கொபசெ- (கொள்கை பரப்பு செயலாளர்) மாதிரி படம் பெயர். Chetan Bhagath எழுதிய The Three Mistakes Of My Life கதையைத் தழுவி எடுக்கப் பட்டிருக்கும் திரைப்படம்.
மூன்று நண்பர்கள், ஒவ்வொருவரும் ஒரு விதம். இவர்கள் இணைந்து ஒரு விளையாட்டுச் சாதனங்கள் விற்கும் கடையை திறக்கிறார்கள். கதைக் களம் அஹமதாபாத், இந்து முஸ்லிம் சச்சரவுகள், பூஜ் பூகம்பம், கோத்ரா ரயில் எரிப்பு, இளைஞர்களின் எதிர்பார்ப்புகள், அவர்களின் வேகம், பொறுமையின்மை அனைத்தும் சரியான முறையில் காட்டப்படுகிறது. முக்கியமாக விஸ்வரூபத்திற்கு தமிழ்நாட்டில் ஏற்பட்ட தடையும் பின் போராட்டங்களும் இந்தப் படத்திற்கு இல்லாதது பாராட்டுக்குரியது. ஏனென்றால் நேரடியாக கோத்ரா புகைவண்டி எரிப்பும் அதன் பின் தீவிரவாத இந்துக்கள் எழுப்பும் வெறி தாக்குதலும் அப்படியே பதிவு பண்ணியிருக்கிறார்கள்.
இதில் மூன்று நண்பர்களில் ஒருவனுக்கு (கோவிந்த்)வியாபார முன்னேற்றமே குறி, அடுத்தவனுக்கு (இஷான்) அலி என்ற முஸ்லிம் சிறுவனுக்கு கிரிக்கெட் ஆடுவதில் உள்ள தனித் திறமையை வெளிக் கொண்டு வரவேண்டும் என்பது ஒன்றே குறிக்கோள். அடுத்த நண்பன் (ஓமி) தன் விருப்பத்துக்கு மாறாக அரசியலில் நுழைய வேண்டிய ஒரு நிர்பந்தம்.
முதல் பாதி சிறிது மெதுவாகவே நகர்கிறது. இரண்டாம் பாதி விறுவிறுப்பாக உள்ளது. இஷானின் தங்கை படத்தின் நாயகி. கற்பனைக் கதையை ஏதோ உண்மை கதையைப் பார்ப்பது போன்ற தோற்றத்தை இயக்குனர் அபிஷேக் கபூர் ஏற்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது. சந்தர்ப்ப சூழ்நிலைகள் எப்படி வாழ்க்கையை தடம் புரண்டு ஓடச் செய்கின்றன என்பதே படத்தின் ஒன் லைன்!
பின்னணி இசை மற்றும் பாடல்கள் நன்றாக உள்ளன. வன்முறை ரொம்ப இல்லை. சிறந்த குடும்ப சித்திரம். நான் வியாழக்கிழமை சத்தியம் திரை அரங்கில் பார்த்ததால் சப் டைட்டிலுடன் பார்த்து இந்தி வசனத்தை புரிந்துகொள்ள முடிந்தது. இந்தி தெரியாதவர்கள் வியாழன் அன்று சென்று பார்க்கலாம்.
என்னை இந்தப் படத்தில் கவர்ந்தது படத்தில் இழையோடியிருக்கும் ஒரு தேசிய உணர்வு. அன்புக்கும் பாசத்துக்கும் அனைத்து வேற்றுமைகளையும் வெல்லும் சக்தி உண்டு.