சென்னையின் ஒரு பகுதி தான் வட சென்னை. ஆனால் வட சென்னை மக்களின் ஏழ்மையான வாழ்க்கைத் தரமும், அவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகளும், கடற்கரையோரப் பகுதியின் ஆபத்தான, அசுத்தமான புவியியலும் இதர சென்னை மக்களின் வாழ்க்கையோடும், அவர்கள் வசிக்கும் இடங்களோடும், அவர்களின் பிரச்சினைகளோடும் ஒப்பு நோக்கும் போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது. அரசியல்வாதிகளும், தன்னார்வ குழுக்களும், அங்கேயே பிறந்து வளர்ந்து நல்ல நிலையில் இன்று இருக்கும் பல வெற்றியாளர்களும், அவர்களின் தரத்தை உயர்த்தவோ, அவர்களுக்கு உதவி செய்து வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொண்டுவரவோ முயல்பவர்களும் குறைவு, அப்படி செய்த்பவர்களை அதில் வெற்றிக் காண்பவர்கள் அதைவிட குறைவு. அப்பகுதியின் மக்களைப் பற்றிய கதை முப்பாகங்களாக வெளிவருவதாக இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்து அதன் முதல் பாகமாக வட சென்னை வெளிவந்துள்ளது. அசாத்திய உழைப்பின் பலனாக அருமையான ஒரு படத்தை நாம் காணும் வாய்ப்பைத் தந்திருக்கிறார் வெற்றிமாறன்.
படம் தொடங்கிய பின் கொஞ்ச நேரம் ஆகிறது யார் யார் எந்த பாத்திரம், என்ன தொடர்பு என்று புரிவதற்கு. படத்தின் ஆரம்பத்திலேயே நிறைய பாத்திரங்களை அறிமுகப் படுத்திவிடுவதால் சற்று நேரம் ஆகிறது படத்தின் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள. மேலும் கதையின் கால அளவும் 1987ல் தொடங்கி 2005 வரை வருகிறது. அதுவும் கொஞ்சம் முன்னும் பின்னும் கதை சொல்லி நகர்த்துவதால் சற்றே குழப்பம் உள்ளது. ஆனால் விரைவில் கதைக்குள் நம்மை நுழைத்து விடுகிறார் இயக்குநர்.
வட சென்னைப் பகுதியில் வாழாதவர்களுக்கும், அங்கு நடப்பதைச் செய்தியாக – கொண்டித் தோப்பு ரங்கன் இரண்டு ரவுடி கும்பலின் மோதலில் கொல்லப்பட்டான், வெள்ளை மாரியை காக்கா பாலாஜி வெட்டி சாய்த்தான், தாடி சுரேஷை போலிஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது என்று நாம் செய்தியில் படித்தோ, தொலைக்காட்சியில் பார்த்தோ கடந்து போவோம். ஆனால் அதை இப்படத்தில் எப்படி இவை எல்லாம் நடக்கின்றன எனக் காண்பித்து நம்மை அவர்களோடு இரத்தமும் சதையுமாக (உண்மையாகவே) வாழவிட்டிருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன். ஆடுகளம் படத்தில் சிறந்த இயக்குநர் &சிறந்த காதாசிரியருக்கான தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். விசாரணை திரைப்படம் உலக அளவில் விருதுகளை அவருக்கு வாங்கித் தந்துள்ளது. வட சென்னை திரைப்படத்துக்கு விசாரணைக்கும் ஆடுகளத்துக்கும் உழைத்ததை விட அதிகம் உழைத்திருப்பார். வெகு ஆழமான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டதால் மட்டுமே இவ்வளவு விரிவான, சிறப்பான ஒரு கதைக் களத்தை நம் முன்னால் நிறுத்தயிருக்க முடியும். அங்கு வாழும் மக்களின் மொழி, வேலை, இடம், உடை, குணக்கூறுகளான வஞ்சகம், விசுவாசம், நம்பிக்கை துரோகம், அன்பு, பழிக்குப்பழி, உயிர் தப்பிக்க எதையும் செய்யத் துணிதல் ஆகிய அனைத்தும் அந்தக் களத்தின் பாணியில் சொல்லியிருப்பதில் இவரின் இந்த படைப்புக்கும் இந்திய அளவிலும் உலக அளவிலும் அங்கீகாரம் கிடைக்கும் என்பது நிச்சயம்.
முதல் காட்சியே இரத்தம் தோய்ந்த கத்திகள், ப்ளர் செய்யப்பட்ட கொல்லப்பட்ட சடலம், அந்த சடலத்துக்கு அருகிலேயே அமர்ந்து வெற்றிப்பாதையை நோக்கி நால்வர் செல்ல வாய்ப்பை ஒருவனைக் கொலை செய்ததனால் ஏற்படுத்திக் கொண்ட மகிழ்ச்சியுடன் உரையாடுவதுடன் படம் தொடங்கி இப்படத்தின் இயல்பை சொல்லிவிடுகிறது. இப்படத்தில் முக்கியப் பாத்திரங்களில் அமீர் (ராஜன்), சமுத்திரக்கனி (குணா), டேனியல் பாலாஜி (தம்பி), கிஷோர் (செந்தில்), வட சென்னை gang தலைவர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களுடன் சுயநல அரசியல்வாதியாக (வேறு வகை உண்டா என்ன?) ராதா ரவி (முத்து) நடிக்கவே தேவையில்லாமல் இயல்பாகவே மிரட்டலாக வருகிறார்.
வட சென்னையில் முக்கிய பிரச்சினையே கேங் வார் தான். சமூக விரோதச் செயல்கள் மூலம் பணம் சம்பாதித்து பணத்தாலும் பவராலும் அந்தப் பகுதியை தன் வசப்படுத்தி கோலோச்ச போட்டியிடுவது தான் அங்குள்ள கேங் தலைவர்களின் தினசரி போராட்டமாக அமைகிறது. அங்கு இருக்கும் இளைஞர்களை நல் வழிகாட்ட கள்ளக் கடத்தல் செய்து வந்து பின் மனம் மாறிய ஒருவர் (ராஜன்) முயல்கிறார். சமூகக் கூடம் அமைத்து அந்த மக்களின் பாதுகாவலராக, பணக்கார முதலாளிகள், காவல் துறையினரிடம் இருந்து அம்மக்களை காப்பவராக வருகிறார். அமீரின் நடிப்பும் அந்தப் பாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. அன்பு, தலைமைக் குணம், போர்க் குணம், போலீசையே புரட்டிப் போட்டு அடித்து மிரட்டும் துணிச்சல், தன் பகுதி மக்களின் நலனில் காட்டும் அக்கறை, நம்பிக்கை துரோகத்தில் வீழ்வது என்று உணர்சிகளைக் காட்ட நல்ல வாய்ப்பு. அனைத்தையும் நன்கு பயன்படுத்தியுள்ளார்.
அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் கேரம்போர்ட் விளையாட்டு வீரராக இருக்கும் தனுஷ் (அன்பு) நல்லபடியாக முன்னேறி விளையாட்டு கோட்டாவில் அரசாங்க வேலைக்குப் போகும் கனவில் இருப்பவர். அந்தச் சமுதாய குற்ற சூழ்நிலையாலே எப்படி வேண்டாத செயலை செய்து அதனால் அவர் வாழ்க்கையின் திசையே ஆசைப்பட்டது போல் இல்லாமல் மாறி வட சென்னை டானாக உருவாகுவது தான் கதை. அவர் விடலைப் பருவத்தில் இருந்து முப்பது/முப்பத்தைந்து வயது வரையிலான வாழ்க்கையைப் பார்க்கிறோம். எல்லா வயதுக்கும் பொருந்துகிறது அவர் முகம். அவர் நன்றாக உணர்ந்து நடித்துள்ளார். வெற்றிமாறனுக்கும் தனுஷுக்கும் நல்ல அலைவரிசைப் பொருத்தம். தனுஷுக்கு ஏத்த கதையை இவர் கொடுக்கிறார். பாத்திரத் தன்மையை உணர்ந்த நடிப்பை வெற்றிமாறனுக்கு அவர் தருகிறார். Win Win situation.
ஆண்ட்ரியாவிற்கு அருமையான பாத்திரம். ஒரு பகுதிக்கு மேல் அவர் தான் கதையின் சூத்திரதாரி. பிராமதமாக நடித்திருக்கிறார். அடுத்து வரும் இரண்டு பகுதிகளில் கதையில் வெற்றிமாறன் அவரை எவ்வகையில் பயன்படுத்தியிருக்கிறார் என்று பார்க்க ஆவலாக உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் தனுஷின் ஜோடியாக நல்ல வாய்ப்பு. சரியாகப் பயன்படுத்தியுள்ளார்.
இசை சந்தோஷ் நாராயணன். 25வது படம். மிகப் பெரிய பங்களிப்பை அவரின் இசை இந்தப் படத்துக்கு அளித்துள்ளது. படம் ஒரு கடுமையான சூழலையே சுற்றி வருகிறது. அதனால் இசையின் பங்கு மிக முக்கியமாகிறது. மேலும் நார்த் மெட்ராஸ்சுக்கான இசை இப்படத்தின் தேவை. அதை உணர்ந்து கொடுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். அதே மாதிரி ஒளிப்பதிவும் தனிப் பாராட்டைப் பெறுகிறது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அந்த அழுக்கும் அசுத்தமும் நிறைந்த தெருக்களிலும் குறுகிய சந்துகளிலும் இருட்டிலும் பாத்திரங்களுடன் ஒடி விறுவிறுப்பாக படத்தைத் தந்திருக்கார். ஸ்ரீகரின் படத்தொகுப்பும் நன்றாக உள்ளது. பெரிய கதை, நிறைய பாத்திரங்கள், தொகுப்பது எளிதன்று!
வட சென்னையில் மேல் தட்டு நாகரீகத்தையே அறிந்திராத ஒரு சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்குத் தெரிந்த உலகம் எல்லாம் ஏதாவது சரிபட்டு வரவில்லை என்றால் பழி தீர்த்துக் கொள்ளுதலும், வெட்டும் குத்தும், உடனடி பலனை எதிர்பார்த்து செய்யும் செயல்களும் தான். இந்தப் படம் ஒரு வட சென்னை – நார்த் மெட்ராஸ் வாழ்வியலை சொல்லும் படம் தான் என்றாலும் அதை சுவாரசியமான கதையாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர். திரைக்கதையும் படமாக்கமும் முதலில் பெரிய அப்ளாசைப் பெறுகிறது. மற்றவை அடுத்தே. நிறைய கெட்ட கெட்ட வசைச் சொற்களும் மிகவும் கொடூரமான கொலைகளும் படத்தில் இடம் பெறுகின்றன. இவ்வளவு தேவையா என்று தெரியவில்லை. அதில் இந்த வசை சொற்கள் பேசப்படும்போது அரங்கம் அதிர்வது இளைஞர்களின் இன்றைய நாகரீகத்தைக் காட்டுகிறது. கமலா திரை அரங்கில் 25 பெண்களுக்கு மேல் இல்லை. குழந்தைகளுக்கு ஏற்றப் படம் அல்ல. A சான்றிதழுடன் தான் படம் வெளிவந்துள்ளது. சினிமாவை ரசிப்பவர்களுக்கு நல்ல ஒரு படம், பாராட்டுகள் வெற்றி மாறன் அணியினருக்கு