ஒரு நாள் கூத்து – திரை விமர்சனம்

 

orunaal

லேட்டா படத்தைப் பார்த்தாலும் லேட்டஸ்ட் விமர்சனம் என்ற பெயர் பெறட்டுமே என்று எழுதுகிறேன் :-} இறைவிக்குப் பின் பார்க்கும் படம் இது. இப்படமும் பெண்களின் நிலை எப்படி ஆண்களின் முடிவுகளால் ஆக்கம் பெறுகின்றன என்ற கதைக் கருவைக் கொண்டுள்ளது. ஆனால் கதையைச் சொன்ன விதம் வேறு. இறைவியை விட இன்னும் சிம்பிளா அனைவருக்கும் எட்டும் வகையில் கதைச் சொல்லி இயக்கி இருக்கிறார் இயக்குநர் நெல்சன்.

இந்தப் படத்திலும் மூன்று பெண்கள். ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் நிவேதா அவரின் காதலன் தினேஷின் நிலையின்மையால் அவர் எதிர்கொள்ளும் நிலை மாற்றங்கள், மூன்றாவது மகளாகப் பிறந்து தந்தையால் ஒவ்வொரு வரனும் நிராகரிக்கப்படும் அழகு தேவதையாக மியா ஜார்ஜ், மீடியாவில் வேலை செய்வதால் மாப்பிள்ளை கிடைப்பது கஷ்டமாக தவிக்கும் ரித்விகா  என்று மூன்று பெண்களின் வாழ்க்கையை நாம் நம் கண் முன்னால் பார்க்கிறோம்.

பெண்கள் நாட்டின் கண்கள் என்பதெல்லாம் ஏட்டுச் சுரைக்காய். உண்மை வாழ்வில் பெண்கள் இரண்டாம் தர மூன்றாம் தர பிரஜைகள் தாம் என்பதை முகத்தில் அடித்தா மாதிரி காட்டியது இறைவி ஆனால் இந்தப் படம் அதையே இயல்பாக, இது தான் நிதர்சனம் என்று எளிமையாகக் காட்டியிருப்பதற்கு இயக்குநருக்குப் பாராட்டுகள். துணைப் பாத்திரங்களில் வரும் கருணாகரன், சார்லி steal the show. பால சரவணனும் நண்பன் பாத்திரத்துக்கு நல்ல fit. தினேஷ் கண்கள் இந்தப் படத்தில் கொஞ்சம் பரவாயில்லை.

இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள் அருமை {அடியே அழகே, எப்போ வருவாரோ}. ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசையும் நன்று. இவருக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது.

திருமணம் என்பது பெண்கள் வாழ்வில் இன்றும் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது, பெண்ணுக்குக் குறித்த நேரத்தில் திருமணம் நடக்காவிட்டால், நிச்சயித்த மணம் நின்றுவிட்டால், திருமணமே நடக்காமல் இருந்தால் என்று பல சூழ்நிலைகளை எடுத்து ஆண்டிருப்பது, அதுவும் யாரையும் குற்றம் சொல்லாமல் தாக்கத்தைப் பற்றி நாமே புரிந்து கொள்ளும் படி விட்டிருப்பது நன்றாக உள்ளது. கிளைமேக்ஸ் சற்றே சொதப்பல். அதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ரொம்ப விறுவிறுப்பான படமோ, நகைச்சுவை படமோ கிடையாது. ஆனால் யதார்த்தமான படம். வரவேற்கப்பட வேண்டிய படம்.

Oru-Naal-Koothu-Movie-First-Look-Posters-02