மணி ரத்னம் கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்குப் பின் மக்களுக்குப் பிடிக்கும் வகையில் ஜனரஞ்சகமான ஒரு படத்தைத் தந்துள்ளார். எத்தனையோ டான் கதைகளை பார்த்துவிட்டோம் ஆனால் இது இயக்குநர் முத்திரை பதிந்த புது முயற்சி. திமுகவில் தலைமை பொறுப்புக்கு வர சண்டை ஏதும் வரவில்லை. ஆனால் வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துக் கூட இக்கதையை மணி ரத்னம் புனைந்திருக்கலாம். இது என் யூகம். அதில் ஒரு வசனம் அண்ணா நீ தானே ஆரம்பித்தாய் என்று ஒரு தம்பி பேசும் வசனம் என்னை அப்படி நினைக்கத் தூண்டியது. எதேச்சையான ஒரு வசனமாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் அப்பா டானிற்குப் பிறகு மூன்று மகன்களிடையே யார் அந்த இடத்துக்கு வருவது என்கிற போட்டியும் மணிக்கு இந்தப் படத்தின் கரு உதிக்கக் காரணமாக இருக்கலாம் என்று எண்ண வைத்தது.
பிரகாஷ் ராஜ், ஜெயசுதா பெற்றோர் பாகங்களில் அருமையாக நடித்திருக்கிறார்கள். பண்பட்ட நடிகர்கள், சொன்னதற்கு மேல் செய்து கொடுப்பவர்கள். பாசகாரக் குடும்பத் தலைவனாக, கள்ளச் சந்தை/சமூக விரோத செயல்கள் நடத்துவதில் பெரிய அளவில் கொடிக்கட்டிப் பறக்கிறவராக ஓவர் ஏக்டிங் இல்லாமல் செய்திருக்கிறார். ஜெயசுதா அன்பு மனைவியாக பிற்பாடு மகன்களிடையே சமரசம் செய்து எப்படியாவது குடும்பத்தில் அமைதி நிலவ, தலைமைப் பொறுப்பை ஏற்க நடக்கும் சகோதரப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைபவராக வெகு பாங்காகக் பாத்திரத்தில் பரிமளிக்கிறார். எதிரணி டாணாக தியாகராஜன். நல்ல பொருத்தம்! நடிகர்களை சரியாக பாத்திரங்களுக்குத் தேர்வு செய்து இயக்குவதை எளிதாக்கிக் கொண்டுள்ளார் மணி என்றே சொல்ல வேண்டும்.
தந்தையுடன் கூடவே இருந்து அவர் சொல்வதை எல்லாம் செய்யும் பொறுப்புள்ள முதல் மகனாக அர்விந்த் சாமி, அதே போல பொறுப்புள்ள மூத்த மருமகளாக அர்விந்த் சாமியின் மனைவியாக ஜோதிகா. இரண்டாவது மகனாக துபாயில் ஷேக்குகளுடன் கடத்தல் வியாபாரம் செய்யும் அருண் விஜய், அவர் மனைவியாக சிலோன் தமிழராக ஐஸ்வர்யா ராஜேஷ், மூன்றாவது மகனாக செர்பியாவில் ஆயுதங்கள்/தளவாடங்கள் விற்கும் STR, அவர் காதலியாக பின் மனைவியாகும் டயானா என்று பெரிய நடிகர் பட்டியலைப் படம் தாங்கி நின்றாலும் ஒவ்வொருவர் பாத்திரமும் கவனத்துடன் செதுக்கப்பட்டு ஒன்றுக்கு ஒன்று குறைவில்லாமல் எல்லாருக்கும் சம பங்கு கிடைக்குமாறு செய்ததில் தான் மணி ரத்னம் சிறப்பு மென்ஷன் பெறுகிறார். விஜய் சேதுபதி அர்விந்த் சாமியின் நண்பராக ஓர் இறந்த டானின் மகனாக போலிஸ் இன்ஸ்பெக்டராக இத்தனை பாத்திரங்களுக்கு நடுவிலும் சம பங்குடன் வளைய வருகிறார். என் வழி தனி வழின்னு எல்லார் நடிப்பையும் அசால்டா தன் கேசுவல் நடிப்பால் தூக்கி சாப்பிட்டு விடுகிறார்.
ஒரு சமயம் இது அர்விந்த் சாமி படம், இது STR படம், அட இல்லை அருண் விஜய் படம், இல்லை ஜோ படம், இல்லை கண்டிப்பாக விஜய் சேதுபதி படம் என்று எண்ண வைத்துக் கடைசியில் இது மணி ரத்னம் படம் என்று புரிய வைக்கிறார் இயக்குநர். நடித்த அனைவருமே அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
உடைகள் படு கச்சிதம். அருண் விஜய், STR இருவருக்குமே மிக ஸ்டைலிஷான உடைகள். ஜோதிகாவின் படங்களும் அழகு. ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பீட்டளவில் சிறிய பாத்திரம் தான். ஆனால் அதிலும் முத்திரை பதிக்கிறார். அதிதி ராவ் ஹைதாரியின் பங்கும் சிறியதே ஆனால் அதையும் அழுத்தமானாதாக பதிகிறது அவர் நடிப்பாலும் பாத்திரப் படைப்பாலும்.
சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு கண்ணுக்கு விருந்து என்று சொல்லவும் வேண்டுமோ! அதுவும் ஐரோப்பியாவிலும் துபாயிலுமான காட்சிகளின் வண்ணக் கலவையும் கழுகுப் பார்வையில் விரியும் காட்சிகளும் அற்புதம். பாடல்கள் முழுதாகப் படத்தில் பயன்படுத்தப் படவில்லை என்றே நினைக்கிறேன். மேலும் பாடல்கள் பின்னணியாக தான் ஒலிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் நன்று. ஸ்ரீகர் பிராசாதின் படத்தொகுப்பும் நன்றே. இவ்வளவு பாத்திரங்களை வைத்து சிக்கலில்லாமல் படத்தொகுப்பை செய்து கதையை நேர்த்தியாக நகர்த்தியிருக்கிறார்.
படம் முடியும்போது இவ்வளவு சிக்கல் நிறைந்த ஒரு டான் வாழ்க்கையை ஏன் ஒருவர் தேர்ந்தெடுக்கிறார் என்று தோன்றும். பல சமயங்களில் அது திணிக்கப்பட்டு அதிலிருந்து மீள முடியாமல் அதுவே வாழ்க்கையாக அமைந்து விடுகிறது முதல் தலைமுறை டானுக்கு. அடுத்தத் தலைமுறைகளுக்கு அந்தப் பதவியில் கொடுக்கும் ஏராளமான பணமும் செல்வாக்கும் அந்தப் பாதையைத் தொடர தூண்டுதலாக அமைகிறது. போலிஸ் பாத்திரங்களின் பங்களிப்பு வெகு subtle. அதே சமயம் அவர்கள் நல்ல முறையில் காட்டப்படுகின்றன.
என்றுமே திரைக் கதை தான் ராஜா. அதைப் புரிந்து மணி படம் இயக்கியிருப்பது அவருக்கான வெற்றியைக் கொடுத்திருக்கிறது. எத்தனை கதாப் பாத்திரங்கள்! எத்தனை முன்னணி நடிகர்கள்! இவர்கள் அனைவரையும் அருமையாக இயக்கி அனைத்து நடிகர்களுக்கும் வேண்டிய முக்கியத்துவம் கொடுத்து சிறப்பான பங்களிப்பைப் பெற்று வெற்றிப் படத்தைத் தந்திருக்கும் அவருக்கும் அவர் குழுவுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.