அம்மா கணக்கு – திரை விமர்சனம்

ammakanakku

அப்துல் கலாம் இப்பொழுது உயிரோடு இருந்திருந்தால் இந்தப் படத்தைப் பார்த்துப் பாராட்டியிருப்பார். கனவு காணுங்கள் என்று அவர் சொன்னக் கருத்தை அழகாகப் படம் ஆக்கியிருக்கிறார் இயக்குநர் அஷ்வினி ஐயர் திவாரி. தனுஷ் நல்ல நல்ல படங்களாகத் தயாரிக்கிறார், வாழ்த்துகள் :-} இப்படம் இந்திப் படத்தின் மறு ஆக்கம்.

ரேவதி சமூகத்தில் மேல் அந்தஸ்தில் உள்ள பெண்ணாக, மருத்துவராக வெகு இயல்பாகப் பொருந்தி நடித்துள்ளார். அவர் வீட்டில் வேலை செய்யும் அமலா பாலுக்கு நல்ல ஒரு வழிகாட்டியாகவும் விளங்குகிறார். அமலா பால் கணவனை இழந்த single mother ஆக, வீட்டு வேலை மட்டும் அல்லாமல் மீன் அங்காடியில், கசாப்புக் கடையில் எனப் பல்வேறு இடங்களில் உழைத்துத் தன் ஒரே மகளை வளர்ப்பவராகப் பிரமாதமாக நடித்துள்ளார். மகளாக யுவஸ்ரீ நல்ல தேர்வு. கணக்கு வாத்தியார்/ஹெட்மாஸ்டராக சமுத்திரக்கனி, அவர் தரத்துக்கு ஃபூ என்று ஊதித் தள்ளக் கூடிய எளிதான பாத்திரம் அவருக்கு.

பொதுவாக பள்ளிப் பருவத்தில் ஒவ்வொருவருக்கும் தான் என்னவாகப் போகிறோம் அல்லது என்னவாக வேண்டும் என்கிற கனவு இருக்கும். ஆனால் ஏழ்மை சூழ்நிலையில் வளர்வோருக்கு, சரியான வழிகாட்டுதல் இல்லாதவருக்கு பெரிய கனவுகள் இருக்க வாய்ப்புக் குறைவு. அப்படிப்பட்ட சூழலில் வளரும் ஒரு பெண்ணின் தாயாக, மகள் நாளை தன்னைப் போலக் கஷ்டப்படாமல் முன்னுக்கு வரவேண்டும், அதற்குப் படிப்பே வழி என்று புரிந்து கொண்டு வித்தியாசமான முறையில் மகளை ஊக்குவிக்கும் தாயாக வருகிறார் அமலா பால்.

எஞ்சினியர் மகன் எஞ்சினியராக, டாக்டர் மகள் டாக்டராக, வேலைக்காரி மகள் வேலைக்காரியாக, டிரைவர் மகன் டிரைவராகத் தான் ஆக வேண்டும் என்கிற சமூகக் கட்டமைப்பை மாற்றச் சொல்கிறது இந்தப் படம். ஆனால் ஒரு பெரிய பிரச்சினைக்கு வெகு எளிதாகத் தீர்வு கண்டு விடுவது சினிமேடிக் ஆக உள்ளது. நிஜ வாழ்க்கையில் இது சாத்தியமா என்றால் சந்தேகமே! வசனங்களிலும் திரைக் கதையிலும் அழுத்தம் இல்லை. ரேவதி மருத்துவராக ஒரு காட்சியிலும் நடிக்கவில்லை. அவர் எழுத்தாளர் என்று கூட சொல்லியிருக்கலாம்.

இளைய ராஜாவின் பின்னணி இசை அருமையாக உள்ளது. ஆனால் பாடல்கள் ஈர்க்கவில்லை. படம் இரண்டு மணி நேரம் தான். சின்ன பட்ஜெட், தேர்ந்த நடிகர்கள் கொண்டு நல்ல கருத்தை ரொம்ப மெலோடிராமா இல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். வில்லனோ காதலோ இல்லாமல் நெருடல் இல்லாமல் பயணிக்கிறது கதை. ஒரு பீல் குட் மூவி.

ammakanakku1