நீர் பறவை – திரை விமர்சனம்!

neerparavai

பொதுவாக திரைக்கதையில் பல பிரச்சினைகளை கையாளும் பொழுது ஏதாவது ஒன்றை கோட்டை விட்டுவிடுவார்கள் அல்லது முக்கியத்துவம் குறைந்து நீர்த்துப் போகும். நீர் பறவையில் அது தவிர்க்கப் பட்டிருக்கிறது. சீனு இராமசாமியின் மிகச் சிறந்த முயற்சி! இது வெற்றி படைப்பாக மாறுவது தமிழ் மக்களின் ரசனையை பொறுத்தது. ஒரு டாகுமெண்டரியில் சொல்லவேண்டிய கருத்துக்களை அழகிய திரைப்படமாக வடிவமைத்ததற்கு அவருக்கு பாராட்டுக்கள். ஜெயமோகனின் வசனங்கள் அளவோடும் தெளிவாகவும் இருப்பது படத்துக்கு பலம். பாத்திரத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார் இயக்குனர். விஷ்ணு கதாநாயகனாக, சுனைனா மற்றும் நந்தித்தா தாஸ் கதாநாயகிகளாக கனகச்சிதம். சரண்யாவுக்கு இந்த மாதிரி அம்மா பாத்திரம் அல்வா சாபிடுவது போல.

இப்பொழுது இளைஞர்கள் இடையே தலை விரித்தாடும் குடி போதைக்கு அடிமையாகும் பிரச்சினை, அதற்கான தீர்வு, மீனவர்களின் வாழ்க்கை, அதில் மிக முக்கியமாக இலங்கை அரசால் சுடப்பட்டு இறக்கும் மீனவர்களை அரசாங்கம் கண்டுகொள்ளா நிலைமை அனைத்தும் அருமையாகக் கையாளப் பட்டுள்ளது. முழுக்க முழுக்க கிரித்துவக் கதை. எல்லா முக்கிய பாத்திரங்களும் கிரித்துவர்கள். அவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமான நல்லிக்கணக்கத்தை கதையோடு கோர்வையாக சொல்லியிருப்பது இயக்குனரின் திறமை. இந்துக்களையும் விட்டு விடக்கூடாது என்பதற்காக இந்தக் கதையில் ஒரு நல்ல இந்து பாத்திரப் படைப்பும் உள்ளது. உண்மையில் இனி சுதந்திர தினம் அல்லது குடியரசு தினங்களில் மத நல்லிக்கணத்தைச் சித்தரிக்கும் வகையில் சின்னத் திரையில் காண்பிக்க இது ஒரு சிறந்த படம் 🙂

டைடானிக் படம் போல படம் முழுவதும் இழையோடும் காதல் படத்தைக் காப்பாற்றுகிறது. இளவயது பாத்திரத்துக்கு சுனயனாவும், வயதான பின் நந்தித்தா தாசும் நல்ல தேர்வு. இயக்குனர் அனைவரையும் நன்றாக நடிக்க வைத்துள்ளார். இதில் அனாயாசமாக ஸ்கோர் பண்ணுவது இஸ்லாமிய பாத்திரத்தில் வரும் சமுத்திரக்கனி தான். அவர் உயரமும் கம்பீரமும் அவருக்கு நல்ல ப்ளஸ் பாயின்ட்.

பின்னணி இசை நன்றாக உள்ளது. ஒரு பாடலைத் தவிர மற்ற பாடல்கள் என்னை கவரவில்லை. ஒளிப்பதிவு பிரமாதம். திரை அரங்கை விட்டு வெளியேறும் போது காலில் உள்ள  ராமேஸ்வரம் மணளைத் தட்டி விட்டு எழுந்து வர வேண்டும் போலத் தோன்றுகிறது. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் no peace of mind என்ற நடிகர் திலகத்தின் ஒரு வசனம் போல எல்லாம் இருந்தும் படம் முடியும் போது ஏதோ இல்லாத மாதிரி ஒரு வெறுமை. அது எடுத்துக் கொண்ட சப்ஜெக்டினால் அப்படி நமக்கு தோன்றுகிறது என்று நினைக்கிறேன்.

Laudable effort, must appreciate the whole team for a job well done! 🙂