ஆளவந்தார்
காஞ்சியில் இருந்து திரும்பித் திருவரங்கம் சென்ற ஆளவந்தார் இராமானுஜர் நினைவாகவே இருந்தார். தனக்குப் பிறகு வைணவ தத்துவங்களை நிலை நிறுத்த யாருமில்லையே என்ற கவலை அவரை வாட்டியது. இராமானுஜரே அதற்குத் தகுதியானவர் என்று ஒரு நாள் மனத்தில் பொறி தட்டியது. ஆனால் இராமானுஜரோ யாதவ பிரகாசருடன் இருக்கிறாரே என்று இவர் நினைக்கும் நேரத்தில் அவர்கள் இருவரும் பிரியும் தருணமும் வந்தது.
மறுபடியும் ஒரு முறை யாதவர் சொன்ன வேதாந்த விளக்கத்தை இராமானுஜர் திருத்த, கோபம் கொண்ட யாதவர் இனி அவரின் சீடராக இருக்க வேண்டாம் என்று அவரை அனுப்பி விட்டார். இதனால் மனம் வருந்தினாலும் வீட்டில் இருந்தபடி வேதங்களையும் மற்ற சாஸ்திரங்களையும் பயின்று வந்தார் இராமானுஜர்.
பின் திருக்கச்சி நம்பிகளிடம் மாணாக்கராகச் சேர விருப்பம் தெரிவித்தார் இராமானுஜர். திருக்கச்சி நம்பிகளோ, “நீயோ பிராமணன், கல்வியில் சிறந்த மாமேதை, நானோ படிப்பறிவு இல்லாததால் தான் பெருமாளுக்குத் தொண்டு மட்டும் செய்து வருகிறேன், வைசியக் குலத்தில் பிறந்தவன், நான் எப்படி உனக்கு குருவாக முடியும்” என்று கேட்டார்.
ஆனால் இராமானுஜரோ, “தாங்களே உண்மையானக் கல்விமான். ஆண்டவன் ஒருவனே மெய்பொருள். படிப்பின் பயன் இறைவனை அறிவதே ஆகும். அந்த நிலையை நீங்கள் அடைந்து விட்டீர்கள், அதனால் நீங்களே எனக்குக் குருவாகத் தகுந்தவர், என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று பணிவுடன் கூறி அவரை விழுந்து வணங்கினார்.
திருக்கச்சி நம்பிகள் இராமானுஜரின் மொழிகளைக் கேட்டு மெய் சிலிர்த்துப் போனார். இதே சமயத்தில் திருவரங்கத்தில் ஆளவந்தாரின் உடல் நலம் குன்ற ஆரம்பித்தது. அவர் உடனே இராமானுஜரை அழைத்து வரச் சொல்லிக் காஞ்சிக்கு பெரிய நம்பியை அனுப்பினார்.
பெரிய நம்பி காஞ்சி வந்து சேர நான்கு நாட்கள் ஆயின, பின் இராமானுஜரிடம் வந்த விவரம் சொல்லி அவரை அழைத்துச் செல்ல இன்னுமொரு நான்கு நாட்கள் ஆயின. திருமடத்திற்குப் போய் சேர்ந்த போது ஆளவந்தார் தன் பூத உடலை விட்டிருந்தார். இராமானுஜரும் பெரிய நம்பியும் பெரும் துக்கத்தில் ஆழ்ந்தனர். பூத உடலை வணங்க அருகில் சென்றபோது ஆளவந்தாரின் மூன்று விரல்கள் மடங்கியிருப்பதை இராமானுஜர் கவனித்தார்.
இராமானுஜர், “இப்பெருமானின் மூன்று விரல்கள் எப்பொழுதுமே மடங்கி இருக்குமா” என்று கேட்டார். அதற்கு அவரின் சீடர்கள் “இது புதிதாக உள்ளது, இதற்கு முன் அவர் விரல்கள் மடங்கி இருக்கவில்லை” என்றனர்.
இப்பதிலைக் கேட்டு இராமானுஜர் பாடத் தொடங்கினார், அதன் சாராம்சம்:
‘நான் வைணவ சமயத்தில் நிலைத்து நிற்பேன். அஞ்ஞான இருளில் மயங்கிக் கிடப்போருக்கு தமிழ் வேதத்தைக் கற்பித்து ஸ்ரீமன் நாராயணனின் திருவடிக் கமலங்களில் அடைக்கலம் புகுமாறும் செய்து அவர்களை உய்விப்பேன்’
இப்பாடலை பாடியதும் ஆளவந்தாரின் ஒரு விரல் நிமிர்ந்தது.
‘உலக நன்மைக்காக எல்லா பொருள்களையும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்து, அனைத்து நன்மைகளையும் உண்மைகளையும் வெளிப்படுத்தும் தத்துவார்த்ததை விளக்கவல்ல தெளிவுரையை செய்யக் கடவேன்’ என்று பொருள் பட இன்னொரு பாடல் பாடினர்.
இப்பாடலைப் பாடியதும் அவரின் இரண்டாவது விரலும் நிமிர்ந்தது.
‘உயிர், இறைவன், உலகம் ஆகிய இம்மூன்றின் தன்மை பற்றி உலகம் உய்யும் வகையில் முனிவர்களில் சிறந்தவரான பராசரர் ஸ்ரீ விஷ்ணு புராணம் இயற்றியுள்ளார். அவர் செய்த அரிய செயலுக்கு நன்றி கூறும் வகையில் ஒரு வைணவப் பெரியவருக்கு அம்முனிவரின் திருநாமத்தை வைப்பேன்’ என்று பொருள் படப் பாட,
ஆளவந்தாரின் மூன்றாம் விரலும் நிமிர்ந்தது.
ஆளவந்தாரின் திருக்கை விரல்கள் மூன்றும் நிமிர்ந்ததால் அவர் இடத்துக்கு வரத் தகுதியானவர் இராமானுஜரே என்று அங்கு கூடியிருந்தவர்கள் முடிவு செயதனர். ஆனால் இராமானுஜருக்கு அங்கு தங்க விருப்பம் இல்லை. ஆளவந்தாரின் திரு உரையை கேட்க இனி முடியாததால் அங்கு இருந்து என்ன பயன் என்று எண்ணி காஞ்சிக்கேத் திரும்பி விட்டார்.
திருக்கச்சி நம்பியிடம் ஆறுதல் பெறுதல்
திரும்பி வந்து திருக்கச்சி நம்பிகளிடம் மட்டுமே எல்லா விவரங்களையும் கூறினார். மனைவியுடன் சரியாகப் பேசாமல் இருக்க ஆரம்பித்தார். தனிமையையே விரும்பினார். ஆளவந்தார் மறைவுக்கு ஆறு மாதக் காலம் முன்பாக அவர் தன் தாயையும் இழந்ததனால் அவர் மனைவி தஞ்சம்மாளுக்கு மாமியார் துணையும் இல்லாமல் கணவரும் முகம் கொடுத்தும் பேசாததால் மிகுந்த மன வேதனை அடைந்தார்.
இராமானுஜரின் தனிமைப் போக்கைக் கண்டு திருக்கச்சி நம்பிகளும் அவருக்கு அறிவுரைகள் வழங்கினார். மன வருத்தத்திற்கும் சஞ்சலத்திற்கும் இடம் கொடுக்க வேண்டாம் என்று கூறினார். இராமானுஜருக்கு அவரை வீட்டிற்கு அழைத்து அமுது படைத்து அவர் உண்ட எச்சிலை சாப்பிட்டால் மன நிம்மதி கிடைக்கும் என்று எண்ணி அவரை உணவு உண்ண அழைத்தார். மனைவியும் உணவு சமைத்து வைத்திருந்தார்.
இவரை அழைக்க அவர் மடத்துக்குப் போன சமயத்தில் வேறு வழியாக திருக்கச்சி நம்பிகள் இராமானுஜர் இல்லம் வந்தடைந்தார். அவருக்கு வேறு சில வேலைகள் இருந்ததினால் விரைவில் உணவு உண்டு செல்ல வேண்டும் என்று கூறினார். இராமானுஜர் மனைவி தஞ்சம்மாள் அவர் வளர்ந்தக் குடும்ப ஆசார வழக்கப்படி அவரை வீட்டின் உள்ளே அழைக்காமல் ரேழியிலேயே இலை போட்டு உணவு பரிமாறி, அவர் உண்ட பிறகு எச்சிலெடுத்து சாணி போட்டு மெழுகி அவரும் குளித்து விட்டு வந்துவிட்டார்.
மடத்தில் இருந்து திரும்பிய இராமானுஜர் மனைவி செய்த காரியத்தை அறிந்து மிகுந்த கோபமும் வருத்தமும் கொண்டார். தான் குருவாக மதித்த ஒருவரை இவ்வாறு சாதி வித்தியாசம் பார்த்து நடத்திய தன் மனைவியின் மேல் கோபம் கொண்டு இன்னும் தனிமையை நாட ஆரம்பித்தார்.
இன்னொரு சமயம் பிராமணர் அல்லாத ஒருவர் வந்து உண்ண உணவு கேட்ட பொழுது வீட்டில் இன்னும் சமைக்கவில்லை என்று சொல்லி அனுப்பி விட்டார் தஞ்சம்மாள். ஆனால் இராமானுஜர் சமையல் அறையில் சென்று பார்த்த பொழுது நிறைய உணவு இருந்தது கண்டு அதை எடுத்து வந்து கேட்டவருக்கு இவரே கொடுத்தார். மனைவியின் இச்செயல் இவருக்கு ஏற்புடையதாக இல்லை.
ஆளவந்தார் இறைவனடி சேர்ந்த பின் மடாதிபதியாக திருவரங்கர் என்பவர் நியமிக்கப் பட்டார். அவரும் மிகவும் நல்ல முறையில் எல்லாராலும் மதிக்கப் பட்டவர். அவர் தன் சீடர்கள் அனைவரையும் அழைத்து, ஆளவந்தார் விருப்பபடி இராமானுஜரை அழைத்து வரவேண்டும் என்ற முடிவை எடுத்து, மறுபடியும் பெரிய நம்பியை காஞ்சிக்கு அனுப்பினார்.
ஆனால் இராமானுஜர் திருக்கச்சி நம்பிகளுடனேயே இருப்பதை தான் விரும்புகிறார் என்பதை உணர்ந்து திருவரங்கர், பெரிய நம்பியை, காஞ்சியிலே இருந்து அவருக்குத் தமிழ் வேதத்தை ஓதுவித்து மேதை ஆக்குங்கள், பின்னர் அவர் திருவரங்கத்திற்கு வருவதற்கு சிறிது காலமாகலாம். வற்புறுத்த வேண்டாம், தானே மனது மாறி வரட்டும் என்று அறிவுறுத்தி அனுப்பினார்.
பெரிய நம்பியைத் தஞ்சம் அடைதல்
இதே நேரத்தில் இராமானுஜரும் வரதராஜப் பெருமாளிடம் இருந்து திருக்கச்சி நம்பிகள் மூலம் சில சந்தேகங்களுக்கு விடை கிடைத்தபடியால்,
(அவை-
- திருமாலே முழு முதற் கடவுள்.
- ஜீவாத்மக்களில் இருந்து பரமாத்மா வேறுபட்டவன். உயிர்களிலும் ஜடப் பொருள்களிலும் ஸ்தூல/சூட்சும சரீரமாக பரமனே விரவி நிற்கிறான்.
- ஆண்டவனை அடையும் முக்தி நெறி சரணாகதியாகும்.
- அந்திம காலத்தில் பரமனை சிந்தையில் நிறுத்த வேண்டும் என்பது அவசியமில்லை
- உடலில் வாழ்ந்த காலத்தில் (பரமன் திருவடிகளில்) பூரண சரணாகதியை கடைபிடித்த ஆன்மாவானது உடலை விட்டுப் பிரிந்த பின்னர் முக்தி அடைகிறது.
- பெரிய நம்பியை ஆச்சாரியனாக நினைத்து நடப்பாயாக.)
மிகவும் மகிழ்ந்து அந்நிலையில் திருவரங்கம் செல்ல முடிவு செய்து புறப்பட்டார். திருவரங்கத்தில் இருந்து புறப்பட்டு வந்த பெரிய நம்பியும், காஞ்சியில் இருந்து புறப்பட்ட இராமானுஜரும் மதுராந்தகம் ஏரி காத்த இராமன் கோவிலில் சந்தித்தனர். இருவர் உள்ளத்திலும் இந்த எதேச்சையான சந்திப்பில் பெரு மகிழ்ச்சி ஏற்பட்டது. அங்கேயே பெரிய நம்பியின் சீடனாக இராமானுஜர் தீட்சைப் பெற்றார். பின் அவரையும் அவர் உடன் வந்த அவர் மனைவியையும் காஞ்சிக்கு அழைத்துச் சென்று தன் வீட்டின் மாடியிலேயே தங்க வைத்து அவர்கள் வீட்டு நிர்வாக பொறுப்பு அனைத்தையும் அவரே ஏற்றுக் கொண்டார். இராமனுஜருக்கு பெரிய நம்பி பஞ்ச சம்ஸ்காரம் (சங்கு சக்கர இலச்சினை ஓமத்தீயின் மூலம் இடது தோளிலும் வலது தோளிலும் ஆச்சாரியன் பொருத்துவது) செய்வித்ததும், பெரிய திருமந்திரத்தை உபதேசித்ததும் அவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாகும்.
நாள் தோறும் தமிழ் மறையாகிய திவ்ய பிரபந்தத்தையும் (ஆழ்வார்கள் அருளிச் செய்தல்களையும்), பிரம்ம சூத்திரங்களையும் பெரிய நம்பியிடம் கற்றுத் தேர்ந்தார் இராமானுஜர். ஆறு மாத காலம் இவ்வாறு ஓடியது. ஒரு நாள் தண்ணீர் பிடிக்கும் இடத்தில் குரு பத்தினியும் தஞ்சம்மாளும் ஒரே சமயத்தில் நீர் பிடிக்கச் செல்லுகையில் குரு பத்தினியின் குடத்தில் இருந்த நீர் தஞ்சம்மாளின் குடத்தில் சிந்தி விட்டது. அதனால் கோபம் கொண்ட தஞ்சம்மாள், உன் தந்தையை விட என் தந்தை உயர்ந்த குலம். உன்னால் என் ஆசாரம் கெட்டுவிட்டது என்று தகாத சொற்களினால் குரு பத்தினியை ஏசி விட்டார். இத்தனைக்கும் அவர் தஞ்சம்மாளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இதனால் இல்லம் திரும்பிய பின் வருத்தத்தில் குரு பத்தினி அழுது கொண்டிருப்பதைக் கண்டு, பெரிய நம்பி விஷயம் என்னவென்று அறிந்து, உடனே மனைவியை அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டை விட்டகன்று திருவரங்கம் திரும்பினார்.
இவை ஒன்றும் அறியாத இராமானுஜர் இல்லம் வந்தபோது தன் குருவும் குரு பத்தினியும் இல்லாதது கண்டு திகைத்து மனைவியின் வாய் மூலம் நடந்ததை தெரிந்து கொள்கிறார். அதுவும் மனைவி தான் செய்தது சரி என்று பேசியது அவரின் ஆத்திரத்தைப் பன்மடங்காக்கியது. உன் முகத்தில் விழிப்பதே பாவம் என்று கூறி அவர் குருவுக்காக வாங்கி வந்த பழம் காய் இவைகளை எடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்று வரதனிடம் சமர்ப்பித்தார். திரும்பி வரும்போது பசியால் வாடும் ஓர் ஏழை பிராமணரைப் பார்த்தார். அவரிடம் என்னுடன் என் இல்லத்துக்கு வாருங்கள் உணவு தருகிறேன் என்று கூறினார். அதற்கு அவரோ உங்கள் இல்லத்தில் இருந்து தான் வருகிறேன், உங்கள் மனைவி ஏதோ கோபத்தில் இருக்கிறார் போலும் உணவில்லை என்று திட்டி அனுப்பிவிட்டார் என்றார்.
துறவு
உடனே இராமானுஜர் அவரை கடைத்தெருவுக்கு அழைத்துச் சென்று வெற்றிலை பாக்குப் பழம் இவற்றை வாங்கிக் கொடுத்துத் தன் கைப்பட ஒரு கடிதமும் எழுதிக் கொடுத்து இப்போ திரும்பவும் வீட்டிற்குச் சென்று மனைவியின் பிறந்த வீட்டில் இருந்து வருவதாகச் சொல்லி கொடுங்கள் என்றார்.
அவ்வாறே அந்தப் பிராமணரும் செய்ய அவருக்குப் பெரிய வரவேற்பும் உபசரிப்பும் தஞ்சம்மாளிடம் இருந்து கிடைத்தது. அப்போது ஒன்றும் தெரியாதது போல இராமானுஜரும் வீட்டிற்குள் நுழைய தஞ்சம்மாள் அந்தப் பிராமணர் கொண்டு வந்தக் கடிதத்தைக் காட்டுகிறார். அதில் தஞ்சம்மாளின் தந்தை தன் இளைய மகளுக்குத் திருமணம் நிச்சயம் ஆகியிருப்பதால் மகளை உதவிக்கு அனுப்புமாறு தன் மாப்பிள்ளைக்கு எழுதியது போல இருந்தது. தங்களால் வர முடியாவிட்டாலும் மகளை அனுப்புமாறு அக்கடிதத்தில் எழுதியிருந்ததைப் பார்த்துத் தஞ்சம்மாள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உணவை உட்கொண்டு கணவனிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு தன் தாய் வீடு புறப்பட்டாள்.
இராமானுஜர் நேராக வரதராஜன் சந்நிதிக்குச் சென்று நெடுஞ்சாண்கிடையாக அவர் முன் விழுந்து, எனக்குத் துணையாக இருக்க வேண்டியவள் என் கருத்துக்கு மாறாகவே இருக்கிறாள். எனவே என்னை ஆட்கொண்டு தங்கள் திருவடிக்கு ஆளாக்கிக் கொள்ள வேண்டும் என்று இறைஞ்சினார். பின் பெருமாளைப் பிரார்த்தித்துக் கொண்டு காஷாயத்தைத் தரித்துக் கொண்டார். திரி தண்டத்தைக் கையில் ஏந்திக் கொண்டார்.
இறைவனும் அசரீரியாக “சந்நியாசம் மேற்கொண்டு கீழண்டை கோபுர வாயில் மடத்தில் தங்குவாயாக” என்று அவர் காதில் ஒலித்து அருள் பாலித்தார். இளம் சூரியனைப் போல ஒளி திகழக் காட்சி அளித்த இராமானுஜரின் திருக்கோலத்தைக் குளக் கரையில் முதலில் கண்ட திருக்கச்சி நம்பிகள் அவரை, துறவியருள் சிறந்தவர் இவரே என்ற பொருளில் எதிராஜரே என்று அழைத்தார். அன்று முதல் அவர் இராமானுஜ முனி அல்லது எதிராஜர் என்று அழைக்கப் படலானார்.
இராமானுஜர் மனைவியை வஞ்சகமாகப் பிறந்தகம் அனுப்பிவிட்டு துறவறம் மேற்கொண்ட முறை சரியென்றும் சரி அல்ல என்றும் பல கருத்துகள் உள்ளன. அதற்குள் நாம் இப்பொழுது போகவில்லை. ஞானம் முதிர்ந்த நிலையில் அவர் துறவறம் மேற்கொண்டது அவரின் பிறவிப் பயனே.
அவர் துறவறம் மேற்கொண்டதும் திருவரங்க மடாதிபதி பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவரின் முதல் சீடரானது அவருக்கு மருமகன் முறையாகும் தாசரதி எனப்படும் முதலியாண்டான். அவருடைய சீடர்களில் சிறப்பாக குறிப்பிட வேண்டியவர்கள் கூரத்தாழ்வார் ஆவார்.
காஞ்சிக்கு அருகில் கூரம் என்றொரு கிராமம். அதன் அதிபதி கூரத்தாழ்வார். மிகப் பெரிய செல்வந்தர். அவரது மனைவி ஆண்டாளும் கூரத்தாழ்வாரும் மிகவும் நன்கு படித்தவர்கள். மேதைகள், வள்ளல் தன்மை மிக்கவர்கள். சிறந்த பக்திமான்கள். கூரேசன் நுண்ணிய நினைவாற்றல் கொண்டவர். அவர்கள் காஞ்சிக்கு வரதராஜப் பெருமாளை சேவிக்க வந்தபொழுது இராமானுஜர் துறவியானது கேள்விப்பட்டு அவரின் மடத்துக்குச் சென்று வணங்கினார்கள். அவரால் ஆட்கொள்ளப் பட்டு தங்கள் செல்வம் அனைத்தையும் தான தர்மம் செய்து விட்டு அவரின் இரண்டாவது சீடரானார் கூரத்தாழ்வார். இவ்விரு சீடர்களையும் தனது திரி தண்டமாகவும், பவித்திரமாகவும் இறுதிவரை பாவித்து வந்தார் ஸ்ரீ இராமானுஜர்.
நமது திண்ணை – ஜூலை மாத இணைய இதழில் வெளியானது இக்கட்டுரை.