வாரை வரதராஜன் மேல் வாழ்த்துக் கவி பாட நிர்பந்தித்தார். குருவின் பேச்சை மீற முடியாமல் கூரத்தாழ்வார் “வரதராஜஸ்த்வம்” இயற்றி அதை அவர் சன்னதியில் பாடி முடித்தார். அத்திகிரியார் மனமகிழ்ந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்க கூரேசரோ தனக்குப் பார்வை வேண்டும் என்று கேட்காமல் தன் பார்வைப் போவதற்குக் காரணமாக இருந்த தன் சீடன் நாலூரானும் நற்கதி அடைய வேண்டும் என்று வரம் வாங்கினார். கெட்டவரோ நல்லவரோ குருவைச் சார்ந்த சீடன் நற்கதி அடைகிறான் என்னும் உயரிய வைணவ சித்தாந்தத்தை நடைமுறையில் செய்து காட்டினார் கூரேசர். விரைவில் அரங்கனின் அடி மலர்களில் யாசித்து பரமபதத்தைப் பெற்றார். அவருக்குப் பின் அவர் மகன் பராசரரை ஆச்சாரியன் ஆக்கினார் உடையவர்.

இவருக்குப் பின் உறங்காவில்லியும் எம்பெருமானார் எதிராஜர் திருவடியில் தலை வைத்து பரமபதம் போனார். அப்பொழுது இராமானுஜருக்கு ஏறத்தாழ நூற்றி இருபது வயது ஆகிவிட்டது.

அவரும் பரமபதம் புகும் நேரம் வந்துவிட்டது என்று அறிந்தார். தம் பிரிவைத் தாளாது தொண்டர்கள் தவிப்பார்கள் என்று உணர்ந்து சில காரியங்களை உடனே செய்தார். தன்னைப் போலவே தத்ரூபமாக ஒரு விக்கிரகத்தை வடிக்கச் சொல்லி அதை ஆரத் தழுவி அதனுள் தன் அருட்சக்தியை வைத்தார். “தான் உகந்த திருமேனி” என ஏற்றம் பெற்ற அந்த விக்கிரகத்தை தன் அவதாரத் தலமான ஸ்ரீ பெரும்பூதூரில் பிரதிஷ்டை செய்யுமாறு முதலியாண்டான் மகன் கந்தாடையாண்டனிடம் கூறினார்.

அவர் நாட்பட நாட்படத் தளர்வுற்று ஒரு நாள் தன் திருமுடியை எம்பார் மடியிலும் திருவடியை வடுக நம்பி மடியிலும் வைத்து வைகுந்தம் ஏகினார். திருமாலின் படுக்கையாகத் திரும்ப ஆனார். அரங்கன் அவரைத் திருப்பள்ளிப் படுத்த தன் வசந்த மண்டபத்தையே கொடுத்தார். அந்த இடத்திலேயே அவருக்கு ஒரு சன்னதி எழுப்பினர் அவருடைய சீடர்கள். “தானான திருமேனியாய்” திகழ்கிறது இன்று வரை.

குரு பரம்பரை தொடர் அறாத ஒரு பரம்பரை. அவர் நியமனம் செய்த எழுபத்தி நான்கு சிம்மாசனாதிபதிகள் மூலம் இன்றும் வைணவ மரபு செழித்தோங்கி வாழ்கிறது.

சீராரும் எதிராசன் திருவடிகள் வாழி

திருவரையில் சார்த்திய செந்துவராடை வாழி

ஏராரும் செய்யவடி எப்பொழுதும் வாழி

இலங்கிய முன்னூல் வாழி இணைதோள்கள் வாழி

செராததுய்ய செய்யமுகச் சோதிவாழி

தூமுறுவல் வாழி துணைமலர் கண்வாழி

ஈராறு திருநாம(ம்) அணிந்த எழில்வாழி

இனி திருப்போ(டு) எழில் ஞான முத்திரைவாழி!

ஸ்ரீ இராமானுஜர் திருவடிகளே சரணம்

இன்னும் ஒரு முக்கியக் குறிப்பு:  

இராமானுஜர் வலியுறுத்துவது என்ன? பரமனின் 1000 நாமங்களையும் சொல்லக்கூடத் தேவையில்லை, “நாராயணா” என்ற ஒரு திருநாமத்தையாவது (ஓம் நமோ நாராயணாய என்பது திருமந்திரம் (அ) அட்சாட்சர மந்திரம், ரகசிய மந்திரங்கள் என்று சொல்லப்படும் மூன்றில் முதன்மையானது, மற்றவை துவய மந்திரம், சரம சுலோகம்) தினம் ஓதி உய்யும் (வீடு பேறு அடையும்) வழியை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள் என்று நமக்கு அருளியிருக்கிறார்.

திருமந்திரத்தை வதரியாசிரமத்தில் (பத்ரிநாத்) நாராயணன் நரனுக்கு அருளினான். அவனே நரன் (சீடன்), அவனே நாராயணன் (ஆச்சார்யன்)!

மந்திர ரத்தினம் என்று போற்றப்படும் துவயத்தை வைகுந்தத்தில் தான் மார்பில் தரித்த பிராட்டிக்கு (இலக்குமி தேவிக்கு) பரமன் உபதேசித்தார்.

ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே!
ஸ்ரீமதே நாராயணாய நமஹ!

சரம சுலோகத்தை பார்த்தசாரதியாக குருச்சேத்திரப் போர்க்களத்தில் அருச்சுனனுக்கு உபதேசித்தார். பகவத் கீதையில் இது உள்ளது.

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ

இந்த 3 மந்திரங்களையுமே நாராயணனே அருளியதால், அவன் குருபரம்பரையின் முதல் ஆச்சார்யன் ஆகிறான்! பரம்பொருளின் தன்மை, ஜீவாத்மாவின் தன்மை, முக்திக்கான வழிவகைகள், முக்தி என்ற இலக்கின் தன்மைகள், முக்திக்குத் தடையாக இருப்பவை ஆகிய 3 விஷயங்களை விளக்கும் சாரமாகவே இம்மூன்று ரகசிய மந்திரங்களும் (ரகஸ்யத்ரயம்) விளங்குவதாக மணவாள மாமுனிகள் அருளியிருக்கிறார்

விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார் தான் அருளிய திருப்பல்லாண்டில்

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து
எங்கள் குழாம் புகுந்து
கூடு மனமுடையீர்கள் வரம் பொழி
வந்தொல்லைக் கூடுமினோ

நாடும் நகரமும் நன்கறிய நமோ
நாராயணாய வென்று
பாடு மனமுடைப் பத்தருள்ளீர், வந்து
பல்லாண்டு கூறுமினே!

திருமந்திரத்தின் மேன்மையை உணர்த்துகிறார்.

இதனாலேயே, பன்னிரு ஆழ்வார்களுக்கும், அவ்வாழ்வர்களை திருமாலுக்கும் மேலாகக் கொண்டாடிய, குருபரம்பரையின் நடு நாயகமாகத் திகழும், பகவத் ராமானுசருக்கும் வைணவத்தில் மிக உயர்ந்த இடம் அளிக்கப்பட்டிருக்கிறது!

அவ்வகையில், திருமால் மேல் பற்றும், பக்தியும் உள்ள எவரும் வைணவரே என்பதும் பல பிரபந்தப் பாசுரங்களில் காணக்கிடைக்கும் செய்தியே. இத்தகைய வர்ண பேதத்திற்கு எதிரான செய்தியையே எந்தை இராமனுச முனி திருக்கோட்டியூர் கோபுரத்தின் மேலேறி நின்று, தனது குருவின் ஆணைக்கும் எதிராக, உலகுக்கே உரக்க அறிவித்தார்!

ஸ்ரீ ராமானுஜர் திருவடிகளே சரணம்!

ramanujar12