இறைவி – திரை விமர்சனம்

iraivi2

பலர் புகழ்ந்து தள்ளியது போல படம் ரொம்ப ஓஹோ என்றும் இல்லை எழுத்தாளர் சாருவும் வேறு சிலரும் இகழ்ந்தது போல படம் படு குப்பையும் இல்லை. இக்கால சூழலுக்கு ஏற்ற மிக நல்ல படம். பெண்கள் என்றும் சூழ்நிலை கைதிகளாகவே உள்ளனர், சுதந்திரம் என்பது வெகு அரிதான ஒரு பரிசாக அவர்களுக்குக் கிடைக்கிறது என்பதை அழகாக எடுத்துச் சொல்கிறது படம். பெண்கள் ஆண்களிடம்/கணவன்களிடம் படும் அவஸ்தைகளை மெலோடிராமா இல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

கார்த்திக் சுப்புராஜின் மூன்றாவது படம். பீட்சா, ஜிகிர்தண்டா, அதன் பின் இறைவி. ஜிகிர்தண்டா ரொம்ப ஜனரஞ்சகமான படம். இறைவி கொஞ்சம் சீரியஸ். படத்தில் வரும் சம்பவங்கள் நிஜ வாழ்வை ஒத்து உள்ளது.  எஸ்.ஜே.சூர்யா தான் கஷ்டப்பட்டு எடுத்த படத்தை வெளியிட முடியாமல் தவிக்கும் ஒரு இயக்குநராக அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்குள் இப்படி ஒரு நடிகர் இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது. அவரது மனைவியாக கமாலினி முகர்ஜி, விரக்தியால் குடி நோயில் தள்ளாடும் சூர்யாவிடம் மாட்டிக் கொண்டு திருமணத்தை முறித்துக் கொள்ளவும் முடியாமல் அவருடன்  குடித்தனமும் செய்ய முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பு நிலையில் வாழும் அவரும் சிறப்பாக செய்துள்ளார்.

விஜய் சேதுபதி திரும்பவும் அடியாள் மாதிரி பாத்திரம். அவரது மனைவியாக பல சின்ன சின்னக் கனவுகளுடன் அஞ்சலி. அஞ்சலி, கமாலினி, பூஜா தேவரியா ஆகிய மூன்று முக்கிய பெண் பாத்திரங்களில் அஞ்சலி எளிதாக முதல் இடத்தைப் பிடிக்கிறார். வடிவுக்கரசியும் படத்தில் உள்ளார், அவர் கோமாவில் இருப்பதால் நடிப்பு என்று பேச எதுவும் இல்லை. ராதாரவி, சீனு மோகன் தங்கள் தேர்ந்த நடிப்பால் படத்துக்கு பலம் சேர்க்கிறார்கள்.

பெண்களின் நிலை பற்றி பொதுவில் எவரும் கவலைப்படுவதில்லை ஏனென்றால் பெண் எந்த நிலைக்கும் தன்னை பொருத்திக் கொள்வாள் என்ற காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கையே. அதுவே இப்படத்தின் அடித்தளம். அதன் மேல் கட்டப்பட்டிருக்கு மற்ற சம்பவங்கள். ஆண் என்பவன் கோபக்காரன், முரடன், ஆதிக்கம் செலுத்துபவன். ஆண்கள் பெண்களுக்கு உதவும் எண்ணம் இருக்கும் சமயத்திலும் கூட அதன் முடிவு ஆண்களுக்கு சாதகமாக இருந்தாலே அதை செயல் படுத்துகிறார்கள். அதை மாற்றவும் முடியாது என்பதையும் இப்படம் சொல்கிறது.

Men are from mars and women are from Venus என்பது ஒரு புகழ் பெற்ற புத்தகத்தின் தலைப்பு. அப்புத்தகத்தில் ஆசிரியர் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசத்தை விவரமாக காட்டியிருப்பார். ஆணும் பெண்ணும் வெவ்வேறு கிரகத்தைச் சார்ந்தவர்கள், அவர்களின் எண்ணங்களும் செயல்களும் எதிர்ப்பார்ப்புகளும் வெவ்வேறானவை. அது இப்படத்தின் கருவாக இல்லாவிட்டாலும் ஆண், பெண் உணர்வுகளின் வித்தியாசத்தை இப்படம் அழகாக கோடிட்டுக் காட்டுகிறது.

இப்படத்துக்குப் பாடல்களே தேவையில்லை. பாடல்களும் நன்றாக இல்லை. நான்கு பாடல்களையும் கட் பண்ணிவிடலாம். அவை கதையோட்டத்திற்கு தடையாகவும் உள்ளன. இந்தத் தவறை இயக்குநர் ஏன் செய்தார் என்று புரியவில்லை. படத்தின் நீளம் இரண்டு மணி நாற்பது நிமிடங்கள். பாடல்களை எடுத்துவிட்டால் நேரமும் குறையும். மேலும் பாபி சிம்ஹாவின் பாத்திரப் படைப்பில் பழுதுள்ளது. அது கதையை பலவீனப் படுத்துகிறது.

பாபி சிம்ஹா கோமாவில் இருக்கும் வடிவுக்கரசியிடம் தன எண்ணங்களையும் செயல்களையும் பற்றி பேசுவது ஆடியன்சுக்கு அவரின் செயல்களைப் புரிய வைக்கவே என்று தெளிவாகத் தெரிகிறது. அது நாடகத்தனமாக உள்ளது. {ஆடியன்ஸ் அறிவாளிகளே!} அதே மாதிரி தான் கடைசியில் எஸ்.ஜே.சூர்யா சொல்லும் வசனமும். அவர் ஆண் பெண் பற்றி விளக்கம் சொல்லாமலே நமக்கு விளங்கும். படமே அது தானே!

ஒரே சமயத்தில் பல பாத்திரங்களை கதையில் களமாட விட்டு ஒருவரின் செயல் இன்னொருவரை பாதிக்கும் விதத்தில், அதே சமயம் சிக்கலில்லாமலும் திரைக் கதையை நகர்த்தி சென்றிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். பெண்களுக்கு மதிப்புக் கொடுங்கள் என்று ஓபனாக சொல்லாமல் பெண்மையை உயர்த்திக் காட்டியிருக்கும் கார்த்திக் சுப்புராசுக்கு ஒரு மலர் கொத்துப் பரிசு :-}

Actress Anjali in Iraivi Tamil Movie Stills

Actress Anjali in Iraivi Tamil Movie Stills

ஜிகிர்தண்டா – திரை விமர்சனம்

jigirthanda

இந்த மாதிரி திரைக் கதையை சமீபத்தில் வந்தத் தமிழ் சினிமாவில் நான் பார்க்கவில்லை. மகாபாரதத்தில் வரும் திடுக் திருப்பங்களுக்கும் சாதுர்ய சதுரங்க நகர்த்தல்களுக்கும் ஈடாக இன்றைய மதுரை தாதாக் கதையை முற்றிலும் மாறுபட்டக் கோணத்தில் சுவாரசியமாகத் திரைக் கதையை அமைத்து இயக்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். அவருக்குப் பாராட்டுக்கள். (ரொம்பப் புகழறேனோ?)

பாதையை  மாற்றி பயணிக்க வைக்கும் திரைக்கதை/இயக்குநர்கள் தமிழ் திரை உலகுக்கு ஒரொரு இடைவெளியில் வருவார்கள். பாரதி ராஜா, பாலச்சந்தர், பாலு மகேந்திரா, மகேந்திரன், வசந்த், மணி ரத்னம், ஷங்கர், பாலா, வெற்றி மாறன் வரிசையில் சுப்பு கார்த்திக் பெயரை தைரியமாகப் பரிந்துரைக்கலாம். பீட்சாவிலேயே தன் முத்திரையைப் பதித்த இவர் இந்தப் படத்தில் அடுத்த லெவலுக்குச் சென்றிருக்கிறார். காலத்திற்கேற்ப நம் ரசனையும் மாறுகிறது. இன்றைய ரசனைக்கேற்பப் படத்தைத் தந்திருக்கிறார்

சித்தார்த் சூப்பராகப் பண்ணியிருக்கார். எப்பொழுதும் அழுத வண்ணம் இருக்கும் அவர் முகம் இந்தப் படத்தில் இந்தப் பாத்திரத்துக்கு ரொம்ப செட் ஆகியிருக்கிறது. படம் முழுக்க, முக்கியமாக முடிவில் அவர் நடிப்பு A1. அவருக்குப் பக்கத் துணையாக கருணாகரன் ரொம்ப நன்றாக நடித்துள்ளார்.

தனி காமெடி track இல்லை. ஆனால் பல கதாப் பாத்திரங்கள் பல சிச்சுவேஷன்களில் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்கள். படமே ரொம்ப லைட்! வெட்டுக் குத்து எரிப்பு இவற்றை எல்லாமே நம் மனம் வெகு எளிதாக ஜீரணித்துக் கொள்ளும் அளவு தமிழ் சினிமாவில் வன்முறைக் காட்சிகள் பல்கிப் பெருகி விட்டதால் எந்த சீனுமே gory ஆக தெரிவது இல்லை. நம் மாறிய மன நிலைமையைக் கண்டு அஞ்சுவதா, வெதும்புவதா அல்லது இயல்பு இது தான் என்று பட்டுக் கொள்ளாமல் போவதா என்று தெரியவில்லை.

லச்சுக்குக் குட்டி ரோல் தான். உடல் ஸ்லிம்மாக இருக்கிறார். இதையே மெயின்டெய்ன் பண்ணால் நன்றாக இருக்கும். அம்பிகாவின் பாத்திரம் அவன் இவனில் வந்தப் பாத்திரத்தை நினைவூட்டுகிறது.

படத்தின் வில்லன் ப்ளஸ் பலமான கதாப்பாத்திரம் பாபி சிம்ஹா. வில்லன் பாத்திரம் செம வில்லத்தனமாக இருந்தால் தான் ஹீரோ பாத்திரம் எடுபடும்! ஆரம்பம் முதலே மிரட்டலாக நடித்துள்ளார் சிம்ஹா. சித்தார்த்தை விட அவருக்கே challenging role. நடிப்புச் சொல்லித் தரும் ஆசிரியராக வரும் சோமசுந்தரம் – கலக்கல் நடிப்பு 🙂

விவேக் ஹர்ஷனின் editing நன்றாக இருந்தாலும் சில இடங்களில் கத்திரிப் போட்டிருக்கலாம். அதை தடுத்தது இயக்குநரா என்று தெரியவில்லை. 170 நிமிடம் கொஞ்சம் அதிகமே. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை ரொம்ப நன்றாக உள்ளது. பாடல்களில் சில நன்று ரகம், சில ஒகே ரகம்.

சினிமேடோக்ராபி செய்தவர் பெயர் வித்தியாசமாக இருக்கிறது Gavemic Ary. தொழில் சுத்தம்! Excellent! ரொம்ப நெருக்கமானத் தெருக்களைக் கொண்ட மதுரையில் கூட்டத்தின் நடுவேயும் இரண்டு வீடுகளில் சின்ன அறைகளிலே நடக்கும் காட்சிகளை ரொம்ப அழகாகவும் தெளிவாகவும் படம் பிடித்துக் காட்டயிருக்கார்.  அவருக்குப் படத்தின் வெற்றியில் பெரும் பங்கு உள்ளது.

ஜிகிர்தண்டா பெயருக்கேற்ப மதுரை சுவையோடு உள்ளது. என்ன, கொஞ்சம் rawவாக இருக்கு. Refine பண்ணியிருந்தால் இன்னும் சுவை கூடியிருக்கும்.