இஞ்சி இடுப்பழகி – திரை விமர்சனம்

inji

தெலுங்கு தமிழ் இரண்டிலும் ஒரே சமயத்தில் எடுத்தப் படம் இது. தெலுங்கில் சைஸ் ஜீரோ, தமிழில் இஞ்சி இடுப்பழகி. க்ளோஸ் அப் சீன்களில் தமிழ் உச்சரிப்பு சரியாக உள்ளது. லாங் ஷாட்களில் தெலுங்கு வாயசைப்புக்குத் தமிழ் வசனம் சரியாக ஒட்டவில்லை. லாங் ஷாட்ஸ் எல்லாம் ரீ ஷூட் பண்ணாமல் ஒப்பேத்தி விட்டார்கள். மேலும் தெலுங்கு ரசிகர்களுக்குப் பிடித்தமான ஸ்டேப்சுடன் குத்து டேன்ஸ், நிறைய தெலுங்கு நடிகர்கள் படத்தில் இருப்பது, ஆந்திர மாநிலத்தில் படப்பிடிப்பு நடத்தியிருப்பது, இவையால் படத்தில் தெலுங்கு வாடை அதிகம் வீசுகிறது.

ஒரு குண்டு பெண்ணின் இன்னல்களையும்,  அதனால் அவளின் திருமணத்திற்கு ஏற்படும் தடைகளையும் காட்டுகிறது இப்படம். படத்தில் நல்ல மெஸ்சேஜ் உள்ளது. அனுஷ்காவும் ரொம்ப நன்றாக நடித்துள்ளார். அனுஷ்காவின் தொண தொண அம்மாவாக ஊர்வசி. அனுஷ்காவும் ஊர்வசியும் தான் படத்தின் இரு தூண்கள் {figuritively also, pardon my pun 🙂 }ஆனால் திரைக்கதை தான் பயங்கரமாக சொதப்பி விடுகிறது. காமெடி என்று அவர்கள் நினைத்து சேர்த்திருக்கும் வசனங்கள் எல்லாம் மருந்துக்குக் கூட சிரிப்பை வரவழைக்கவில்லை.

வெகு விரைவில் உடல் எடையை குறைக்க உதவும் சைஸ் ஜீரோ நிறுவனத்தின் முதலாளியாக வரும் பிரகாஷ் ராஜ் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான நடிப்பைத் தருவது சலிப்பூட்டுகிறது. மாஸ்டர் பரத்துக்கு (போக்கிரியில் உப்புமா பையன்) அனுஷ்கா தம்பியாக, நல்ல ரோல். வேறு நல்ல இயக்குநரிடம் இன்னும் நன்றாக சோபிப்பார் என்று நம்புகிறேன்.

முதல் பாதி பெட்டரா இரண்டாம் பாதி பெட்டரா என்று யோசிக்கும்போது அது அவரவர் ரசனையைப் பொறுத்தது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் மொத்தத்தில் படம் பல இடங்களில் விறுவிறுப்பு இல்லாமல், சுவாரசியம் இல்லாமலும் தொய்கிறது. ஒரு நல்ல திரைக் கதையும் நல்ல எடிட்டரும் இருந்திருந்தால் இப்படம் ஹிட் படமாகியிருக்கும்.

அனுஷ்கா இப்படத்திற்காக எடை கூடினார் என்று செம பில்ட் அப் கொடுத்தார்கள். அதெல்லாம் ஒன்றும் எடை கூடவில்லை. எல்லாம் பாடி சூட் தான். அது நன்றாகத் தெரிகிறது. ஆ மறந்துவிட்டேனே, படத்தின் ஹீரோ ஆர்யா! நல்ல பிட் பாடி. மத்தபடி நடிக்க ரொம்ப வாய்ப்பில்லை, அவரும் பெருசா மெனக்கெடவும் இல்லை.

இசை மரகத மணி. இனிமையான இசை. நிறைய நல்ல விஷயங்களைச் சொல்ல வருகிறார்கள், அனால் தடுமாறி விட்டார் இயக்குநர் பிரகாஷ் கோவெலமுடி. ஒரு சண்டை காட்சியோ, டாஸ்மாக் காட்சியோ இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக அமைந்தும் நம்மை சீட்டில் கட்டிப் போடத் தோற்று விடுகிறார் இயக்குநர். தெலுங்கில் ஓடுமோ என்னமோ.

inji1