பாஜிராவ் மஸ்தானி – திரை விமர்சனம்

bajirao

ஒவ்வொரு சீனும் செதுக்கி செய்யப்பட்டிருக்கிறது. படத்தில் உள்ள பிரம்மாண்டத்தை சொற்களால் வடிக்க இயலாது. சஞ்சய் லீலா பன்சாலி திரையில் கவிதையை வார்ப்பதில் சமர்த்தர், இந்த மாதிரி ஒரு காதல் கதை அவர் கையில் கிடைத்துவிட்டால் அதை வார்ப்பதில் அவர் எவ்வளவு மெனக்கெட்டிருப்பார் என்பதை ஊகிக்க முடியும்! அதைத் திரையிலும் காணலாம்.

எப்பவுமே முக்கோணக் காதல் கதை மிகவும் சுவாரசியம் மிக்கது. அதில் இக்கதை உண்மை கதையின் பிரதிபலிப்பும் கூட! மதம், கடமை, காதல், மனைவிக்குப் பின் வரும் இன்னொரு துணைவி என்று பல கோணங்களில் கதை கவர்கிறது.

பாஜிராவ் சரித்திர புகழ் வாய்ந்த மராத்தா பேஷ்வா. தன் புத்தி சாதுர்யத்தால் எப்படி இள வயதில் பதவியை அடைகிறார்  என்பதில் படம் ஆரம்பிக்கிறது. ரன்வீர் சிங் பேஷ்வாவாக வாழ்ந்திருக்கார். வீரம், காதல், நேர்மை, கோபம், கனிவு, விரக்தி, அவமானம் என்று பலப் பல உணர்வுகளை இயல்பாகக் காட்டி நடித்துள்ளார். அவர் உடல் மொழி அற்புதம். இப்படம் அவரைச் சுற்றியே அமைகிறது.

அழகும் அறிவும் பண்பும் நிறைந்த அவர் மனைவியாக பிரியங்கா சோப்ரா {காஷி பாய்}. காதல் மனைவியாக, வீராங்கனையாக, இஸ்லாமிய பெண்ணாக தீபிகா படுகோனே {மஸ்தானி}. இருவருமே பிரமாதமாக செய்திருந்தாலும் பிரியங்கா சோப்ரா பாத்திரத்தை நன்குணர்ந்து சற்றே கூடுதல் உழைப்பைக் கொடுத்து அதிகமாக ஸ்கோர் செய்து விடுகிறார். பாரம்பரியத்திலும் கட்டுக் கோப்பாக வாழ்க்கையை நடத்த வேண்டும் என்கிற பிடிவாதத்திலும் எதற்கும் துணியும் ராஜ மாதாவாக தன்வி ஆஸ்மி {ராதா பாய்}. அவர் வில்லித் தனத்தை அதிகமாகக் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மற்ற பாத்திரங்களில் வரும் அனைவருமே சிறந்த தேர்வு.

இசை – உலகத் தரம். பின்னணி இசையும் சரி {சஞ்சித் பல்ஹாரா}, பாடல்களும் சரி அருமை. இயக்குநரே இசை அமைப்பாளரும், அதனால் அவருக்குத் தேவையானதை அவரால் கொண்டு வர முடிந்திருக்கிறது. அதே போல ஒளிப்பதிவும் மிக நன்று. எடிடிங் தான் கொஞ்சம் சொதப்பல். கத்திரி போட்டு இன்னும் படத்தை விறுவிறுப்பாக்கியிருக்கலாம்.

பதினைந்து வருட உழைப்பு இந்தப் படம் என்று தெரிகிறது. ஆடை அலங்காரத்தில் இருந்து செட் வடிவமைப்பு, {அதுவும் அந்தக் கண்ணாடி மாளிகை} சண்டை காட்சிகளின் நேர்த்தி, CG அனைத்திலும் அந்த பதினைந்து வருட உழைப்புப் பிரதிபலிக்கிறது. நடனங்கள் அனைத்தும் மிகவும் அழகு! பண்டிட் பிர்ஜு மகராஜ் இயக்கியுள்ள தீபிகா படுகோனே ஆடும் ஒரு நடனம் மிகவும் அருமை. அதே போல ரன்வீர் வெற்றிக் களிப்பில் ஆடும் ஒரு நடனமும்!

பேஷ்வா பாஜி ராவுக்கு இஸ்லாமிய துணைவி உண்டு என்பது சரித்திரம். ஆனால் அந்தக் கருவை மட்டும் வைத்துத் திரைக் கதையை எழுதியிருக்கும் பிரகாஷ் கபாடியாவின் கற்பனைத் திறம் படத்தை உயிரோட்டம் உள்ளதாக ஆக்கியுள்ளது. வசனங்கள் நறுக்குத் தெறித்தாற்போல் கச்சிதம்! பொருள் செறிந்தவையாகவும் இருப்பது படத்துக்குப் பலம் சேர்க்கின்றது. காதல், பாசம், வன்மம், சூழ்ச்சி இவை எல்லாம் ஒரு அரசாங்கத்தில்/குடும்பத்தில் எப்படி விளையாடுகிறது என்பதை குழப்பமில்லாத திரைக்கதையின் மூலம் வைத்து படத்தை வெற்றி பெற வைத்திருக்கிறார்.

சரித்திரக் கதைகளையும், காதல் கதைகளையும் பார்ப்பதில் விருப்பம் உள்ளவர்களுக்கு இந்தப் படம் ஒரு விருந்து, தவற விடாதீர்கள் :-} நான் படத்தை சப்டைட்டிலுடன் பார்த்தேன்.

bajirao1