இரு முகன் – திரை விமர்சனம்

irumugan

ஆரம்பம் அட்டகாசம்! பான்ட் பட ஆரம்பம் மாதிரி ஒரு பைட் sequence நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. தொடர்ந்து வரும் காட்சிகளும் சுவாரசியத்தைக் கூட்டுகிறது. அரிமா நம்பி படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கரின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் இரு முகன் வெளியாகியுள்ளது.

விக்ரம் நடிப்பைப் பற்றி புதிதாக என்ன இருக்குச் சொல்ல? தேர்ந்த நடிகர். ஒரு முகனாக இந்திய இன்டலிஜென்ஸ் RAW ஏஜண்டாக கச்சிதமான ஒரு பாத்திரம் அவருக்கு. புஜ பல பராக்கிரமத்தையும், கட்டுமஸ்தான உடலமைப்பையும் காட்ட நல்லதொரு வாய்ப்பு. அடுத்த முகன் வில்லனாக பெண் தன்மையுடன் ஒரு பாத்திரம். மிகவும் ஸ்டைலிஷாக அதே சமயம் வில்லத்தனத்துடன் புகுந்து விளையாடுகிறார். இரு பாத்திரங்களுக்கும் பெருத்த வித்தியாசத்தை காட்டுகிறார்.

நித்யா மேனன் இன்னொரு RAW ஏஜண்டாக நல்ல தேர்வு. நயன்தாராவுக்குக் கவர்ச்சி அவர் நடிப்பிலேயே வெளிப்படுகிறது. உண்மையில் இப்பொழுது அவர் தமிழ் திரையுலகில் டாப் ஸ்டார்! வரும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்கிறார், இந்தப் படத்திலும் பாராட்டைப் பெறுகிறார். நாசருக்கு எப்பவும் போல் ஒரு பாத்திரம். தம்பி ராமையா மலேசிய போலிசாகக் கடுமையாகக் கடுப்பேத்துகிறார்.

ஒரு தீவிரவாத தாக்குதலை விசாரிக்கும் குறிக்கோளோடு மலேசியாவிற்குப் பயணப்படும் கதை அங்கு போலி மருந்து/இரசாயன தில்லுமுல்லுகளைக் கண்டறிய முற்படுகையில் திக்குத் தெரியாமல் தள்ளாடுகிறது. ஒரு கெட்டவன் வேதியல் பொருளால் எளிதாகப் பல்லாயிரக் கணக்கான் மக்களைக் கொல்ல முடியும் என்கிற அனுமானமே பகீர் என்றுள்ளது. அது தான் கதைக் களம். இரசாயனத்தைக் கொண்டு அதிக சக்திப் பெறுவதற்காக ஹிட்லர் பயன்படுத்திய உக்தியினைக் கூட நன்கு ஆய்வு செய்து தெரிவிக்கும் இயக்குநர் அதே கவனத்தைத் திரைக்கதை அமைப்பதிலும் செலுத்தியிருக்கலாம்.

மிக சக்திவாய்ந்த வில்லனை பிடித்தப் பின் லாக்கப்பில் அவரை அவ்வளவு அஜாக்கிரதையாகத் தான் கையாள்வார்களா? ரொம்ப எதிர்பார்ப்போடு ஆரம்பிக்கும் நித்யா மேனன் பாத்திரமும் பொசுக்கென்றாகிவிடுவது சோகமே. அதன் பின் எல்லாம் லாஜிக் மீறல்களே. படத்திற்கு இசை பலம் சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்களும் சுகமில்லை, பின்னணி இசையும் சரியில்லை. R.D.ராஜசேகரின் ஒளிப்பதிவு அருமை. மலேசியா/காஷ்மீர் பகுதிகள் மிக நன்றாகப் படமாக்கப்பட்டுள்ளன. கண்ணுக்கு விருந்தாக அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

ஆனால் சும்மா எல்லாரும் சூப்பர் பவருடன் சண்டை போடுவது அலுப்பைத் தருகிறது. நீளத்தையாவது குறைத்திருக்கலாம். நடிக்க இவ்வளவு மெனக்கெடும் விக்ரம் கதைத் தேர்ந்தெடுக்க கொஞ்சம் மெனக்கெடக் கூடாதா?

irumugan1