விஸ்வாசம் – திரை விமர்சனம்

ஒன்றரை வருடத்துக்குப் பிறகு வரும் அஜித் படம். ஏக எதிர்ப்பார்ப்பு அவரின் ரசிகர்களுக்கு! ரசிகர்களை கட்டிப் போடும் மாஸ் ஹீரோக்கள் நல்ல அறிவுரையை தரும் படங்களை தருவது அந்த ரசிகர்களை நிச்சயம் சிந்திக்க வைக்கும். அந்த முறையில் இந்தப் படம் பாராட்டுக்குரியது. மற்றபடி முன் பாதி கதையமைப்பில் புதுமை இல்லை. பின்பாதி படத்தை காப்பாற்றுகிறது.

அஜித்துக்கு எப்பவுமே ஸ்டேஜ் ப்ரெசென்ஸ் அதிகம். அது இந்தப் படத்திலும் அவருக்கு அருமையாக கை கொடுக்கிறது. வந்து நின்றாலே களை கட்டுகிறது. நயன்தாரா அவரின் ஜோடி நல்ல பொருத்தம். பெரிய ரோல் அவருக்கும். பொருந்தி நடித்துள்ளார்.

சின்ன கிராமத்தில் பெரிய ஆளாக இருப்பவர் அஜித் குமார். அடிதடி காட்டி அசத்தல் மன்னனாக வருகிறார். மருத்துவ முகாமுக்கு வரும் மும்பைவாசி மருத்துவர் நயன்தாரா எப்படியோ அந்த வெள்ளந்தி உள்ளத்தால் கவரப்பட்டு அவர் மூன்றாம் கிளாஸ் பெயில், சுட்டுப் போட்டாலும் ஆங்கிலம் வராது, சண்டை போடுவது அவருக்கு ஹாபி என்று தெரிந்தும் காதலில் விழுந்து, அஜித் தான் அவருக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்று சொல்லியும் அவரை முழு மனதோடு திருமணம் புரிகிறார். அதன் பின் ஒரு சின்ன விஷயத்துக்காக பிஞ்சு மகளோடு பிரிந்து மும்பைக்கே போய்விடுகிறார். அது பாத்திரத் தன்மையில் நெருடுகிறது. எப்பொழுதுமே ஒருவரின் நடிப்பு கதையமைப்பின் அம்சத்தை ஒட்டியே நன்றாகவோ சுமாராகவோ இருக்கும். இதில் நயன்தாராவின் பின் பாதியில் வரும் அவர் நடிப்பு சற்றே ஒட்டாத தன்மையுடன் இருப்பதற்குக் கதையில் உள்ள குறையே காரணம்.

அஜித்துக்கு முதலில் இருந்து கடைசி வரை ஒரே பாத்திரத் தன்மையோடு பிறழ்வு ஏதும் ஏற்படாத வகையில் கதையமைப்பு இருப்பதாலும் குடும்பப் பாத்திரங்களில் குடும்பத் தலைவராகவோ அல்லது ஒரு பெண்ணுக்குத் தந்தையாக வருவதோ அவருக்கு இயல்பாகவே சிறப்பாக வருவதாலும் படம் முழுவதுமே அவர் பங்களிப்பு மிகவும் அருமையாக உள்ளது. வேட்டியில் அம்சமாக இருப்பவர்கள் பொதுவில் மலையாள நடிகர்கள் தான். தமிழ் சினிமாவில் அஜித் என்று சொல்லலாம்.

என்னை அறிந்தால் படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா இந்தப் படத்திலும் அவர் மகளாக நடிக்கிறார். பாத்திர வயதுக்குக் கொஞ்சம் அதிக வளர்ச்சியாக இருந்தாலும் சிறப்பான நடிப்பு. மகள் தந்தை உறவின் பாசம் இருவரிடமும் வெகு அழகாக வெளிப்படுகிறது. அந்தப் பகுதி மட்டும் அப்ழைய படத்தின் தொடர்ச்சிப் போல தோன்றுகிறது. பலவித உணர்சிகளை அனிகா காட்ட அவர் பாத்திரம் உதவுகிறது. குறைவின்றி செய்திருக்கிறார்.

இந்தப் படத்தை இரண்டு மணி நேரத்தில் முடித்திருக்கலாம். படம் இன்னும் நன்றாக வந்திருக்கும். இப்படத்தில் தேவையில்லாதவைகள – அட்லீஸ்ட் இரண்டு பாடல்கள், விவேக், கோவை சரளா பாத்திரங்கள, தம்பி ராமையாவும் அஜித்தும் காமெடி என்று நினைத்து செய்யும் சேட்டைகள்! அஜித்தும் நயன்தாராவும் காதலிக்கக் காட்டப்படும் திரைக் கதையும் பிரிய சொல்லப்படும் காரணங்களும் கொஞ்சம் புதுமையாகவும் நம்பத் தகுந்தபடியும் மாற்றியமைத்திருந்தால் படத்தின் பலம் கூடியிருக்கும். முதல் பாதி ரொம்ப அலுப்புத் தட்டுகிறது. ஆனால் பின் பாதியில் பிரிந்தவர்கள் சேரும் இடம் வெகு இயற்கையாக அமைவது ஆறுதல்.

ஸ்டன்ட் காட்சிகள் மிகவும் நன்றாக அமைக்கப்பட்டிருக்கு. அஜித் செய்யும் சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாகவும் போரடிக்காமலும் உள்ளன. கிராமப்புறங்களை காட்டும்போது ஒளிப்பதிவு அற்புதமாக இருக்கிறது. படத்தின் பலம் ஒளிப்பதிவாளர் வெற்றி. திருவிழா காட்சிகளில் வண்ணங்கள் கூட்டி கண்களுக்கு விருந்து படைக்கிறார். அதேபோல ரூபனின் எடிட்டிங்க் பாடல்களிலும் சண்டைக்காட்சிகளிலும் அருமையாக தொகுத்துள்ளார். D.இமானின் இசையில் கண்ணான கண்ணே அருமை, பின்னணி இசை நன்று.

இந்தப் படத்தின் பெரிய ப்ளஸ் இது ஒரு குடும்பப் படம். குடும்ப வேல்யு சிஸ்டம் பற்றி நன்றாக சொல்கிறது. பெற்றோர் பிரிவதால் அவஸ்தைப் படுவது பிள்ளைகள் தாம். இப்பொழுது பல குடும்பங்களில் இதை நிறைய பார்க்க முடிகிறது. அதனை சரியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிவா. அம்மா தரும் அன்பும் அப்பா தரும் பாதுகாப்பும் ஒரு குழந்தைக்கு எல்லா வயதிலும் தேவை. அதே போல் அம்மாவிடம் சண்டைப் போட்டவர்கள் வாழ்க்கையில் முன்னேறியதே இல்லை என்பது போன்ற கருத்துகளை அஜித் சொல்வது அவர் படத்தை விரும்பிப் பார்க்கும் இளம் வயதினருக்கு ஒரு நல்ல படிப்பினையாக அமையும். வசனங்களில் நல்ல கவனம் செலுத்தியிருக்கிறார் சிவா. கண்களை ஈரமாக்கும் காட்சிகள் படத்தில் உள்ளன.

அஜித்துக்கு இது ஒரு நல்ல படம். ஆனால் அடுத்த முறை இன்னும் சிறப்பான கதையம்சத்தைத் தேர்ந்தெடுத்து இன்னும் சிறப்பான விருந்தை அவர் ரசிகர்களுக்கும் மற்றவர்களுக்கும் அளிக்க வாழ்த்துவோம்!

இமைக்கா நொடிகள் – திரை விமர்சனம்

சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த இன்னுமொரு திரைப்படம் இமைக்கா நொடிகள். முன்பெல்லாம் படத்தின் பெயர் எண்டு கார்ட் போடும் முன் வசனத்தில் வந்துவிடும். இப்போ சமீப காலங்களில் படத்தின் பெயருக்கும் படக் கதைக்கும் பெரிய தொடர்பு இருப்பதில்லை. கவர்ச்சிகரமான பெயராக, பிரபலமான வசனத்தையோ பாடலையோ வைத்து பெயரிடுவது வழக்கமாகி விட்டது. இந்தப் படத்தில் இமைக்கா நொடிகள் பெயர் காரணம் எண்டு கார்ட் போடும் முன் வந்துவிடுகிறது. நயன் தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் நன்றாக உள்ளன, அவர் நடிப்பும் அழகும் படத்துக்குப் படம் மெருகேறிக் கொண்டும் போகிறது. ஆனால் சூப்பர் ஸ்டாராக நீண்ட நாள் நிலைக்க திரைக்கதையில் நிறைய ஓட்டைகளை வைத்து அமைக்கும் இயக்குநரை தவிர்ப்பது நலம்.

க்ரைம் த்ரில்லர் படம் நிச்சயமாக மற்ற ஜானர்களை விட சுவாரசியம் மிகுந்தது, அரைத்த மாவையே அரைத்த கதையாக இல்லாமலும் இருக்க நல்ல வாய்ப்பும் கூட. ஆனால் கதை லாஜிக்கோடு இருக்க வேண்டியது இக்கதைகளுக்கு மிக அவசியம். சில படங்கள் சிரிப்புப் படங்கள், சும்மா லாஜிக் பார்க்காமல் சிரித்துவிட்டு வரலாம். இதில் நயன் பற்றிய மர்மம் ஐந்து வருடங்கள் கழித்து வில்லன் செய்யும் சில காரியங்களால் அதர்வா மூலம் வெளி வரும்போது அந்த மர்மம் வெளி வராமலே இருந்திருந்தால் நயன் வைத்திருக்கும் சில கோடி ரூபாய்கள் அவரிடமே தங்கியிருந்திருக்குமா, அது ஒரு சிபிஐ அதிகாரிக்குத் தகுந்த லட்சணமா போன்ற கேள்விகள் எழுகின்றன.

அதர்வா நயன் தம்பியாக, கிளைக் கதையின் நாயகனாக வருகிறார். மெயின் கதையோடு சேரவே இடைவேளை ஆகிறது. அது வரை நடக்கும் கொலைகளும் நயனின் சிபிஐ பணியும் இன்னொரு பக்கம் வெத்தாகப் பயணிக்கிறது. அதர்வா ஒரு மருத்துவர். குடித்து விட்டு காதல் தோல்விக்காக மறுகுவார். அந்தக் காட்சியில் அக்காவிற்கு சத்தியம் செய்து கொடுத்திருப்பதால் வண்டி ஓட்டுநர் வரும் வரை காத்திருந்து அவர் வாகனம் ஒட்டாமல் இருப்பதாக வசனம் வரும். ஆனால் அதே சமயம் வேறொரு காட்சியில் நயன் அவரை குடித்துவிட்டு வாகனம் ஒட்டியதற்காக அடித்து விட்டார் என்று நயன் மேல் அதர்வாவுக்குக் கோபம் இருக்கும். அந்தக் கோபம் தணிய அவர் நண்பர் அன்று மருத்துவமனையில் எமெர்ஜென்சி இருந்ததால் தான் அதர்வா குடித்து விட்டு ஒட்டியதாக சொல்லுவார். அதனால் நயனும் மன்னித்து விடுவார். இதில் இரண்டு எரிச்சல் – ஒன்று குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை ஒரு மருத்துவரே செய்வதை காட்சியாக அமைத்திருப்பது, இன்னொன்று குடித்துவிட்டு மருத்துவர் எந்த எமர்ஜென்சி நோயாளியைப் பரிசோதித்து சரியான மருத்துவ கணிப்பைத் தரப் போகிறார்?

குண்டடிப் பட்டு அறுவை சிகிச்சை முடிந்தவுடன் சும்மா பறந்து பறந்து சண்டை போடுவதெல்லாம் ஹீரோக்களால் மட்டுமே முடியும். அதர்வா ஸ்டன்ட் காட்சிகளில் காட்டும் திறன், நடனம் மற்றும் காதல் காட்சிகளில் காட்டுவது இல்லை. அனுராக் கஷ்யப் வில்லன். நன்றாக வெறுக்க வைக்கிறார். முட்டைக் கண்களும் முழித்துப் பார்க்கும் பார்வையும் அவருக்குப் பெரிய ப்ளஸ். தமிழ் படத்தில் தமிழ் உச்சரிப்புக்கு சரியாக வாயசைக்கக் கற்றுக் கொண்டால் வில்லனாக ஒரு சுற்று வரமுடியும். நயன் மகளாக வரும் சிறுமி நன்றாக நடித்தாலும் பேசும் வசனங்கள் வயசுக்குத் தக்கனவையாக இல்லை. அந்தக் குழந்தையை தைரியம் உள்ள பெண்ணாக காட்டவேண்டும் என்பதற்காக ஓவராகப் பேச வைத்துக் கடுப்படித்து விட்டார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. அன்றில் இருந்து இன்று வரை திரைப்படங்களில் ஒரு விபத்து அல்லது ஆபத்து என்று வரும்போது தவறாமல் மழை பெய்யும். இயக்குநர்களுக்கு அதில் என்ன ஒரு பிடித்தமோ தெரியவில்லை.

படத்தின் செர்டிபிகேட்டைத் திரையில் பார்க்கும் போதே 170 நிமிடங்கள் படத்தின் நீளம் என்பது தெரிந்தவுடன் பக்கென்றாகி விடுகிறது. சுருங்க சொல்லி பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது போல் கதையமைப்பது தான் இப்போதைய டிரென்ட். மூணு மணி நேரம் எல்லாம் ரொம்ப அதிகம். அதிலும் இரண்டு இடத்தில் வில்லன் கேம் ஓவர் என்று சொல்லுவார். இரண்டாம் இடத்தில் உண்மையிலேயே கேம் ஓவர் தான். ஆனால் அதன் பின் தான் கதையின் பிளாஷ் பேக் வருகிறது, விஜய் சேதுபதியும் வருகிறார். வந்து எப்படி குறைந்த நேரமே திரையில் வந்தாலும் மனதில் நிற்க முடியும் என்பதை காட்டிவிட்டுப் போகிறார். இந்த பின் பகுதி கடைசியில் வரும் சஸ்பென்ஸ் கொஞ்சம் முன்னாடி வந்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். அதர்வா காதல் கதை எல்லாம் தேவையே இல்லாதது.

ஹிப் ஹாப் தமிழாவின் இரண்டு பாடல்கள் படம் வெளிவரும் முன்னே எப் எம் வானொலியில் ஹிட். பின்னணி இசை சுமார் ரகம். ஒளிப்பதிவு ஆர்.டி ராஜசேகர், நன்றாக செய்திருக்கிறார். பெங்களூரிலேயே படமாக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை பிராபகரின் வசனங்கள் கூர்மை! நயன் அனாயாசமாக நடிக்கிறார். விஜய் சேதுபதியும் அவரும் வரும் காட்சிகள் மிக அருமை.

இப்போ நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் முதலிய சேனல்கள் மூலம் நிறைய வெளிநாட்டுப் படங்கள் பார்ப்பது சாதாரணமாகி விட்டது. அதனால் க்ரைம் த்ரில்லர் கதைத் தேர்வு செய்யும்போது இன்னும் கதையை பரபரப்பாகவும் (கொலைகள் கோரமாகவும், பயங்கரமாகவும் இருந்தால் போதும் என்று இருந்துவிட முடியாது) லாஜிக் தவறுகள் இல்லாமலும் திரைக்கதை அமைக்கப்பட்டால் தான் படம் இரசிக்கப்படும். ரசிகனின் எதிர்ப்பார்ப்பு இப்போழுது அதிகரித்துவிட்டது.