96 – திரை விமர்சனம்

இன்னுமொரு பள்ளிப் பருவக் காதல் கதை என்று நகர்ந்து போக விடாமல் கட்டிப் போடுவது பலருக்கும் இது வாழ்க்கையில் நடந்திருப்பதால் எப்படி முடியப்போகிறது இந்தக் கதை என்று எதிர்பார்க்கும் ஆர்வம் தான். மேலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பிற்கான காரணம் விஜய் சேதுபதி த்ரிஷா கூட்டணி. ஆனால் எழுதி இயக்கியிருக்கும் C.பிரேம்குமார் முழுவதாக இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. சில இடங்களில் அற்புதமாக திரைக் கதையைக் கையாண்டிருக்கிறார். சில இடங்களில் தொய்வு. அவர் மனத்தில் கற்பனை செய்ததை உருவாக்கித் தருவதில் சற்று ஏறக்குறைய ஆகிவிட்டது. அவர் வாழ்க்கையில் நடந்ததோ நெருக்கமானவருக்கு நடந்த கதையாகவோ இருக்க சாத்தியமுள்ளது.

இது அந்தக் கால சாந்தி கிருஷ்ணா சுரேஷ் நடித்த பன்னீர் புஷ்பங்கள் மாதிரி ஓர் அழகான பள்ளிப் பருவக் காதல் கதை. ஆனால் பெற்றோர்களோ ஜாதியோ இதில் வில்லன் இல்லை, சந்தர்ப்ப சூழ்நிலை தான் வில்லன். தொண்ணுறுகளில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு இந்தப் படம் ரொம்பப் பிடிக்கும்/அல்லது ஆத்மார்த்தமாகப் புரியக் கூடும். மற்றவர்களுக்கு அந்த அளவு இந்தப் படம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.

விஜய் சேதுபதி புகைப்படம் எடுப்பதைத் தொழிலாகக் கொண்டவர், தனியாக சுற்றுபவர் என்பது படத்தின் முதல் சில நிமிடங்களில் புரிந்துவிடுகிறது. அவர் வாழ்க்கை ஏன் அம்மாதிரி ஆனது என்பதில் திரைக் கதை விரிகிறது. அவர் எதேச்சையாகப் படித்தப் பள்ளியிருக்கும் தஞ்சை வரும்போது அதை சுற்றிப் பார்க்கையில் பழைய நினைவுகளில் மூழ்கி அதன் பின் கதை பின்னோக்கியும் முன்னோக்கியும் விரிகிறது. நாயகியின் பெயர் ஜானகி (பெற்றோர்களுக்கு S.ஜானகி பிடிக்கும் என்பதால்), நாயகன் பெயர் இராமச்சந்திரன். பெயர் பொருத்தம் இருந்தும் இணையாதக் காதல் 😦

இளமை காலத்து விசேவாக எம்.எஸ்.பாஸ்கர் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்துள்ளார். பெரிய பாத்திரம். மிகவும் சுமாராக நடித்துள்ளார். உணர்ச்சிகளை சரியாக காட்டவில்லை. இளம் வயது த்ரிஷாவாக கௌரி G.கிஷன் பிச்சு உதறியிருக்கார். இவர்கள் இருவரும் தான் முதல் பாதி படத்தை ஆக்கிரமிக்கிறார்கள். பள்ளிக் காட்சிகள் நன்றாக இருந்தாலும் மிகவும் நீளமாக உள்ளது. படம் இரண்டு மணி நாற்பது நிமிடங்கள். நிச்சயமாக அரை மணி நேரம் படத்தின் முன் பாதியிலும் கொஞ்சம் பின் பத்தியிலும் கத்திரித்து இருந்தால் இன்னும் அழகான காவியமாக படம் வந்திருக்கும். படமே இந்த இளைஞர்களுடன் நின்றிருந்தால் இந்த அளவு அவர்கள் கட்டப்படுவதற்கான நியாயம் உள்ளது. ஆனால் படத்தின் பின் பாதியில் த்ரிஷாவும் விஜய் சேதுபதியும் சந்தித்து அவர்கள் சில மணி நேரம் மட்டுமே சேர்ந்து இருக்கும் வாய்ப்பின் போது அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்களும், 22வருடங்கள் பிரிந்து பின் பார்த்துக் கொண்டும், உண்மைகளை தெரிந்து கொண்டும், அதன் தாக்கத்தைப் பற்றியதும் தான் என்கிறபோது முதல் பாதியை நிறைய குறைத்திருக்கலாமே!

எஸ்.ஜானகி, இளையராஜா இல்லாமல் தொண்ணூறுகளில் வாழ்ந்த தமிழர்களின் இளமைப் பருவம் இல்லை. அதை நல்ல முறையில் பயன்படுத்தியுள்ளார் எழுதி இயக்கியுள்ள பிரேம்குமார். பள்ளித் தோழர்களாக வரும் தேவதர்ஷினி, பகவதி பெருமாள் இருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். பள்ளி காவல் காரராக ஜனகராஜை ஒரு சில நிமிடங்களே எனினும் பல வருடங்களுக்குப் பிறகு பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. கவிதாலயா கிருஷ்ணன் பாத்திரம் நல்ல ஒரு சேர்க்கை, விசே அழகாக அவர் உதவியதற்கு ஒரு நன்றி 🙂

த்ரிஷாவின் நிலை எப்பவும் போல் ஒரு திருமணமான பெண்ணுக்கு ஏற்படும் தர்மசங்கடமான நிலை.  பெரும்பாலான சூழ்நிலைகளில் பெண் காதலுனுக்காக காத்திருக்க முடியாமல் சமூகமும், குடும்பமும் நிர்பந்தத்தை ஏற்படுத்தும். உயிர் காதல் எனினும் இன்னொருவனுக்குக் கழுத்தை நீட்ட வேண்டிய கட்டாயம். ஆனாலும் அதில் முடிந்த வரை உண்மையாக இருப்பவராக வருகிறார் த்ரிஷா. மிகவும் நன்றாக நடித்திருந்தாலும் அவர் நிலையில் உள்ள துன்பங்களின் வெவ்வேறு பரிணாமத்தை அவர் நடிப்பில் காட்டவில்லை. நடிக்க நிறைய வாய்ப்பிருந்தும் அபியும் நானும் படத்தில் கோட்டை விட்டது போல் இதிலும் அவ்வாறே. அது இயக்குநரின் பாத்திரப் படைப்பில் உள்ள தவறா என்று தெரியவில்லை. சின்மயியின் டப்பிங்கிற்கு தனி மென்ஷன். அருமையாகக் குரல் கொடுத்திருக்கிறார்.

விஜய் சேதுபதி அவர் பாத்திரத்தையும் படத்தையுமே தாங்கி உயரத்துக்கு எடுத்து செல்கிறார். விஜய் சேதுபதி மட்டும் இல்லை என்றால் இந்த படத்தின் திரைக்கதை, ஆக்கத்துக்கு இது அட்டர் ப்ளாப்பாகி இருக்கும். நாயகன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை.  காதலியை நினைத்து உருகி சூப் பாயாக உள்ளார். அதனால் அவருக்கு அனுதாபம் தானாக மக்களிடமிருந்து வந்துவிடும். ஆனால் அதையும் தாண்டி அவர் மேல் நமக்கு ஈடுபாடு கொள்ள வைப்பது அவரின் முப்பரிமாண நடிப்பு! எல்லா படங்களிலுமே ஒரே மாதிரி நடிப்பது போலத் தோன்றும் ஆனால் எப்படியாவது மாற்றத்தைக் கொண்டு வந்து எந்த ஒரு பாத்திரத்துக்கும் அதிக மதிப்பைப் பெற்று தந்து விடுகிறார் விஜய் சேதுபதி. த்ரிஷா விசே பகுதிகளில் எளிதாக த்ரிஷாவை மிஞ்சி நடிக்கிறார் விசே.

இளைய ராஜா இசை படம் முழுதும் வியாபித்து இருப்பதால் கோவிந்த் மேனன் இசை அவ்வளவாக கவனிக்கப்படலை. இசை பின்னணி & பாடல்கள் சுமார் ரகம் தான். படத்தொகுப்பில் கோவிந்தராஜ் சொதப்பி இருக்கார். இன்னும் நன்றாக செதுக்கி இருக்கலாம். ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் நன்றாக செய்திருக்கிறார். தொண்ணூறுகளின் காட்சிகளும் தற்போதைய காட்சிகளும் சரியான முறையில் காட்டப்படுவதற்குக் கலை பொறுப்பாளர் பாராட்டைப் பெறுகிறார்.

புகைப்படக் கலைஞன் என்பதிலேயே அவர் தருணங்களை மனத்தில் பதிய வைத்து வாழ்பவர் என்கிற குறியீட்டைக் காண்கிறோம். அதே மாதிரி பெட்டியில் சேமித்து வைத்தப் பழைய நினைவுகளின் பொக்கிஷங்களை காதலியிடம் பகிரும்போது காதலின் அழுத்தத்தைக் காண வைக்கிறார் இயக்குநர். பகுதிகளில் அருமையாகவும் பகுதிகளில் சுமாராகவும் உள்ள ஒரு படம். விஜய் சேதுபதி த்ரிஷாவிற்காக பார்க்கலாம். Nostalgia படம்.

தூங்காவனம் – திரை விமர்சனம்

Thoongavanam-poster2

படத்தின் டிரெயிலரிலேயே கமல் ஒரு போலீஸ், அவர் மகனை ஒரு போதை பொருள் கடத்தும் கும்பல் கடத்திவிடுகிறது, மகனை மீட்க கமல் போராடுகிறார் என்பது நமக்குத் தெரிந்து விடுகிறது. இப்படி இருக்கும்போது கமல் தன் மகனை காப்பாற்றாமல் இருப்பாரா என்பதும் பார்க்கும் ரசிகனுக்குத் தெரிந்திருக்கும். இவ்வளவு தெரிந்த பின், படத்தைப் பார்ப்பவரை கட்டிப் போடும் வகையில் திரைக்கதையை சுவாரசியமாக்க காதாசிரியர்/இயக்குநர் சிந்தித்து இருக்க வேண்டுமா வேண்டாமா? மொக்கப் படம் என்று சொல்ல வேண்டாம் என்று தான் நினைக்கிறேன் ஆனால் சொல்ல வைத்து விட்டார்களே என்று வேதனைப் படுகிறேன்.

என்னா ஸ்டார் காஸ்ட்! த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷா சரத், உமா ரியாஸ், கிஷோர், யூகி சேது, சம்பத், மது ஷாலினி, சந்தான பாரதி, ஜகன் மற்றும் பலர்! பிரகாஷ் ராஜ், கிஷோர், த்ரிஷா யூகி சேது தவிர மற்றவர்கள் எல்லாரும் ஓரிரு சீன்களில் தான் தலையைக் காட்டுகிறார்கள். இவர்களுக்குப் பதிலாக அந்தப் பாத்திரங்களில் எந்த துணை நடிகர் நடித்திருந்தாலும் சரியாகவே இருந்திருக்கும். அதுவும் யூகி சேது அவர் பாத்திரத்துக்கு சரியான தேர்வே இல்லை. நடிகர் கிஷோர் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் வருகிறார். அதுவே ஒரு வித நடிப்பு என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

இதில் குறிப்பிட்டு சொல்லும்படி மனத்தில் நிற்பது கமலின் மகனாக வரும் அமன் அப்துல்லா தான். மிகையில்லாத நடிப்பு. பாத்திரத்தை சரியாக உணர்ந்து நன்றாக நடித்துள்ளார். மொத்தப் படத்தில் ஒரே ஒரு சீன் மனத்தை தொடுகிறது. அது மகனுக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் ஒரு தொலைபேசி உரையாடல். மது ஷாலினியுடன் சில முத்தக் காட்சிகள் உள்ளன. அவையும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கமலுக்கு வயதாகிவிட்டதா இல்லை இயக்குநருக்கு அந்தக் காட்சியை சரியாகக் கையாளத் தெரியவில்லையா என்று தெரியவில்லை.

இது ஒரு பிரெஞ்ச் படத்தின் தமிழாக்கம். பிரெஞ்ச் படமே இவ்வளவு மொக்கையான திரைக்கதை உள்ளதாக இருந்திருந்தால் அதை தேர்வு செய்ததே தவறு. இல்லை இவர்கள் எடுத்த விதத்தில் தான் தவறு இருந்தது என்று எடுத்துக் கொண்டாலும் இயக்குநர்-தயாரிப்பாளர் குழு மொத்தப் பழியையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரே இரவில் நடக்கும் காட்சிகள், ஒரே பப்பில் நடக்கும் காட்சிகள். அதனால் வித்தியாசமாக எதுவும் செய்ய இயலாதது புரிகிறது. ஆனாலும் ஒரே இடத்தை ஹீரோவும் வில்லன்களும் சுத்தி சுத்தி வருவதும், பப்பின் strobe விளக்குகளினால் நமக்கு உண்டாகும் தலைவலியும் சொல்லி மாளாது. முதல் பாதியாவது சகித்துக் கொள்ள முடிகிறது. இரண்டாவது பாதி, படம் எப்போ முடியும் எப்போ எழுந்து போகலாம் என்று தவிக்க வைக்கிறது.

அவ்வளவு பெரிய ஹோட்டல்/pub, ஆனால் கரெண்டின் மெயின் சுவிட்சை அணைத்தால் ஜெனரேட்டர் மூலம் கரண்ட் வராமல் உள்ளது. கொஞ்சமாவது ரசிகனுக்கு மூளை உண்டு என்று யோசியுங்கப்பா!

கடைசி சீனில் அமன் அப்துல்லா தன் அம்மாவிடம் போனில் பேசும் காட்சியில் உள்ள வசனம் தசாவதாரம் கடைசி வசனத்தை நினைவு படுத்துகிறது. அங்கு மட்டும் சுகா தெரிகிறார். வேறு எங்கும் இல்லை. ஜிப்ரான் இசையும் இல்லை என்றால் இது த்ரில்லர் படம் என்று மாமியார் நாகம்மா மேல சத்தியம் பண்ணா கூட யாரும் நம்பமாட்டாங்க.

கமல் நடிப்பைப் பற்றி சொல்லத் தேவையில்லை. அவர் நடிப்பின் இலக்கணம். இந்த ரோல் எல்லாம் அவருக்கு ஜுஜுபி. படத்தைப் பார்த்ததில் எனக்கு ஏற்பட்ட தாக்கம் ஒன்றே ஒன்று. தாய் தந்தையர் பிரிந்து அதன் நடுவில் வளரும் பிள்ளைகள் பாவம்.

thoongavanam