கேடி பில்லா கில்லாடி ரங்கா – திரை விமர்சனம்

KBKR

நானெல்லாம் பாருக்குப் போனதில்லை. திரை அரங்கத்தை விட்டு வரும்போது ஒரு குடிமகன் சாரி குடிமகள் பாரை விட்டு வந்த பீலிங் தான் எனக்கு இருந்தது. சரக்கு அடிப்பது தான் இன்றைய இளைஞர்களின் டைம் பாஸ் என்பது இந்த படத்தில் இருந்த்து தெள்ளத் தெளிவாகிறது! படம் முடிந்து க்ரேடிட்ஸ் ஓடும் நேரத்திலும் இயக்குனர் பாண்டிராஜ் சக நடிகர்களோடு குடித்து நமக்கு வாழ்த்துத் தெரிவிப்பது மகாக் கொடுமை! குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று படத்தின் ஆரம்பத்தில் ஸ்டில் போடுவது வெறும் கேலி கூத்து தான்.

சரி கதைக்கு வருவோம். ஆனால் எப்படி வருவது? கதையை எந்த கூகிள் சர்ச் எஞ்சினாலும் தேடிக் கண்டுபிடிக்கவே முடியாது. சும்மா சொல்லக் கூடாது, பாண்டிராஜுக்கு அசாத்திய தைரியம் தான். கதையே இல்லாமல் கதை பண்ணியிருக்காரே. இன்று தனியாக முட்டாள்கள் தினம் (ஏப்ரல் ஒண்ணு) என்று கொண்டாடுகிறோம். இந்த மாதிரி தயாரிப்பாளர்கள் கிடைத்தவண்ணம் இருந்தால் இயக்குனர்களுக்கு ஜாலி தான், தினமும் ஏப்ரல் ஒண்ணுதான்.

சிவ கார்த்திகேயன், விமல், பரோட்டா சூரி, டெல்லி கணேஷ், பிந்து மாதவி இவர்கள் தெரிந்த பெயர்கள். என்ன எண்ணத்தில் இந்த மாதிரி படங்களில் நடிக்கிறார்கள் என்ற லாஜிக் எனக்கு சிறிதும் புரியவில்லை. கொஞ்சம் கூட சிரிப்பு வராத வசனங்கள் மட்டும் இன்றி நகைச்சுவை என்ற பெயரில் அவர்கள் செய்யும் டார்ச்சர்கள் கடுப்பை மட்டுமே வரவழைக்கின்றது. கொஞ்சம் கூட கோவையே இல்லாமல் அலைபாய்கிறது திரைக்கதை. இசை யுவன் ஷங்கர் ராஜாவாம்.

படத்தில் சிவகார்த்திகேயனைக் காணவில்லை என்று அவர் தந்தை பிட் நோடீஸ் நகல் எடுக்கப் போவார். பசங்க எடுத்த  பாண்டிராஜைக் காணவில்லை என்று நாம் தான் பிட் நோட்டீஸ் அடித்து விநியோகம் செய்யவேண்டும்.

ஒரே ஆறுதல் படத்தின் கடைசியில் இயக்குனருக்குத் திடீர் ஞானோதயம் ஏற்பட்டு ஒரு மெசேஜ் சொல்லியிருப்பது தான். அஸ்திவாரம் சரியாகப் போடப்படாத கட்டடத்துக்கு மேல் விமானம் அழகாக இருந்து என்ன பயன்?

சில சமயம் படத்தில் கதையே இல்லாவிட்டாலும் கண்ணில் நீர் வரும் வரை சிரித்துவிட்டாவது வருவோம். இதில் அதுவும் இல்லை. ட்விட்டரில் எடுத்தவுடனே எல்லா படத்தையும் மொக்கை என்று சொல்லிவிடுகிறார்களே, போய் தான் பாப்போம் ஒரு வேளை நன்றாக இருக்குமோ என்று நினைத்துப் போனேன். இனி அந்தத் தவறை செய்யவே மாட்டேன் 🙂