சூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்

 

திரைக்கதையில் 100/100 பெறுகிறது சூப்பர் டீலக்ஸ் திரைப்படம். திரைக்கதை நன்கு அமைந்தாலே பாதி கிணறு தாண்டிய நிலை தான். அதில் மேலும் தியாகராஜன் குமாரராஜா மாதிரி ஓர் இயக்குநர் அக்கதையை இயக்கும்போது நல்ல ஒரு வெற்றி படமாக அமைய வாய்ப்புகள் அதிகமாகிறது. ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு எட்டு வருடங்கள் கழித்து இப்படம் அவர் எழுதி இயக்கி வெளிவந்துள்ளது. நிச்சயமாக ஆரண்ய காண்டத்தைவிட பல அதிக பரிமாணங்களைக் கொண்டு எழுத்திலும் இயக்கத்திலும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது இப்படம். எழுத்தில் மிஷ்கின், நலன் குமாரசாமி. நீலன் கெ.சேகர் ஆகியோர் தியாகராஜன் குமாரராஜாவுடன் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். வசனங்கள் அருமை!

நான்கு முக்கிய கதைகள, நிறைய கதாப்பாத்திரங்கள், சமூகத்திலுள்ளமிகவும் சங்கடமான பாலியல் சார்ந்த பிரச்சினைகள் இவை அனைத்தையும் சுவைபட நகைச்சுவை இழையோட திரைப்படமாக அமைத்துக் கொடுத்திருப்பது தியாகராஜா குமாரவேல் குழுமத்தின் வெற்றி. இந்தப் படம் அடல்ட்ஸ் ஒன்லி படம். ஆனாலும் எப்பவும் போல நம் மக்கள் குழந்தைகளுடன் தான் திரை அரங்கத்திற்கு வந்திருந்தனர். அதில் ஒரு குழந்தை படத்தின் நடுவில் சமந்தா திரையில் வரும்போது அம்மா இந்த அக்கா குட் கிர்லா பேட் கிர்லா என்று உரக்க கேட்டு திரையரங்கில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. நாயகன் படத்தின் நீங்க நல்லவரா கெட்டவரா என்ற கேள்விக்கு இணையானது தான் இந்தக் கேள்வியும். ஏனெனில் இயக்குநர் கதாப்பாத்திரங்களை வெள்ளையும் கருப்பும் கலந்து நாம் வாழ்க்கையில் சந்திக்கும் உண்மை மனிதர்களை பிரதிபலிக்கும் வகையிலேயே படைத்திருப்பது தான்.

ஃபஹத் ஃபாசல் சமந்தா நடிப்பு மிகப் பிரமாதம். வஞ்சிக்கப்பட்ட கணவனாக அவர் புலம்பும் காட்சிகள் அருமை. அவர் பாத்திரத்துக்கான அவருடைய வசனங்கள் குறிப்பாக அரசியல் மற்றும் சமூகம் சார்ந்தவை அற்புதம். இயல்பாக நகைச்சுவை ததும்பியதாக உள்ளது. அதை அவர் வெளிப்படுத்தும் விதமும் அருமை. அவர்கள் கதையில் வரும் இதர துணைப்பத்திரங்கள் யதார்த்தமான சிரிப்பை வரவழைப்பவர்களாக  உள்ளனர். பாராட்டு வசனங்களுக்கு. முதல் பாதியில் திடுக் நிகழ்வுடன் தொடங்கும் இக்கதை பின் பாதியில் இழுவையாக மாறி விடுவதை குமாரராஜா தடுக்காதது அவரின் தோல்வி. முக்கியமாக சமந்தா பகத் பாசல் கதையில் சப் இன்ஸ்பெக்டர் பெர்லின் (பகவதி பெருமாள் பக்ஷ்) நுழைந்தவுடன் நடக்கும் மெலோடிராமா (வன்புணர்வு முயற்சி) நிறைய பழைய படங்களில் பார்த்தது. கோடி காண்பித்தாலே பார்ப்பவர்கள் புரிந்து கொள்வர். ஆனால் அதை மிகவும் கொடூரமாக காட்டிக் கொண்டே இருந்தது பார்வையாளர் பொறுமையை சோதிக்கிறது. அதுவும் அதற்கு முன் பெர்லின் விஜய் சேதுபதியை வேண்டிய அளவு படுத்தியதை பார்த்த பின் இதையும் அதிகமாக பார்க்க வைத்திருக்க வேண்டியதில்லை. மூன்று மணி நேரத்தை இந்தக் காட்சிகளை கத்திரித்தாலே நேரம் குறைந்திருக்கும்.

பொருளாதாரத்தில் கீழ் நிலையிலுள்ள விடலைப் பையன்கள் பகுதி அவர்கள் வயது பொறுப்பின்மை, ஆசை, கோபம், அவமானம், நம்பிக்கை தகர்தல் ஆகியவைகளை அவர்கள் எதிர்கொள்ளும்போது அவர்கள் நிலை என்ன என்பதை மிகவும் யதார்த்தமாக காட்டியுள்ளார். நான்கு பையன்களும் மிக மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். இக்கதையில் வரும் ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் பகுதியும் தினப்படி வாழ்வில் நாம்பார்க்காத ஒன்று ஆனால் ஆங்காங்கே நடந்துகொண்டிருப்பது தான். கணவன் சரியாக அமையாவிட்டால் மனைவி போகும் பாதை எப்படியாக இருக்கும் அதனால் பாதிப்படையும் பிள்ளைகள் நிலை அனைத்தும் நம் சமூகம் கண்டும் காணாமல் கடந்து செல்கிறது. பாதிப்படைபவர்களுக்கு மட்டுமே அதன் தாக்கம் புரியும். இதில் ரம்யா கிருஷ்ணன் தன் மகனை காப்பாற்ற மருத்துவமனையில் பணத்துக்காக போராடும் காட்சியில் ஒரு தாயை மட்டுமே பார்க்க முடிகிறது, அவர் வாழ்க்கையை நடத்த அவர் தேர்ந்தெடுத்த வழியை அங்கே நாம் காண்பதில்லை.

விஜய் சேதுபதியின் மகனாக வரும் அஸ்வந்த் அசோக் குமார் எப்படி ஒரு இயக்குநர் சொல்லிக் கொடுத்தால் கூட இந்த மாதிரி நடித்திருக்க முடியும் என்று தெரியவில்லை! விஜய் சேதுபதிக்கு இந்தப் பையனின் முகபாவங்களை பார்த்தே நெகிழ்ந்திருப்பார் மகிழ்ந்திருப்பார் அவர் செய்ய வேண்டிய முகபாவங்கள் தானாக வந்திருக்கும், நடிக்கத் தேவையே இருந்திருக்காது. அந்த அளவு நிபந்தனையற்ற அன்பை வெளிக்காட்டும் ஒரு கதாப்பாத்திரமாக அவன் வருகிறான். அற்புதமான பாத்திரப் படைப்பு+நடிப்பு. அதே மாதிரி விஜய் சேதுபதி மனைவியாக வரும் காயத்திரியும் பாத்திரத்தை உணர்ந்து மிக அழகாக நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியின் கண்கள் உணர்சிகளை கொட்டுகின்றன. அவரின் நிலையை உணர்த்துகிறது அவர் பேசும் வசனங்கள். அந்தப் பகுதியை எழுதியவருக்கு பாராட்டுகள்.

யுவனின் பின்னணி இசை மிக நன்றாக உள்ளது. அவர் அப்பா பாதி படத்துக்கு இசை அமைத்திருந்தாலும் எங்கெங்கு எந்தெந்த பாடல்களை சேர்த்தால் படத்துக்கு சரியாக வரும் என்ற முடிவை சரியாக எடுத்திருக்கிறார் யுவன். இசை இருப்பதே தெரியாமல் இருக்கும் படம் இது. மிக மிக நல்ல இசையமைப்பு! பல வருடங்களுக்குப் பிறகு யுவன் ஜொலிக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை பாத்திரத்தை எடுத்து நடித்ததற்கும் சமந்தா “நல்ல பெண்” என்று நாம் முத்திரை குத்தும் பாத்திரமல்லாத பாத்திரத்தைத் துணிந்து எடுத்து நடித்ததற்கும் பாராட்டுகள். முன்பெல்லாம் திருமணம் முடிந்த பிறகு கதாநாயகிகளுக்கு சினிமா கெரியர் முடிந்துவிடும். பிறகு தான் நாயகியாக நடித்த ஹீரோவுக்கே அம்மாவாக நடிப்பார். சமந்தா அந்த நிலையை உடைத்தெறிந்து பாலிவுட், ஹாலிவுட்டில் இருப்பது போல் திருமணத்திற்கு பிறகும் சர்ச்சைக்குரிய பாத்திரத்தைத் துணிந்து ஏற்று நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்குத் திருநங்கை பாத்திரம் anti hero பாத்திரம், கொஞ்சம் கூட கோபத்தை வீராவேசமாக கட்டமுடியாது. எல்லாராலும் ஏளனப்படுத்தப்படும் அருவருப்பாக பார்க்க வைக்கும் பாத்திரம். அதை துணிந்து செய்ததற்கு பாராட்டுகள். கோபத்தை காட்ட முடியாத தன் அவல நிலையிலும் சாபம் விட்டு தன் கோபத்தை வெளிக்காட்டும் இடம் அற்புதம். (இறுதியில் அந்த சாபம் பலிப்பது நல்ல directorial touch 🙂 )

இந்தப் படத்தில் பாத்திரத்தில் சரியாக ஒட்டாத நடிகர் என்றால் அது பக்ஷ் தான். ரொம்பக் கொடூரமாக சித்தரிக்கப்பட்டிருக்கார் ஆனால் அவர் நடிப்பு அவ்வளவாக நம்மை ஈர்க்கவில்லை, வெறுக்கப்பட வேண்டிய பாத்திரம் எரிச்சல் பட வைக்கிறது. தவறு கண்டிப்பாக இயக்குனருடையது தான். சவமாக கதை முழுதும் பயணிக்கும் பாத்திரம் பற்றி சொல்லாமல் இருக்கக் கூடாது. அவரின் நடிப்பு மகளிர் மட்டும் நாகேஷின் நடிப்புக்கு இணையானது அல்ல என்றாலும் கதையின் திருப்பத்திற்கு, சைலன்ட் கவுன்சலராக சமந்தா பகத் பாசல் மணவாழ்க்கை பிரச்சினைகளுக்கு அந்த டெட் பாடியை பயன்படுத்தியிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.

ஒரு பெரிய குழப்பம் கதை நடக்கும் கால கட்டம்! எந்தக் காலகட்டத்தில் கதை நடக்கிறது என்று சரியாக புரியவில்லை. செல்போனில் ஒரு பாத்திரம் படம் பிடிக்கிறது. அதனால் இப்பொழுது நடக்கும் கதை என்று எடுத்துக் கொள்ளலாம். சுனாமி ரெபரன்ஸ் நிறைய வருகிறது. சில நிகழ்ச்சிகளை பார்க்கும்போது சுனாமி நடந்து பத்து வருடத்திற்குள் நடக்கும் கதை போல் உள்ளது. ஆனால் டிமாநிடைசேஷனும் வருகிறது. அப்போ சமீபத்திய காலகட்டம் என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் ஒருகதையில் விடலைப் பையன்கள் பலான படம் பார்க்க ஒரு ஷேடி சிடி கடைக்குப் போய் பெற்றோர்கள் இல்லாத போது டெக்கில் படம் பார்ப்பதாக வருகிறது. இந்தக் காலத்தில் ஏன் இந்த வழி? செல்போனில் எல்லாமே பார்க்க முடியும். இணையத்தில் எல்லாமே கொட்டிக் கிடக்கிறது. அடுத்து ஒரு பழைய திரையரகத்திற்கும் இந்த மாதிரி படம் பார்க்க செல்கிறார்கள். அவ்வளவு மெனக்கெடனுமா இப்போ என்று தோன்றுகிறது. டிக் டோக்கிலேயே இப்போ ஆல்மோஸ்ட் எல்லாம் வந்துவிடுகிறதே. கொஞ்சம் சொதப்பல் தான் அந்தப் பகுதியில்! பின்னணி இசையில் இளையராஜா பாடல்கள் நிறைய சேர்க்கப்பட்டு படத்தைப் பார்க்கும்போதே ஒரு போதை ஏற்படுகிறது. ஆனால் அதிலும் காலக்கட்ட கணிப்பில் ஒரு சிக்கல், பொதுவாக எண்பதுகள் தொன்னூறுகள் காலக் கட்டத்தை  காட்ட தான் ராஜா பாடல்கள் பின்னணியில் ஒலிக்கும்.

எந்த ஊரில் நடக்கிறது என்றும் புரியவில்லை. சென்னையா புறநகர் பகுதியா? விஜய் சேதுபதி மகனை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு செல்லும் வழி எதோ மும்பையின் கச்சடா பகுதி மாதிரி உள்ளது, அவர் வீடோ செட்டிநாட்டு வீடு மாதிரி இருக்கு. நகர சாயலே இல்லை பல இடங்களில் அதாவது மருத்துவமனை, காவல் நிலையம் முதலிய இடங்களில். இப்பொழுது நடக்கும் கதை என்றால் காவல் நிலையம் மருத்துவமனை கட்டடங்கள் மிகவும் நன்றாக இருக்கவேண்டும். எல்லாம் பாடாவதியாக உள்ளன.

உணர்ச்சிகளைப் பற்றிய படம் தான் என்றாலும் உணர்ச்சி வசப்பட்டு நாம் படத்துடன் ரொம்ப ஒன்ற முடிவதில்லை. ஏனென்றால் நேரியலாக கதை சொல்லப்படவில்லை. நான்கு காதைகள் கத்திரித்து கத்திரித்து நம் முன் வைக்கப்படுவது காரணமாகிறது. நேரக்கோடும் ஒரு பிரச்சினை. அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரே நாளில் காலையில் தொடங்கி இரவில் முடிகிறது. அதில் சில சந்திப்புகள் உதாரணத்துக்கு ஒரு கதையில் இருக்கும் மிஷ்கின்னும் இன்னொரு கதையில் இருக்கும் விஜய் சேதுபதியும் சந்திப்பது எந்த நேரத்தில் என்று புரியவில்லை. ஆனாலும் படத்தை நேர்த்தியாக படத் தொகுப்பாளர் சத்தியராஜ் நடராஜன் தொகுத்தளித்திருக்கிறார். இந்தப் படத்தை தொகுப்பது எளிதன்று. ஒளிப்பதிவாளர்கள் நிரவ் ஷா, பி.எஸ்.வினோத் கதாப்பாத்திரங்களுடன் பயணித்திருக்கிறார்கள். படத்தின் வண்ணம் மூலம் படத்தின் மனநிலையை பிரதிபலிக்க வைத்திருக்கிறார்கள். குறுகலான தெருக்களில், சின்ன சின்ன வீடுகள் குடியிருப்புகளில் தான் கதைகள் நடக்கின்றன. அந்த இறுக்கமான இடச் சூழலை பார்ப்பவரும் உணரும் வண்ணம் ஒளிப்பதவு செய்திருப்பது அவர்களின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஒளிப்பதிவாளர்களும் ஜாம்பவான்கள் தானே!

பாலியல் சார்ந்த காட்சிகள், வசனங்கள் வெளிப்படையாக உள்ளன. பொதுவாக நாம் எதெல்லாம் சமூகத்தில் தவறு என்று சொல்லுவோமோ அதை செய்பவர்கள் தான் இந்தப் படத்தின் முக்கிய பாத்திரங்கள். அதை செய்பவர்களும் சமந்தாவாகட்டும் ரம்யா கிருஷ்ணன் ஆகட்டும் விஜய் சேதுபதி ஆகட்டும் அதை தவறாக நினைக்காமல் இயல்பு அல்லது செய்ய வண்டிய நிர்பந்தம் அதனால் தவறில்லை அல்லது வேறு வழியில்லை என்கிற தொனியில் குற்ற உணர்ச்சி இல்லாமல் செய்கிறார்கள். சப் இன்ஸ்பெக்டர் பக்ஷ் செய்யும் அட்டுழியங்களும் காவல் துறையில் நடப்பவை என்பதாக உள்ளது.

குழப்பத்தில் அமைதி மாதிரியான நிலையை இந்தப் படத்தில் உணரலாம். இந்தப் படத்தை காட்சிக்குக் காட்சி ஆராய்ந்து பல பொழிப்புரைகள் கண்டிப்பாக வரும். எனக்கே மறுமுறை பார்த்து விரிவாக எழுத ஆர்வம் உள்ளது. அந்த அளவு இந்தப் படம் பன்முகங்களை கொண்டுள்ளது. மிக மிக விரிவாக திட்டமிட்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. பல நுணுக்கமான விஷயங்களை கொண்டுள்ளது. இறுதியில் sci-fi எல்லாம் வருவது வேற லெவல்! சொல்லப்படும் விஷயம் நல்லதா கெட்டதா என்று விவாதிக்கலாம். ஆனால் அந்த விவாதத்தை ஏற்படுத்த முனைந்திருப்பது தான் இயக்குநரின் குறிக்கோளுமாக இருக்கும் என்று நினைக்கிறேன். வயதுக்கு வந்தவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய படம்.