Court – திரை விமர்சனம்

01-court

இந்த வருடம் பிற மொழி படங்கள் வரிசையில் நம் நாட்டில் இருந்து ஆஸ்கர் நாமினேஷனுக்காகனப் படம் கோர்ட். காக்கா முட்டை, குற்றம் கடிதல், பாகுபலி, பஜ்ரங்கி பாய்ஜான், மாசான் ஆகிய படங்களும் போட்டியில் இருந்தன. அவைகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு மராத்திப் படமான கோர்ட் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்தத் தேர்வில் எத்தனையோ அரசியல் குறுக்கீடு இருந்திருக்கும். ஆயினும் அவைகளைத் தாண்டி இவ்வளவு நல்ல படத்தைப் புறக்கணிக்காமல் துணிந்து தேர்ந்தெடுத்ததற்கு தேர்வுக் குழுவிற்கு பாராட்டும் நன்றியும்.

ஒரு வயது முதிர்ந்த நாட்டுப் பாடல்களைப் பாடும் தலித் போராளி நாராயண் காம்ப்ளே (வீரா சாத்திதர்). அவர் ஒரு குப்பத்துப் பகுதியில் மேடையில் பாடிக் கொண்டிருக்கும்போது கைது செய்யப் படுகிறார். அப்பகுதியில் வசித்த வாசுதேவ் பவார் என்னும் ஒரு சாக்கடை அள்ளும் தொழிலாளியை தற்கொலைக்குத் தூண்டியதாக அவர் மேல் பிராது. அதற்காகக் கைது செய்யப் படுகிறார். அவர் பாடிய பாடல் வாசுதேவ் பவாரை சாக்கடை ஓட்டையில் (manhole) விழுந்து தற்கொலை செய்யத் தூண்டியுள்ளது என்று போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை புழல் மாதிரி ஒரு சிறையில் அடைத்து விடுகின்றனர். இக்கட்டத்திலும் சரி படம் முழுக்கவும் சரி ஒரு மெலோடிராமாவும் இல்லை. யதார்த்தமாக அனைத்தும் காட்டப் படுகிறது. அதானாலேயே ஒவ்வொரு காட்சியில் காட்டப்படும் உண்மை நிலை முகத்தில் அறைகிறது.

இப்படத்தை எழுதி இயக்கியவர் சைத்தன்ய தம்ஹானே. இயக்குநராக இது இவருக்கு முதல் படம். இப்படத்தைத் தயாரித்து முக்கிய வேடத்தில் காம்ப்ளேவின் வக்கீல் வினய் வோராவாக வருகிறவர் விவேக் கோம்பர். அவரும் சரி, அரசு தரப்பு வக்கீல் நூதனாக வரும் கீதாஞ்சலி குல்கர்னியும் சரி மிகையில்லாமல் பாத்திரத்தில் பொருந்தி வாழ்ந்துள்ளார்கள். அதே போலப் போராளி நாராயண் காம்ப்ளேவாக நடிக்கும் வீரா சத்திதாரும் மிகச் சரியான தேர்வு. அவர் நிஜ வாழ்க்கையிலும் ஒரு human rights activist.

நம் கோர்ட் கேஸ்கள் நடைமுறையில் மிக மெதுவாக நகருவதைக் காட்ட மிகவும் நிதானமாகவே நகர்கிறது கதை. அது தான் நம்மை உலுக்கும் factor. ஒரு மடத்தனமானக் குற்றச்சாட்டு, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தூண்டப்பட்டு ஒரு முதிய, உடல் நலம் குன்றியவரின் மேல் போடப்பட்டுள்ளது. ஆனால் சொல்லப்பட்டக் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பதை நிருபித்து ஒரு பெயில் வாங்க மட்டுமே பல மாதங்கள் ஆகின்றன. அரசு தரப்பு வக்கீல் ஒவ்வொரு ஹியரிங்கிலும் சட்ட நுணுக்கங்களை மேற்கோள் காட்டி பெயில் கிடைக்காமல் செய்கிறார். அவர் தன் வேலையை 9 to 5 ஜாப் மாதிரி பார்க்கிறாரே தவிர ஒரு மனிதனின் வாழ்க்கையே தன் கையில் உள்ளது என்ற பொறுப்புணர்ச்சி அவரிடம் சிறிதும் இல்லை. அது தான் எங்கும் நடப்பதும் கூட. காம்ப்ளேயின் வக்கீல் பொறுமையாகப் போராடுகிறார். கோபப்பட்டோ அவசரப்பட்டோ ஒன்றும் ஆகப் போவதில்லை என்று அனுபவம் அவருக்குப் பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறது. செஷன்ஸ் கோர்ட் நீதிபதி பிரதீப் ஜோஷி ஒரு தனி பிரகுரிதி. அம்மாதிரி நீதிபதிகள் தாம் இந்தியா முழுவதும் உள்ளனர். ஒரு நீதிபதி பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்க வேண்டும். ஆனால் அவர்களும் மனிதர்களே. பிரிட்டிஷ் காலத்து சட்ட திட்டங்களை இன்னும் பாவித்துக் கொண்டு ரூல்ஸ் என்ன அனுமதிக்கிறதோ அதை மட்டுமே தீர்ப்பாக எழுதி…. அப்படியே வாழ்கிறார்! ஒரு காட்சியில் வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் ஸ்லீவ்லெஸ் உடையில் வருவதால் அதை கோர்ட் விதிப்படி அனுமதிக்க முடியாது என்று வழக்கை எடுத்துக் கொள்ளாமல் இன்னொரு தேதிக்கு மாற்றி வைக்கிறார் 🙂

கதைப்படி நாராயண் காம்ப்ளே எழுதும் சில பாடல்களில் தற்கொலையைத் தூண்டும் விதமாக இருப்பதற்குக் காரணம் தலித்களின் நிலைமை அவ்வளவு கேவலமாக இருப்பதால், அவ்வாறு வாழ்வதற்குப் பதில் இறந்தே போகலாம் என்று நினைத்து அவர் எழுதுவதாகக் காட்டப்பட்டுள்ளது. அவர் அம்மாதிரி பாடல்கள் எழுதுவதால் தலித்களிடையே எழுச்சி ஏற்படும் என்று பயந்து போலிஸ் அவரை பொய் வழக்குகளில் கைது செய்கிறது. மேலும் இது மராத்திக் கதை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அங்கு நடப்பவைகளே இப்படத்தின் அடிநாதமாக உள்ளது. அரசு தரப்பு வக்கீல் குடும்பத்துடன் ஒரு நாடகத்துக்குச் செல்கிறார். அதில் பிற மாநிலத்தவர் மகாராஷ்டிரத்தில் வேலை செய்வதை எதிர்த்து வரும் காட்சிகளில் நாடகத்தில் பலத்த கைத்தட்டல் வரும். வக்கீலும் அவர் குடும்பத்தினருமே அக்காட்சியைக் கொண்டாடுவர்.

சாக்கடை அள்ளும் தொழிலாளியாகப் பணி செய்யும் ஒருவருக்குத் தற்காப்புக் கவசங்களோ, தேவையான கருவிகளோ கூட அரசாங்கம் தருவதில்லை என்று இந்த வழக்கு விசாரணையில் தெரியவரும். ஆயினும் அதைப் பற்றி நீதிபதியோ மற்ற எவருமே கவலைப்படமாட்டார்கள். நம் நாட்டில் எல்லாம் இப்படித்தான் என்று எடுத்துக் கொள்ளும் மனநிலையை நன்றாகக் காட்டுகிறார் இயக்குநர். இறந்தவரின் மனைவியை விசாரிக்கும்பொழுது அவர் தன் கணவர் துர்நாற்றத்தை சகித்துக் கொள்ள தினமும் குடித்துவிட்டு தான் சாக்கடை குழாய்க்குள் இறங்குவார் என்று சர்வ சாதாரணமாகச் சொல்வார். முகத்தில் துயரத்தின் சாயலே இல்லாமல் இயந்திரத் தன்மையுடன் அவர் கணவருடனான வாழ்க்கையையும், விபத்தையும் விவரிக்கும்பொழுது அவரின் துக்கத்தின் தாக்கத்தை இன்னும் ஆழமாக நம்மால் உணரமுடிகிறது.

இக்கதையின் சுவாரசியமே கோர்ட்டில் இருக்கும் முக்கியப் பாத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை இயக்குநர் காட்டும் விதம் தான். ஒவ்வொருவரின் கேரக்டரும் அதில் வெளிப்படுகிறது. அவரவர் அவரவர் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அரசு தரப்பு வக்கீல் ஒரு நடுத்தரவர்கத்தின் குடும்பத் தலைவி. அவளின் செயல்பாடுகளும் அப்படியே. நாராயண் காம்ப்ளேயின் வக்கீல் பணக்காரர் ஆனால் மனிதாபிமானம் மிக்கவர்.

கோர்ட் அறை, வளாகம், முக்கிய பாத்திரங்களின் வீடுகள், போலிஸ் ஸ்டேஷன், ஆகியவை துல்லியமாக வடிவமைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு சின்ன விஷயமும் நுட்பமாக கவனித்து சேர்க்கப்பட்டுள்ளன. செட் டிசைனர் நிலேஷ் வாகுக்குப் பாராட்டுகள்.

நம்முடைய லீகல் சிஸ்டம் எப்படிப்பட்டது, அதன் அவலங்கள் என்ன என்பதை முழுமையாகப் படம் பிடித்துக் காட்டுகிறது கோர்ட். இப்படத்தின் ஒரே குறை, படம் டாகுமெண்டரி போல இருப்பது தான். பின்னணி இசைத் தவிர வேறு இசை கிடையாது. படத்தின் குணத்தினால் நிசப்தமே பல இடங்களில் தேவையாக இருப்பதால் இசை அமைப்பாளரும் அதை உணர்ந்து அமைதி காத்துள்ளார்.

இப்படம் ஆஸ்கர் வெல்லுமா என்பது மற்ற நாடுகளில் இருந்து வந்திருக்கும் படங்களின் தரத்தைப் பொறுத்தே அமையும். வெற்றி பெற வாழ்த்துவோம் 🙂 சப் டைட்டிலுடுன் படம் உள்ளது. பார்க்கவும் 🙂

o-COURT-MARATHI-FILM-CHAITANYA-TAMHANE-facebook