சைராட் – மராத்திப் படம் – திரை விமர்சனம்

sairat

இந்தியாவில் எந்த மாநிலத்துக்கும் பொதுவானது ஒன்றே ஒன்று தான். ஜாதி வெறி பிடித்து அலைபவர்கள் + கீழ் ஜாதிப் பையனை மேல் ஜாதிப் பெண் காதலிப்பது. சைராட் {கவலையற்ற, சுதந்திரமான என்று பொருள்} சொல்வதும் இதே மாதிரி ஒரு சூழ்நிலையில் இதே மாதிரி ஒரு காதல் ஜோடியை பற்றியக் கதை தான். ஆனால் எடுத்திருக்கும் விதம் நம்மை மூணு மணி நேரம் அவர்களோடவே வாழ வைக்கிறது. அந்த இளம் ஜோடியின் காதல் திரையில் கவிதையாக மலர்கிறது. பதின் பருவக் காதலில் வரும் அத்தனைப் பரிணாமங்களையும் இயக்குநர் நாகராஜ் மன்ஜூலே இந்தப் படத்தில் காண்பித்துள்ளார்.

மகாராஷ்டராவில் சோலாப்பூர் மாவட்டத்தில் கதை நடக்கிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த துடிப்பான இளைஞன் பர்ஷ்யா. புது முகம் என்று தெரியாத அளவு பாத்திரத்தை நன்கு உணர்ந்து அருமையாக நடித்திருக்கிறார் ஆகாஷ் தொசர். அவர் காதலிப்பது மேல் வகுப்பைச் சேர்ந்த துணிச்சலான அர்ச்சனாவை. குதிரை முதல் புல்லட், டிராக்டர் என்று அனைத்தையும் அனாயாசமாகக் கையாள்கிறார் ரிங்கு ராஜ்குரு. பார்த்ததுமே மனசைக் கொள்ளைக் கொள்கிறார் அவர் :-}

கதையின் தன்மையினால் மராத்திப் படம் பார்ப்பது போலவே தோன்றவில்லை. நமக்குத் தெரிந்த நட்புகளிடையே நடக்கும் காதலும் போராட்டமும் எனப் படத்தோடு ஒன்றவைத்திருப்பது தான் இயக்குநரின் வெற்றி. வெறும் கதையாகப் பார்த்தால் இதில் ஒன்றும் புதுமை இல்லை. ஆனால்  ஒவ்வொரு பாத்திரத்தையும் தனிப்பட்டக் குணாதிசயங்களுடன் வார்த்திருப்பதால் கதையில் சுவாரசியம் கூடுகிறது.

இரண்டாம் பகுதி செகந்திராபாத்தில் நடக்கிறது. அங்கு அந்தக் காதல் ஜோடி கால் ஊன்ற உதவி செய்பவரின் பாத்திரத்தில் இருந்து இருவருக்குள் ஈகோவினாலும் சந்தேகத்தினாலும், ஏழ்மையின் தாக்கத்தினாலும் வரும் சச்சரவுகளும் அதற்குப் பின் ஏற்படும் ஆழ்ந்த புரிதலும் நிஜ வாழ்வில் நடப்பவைகளின் அப்பட்ட யதார்த்தம். அதே யதார்த்தம் முடிவின் போதும் இருப்பது முகத்தில் வேகமாக அறைகிறது. படத்தின் கடைசி சில நிமிடங்கள் சப்தமின்றி முடிகிறது, ஆனால் நம் காதுகளில் அதுவே பேரிரைச்சலாக ஒலிக்கிறது.

ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் உங்களைத் திருத்தமுடியாது என்னும் நடிகர் விவேக் டயலாக் போல, இம்மாதிரி ஆயிரம் படங்கள் வந்தாலும் ஜாதி வெறி ஒழியப்போவதில்லை. ஆனால் ஒரு சிலரையாவது இந்தப் படம் ஜாதி வித்தியாசத்தினால் வரும் துன்பங்களை யோசிக்க வைக்கும் என்று நினைக்கிறேன்.

படம் மூன்று மணி நேரம். ஆனால் கொஞ்சம் கூடத் தொய்வு இல்லாமல் செல்கிறது கதை. இசை அருமை. இளையராஜாவின் இசையை நினைவுபடுத்துகிறது. அதுல்-அஜெய் பாடல்களிலும் பின்னணி இசையிலும் அருமையாக ஸ்கோர் செய்கிறார்கள். அதுவும் முதல் பாதியில் வரும் டூயட் பாடல்கள் கேட்கவே ஆனந்தமாக உள்ளன!

பல விஷயங்கள் இதில் பாராட்டுக்குரியவை. ஆனால் அவற்றைப் பட்டியலிட்டால் கதையைச் சொல்ல வேண்டியிருக்கும். நீங்களே பார்த்து மகிழுங்கள்.  சப் டைட்டிலுடன் படம் உள்ளது. அம்பிகாபதி அமராவதியில் இருந்து இன்று வரை காதல் ஜோடிகளுக்கு நடப்பது தான் ஆனாலும் கட்டாயமாகப் பார்க்க வேண்டிய படம்.

sairat1