நாலு வரி நோட்டில் வந்தப் பதிவு.

PadminiShivaji

படம்: தில்லானா மோகனாம்பாள்

பாடல்: நலந்தானா நலந்தானா..

இசை: K.V.மகாதேவன்

பாடியவர்: இசையரசி P. சுசீலா

நாதஸ்வரம்: மதுரை சகோதரர்கள் சேதுராமன், பொன்னுசுவாமி

பாடலாசிரியர்: கவியரசர் கண்ணதாசன்

உணர்ச்சிப் பிழம்பாக ஒரு சம்பவம், பாடலுக்கேற்ற ஒரு சிறந்த தருணம், இதைவிட ஒரு திரைப்படத்தில் இருந்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. அதுவும் நடிகர் திலகமும் நாட்டியப் பேரொளியும் சேர்ந்து நடித்துக் கொடுத்திருக்கும் ஒரு  master piece!  நாதஸ்வர கலைஞர் சிக்கல் ஷண்முக சுந்தரனும் நாட்டிய நங்கை மோகனாம்பாளும் உயிருக்கு உயிராகக் காதலிக்கின்றினர். எப்பவும் போல காதலுக்கு எதிர்ப்பு. இந்த முறை தாயின் வடிவில். வேறு ஒரு போட்டியில் ஷன்முகசுந்தரத்துக்குக் கத்திக் குத்துப் பட்டு, பின் உடல் தேறி வாசிக்கும் முதல் கச்சேரி அது. அந்த நிகழ்ச்சியில் நாட்டியமாட மோகனாம்பாளுக்குத் தாய் விதித்த ஒரு கட்டளை ஷன்முகசுந்தரத்துடன் பேசக் கூடாது என்பது தான். இசை வெள்ளமாகப் பாய்கிறது சிக்கலின் நாதஸ்வரத்தில் இருந்து, ஆனால் அதே சமயம் அடிப்பட்ட கையில் இருந்து இரத்தம் வடிகிறது. துடிதுடிக்கும் மோகனாம்பாள் தாயிடம் கொடுத்த வாக்கினால் காதலனிடம் பேச முடியவில்லை, அதனால் பாட்டினால் நலம் விசாரிக்கிறார்.

நலம் தானா? நலம்தானா?

உடலும் உள்ளமும் நலந்தானா?

நலம்பெற வேண்டும்

நீயென்று நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு

இலைமறை காய் போல் பொருள் கொண்டு

எவரும் அறியாமல் சொல் இன்று.

கண் பட்டதால் உந்தன் மேனியிலே

புண்பட்டதோ அதை நானறியேன்

என் கண் கண் பட்டதால் உந்தன் மேனியிலே

புண்பட்டதோ அதை நானறியேன்.

புண்பட்ட சேதியை கேட்டவுடன்

இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார்?

நடந்ததெல்லாம் மறந்திருப்போம்

நடப்பதையே நினைத்திருப்போம்

கட்டுண்டோம் பொறுத்திருப்போம்

காலம் மாறும் சந்திப்போம்.

இதில் முக்கியமாக காதலியின் அதீத அன்பை இந்த வரிகள் காண்பிக்கின்றன.

கண் பட்டதால் உந்தன் மேனியிலே

புண்பட்டதோ அதை நானறியேன்

என் கண் கண் பட்டதால் உந்தன் மேனியிலே

புண்பட்டதோ அதை நானறியேன்.

புண்பட்ட சேதியை கேட்டவுடன்

இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார்?

முதலில் கவிஞர் பொதுவாக கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ என்று காதலி குறிப்பிடுவதாகக் காட்டி பின் அடுத்த வரியிலேயே என் கண் பட்டதால் என்று சொல்லுவதாக எழுதியிருப்பது காதலியின் காதலுக்குப் பெருமை சேர்க்கிறது. புண் பட்ட சேதியைக் கேட்டவுடன் அவள் துடிப்பதை “இந்தப் பெண்பட்ட பாட்டை யாரறிவார்” என்கிறார். சொல்லமுடியாத அளவு துயரம்!  இசைக்கே முக்கியத்துவம் கொடுத்த அதிக பாடல் வரிகள் இல்லாத பாடல் இது. ஆனால் சொல்ல வந்ததை உணர்ச்சிப் பூர்வமாக சுருங்கச் சொல்லி விடுகிறார் கவியரசர்.

சுசீலாம்மா பாடும்போது என்ன ஒரு பாவம்! இந்தப் பாடலுக்கு உயிர் சேர்ப்பது அவர் குரல் என்றால் மிகையாகாது. அவர் பாடியபின் அந்த குரலுக்கேற்ற நடிப்பைத் தருவதில் பத்மினிக்குச் சிரமமே இருந்திருக்காது.  நாதஸ்வரமும், நாட்டியமும், பாவங்களைக் கொட்டி நடித்த நடிகர்களும் இந்தப் பாடலைக் காலத்தால் அழிக்க முடியாத காவியமாக்கி விட்டனர்.

பாடலின் சுட்டி http://www.youtube.com/watch?feature=endscreen&v=O2_lvaCrSLU&NR=1

 

நன்றி: http://4varinote.wordpress.com/2013/05/11/guest28/