பெற்றால் தான் பிள்ளையா?

ranga1

நேற்று என் உறவினர் திடீர் எனக் காலமானார். ஸ்ரீரங்கத்தில் ஆச்சார அனுஷ்டானங்களுடன் வாழ்ந்தவர். வயது எண்பத்திரெண்டு. அஹோபில மடத்துக்குச் சென்று ஆச்சார்யனை வணங்கிப் பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்து, தானும் சிறிது உண்டு தன் மனைவிக்கு மிச்சத்தைக் கொடுத்து, பின் வீட்டின் பின்புறம் கால்களைக் கழுவப் போன இடத்தில் மயங்கி சரிந்துள்ளார். மருத்துவமனைக்குச் சென்றும் பயனில்லை, cerebral hemorrhage. அவரைப் பொறுத்த வரையில் நல்ல மரணம். கணவன் மனைவி இருவரும் மிகவும் எளிமையானவர்கள். காவேரியில் நீராடுவதும் ரங்கனையும் தாயாரையும் தரிசிப்பதுமே அவர்களின் தினப்படி ஆனந்தங்கள். வந்தாரை அன்புடன் உபசரித்து வாயார வாழ்த்துவது அவர்களின் வாழ்வின் குறிக்கோள்.

ranga2

அனால் நான் இங்கு சொல்ல வந்தது வேறு ஒரு கதை. அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அவரின் மனைவி அவர்கள் குடும்பத்தில் மூத்த மகள். அவர்கள் வீட்டில் ஆறு பெண்கள், ஒரு பிள்ளை. அவரின் கடைசி தங்கைக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. அதில் ஒரு குழந்தைக்கு இருதயத்தில் ஓட்டை. மேலும் அந்தத் தங்கை வேறு பல காரணங்களால் இரு குழந்தைகளையும் பராமரிக்க சிரமப்பட்டதால் எந்தக் குழந்தைக்கு இதயத்தில் ஓட்டையோ அந்தக் குழந்தையை இவர்கள் எடுத்து வந்து வளர்த்தனர். என் உறவினருக்கு அப்பொழுதே நாற்பத்தியெட்டு வயது இருக்கும். இவர்களிடமும் சொந்தப் பெற்றோரிடமுமாக மாறி மாறி இருந்த சிறுவன், ஒரு கட்டத்தில் இவர்களுடனே இருக்க ஆரம்பித்துவிட்டான். இவர்களும் பலத் திருத்தலங்களுக்குச் சென்று பலவாறு வேண்டி அதன் பலனாகவோ என்னவோ மிகுந்த ஆரோக்கிய வாழ்வையே வாழ்ந்து வந்தான். பதின்ம வயது வரும் சமயத்தில் சட்டப்படி இவர்கள் அவனை தத்து எடுத்துக் கொண்டனர். மிகுந்த பாசத்துடனே வளர்த்தனர்.

நான் வெளியூரில் இருந்ததால் அவனுடன் முதலில் ரொம்பப் பழகியதில்லை என்றாலும் பிறகு பல சந்தர்ப்பங்களில் அவனுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. என்னிடம் மிகவும் அன்பு அவனுக்கு. அவன் வேலைக்குச் சேர்ந்தவுடன் இதய அறுவை சிகிச்சையும் நடந்து நல்ல உடல் நலத்தையும் பெற்றான்.

தெரிந்தே நடந்த தத்து. ஆனாலும் அந்தப் பிள்ளைக்கு இதனால் மன உளைச்சல் உண்டு. பெற்றத் தாயிடமும் வளர்த்தத் தாயிடமும் ஒரே அளவு பாசத்தைக் காட்ட வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு. பெற்ற தாய்க்கு ஒரு குற்ற உணர்ச்சி, குழந்தையைக் கொடுத்து விட்டோமே என்று. வளர்த்தத் தாய்க்கு பயம், பிள்ளை நம்மிடம் பாசமில்லாமல் சொந்தத் தாயிடம் போய்விடுவானோ என்று. மகனுக்கோ டைட் ரோப் வாக் இருவரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள சிறு வயது முதலே பெரிய பொறுப்பு. இதன் ஊடே ஒரு சின்ன விசனமும், ஆரோக்கியக் குழந்தையை தத்துக் கொடுக்காமல் தன்னைக் கொடுத்துவிட்டார்களே என்று. வாழ்க்கை தான் எவ்வளவு காம்ப்ளெக்ஸ் பாருங்கள்!

ஆனால் அவன் அனைத்தையும் கடந்து அற்புதமாக உருவாகியுள்ளான். திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்குத் தந்தை. அந்தப் பேரக் குழந்தையைக் காணும் பேறும் என் உறவினருக்குக் கிடைத்தது. இரு பெற்றோர்களையும் சமமாக பாவித்து அன்பு செலுத்தவும் அவன் கற்றுக் கொண்டான்.

ஆனால் அவன் நேற்று என்னையும் என் கணவரையும் பார்த்தவுடன் ஒடி வந்துக் கட்டிக் கொண்டு அவரில்லாமல் இன்று நானில்லை என்று என் உறவினரைக் கைகாட்டி கதறியது அவன் மனத்தில் அவர் மேல் வைத்திருந்த தகப்பன் என்ற பாசத்தைக் காண்பித்தது.

அதையும் விட தன் உயிரைக் காப்பாற்றி, பேணிக் காத்தவர் என்ற நன்றியுணர்ச்சியும் அங்கு நிறைந்திருந்ததைக் கண்டேன். ஆழ் மனத்தில் எத்தனையோ உணர்வுகள், துக்கம் பீறிடும் சமயத்தில் உண்மை வெளிப்படுகிறது.

ஆனால் அவனைப் போல ஒரு மகன் கிடைக்க என் உறவினரும் கொடுத்து வைத்திருந்திருக்க வேண்டும். அவர்களின் நல்ல மனசுக்கேற்ற ஒரு நல்ல மகன், அவர்கள் வயிற்றில் பிறக்கவில்லையேத் தவிர 100% சதவிகிதம் அவர்கள் மகன் அவன்!

ranga3