இது நம்ம ஆளு – திரை விமர்சனம்

Idhu-Namma-Aalu-Songs-Release-on-May-10th

முழு நீள நகைச்சுவை படம் பார்த்திருக்கிறோம், இது முழு நீள காதல் பாடம். காதலிப்பதால் வரும் எதிர்ப்பார்ப்புகள், கிளுகிளுப்புகள், மயக்க நிலை, மோன நிலை, அதன் பின் வரும் உறவு பிரச்சினைகள், உப்புப் பெறாத விஷயங்களால் வரும் சிக்கல்கள், காதல் தோல்விக்குப் பின் வாழ்க்கை, பின் காதலில் வெற்றி, நிச்சயதார்த்தம், மணிக்கணக்கில் செல்போன் உரையாடல், அதில் வரும் ரோதனை, மண வாழ்க்கை என்று ஒன்றையும் விடாமல் அலசியிருக்கார் பசங்க புகழ் இயக்குநர் பாண்டி ராஜ்!

இந்தப் படத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதே அதிரடி வசனங்கள் தான், அதுவும் சிம்பு நயனின் நிஜ வாழ்க்கையைக் கிண்டல் அடிக்கும் வசனங்கள் சில சமயம் புன்முறுவலையும் பல சமயம் சிரிப்பலைகளையும் எழுப்புகிறது. நயன், சிம்பு இருவர் நடிப்பும் இயல்பாக, நன்றாக உள்ளது. சிம்புவுக்கே உரித்தான ரோல் இது. இருவர் உடைகளும் அருமை. முதல் சீனில் இருந்து கடைசி சீன் வரை நயன் மிகவும் அழகாக உள்ளார்.

எப்பவும் அம்மா செண்டிமெண்ட் தானா? இந்தப் படத்தில் ஒரு மாறுதலுக்கு அப்பா செண்டிமெண்ட் :-} சரண்யா பொன்வண்ணன் எப்பவும் அம்மா ரோலில் செய்வதை {சிம்புவின் அப்பாவாக} ஜெயபிரகாஷ் இதில் ஸ்கோர் செய்கிறார். நயனின் அப்பா அம்மாவாக உத்ய மகேஷ், தீபா ராமானுஜம் மிக பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

சூரி சிம்புவுக்குக் கொடுக்கும் டைமிங்க் கவுண்டர்கள் தான் ஒரு தீப்பெட்டியின் பின்னால் எழுதக் கூடிய அளவு சிறிய கதையை சி{ற}ரிப்பாக நகர்த்திச் செல்கிறது. சில வசனங்கள் கடுப்பு ரகம். சிம்புவை கொட்டு வைக்கும் சில வசனங்களை நயன் டெலிவர் பண்ணும்போது அதிக மகிழ்ச்சியுடன் சொல்வதை நாம் கவனிக்கலாம் :-}

ஏன்ட்ரியா சிம்புவின் ஒரு காதலியாக வருகிறார். ஜோடி செட் ஆகவில்லை. சந்தானம் கெஸ்ட் ரோல், ரொம்ப சின்ன ரோல். அவருக்காகவாவது இன்னும் கொஞ்சம் நகைச்சுவை சேர்த்திருக்கலாம். அர்ஜுன் சிம்புவின் நண்பராக வருகிறார், அவரும் சின்ன பாத்திரம் தான் ஆனால் கலக்கல்!

மூன்று வருடம் கிடப்பில் போடப்பட்டப் படம். வருமா வருமா என்று காத்திருந்து கடைசியில் வந்துவிட்டது. ஆனால் நல்ல காலத்துக்கு out dated ஆக இல்லை. ஆனாலும் நயனையும் சிம்புவையுமே சுத்திச் சுத்தி வருவதால் சமயங்களில் அலுப்புத் தட்டுகிறது. சில வசனங்கள் நேராக ட்விட்டரில் இருந்து எடுத்தவை.

இந்தப் படம் all in the family. டி.ஆர், உஷா ராஜேந்தர் தயாரிப்பு, குறளரசன் இசை அமைப்பு. சில பாடல்கள் நன்றாக உள்ளன. அவர் பாடல்கள் தருவதற்கு தாமதம் செய்ததால் தான் படம் முடிய தாமதமாகியது என்று பாண்டிராஜ் சொல்லியிருந்தார். ஆனால் பாடகர்கள், பாடல்கள் கோத்த விதம் நன்றாக வந்துள்ளது. அவரும் அவர் தந்தையைப் போல் இசையமைத்து, பாடல் எழுதி பாடியும் உள்ளார்.

சிம்பு நடனத்திற்காகவே ஒரு குத்துப் பாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நடனத்தில் சிம்பு இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம், விசேஷமான நடன ஸ்டெப்கள் எதுவும் இல்லை. அவர் உடல் எடையும் கூடியுள்ளது.

இன்னும் கொஞ்சம் எடிட் செய்திருந்தால் படம் slickஆக இருந்திருக்கும். இளைஞர்களுக்குப் பிடிக்கும். வாழ்த்துகள் டீம் பாண்டிராஜ்!

idhunammaaalu