பசங்க -2 திரை விமர்சனம்

pasanga-2

எழுத்தாளர் சுஜாதா ஒரு முறை எழுதியிருப்பார்,  ஜப்பான் காரன் எதையும் எக்செலண்டா செய்யப் பிரியப் படுவான், நமக்கு பையன் சுமாரா படிக்கிறான், சுமாரா விளையாடறான், சுமார இருப்பதே நமக்குப் போதும் என்ற மனநிலை தான் என்று. அது மாதிரி நல்ல ஒருக் கதைக் கருவை சுமாராக எடுப்பதில் வெற்றிப்பெற்றுள்ளார் பாண்டிராஜ்.

தாரே ஜமீன் பர் படத்தில் சிறுவனுக்கு டிஸ்லெக்சியா. இந்தப் படத்தில் வரும் ஒரு சிறுவன், சிறுமிக்கு ADHD – Attention deficit hyperactivity disorder. அதாவது ஓவர் துறுதுறுப்பு, அதே சமயம் படிப்பில் முழு கவனம் செலுத்திப் படிக்கவும் முடிவதில்லை அக்குழந்தைகளுக்கு. அதனால் பல பள்ளிகளில் இருந்து டிசி கொடுத்து அனுப்பப்பட்டுப் பந்தாடப் படுகிறார்கள். குழந்தைகள் இருவரும் சிறந்த தேர்வு! கவினாக நடிக்கும் நிஷேஷ், நயனாவாக நடிக்கும் தேஜஸ்வினி ஆகிய இருவரின் சேட்டைகள், குறும்புகள் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளன. இந்த குழந்தைகளின் பெற்றோர்களாக கார்த்திக் குமார்- பிந்து மாதவி, முநீஸ்காந்த் ராமதாஸ்- வித்யா பிரதீப். குழந்தைகள் மன நல மருத்துவராக சூர்யா அவரின் மனைவியாக அமலாபால். அமலா பால், படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் என்றில்லாத ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறார். சூர்யாவிடம் படம் முழுக்க வரும் உற்சாக சிரிப்பும், ஓவர் பாசிடிவ்நெஸ்சிலும் ஒரு செயற்கைத் தனம் தெரிகிறது. ‘ஒண்ணு சொல்லியே ஆகணும்னு’ இன்னும் டயலாக் பேசுவது எரிச்சலை ஊட்டுகிறது. அமலா பால் நன்றாகச் செய்திருக்கிறார். அதே போல முநீச்காந்தும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

அரோல் கொரெலியின் இசை படத்தின் ஓட்டத்தோடு இணைந்து செல்கிறது. பாலசுப்பிரமணியத்தின் கேமிரா குழந்தைகளின் உலகத்தை வண்ண மயமாகக் காட்டுகிறது! குழந்தைகள் இந்தப் படத்தை விரும்பிப் பார்ப்பார்கள், பெற்றோர்கள் அழைத்துச் செல்லவும்.

கடைசி அரை மணி நேரம் சொல்ல வந்ததை விசுவலாக பிரமாதமாகச் சொல்லியிருக்கிறார் பாண்டி ராஜ். அதுவரை இருக்கும் தொய்வினை நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும். படத்தின் பெரும்பாலானப் பகுதி குழந்தைகள் வளர்ப்பைப் பற்றியதாக இருப்பதால் நிறைய இடங்களில் வசனங்கள் அறிவுரையாக இருக்கின்றன.

வாட்சப்பில் வந்த பார்வேர்டை எல்லாம் சிறு கதைகளாக படத்தில் வைத்திருப்பது, சில ட்வீட்சை வசனமாக வைத்திருப்பது இவை எல்லாம் ரசிக்கும்படியாக இல்லை. ஆனால் குழந்தைகளின் மனக் கோளாறுகளைப் பற்றி ஒரு விழிப்புணர்ச்சிப் படம் என்னும் வகையில் இப்படத்தை எடுத்ததற்காக பாண்டிராஜை மிகவும் பாராட்ட வேண்டும். வாழ்த்துகள்.

Pasanga-2-2