முதல் படத்துக்கு அடுத்த பாகம் எடுப்பது என்று முடிவு செய்தால் உடனே எடுத்திடுங்க இயக்குநர்களே. நாள் கழிச்சு (வருடங்கள்!!) எடுத்து அந்த ஹீரோவுக்கு வயதாகி, தொப்பை வந்து பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு. 28 வயதுள்ளவராக விக்ரமை எப்படி ஒத்துக் கொள்வது? ஆனால் உடம்பை படு ஃபிட்டாக வைத்துள்ளார் விக்ரம். நடிப்பிலும் சண்டைக் காட்சிகளிலும் பிராமாதமாக செய்துள்ளார். ஹரி படங்கள் என்றுமே விறுவிறுப்புக்குப் பெயர் போனவை. வேகமாக நகரும் கதையாக அமைத்துத் திரைக் கதையிலும் தவறுகளை கண்டுபிடிக்க விடாமல் செய்துவிடுவார். இந்தப் படம் வேகமாக நகர்கிறது ஆனால் திரைக் கதை சொதப்பல். அதில் மைனஸ் மதிப்பெண்கள் பெறுகிறார். படத்தின் ஆரம்பத்தில் சாமி 1 படத்தைக் கொஞ்சம் காட்டுகிறார்கள், முன் கதை சுருக்கம் மாதிரி. ஆனால் த்ரிஷாவுக்குப் பதிலா திவ்யான்னு அதே பழைய கதையில் ஐஸ்வர்யா ராஜேஷை த்ரிஷா இடத்தில் மணமகளாக மனைவியாக நடிக்க வைத்துக் கதையை தொடர்கிறார் இயக்குநர். பெருமாளை பிச்சையை கொலை செய்து எரித்து விடுவதுடன் சாமி படம் முடியும். அதைத் தொடர்ந்து அவரைத் தேடி அவர் மகன்கள் வருவதாக இதில் படம் தொடங்குகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பிராமண பாஷை சுத்தமாக வரவிவில்லை. கொஞ்சம் பயிற்சி எடுத்திருக்கலாம். த்ரிஷா மாமியாக பச்சக் என்று மனத்தில் நின்றதே அந்த பிராமண பெண் பாத்திரத்துக்கு சரியாக பொருந்தியதால் தான். சின்ன பாத்திரம் தான் ஐஸ்வர்யாவுக்கு, அதனால் அவர் சரியாக பொருந்தாததை மன்னித்துவிடலாம். ஆனால் பிரச்சினை கதையின் தொடர்ச்சியில் தான். திடீரென்று கதை திருநெல்வேலியில் இருந்து தில்லிக்குத் தாவி அங்கு ஓர் விக்ரம் மத்திய மந்திரியின் அலுவலகத்தில் வேலை செய்கிறார். முதலில் பார்த்த ஆறுச்சாமி விக்ரமுக்கு இவர் என்ன உறவு, டபுள் ரோலா என்று குழப்பம் வருகிறது. எது ப்ளாஷ் பேக் எது தற்போதைய கதை என்று சொல்வதிலேயே திரைக் கதை தடுமாறுகிறது. அனுபவம் வாய்ந்த இயக்குநர் ஹரி இந்தத் தவறை செய்யலாமா?
தில்லி விக்ரம் ஒரு பிராமணர், ஐஏஎஸ் தேர்வு முடிவுக்குக் காத்திருக்கும் போது மத்திய மந்திரி அலுவலகத்தில் வேலை செய்பவராக, பகுதி நேர கல்யாணம் செய்து வைக்கும் புரோகிதராகக் காட்டப்படுகிறார். முதலில் வேறு மாதிரி கதை அமைத்துப் பின் கதை மாற்றப்பட்டதா என்று தெரியவில்லை. எனிவே முதல் குழப்பத்திற்குப் பிறகு அவர் யார் என்று புரிந்து அவரும் பூணுலை கழட்டி விட்டு ஐபிஎஸ் ஆகி அதே திருநெல்வேலிக்கு போஸ்டிங் வாங்கி பெருமாள் பிச்சையின் மூன்று மகன்களை பழி தீர்த்துக் கொள்வதே மிச்சக் கதை. பூணுல் போட்டு வளர்க்கப்பட்டவர் பின் எதற்கு அதை கழட்ட வேண்டும் என்று தெரியவில்லை. சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லை.
மிச்சக் கதைக்கு வருவதற்குள்ளே சூரி நம்மை ஒரு வழி பண்ணி விடுகிறார். தாமிரபரணி புஷ்கரத்துக்குத் தடை வாங்க முயல்வதை விட முதலில் சூரி காமெடிக்குப் படங்களில் தடை வாங்க முயன்றால் புண்ணியமாப் போகும். அவ்வளவு திராபையாக உள்ளது அவரின் நகைச்சுவை பகுதி. படத்தின் இளங்காற்று கீர்த்தி சுரேஷ், அழகாக இருக்கிறார், பதமாக நடிக்கிறார். உடை அலங்காரம் அருமை. இதில் ஹீரோ நாயகியை பின் தொடர்ந்து ல்தகா சைஆ இருக்கா என்று படுத்தாமல், நாயகி நாயகனை பின் தொடர்ந்து வலுக்கட்டாயமாக காதலிக்க வைக்கிறார். வாழ்க காதல்.
பிரபு மத்திய மந்திரியாக கனமான பாத்திரத்தில் வருகிறார். கனம் எடையில் மட்டும் தான் பாத்திரத்தில் இல்லை என்பது பெரும் சோகமே. அவருக்கும் வில்லனுக்கும் என்ன தொடர்பு என்று கடைசி வரை புரியாத புதிராக இயக்குநர் கதையை நகர்த்தியிருக்கிறார். ஐஸ்வர்யா அவர் மனைவியாக, கீர்த்தி சுரேஷின் தாயாக ஓர் ஒப்புக்கு சப்பாணி பாத்திரத்தில் வந்து போகிறார். அவருக்கு மேக்கப் சரியில்லை. மிகவும் வயது முதிர்ந்தவராக தெரிகிறார்.
ஊர் முழுவதும் ஆறுச்சாமிக்கு பயந்து பெருமாள்பிச்சை தலைமறைவாகிவிட்டதாக நினைக்க, உண்மையைக் கண்டறிய தன் இரண்டு அண்ணன்களோடு இலங்கையிலிருந்து வருகிறார் பெருமாள்பிச்சையின் இரண்டாவது மனைவியின் மூன்றாவது மகனான முக்கிய வில்லனான பாபி சிம்ஹா, பெயர் இராவண பிச்சை. அவர் தான் ஹீரோ ராம் சாமிக்கு சவால் விடுபவராக வருகிறார். (பெயர் தேர்வெல்லாம் நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா!) அவரின் மூத்த அண்ணன் ஓ.எ.கே. சுந்தர், இரண்டாவது அண்ணன் ஜான் விஜய். சிங்களவர்களா தமிழர்களா என்று புரியாத இலங்கையில் இருந்து இறக்குமதியான இப்படத்தின் வில்லன் பத்திரங்கள் இவர்கள். பாபி சிம்ஹா வில்லனாக நன்றாக ஜொலிக்கிறார். மற்ற பாத்திரங்களை விட வில்லன் பாத்திரம் அவருக்கு நன்றாக செட் ஆகிறது. பிச்சை பெருமாளின் மனைவி பிள்ளைகளுக்குத் தாயாகவும் சோழி உருட்டிப் போட்டு ஆரூடம் சொல்லும் ஜோசியக்காரியாக இருபத்தி எட்டு வருடங்களாக அவர்களை இலங்கையில் இருந்து வழி நடத்தும் சூத்திரதாரியாக வருகிறார். காதுல ஒரு கண்டு பூ!
இசை டிஎஸ்பி. பின்னணி இசையில் கூட சோபிக்கவில்லை. காயத்திரி மந்திரம் பொருள் தெரிந்து தான் பின்னணி இசையில் அதை ஒலிக்க விடுகிறாரா? சண்டை வரும்போதெல்லாம் இது தான் பிஜிஎம். பாடல்கள் வெகு சுமார். படத்தொகுப்பாளர் V.T.விஜயன் உண்மையாக வேலை செய்திருந்தால் நிறைய இடத்தில் கத்திரி போட்டிருக்க வேண்டும். ஒளிப்பதிவாளர் A.வெங்கடேஷ்.
படம் முழுக்க ஒருவரை ஒருவர் பளார் பளார் என்று அடித்துக் கொள்வதால் நாம் திரை அரங்கை விட்டு வெளியே வரும்போது நம் கன்னத்தையே தடவிப் பார்த்துக் கொள்ளத் தோன்றுகிறது. இதில் கீர்த்தி சுரேஷை விக்ரம் அடிப்பதை, பிரபு ஐஸ்வர்யாவை அடிப்பதை எல்லாம் சென்சாரில் கட் செய்திருக்க வேண்டும். ஒரு விதமான வன் கொடுமை இது! இன்னும் நிறைய குறைகளை சொல்லிக் கொண்டே பகலாம். ஆயாசமாக உள்ளது. அதனால் நிறுத்திக் கொள்கிறேன்.
சீறிப் பாயும் புல்லட் டிரெய்னாக படம் எடுக்க எண்ணி ஆனால் அதைத் தாங்கக் கூடிய அளவு சரியான தண்டவாளம் அமைக்கவில்லை ஹரி.