தேவி – திரை விமர்சனம்

devi

படத்தின் ஆரம்பமே ரொம்பப் பழைய பல்லவி தான். மாடர்ன் ஆன பெண் தனக்கு மனைவியாக வர வேண்டும் என்று மும்பையில் வேலை செய்யும் ஹீரோ பிரபுதேவா விரும்புகிறார். ஆனால் அப்பாவின் மேலுள்ள பயத்தால் அவர் பார்த்து வைக்கும் கிராமத்துப் பெண்ணை மணந்து மும்பை திரும்புகிறார். அதன் பின் மும்பையில் அவர்கள் தங்கும் வீட்டில் உலாவும் பேய் ஹீரோயின் தமன்னா மீது ஏற ஒரு திகில்/நகைச்சுவை பேய் கதையைத் தர முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் AL விஜய்!

சவசவ என்று போகிறது படம். பேய் என்கிற பயமும் இல்லை, சுவாரசியமான திரைக்கதையும் இல்லை. என்ன ஒன்று, குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கலாம், அது மட்டுமே பிளஸ் பாயின்ட்.  பிரபு தேவாவுக்கு வயது தெரிகிறது. புதிதாகத் திருமணம் ஆன ஜோடியாக தமன்னா பிரபுதேவா செட் ஆகவில்லை. பிராமதமாக நடனம் ஆடினாலும் முக பாவங்களில் சோகத்தையோ, அதிர்ச்சியையோ,  இயலாமையையோ பிரபுதேவா பெரிதாகக் காண்பிப்பதில்லை.

தமன்னா நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார். பை போலார் டிசார்டர் மாதிரி ஒரு பாத்திரம் அவருக்கு. இரு வேறு பாத்திரங்களில் வித்தியாசம் காட்டி நன்கு நடித்துள்ளார். நடனமும் லாகவமாக வருகிறது. இதில் இன்னொரு முக்கிய கதாபாத்திரம் சினிமா ஹீரோவாக வரும் வட இந்திய நடிகர் சோனு சூட். கதையும் மும்பையில் நடக்கிறது. மும்மொழியிலும் {தமிழ், தெலுங்கு, இந்தி} ஒரே சமயத்தில் எடுத்திருக்கிறார்கள். அதனால் நமக்கு ஒரு தமிழ் படம் பார்க்கிற பீலே இல்லை. பாடல்கள் ரொம்ப ரொம்ப சுமார் ரகம். பல இடங்களில் வசனத்துடன் லிப் சின்க் ஆகவில்லை.

RJ பாலாஜிக்கு இந்தப் படத்தில் சிறிய பாத்திரம், அதிலும் அவர் சோபிக்கவில்லை. பிரபு தேவாவையும் இன்னும் நன்றாக நடிக்க வைத்திருக்கலாம். பாத்திரங்களில் நடிகர்கள் பொருந்தாதது இயக்குநர் தவறு. திரும்பத் திரும்ப ஒரே மாதிரி காட்சி அமைப்பும் சலிப்பை ஏற்படுத்துகிறது!

எல்லா பேய்களுமே ஏதாவது ஒரு நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவே ஒருவர் உடம்பை ஆக்கிரமித்துக் கொள்கிறது என்பது தான் தொன்றுதொட்டு சொல்லப்படும் காரணம். அதே தான் இக்கதையிலும். ஆசை நிறைவேறியதும் உடலை விட்டு அகன்றதா இல்லையா என்பதை வெள்ளித் திரையில் காண்க.

devi1