வேதாளம் – திரை விமர்சனம்

vedhalam1

அவுட் அண்ட் அவுட் அஜித் ரசிகர்களுக்கான படம். ஆலுமா டோலுமா பாடலும் வீர விநாயகா பாடலும் தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளுகிறது. அனிருத்தின் பின்னணி இசை சத்தமாக இருந்தாலும் இந்தப் படத்திற்கு செட் ஆகிறது.

லட்சுமி மேனனுக்கு நல்ல ரோல். அஜித்தின் தங்கையாக படம் முழுவதும் வருகிறார். இருவருக்கும் அண்ணன் தங்கை கெமிஸ்டிரி நன்றாக வொர்க் அவுட் ஆகிறது. ஸ்ருதி ஹாசனுக்கும் அவருக்கு ஏற்ற ரோல், ஒரு கேஸ் கூட வின் பண்ணத் தெரியாத வக்கீல் கேரக்டர். படத்தில் கொஞ்சமே தான் வருகிறார். அதற்கு இயக்குநருக்கு நன்றி. இதில் அவர் வாய்ஸ் அவர் பாத்திரத்துக்குப் பொருந்துகிறது. அஜித்துடன் டூயட் இருந்தாலும் டூயட்டாக அது தோன்றவில்லை. அவரின் உடைகள் ரொம்ப அழகாக உள்ளன. இதே ட்ரெஸ் டிசைனரை அவர் மற்ற படங்களுக்கும் பயன்படுத்தலாம்.

ஆல்ரெடி இணையத்தில் சொன்னா மாதிரி ஏய் படம் போலத் தான் கதை. ஆனால் இதில் அண்ணன் தங்கை அஜித், லட்சுமி மேனன். அது தான் ஸ்பெஷல். மற்றபடி ஹீரோ என்றால் நூறு பேரையும் பந்தாடுவார், குண்டு அவர் மேல் பாயாது, வில்லன்களை வெற்றிகரமாக சாகடிப்பார் போன்ற அனைத்தும் இப்படத்திலும் உண்டு. முதலில் நல்ல கணேசாக வந்து பின் வில்லன்களை பரலோகத்துக்கு அனுப்புவபராக மாறுகிறார் அஜித்.

பின் பாதியில் எக்கச்சக்க பைட்டிங். அதுவும் பலத்த பின்னணி இசையில் தலையை வலிக்கிறது. கொல்கத்தாவில் பாதி கதை நகருகிறது. கொஞ்சம் கொல்கத்தா, மீதி செட். லாஜிக்கை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டுப் பார்த்தால் படம் பிடிக்கும். வீரம் படத்தை விட பெட்டர். சூரி, கோவை சரளா வரும் இடங்கள் தாங்க முடியவில்லை.

இப்படத்தில் எனக்கு முக்கியமாக பிடித்த ஒன்று பெண்களை மதிக்க வேண்டும், பெண்களுக்கு அவர்களுக்கான சுதந்திரத்தை யாரும், எந்த சூழலும் பறிக்கக் கூடாது என்ற நல்ல கருத்தைச் சொல்கிறார் அஜித். விஜய், அஜித், போன்ற இன்றைய பிரபல ஹீரோக்கள் எது சொன்னாலும் அதன் ரீச் அதிகம்.

எடிட்டிங்க் ரூபனும், ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவும் இப்படத்தில் பாராட்டப் பட வேண்டியவர்கள். அஜித் கொஞ்சம் உடம்பை குறைத்தால் நன்றாக இருக்கும். டேன்ஸ் ஆடும்போது உடல் எடை தெறிக்கிறது! இது பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாக இருக்கும் என்பது என் கணிப்பு.

vedhalam