சோலோ – திரை விமர்சனம்

நாலு சிறுகதைகள், ஒரு திரைப் படம். வித்தியாசமான வரவேற்க வேண்டிய முயற்சி. மணி ரத்தினத்தின் உதவியாளராக பல காலம் இருந்த பிஜோய் நம்பியார் இயக்கியிருக்கும் படம். துல்கர் சல்மான் நாலு கதைகளிலும் ஹீரோ. ஹீரோயின்கள் வெவ்வேறு. பொதுவாக நான் படம் பார்க்கப் போகும் முன் எதுவுமே படத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் போவேன். எனக்கு ஆச்சரியம் பிடிக்கும். ஆனால் இந்தப் படத்தில் அதுவே கொஞ்சம் குழப்பி விட்டு விட்டது. முதல் கதை முடிந்த பிறகு அடுத்து வந்ததை தொடர் சம்பவமாக நினைத்து இந்த துல்கர் முதலில் வந்த துல்கரின் மகனா என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டேன். அதனால் கொஞ்சம் முதலில் தெரிந்து கொண்டு போவதும் நல்லதே!

நாலு கதைகளிலும் கதாநாயகனுக்கு சிவனின் ஒரு பெயர். எல்லா கதைகளும் நாலு வருட காலத்தில் நடக்கிறது. அதெல்லாம் முதலில் தெரியவில்லை. படம் முடிந்து வெளியே வரும் போது அந்த பொதுத் தன்மைகள் புரிகின்றன. எல்லா கதைகளுமே இமோஷனல் டிராமா தான். முதல் கதை சட்டென்று முடிவது போல தோன்றுகிறது.  இக்கதையில் கதாநாயகன் சேகர் திக்கிப் பேசும் ஒரு பாத்திரம், அவன் காதலிக்கும் பெண் {தன்ஷிகா} பத்து வயதில் ஒரு cognitive disorder கண் நோயினால் பார்வையை பறிகொடுத்தவள். அவன் காதலியின் மேல் வைத்திருக்கும் அன்பு அற்புதம்! சொல்ல வந்த விஷயம் மிகவும் அருமையானது எனினும் அதன் தாக்கம் இருக்க வேண்டிய அளவு இல்லை.

இரண்டாவது கதை நல்ல சஸ்பென்ஸ் திரில்லர் அளவு உள்ளது. திரைக் கதையும் கச்சிதம். அதில் வரும் துல்கர் – த்ரிலோக் எப்படிபட்டவன் என்று கடைசி நிமிடங்களில் தெரியவருகிறது. இதில் துல்கர் அழகாகவும் இருக்கிறார், அவருக்குப் பாத்திரம் நன்றாகவும் பொருந்துகிறது.

இடைவேளைக்குப் பிறகு வரும் கதை மனோதத்துவ முறையில் பாத்திரங்களை அலசி பார்க்க வைக்கிறது. இதில் துல்கர் சிவா ரவுடி, எந்த உணர்ச்சியும் இல்லாமல் கொலை செய்யும் அடியாள். ஆனால் அவனுக்குள்ள முன் கதை, அவன் குடும்பம், தாய், தந்தை, தம்பி எப்படி அவனுக்கு செயலூக்கிகளாக இருக்கின்றன என்பதை பார்க்கிறோம். இந்தக் கதை முடியும் தருவாயில் துல்கரின் தம்பி ஒரு அடியாளின் துணைவியை தாயாக பாவித்து அவள் மடியில் கவிழ்ந்து அழுவது கவிதை!  இந்தப் பகுதியில் பெரிய நடிகர்கள் இருப்பினும் கதை அத்தனை சுவாரசியமாக இல்லை.

கடைசி கதையில் துல்கர்- ருத்ரா ஒரு இராணுவ அதிகாரி. காதல் கதை. ஆனால் காதலன் காதலிக்கு பச்சைக் கொடி காட்டாமல் சிவப்புக் கொடியை பெண்ணின் அப்பா காட்டுகிறார். இத்தனைக்கும் அவரும் இராணுவத்தில் பிரிகேடியர். காதலி படிக்க வெளிநாட்டு போவதாக பிரியாவிடை பெறுகிறாள். ஆனால் உண்மையில் அத்தோடு காதலன் காதலி பிரிகிறார்கள். இருவரும் வயதுக்கு வந்தவர்கள் ஏன் பெற்றோர் எதிர்ப்புக்காக திருமணம் செய்யாமல் பிரிய வேண்டும் என்று புரியவில்லை. அதன் பிறகு உண்மை காரணம் தெரிய வரும்போது சீரியஸாக இருக்க வேண்டிய வேளையில் சிரிப்பலைகளால் நிரம்புகிறது அரங்கம். அதுவரை படத்தை சீராக நகர்த்தி வந்த இயக்குனர் அங்கு சறுக்குகிறார். துல்கரின் பெற்றோராக சுகாசினியும் நாசரும். நாசரின் லீலா வினோதம் தான் பிரிவுக்குக் காரணம் என்று துல்கருக்குத் தெரிய வருகிறது. சொல்லப் படும் முன் கதை காரணமும், அதன் பின் வரும் நாயகியின் பிராமணத் திருமணம் அனைத்துமே சற்றே கேலிக் கூத்தாக இருக்கு.

பின்னணி இசையும் பாடல்களும் அருமை. அதே போல ஒளிப்பதிவும் கண்ணுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. துல்கரின் நடிப்புக்கு இந்தப் படம் நல்ல தீனி போடுகிறது. நன்றாக செய்திருக்கிறார். மற்றபடி நான்கு கதைகளை ஒருங்கிணைத்துத் தருவதிலும் பழுதில்லை.