2.0 – திரை விமர்சனம்

படம் ரிலீசுக்கும் முன் ரொம்ப ஹைப் இல்லாதது நல்லதே. நிறைய பேட்டிகள் வந்திருந்தால் கஜ கஜன்னு ஆகியிருக்கும். இப்போ கொஞ்சம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போக முடிந்தது. எந்திரனை விட மிக நல்ல தயாரிப்பு. 3D அசத்தலாக வந்துள்ளது. ஒலி தரம் அற்புதம். ஒளிப்பதிவு உலகத்தரத்துக்கும் மேல். ஷங்கர் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய ஒரு படைப்பு இது.

ரஜனிகாந்த் முதல் பாகத்தில் வசீகரனாகவே வருகிறார். என்திரனிலியே வசீகரன் அவ்வளவாக ஈர்க்கவில்லை. சிட்டி தான் அனைவரையும் கவர்ந்தான். அதே மாதிரி வசீகரன் இந்தப் படத்திலும் முதல் பாகத்தில் பெரிய அழுத்தத்தைத் தரவில்லை. அதுவும் நமக்கு டீசரில் டிரெயிலரில் செல் போன் பறந்து போவதை பார்த்திருந்ததால் ஓரளவு கதை எப்படி தொடங்கும் என்றும் தெரிந்திருந்து அதில் பெரிய சஸ்பென்சும் இல்லை. இடைவேளைக்குப் பிறகு சிட்டி உயிர்பெற்றதோடு சிட்டியின் வில்லத்தனமும் உயிர்பெற்றதால் சுவாரசியம் கூடுகிறது. அதோடு எதிர்பாராத இன்னொரு ரோபோவும் திரைக்கு வருவதால் படம் சிறப்பாக முடிகிறது.

ரஜினி ஹீரோவை விட வில்லனாக ரொம்ப அருமையாக செய்கிறார். அது மிக இயல்பாகவும் ஒரு தனி ஸ்டைலோடும் அவருக்கு செய்ய வருகிறது. படத்தில் அக்ஷய் குமாரை வில்லனாக காட்டியிருந்தாலும் அவர் உண்மையிலேயே நல்லவராக இருந்து கெட்டவராக மாறுவதால் அவரை ரொம்ப வெறுக்க முடிவதில்லை. பரிதாபப்படவே முடிகிறது. இடைவேளைக்குப் பிறகு அவருக்கு ரஜினி உதவுவதாக கதையை அமைத்திருந்தால் கதை வலுப்பெற்றிருக்கும். ஆனால் ரஜினியின் வில்லத்தனமான சிரிப்பும், உடல் மொழியும் தியேட்டரில் அப்ளாஸ் பெறுகிறது. கடுமையாக உழைத்திருக்கிறார் ரஜினி. இந்தப் படம் நிச்சயமாக அவரை நடிகராக, ஒரு படத்தின் வெற்றிக்குப் பெரும் பங்களித்தவராக பேசப்படும்.  முதலில் இருந்து கடைசி வரை ரஜினி இயக்குநரின் நடிகராக வருகிறார். அந்தப் பாராட்டு ஷங்கருக்குப் போக வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் தான் அனைத்து நடிகர்களையும் திறம்பட நிர்வகித்து அவர்களின் சிறப்பான நடிப்பைப் பெற்றிருக்கிறார்.

எமி ஜேக்சன் அலட்டல் இல்லாமலும் ஆபாசம் இல்லாமலும் செய்திருக்கிறார். நன்றி சங்கர். அவரின் பாத்திரத்தில் ஒரு சர்ப்ரைஸ் இருப்பதும், அவருக்கும் சிட்டிக்கும் உடனான நட்பு/காதலும் நன்றாக உள்ளது. அக்ஷய் குமார் ரோபோவாக இல்லாத சாதாரண பாத்திரத்தில் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். வில்லனாக அவரின் அந்த பயங்கர தோற்றமும் அதற்கான மெனக்கெடலும்  நிச்சயமாக ஆஹா ஓஹோ ரகம் தான்!

அனைவரின் உடைகளும் மிக மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருகின்றன. ஒவ்வொருவரின் தோற்றத்தை முடிவு பண்ண எவ்வளவு ஆய்வுகள், எவ்வளவு நேரம், உழைப்பு, பணச் செலவு தேவைப்பட்டதோ ஆனால் திரை வடிவம் அந்த உழைப்பும் செலவும் வீணாகப் போகவில்லை என்பதை பறைசாற்றுகிறது. ஒவ்வொரு பிரேமும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார் சங்கர். மிக நல்ல கற்பனை வளமும் திட்டமிடலும் இல்லாவிட்டால் இந்த மாதிரி ஒரு படம் திரைக்கே வர முடியாது.

இந்தப் படத்தை கண்டிப்பாக நல்ல திரை அரங்கில் பார்க்க வேண்டியது அவசியம். ஒளி, ஒலி இரண்டும் படத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ரசூல் பூக்குட்டி ஒலி தரத்தை 3D படத்துக்கான அளவில் வேற லெவலில் மிக்ஸ் பண்ணி தந்திருக்கிறார். நிரவ் ஷாவின் ஒளிப்பதிவும் அவுட் ஆப் தி வேர்ல்ட். ரஹ்மான் பாடல்களுக்கான இசையும் அவர் துணை இசை அமைப்பாளர் குதாப் ஈ கிருபாவுடன் ஒரு சைன்ஸ் பிக்ஷன் படத்துக்கான பின்னணி இசையையும் அருமையாக தந்திருக்கிறார்கள். பல இடங்களில் வெறும் இசைக்கு தான் வேலை. கிராபிக்ஸ் மிரட்டும் போது கூடவே இசையும் சேர்ந்து மிரட்டுகிறது. படத்தொகுப்பு என்டனி. மிகவும் சவாலாக இருந்திருக்கும் இந்த மாதிரி படத்தைத் தொகுக்க. 2மணி 20நிமிடத்துக்கு கத்தரித்து தந்ததற்கு அவருக்கு பாராட்டுகள்!

இவ்வளவு சிறப்புகள் இருந்தும் முக்கியமாக ஒரு திரைப் படத்துக்குத் தேவையான கதையில் பெரிய புதுமை இல்லை, ஏன் கதையில் நம்மால் ஒன்றகூட முடியவில்லை என்றே சொல்லலாம். வசனங்கள் கருத்து செறிவுடனோ கூர்மையாகவோ இல்லை. சில இடங்களில் நகைச்சுவை வசனங்கள் உள்ளன. ஐஸ்வர்யா ராய் இந்தப் படத்தில் இல்லாதது பெருங்குறையே. நகைச்சுவை டிராக் என்று தனியாக இல்லை. ஆனால் ஆங்கில படங்கள் பல இம்மாதிரி கதைக்கு முக்கியத்துவம் இல்லாமல் ஆஷனுக்கும், சாகசத்துக்கும், சிஜிக்கும் முக்கியத்துவம் கொடுத்து சூப்பர் ஹீரோ படங்களும் சை ஃபை படங்களும் வருகின்றன. அவை ரசிகர்களால் பாராட்டு மழையில் நனைக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸ் ஹிட்களாகவும் இருக்கின்றன. அந்த மாதிரி ஒரு படம் தான் 2.0வும்.

மிக மிக அற்புதமான CG. அதுவும் அக்ஷய் குமாரும் சிட்டியும் ஒரு விளையாட்டு மைதானத்தில் சண்டை போடும் போது பிராமாதமாகவும் மிக மிக பிரம்மாண்டமாகவும் உள்ளது. சங்கர் நம் முன் வைக்கும் விஞ்ஞான கருத்துகளும், கதைக்களத்துக்கு ஏற்ற செட்களும் மிக மிக உண்மைத்தனத்துடன் இருப்பது படத்துக்கு மிகப் பெரிய ப்ளஸ். எதை செய்தாலும் நிறைய ஆராய்ச்சி செய்து ரசிகர்களுக்கு நேர்மையான படைப்பைத் தர விரும்பும் அவர் பண்பு பாராட்டுக்குரியது.

அவரின் எல்லா படத்திலேயும் ஒரு சமூக கருத்து இருக்கும். மக்கள் குற்றம் செய்து தண்டனை இல்லாமல் தப்பித்துக் கொள்வதை அவரால் ஒத்துக் கொள்ள முடிவதில்லை. இந்தியன், அந்நியன், என்று எல்லா படங்களிலும் தப்பு செய்தவன் தண்டனை அடையணும் என்பதை வலியுறுத்துவதாகவும், சுய ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் இருக்கும். அதே போல சமூக அக்கறை மனிதனுக்குத் தேவை என்பதையும் வலியுறுத்தி அறிவியல்/தொழில்நுட்பம் நல்லதுக்கும் பயன்படுத்தலாம் வில்லங்கமாகவும் பயன்படுத்தலாம், எனவே அதை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டிய கடமையை சொல்கிறார்.

கதை இன்னும் சுவாரசியமாக இருந்திருந்தால் இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்துக்கு இன்னும் கிளாசாக அமைந்திருக்கும். அது ஒரு குறை தான். இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும்போது படத்துக்கு ஆணிவேராக இருக்கும் கதைக்கு ஏன் முக்கியத்துவம் தர மறக்கிறார்கள்? அதுவும் இவ்வளவு அனுபவம் மிக்க இயக்குநர்!மற்றபடி கண்டிப்பாக திரையில் பார்த்து ரசிக்கவேண்டிய ஒரு படம். தமிழ் திரைத் துறையில் மிகப் பெரிய மைல் கல்லாக அமைந்திருக்கும் இத்திரைப்படம் பட வசூலில் வெற்றியைக் காண வாழ்த்துகிறேன்.

24 – திரை விமர்சனம்

24

சூர்யா நடிப்பிற்கு நல்ல ஸ்கோப் தந்திருக்கும் படம், மூன்று வேடங்களில் மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார். வில்லன் & ஹீரோ பாத்திரங்களில் நல்ல வித்தியாசத்தைக் காண்பித்து நடிப்பில் மிளிர்கிறார். அவரின் கேரியரில் நிச்சயம் இது ஒரு முக்கியமான படம். ஒவ்வொரு பாத்திரத்தையும் உள்வாங்கி கேரக்டராக மாறி நடித்துள்ளார். அதுவும் மணி பாத்திரத்தில் ஒரு ஜாலித் தன்மையுடனும், வில்லனாக குரூர குயுக்தியுடன் நடிப்பது பாராட்டுக்குரியது!

திரைக் கதை மட்டும் இன்னும் நன்றாக அமைந்திருந்தால் இன்னும் நல்ல படமாக இது அமைந்திருக்கும். டைம் டிராவல் கதை.  நல்ல மூலக் கதையை வைத்துக் கொண்டு பரபரவென நகரும் திரைக் கதையாக மாற்றியிருக்க வேண்டும் விக்ரம் குமார். இப்படத்தை ஹரி இயக்கியிருந்தால் இருநூறு கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து இருப்போம். ஆனால் இது விண்டேஜ் கார் மாதிரி மெதுவாக பயணிக்கிறது. முதல் பாதி வெகு நீளம். இடைவேளையின் போதே படத்தை முடித்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் குழப்பம் இல்லாமல் நகர்கிறது திரைக் கதை. சகொதர்களிடையே வரும் பகைக்கான காரணம் சொல்லாததும் படத்தில் அழுத்தத்தை குறைக்கிறது.

நித்யா மேனனுக்கு சின்ன பாத்திரமாக இருந்தாலும் நன்றாக செய்துள்ளார். சமந்தா ஸ்பெஷலாக எதுவும் இல்லை. சராசரி என்ற அளவிலே தான் அவர் பங்களிப்பு உள்ளது. தமிழ் படங்களின் ஆஸ்தான அம்மாவான சரண்யா பொன்வண்ணன் கச்சிதமாக நடித்திருக்கிறார். எல்லா அம்மாக்களும் இவ்வளவு பப்ளியாக நிஜ வாழ்க்கையில் இருந்தால் நன்றாக இருக்கும். மகனிடம் முன் கதையை சொல்லும் பொழுது நெகிழ வைக்கிறார்.

ஜனரஞ்சகப் படங்களுக்குப் பாடல்கள் தேவை எனினும் இப்படத்தில் பாடல்கள் ரொம்ப சுமார் ரகம். ரஹ்மானின் இசை என்று சொல்லவே முடியாது. மேலும் டூயட்கள் படத்தில் வேகத் தடைகளாகவே உள்ளன. சூர்யாவுக்கும் சமந்தாவுக்கும் சுத்தமாக கெமிஸ்டிரி இல்லை. அல்லது அந்த மாதிரி ரோமேண்டிக் சம்பவங்கள் சேர்க்கப்படவில்லை என்று சொல்லலாம்.

திருவின் ஒளிப்பதிவு படத்தின் பலம். சோதனைக் கூடத்தில் இருக்கும் சேதுராமனை காட்டும்போதும், அவரின் evil twin ஆத்ரேயாவை காட்டும்போதும் ஒளியில் எதோ மாயம் செய்து நல்ல வித்தியாசத்தைக் கொண்டு வருகிறார்.

24 என்ற ப்ராஜெக்டின் பெயருக்கான காரணம் புரிய வரும்போது அட போட வைக்கிறார் இயக்குநர். சின்ன சின்ன நிகழ்வுகளால் பின்னப்பட்டுள்ள கதை, லைட்டான படம். மெலோடிராமா எதுவும் இல்லை.

சூர்யா ரசிகர்கள் மட்டும் அல்லாமல் மற்ற தரப்பினருக்கும் இந்தப் படம் entertainingஆக இருக்கும். ரசிகர்களிடம் இருந்து வந்த Feed back வைத்து படத்தை trim செய்தால் நன்று.

24-1

#4varinote: நான் கண்ணாடிப் பொருளல்லவா!

kandukonden

பாடல் : கண்ணாமூச்சி ஏனடா

படம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

பாடலாசிரியர் :  வைரமுத்து

இசை: எ.ஆர்.ரஹ்மான்

பாடகர் : சித்ரா

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா ?

எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா ?

நெஞ்சின் அலை உறங்காதோ ?

உன் இதழ் கொண்டு வாய்
மூட வா என் கண்ணா…

உன் இமைக் கொண்டு விழி
மூட வா என் கண்ணா…

உன் உடல் தான்
என் உடையல்லவா….!

காதலைப் பற்றியப் பாடல். எப்பொழுதுமே காதலை சொல்வதில் இரு பாலாருக்கும் தயக்கம் இருக்கும், ஏனென்றால் ஒருவரால் சொல்லப்பட்ட காதல் மற்றவரால் நிராகரிக்கப்பட்டால் அது சொன்னவருக்கு வேதனை மட்டும் தராது, அவமானத்தையும் சேர்த்துத் தரும். சொல்லாமல் இருந்தாலும் மனம் கொந்தளித்துக் கொண்டே இருக்கும். ஆனால் பெரும்பாலான சமயம் காதல் வயப்பட்ட இருவருக்குமே ஒருவர் மற்றவரைக் காதலிப்பதுத் தெள்ளத் தெளிவாகவே தெரியும்.

இது ஒரு பெண் பாடும் பாடல். அவள் இன்னும் காதலில் விழவில்லை ஆனாலும் தன் அக்காவின் காதல் நிலை கண்டு பாடும் பாடல். பெண் மனம் ஒரு உணர்ச்சிக் குவியல். ஆணுக்கு எல்லாமே ஒரு விளையாட்டு. பெண்ணுக்குக் காதல் ஒரு சீரியஸ் மேட்டர். மீனை ஆற்றில் பிடித்துத் திரும்பி நீரிலேயே விட்டு விளையாடுவதைப் போல பெண்ணிடம் சீண்டி விளையாடுவது ஆணுக்குக் கை வந்த கலை. ஆனால் அவளுக்கோ மனதை பறிகொடுத்துவிட்டால் எல்லாமே அவன் தான்.

“எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா?” மிக முக்கியமான வரி. அவளே காதலன் பால் மயங்கி தனக்கென தனியாக எண்ணாமல் அவனைச் சார்ந்தே எண்ணத் தொடங்கிப் பிறகும் எனக்குத் தனியாக எண்ணங்கள் இல்லையா என்று கேட்பதில் நியாயமே இல்லை. ஆயினும் காதலனின் எண்ணங்களும் செயல்களும் அவள் உணர்சிகளுக்கு மதிப்புக் கொடுத்து நடக்கும்படி இருக்கவேண்டும் என்று அவள் நினைப்பதிலும் தவறேதும் இல்லை.

நெஞ்சில் அடிக்கும் எண்ண அலைகள் கடலை விஞ்சும். அவன் எப்பொழுதும் என்னிடம் காதலுடன் இருப்பானா? வேறு பெண்ணைப் பார்த்து மயங்கி விடுவானோ? கடைசி வரை காதல் நிலைக்குமா? திருமணம் கைகூடுமா? நடுவில் கைவிட்டு விட்டுப் போய்விடுவானோ என்று ஆயிரத்தெட்டுக் கவலைகள்.

இதில் தொடர்ந்து வரும் வரிகள் காதலன் எப்படி தன்னை சேர்ந்தவுடன் தான் தன் காதலுக்கே உத்தரவாதமே என்ற காதலி நினைக்கிறாள் என்ற பொருளில் வருகிறது.

//உன் உடல் தான்
என் உடையல்லவா….!//
நானே உன் உடையாக வேண்டும் -என்று சங்கத் தமிழ் வரிகள் நேரடியாக இல்லை!
ஆனால், நள வெண்பாவில் ஒன்று உள்ளது!

—ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி
இருவர் எனும் தோற்றம் இன்றிப் – பொருவெங்
கனற்கேயும் வேலானும் காரிகையும் சேர்ந்தார்
புனற்கே புனல்கலந்தாற் போன்று—-

அதாவது நளன்-தமயந்தி, ஒருவர் உடம்பில் ஒருவர் ஒதுங்குகிறார்கள். அதாவது ஒருத்தர், இன்னொருத்தரோட உடம்பாகவே ஆகிவிடுகிறார்கள். அதைத் தான் இந்தப் பாடல் வரிகளும் சொல்கின்றன.

மிக அருமையான இசை. சித்ரா தன் தேன் குரலில் உணர்ச்சிப் பொங்கப் பாடியிருகிறார். அதற்கேற்பத் திரைப்படத்தில் ஐச்வர்யா ராயின் நடனமும், முக்கியமாக அஜித்தும் தபுவும் மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன பாணியில் காதல் பார்வை பார்த்துக் கொள்வதும் பாட்டுக்குப் பெருமை சேர்க்கிறது.
youtube link for the song : http://www.youtube.com/watch?v=5ftMtHBgKTc
நள வெண்பா உதவி KRS

Link to the published post: http://4varinote.wordpress.com/2013/11/30/guest43/