தற்போது ஒரு படத்திற்கு இருபது கோடி சம்பளம் வாங்கும் இயக்குனர் A.R.முருகதாசின் தயாரிப்பில் வெளி வந்திருக்கும் படம். கூடுதல் தகவல் தன் தம்பியையே ஹீரோவாகவும் நடிக்கவைத்துள்ளார். பெயர் திலீபன். படத்தின் இயக்குனரும் புதுமுகம், பெயர் கின்ஸ்லின். இசை சர சர சாரக் காத்து பேம் ஜிப்ரான். இதைத் தவிர கண்ணுக்குக் குளிர்ச்சியாக அஞ்சலி வந்து போகிறார். சரண்யா, ஜெயப்ரகாஷ் போன்றோர் படத்திற்கு பிராண வாயுவை அளிக்கிறார்கள்.
சுவாரசியமாக படம் ஆரம்பிக்கிறது. இப்போ எல்லாம் திரைப்படங்களில் புது இயக்குனர்கள் யதார்த்தத்தை பதார்த்தமாகப் பரிமாறுவதால் கீழ் தட்டு மக்களின் சூழ்நிலைகளை மிகவும் அழகாகக் காட்சிப் படுத்தியுள்ளார் இயக்குனர். படத்தில் காதல் தொட்டுக்க ஊறுகாய் மாதிரி தான். மெயின் சாப்பாடு ஹீரோ அவனை சுற்றி வரும் பலமான எதிர்ப்புக்களை எப்படி முறியடிக்கிறான் என்பது தான். ஆதலால் அடிதடி அமர்க்களம் நிறைய. சந்தர்ப்பவசத்தால் தவறை தட்டிக்கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு, அதன் பின் பல விஷயங்களில் அது போல செயல் பட்டு, அவனுக்குத் தெரியாமலேயே பல எதிரிகள் உருவாக்கிவிடுகிறான். அவர்கள் அவனை அழிக்க நினைக்கின்றனர். அவர்களை எப்படி எதிர்த்து வெற்றி பெறுகிறான் என்பதே கதை.
எப்பவும் சொல்லப்படும் கதையில் சில புதுமைகளை புகுத்தி வெற்றிப் படமாக தர இயக்குனர் முயன்று இருக்கிறார். பாதி வெற்றி தான் கிடைத்துள்ளது. ஆங்காங்கே கதையில் தொய்வு. கதை நிற்பதே ஹீரோ ஒருவனே அனைவரையும் அடித்து த்வம்சம் செய்யும் ஆற்றல் உடையவன் என்ற அஸ்திவாரத்தில் தான். ஹீரோ அதற்கான பயிற்சி எடுத்துக் கொள்வதாகக் காண்பித்தாலும் கதை அந்த அனுமானத்தின் மேல் உட்காருவதால் படம் ஆட்டம் காண்கிறது.
திலீபன் முதல் படத்திற்கு நன்றாக நடித்துள்ளார். அழகெல்லாம் கிடையாது. ஆனால் ஆணுக்கு எதற்கு அழகு? பாடல் மற்றும் பின்னணி இசை வாகை சூட வா அளவு எல்லாம் இல்லை. இமொஷனால் மேலோட்ராமா கிடையாது. அஞ்சலியின் அம்மாவே அந்த பையன் நல்ல பையன் தான் அவனையே லவ் பண்ணு என்று எந்த சச்பென்சும் வைக்காமல் பச்சை கொடி காட்டிவிடுகிறாள். சின்ன பட்ஜெட் படம். வத்திக்குச்சி ஒரு டைம் பாஸ்.