Interstellar – திரை விமர்சனம்

interstellar-imax-movie-poster

Interstellar என்றால் நட்சத்திரங்களுக்கு இடையே நடப்பது அல்லது இருப்பது என்று பொருள். நட்சத்திரங்களிடையே ஒரு மனிதன் வாழக் கூடிய கிரகத்தைத் தேடிப் போகும் சம்பவமே படத்தின் கதையானதால் கதையின் பெயர் அதுவே.

இது ஒரு science fiction படம். நான் இந்த மாதிரி futuristic science fiction படங்களின் பெரிய ரசிகை கிடையாது. ஆனால் இந்தப் படத்தின் கதை அம்சம் என்னை வெகுவாக ஈர்த்தது. ஸ்டார் வார்ஸ் போன்ற படங்களைப் பார்த்துள்ளேன். பெரிதாக ரசித்ததில்லை. ஆனால் இந்தப் படத்தை பார்க்கும்போது பல சமயங்கள் சீட்டின் நுணியில் உட்கார்ந்தும் கண்ணில் வந்தக் கண்ணீரை துடைத்துக் கொண்டும் மிகவும் லயித்துப் பார்த்தேன். பெரிய படம். 2மணி 5௦ நிமிடங்கள். ஆங்கில சப்டைட்டில் உள்ளது. மிகவும் பிரம்மாண்டமானப் படம்.

இன்றே நம் கண் எதிரே கனிம வளங்கள் சூறையாடப் படுவதையும், தண்ணீருக்காக அல்லாடுவதையும், விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக ரசாயன உரத்தினாலும் மற்ற விஷ விதைகளாலும் பாழ்பட்டு வருவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். நம் சுயநலத்தால் நாளை நம் சந்ததியனருக்கு எந்த மாதிரி உலகத்தை நாம் விட்டுச் செல்லப் போகிறோம் என்று சிந்தித்துக் கூட பார்ப்பதில்லை.

அப்படி ஒரு விவசாயம் பொய்த்து அமெரிக்காவில் மக்கள் திண்டாடும் ஒரு வேளையில் நடக்கும் சம்பவங்களே கதையின் கரு. மாற்று உலகைத் தேட நாசா ஒரு குழுவை தேர்ந்தெடுத்து வேற்று கிரகத்திற்கு அனுப்புகிறது. அதற்கு முன்னேயும் ஒரு குழு சென்று அவர்களின் நிலை என்று சரியாகத் தெரியாமல் இருக்கிறது.

ஸ்பேஸ் க்ராப்டின் உள் பக்க வெளி பக்கத் தோற்றம், அது பயணிக்கும் பாதை, முதலில் இறங்கும் ஒரு நீர் நிலை, பின் செல்லும் ப்ளாக் ஹோல், அதன் பின் இறங்கும் ஒரு பொட்டல் காடான ஒரு குளிர் கிரகம் என்று ஒவ்வொரு ஸ்பாட்டும் வெகு நேர்த்தியான visual effectsஉடன் பிரம்மாண்டமாகவும் அதே சமயம் நுணுக்கமாக கவனத்துடன் தயாரிக்கப் பட்டு படம் பிடிக்கப் பட்டுள்ளது.

ஒரு குடும்பத் தலைவனாகவும் வேற்று கிரகத்தைத் தேடிச் செல்லும் குழுத் தலைவனாகவும் Matthew McConaughey பிராமதமாக நடித்துள்ளார். அவரின் தந்தை பாசம், அறிவியல் ஆர்வம், முக்கியமாக எல்லாவற்றிற்கும் மேலான ஒரு சக்தி நமக்கு உதவுகிறது என்பது புரிந்து அதன் பின் அவர் எடுக்கும் நடவடிக்கைகள் என்று கதை முழுதும் அவரே கோலொச்சுகிறார்.

இந்தக் கதையில் முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டியது wormhole என்பதைப் பற்றியது. இதற்கு இன்னொரு பெயர் Einstein-Rosen bridge என்பதாகும். இது ஸ்பேசில் நேரத்தை சேமிக்கும் ஒரு குறுக்கு வழி என்று கொள்ளலாம். ஒரு tunnelஐ நினைத்துக் கொள்ளுங்கள். டன்னலின் ஒரு பக்கம் ஒரு நேரம், இன்னொரு முடிவில் வேறொரு நேரம். அது இந்தக் கதையைப் புரிந்து கொள்ள தேவையான ஒரு புது விஷயம்.

இதைத் தவிர பூமிக்கும் ஸ்பேசில் இருக்கும் கிரகங்களுக்கும் புவி ஈர்ப்பு சக்தியில் (gravity) மட்டும் மாற்றம் இல்லை, நேரத்தைக் கணக்கிடுவதிலும் மாற்றம் உள்ளது என்பதும் இப்படத்தின் அடித்தளம் ஆகிறது. எப்படி தேவர்களின் ஒரு நாள் நமக்கு ஒரு வருடம் என்று சொல்லக் கேட்டிருக்கிறோமோ அதே மாதிரி அந்தத் தத்துவத்தை இங்கே அறிவியல் பூர்வமாக இந்தக் கதையில் பயன்படுத்துகிறார்கள். ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்து அங்கே தங்கும் இரண்டு மணி நேரம் கூட பூமி நேரத்தில் பல வருடங்களாகக் கணக்காகிறது.

மேலும் நாம் அன்பு செலுத்துபவரிடம் நம்மால் அமானுஷியமாக தொடர்பு கொண்டு எண்ணங்களை பரிமாறிக் கொள்ள முடியும் என்று கிழக்கு நாடுகளின் சித்தாந்த்தையைம் இந்தக் கதை கையாள்கிறது. {அதனால் தான் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்ததோ என்னவோ 🙂 }

இந்த மாதிரி ஒரு கதையை visualise பண்ணி அதை செயல் வடிவாக்கம் செய்துள்ள கிறிஸ்டபர் நோலனின் திறனை கண்டு பிரமித்து நிற்கிறேன். இதில் படத்தின் பின் பகுதியில் physics வைத்துப் பல விளக்கங்கள் வருகின்றன. எனக்கு அவை துல்லியமாகப் புரியாவிட்டாலும் குத்து மதிப்பாகப் புரிந்து கொண்டேன்.

இசை Hans Zimmer. மிகவும் அற்புதம். படத்தோடு ஒன்றியுள்ளது இசை. விண்கலத்தில் வரும் ஓசைகளும் விண்வெளியில் பயணிக்கும் போது எழும் சத்தங்களும் நம்மை அந்த இடத்துக்கேக் கொண்டு சென்று விடுகிறது. Special effectsக்கும் மற்ற ஆராய்ச்சிகளுக்கும் எவ்வளவு நேரமும் பணமும் செலவழித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

வார நாள் மதிய ஆட்டத்திற்கு சாந்தம் திரை அரங்கம் நிறைந்திருந்தது. கிறிஸ்டபர் நோலனின் பெயர் திரையில் வந்த போதும் படம் முடிந்த பிறகும், அரங்கில் இருந்த அனைவரும் கை தட்டி பாராட்டைத் தெரிவித்தது மகிழ்ச்சியாக இருந்தது 🙂 #TheKnowledgeableChennaiCrowd

interstellar