ஆண்டவன் கட்டளை – திரை விமர்சனம்

andavankattalai

முதல் படத்தில் சிக்சர் அடித்துவிட்டுப் பின் வரும் படங்களில் டக் அவுட் ஆவது பல இயக்குநர்களின் சாபம். ஆனால் தொடர் ஹேட்ரிக் அடித்துள்ளார் இயக்குநர் மணிகண்டன். அருள் செழியன், அனுசரணுடன் திரைக்கதை அமைத்து முன் எடுத்த இரு படங்களுக்கும் இப்படத்துக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லாமல் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. படத்தின் பெயருக்கும் படத்துக்கும் என்ன தொடர்பு என்று தான் படம் முடிந்த பிறகும் புரியவில்லை.

வெற்றிக்கொடி கட்டு படத்தின் எப்படியாவது வெளிநாட்டுக்குப் போய் பணம் சம்பாதிப்பது, ஆனால் முடியாமல் இங்கேயே இருந்து சாதிப்பது தான் இந்தப்படத்தின் ஆரம்பமும். பின்னர் வேறு பாதையில் பயணிக்கிறது கதை. ஆனால் சொல்ல வரும் கசப்பு உண்மையை சர்க்கரைப் பாகில் நனைத்துத் தருகிறார் மணிகண்டன்.  சோகமாக சொல்லியிருக்கக் கூடிய ஒரு கதையை காக்கா முட்டைப் போலவே சுவாரசியமாக, நகைச்சுவைக் கலந்து அளித்துள்ளார்.

விஜய் சேதுபதி அமைதியாக தமிழ் சினிமா உலகில் ஒரு நல்ல இடத்துக்கு முன்னேறி வருகிறார். அலட்டல் இல்லாத, அதே சமயம் பாத்திரத்துக்கேற்ற சிறந்த நடிப்பு அவரின் பிளஸ் பாயின்ட். இந்தப் படத்தில் பிரமாதமாக நடித்துள்ளார். இறுதிச் சுற்று ரித்திகா சிங் கச்சிதமான பங்களிப்பைத் தந்துள்ளார். கார்மேகக் குழலியாக தொலைக் காட்சி ஏங்கராக, விஜய் சேதுபதிக்கு உதவுவதற்காக அவர் முதலில் யோசிப்பதும், பின் உதவப் போய் சிக்கலில் மாட்டிக் கொண்டு வெளிவர முனையும்போதும் முகத்தில் நல்ல உணர்ச்சி பாவங்கள்.

துணைப் பாத்திரங்களில் வரும் அனைவரும் மனத்தில் நிற்கின்றனர். அது மணிகண்டனின் தனிப் பட்ட வெற்றி. நாடகக் கலைஞர்/ஆசான் நாசர், லண்டனுக்குப் போய் அவதியுற்றுத் திரும்பி வரும் யோகி பாபு, இலங்கை அகதியாக வரும் அரவிந்தன் அனைவரும் அற்புதமாக நடித்துள்ளனர், அதிலும் அரவிந்தனின் நிலை நம் மனத்தில் கழிவிரக்கத்தை உண்டு பண்ணுகிறது. பூஜா தேவார்யாவும் உள்ளார். வக்கீல், வக்கீலின் உதவியாளர், நீதிபதி, பாஸ்போர்ட் அதிகாரி, என ஒவ்வொரு பாத்திரத்தையும் நுணுக்கத்துடன் செதுக்கியுள்ளார் மணிகண்டன்.

இசை K. பாடல்கள் படத்துடன் இணைந்து உறுத்தாமல் இருந்தன. பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது, வசனம் இல்லா இடங்களில் இசை பேசுகிறது. ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் நன்று.

வாழ்க்கையின் யதார்த்தத்தை, ஒரு கிராமத்தில் இருந்து நகரத்துக்கு சொந்த நாட்டிலேயே புலம் பெயர்வதில் வரும் இன்னல்களை, உண்மையாக இருக்க முயற்சி செய்கையில் பொய் வாழ்வில் வந்தால் அதை அகற்றி வாழ முற்படும் போது வரும் சவால்களையும் நகைச்சுவையுடன் காட்டுகிறார் மணிகண்டன். இன்னும் சிறப்பான படங்களை மென்மேலும் தர வாழ்த்துகள்.

aandavan-kattalai-new-1