கன்னடத்தில் லூசியா என்ற பெயரில் சக்கை போடு போட்ட படம் தமிழில் எனக்குள் ஒருவனாக வந்துள்ளது. நான் கன்னடப் படம் பார்க்கவில்லை அதனால் ஒப்பீடு பண்ண முடியாது. ஹீரோ சித்தார்த். எந்த நடிகரும் செய்ய விரும்பும் பாத்திரமாக அமைந்த இந்தக் கதையின் நாயகன் ரோல் இவருக்குக் கிடைத்திருக்கிறது. வாய்ப்பை முழுவதுமாகப் பயன் படுத்திக் கொண்டுள்ளார். காவியத் தலைவனில் பாத்திரம் சரியாக அமையாததால் நன்றாக நடித்தும் அதில் அவர் சோபிக்கவில்லை.
இந்தப் படத்தில் அவர் கேரக்டரின் complex தன்மையை புரிந்து கொண்டு ரொம்ப நன்றாக நடித்துள்ளார். இந்தப் பாத்திரத்திற்கும் இதை விட தமிழில் உள்ள இளம் நடிகர்கள் வேறு யாரும் இவ்வளவு சரியாகப் பொருந்தியிருப்பார்களா என்பது சந்தேகமே. சித்தார்த்தின் நடிப்பு உண்மையிலேயே அற்புதம். ஒரு கேரக்டரில் மிகவும் அழகாகவும் வருகிறார். A real heart throb! அவரை கூடுதல் அழகாகக் காட்டிய ஆடை வடிவமைப்பாளருக்கு ஒரு “ஓ”!
படம் ஒரு ஆர்ட் பில்ம் மாதிரி உள்ளது. சினிமாவை ரொம்ப விரும்பும் மக்கள் தான் இந்த மாதிரி ஒரு வித்தியாசமான முயற்சியை பாராட்டுவார்கள். கன்னட ஆடியன்ஸ் சிலாகித்தப் படம், ஆயினும் நம்மூரில் இது எப்படி ஓடும் என்று எனக்குத் தெரியவில்லை. ஓரிடத்தில் எது கனவு எது நிஜம்னே எனக்கு இப்போப் புரியலை என்று சித்தார்த் ஒரு வசனம் பேசுவார். அதற்கு தியேட்டரில் அப்படி ஒரு அப்ளாஸ். (அதாவது ஆடியன்ஸ் படத்தைப் பார்த்து வந்த பீலிங்கை அந்த வசனம் பிரதிபலிக்கிறது என்று கொள்க)
இயக்குநர் பிரசாத் இராமர் மூன்று கதைகளை ஒரே சமயத்தில் parallel ஆக சொல்லி அதில் நம்மை லயிக்கவும் வைத்துத் திறமையாகக் கையாண்டுள்ளார். ஆயினும் ஒரிஜினல் படம் நிச்சயம் இதை விட நன்றாக இருந்திருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. இதில் நிறைய இடங்களில் தொய்வு. இன்னும் வலுவானத் திரைக் கதை படத்திற்கு விறுவிறுப்பு சேர்த்திருக்கும். எனக்கென்னவோ கதைக் கருவான “லூசியா”வுக்கு தமிழ் versionல் போதிய முக்கியத்துவம் தரப் படவில்லை என்று தோன்றுகிறது.
யோக் ஜப்பி சிரிப்புப் போலீஸ் மாதிரி ஆகிவிட்டார். அவர் வரும் சீன்கள் எப்படி பட்டவையாக இருந்தாலும் தியேட்டரில் சிரிப்பலை தான். தனி டிராக்காகவோ அல்லது படத்துடன் இழைந்தோ எந்த நகைச்சுவையும் இல்லாதது கொஞ்சம் குறையாகப் படுகிறது.
நாயகி தீபா சந்நிதி, கன்னட நடிகை. நன்றாகச் செய்துள்ளார். அழகு நடிப்பு இரண்டுமே பாஸ் மார்க்கிற்கு மேல்.
இசை சந்தோஷ் நாராயணன். பின்னணி இசை super! பாடல்களும் நன்றாக உள்ளன. இரண்டு பாடல்களில் பாடகர் சாய்ஸ் எனக்குப் பிடிக்கவில்லை, (ஏண்டி இப்படி – சந்தோஷ் நாராயணன் & குட்டிப்பூச்சி by மாணிக்க விநாயகம்) சுத்தமாக சித்தார்த்துக்குக் கொஞ்சமும் பொருந்தவில்லை. பிரபலமாகவே by சித்தார்த்த் அருமை!
கடைசியில் வரும் ட்விஸ்ட் ஏன் கடைசியில் வருகிறது என்பது ஒரு பெரிய கேள்வி. அதை கதையின் எந்தப் பகுதியிலும் சொல்லியிருக்கலாம், ஆனால் கடைசியில் சொல்வதால் தான் படத்தை இரண்டு மணி இருபத்தைந்து நிமிடங்கள் வரை நீட்டிக்க முடிகிறது.
புதிய முயற்சியை மேற்கொண்ட தயாரிப்பாளர்கள் CV குமார், வருண் மணியன், YNot சஷி, அபினேஷ் இளங்கோவன் ஆகிய நால்வருக்கும் பாராட்டுக்கள். சித்தார்த்தின் உழைப்புக்குக் கூலி கிடைக்குமா என்று தெரியவில்லை.